கிறிஸ்த்தவர்களுக்கு யேசு போல் இசுலாமியர்களுக்கு நபி போல் இஸ்ரேலியர்களுக்கு மோசஸ் திகழ்கின்றார். எகிப்தியப் பேரரசில் இஸ்ரேலியர்கள் செல்வந்தர்களாயும் அறிவு மிகுந்தவர்களாயும் எண்ணிக்கையில் அதிகமானவர்களாயும் இருந்தனர். இதனால் எகிப்தியர்ளுக்கு ஆபத்து விளையலாம் எனக் கருதி எகிப்திய மன்னர் இஸ்ரேலியர்களை அடிமைகளாக்கினார். எகிப்திய மன்னர் ஃபேரோ (King Pharaoh)இன் சோதிடர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிக்கும் ஒருவன் பிறப்பான் என்றும் அவனால் மன்னருக்கு ஆபத்து என்றும் மன்னரிடம் தெரிவித்தனர். அதனால் அந்தக் குறித்த நாளில் எகிப்தியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கொல்லும்படி கட்டளையிட்டார். இதனால் அந்த நாளில் பிறந்த கடவுளின் குழந்தையான மோசஸ்ஸின் தாயார் யோஸேபெத் குழந்தை மோசஸை ஒரு கூடையில் வத்து நைல் நதியில் மிதந்து போகவிட்டார். மோசஸின் அக்கா மரியம் தன் தம்பிக் குழந்தை ஆற்றில் மிதந்து போவதை அழுது கொண்டே தொடர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் நைல் நதியில் குளித்துக் கொண்டிருந்த மன்னரின் மகள் பித்தியா அக் குழந்தையைக் கண்டு தன்னுடன் எடுத்துச் சென்று ஒளித்து வைத்திருந்தாள். ஆனால் அந்தக் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இளவரசி பிந்தியா அழுது கொண்டிருக்கும் குழந்தை மோசஸைத் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்த மரியம் குழந்தையை பராமரிக்கும் திறனுடைய ஒரு தாதியைத் தனக்குத் தெரியும் என்று சொல்லி தன் தாயை குழந்தையை பராமரிக்கச் செய்தாள். இரண்டு ஆண்டுகள் கழித்து தான் ஒரு குழந்தையை வளர்ப்பதாக இளவரசி பிந்தியா மன்னர் ஃபேரோவிடம் தெரிவித்தார். மன்னரும் அந்தக் குழந்தை மோசஸை ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் மன்னரின் மடியில் குழந்தை மோசஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் முடியை இழுத்து விழுத்தி விட்டது. இது பற்றி சோதிடர்களிடம் மன்னர் ஃபேரோ ஆலோசனை கேட்ட போது குழந்தை மோசஸ்ஸால் மன்னரின் உயிருக்கு ஆபத்து எனத் தெரிவித்தனர். மன்னர் இதற்காக மோசஸ்ஸைக் கொல்ல முற்பட்டார். ஆனால் மன்னனின் ஆலோசகர்கள் சிலர் குழந்தையின் செயல் அறிபூர்வமானதா அல்லது ஒளிரும் பொருட்களை எடுக்கும் குழந்தைத் தனமானதான என சோதித்துப் பார்க்க வேண்டும் என்றனர். அதன்படி குழந்தை மோசஸ்ஸின் முன்னர் மணிகள் நிரம்பிய ஒரு பாத்திரமும் நெருப்புத் தணல் உள்ள ஒரு பாத்திரமும் வைக்கப்பட்டது. மோசஸ் மணிகளை எடுக்கச் சென்றபோது மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு தேவதை மோசஸை தணலை அள்ளி வாயில் வைக்க வைத்தது. இதனால் மோசஸின் வாய் வெந்து போனது. மோசஸ் ஒரு விவேக மிக்க இளவரசனாக வளர்ந்து வந்தான். தான் எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை மீட்க வந்தவன் என்பது மன்னருக்குத் தெரிந்தால் ஆபத்து என்பதால் மோசஸ் எப்போது கவனமாக நடந்து வந்தான் படிப்படியாக மன்னருக்கு அடிமைகளாக இருக்கும் இஸ்ரேலியர்களின் மீது கருணை காட்டச் செய்தான். வாரத்தில் ஒரு நாள் அவர்களை ஓய்வெடுக்க வைத்தான். மோசஸ் இஸ்ரேலியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குபவர்களை இரகசியமாகக் கொன்றான். இதை ஒரு இஸ்ரேலியனே மன்னருக்குக் காட்டிக் கொடுத்தார். இதனால் மோசஸை கழுத்தை வெட்டிக் கொல்லும் படி மன்னர் உத்தரவிட்டார். ஆனால் தெய்வத்தின் பிள்ளையாகிய மோசஸின் கழுத்தை வெட்டவில்லை. மோசஸ் தப்பிச் சென்றான். பின்னர் மோசஸ் தனது சகோதரனுடன் வந்து பல அற்புதச் செயல்களைச் செய்து 430 ஆன்டுகள் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை மீட்டார் இந்த மீட்பு நடவடிக்கை நடந்தது கிறிஸ்த்துவிற்கு முன்னர் 1272 அதாவது இற்றைக்கு 3286 ஆண்டுகளுக்கு முன்னர். மோசஸ் இஸ்ரேலியர்களை அழைத்துக் கொண்டு ஜோர்தானிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புறமாகவும் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பை இஸ்ரேலியர்களின் நாடாக்கினார். இப் பிரதேசம் இப்போது இஸ்ரேல் என்றும் மேற்குக் கரை என்றும் காஸா நிலப்பரப்பு என்றும் மூன்று பகுதிகளாக இருக்கும் பலஸ்த்தீனமாகும். மொசஸ் எழுதிய ஐந்து நூல்கள் இஸ்ரேலியர்களின் யூத மதத்தின் முக்கிய போதனைகளைக் கூறுகின்றன. இஸ்ரேலியர்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும் இஸ்ரேல் கடவுளால் இஸ்ரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்ட புனித பூமி எனவும் இஸ்ரேலியர்கள் கூறுகின்றார்கள். கிறிஸ்த்துவிற்கு முன்னர் 1079-ம் ஆண்டில் இருந்து ஆண்ட இஸ்ரேலிய மன்னர்களின் பட்டியல் இஸ்ரேலியர்களிடம் உண்டு. அப்போது சௌல் என்னும் மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்தனர். இஸ்ரேலிய மன்னர்களில் வீரம் மிக்கவராகக் கருதப்படுபவர் கிறிஸ்த்துவிற்கு முன்னர் 1079-ம் ஆண்டில் இருந்து 1007-ம் ஆண்டுவரை ஆண்ட டேவிட் என்னும் மன்னராகும். இளவயதில் இருந்து ஆட்சி செய்த மன்னர் டேவிட் ஜெருசலம் நகரைத் இஸ்ரேலியர்களின் தலைநகராக்கினார். ஜெருசலம் நகரில் உள்ள சியோன் மலையில் டேவிட் மன்னர் ஒரு கோட்டையை அமைத்தார். இதனால் ஜெருசலம் நகரும் சியோன் மலையும் இஸ்ரேலியர்களின் புனித நிலையங்களாகின. டேவிட்டைத் தொடர்ந்து வந்த சொலமன் மன்னர் உலக வரலாற்றில் விவேகம் நிறைந்த மன்னராகக் கருதப்படுகின்றார். மத்திய மேற்காசியாவில் இஸ்ரேலியர்களின் அரசு இந்த மன்னர்களின் ஆட்சியில் வலிமை மிகுந்ததாக இருந்தது.
