Monday 22 July 2013

ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் அவலங்கள்

"2014இல் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும்" என்று சிலகாலமாகச் செய்திகள் அடிபடுகின்றன. இது உண்மையா? ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் "பணி" முடிவடைந்து விட்டதா? ஆப்கானிஸ்த்தானில் இனி அமைதி நிலவுமா? அல் கெய்தா அழிக்கப்பட்டு விட்டதா? 

கோபுரங்கள் சாய்வதுண்டு
1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தை அமைத்தது. அது 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் வரை செல்லும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமைத்த தொலைதொடர்புக் கோபுரம் சோவியத் ஒன்றியத்தை உளவு பார்க்க உருவாக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் படை எடுத்தது. இதுவும் சோவியத் ஒன்றியம் என்ற கோபுரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது. சோவியத் ஒன்றியத்தை விரட்ட அமெரிக்கா தெரிவு செய்தவற்றில் ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம்.. சோவியத்தின் பொதுவுடமைவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று சோவியத் படைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்குப் போதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர். ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார். சோவியத் ஒன்றியப் படைகளிற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா ஈரான் ஆகிய நாடுகள் உதவி செய்தன. 1989இல் சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானிஸ்த்தானில் போர் தொடர்ந்தது. சோவியத் ஒன்றியம் பதவியில் அமர்த்திய நஜிபுல்லா 1992இல் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மோசமான உள்நாட்டுப் போர் உருவானது. 1996இல் தலிபான் அமைப்பு ஆப்கான் தலைநகர் காபுலைக் கைப்பற்றியது. இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மோசமாகியது. அமெரிக்கா ஆப்கான் ஒரு ஈரானின் செய்மதி நாடாக மாறுவதை கடுமையாக எதிர்த்தது. ஆப்கானிஸ்த்தானின் போராளிக் குழுக்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல்  வலுத்தது. ஆப்கானிஸ்த்தானில் இருந்து செயற்படும் பின் லாடன் தலைமையிலான அல் கெய்தா இயக்கம் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல்கல் தொடுத்தன. 1998இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் உள்ள அல் கெய்தால் நிலைகள் மீது குண்டுகள் வீசியது. 1999இல் அமெரிக்கா பின் லாடனைப் பிடித்துத் தன்னிடம் தரும்படி வேண்டி ஆப்கான் மீது பொருளாதாரத் தடையையும் விமானப் பறப்புத் தடையையும் விதித்தது. 2001 செப்டம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்கப்பட்டது. அதே ஆண்டு ஒக்டோபர் அமெரிக்கா தலைமையில் நேட்டோப் படையினர் ஆப்கான் மீது படையெடுத்தனர். 2004இல் ஆப்கானில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு புதிய அதிபராக ஹமித் ஹர்ஜாய் தெரிவு செய்யப்பட்டார். 2006இல் ஆப்கான் முழுவதும் நேட்டோப்படைகளின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் பட இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2009இல் அமெரிக்கா தனது அணுகுமுறைகளை மாற்றியது. அமெரிக்கப்படைகள் அதிகரிக்கப்பட்டன. ஆப்கானியர்களுக்கு படைப்பயிற்ச்சி வழங்குவது அதிகரிக்கப்பட்டது. 2011இல் நேட்டோப்படைகளில் ஒன்றான டச்சுப்படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறினர். 2012இல் நேட்டோ நாடுகள் 2014இல் ஆப்கானில் இருந்து நேட்டோப்படைகள் வெளியேறும் என முடிவெடுத்தன. 2012 ஜனவரியில் தலிபான் அமைப்பினர் அமெரிக்காவுடனும் ஆப்கான் அரசுடனும் பேச்சு வார்த்தை நடத்த துபாயில் தனது பணிமனையைத் திறக்க ஒப்புக் கொண்டது. 2012ஜூலை ஆப்கானிற்கான டோக்கியோ நன்கொடை மாநாடு கூட்டப்பட்டது. அதில் ஆப்கானிற்கு 16பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்ற நிபந்தனியுடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 2013ஜூனில் நேட்டோவிடமிருந்து ஆப்கான் படைகள் நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. பின்னர் தலிபானுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சு வார்த்தைகளை நடத்த முயல்வது ஆப்கான் அரசை அதிருப்திக்குள்ளாக்கியது. 



2014இல் அமெரிக்கப்படைகள் முற்றாக வெளியேற மாட்டாது

 ஆப்கானில் தற்போது நேட்டோப்படைகள் இரு பணிகளைச் செய்கின்றன. ஒன்று தாக்குதல் பணி மற்றது ஆதரவுப்பணி. தாக்குதல் பணி செய்யும் படையினர் 2014இல் ஆப்கானில் இருந்து வெளியேறுவர். ஆப்கான் படையினருக்கு பயிற்ச்சியும் தேவைப்படும்  போது அவர்களுடன் இணைந்து தாக்குதலும் செய்யும் ஆதரவுப் பணி செய்யும் அமெரிக்கப் படையினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்த்தானில் இருப்பார்கள். அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனின் கணிப்பின் படி 2024வரைக்கும் அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருக்கும்.

ஆப்கான் போர் முடியவில்லை
ஆப்கானில் நடந்து கொண்டிருக்கும் போர் இப்போது முடிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. வேறு வடிவத்தில் போர் தொடரும். ஆப்கானித்தானில் எப்போது அமைதி நிலவும் என்பது பற்றி எந்த வித உறுதி மொழியும் இப்போது சொல்ல முடியாது. ஆப்கானில் இருக்கு 68,000படையினர் எப்போது முழுமையாக வெளியேறுவார்கள் என்பதற்கான கால அட்டவணை ஒன்றும் உருவாக்கபப்டவில்லை. ஆப்கானில் குறைந்தது 20,000படைகள் இருக்க வேண்டும் என பெண்டகன் நம்புகிறது. 

அமெரிக்கா நினைத்தது நடக்கவில்லை
அல் கெய்தாவில் இன்னும் 100 பேரே எஞ்சியுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சொல்லி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பின் லாடன் கொல்லப்பட்டு விட்டார். இன்னும் ஆப்கானிஸ்த்தானில் நேட்டோப்படைகள் 68,000 ஏன் இருக்கின்றன? அல் கெய்தா அழிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஈரான் அடக்கப்படாதவரை ஆப்கானில் தீவிரவாதம் அடக்கப்பட மாட்டாது. அமெரிக்கா ஆப்கானில் கற்றுக் கொண்ட பாடங்களில் முக்கியமானது பாக்கிஸ்த்தான் அமெரிக்காவின் எதிரிநாடு என்பதே. ஆனால் அமெரிக்க இந்த வெட்கக் கேட்டை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறது. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அட்டூழயம் செய்தது போல் அமெரிக்கப்படைகளும் ஆப்கானிஸ்த்தானில் செயற்படுகின்றன. அமெரிக்கப்படைகளுக்கு தாம் ஆப்கானில் ஏன் இருக்கிறோம் ஏன் போராடுகிறோம் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற தெளிவான சிந்தனை இந்திய அமைதிப் படையைப் போலவே நேட்டோப்படைகளுக்கும் இல்லை. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் கார்ஜாயும் அவரது குடும்பமும் பல ஊழல்கள் புரிந்து வருகின்றனர். ஆப்கான் மக்கள் அவர்களையும் அமெரிக்கப்படைகளை வெறுப்பது போல் வெறுக்கின்றனர்.நேட்டோப்படையினர் ஆப்கானில் உருவாக்கிய ஆப்கான் தேசியப் படையும், ஆப்கான் தேசியக் காவற்துறையும் நேட்டோப்படைகள் ஆப்கானில் இருந்து வெள்யேறியவுடன் பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் ஆப்கானில் நிலைமை மிக மோசமானதாக மாறும்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...