ருவண்டாவில் எண்ணூறாயிரம் பேர்
கொல்லப்பட்ட பின்னர் நடக்கும் மோசமான நெருக்கடியாக சிரிய உள்நாட்டுப் போர்
உருவெடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர்
ஜூலை மாத நடுப்பகுதியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிரியாவில் மாதம்
ஒன்றிற்கு ஐயாயிரம் பேர் கொல்லப்படுகின்றனர் என்கிறார். அத்துடன்
நிற்கவில்லை 1.8 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.
இலங்கையில் கொல்லப்படும் மக்கள் தொகை பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது
நாம் பிணங்களை எண்ணுவதில்லை என ஐநா தெரிவித்தது உங்கள் காதுகளில் இப்போது
எதிரொலிக்கலாம். இன்னும் கேளுங்கள் சிரியாவில் போர்க்குற்றம் இப்போது
ஒழுங்காக நடக்கிறது என்றார் ஐநாவின் மனித உரிமைகளுக்கான பிரதிப் பொதுச்
செயலர் இவான் சைமன்விச். திடீரென்று சிரியாவில் ஐநாவிற்கு ஏன் இந்தக்
கரிசனை என்று பார்த்தால் ஐநா தமக்கு இப்போது சிரியப் பிரச்சனையை எதிர்கொள்ள
மூன்று பில்லிய அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறதாம்.
ஐநா
ஊழியர்களின் கொழுத்த ஊழியத்திற்கும் உல்லாசம் மிகுந்த விமானப்
பயணங்களுக்கும் ஆடம்பர தங்குமிட வசதிகளுக்கும் இந்த மேற்படி மூன்று
பில்லியன்களில் பெரும்பகுதி ஏப்பமிடப்பட்டுவிடுமா? வன்னியில் ஐந்து
நட்சத்திர விடுதிகள் இருந்திருந்தால் ஐநாவின் நிலையும் 2009இல் வேறுவிதமாக
இருக்கும்.
அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா ஐநாவிற்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கவிருக்கும்
சமந்தா பவர் அமெரிக்க மூதவை உறுப்பினர்களுக்குப் பேட்டியளிக்கையில்
சிரியாவில் ஐநா செயற்படாத தன்மை சரித்திரத்தில் மோசமாக விமர்சிக்கப்படும்
என்றார்.
சிரிய
உள்நாட்டுப் போர் கடுமையடையத் தொடங்கியவுடன் ஐநா பாதுகாப்புச் சபையும்
அரபு லீக் நாடுகளும் இணைந்து முன்னாள் ஐநா பொதுச்
செயலர் கோஃபி அனன் அவர்களை ஐநா பாது காப்புச் சபையின் தீர்மானம் 2043இன்
மூலம் சமாதானத் தூதுவராக நியமித்தன. கோஃபி அனன் தனது முதல் நடவடிக்கையாக
ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார். பின்னர் இந்த அடிப்படையில் சிரியத்
தலைநகர் டமஸ்கஸ் சென்று சிரிய அதிபர் பஷார் அல்
அசாத்துடன் கோஃபி அனன் பேச்சு வார்த்தை நடாத்தினார். கடும் மோதல்கள்
நடக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்க தானும் அல் அசாத்தும் உடன்பட்டதாக
கோஃபி அனன் ஜெனீவாவில் இருந்து வழங்கிய காணொளிப் பேட்டியில் கூறினார்.ஆனால்
அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சிரியப் பிரச்சனை தொடர்பாக ஈரான் சென்று அனன்
பேச்சு வார்த்தை நடாத்தியது வட அமெரிக்க நாடுகளையும் மேற்கு ஐரோப்பிய
நாடுகளையும் ஆத்திரப்படுத்தியது. ஆனால் கோஃபி அனனை ஆபிரிக்க ஊடகங்கள்
அமெரிக்கக் கைக்கூலி என்றன. அனன் "ஐநா பாதுகாப்புச் சபை ஒரு மனதாக சிரிய
ஆட்சியாளர்களையும்
கிளர்ச்சியாளர்களையும் தனது சமாதானத் திட்டத்தை ஏற்காவிடில் கடும்
விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என எச்சரிக்க வேண்டும்" என வேண்டினார்
பாதுகாப்புச் சபையில் இது எடுபடவில்லை. அதிருப்தியடைந்த அனன் சமாதானத்
தூதுவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
இன்னும் ஒரு சமாதானத் தூதுவர்.