இஸ்ரேலியர்களின் வீழ்ச்சி
இஸ்ரேலியர்களின் அரசு கிறிஸ்த்துவிற்கு முன்னர் 796ம் ஆண்டில் இரண்டாகப் பிளவு பட்டது. அதன் வடபகுதியை கி.மு 55-ம் ஆண்டு அசிரியப் பேரரசு கைப்பற்றியது. கி மு 422-ம் ஆண்டு பபிலோனியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்களின் புனித ஆலயத்தை அழித்தனர். இஸ்ரேலியர்கள் பலர் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர். கி மூ 352-ல் மீண்டும் இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்கு வந்து மீண்டும் தமது ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். ஆனால் நாற்பது ஆண்டுகளின் பின்னர் கிரேக்கர் இஸ்ரேலைக் கைப்பற்றினர். பின்னர் கி. மு 63-ம் ஆண்டு ரோமப் பேரரசு இஸ்ரேலை ஆக்கிரமித்தது. மீண்டும் இஸ்ரேலியர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டது. கி. பி 638-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் கலிஃபா ஒமரின் தலைமையில் இஸ்ரேலைக் கைப்பற்றினர். 1299-ம் ஆண்டு உதுமானியப் பேரரசு இஸ்ரேலைக் கைப்பற்றியது.
மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை
உதுமானியப் பேரரசினால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் போது இஸ்ரேலியர்கள் தமக்கு என ஓர் அரசு உருவாக்க வேண்டும் எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி ஓடிய இஸ்ரேலியர்கள் அவர்களது வாழிடங்களில் பலத்த தொல்லைகளுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகினார்கள். இத்துயரங்கள் இஸ்ரேலியர்களுக்கு என ஓர் அரசு உருவாக்கும் சிந்தனைக்கு வலுவூட்டியது. இச் சிந்தனை சியோனிசம் என்னும் பெயர் பெற்றது. ஆனால் இஸ்லாமிய மதம் தோன்றிய நாளில் இருந்து உதுமானியப் பேரரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வரை இஸ்ரேலியர்களும் அரபுக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். ஒருவர் வீட்டின் விறாந்தையில் மற்றவர் அமர்ந்து இருந்து ஒன்றாக உரையாடிக் கொண்டிருப்பது எங்கும் காணக் கூடிய ஒன்றாகவே இருந்தது. இஸ்லாமியர்கள் ஜெருசலத்தைக் கைப்பற்ற முன்னர் அதை ஆண்டவர்கள் அங்கிருந்த இஸ்ரேலியர்களின் ஆலயத்தை இடித்து அங்கு குப்பைகளைக் கொட்டும்படி அரச ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அதை துப்பரவாக்கி தமது வணக்க நிலையத்தை அமைத்தனர். அதில் கிறிஸ்த்தவர்களைத் தாக்கி வாசங்கள் எழுதப்பட்டன. அதில் முக்கியமானது கடவுளுக்கு பிள்ளைகள் இல்லை என்பதாகும். கிறிஸ்த்தவர்கள் யேசு நாதர் கடவுளின் குமாரர் என நம்புவதைக் கொச்சைப் படுத்த இப்படிச் செய்தார்கள்.
மூன்று சிலுவைப்போர்கள்
கி பி 1096-ம் ஆண்டு யேசு நாதரைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்குக் காரணமாக இருதவர்கள் எனக் கருதி பல இஸ்ரேலியர்கள் ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. கடவுளின் எதிரிகளைக் கொல்ல நாம் அரபு நாடுகளுக்குப் போகத் தேவையில்லை. இங்கே எம்முடன் இருக்கும் கடவுளின் எதிரிகளான இஸ்ரேலியர்களைக் கொல்வோம் என ஐரோப்பா வாழ் கத்தோலிக்கர்கள் செயற்பட்டனர். பல இஸ்ரேலியர்கள் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இரண்டாம் சிலுவைப் போர் போப்பாண்டவர் ஜூயின் - 3 ஆல் 1145-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. மூன்றாம் சிலுவைப்போர் இங்கிலாந்தில் 1189-ம் ஆண்டு எட்வேர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவின் போது இஸ்ரேலியர்களுக்கு எதிரான கலவரமாக வெடித்தது.
பிரித்து ஆண்ட பிரித்தானியா
உதுமானியப் பேரரசின் கீழ் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த இஸ்ரேலியர்கள் அங்கு தமக்கு என ஒரு இஸ்ரேலிய அரசு உருவாக்க வேண்டும் என எண்ணியிருக்கையில் அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அரபுக்கள் தமக்கு என ஒரு பலஸ்த்தீனிய அரசு உருவாக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தனர். முதலாம் உதுமானியப் பேரரசிடம் இருந்து அரபு நாடுகளைக் கைப்பற்ற முயன்ற பிரித்தானியா இரு தரப்பினருக்கும் அரசு அமைக்க உதவுவதாகச் சொல்லி உதுமானியப் பேரரசுச்க்கு எதிரான போரில் தம்முடன் அரபுக்களையும் இஸ்ரேலியர்கலையும் இணைய வைத்தது. இதன் பின்னர்தான் அரபு இஸ்ரேல் மோதல் ஆரம்பமானது.
அனுதாபத்தை புவிசார் அரசியலாக்கிய மேற்கு நாடுகள்
இரண்டாம் உலகப் போரின் போது நாஜிப்படைகளால் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது உலகெங்கும் அவர்கள் மீ்து உருவான அனுதாபத்தை தமக்குச் சாதகமாக மேற்கு நாடுகள் பயன்படுத்தின. கத்தோலிக்கர்களின் புனித நிலையமான பெத்தேலேகம் அரபு இஸ்லாமியர்களின் பெரும்பான்மையினராக வாழும் இடமாக மாறிவிட்டிருந்தது. இதை மாற்றியமைக்க இஸ்ரேலியர்களை அங்கு குடியேற்றி அவர்களுக்கு என ஒரு நாடு உருவாக்க மேற்கு நாடுகள் திட்டமிட்டன. பெத்தேலேகம் இஸ்ரேலியர்களின் புனித நகரான ஜெருசெலத்தின் ஒரு பகுதியாகும். தமது புனித நிலையமான பெத்தேலேகத்தை இஸ்ரேலியர்களைத் தமது நண்பர்களாக்கி அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதன் மூலம் தக்க வைத்துக் கொள்ள மேற்கு நாடுகள் திட்டமிட்டன. கடவுள் மோசஸ் மூலம் இஸ்ரேலியர்களுக்குக் கொடுத்த பூமி என்பதும் இஸ்ரேலியர்கள் கடவுளின் குழந்தைகள் என்பதும் இதற்காக இட்டுக் கட்டுப்பட்ட கதைகளே. தற்போது பலஸ்த்தீனம் எனப்படும் மோசஸ் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்த நாட்டில் இருந்து இஸ்ரேலியர்கள் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் விரட்டப்பட்டதாலும் அரபுக்களின் மக்கட் தொகைப்பெருக்கம் அதிகமாக இருந்ததாலும் பலஸ்த்தீனத்தின் பெரும்பான்மையினராகவும் அதிக நிலப்பரப்பைக் கொண்டவர்களாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அரபுக்களான பலஸ்த்தீனியர்களே இருந்தனர். இருந்தும் மேற்கு நாடுகள் அங்கு யூதர்களுக்கு என ஒரு இஸ்ரேலிய அரசை உருவாக்கினர்.
இஸ்ரேலின் உருவாக்கம்
தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம். பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.
அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.ஏப்பிரஹாம் என்பவரில் இருந்தே அரபுக்களும் யூதர்களும் தோன்றினார்கள். ஏப்ரஹாம் தனது மாற்றாந்தாய் ம்களான சேராவைத் திருமணம செய்தார். அதன் மூலம் பிறந்த ஒரு மகனான ஐசக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள். ஏப்பிரஹாமின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் இஸ்மயிலின் வழித்தோன்றல்கள் அரபுக்கள் (Genesis 16:1-16). ஏப்பிரஹாமின் உண்மையான வாரிசு யார் என்பதில் அரபுக்களும் யூதர்களும் முரண்பட்டுக் கொள்கின்றனர். எல்லா அரபுக்களும் இஸ்லாமியர்கள் அல்லர். எல்லா இஸ்லாமியர்களும் அரபுக்கள் அல்லர்.
பலஸ்த்தீன விடுதலை இயக்கம்
1964-ம் ஆண்டு பலஸ்த்தீனத்தில் வாழும் அரபு மக்களுக்கு ஒரு தனி அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் பலதாக்குதல்களை மேற்கொண்டதால் அதை ஒரு பயங்கரவாத இயக்கம் என இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் பிரகடனப் படுத்தின. 1991-ம் ஆண்டு மாட்ரிட் நகரில் பலஸ்த்தீனத்திற்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தையின் பின்னர் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என ஒத்துக் கொள்ளப்பட்டது. பதிலுக்கு இஸ்ரேலின் இருப்புரிமையை பலஸ்த்தீன விடுதலை இயக்கம் ஏற்றுக் கொண்டது.
அடிவாங்கிய அரபு நாடுகள்
உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என 1960களில் அரபு நாட்டு ஆட்சியாளர்கள் சூளுரைத்துக் கொண்டிருந்தனர். இதற்காக அவர்கள் பெருமளவு படைக்கலன்களை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிக் குவித்தன. அரபு நாடுகள் தன் மீது படை எடுக்கப் போகின்றன என உணர்ந்த இஸ்ரேல் தான் முந்திக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது. 1967ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி இஸ்ரேல் எகிப்த்தின் மீது அதிரடியான தாக்குதல்களை மேற் கொன்டது. பல எகிப்தியப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எகிப்துடன் இணைந்து ஈராக், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளும் போரிட்டன. இப் போரின் போது சினாய், காஸா ஆகிய பிரதேசங்களை எகிப்த்திடமிருந்தும் கிழக்கு ஜெருசலம் மேற்குக் கரை ஆகியவற்றை ஜோர்தானிடமிருந்தும் கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் பிடுங்கிக் கொண்டது. 1973ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலியர்கள் தமது பண்டிகை ஒன்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் எகிப்தும் சிரியாவும் தமது இழந்த நிலங்களை மீட்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின. முதலில் சில நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றினாலும் பின்னர் இஸ்ரேலின் பதில் தாக்குதலின் போது முன்பு இருந்ததை விட அதிக பிரதேசங்களை இஸ்ரேலிடம் அவர்கள் இழந்தனர். பின்னர் ஏற்பட்ட சமாதான முயற்ச்சிகளில் இஸ்ரேல் தான் கைப்பற்றிய சில பிரதேசங்களை எகிப்திற்கும் சிரியாவிற்கும் விட்டுக் கொடுத்தது.
ஒற்றைக் கண்ணனின் இரட்டைப்பார்வை
1967-ம் ஆண்டு இஸ்ரேலின் போர் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் ஒரு கண்ணைப் போரில் இழந்த தளபதி மோஸே தயான். 1967 போரில் அரபுக்கள் தோல்வியடைந்த பின்னர் பலஸ்த்தின அரபுக்கள் மேற்குக் கரையில் இருந்தும் வெளியேறத் தொடங்கினர். ஆனால் மோஸே தயான் அவர்களைத் தடுத்து அங்கேயே இருக்கும்படி செய்தார். அவர்களுக்கு வேண்டிய கல்வி மற்றும் இருப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தார். இது அவர் செய்த பெரும் பிழை எனச் சில இஸ்ரேலியர்கள் வாதிடுகின்றனர். அவர்களை அப்போது மேற்குக் கரையில் இருந்தும் காஸாவில் இருந்தும் முழுமையாக விரட்டியிருக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். ஆனால் முழுமையாக விரட்டப்பட்டால் அது இன்னும் பெரிய ஆபத்தாக மாறியிருக்கும் என்பது மோஸே தயானின் கணிப்பாக இருந்திருக்கலாம்.
பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தைச் சிதைத்த இஸ்ரேல்
நோர்வேயின் அனுசரணையுடன் இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மதசார்பற்ற விடுதலை அமைப்பான பலஸ்த்தீன விடுதலை இயக்கம் பல சதிகளால் வலுவிழக்கச் செய்யப்பட்டு அதன் தலைவர் யஸீர் அரபாத் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். தற்போது பலஸ்த்தீன விடுதலை அமப்பின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் ஒரு மேற்கு நாட்டுக் கைக்கூலி எனக் கருதப்படுகின்றார்.
ஓரரசுத் தீர்வா? ஈரரசுத் தீர்வா?
1967-ம் ஆண்டுப் போரில் இருந்தே ஐக்கிய அமெரிக்கா பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஓர் அரசும் இருக்க வேண்டும் என உதட்டளவில் சொல்லி வருகின்றது. முதலில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது எனச் சூளுரைத்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்கின்றார்கள். இஸ்ரேலும் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கின்றது. எல்லோரும் ஈர் அரசு என்ற ஒரே பதத்தைப் பாவித்தாலும் அவர்களின் எண்ணங்கள் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். 2000-ம் ஆண்டு இஸ்ரேல் பல ஈர் அரசு முன்மொழிவுகளை முன்வைத்தது. பெரும்பகுதி மேற்குக் கரையையும் முழு காஸா நிலப்பரப்பையும் விட்டுக் கொடுப்பதாகவும் கிழக்கு ஜெருசலத்தை பலஸ்த்தீனியர்களின் கட்டுப்பாட்டில் விடுவதாகவும் இஸ்ரேல் முன் மொழிந்தது. மேலும் பலஸ்த்தீன ஏதிலிகளுக்கு முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான தீர்வை ஒத்துக் கொள்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசர் அரபாத் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பலஸ்த்தீனத்தில் ஈர் அரசுகளைக் கொண்ட ஒரு தீர்வு வேண்டும் என்ற முன் மொழிபு அரபு சமாதான முனைப்பு (The Arab Peace Initiative) என்னும் பெயரில் 2002-ம் ஆண்டு பெய்ரூட் நகரில் கூடிய அரபு லீக் நாடுகளால் முன்வைக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் 1967-ம் ஆண்டு கைப்பற்றிய எல்லா நிலப்பரப்புக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும். அதை இஸ்ரேல் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் மஹ்மூட் அப்பாஸ் ஈர் அரசுக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஹமாஸ் தேவை
மேற்குக் கரையிலோ அல்லது காஸா நிலப்பரப்பிலோ பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசு உருவானால் அது நீண்ட கால அடிப்படையில் தனக்கு பேராபத்தாக முடியுமென இஸ்ரேல் உறுதியாக நம்புகிறது. உதட்டளவில் ஈர் அரசுகள் கொண்ட ஒரு தீர்வை இஸ்ரேல் விரும்புவதாகச் சொன்னாலும் அது அதை விரும்பவில்லை. பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஒரு அங்குல நிலம் கூட ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பினர் சொல்லிக் கொண்டிருக்கும் வரை ஈர் அரசுத் திர்வு சாத்தியமற்றதாகும். இதனால் ஹமாஸ் அமைப்பின் தொடர்ச்சியான இருப்பு இஸ்ரேலுக்குத் தேவையான ஒன்றாகும். ஆனால் ஹமாஸ் அமைப்பு வலுப்பெறாமல் இருக்க அதன் மீது அடிக்கடி இஸ்ரேல் தாக்கிய படி இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment