Tuesday 6 August 2013

பொருளாதாரத்தையும் 13-ம் திருத்தத்தையும் வைத்து ராஜ்பக்சேக்களின் செல்வாக்கிற்கு எதிரான சதி

இலங்கையில் 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சேக்களின் அரசியல் செல்வாக்கு அசைக்க முடியாதவாறு உறுதியாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பன்னாட்டு மட்டத்தில் ராஜபக்சேக்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் அதை அவர்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்பதும் சிங்களவர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சனை போன்றவற்றை வைத்து அரசுக்கு எதிரான ஒரு பெரும் கிளர்ச்சிக்கு யாரும் தூபமிட முடியாத நிலை இலங்கையில் இருக்கிறது. ஆனால் Standard & Poor எனப்படும் நாடுகளின் கடன்படுதிறனை ஆய்வு செய்து நிரைப்படுத்தும் நிறுவனம் இலங்கைப் பொருளாதாரத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறது:
  • The stable outlook reflects our view that the country has strong prospects for per capita real GDP growth over the next few years and the government's fiscal profile is improving; at the same time, Sri Lanka's external liquidity is vulnerable and it has high fiscal and external debt.
 நட்டின் தனி நபருக்கான மொத்த உற்பத்தி இனிவரும் சில் ஆண்டுகளிற்கு வளர்ச்சியடைவதற்கான  வாய்ப்புக்கள் பலமாக இருக்கின்றன என்பதை நிலையான காட்சி எதிரொலிக்கிறது. அதன் கணக்குப்படி இலங்கைப் பொருளாதாரம் இனி வரும் ஆண்டுகளில் நிலையாக இருக்கும் என்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். எப்படி நிலையாக இருக்கும் என்பதை இப்படிக்கூறுகிறார்கள்:

  • We affirmed the ratings to reflect our view that Sri Lanka has weak external liquidity, moderately high and increasing external debt, and a weighty government debt and interest burden. In addition, some of the country's political institutions lack extensive checks and balances.

இதில் முக்கியமானவை:
1. பலவீனமான வெளி நீர்மை: குறுகியகால வெளிநாட்டு நிதிக்கையிருப்பு பலவீனமானதாக இருக்கும்.
2. சற்று அதிகமானதும் அதிகரித்துச் செல்கின்றதுமான வெள்நாட்டுக்கடன்.
3. கனமான அரச கடன் பளுவும் வட்டிப் பளுவும்
4. அரச நிறுவனங்கள் சிலவற்றில் தனிநபர் ஆதிக்கத்திற்கும் திறமையின்மைக்கும் எதிரான கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கின்றன.

என்ன இந்தத் தரவரிசை
இந்த நிலை தொடர்ந்து இருக்கும் என சொல்லும் Standard & Poor இலங்கையின் தரத்தை குறுகிய காலத்திற்கு Bஎனவும் நீண்டகாலத்திற்கு B+ எனவும் தரப்படுத்தியுள்ளது. Standard & Poor உம் வேறு நிறுவனங்களும் நாடுகளினதும் தனியார் நிறுவனங்களினதும் கடன்படுதிறன் நிலையான தன்மை போன்றவற்றை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தும். இதில் Standard & Poor ஆனது குறுகிய காலத்தரவரிசையை A-1+, A-1, A-2, A-3, B, C, I எண்ற எழு தரத்தில் இறங்கு வரிசைப்படி தரப்படுத்தும். குறுகிய காலத்தில் இந்த ஏழு வகையில் ஒவ்வென்றையும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கும். 
இலங்கைக்குக் கிடைத்துள்ள குறுகிய காலத்திற்கான B ஆனது Highly speculative எனப்படும். அதாவது அதிக அளவு ஊகத்திற்குரிய உறுதியில்லா நிலையாகும்.
Standard & Poor நெடுங்காலத்திற்கு Bஐ மேலும் BB+, BB, BB-, B+, B, B- என ஆறுவகைப்படுத்தியுள்ளது. இதில் இலங்கைக்கு நான்காம் இடமான  B+ மட்டுமே கிடைத்துள்ளது. இதன்படி இலங்கைக்குக் கடன் கொடுப்பவர்கள் அல்லது இலங்கையில் முதலீடு செய்பவர்கள் கடுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.

 இன்னும் ஒரு மதிப்பீடு
இன்னும் ஒரு கடன்படுதிறன் மதிப்பீட்டு நிறுவனமான Fitch இலங்கைப் பொருளாதாரம் 7 விழுக்காடு வளரும் என்று சொல்கின்ற அதே வேளை இலங்கையில் வெளிநாட்டு முதலீடு பலவீனமாக இருக்கும் என்று சொல்கிறது. இலங்கையின் பிழையான ஆட்சிமுறைமையை இதற்குக் காரணமாக Fitch சொல்கிறது. Fitchஇன் மதிப்பீட்டால் இலங்கை மைய வங்கியின் ஆளுனர் கவலையடைந்துள்ளார்.

