Thursday, 3 January 2013

அமெரிக்க நிதிப் படுகுழியும் உலகப் பொருளாதாரமும்.

அண்மைக் காலங்களாக US fiscal cliff என்னும் பதம் அடிக்கடி செய்தியில் அடிபட்டுக் கொண்டிருந்தது. மாயன் கலண்டரிலும் பார்க்க மோசமான ஒரு நிகழ்வாகவும் கருதப்பட்டது. அமெரிக்க fiscal cliff என்னும் அரச நிதிப் படுகுழி கடைசித் தருணத்தில் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் பங்குச் சந்தையில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடப்பட்டது.  எரி பொருள் விலை அதிகரித்தது. இவை ஏன் நடந்தன?

அமெரிக்கக் கடன் உச்ச வரம்பு
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 1980 இற்குப் பின் கடன் உச்சவரம்பு 39தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன.

இரு கட்சிகளின் மோதல்
செல்வந்தர்களின் வரிகளை உயர்த்துவதை  குடியரசுக் கட்சியினர் (Republicans) விரும்புவதில்லை. அவர்கள் வறியவர்களுக்கான சமூகநலச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள். ஆனால மக்களாட்சிக் கட்சியினர்(Democrats) இதற்கு மாறான கருத்தைக் கொண்டவர்கள்.

2011 கடன் நெருக்கடி
2011இல் அமெரிக்காவின் கடன் அதன் உச்ச வரம்பை மீறிச் சென்றது. அப்போதும் குடியரசுக் கட்சியினர் மக்களவையில் பெரும்பான்மையாக இருந்தனர். மூதவையில் மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மையாக இருந்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். கடன் உச்ச வரம்பு தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையில் 2011இல் பெரும் முறுகல் இருந்தது. பெரும் பொருளாதரப் பிரச்சனை கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் ஏற்படும் என்ற நிலையில் குடியரசுக் கட்சியினர் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று அடம் பிடித்தனர். அமெரிக்க அதிபருக்கு நிர்வாக அதிகாரம் மட்டுமே உண்டு. சட்டவாக்க அதிகாரம் மக்களவையிடமும் மூதவையிடமுமே உண்டு. முதலில் மக்களவையில் சட்ட மூலம் நிறவேற்றப்பட்டு பின்னர் மூதவையில் அங்கீகரிக்கப்பட்டு ஒரு சட்டம் அமூலுக்கு வரும். மக்களவையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால்பராக் ஒபாமா  இக்கட்டான நிலையில் இருந்தார்.

2011இல் நிகழ்ந்த அமெரிக்கக் கடன் நெருக்கடியின் பின்னணி.
2010இல் ஒபாமாவும் மக்களவையும் அரச செலவீனங்களை மூன்று ரில்லியன் டொலர்களால் குறைக்கவும் வரி வருமானத்தை ஒரு ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கவும் ஒத்துக் கொண்டனர். 2011 ஜனவரியில் அறுவர் குழு எனப்படும் இரு கட்சிகளையும் சேர்ந்த ஆறு மூதவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமெரிக்காவின் நீண்டகாலக் கடன் சுமையைக் குறைக்க உடன்பட்டது. இக்குழுவிற்கு அமெரிக்க உப அதிபர் பிடென் தலைமை தாங்கியதால் பிடென் குழு என்றும் அழைப்பர்.. 2011இல் குடியரசு உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை முந்தைய ஆண்டிலும் பார்க்க 61பில்லியன் டொலர்கள் குறைவான செலவீனங்களைக் கொண்ட பாதிட்டை நிறைவேற்ற அதை ஒரு மாதம் கழித்து சனநாயக கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிராகரித்தது. 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசின் பாதீடு நிறை வேற்றப்படாமல் அரச நிர்வாகம் இழுத்து மூடப்படுமா என்ற நெருக்கடியின் விளிம்பு வரை அமெரிக்கா இட்டுச் செல்லப்பட்டது. இறுதியில் பத்து வருடங்களில் ஆறு ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்புடன் அரச பாதீட்டை மக்களவை நிறைவேற்றியது. 2011 மே மாதம் 9-ம் திகதி அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் அதே அளவு செலவீனக் குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்று சூளுரைத்தார். 11-05-2011 மக்களவை கல்வி, தொழில், சுகாதார சேவை போன்றவற்றிற்கான செலவீனக் கட்டுப்பாகளை முன்வைத்தது. 16-05-2011 அமெரிக்க அரசு தன் கடன் உச்சவரம்பான 14.3 ரில்லியன் டொலர்களை எட்டியது. 17-05-2011 அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் தோன்றின. 31-05-2011 இலன்று அமெரிக்க மக்களவையில் கடன் உச்சவரம்பை உயர்த்தும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 23-06-2011 சனநாயகக் கட்சியினர் வரி விதிப்பை 400பில்லியன்களால் அதிகரிக்கப் பார்த்தார்கள் என்று குறை கூறி மீண்டும் அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் உருவாகின. ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் இழுபறிகளிலும் ஈடுபட்டனர். குடியரசுக் கட்சியினர் கேட்கும் செலவீனக் குறைப்பிற்கு மக்களாட்சிக் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை . மக்களாட்சிக் கட்சியினர் கேட்கும் வரி அதிகரிப்புக்களுக்கு குடியரசுக் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை.

