Monday, 3 November 2014

மும்பாயில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்.

2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான(லோக் சபா) தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின்(பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:- 1. காங்கிரசுக் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும், 2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில்  பா.ஜ.கவிற்கு 43 உறுப்பினர் மட்டுமே இருப்பது, 3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை.

பா.ஜ.கவினர் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி தடையின்றிச் செய்வதாயின் அது பல சட்ட மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவினர் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியும் அத்துடன் மாநிலங்களவையில்  பெரும்பான்மை வலுவைப் பெறமுடியும். 2014-ம் ஆண்டு இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் 11 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

மோடிக்குத் தேவையான மஹராஸ்ட்ரா

நரேந்திர மோடியின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் வாக்குறுதியளித்த பொருளாதாரச் சீர்திருத்தங்களையும்ம் முன்னெடுத்துச் செல்ல இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பாயைக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலத்தை அவர் எப்படியும் கைப்பற்ற வேண்டும். அதற்கான  திடசங்கற்பத்துடன் மோடி செயற்பட்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றினார். நரேந்திர மோடி இந்தச் சட்ட சபைத் தேர்தலிற்குச் செய்த பரப்புரை போல் இதற்கு முன்னர் எந்த ஒரு இந்தியத் தலைமை அமைச்சரும் செய்ததில்லை. இந்த முக்கியத்துவம் மிக்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியமை மோடிக்கும் அவரது தளபதியான அமித் ஷாவிற்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும். இருவரும் தமது "கட்சி அரசியல் முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மையை" மீண்டும் நிரூபித்துள்ளனர். பல வேறுபட்ட தரப்பினரைக் கொண்ட பா.ஜ.கவில் இவர்களது பிடி மேலும் இறுகியுள்ளது. அதே நாளில் நடந்த ஹரியானா மாநில சட்ட மன்றத்திற்கான தேர்தலில்  பா.ஜ.கவினர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

சிவசேனாவுடன் கூடாத கூட்டணி
மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.கவினர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மொத்த 48 தொகுதிகளில் பா.ஜ.க 23 இலும் சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரசுக் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதே கூட்டணி சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்தன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் "மண்ணின் மைந்தர்களுக்கே" என்ற கொள்கையுடையது சிவசேனா அமைப்பு. மும்பாயில் வேலை தேடியும் வர்த்தகம் செய்யவும் வேறு மாநிலத்தவர்கள் வருவதை எதிர்த்து சிவசேனா அமைப்பு 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புகழ் பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியின் படையினர் என்பதே சிவசேனை என்பதன் பொருளாகும். மராத்தியர்களைத் தவிர மற்றவர்கள் மும்பாயில் இருந்து விரட்டப்பட வேண்டும் என சிவ சேனாவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால் மும்பாயில் கலவரங்களும் வெடிப்பதுண்டு. சிவ சேனா மராத்தியப் பிரதேச வாதத்தையும் இந்துத் தேசிய வாதத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டுள்ளது எனச் சொல்லலாம். இந்துத் தேசியவாதக் கொள்கை சிவசேனாவையும் ப.ஜ.கட்சியினரையும் நெருங்கிச் செயற்பட வைத்தது. ஆனால் 2014 ஒக்டோபர் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமையினால் தனித் தனியே போட்டியிட்டன. இதே போல் காங்கிரசுக் கட்சிக்கும் அதில் இருந்து இத்தாலிப் பெண் காங்கிரசுக் கட்சிக்குத் தலைமை தாங்குவதை ஏற்காத சரத் பவார் பிரிந்து சென்ற உருவாக்கிய தேசியவாதக் காங்கிரசுக் கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு காண முடியாமல் தனித்துப் போட்டியிட்டன. இதனால் 288 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான  நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடந்தது. பா.ஜ. கட்சி சிவசேனைக்கு 130 தொகுதிகள் வரை கொடுக்க உடன்பட்டிருந்தது. சிவசேனா அதிலும் மிக அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் தேர்தல் முடிவு பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்தது. பா.ஜ.க 122 தொகுதிகளிலும் சிவசேனா 63 தொகுதிகளிலும் காங்கிரசுக் கட்சி 41 தொகுதிளிலும் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றிராத நிலையில் சிவசேனா ஒரு பேரம் பேசக் கூடிய வலுவைப் பெற்றுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்க தான் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கப் போவதாக அவர் அறிவித்தார். இது சிவ சேனாவை வலுவிழக்கச் செய்ய அவர் எடுத்த நடவடிக்கையாகும். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இப்போது ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மதவாதமும் இனவாதமும்

பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இந்து மத மேலாண்மையை ஏற்றுக் கொண்டாலும் சிவசேனாவின் மராத்தியப் பிராந்தியவாதத்தை பா.ஜ.க விரும்பவில்லை பா.ஜ.கவின் இந்திப் பேரினவாதத்தை சிவசேனா விரும்புவதில்லை. இரு தரப்பினரும் மற்ற மதங்களையிட்டு அதிலும் முக்கியமாக இசுலாமிய மதத்தையிட்டு ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்கள். பாபர் மசூதி இடிப்பில் ஒரே கொள்கையுடையவர்கள். பால் தக்கரேயால் 1966-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவசேனை அவரது மறைவின் பின்னர் அவரது மகனுக்கும்(உதவ் தக்கரே) அவரது தம்பியின் மகனுக்கும் (ராஜ் தக்கரே) இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டாகப் பிளவு பட்டது. ராஜ் தக்கரே மஹராஸ்ட்ர புனரமைப்புச் சேனையை 2006-ம் ஆண்டு ஆரம்பித்தார். ராஜ் தக்ரே சிவசேனாவிற்குள் இருந்து அந்தக் கட்சியை தனதாக்கிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு கட்சிக்குல் செல்வவக்கு இருந்தது. இருந்தும் சகோதரப் போரைத் தவிர்க்க அவர் தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்தப் பிளவால் சிவசேனா வலுவிழந்து விட்டது என இந்தியத் தலைமை அமைச்சர் மோடியும் அவரது தளபதி அமித் ஷாவும் உணர்ந்து கொண்டு செயற்படுவதாக சிவசேனாத் தலைவர் உதவ் தக்கரே கருதுகின்றார். 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய மைய அரசில் சிவசேனா கேட்ட அமைச்சுப் பதவிகளை வழங்காமை இரு கட்சிகளிற்கும் இடையிலான மோதலை உருவாக்கியிருந்தது

விரோதத்தை பெரிதாக்கும் விதர்ப்ப தேசம்
மஹாராஸ்ட்ராவின் ஒரு பகுதியாக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேச மக்களில் பலர் தாம் மஹராஸ்ட்ராவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சிவசேனா ஒன்று பட்ட மஹராஸ்ட்ரா என்பதில் உறுதியாக இருக்கின்றது. சிவசேனாவின் பிராந்தியவாதத்தை வலுவிழக்கச் செய்ய பேரினவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி விதர்ப்ப தேசப் பிரிவினையை ஆதரிக்கின்றது. இது இரு கட்சிகளிடையே பேதத்தை 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீவிரமடையச் செய்தது. 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர் பா.ஜ.க விதர்ப்ப தேசப் பிரிவினைக்கான தனது ஆதரவைத் தீவிரப்படுத்தியது.

குஜராத்திடம் மண்டியிட்ட மராத்த்தி
தேர்தலின் போது எதிரும் புதிருமாக நின்று போட்டியிட்ட பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பித்தவுடன் குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி என சிவ சேனாவின் எதிரிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். 1960-ம் ஆண்டு மஹாராஸ்ட்ராவில் இருந்து குஜராத்தைப் பிரித்து தனி மாநிலமாக்கப்பட்டது. மும்பாயில் பல குஜராத்தியர்கள் பலர் உயர் பதவிகளிலும் வர்த்தகத்திலும் இருக்கின்றார்கள். இதை சிவசேனா விரும்பவில்லை. மோடியும் ஒரு குஜராத்தியர் என்பதால் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் விரோதம் மேலும் மோசமடைந்துள்ளது. ஒன்றுபட்டுப் போட்டியிட்ட பாராளமன்றத் தேர்தலின் போதே தேர்தலிற்கு முதல் நாள் சிவசேனாவின் பத்திரிகைஓன்றில் குஜராத்தியர்கள் மும்பாயை ஆக்கிரமித்துக் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்களாக மும்பாயின் வாழ்வதாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது.

