சிரியாவிற்கு
எதிரான படை நடவடிக்கைக்கு எதிராக இரசியா கடுமையாக எச்சரிக்கை விட்டுள்ளது.
இரசியாவின் எச்சரிக்கைகள் 1999இல் யூக்கோஸ்லாவியாவிலும், 2003இல்
ஈராக்கிலும், 2011இல் லிபியாவிலும் உதாசீனம் செய்யப்பட்டன. இரசிய மக்கள்
தமது அரசு 2013இல் சிரியாவிலும் கோட்டை விடப் போகிறதா என்ற கேள்வியை
எழுப்பியுள்ளனர்.
கசியும் இரகசியங்களும் பரப்பப்படும் பொய்களும்
2013இல்
சிரியாவில் இரசியா இலேசில் விடமாட்டாது என பலதரப்பினரும் உணர்ந்துள்ளனர்.
ஆனால் காத்திரமாக எதையும் செய்யக் கூடிய வகையில் இரசியாவிடம் மத்திய தரைக்
கடலிலோ மத்திய கிழக்கிலோ படைப்பலமோ அல்லது வலிமை மிக்க நட்பு நாடுகளோ
இல்லை. சீனா எந்த ஒரு படை நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இரசியாவை
அமைதிப்படுத்த அமெரிக்கா இரண்டு இரகசியங்களை வேண்டுமென்றே கசிய
விட்டுள்ளது. ஒன்று: சிரியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக் கூடிய
தாக்குதலை நாம் செய்யப் போவதில்லை. இரண்டு: சிரியா மீதான தாக்குதல் 48
மணித்தியாலங்கள் மட்டும் நடக்கும். சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்கினால்
இரசியா சவுதி அரேபியாவைத் தாக்கும் என்ற ஒரு வதந்தியும்
கசியவிடப்பட்டுள்ளது. இரசியாவின் செசஸ்னிய இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு
சவுதி அரேபியா உதவி செய்கிறது என்ற ஆத்திரம் இரசியாவிற்கு இருக்கிறது.
ஈராக் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதிகளுக்கு உதவுகிறது என்று 2003இல்
அமெரிக்கா ஈராக்கைத் தாக்கலாம் என்றால் 2013இல் இரசியாவால் சவுதியை ஏன்
தாக்க முடியாது? சிரியாவிற்கான ஆதரவை இரசியா விட்டுக் கொடுத்தால் பதிலாக
பல பொருளாதாரச் சலுகைகளை சவுதி அரேபியா இரசியாவிற்கு வழங்கத் தயாராக
இருப்பதாக இரசியாவில் அதிபர் விளாடிமீர் புட்டீனைச் சந்தித்த சவுதி இளவரசர்
பந்தர் பின் சுல்தான் தெரிவித்தாக செய்திகள் கசிந்தன. இன்னும் ஒரு செய்தி
சிரியாவை விட்டுக் கொடுக்காவிடில் செஸ்னியப் போராளிகள் இரசியாவி பெரும்
தாக்குதல்களை மேற்கொள்வார்கள் எனவும் இரசியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால
ஒலிம்பிக் போட்டியில் செஸ்னியப் போராளிகள் பெரும் குழப்பம்
விளைவிப்பார்கள் எனவும் சவுதி இளவரசர் பந்தர் பின் சுல்தான் புட்டீனை
எச்சரித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த புட்டீன் சவுதி அரேபியாவைத்
தாக்கும்படி தனது படைகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கிறது. சவுதி
அரேபியாவில் நடக்கும் எந்தத் தாக்குதலும் எரிபொருள் விலையிலும் உலகப்
பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஐக்கிய
அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் நன்கு அறியும். இன்னும் ஒரு செய்தி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாமீதும் ஈரான்மீதும் தாக்குதலை நடாத்தி மூன்றாம் உலகப் போரை ஆரம்பிக்கப் போகிறார் என்கிறது.
