சென்ற ஆண்டின் இறுதியில் சூடானில் அப்பாவிகளைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமாங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலக்குத் தவறாத தாக்குதலை நிறைவேற்றியது. மீண்டும் 4-ம் திகதி வியாழக்கிழமையும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வாரிஸ்த்தானில தாக்குதல் நடாத்தி இனம் தெரியாத நான்கு பேரைக் கொன்றன.
மௌலவி நஜீர் வஜீர் தென் வாரிஸ்த்தான் பிராந்தியத்தில் Ahmadzai Wazir இனக்குழுமத்தை தலைமை தாங்கி ஆப்கானிஸ்த்தானிற்கு எதிராக போராடி வந்தார். தலிபானின் நான்கு பெரும் குழுக்களில் மௌலவி நஜீர் வஜீரின் குழுவும் ஒன்றாகும். இவர் வட வாரிஸ்த்தானில் தளபதியாக இருக்கும் ஹஃபீஸ் கல் பஹதூருடன் இணைந்து செயற்படுகிறார். இவர்கள் இருவரும் மற்ற சில தலிபான்/அல் கெய்தா பிரிவுகளைப் போல் அல்லாமல் பாக்கிஸ்த்தானியப் படையினர் மீது தாக்குதல்கள் நடாத்துவதில்லை. மௌலவி நஜீருடன் ரத்தா கான் என்னும் ஒரு துணைத் தளபதி உட்பட மேலும் எட்டுப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டுள்ள நேட்டோப் படையினருக்கு எதிராக தலிபான் இயக்கம் அடிக்கடி கரந்தடித் தாக்குதல்களைத் தனித்தும் மற்ற இசுலாமிய விடுதலை இயக்கங்களுடன் இணைந்தும் செய்து நேட்டோப் படையினருக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்துகின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவிற்கு அதிக தலையிடி கொடுக்கும் பிராந்தியம் ஆப்கானிஸ்த்தானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் எல்லைப் பகுதியே. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆப்-பாக் கொள்கை என்று ஒன்று வகுக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமைச் செயலகம் பெண்டகனிலும் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயிலும் ஆப்-பாக் பிரிவு என்று ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆப்-பாக் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாம் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவின் படைத்துறை வல்லுனர்கள் பேசியும் எழுதியும் வருகின்றனர். 09-07-2011இலன்று தனது சிஐஏ இயக்குனர் பதவியில் இருந்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி ஏற்ற லியோன் பனெற்றா அல் கெய்தாவை தாம் கேந்திர முக்கியத்துவ ரீதியில் தோற்கடிக்கும் நிலையை எட்டி விட்டதாகத் தெரிவித்தார். அவர் அப்படிச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தன. அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்கள் பல தீவிரவாதிகளைக் கொல்வதுடன் அவர்களது நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது. 2011 மே மாதம் பின் லாடனைக் கொன்றது. அவரது மாளிகையில் இருந்த அல் கெய்தாவின் கணனிப் பதிவேடுகளை அமெரிக்கப் படையினர் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டனர்.
அதன் பின்னர் அமெரிக்கா பல முக்கியத்துவம் வாய்ந்த இசுலாமியத் தீவிரவாதப் போராளிகளை கொன்றுள்ளது:
- அதியா அப் அல் ரஹ்மான் கொலை - பின் லாடனைத் தொடர்ந்து அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான அதியா அப் அல் ரஹ்மான் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார். அதியா அப் அல் ரஹ்மான் ஈரானுடன் நல்ல உறவில் இருந்தவர். அத்துடன் சிறந்த பேச்சாளர், நிர்வாகி, பல நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் மிகுந்தவர்.
- அன்வர் அல் அவ்லாக்கி கொலை - அதன் பின்னர் அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் 2011 செப்டம்பர் 30-ம் திகதி யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார்.
இத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
2014இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் கொண்டுவர முயலும் ஒரு இணக்கப்பாட்டு நிலைக்கு மௌலவி நஜீர் வஜீர் தலைமையிலான போராளிகள் குழு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மௌலவி நஜீரின் கொலை பாக்கிஸ்த்தானிய அரசின் அனுமதியுடன் நடந்ததா என்ற சந்தேகம் தலிபான்/அல் கெய்தாப் போராளிகள் மத்தியில் எழுந்துள்ளது. இச் சந்தேகம் வலுப்பெறுமானால் அது பாக்கிஸ்த்தனிய அரசிற்கு பெரும் தலையிடியாக அமையும். அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்த்தானியப் பிராந்தியத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் பாக்கிஸ்த்தானிய அரசு ஒரு இரட்டை வேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டு பலரிடமும் உண்டு. பாக்கிஸ்த்தான் பகிரங்கமாக அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களின் தாக்குதல்களை கண்டித்தாலும் அது திரை மறைவில் அமெரிக்காவின் செய்கையை ஆதரிக்கிறது என்று கூறப்படுகிறது. பல பாக்கிஸ்த்தானியர்கள் அமெரிக்கா பாக்கிஸ்த்தானிய இறைமையை அத்து மீறி பாக்கிஸ்த்தானியப் பிராந்தியத்துக்குள் நுழைந்து தாக்குவதை எதிர்க்கின்றனர். மௌலவி நஜீர் வஜீரின் கொலை பாக்கிஸ்த்தானியப் படைத் துறையினர் இசுலாமியத் தீவிரவாதிகளுடன் ஏற்படுத்திய சமநிலையைக் குழப்பிவிடும் என பாக்கிஸ்தான் தரப்பில் அஞ்சப்படுகிறது. தலிபானிற்கும் பாக்கிஸ்தானியப் படையினருக்கும் இடையில் நல்ல உறவை வளர்ப்பதில் மௌலவி நஜீர் வஜீர் பெரும் பங்காற்றி இருந்தார். பாக்கிஸ்த்தானில் தற்கொலைத் தாக்குதல் நடக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment