Tuesday, 27 August 2013

சிரியா வல்லரசுகளின் முறுகல் களமாகுமா?


சிரியா மீதான தாக்குதல் செய்யும் எந்த முடிவு ஆபத்துக்கள் நிறைந்ததும் சறுக்கல்கள் நிறைந்ததுமான ஒரு பாதையிலேயே மேற்கை இட்டுச் செல்லும் என்கிறது இரசியா. ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியாவை நோக்கி நகர்த்தப்படுவதை தொடர்ந்து இரசிய வெளிவிவகார அமைச்சர் ஒரு அவசர பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டில் தனது எச்சரிக்கையை விடுத்ததுடன் ஐக்கிய நாடுகள் சபையில் முடிவெடுக்காமல் செய்யப்படும் சிரியாமீதான தாக்குதல் சட்டத்திற்கு முரணானது என்றும் சொன்னார்.

ஆபாசமான அறம் - Moral Obscenity
சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல் விவகாரம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டியது என்கின்றது சீனா. அமெரிக்க அரச்த் துறைச் செயலர் ஜோன் கெரி சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல் ஆபாசமான அறம் என்றார். சிரியா சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் வேதியியல் படைக்கல நிபுணர்கள் மீது துப்பாக்கிப் பிரயாகம் செய்யப்பட்டுள்ளது.

வல்லரசுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள்.
பிரிததானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் அமெரிக்க்க அதிபர் பராக் ஒபாமா 40 நிமிடங்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு சிரியா பற்றி உரையாடினார். இதைத் தொடர்ந்து பிரித்தானியப் பிரதமருடன் தொலை பேசியாக தொடர்பு கொண்ட இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் சிரியாமீதான தலையீட்டிற்கு எதிராக தனது எச்சரிக்கையை விடுத்தார்.சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்தமைக்கான போதிய ஆதரங்கள் இல்லை என்றும் யார் பாவித்தார்கள் என்று சொல்ல முடியாமல் இருப்பதாகவும் புட்டீன் தெரிவித்தார். பதிலளித்த கமரூன் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்த்தான் வேதியியல் குண்டுத் தாக்குதலின் பின்னால் இருக்கிறார் என்பதில் சிறிதளவு ஐயம்தான் உள்ளதென்றார். சிரிய அதிபர் பஷார் அல் அசாத் அமெரிக்காவிற்கு சிரியாவில் தோல்வி காத்திருக்கிறது என்கிறார்.


லிபியாவில் விட்ட பிழையை இரசியா மறக்கவில்லை
நேட்டோ நாடுகளின் படைகள் லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விமானப்பறப்பற்ற ஒரு பிராந்தியத்தை லிபியாவில் ஏற்படுத்துவதற்கு உரிய படை நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் விமானப் பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்காகவும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான மற்ற நடவடிக்கைகளையும் எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மற்ற நடவடிக்கைகள் என்ற பத்தத்தைப் பாவித்து லிபியாவின் வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் தொலைத் தொடர்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டன. தரைப்படை நிலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதை இரசியாவும் சீனாவும் எதிர்த்திருந்தன. அவை இரண்டும் விமானப்படை நிலைகள் தவிர வேறு ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் வேண்டின. அதை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை. சிரியாவிற்கு எதிரான தீர்மானங்கள் மூன்றை ஏற்கனவே இரசியாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றி இருந்தன.  இது லிபியாவில் தாம் ஏமாற்றப்பட்டதாக சீனாவும் இரசியாவும் நினைப்பதாலேயே நடந்தன. சிரியாமீதான தாக்குதல் செங்கோட்டைத் தாண்டுவதாக அமையும் என்கிறது ஈரான்.

படை நகர்வுகள்
சிரியாவிற்கு எதிராக தாக்குதல் செய்ய அமெரிக்காவின் போரிடும் வல்லூறுகள் எனப்படும் F16 துருக்கியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவை துல்லியமாகாத் தக்கும் குண்டுகளை வீசக் கூட்டியவை.  ஜோர்தானிலும் அமெரிக்ககவின் F16 விமானங்கள் இருக்கின்றன. அத்துடன் பேட்ரியோற்ரிக் எனப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் 400இற்கு மேற்பட்ட ஏவுகணைகளும் ஜோர்தானில் இருக்கின்றன. USS Mahan, USS Barry, USS Gravely, USS Ramage ஆகிய கடற்படை நாசகாரிக் கப்பல்கள் மத்திய தரைக் கடலில் "பணியில்' இருக்கின்றன. பிரித்தானிய Tornado GR4 போர்விமானங்கள் சைப்பிரஸில் உள்ள அக்ரொட்ரி படைத்தளத்தில் இருக்கின்றன. படைத்துறை இலக்குகளைத் தாக்கக் கூடிய Strom Shadow எனப்படும் எவுகணைகளும் அங்கு இருக்கின்றன. பிரித்தானியாவின்  HMS Montose, HMS Westminster, HMS  Dragon, HMS Bulwark ஆகிய போர்க் கப்பல்களும் Trafalgar Class வகையைச் சேர்ந்த சீர்வேக(Cruise)  ஏவுகணைகளை வீசக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களும் சிர்யாவிற்கு எதிராக களத்தில் இறங்கும். அசாத்திற்கு எதிராக துருக்கியப் படைகளும் களமிறங்கும். ஜேர்மனி பின்புல ஆதரவுகளை வழங்கும். சிரியாவுட்ன எல்லையைக் கொண்ட துருக்கி நேட்டோவில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவிலான படையினரைக் கொண்ட நாடாகும். இரகசியமாக இஸ்ரேலியப் படையினர் நேட்டோவுடன் இணைந்து செயற்படலாம். சிரிய படைத் துறை இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களும் நேரடியாகத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனுபவமும் இஸ்ரேலியப்படையினருக்கு உண்டு. சிரிய உள்நாட்டுப்ப்போர் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குள் மூன்று தடவைக்கு மேல் இஸ்ரேலியப்படைகள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்களை அழிப்பதில் இஸ்ரேல் அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