கோஃபி அனனைத் தொடர்ந்து சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக அல்ஜீரிய
அரசதந்திரி அல் அக்தர் பிராமி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனால்
நியமிக்கப்பட்டார். அவர் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டும் பல நாடுகளுக்குப்
பிரயாணம் செய்து கொண்டும் இருந்தார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர்
தொடர்ந்தும் அதிகமான மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டனர். எந்த ஒரு சமாதான
முன்னெடுப்பையும் செய்ய முடியாத நிலையில் அல் அக்தர் பிராமி இப்போது என்ன
செய்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது சமாதனத் தூதுவர் பணிக்கு ஐநா
நிறைய செலவழிக்கிறது என்று மட்டும் தெரியும். ஜூலை 23-ம் திகதி அல் அக்தர்
பிராமி முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி காட்டர், முன்னாள் ஜோர்தான்
வெளிநாட்டமைச்சர் மரவன் மௌசர், முன்னாள் பின்லாந்து அதிபர் மார்தி
அஹ்திசாரி ஆகியோரைச் சந்திக்கிறார். சிரியப் பிரச்சனை பற்றி கதைக்கப்
போகிறார்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் பெரிசுகள் பாலஸ்த்தீனப்
பிரச்சனையைப் பற்றிக் கதைக்கப் போகிறார்கள். அல் அக்தர் பிராமி கையில்
ஜெனிவாப் பேச்சு வார்த்தை என்ற ஒரு கிலுகிலுப்பையை வைத்துக் கொண்டு
இருக்கிறார் ஆனால் அவர் அதைக் குலுக்குவது கூட இல்லை.
இரத்துச் செய்யப்பட்ட இரண்டு தீர்மானங்கள்
ஐக்கிய
நாடுகளின் பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிராக அமெரிக்க
அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட மூன்று தீர்மானங்கள் சீனாவாலும் இரசியாவாலும்
வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்துச் செய்யப்பட்டன. பாதுகாப்புச்
சபையில் இரத்துக்கு மேல் இரத்துக்கள் வந்ததால் இரத்து அதிகாரமான வீட்டோ
இல்லாத பொதுச்சபையில் ஒரு உப்புச் சப்பற்ற ஒரு தீர்மானம் சிரிய உள்நாட்டுப்
போர் தொடர்பாக 2013 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை
பன்னாட்டு மன்னிப்புச் சபையே போதிய பயன் தாராதது என்று சொல்லி விட்டது.
உடனடியாக மோதல் நிறுத்தப் படவேண்டும் என்றது தீர்மானம். ஆனால் இன்றுவரை
போர் தொடர்கிறது.
சிரியக்கிளர்ச்சியின் மூலம்
சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று
மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப்
பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத
ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை
காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி
ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு
ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான
கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.
சிரியக் கிளர்ச்சியாளர்களிடை பற்பல கூறுகள்
சிரிய
விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய
ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக
சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை
அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய
உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை
தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும்
உருவாக்கப்படுவதில்லை. உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ்.
பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை
ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை
ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை
என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து
சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய
சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக
செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து
ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப்
மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn
Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the
Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத
குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம்
ஒரு அமைப்பை உருவாக்கி சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளைச்
செய்து வருகின்றனர்.
அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியாப் படையின் தலைவரை அவர்களுடன் இணைந்து
போராடிய இசுலாமியத் தீவிரவாதிகள் கொன்றனர். இப்படியான நடவடிக்கை தொடரும்
என்கின்றனர் அவர்கள். இந்தக் கொலைக்குப் பழிவாங்கப்படும் என்கின்றது
சுதந்திர சிரியப் படையினர்.
சவுதி அரேபியா, காட்டார், போன்ற
சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் சிரியக்
கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த
நாடுகளுக்கு என்ன விதமான படைக்கலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய
அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. சிஐஏயின்
ஒருங்கிணைப்புடன் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் சவுதி
அரேபியா ஊடாகவும் ஜோர்தானுடாகவும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு
படைக்கலன்களை வழங்கவுள்ளன. கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரியக்
கிளர்ச்சிக்காரப் போராளிகளுக்கு தோளில் செலுத்தக் கூடிய சூடு தேடிச்
செல்லும் ஏவுகணைகள் (heat-seeking shoulder-fired missiles)
வழங்கப்படவிருக்கிறது. புதிதாகக் கிடைக்கப் பெறும் படைக்கலன்களுடன் உரிய
பயிற்ச்சி பெற்று சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் களமுனையை தமக்கு சாதகமானதாக
மாற்ற இன்னும் ஆறு மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் இஸ்ரேல் தொடர்ந்து கைவரிசை
சிரியாவில்
படைக்கலக் களஞ்சியன் ஒன்றில் இருந்த இரசியாவால் வழங்கப்பட்ட விமான மற்றும்
கடற்படைக் கப்பல்களுக்கு எதிரான வலிமை மிக்க ஏவுகணைகள் திடீரென வெடித்துச்
சிதறின. இரகசியமாக வந்து தாக்கிய இஸ்ரேலியப் படைகளே அங்கு குண்டு வீசியதாக
நம்ப்பப்படுகிறது. அமெரிக்க அரசும் இதையே தெரிவித்தது. இது உள்நாட்டுப்
போர் தொடங்கிய பின்னர் சிரியாவில் பகிரங்கமாக இஸ்ரேல் செய்த நான்காவது
விமானத் தாக்குதலாகும். தேவை ஏற்படின் தரைவழி ஆக்கிரமிப்பும் மேற்கொள்ளப்
படும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. சிரியாவிற்கு புதியதர விமான எதிர்ப்பு
முறைமையை இரசியா வழங்குவதை அமெரிக்கவும் இஸ்ரேலும் தடுத்துள்ளன.