2011 பாதீட்டுக் கட்டுப்பாடுச் சட்டம் - Budget Control Act of 2011
பாதீட்டுக் கட்டுப்பாடுச் சட்டத்தை 02-08-2012இல் நிறைவேற்றி 2011இல் கடன் உச்சவரம்பை உயர்த்த அமெரிக்காவின் இரு கட்சிகளும் ஒத்துக் கொண்டன. இச்சட்டத்தின் படி :
1.   2013இல் இருந்து பத்து ஆண்டுகளில் அமெரிக்க அரச செலவுகள் 1.2 ரில்லியன் டாலர்களால் குறைக்கப்பட வேண்டும்.
2. 2013-ம் ஆண்டு அரச செலவு 109 பில்லியன் டாலர்களால் குறைக்கப்படவேண்டும். 

இது போன்ற பல நிதிக் கட்டுப்பாடுகள் பாதீட்டுக் கட்டுப்பாடுச் சட்டத்தில் இருக்கின்றன. இதனால் 2013இல் அமெரிக்க அரசின் வரிகள் அதிகரிக்கப்படவேண்டும் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார நிலைக்கேற்பவும் நாட்டின் பொருளாதாரம் எந்தத் திசையில் போக வேண்டும் என்பதற்கு ஏற்பவும் அந்நாட்டின் பாதீடு வரையப்படும். 2013இல் அமெரிக்காவின் பாதீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை 2011 பாதீட்டுக் கட்டுப்பாட்டுச் சட்டம் வரையறை செய்தது. எவ்வளவு வரி அதிகரிப்பது எவ்வளவு செலவுக் குறைப்புச் செய்வது என்பது பற்றி இரு கட்சிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் அமெரிக்க நிதி நிலை படுகுழியில் விழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அரச நிதி படுகுழியில் வீழ்ந்தால் அங்கு பொருளாதார மந்தம் ஏற்படும். அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது.

