Tuesday 29 January 2013

இணையவெளிப்போரில்(Cyber warfare) அமெரிக்கா அதிக அக்கறை.



வருங்காலத்தில் நாடுகளுக்கிடையிலான போர் தரை, கடல், விண்வெளி மார்க்கமாக மட்டுமல்லாமல் இணையவெளியிலும் நடக்கவிருக்கிறது. அதற்கான தாயாரிப்புக்களில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மட்டுமல்ல பல போராளி இயக்கங்களும் இதில் தமது திறமையை வளர்த்து வருகின்றன.

இணையவெளிப் போர் பலவகைப்பட்டதாக இருக்கிறது. இணையவெளிமூலம் மற்றவர்களை உளவு பார்த்தல், மற்றவர்களின் சமூக வழங்கல்களை நிர்மூலமாக்குதல், முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பல செய்ய முடியும்.

இணையவெளி ஊடுருவல்கள் வர்த்தகரீதியாகவும் சுரண்டப்படுகின்றன. ஒரு நிறுவனம் பெரும் தொகைப் பணம் செலவழித்து கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்கள் இணையவெளியூடாகத் திருடி விடுகின்றன. பல அமெரிக்க நிறுவங்களின் தொழில்நுட்ப இரகசியங்கள் பல சீனாவில் இருந்து திருடப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.

அமெரிக்காவின் படையினர் இணையவெளியிலும் செய்மதித் தொடர்புகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை உணர்ந்த சீனா இணைய வெளியில் தனது போர் முறைகளை வளர்த்தது. அத்துடன் செய்மதிகளை நிலத்தில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது.

அமெரிக்காவின் Cyber-Pearl Harbor
அமெரிக்காவின் மின்வழங்கல், நீர் வழங்கல், மற்றும் அத்தியாவசியத் தேவைகள் வழங்கும் கணனிகளை இணையவெளித் தாக்குதல் மூலம் முடங்கச் செய்து அமெரிக்காவையே செயலிழக்கச் செய்ய அதன் எதிரி நாடுகளால் முடியும் என்று பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது ஜப்பான் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கத் துறைமுகமான Pearl Harborஇல் தாக்குதல் செய்து பல அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அழித்தது போல் பேரிழப்பு விளவிக்கக் கூடியதாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க அணுப்படைகலன்களை ஊடுருவிகள் கைப்பற்றலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நோபல் பரிசையும் சீனா விட்டு வைக்கவில்லை
சீன ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த சீனக் குடிமகனான லியூ சியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் நோர்வேயில் உள்ள நோபல் பரிசுக் குழுவினரின் கணனிகள் சீனாவில் இருந்தது ஊடுருவி அவர்களின் இணையத் தளத்தைப் பார்ப்பவர்களின் கணனிகளில் வைரஸ் பரவும் படி செய்யப்பட்டிருந்தது. சீனாவின் இது மாதிரியான செய்கைகளைப்பற்றி ஒரு இராசதந்திரி கருத்துத் தெரிவிக்கையில் சீனா தனது நாட்டைப்பற்றியோ அல்லது ஆட்சியாளர்களைப் பற்றியோ மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒரு போதும் கவலைப்படுவதில்லை.

இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.

  • A Mumbai-based hacker specializing in network penetration says: “If I was attacking the Government today, I would send every email address in every government department a malicious link or attachment. I have no doubt that it would be opened by over 75% of people, and that I would have control of government systems at multiple levels by the end of tomorrow afternoon. Sadly, this is neither a sophisticated nor a novel attack.” - from the indiasite.com

ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் கணனிகளை ஒன்றாக இணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளச் செய்ததன் மூலம் இணையம் முதலில் கண்டறியப்பட்டது. அதே அமெரிக்காதான் இஸ்ரேலுடன் இணைந்து இணையவெளிப் போரை ஆரம்பித்து வைத்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை மேற்கொண்டன.

இணையவெளி Sleeper Cells
அமெரிக்காவும் தனக்கே உரித்தான பாணியில் இணையவெளிப் போரில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா தனது எதிரி நாடுகளின் கணனிகளை இணைய வெளியூடாக ஊடுருவி அவற்றில் தனது வைரஸ்களை உட்புகுத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வைரஸ்கள் உறக்க நிலையில் இருக்கும். அமெரிக்காவிற்கும் அந்த நாட்டிற்கும் இடையில் போர் மூளும் போது அவை அங்கு பல கணனிகளை முடக்குதல், முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பலவற்றைச் செய்யும். அமெரிக்கா தற்போது 900 பேர் கொண்ட இணையவெளிப் படையணியைக் கொண்டுள்ளது. விரைவில் இது 4000ஆக உயர்த்தப்படவிருக்கிறது

பல நாடுகள் இணையப் படையனியைக் கொண்டுள்ளன.
Cyber Warriors Team எனப்படும் ஈரானிய கணனி நிபுணர்கள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் கணனிகளை ஊடுருவினார்கள் என்ற செய்தி 2012 மே மாதம் வெளிவந்திருந்தது. அதுமட்டுமல்ல ஈரானில் இருந்து அமெரிக்காவின் பிரபல வங்கிகளையும் இணையவெளியூடாக ஊடுருவி தகவல் அழிப்புக்கள் செய்தாதாகவும் செய்திகள் வெளி வந்திருந்தன. பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகள் தம்மிடம் இணையப் படையணி இருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டன. மும்மர் கடாஃபியைப் பதவியில் இருந்து நீக்கும் படை நடவடிக்கையின் போது லிபிய விமான எதிர்ப்பு முறைமைமளை இணைய வெளியில் ஊடுருவி அழிக்கும் திட்டம் நேட்டோ நாடுகளால் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அதே முறையை சீனா அல்லது இரசியா வேறு இடங்களில் மேற் கொண்டு தமது செய்கைகளை நியாயப்படுத்தலாம் என்பதால் கைவிடப்பட்டது. இஸ்ரேலிடமும் மிகத் திறமையாகச் செயற்படக்கூடிய இணையவெளி ஊடுருவிப் படைகள் இருகின்றன. மரபு வழிப்படைகள் எல்லைகளைத் தாண்டுவது பெரும் சிரமம். ஆனால் இணையவெளிப்படைகள் எல்லைகளை இலகுவில் தாண்டிவிடுகின்றன.

இணைய பணயக் கைதிகளாக தரவுகள்
சி.என்.என் செய்திச் சேவை 2013-ம் ஆண்டு இணையவெளிப் போராட்டங்களுக்குரிய ஆண்டாக அமையும் என்று தெரிவித்தது.போராளி இயக்கங்கள் மட்டுமல்ல திருடர்களும் இணையத்தில் புகுந்து கணனிகளைத் தம்வசப்படுத்தி தகவல்களை பணயக் கைதிகளாக்கி தமக்கு உரிய பணம் கொடுக்காவிடில் முழுத் தகவல்களையும் அழித்து விடுவதாக மிரட்டும் சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளன.

தமிழர்களுக்கும் ஒரு இணைய வெளிப் படையணி வேண்டும்
தமிழர்கள் இலகுவாக அமைக்கக் கூடிய ஒரு படைப்பிரிவு இருக்குமானால் அது இணைய வெளிப் படைப்பிரிவுதான்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...