பிரான்ஸின் தயக்கம்
சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சிக்கு எதிரான படைநடவடிக்கையில் மற்ற நாடுகளை விட அதிக ஆர்வம் காட்டிய பிரான்ஸ் சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கையில் ஐநாவை ஒதுக்கி விட்டு செயற்படுவது சிரமம் என்கிறது. ஆனால் ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அதை நிச்சயம் இரசியாவும் சீனாவும் இரத்துச் செய்யும். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வேதியியல் குண்டுத்தாக்குதல்களுக்கு படை நடவடிக்கைதான் ஒரே ஒரு பதில் என்றார்.

சட்ட அடிப்படையைத் தயார் செய்கிறது அமெரிக்கா
சிரியாமீதான தாக்குதலுக்கு ஒரு சட்டபூர்வ அடிப்படையை அமெரிக்கா தயார் செய்கிறது. கொசோவோ நாட்டில் தலையிட்டதை ஒரு அடிப்படையாக வைத்து இந்த சட்டபூர்வ நியாயம் காட்டப்படவிருக்கிறது. கொசோவோவில் இனக் கொலை செய்யபப்ட்ட போது அங்கு ஒரு படைநடவடிக்கையை மேற்கொள்ள ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. எந்தத் தீர்மானத்தையும் இரசியா இரத்துச் செய்திருக்கும். காக்கும் பொறுப்பு என்ற அடைப்படையில் கோசோவோவில் படை நடவடிக்கை செய்யப்பட்டது.

இரசியாவும் சீனாவும் என்ன செய்யும்?
நேட்டோப் படைகள் ஒருதலைப்பட்சமாக படை நடவடிக்கையில் இறங்கினால் அதை தடுக்க சீனாவாலோ இரசியாவாலோ முடியாது. இரசியாவிற்கு மத்திய கிழக்கில் சிரியாவில் மட்டும் ஒரு படைத் தளம் இருந்தது. அதுவும் பெருமளவு மூடப்பட்டுவிட்டது. சிரியாவில் இருந்த இரசியப் படைத் துறை வல்லுனர்கள் பலர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இதனால் இரசியாவால் நேட்டோப்படை நடவடிக்கையைத் தடுக்க முடியாது. ஆனால் பதிலடியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிலாவது இரசியா ஒரு தலைப்பட்ச படை நடவடிக்கை மேற்கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் நேட்டோப் படைகள் சிரியாவில் தாக்குதல் நடாத்தலாம். அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையாக இருக்கும். முதலில் சிரியாவின் விமான எதிர்ப்பு நிலைகளும் ஏவுகணைகளும் கட்டளை-கட்டுப்பாட்டு நிலைகளும் தாக்கி அழிக்கப்படலாம். பின்னர் சிரியப் படைத்துறைச் சமநிலையை சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்றக்கூடிய வகையில் சிரியா ஆட்சியாளர்களின் படைநிலைகள் அழிக்கப்படும். விமானங்களிலும் பார்க்க தொலைதூர ஏவுகணைகளே அதிகம் பாவிக்கப்படும். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லபப்ட வாய்ப்புகள் உண்டு. வேதியியல் குண்டுகள் பரவாயில்லை என சிரிய மக்கள் சிந்திக்கலாம்.

பிந்திய செய்திகள்:
பிரித்தானியப்படைத்துறை சிரியா மீதான தாக்குதல்களுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன.
28/0/8/2013- புதன் கிழமை பிரித்தானிய பாதுகாப்புச் சபை கூட விருக்கிறது.
பிரித்தானிய முன்னாள் பிரதமரும் மத்திய கிழக்கிற்கான சமாதானத் தூதுவருமான ரொனி பிளேயர் அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் சிரியாவிற்கு எதிரான ஒரு படை நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய எதிர்க் கட்சியான தொழிற்கட்சி சிரியாமீதான தாக்குதல் தொடர்பாக பாராளமன்றத்தில் கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுள்ளது.29-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றம் கூட்டப்படலாம்.
 அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெல் தமது படையினர் சிரியாமீதான தாக்குதலுக்குத் தயாரான நிலையில் இருப்பதாகவும் அதிபர் பராக் ஒபாமாவின் கட்டளைக்குக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...