Capitol Hill Vs White House
அமெரிக்கப் பாராளமன்றத்தை Capitol Hill என்றும் அமெரிக்க அதிபரின் பணிமனையை White House என்றும் கூறுவர். 2013இற்கான வரவும் செலவும் எப்படி இருக்க வேண்டும் என்பது Capitol Hill இற்கும்  White House இற்கும் இடையிலான போட்டியாகக் கருதப்பட்டது. 2013இற்கான வரவு செலவுகள் தொடர்பான இழுபறிகளால பராக் ஒபாமா தனது கிறிஸ்மஸ் விடுமுறையை இடையில் இரத்துச் செய்து விட்டுக் கடமைக்குத் திரும்பினார். மக்களவையில் பெரும்பான்மையினராக குடியரசுக் கட்சியினர் இருப்பதால்  அவர்களின் சம்மதம் அவசியம் தேவைப்பட்டது. இதனால் பெரும் இழுபறிக்குப் பின்னர் டிசமபர் 31-ம் திகதி இரவு ஓர் உடன்பாடு பராக் ஒபாமாவிற்கும் மக்களவைக்கும் இடையில் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம் 2012 ( American Taxpayer Relief Act of 2012) வரையப்பட்டது. குடியரசுக் கட்சியினர் பெரும் விட்டுக் கொடுப்பைச் செய்ய வேண்டி இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் ஒரு போதும் இல்லாத அளவு பெரும் வரிச்சுமை பெரும் செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு $400,000 இற்கும் அதிக வருமானம் உடையோர் பெரும் வரி செலுத்த வேண்டி வரும். செல்வந்தர்கள் மீதான மொத்த வரி விதிப்பு $620 பில்லியன்களாகும். பாதீட்டு உடன்பாட்டில் குடியரசுக் கட்சியினர் சரணடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது $250,000இற்கும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வரி அதிகரிக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்திருந்தார். அப்படிச் செய்ய குடியரசுக் கட்சியினர் சம்மதிக்கவில்லை. வருமான எல்லையை $400,000 ஆக அதிகரிக்கச் செய்தனர். பொதுவாக 71.7%மானவர்கள் அதிக வரியை 2013இல் செலுத்த வேண்டியிருக்கும்.  குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையினரான மக்களவையில் 257 பேரின் ஆதரவுடனும் 167 பேரின் எதிர்ப்புடனும் அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம்-2012 நிறைவேற்றப்பட்டது.மூதவையில் 89 பேர் ஆதரவாகவும் ஒன்பது பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

என்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை
அமெரிக்கா தொடர்ந்து பல ஆண்டுகளாக வரவிற்கு மிஞ்சி செலவு செய்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் இந்த செலவு அதிகரிப்பைச் சீனாவில் இருந்து பெறும் கடன் மூலம் ஈடு செய்யப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிக் குறைவை கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்துள்ளது. இதற்கான காரணிகளில் முக்கியமானவை அமெரிக்காவின் மக்கள் தொகைக் கட்டமைப்பில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிக விகிதமாக இருப்பதே. இதனால் சமூக நலன் செலவுகள் அதிகம். ஈராக், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்த மற்றும் செய்து வரும் போர் அமெரிக்க பாதுகாப்புச் செலவை அதிகரித்து இருந்தது. 31-12-2012 இலன்று செய்து கொள்ளப்பட்ட நிதிப்படுகுழித் தவிர்ப்பு உடன்பாட்டின் படி உருவாக்கப்பட்ட அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம் - 2012 ஏற்கனவே வேலையற்று இருக்கும் 12 மில்லியன் அமெரிக்கர்களுக்கு எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை. மாறாக வேலையற்றோர்களை அதிகரிக்கப் போகிறது. தொழிலாளர்களும் அதிக வரி செலுத்த வேண்டும்.

ஒரு குறுங்காலத் தீர்வே
அமெரிக்காவின் இரு கட்சியினருக்கும் இடையிலான அரச நிதிப் படுகுழித் தவிர்ப்பு உடன்பாடு ஒரு தற்காலிகத் தீர்வே. அமெரிக்காவின் அதிகரிக்கும் வரவிலும் பார்க்க அதிகரித்துக் கொண்டிருக்கும் செலவைக் குறைக்க உதவாது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இரு கட்சிகளும் கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பாக மீண்டும் மோதிக் கொள்ளும். 2013இல் செய்த வரி அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இது அரச வருமானத்தைக் குறைக்கும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் 1% குறைப்பை அரச நிதிப் படுகுழித் தவிர்ப்பு உடன்பாடு ஏற்படுத்தும் அத்துடன் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் அமெரிக்காவின் மருத்துவ சேவையை இன்னும் மோசமாக்கும்.  ஆனால் உலகப் பங்குச் சந்தை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. உலகலளாவிய ரீதியில் பங்குச் சுட்டெண்கள் அதிகரித்தன. 


அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம் - 2012ஒரு குழப்பம் நிறைந்த தற்காலிகத் தீர்வு மட்டுமே

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...