Saturday, 19 January 2013

அல்ஜீரியப் பணயக் கைதிகள்: முடிவின்றித் தொடர்கின்றது.

அல்ஜீரியாவின் இசுலாமியப் போராளிகள் இன்னும் பத்துப் பேரைப் பணயக் கைதிகளாக வைத்துள்ளனர். போராளிகளுக்கு அல்ஜீரிய அரசு இறுதிக் கெடு விதித்தும் பணயக் கைதிகள் விவகாரம் தொடரிகிறது. அல்ஜீரியாவின் லிபிய எல்லைக்கு அருகில் உள்ள அமீனா நகரில் உள்ள இயற்கை வாயு பெறும்  நிலையத்தின் பணியாளர்கள் 600 பேரை 16-01-2013 புதன் கிழமை இசுலாமியப் போராளிகள் குழு பணயக் கைதிகளாக்கியிருந்தது.

அல்ஜீரிய அரசு தாம் போராளிகளைச் சரணடையச் சொன்னோம். அவ்வளவுதான் மேற்கொண்டு பேச்சு வார்த்தை கிடையாது என உறுதியாகச் சொல்கிறது.

இதுவரை 30 பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தமது நாட்டவர்கள் பத்துப்பேரைக் காணவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. ஒரு அமெரிக்க நாட்டவரும் ஒரு பிரெஞ்சு நாட்டவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர்களின் அரசுகள் உறுதி செய்துள்ளன. பணயக் கைதிகள் விடுவிப்புப் பணியில் ஈடுபட பிரித்தானியச் சிறப்புப் படையணி ஒன்று சைப்பிரஸில் தயார் நிலையில் உள்ளது. ஆனால் பிரித்தானிய படை உதவியை அல்ஜீரிய அரசு வேண்டாம் என்று கூறிவிட்டது. மேற்கு ஐரோப்பிய நாட்டுப் படைகளையோ அல்லது அமெரிக்கப்படைகளையோ ஈடுபடுத்தினால் தமக்கு எதிரான இசுலாமியப் போராளிகளின் ஆத்திரம் இன்னும் கூடுன் என அல்ஜீரிய அரசு கருதுகிறது.

சரியான திட்டமிடல் இன்றி பணயக் கைதிகள் பிடிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குள் அல்ஜீரியப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் 30இற்கு மேற்பட்ட பணயக் கைதிகள் கொல்லப்பட்டதை பல நாடுகளை அதிருப்தியடையச் செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் தம்மை போராளிகள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது அல்ஜீரியப் படையினர் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் தாக்குதல் நடத்தினர் என்றனர். ஒரு வாகனம் முழுமையாகத் தீப்பிடித்தது. இன்னும் ஒன்று பல அடிகள் உயரப் பறந்தது. சில பணயக் கைதிகளின் இடுப்பில் வெடி குண்டுகள் கொண்ட பட்டையைப் போராளிகள் இணைத்திருந்தனர். 600கைதிகளுள் 132பேர் வெளிநாட்டவர்கள். போராளிகள் அவர்களுள் இருந்த ஒரு ஐரிஷ் குடிமகனை முதலில் விடுவித்தனர்.போராளிகளில் ஒருவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதால் அவர் பிரித்தானியாவில் வாழ்ந்தவராக அல்லது குடிமகனாக இருக்கலாம் என பிரித்தானிய உளவுத் துறையான எம்.ஐ.5 சொல்கிறது.

இன்னும் போராளிகள் வசமிருக்கும் பத்து பணயக்கைதிகளில் ஒருவர்  அமெரிக்கர் இன்னும் ஒருவர் பிரெஞ்சு நாட்டவர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 போராளிகள் ஈடுபட்ட கடத்தல் நாடகத்தில் இப்போது பதின்மூன்றில் இருந்து பதினைந்துவரையான போராளிகள் பத்து பணயக் கைதிகளை தம்வசம் வைத்திருக்கின்றனர் எனப் பெயர் சொல்ல விரும்பாத அல்ஜீரிய அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசுத் துறை பேச்சாளர் விக்டோரிய நுலண்ட் தாம் எந்த வித கைதிப் பரிமாற்றமும் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளார். முன்னர் போராளிகள் அமெரிக்கச் சிறையில் உள்ள Sheikh Omar Abdel-Rahman என்னும் எகிப்தியக் குடிமகனையும் Aafia Siddiqui என்னும் பாக்கிஸ்தானியக் குடிமகனையும் விடுவித்தால தம் வசமுள்ளை அமெரிக்கக் குடிமகனை விடுவிப்பதாகத் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.