சொத்துக்கொரு மும்பாய்.
காங்கிரசுக் கட்சியினர், சிவசேனாக் கட்சியினர் தேசியவாதக் கட்சியினர் ஆகியோர் அதிக அளவு சொத்துக்களை மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் வைத்துள்ளனர். இதுவரை நடந்த காங்கிரசுக் கட்சியின் ஆட்சி மோசமான ஊழல்கள் நிறைந்த ஒரு ஆட்சியாகவே இருந்தது. இந்திய வரலாற்றில் மஹ்ராஸ்ட்ரா மாநிலத்தில் முதன் முறையாக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ஒரு ஊழலற்ற ஆட்சியை நிறுவ மோடி முயல்கின்றார்.

விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனர் மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சர்
இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்யும் பிரதேசமமக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது இந்திய மைய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பணி புரிகின்றார். இது போதாது என்று மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத்தின் முதலமைச்சராக விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனரான தேவேந்திர பட்னவீஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிவசேனையைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். இவரால் ஓர் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. ஆட்சியில் இணையாவிடினும் முதலமைச்சர் பதவி ஏற்பின் தாம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.கவிடம் சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிந்திச் சென்ற பதவியேற்பு வைபவம்
2014-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ம் திகதி அதாவது நேற்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேவேந்திரப் பட்னவீஸ் மிகவும் ஆடம்பரமாக மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தாமும் பங்கேற்கப் போவதாக சிவசேனா அறிவித்தது. இது ஒரு உடன்படு நிலையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி ஏற்ற பின்னரே சிவசேனாவின் தலைவர் உதவ் தக்கரே நிகழ்விற்குச் சென்றார். புதிய முதல்வருக்கு சிவசேனாவின் பத்திரிகை ஆலோசனையும் வழங்கியுள்ளது. பஜகாவின் முதல்வரும் மஹாராஸ்ட்ரா மக்களும் மருமகளும் மாமியும் போன்றவர்கள். திருமணத்தில் அன்று அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் பின்பு மருமகள் தவறு செய்தால் மாமியார் மருமகளின் காதைப் பிடித்து முறுக்குவார் என்கின்றது சிவசேனனவின் ஊடகம். சிவசேனா மஹாராஸ்ட்ராவைப் பொறுத்தவரை ஒரு சண்டியர் கும்பல் எனச் சொல்லலாம். மும்பை நகரின் பெருந்தெருக்களில் வாகனங்களுக்கு Toll charge என்னும் பாதைவரி அறவிடும் முறை அறிமுகப்படுத்திய போது சிவசேனாவினர் ஆத்திரமடைந்து அந்த வரி அறவிடும் நிலலயங்களைப் பிடுங்கி எறிந்தனர். சிவசேனாவை ஆட்சியில் இணைக்காமல் வெளியில் எதிர்க் கட்சியாக விடுவது ஆபத்து என்பதை பாரதிய ஜனதாக் கட்சியினர் நன்கு அறிவர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்தும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஒரு தேசியக் கட்சி என்றும் சிவசேனா ஒரு பிராந்தியக் கட்சி என்றும் தமது நிகழ்ச்சி நிரலுக்கு சிவசேனா உடன்பட்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் சிவசேனா மஹராஸ்ட்ரா நம்ம ஏரியா இதனுள் எம்முடன் மோதவேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இது இந்தியாவின் பேரினவாதிகளுக்கும் பிராந்தியவாதிகளுக்கும் இடையில் உள்ள முறுகல் நிலையாகும். இதே மாதிரியான முறுகல் நிலை தமிழ்நாட்டிலும் உண்டு. மஹாராஸ்ட்ரா அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கொடுத்தால் சிவசேனா உடன்பட்டு வரும் எனத் தெரியவருகின்றது. பிரதி முதலவர், உள்துறை, வலுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை  ஆகிய அமைச்சுப் பதவிகளை சிவசேனா தமது கட்சியினருக்குத் தரும்படி கேட்கின்றது..

மாநிலங்களைப் பிடிக்க நீண்ட தூரம்
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் பல மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. காங்கிரசு ஆட்சியில் பெரும் தொல்லையாக இருந்த உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது தலைகீழாக மாறிவிட்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அடையும் வீழ்ச்சி மோடியில் ஆட்சிக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் கீழ் தற்போது மஹாராஸ்ட்ரா, ஹரியானா, குஜராத், ராஜஸ்த்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கோவா என்னும் ஒன்றியப் பிரதேசமும் இருக்கின்றன. இவற்றின் பொருளாதார உற்பத்தி இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 37 விழுக்காடாகும். இதை வைத்துக் கொண்டும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒத்துழைக்கக் கூடிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடனும் நரேந்திர மோடியால் தனது பொருளாதாரத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...