Wednesday, 7 August 2013

அல் கெய்தாவின் மீள் எழுச்சியும் அமெரிக்காவின் அதிர்ச்சியும்

பின் லாடனின் கொலையில் முக்கிய பங்கு வகித்தவரும் சிஐஏயின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா 2011 ஜுலையில் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" எனப் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கூறினார்.

2011 மே மாதம் அல் கெய்தாவின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தாவின் முன்னணித் தலைவர்கள் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் அல் கெய்தாவினரின் தொடர்பாடல்கள் மிகவும் தடைப்பட்டிருந்தது. அவர்களின் தொடர்பாடல் கருவிகளை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து அமெரிக்கா அவர்களைத் தாக்கி அழித்தது. 

ஆனால் இப்போது அல் கெய்தாவின் தாக்குதல்களுக்குப் பயந்து அமெரிக்கா ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள தனது 19 இராசதந்திர நிலையங்களை மூடிவிட்டது. தனது குடிமக்களை வட ஆபிரிக்க நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தமது பல தூதுவரகங்களை மூடியுள்ளன. அல் கெய்தாவின் இரு தலைவர்களான ஐமன் அல் ஜவாஹிரியும் நாசர் அல் வுஹவ்ஷியும் செய்த தொடர்பாடலை ஒற்றுக் கேட்ட அமெரிக்க உளவாளிகள் அல் கெய்தா அமைப்பு வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்பதாக 04/08/2013 ஞாயிற்றுக் கிழமை அறிவித்தனர். நடத்த விருக்கும் தாக்குதல்கள் 2001 செப்டம்பர் 11-ம் திகதி நடாத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் மோசமானதாக இருக்கும் என அமெரிக்க உளவுத் துறை அறிவித்தது. இந்தத் தாக்குதல் நடக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் பெறமுடியாத அளவிற்கு அவர்கள் மறைமுக வார்த்தைகள் பாவித்திருந்தனர். இப்போது அல் கெய்தா தோற்கடிக்கப்படவில்லை அதன் தாக்குதல் உத்திகள்தான் தோற்கடிக்கப்பட்டன என்கின்றனர் அல் கெய்தாவைத் தொடர்ந்து அவதானிக்கும் படைத்துறை விமர்சகர்கள். அமெரிக்க உளவுத் துறையின் அறிவிற்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் ஈராக்கிலும் பாக்கிஸ்த்தானிலும் பல அல் கெய்தாப் போராளிகள் சிறைகளை உடைத்துக் கொண்டு வெளியேறிவிட்டனர்.

புதிய மனித வெடி குண்டுகள்
அல் கெய்தாவினர் ஒரு புதிய வெடிகுண்டுகளை உருவாக்கியுள்ளனர் என்கிறது அமெரிக்க உளவுத் துறை. அக் குண்டுகள் ஈரமான வெடிக்கக் கூடிய பதார்த்தத்தில் தோய்த்து எடுக்கப்படும். அந்த ஆடை உலர்ந்தவுடன் அந்தப் பதார்த்தம் வெடிக்கும். இந்த வகைக் குண்டுகள் விமான நிலையங்களில் தற்போது உள்ள ஒளி வருடிகளால்(Scanners) கண்டறிய முடியாதவையாகும். இக்குண்டுகளை அல் கெய்தாவின் இப்ராஹிம் அல் அசிரி என்னும் நிபுணர் உருவாக்கியுள்ளார்.

அல் கெய்தா மீள் எழுச்சி பெற்றது எப்படி?
2011 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்ட பின்னர் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். முக்கியமான தன்னிச்சைக் குழுக்கள்:
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அரபுக் குடாநாட்டில் அல் கெய்தா- இது யேமலின் செயற்படுகிறது.  -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.

இவற்றில் 2012இல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அரபுக்குடாநாட்டு அல் கெய்தா(AQAP) செயற்பட்டது. அமெரிக்க ஆளில்லா விமானங்களும் இவர்களை இல்க்கு வைத்தே அதிக தாக்குதல்களை மேற்கொண்டன.   2013இன் ஆரம்பத்தை இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) அல்ஜீரிய பணயக் கைதிகள் மூலம் தனதாக்கிக் கொண்டது. மேற்கு நாடுகளையும் அதன் நண்பர்களையும் அது 2013 ஜனவரி மூன்றாம் வாரம் கலங்கடித்துவிட்டது. Maghreb என்பது வட மேற்கு ஆபிரிக்காக் கண்டத்தைக் குறிக்கும். இதில் எகிப்து, லிபியா, மொரொக்கோ, அல்ஜீரியா துனிசியா, மாலி ஆகியவை அடங்கும். அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரம் அல் கெய்தா மீளவும் எழுச்சியடைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பினாலும் காத்திரமான அல் கெய்தாவின் செயற்பாடு மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா இயக்கம் துவாரெக் இனக்குழும விடுதலை இயக்கமான அன்சார் டைனுடன் இணைந்து கைப்பற்றியதுடன் வெளிப்பட்டது. மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா அன்சார் டைன் இயக்கத்துடன் இணைந்து கைப்பற்றியதுடன் மேலும் தெற்கு நோக்கி துரித கதியுடன் முன்னேறத் தொடங்கியது. பின்னர் பிரான்ஸ் தனது படைகளை மாலிக்கு அனுப்பி அல் கெய்தாவிடம் இருந்து பல பகுதிகளை மீட்டது. பிரான்ஸ் மாலியில் தாக்கி பின்னர் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே.

ஈராகில் ஜபத் அல் நஸ்ரா
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர். 2009இல் ஈராகில் உள்ள அல் கெய்தாவினரை முற்றாக அழித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னர் அல் கெய்தா அங்கு ஜபத் அல் நஸ்ரா என்னும் பெயரில் மீள வளர்ந்து கொண்டிருக்கிறது.

திறந்து விட்ட பாக்கிஸ்த்தான்
பாக்கிஸ்த்தானிய அரசு பல அல் கெய்தா சந்தேக நபர்களை அண்மையில் சிறையில் இருந்து விடுவித்திருந்தது. அதில் முக்கிய மாக அல் கெய்தாவின் நிபுணரும் தற்கொலைத் தாக்குதல் பயிற்ச்சியாளருமான  முஹம்மட் நயீம் நூர் கானை விடுவித்தது வாசிங்டனையும் இலண்டனையும் ஆத்திரத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. இவர் கைது செய்யப்பட்ட போது இவரின் மடிக்கணனியில் பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையமான ஹீத்ரூவைத் தாக்கும் திட்டம் அகப்பட்டது.

அல் கெய்தாவின் விளை நிலமாகும் எகிப்து
அரபு வசந்தமும் அதனால் மூன்று ஆட்சியாளர்கள் சடுதியாக பதவியில் இருந்து அகற்றப்பட்டமை அல் கெய்தாவை மிகவும் அதிச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக எகிப்தில் அமெரிக்காவிற்கு வேண்டியவரான ஹஸ்னி முபராக்கை மக்கள் தம் எழுச்சியின் மூலம் பதவியில் இருந்து விரட்டியது அவர்கள் எதிர்பாராத ஒன்று. அரபு நாடு ஒன்றில் தங்கள் பங்களிப்பு எதுவுமின்றி பெரும் அரசியல் நிகழ்வு நடந்ததை அவர்களை அதிர வைத்தது. ஆனால் இப்போது இசுலாமிய மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் அமெரிக்க சார்பு எகிப்தியப் படைத்துறையும் மோதுவதை அல் கெய்தா மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றனர். எகிப்தியப் படைத்துறை இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வன்முறையை தொடரத் தொடர அவர்கள் தம்மைப் போல் மிகவும் தீவிரவாதிகளாக மாறித் தம்முடன் இணைவார்கள் என நம்புகிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பார்த்து வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க புனிதப் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்கிறது அல் கெய்தா.எகிப்தில் இப்போது பலர் அல் கெய்தாவில் இணையத் தொடங்கி விட்டார்கள்.

சிரியாவை ஆட்டிப்படைக்கும் அல் கெய்தா
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களில் அமெரிக்க சார்புடையவர்களுக்கு தேவையான படைக்கலன்களை அமெரிக்கா வழங்கவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கையுடைய கிளர்ச்சிக்காரர்களிடம் சிறந்த படைக்கலன்களும் போதிய பணமும் புளக்கத்தில் இருக்கின்றன. இதனால் பல கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்காவில் அதிருப்தியடைந்து அல் கெய்தாவினருடன் இணைந்தனர்.

லிபியாவில் வளரும் அல் கெய்தா
லிபியாவில் தளபதி மும்மர் கடாஃபியை பதவியில் இருந்து விரட்டிக் கொன்ற பின்னர் பல இனக் குழுமங்களுக்கு இடையிலான மோதல்கள் வலுவடைந்துள்ளன. இதனால் பலர் அல் கெய்தாவில் இணைகின்றனர்.

துனிசியாவில் மீண்டும் கலவரம்
அரபு வசந்தத்தின் முன்னோடிகளான துனிசிய மக்கள் இப்போது மீண்டும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். புரட்சியைத் தொடர்ந்து அங்கு மதவாத அரசு ஆட்சிக்கு வந்ததது அது ஒரு ஆண்டுக்குக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதன் படி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் ஓர் ஆண்டு முடிந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது துனிசிய அரசு.அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். அங்கும் அல் கெய்தா தனது உறுப்பினர்களை அதிகரிக்கிறது.

நீலக் கண் அல் கெய்தா
சிரியாவில் அல் கெய்தாவில் போராடும் ஐரோப்பிய இளைஞர்கள் இருவரைப் பேட்டி கண்ட அமெரிக்க ஊடகம் ஒன்று நீலக் கண் அல் கெய்தா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிவிட்டிருந்தது. அதில் பல ஐரோப்பாவில் பிறந்த இசுலாமியர்கள் தமது நாட்டில் இருந்து சிரியா சென்று அல் கெய்தாவில் இணைந்து போராடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்
அரபு வசந்தம் ஏற்பட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளும் பாக்கிஸ்த்தானில் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டமையும் அல் கெய்தாவின் வளர்ச்சிக்கு உரமூட்டுகின்றன. இனிவரும் சில ஆண்டுகளில் பல தீவிரவாதத் தாக்குதல்கள் உலகின் பல மூலைகளில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...