Thursday, 14 August 2014

செஞ்சோலைப் படுகொலை: மௌனித்தவை மீண்டும் பேருரை நிகழ்த்தும்

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை  நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
வீசிச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின வலிதனை வரலாறு மறக்குமோ

பஞ்செனும் குழலும் பிறையெனும் புருவமும்
பல சந்த மாலை மடல் பரணி பாவையர்
நஞ்சென வீழ்ந்த குண்டுகளால்
குஞ்செனக் கருகிய
வல்லிபுனக் கொடுமையை
வரலாறு மறக்குமோ

புகரப் புங்க வன்னி மன்றில்
பவளத் துங்க வரிசை வாயுடை வஞ்சியர்
நகரவிருத்தி நாடுவிருத்தி
எனப்பயில வந்த காலை
செருவுக்கஞ்சி காலை ஏழுமணிக்கு
புக்காராவில் வந்து கொன்ற கதையை
வன்னி நிலத்து வல்லிபுனத்துக்
கொடுமையை வரலாறு மறக்குமோ

ஈழத் துயரக் கடலிடை
துளியாய் நிற்பதல்ல
சங்கு போல் மென் கழுத்து
கதிர் ஆழித் திங்கள்
வதனமெனக் கொண்ட வஞ்சியரை
செஞ்சோலையில் வதைத்த கதை
ஈழத் துயரக் கடலிடை
துளியாய் நிற்பதல்ல - அது
ஈழத்தாய் நெஞ்சத்திடை கனலாய்
என்றும் கொதிக்கும் - அந்த
வல்லிபுனத்து வன்கொலை

இனக்கொலையாளியை அழைத்து
வெண் குடை விருது
கொடி தாள மேள தண்டிகை எனப்
பாரதம் பாராட்டி மகிழ்ந்த பாதகத்தினை
வல்லிபுனத்து வஞ்சியர் கொலையதை
நினைத்தால் பொறுக்குமோ

யஷீதியரைப் பாவியர் படை
ஈராக்கில் சூழ
மீட்கப்பாயுது
அமெரிக்கப் படை
எம்மவர் இடர்
யார் காதில் வீழ்ந்தது
யார் கண்ணில் தெரிந்தது
வரலாறு மறக்குமோ
இந்த வஞ்சனையை

மௌனித்தவை மீண்டும்
பேருரை நிகழ்த்தும்
போரினை நினைத்துப்
பொறுத்திருப்போம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...