சிரிய நண்பர் குழாம்
பிரான்ஸ்,
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, துருக்கி, யுனைட்டெட் அரப்
எமிரேட்ஸ், ஜோர்தான், கட்டார், இத்தாலி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய
நாடுகள் இணைந்து சிரிய நண்பர்கள் குழாம் என அமைத்துள்ளன. இவை சிரியக்
கிளர்ச்சி அமைப்புக்களில் மதசார்பற்ற அமைப்புக்களுடன் தொடர்புகளை
ஏற்படுத்தியுள்ளன. அவர்களுக்குப் படைக்கலன்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலனகள் மட்டுமே. என்ன நட்போ? அமெரிக்க
அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உரிய
நேரத்தில் உரிய படைக்கலன்கள் கிடைப்பதில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.
ஜோர்தான் நகர் அம்மானில் நடந்த சிரிய நண்பர் குழாமிற்கும் சிரிய
கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் நடந்த கூட்டத்தில் இருந்து பல சிரிய
சுதந்திரப்படை பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். தமக்கு வேண்டிய
படைக்கலன்கள் கிடைக்கவில்லை என்பது இவர்களின் குற்றச் சாட்டு.
தயக்கத்தின் பின்னணி
துனிசிய
ஆட்சி மாற்றம் இலகுவில் நடந்தது. லிபியாவில் நேட்டோப்படைகள் மும்மர்
கடாஃபியை விரட்டின. எகிப்து மீண்டும் எரிகிறது. சிரியப் பிரச்சனை ஏன்
இழுபடுகிறது. வல்லரசுகளின் போட்டா போட்டியா? இல்லை, சரியான முறையில்
அழுத்தம் கொடுத்தால் சீனாவும் இரசியாவும் வழிக்கு வரும் என்பதை ஈரானுக்கும்
லிபியாவிற்கும் எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அவை இரத்துச்
செய்யவில்லை என்பதில் இருந்து தெரிகிறது. சிரியப் போர் தொடர வட அமெரிக்க
நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஏன் அனுமதிக்கின்றன? இந்தக்
கேள்விக்கான விடை சிரியப் போரில் யார் இறக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்
போது தெரியும். பிரித்தானியாவில்
இருந்து
செயற்படும் சிரிய மனித உரிமைகள் அமைப்பு சிரியப்போரில் இதுவரை 100,000இற்கு
மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்கின்றது. இதில்
பெரும்பான்மையினர் களமுனையில் போராடுபவர்கள். இதில் 43,000பேர் அரசுக்காகப்
போராடியவர்கள். 169 ஹிஸ்புல்லாப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 36,000பேர் பொதுமக்கள்,18,000பேர் அரசுக்கு எதிரான
போராளிகள். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனச்
சொல்லப்படுகிறது. சிரிய அதிபர் அல் அசாத்திற்காக போராடும் ஹிஸ்புல்லா
இயக்கத்தினர் இறக்கிறார்கள். அவருக்கு எதிராகப் போராடும் அல் கெய்தா
இயக்கத்துடன் தொடர்புடைய அல் நஸ்ரா இயக்கத்தினர் இறக்கிறார்கள். இப்போது
தலிபானும் சிரியாவில் களமிறங்கி உள்ளது. தலிபான் போராளிகளும் இறக்கப்
போகிறார்கள். அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களின் தாக்குதலின்றி
ஆயிரக்கணக்கில் இசுலாமியத் தீவிரவாதிகள் கொல்லப்படும் ஒரு முனையில் போர்
தொடருவதை அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது, இனி வரும் மாதங்களில் சிரிய
போர் பல முனைகளில் நடக்க இருக்கிறது. அதிபர் அல் அசாத்திற்கு எதிரான
போராளிக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மூர்க்கத்தனமாக மோதும். ஜோர்தானிலும்
துருக்கியிலும் சுதந்திர சிரியப் படைகளுக்கு புதியதரப் படைக்கலப்
பயிற்ச்சிகள் வழங்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment