Monday, 13 January 2014

எகிப்திற்கான புதிய அரசியல் யாப்பு.

கடந்த நான்கு ஆண்டுகளில் எகிப்திய மக்கள் மூன்று புதிய அரசியலமைப்பைக் கண்டுள்ளனர். அமைதியை வேண்டி நிற்கு எகிப்திய மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களாலும் அதற்கு எதிரான அடக்கு முறைகளாலும் வெறுப்படைந்துள்ளனர்.

2011-ம் ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியின் பின்னர் நடந்த தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மொஹமட் மேர்சி வெற்றி பெற்றார். அவர் எகிப்தியப் படைத்துறையினரை ஓரம் கட்டி தனது பிடியின் கீழ் நாட்டைக் கொண்டுவர முயன்ற வேளை அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். பின்னர் படையினர் மொஹமட் மேர்சியின் ஆட்சியைக் கலைத்து அவரை வீட்டுக்காவலில் வைத்ததுடன் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தனர். தற்போது படைத்துறை ஆட்சியாளர்கள் எகிப்திற்கு என ஒரு புதிய அரசமைப்பை உருவாக்கி அதன் மீது மக்களின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஜனவரி மாதம் 14-ம் 15-ம் திகதிகளில் நடாத்துகின்றனர். இதில் ஐந்து கோடிக்க்கு மேற்பட்ட எகிப்திய வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். எகிப்திய படைத்துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி இந்தக் கருத்துக் கணிப்பு தனக்குச் சாதகமாக அமைந்தால் தொடர்ந்து நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபர் தேர்தலைத் தொடர்ந்து பாராளமன்றத் தேர்தலும் நடைபெறும். மொஹமட் மேர்சி எகிப்தின் அதிபராக இருக்கும் போது இசுலாமிய மத நெறிப்படி நடக்கும் அப்துல் ஃபட்டா அல் சிசியை படைத்துறைத் தளபதியாக்கினார். அல் சிசியின் மனைவியும் இசுலாமைய முறைப்படி முகத்தை மூடி ஆடை அணிபவர். ஆனால் தன்னை நியமித்த மேர்சியை அல் சிசி பதவியில் இருந்து அகற்றினார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக எகிப்தின் படைத்துறை ஆட்சியாளர்கள் தமக்கு எதிரானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சில செல்வாக்கு மிக்க இசுலாமிய மதத் தலைவர்களும் பல்கலைக் கழகங்களும் எகிப்தியப் படைத்துறையினரின் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கின்றனர். புனிதப் போராளிக் குழுவான நூர் இயக்கமும் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எகிப்தில் மாறி மாறிப் புரட்சிகள் நடந்தமையாலும் தொடர் ஆர்ப்பாட்டங்களாலும் பல எகிப்திய மக்கள் சலிப்படைந்துள்ளனர்.  ஒரு அமைதியான எகிப்தை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தடைசெய்யப்பட்ட இசுலாமைய சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் ஆயிரம் பேரில் பெரும்பான்மையானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது தலைமறைவாக வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு சார்ப்பான சில மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...