பின்னடிக்கும் பிரித்தானியா
பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் சிரியா தண்டிக்கப்பட வேண்டியது என்பதில் உறுதியாக நின்றார். ஆரம்பத்தில் அதற்கு ஆதரவாக நின்ற எதிர்க் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் பின்னர் தனது நினையை மாற்றி ஒரு வெற்றுக் காசோலையை கொடுக்க முடியாது பாராளமன்றத்தில் முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார். இதனால் பிரித்தானியப் பாராளமன்றத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்படப் போகிறது. முதலாவது ஐக்கிய நாடுகள் சபையூடான நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம். இரண்டாவது ஐநா ஊடான நடவடிக்கை சரிவராவிடில் மீண்டும் பிரித்தானியப் பாராளமன்றத்தில் சிரியாமீதான நேரடிப்படை நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம். இவை பிரித்தானியப் பாராளமன்றத்தின் மக்களவையிலும் பிரபுக்கள் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். சிரியாவில் இருக்கும் ஐநா சபையின் நிபுணர்கள் முதலில் சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ஐநா பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கைக்கு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். அதை இரசியாவோ, சீனாவோ அல்லது இரண்டும் இணைந்தோ இரத்துச் செய்தபின்னர் நேட்டோ நாட்டுப் படைகள் சிரியா மீது தாக்குதல் செய்ய வேண்டும். 28/08/2013 புதன் கிழமை நடந்த பிரித்தானியப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சட்டமா அதிபர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இன்றி சிரியாமீது படை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமது ஆலோசனையை வழங்கியிருந்தார். சிரியாவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்களின் அறிக்கைக்கு முன்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இரசிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். அரபு லீக் நாடுகள் வேதியியல் குண்டுகளை சிரிய அரச படைகள்தான் வீசின என்கிறது. ஐநாவின் சிரியாவிற்கான தூதுவர் லக்தர் பிராஹிமி சிரியாமீதான படை நடவடிக்கைக்கு ஐநாவின் அங்கீகாரம் தேவை என்கிறார். ஆனால் சிரியப் படைகள் எந்த அளவு மோசமான இனக்கொலை புரிந்தாலும் அதை பன்னாட்டரங்கில் பாதுகாக்க இரசியாவும் சீனாவும் தயாராக இருப்பதை யார் கவனத்தில் கொள்வார்கள். ஏற்கனவே ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் சிரியாவில் கொல்லப்பட்டு விட்டனர். பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு மாபெரும் மனித அவலம் சிரியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளாக இதை யாரும் தடுக்க முயலவில்லை.
அமெரிக்காவில்
பல பாராளமன்ற உறுப்பினர்கள் சிரியாமீதான தாக்குதலை எதிர்க்கிறார்கள்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த பின்னர் அங்கு
அல் கெய்தாதான் ஆட்சியைக் கைப்பற்றும் என அவர்கள் கருதுகிறார்கள். அசாத்தை
விட்டால் அவர் சார்பில் போராடும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவருக்கு
எதிராகப் போராடும் அல் கெய்தாவும் அடிபட்டு இறக்கட்டும் என அந்தப்
பாராளமனற் உறுப்பினர்கள் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் தந்திரம்
வேறு. அசாத்திடம் விமானப்படை வலு இருக்கும் வரை போர்முனை அவருக்குச்
சாதகமாகவே இருக்கும். அவரது விமானப்படையை ஏவுகணைகள் மூலம் அழித்துவிட்டு
அவரது விமானங்களைப் பறக்க முடியாமல் செய்தால் சிரியக் கிளர்ச்சிக்
குழுக்கள் வெற்றி பெறும். பின்னர் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில்
கிளர்ச்சிக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளட்டும் - இதுதான்
அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் சிரியா மீதான தாக்குதலுக்கு பிரித்தானியாவைப் போல் தாமும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர். அதிபர் பராக் ஒபாமா இன்னும் தான் சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை என்கிறார்.
சிரியாவின் படைத்துறையினரின் உரையாடல்களை ஒற்றுக் கேட்ட அமெரிக்கப் உளவுத் துறையினர் சிரியாவில் வேதியியல் குண்டுகளை வீசியது சிரிய அரச படைகள் என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனால் இரசியா வேதியியல் குண்டுகளை அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் வீசி இருக்கலாம் என்கிறது.
இரசியாவால் பதில் தாக்குதல் கொடுக்க முடியாது
பிரித்தானியாவும்
அமெரிக்காவும் ஏற்கனவே தமது படைகளை சிரியாவை நோக்கி நகர்த்தி விட்டன.
சிரியாவில் இருந்த சிறிய இரசிய கடற்படைத் தளத்தில் இருந்து பலரை சென்ற
ஆண்டே இரசியா திரும்பப்பெற்றுக் கொண்டுவிட்டது. இப்போது இரசியா எந்த ஒரு
படை நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இரசியாவால் எந்த ஒரு பதில்
தாக்குதல்களையும் நேட்டோப்படைகளுக்கு எதிராக தொடுக்க முடியாது. சவுதி
அரேபியாவை அமெரிக்கா கடுமையாகப் பாதுகாக்கும். குவைத், கட்டார் போன்ற
நாடுகளில் இரசியா தொலைதூர ஏவுகணைகளை வீசலாம். அது எந்த விதத்திலும்
சிரியாவைப் பாதுகாக்க மாட்டாது. சிரியாவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தி
மத்திய கிழக்கில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த இரசியா தூண்டலாம். ஈரானும்
இதை உறுதி செய்வது போல் சிரியாமீதான தாக்குதல் சற்றும் எதிரபாராத மோதல்களை
உருவாக்கலாம் என எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தனது துணைப்படையினரை அவசரமாக சேவைக்கு அழைத்ததுடன் ஏவுகணை எதிர்ப்பு நிலைகளை நகர்த்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு சிரியா மீதான தாக்குதல்களை தாம் சும்மா பார்த்துக் கொண்டிக்க மாட்டோம் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.
பிந்திக் கிடைத்த செய்தி:
இரசியா தனது போர்க்கப்பல்கள் இரண்டை மத்தியதரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது.
பிரித்தானியப் பாராளமன்றத்தில் செய்யப்பட்ட முதலாவது வாக்கெடுப்பில் சிரியாமீதான படை நடவடிக்ககை தொடர்பான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment