Sunday, 17 March 2013

ராஜபக்சேவின் ஆளும் கட்சிக்குள் சந்திரிக்காவால் குத்து வெட்டு ஆரம்பம்

இலங்கை அதிபரின் மஹிந்த ராஜபக்சவின் ஆளும் கட்சிக்குள் குத்து வெட்டு ஆரம்பித்துள்ளது. இதற்கும் ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மஹிந்தவின் ஆளும் கட்சி 1951 இல் S. W. R. D பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த D S சேனநாயக்காவிற்குப் (ஐக்கிய தேசியக் கட்சி) பிறகு தானே இலங்கையின் தலைமை அமைச்சராவார் என நம்பியிருந்தார். ஆனால் அடுத்த பிரதமராக D S சேனநாயக்காவின் மகன் டட்லி சேனநாயக்காதான் தலைமை அமைச்சராக வருவார் என்பதை அறிந்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். இலகுவாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் தன்னை ஒரு சோசலிஸவாதியாகக் காட்டிக் கொண்டார். அத்துடன் இலங்கையில் சிங்களம்தான் ஆட்சிமொழியாகும் என முழங்கினார். ஐக்கிய தேசியக் கட்சி கொழும்புக் கனவான்களை முன்னிறுத்தி அரசியலை நடாத்தியது. மாறாக பண்டாரநாயக்க உள்ளூர் அரசியல்வாதிகளை முன்னிறுத்தி அரசியலை முன்னெடுத்தார். இதனால் அவர் 1956 ஆட்சியைப் பிடித்தார்.

S. W. R. D பண்டாரநாயக்கா ஆரம்பித்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்பச் சொத்தாகவே இருந்தது. அவருக்கும் பின்னர் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் கட்டுப்பாட்டில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி இருந்து வந்தது. 2004-ம் ஆண்டு தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை தமிழர் வாழும் பகுதிகளில் வழங்க முன் வந்தார். அது இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிக அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் இந்தியா கொதித்து எழுந்தது. அப்போது சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதிபராகவும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராகவும் இருந்தார். அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக நிருபாம ராவ் இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை தமிழர் வாழும் பகுதிகளில்  வழங்குவதை இந்தியா விரும்பாததால் அவர் உடனடியாக கொழும்பில் காரியத்தில் இறங்கினார். விளைவாக ரணில் தலைமையிலான ஆட்சியை அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க கலைத்தார். நிருபாம ராவ் சந்திரிக்காவின் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியையும் பேரிவாதக் கட்சியான ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியையும் கூட்டணியாக இணைத்தார்.  ஜேவிபியின் வேண்டுதலுக்கு இணங்க மஹிந்த ராஜபக்ச சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னிலைப் படுத்தப்பட்டார். நடந்த பொதுத் தேர்தலில் சீறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஜேவிபியினதும் கூட்டணி வெற்றி பெற்றது. மஹிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதம மந்திரியானார். 1994 முதல் 2005வரை இலங்கையின் அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அப்போதைய இலங்கையின் அரசியலமைப்பு யாப்பிற்கு இணங்க இரு தடவை மட்டுமே இலங்கை அதிபராக இருக்க முடிந்தது. அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போக 2005-ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டு வெற்றியீட்டினார். பின்னர் அவர் கட்சியில் தனது பிடியை இறுக்கி  சந்திரிக்கா பண்டாரநாயக்காவை ஓரம் கட்டினார். இதனால் அவர் அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுங்கி இருந்தார்.

சனல் - 4 தொலைக்காட்சியின் ஆவணப்படங்களைப் பார்த்த தனது பிள்ளைகள் தாம் சிங்களவர்கள் என்பதில் வெட்கப்படுகிறோம் என்று சொன்னார்கள் என பகிரங்கமாக 2011இல் அறிவித்ததில் இருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்கா மீண்டும் அரசியல் அரங்கில் தலை காட்டினார். இப்போது மாற்றப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பின்படி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட சந்திரிக்காவால் முடியும். மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியின் ஒரு அம்சமாக சந்திரிக்கா அரசியலில் முன்னிலைப் படுத்தப் படுகிறார். இதனால் சந்திரிகா சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளார் மைத்திரிபால சிறீசேனவுடன் அடிக்கடி தொடர்புகள் மேற்கொண்டதை உளவுத் துறை மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் அறிந்து கடும் சீற்றமடைந்துள்ளனர். விரைவில் மைத்திரிபால சிறீசேன கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்படலாம். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் சில நெருக்கடிகள் ஏற்படலாம். குத்து வெட்டுக்கள் ஆரம்பமாகலாம். ராஜபக்சேக்களின் ஆட்டம் இன்னும் ஆகக் கூடியது 3 ஆண்டுகள் மட்டுமே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...