கடன் பட்டுக் கடன் கட்ட வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையின் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து இருக்கும் என்பதைக் குறிப்பிட Standard & Poorஆனது stable outlook என்ற பதத்தைப் பாவித்துள்ளது. ஆனால் stable outlook என்ற பதத்திற்கும் Bஇற்கான Highly speculative என்ற கருத்திற்கும் இருக்கும் முரண்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பொருளாதாரம் இப்போது இருக்கும் மோசமான நிலையில் தொடர்ந்து இருக்கும் எனக் கொள்ளலாம். ஆனால் இலங்கைப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி நிலையிலேயே இருக்கும். ஆனால் அதன் வெளிநாட்டுக்கடனைத் திருப்பிக் கொடுக்கும் திறன் குறைந்திருப்பதால் இலஙகை கடன்பட்டுக் கடன் கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. ராஜபக்சேக்களின் அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து வருகின்றது. இதைச் சரிக்கட்ட ராஜபக்சேக்களின் அரசு பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகக் கேட்டுள்ளது.


ராஜபக்சேக்களின் செல்வாக்கிற்கு முதல் அடி
இலங்கை அரசு பன்னாட்டு நாணய நிதியத்திடம் கேட்கும் கடனுக்கு நிதியம் இம்முறை விதிக்கும் நிபந்தனை இலங்கை அரசு சில அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதாகும்.  அரச கட்டுப்பாடில் உள்ள சீனித் தொழிற்சாலை, லங்கா சலுசல, தேசிய கடுதாசிக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா மட்பாண்ட கூட்டுத்தாபனம், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா இறப்பர் ஏற்றுமதி கூட்டுத்தாபனம், சிறிலங்கா விமானச் சேவை போன்றவற்றை தனியாருக்கு விற்பனை செய்யச் சொல்லுவதாகும். இலங்கை அரசின் கடன்பளுவை நீக்க ராஜபக்சேக்கள் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைக்குச் சம்மதித்தே ஆக வேண்டும். அப்படி நடக்கும் நிலையில் இந்த அரச நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் பல இடது சாரி அமைப்புக்களும் ராஜபக்சேக்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள். இது ராஜபக்சேக்களின் செல்வாக்கிற்கு விழும் முதற் பேரடியாக அமையும்.

இரண்டாம் அடியாக 13வது திருத்தம்
13வது திருத்தத்தை பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது நிறைவேற்றப்படும்போது படைக்கலன் ஏந்திய பல தமிழ்போராளிக் குழுக்கள் இலங்கையில் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவிக்கக் கூடியவர்களாக இருந்தனர். அநுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் விக்டர் தலைமையில் நடாத்திய தாக்குதல் போல் எங்கும் எந்நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் இலங்கை அரசும் சிங்கள மக்களும் இருந்தனர். இந்தியப் படைகள் எந்நேரமும் இலங்கைக்குள் இறங்கலாம் என்ற நிலை இருந்தது. அப்போதைய இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜேஆரின் கரத்தில் ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதம் இருந்தது. இதனால் 13வது திருத்தம் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. எதிர்த்துக் கிளர்ச்சி செய்த சிங்கள மக்கள் மீது முதல் தடவையாக இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. சிங்கள் மக்களுக்கு இருந்த ஆபத்து நிலையை தமிழீழ விடுதலைப் புலிகளை தீரமிக்க சிங்களப்படையின் பல தியாகங்களுக்கு மத்தியில் போரில் வென்று அகற்றிவிட்டனர் என சிங்களவர்கள் நினைக்கின்றனர். அதனால் இப்போது 13வது திருத்தம் தேவை அற்ற ஒன்று. அதை அமூலாக்குவது சிங்களப்படைவீரர்களின் தியாகத்தை காலில் போட்டு மிதிப்பதாகும் என அவர்கள் கருதுகின்றனர். வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது அவர்களை ஆத்திரப்படுத்த வைத்துள்ளது. அது மட்டுமல்ல பொறுப்புக் கூறல் என்ற பெயரில் மேற்கு நாடுகள் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கின்றனர் எனவும் சிங்களவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஒரு சிங்களப்படைவீரனாவது தண்டிக்கப்படக் கூடாது என அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கழக்த்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும், பொதுநலவாய மாநாட்டை மையப்படுத்தி கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும் ராஜபக்சேக்கள் வளைந்து கொடுத்தால் அது அவர்களின் செல்வாக்கை சரிப்பதாகவே இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் மிகப்பலவீனமான நிலை ராஜபக்சேக்கள் தேவையான நேரத்தில் தேவையானவரைத் தம்பக்கம் இழுக்கும் திறனில் இருந்து வெளிப்படுகிறது. இலங்கையின் கடனைச் சாட்டாக வைத்துக் கொண்டும் மீளிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கொடுக்கும் அழுத்தங்களை வைத்துக் கொண்டும் ராஜபக்சேக்களின் செல்வாக்கை சரிக்க வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் முயல்கின்றன.  இவற்றிற்கு ராஜபக்சேக்கள் வளைந்து கொடுப்பார்களா? அல்லது இவற்றை முறியடிக்க சீனாவிடம் கடன்பட்டு மேலும் சீனாவை நோக்கிச் செல்வார்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...