மொக்தர் பெல்மொக்தரின் தலைக்கான விலை அதிகரிப்பு
பணயக் கைதிகள் கடத்தலைத் தலைமை தாங்கி நடாத்திய மொக்தர் பெல்மொக்தரைக் கைது செய்வதற்கான தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களில் இருந்து பத்து இலட்சம அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொக்தர் பெல்முக்தர் பிரித்தானியாவில் செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவிய ரொபின் ஹூட்டையும் அமெரிக்காவால் கொல்லபப்ட்ட ஒசாமா பின் லாடனையும் கலந்த ஒரு மனிதர் எனப்படுகிறது. (Mokhtar Belmokhtar was described as a "cross between Robin Hood and Osama Bin Laden,") மற்ற இசுலாமிய புனிதப் போராளித் தலைவர்களைப் போல் அல்லாமல் இவர் கொஞ்சம் சாதுவானவர் எனப்படுகிறது. இவர் ஒரு சிறந்த வர்த்தகர் என்றும் சொல்லப்படுகிறது. அல்ஜீரியக் குடிமனான இவர் கடத்தல், வர்த்தகம், படைத்துறைப் போராட்டம் ஆகியவற்றில் வல்லவர். சிகரெட் கடத்தலிற்குப் பெயர் போனவர் என்பதால் இவர் "Mr. Marlboro" என்றும் அழைக்கப்பட்டார்.  வட மாலியிலும் தென் அல்ஜீரியாவிலும் உள்ள பல வறியவர்களுக்கு இவர் நிறைய உதவிகள் செய்துள்ளார். இவரது செயற்பாடுகள் புனிதப் போரும் வர்த்தகமும் கலந்தவையாக இருந்திருக்கிறது. பிரெஞ்சு உளவுத்துறை இவரை பிடிக்கப்பட முடியாதவர் ("The Uncatchable")என அழைக்கும். பெல்மொக்தரின் கைதியாக இருந்த ரொபேர்ட் ஃபவுலர் என்னும் கனடிய இராசதந்திரி அவரது படையணி தானறிந்த படைகளுள் மிகவும் இலக்கு சார்ந்த படையணி என்றார். பெல்மொக்தர் மாலிய அரசுடன் நெருங்கிய தொடர்புடையவர் எனப்படுகிறது. தமது நிலைகளுக்கு எதிராக பெல்மொக்தர் தாக்குதல் நடத்தாமல் இருக்க இவர் தமது நாட்டில் சுந்திரமாக நடாமட மாலிய அரசு அனுமதித்திருந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான போரில் இணைந்த பெல்மொக்தர் இருபது ஆண்டுகால புனிதப்போர் அனுபவமுடையவர். இவருக்கு இப்போது வயது 40.

பெல்மொக்தரின் படைகள் அல்ஜீரியாவில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

பத்து பணயக் கைதிகளுடன் தொடரும் பணயக் கைதிகளின் நாடகம் இன்னும் பல கொலைகளுக்கு வழி வகுக்கும்.

பிந்திக் கிடைத்த செய்திகள்:
அல்ஜீரியப் படையினர் அதிரடித் தாக்குதல் நடாத்தி பணயக்கைதிகள் விவகாரத்தை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளனர். 7 கைதிகளும் 11 போராளிகளும் கொல்லபப்ட்டுள்ளனர். 

மொக்தர் பெல்மொக்தரைக் கொல்ல ஏற்பாடு
அல்ஜீரிய பணயக் கைதி நாடகத்தின் சூத்திரதாரி மொக்தர் பெல்மொக்தரை கொல்ல பலநாட்டு உளவுப்படைகளும் ஆளில்லாப் போர் விமானங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...