Wednesday, 15 August 2012

சிரிய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றதா?

விமானப்படை வலு போரை வெல்லும் என்பதை அலேப்பே பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் மீளக் கொண்டுவந்ததன் மூலம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகள் நிரூபித்துள்ளன. ஆனால் சிரியாவில் இருந்து தப்பி ஓடிய சிரிய முன்னாள் பிரதமர் ஹிஜாப் ரியாத் சிரியாவின் 30% நிலப்பரப்பை மட்டுமே பஷார் அல் அசாத்தின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன  என்கிறார். ஆனால் சில ஊடகவியலாளர்கள் ஹிஜாப் ரியாத் சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றார் என்கின்றனர். அரபு இஸ்ரேலிய மோதலிலும் பார்க்க சியா முசுலிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. இது அரபு நாடுகளிடை ஒரு பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். துனிசியப் புரட்சியுடன் தொடங்கிய அரபு வசந்தம் 2011 மார்ச் 15-ம் திகதி சிரியாவிற்கும் பரவியது.

சிறுபான்மை ஆட்சி

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்க்குழுமம் கிரித்தவர்களும் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலக அனுமதிதால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும்  கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. இதனால் பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நல்ல மக்களாட்சி சிரியாவில் நிறுவப்படுமா என்ற சந்தேகம் எழும்பிஉள்ளது.

பாவியான கோஃபி அனன்
பதினேழாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் சிரியாவில் சமாதானத்தைக் கொண்டுவர என ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான அதன் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனன் தனது ஆறு அம்சத் திட்டத்தை சிரிய ஆட்சியாளர்களும் கிளர்ச்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளாததால் பதவி விலகினார். அவர் ஈரான் சென்று பேச்சு வார்தை நடாத்தியது வட அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பியாவையும் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. பல தரப்பில் இருந்தும் கோஃபி அனன் மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன. ஐநா பாதுகாப்புச் சபைமீது காட்டமாகக் குற்றம் சுமத்திவிட்டு கோஃபி அனன் பதவி விலகினார். பின்னர் ஐநாவின் பொதுச்சபை கூட்டப்பட்டு அதில் பாதுகாப்புச் சபை சிரியப் பிரச்சனையில் எதுவும் செய்யாமையைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.  இது பாதுகாப்புச் சபையில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களையும் தமது இரத்து அதிகாரம்(வீட்டோ) மூலம் தடை செய்த இரசியாவையும் சீனாவையும் ஆத்திரப்படுத்தியது. தற்போது சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது. அரபு லீக்கிற்கும் ஐநாவிற்குமான சிரியப் பிரச்சனையை கையாளும் புதிய தூதுவரை நியமிப்பதில் இழுபறி நிலவுகிறது. சிரியா அல்ஜீரிய இராசதந்திரி லக்தர் பிரஹிமியை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயங்கிய மேற்கு தவிக்கிறது

சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கத் தயங்கி மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை மட்டும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வழங்கி வந்தன. பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நிலையான அரசு அமையுமா? சிறுபான்மை கிருத்தவர்களின் பாதுகாப்பு அசாத்திற்கு பிறகு எப்படி இருக்கும்? அசாத்தின் பின்னர் இசுலாமிய அடிப்படைவாதிகள் சிரியாவைக் கைப்பற்றுவார்களா? நாம் வழங்கும் படைக்கலன்கள் புனிதப் போர்வாதிகளின் கையில் போய்ச் சேருமா? இப்படியான சந்தேகங்கள் ஈராக், எகிப்து ஆகியவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பெற்ற பட்டறிவில் இருந்து எழுந்தமையே அவர்கள் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு வழங்கக் காரணங்களாய் அமைந்தன. ஆனால் இப்போது சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி மற்றும் படைக்கல ஆதரவு புனிதப் போர்வாதிகள் கைகளில் போய்ச் சேருகின்றன என்பதை உணர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பதற்றம் அடைந்துள்ளன. அத்துடன் அலெப்பே பிராந்தியத்தை அசாத்தின் படைகள் மீளக் கைப்பற்றியதும் அவர்களை தமது தந்திரோபாயத்தை மீள் பரிசீலனை செய்ய வைத்துள்ளன.

பிராந்திய ஆதிக்கப் போட்டி

சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சி கவிழ்ந்தால் அது ஈரானின் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆபத்தாக அமையும் அரபு நாடுகளின் படைப்பலச் சமநிலை மேற்கு நாடுகளுக்குப் பெரும் சாதகமான நிலையை உருவாக்கும் என்று சீனாவும் இரசியாவும் அஞ்சுகின்றன.  ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தை அடுத்து இரசியா சிரியாவிற்கு மூன்று கடற்படைக் கலன்களை அனுப்பியதாகச் செய்திகள் வெளிவந்தன ஆனால் இச்செய்தியை இரசியா மறுத்துள்ளது. சில ஆய்வாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை சாதுரியமாக சுனி-அலவைற் இனக்குழும மோதலாக மாற்றிவிட்டார் என்கின்றனர். அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் சிரியக் கிளர்ச்சியாளர்களும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் இருக்க் அதற்கு ஆதரவாக சவுதி அரேபியா போன்ற நாடுகள் இருக்க அசாத்தை பதவியில் இருந்து அகற்ற விடுவதில்லை என்ற உறுதியில் இரசியாவும் சீனாவும் ஈரானின் துணையுடன் இருக்க சிரியாவில் இரத்தக்களரி மோசமடைவது நிச்சயம். தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து சிரியா தொடர்பான தீர்க்கமான முடிவையோ அல்லது பிரச்சனைக்கு உரிய படை நடவடிக்கைகள் எதையும் இப்போது அமெரிக்கவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, மோதலைத் துருக்கிக்கும் பரவவிட்டு பஷார் அல் அசாத்தை தொலைக்கும் தந்திரத்தை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கையாளலாம்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

மற்றத் தீவிரவாத அமைப்புக்கள் ஆட்கடத்தல் செய்தால் அதை பயங்கரவாத நடவடிக்கை எனக் கண்டிக்கும் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஈரானியர்களைக் கடத்தி வைத்திருப்பதை கண்டிக்கவில்லை. இக்கடத்தல்கள் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துள்ளன என்று சில பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் சியா முசுலிம்களைக் கண்டபடி வெட்டிக் கொல்கின்றனர் என்கிறது.  மேலும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சவுதி அரேபிய மதகுரு முகமட் அல் அரிஃபி சிரியக் கிளர்ச்சிக்காரர்களை அவர்களது கொடுஞ்செயல்கள் அடங்கிய படங்கள் காணொளிப்பதிவுகள் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார் என்கிறது. ஈரான் தனது நாட்டிலிருந்து சமய யாத்திரை மேற் கொண்டவர்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் கைது செய்து வைத்திருக்கிறார்கள் என்கிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தாம் கைது செய்து வைத்திருக்கும் ஈரானியர்கள் அல் அசாத்தின் படைகளுடன் இணைந்து போர் புரிபவர்கள் என்கின்றனர்.

சிரியக் கிளர்ச்சி துருக்கிக்குப் பரவுமா?

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். சிரியாவில் நடப்பது ஒரு சுனி-அலவைற் இனக்குழுமங்களுக்கு இடையிலான மோதல்களாகவே கருதப்படுகிறது, துருக்கியில் பெரும்பான்மை இனத்தவர் சுனி முஸ்லிம்கள். அண்மைக் காலங்களாக அவர்கள் தமது நாட்டை சுனி முஸ்லிம் இனக்குழுமங்கள் மயப்படுத்தி வருகின்றனர். ஆனால் துருக்கியில் இருபது மில்லியன் அலவைற் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சிரிய உள்நாட்டுப் போரினால் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பி ஓடிய சுனி முஸ்லிம்கள் அங்குள்ள அலவைற் இனத்தவர்கள் மேல் தமது ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள். இது சிரிய உள்நாட்டுப் போர் துருக்கிக்கும் பரவுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சிரியர்களை ஈரான அரசு கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போர் புரிவதற்கு பயிற்ச்சி அளித்துத் தயாராக்கி வருகிறது என்பதை அறிந்த ஐக்கிய அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறையினர் கலவரமடைந்துள்ளனர்.

விமானப் பறப்பற்ற பிராந்தியம்

லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கைகளை ஓங்க வைத்தது நேட்டோப் படையினர் பொதுமக்களைப் பாதுகாப்பது எனற போர்வையில் லிபியாவை விமானப் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம் செய்ததும் அதற்காக கடாஃபியின் படை நிலைகள் மீது நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடாத்தியமையுமே. அமெரிக்கா ஏற்கனவே தனது நட்பு நாடான துருக்கியுடன் சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசித்து உள்ளது. துருக்கிப் படையினர் சிரிய எல்லையில் பல படை ஒத்திகைக்களை நடாத்தி வருகிறது.  லிபியாவில் செய்தது போல் ஒரு ஐநா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் மூலம் விமானப்பறப்பற்ற பிரதேசத்தை சிரியாவில் ஏற்படுத்த சீனாவோ இரசியாவோ அனுமதிக்கப் போவதில்லை. துருக்கியிலும் ஜோர்தானிலும் ஏற்பட்டுள்ள சிரிய அகதிப் பிரச்சனையைச் சாட்டாக வைத்து ஒரு ஒரு தலைப்பட்சமான விமானப் பறப்பற்ற பிரதேசதை சிரியாவில் பிரகடனப்படுத்தலாம்.

தப்பி ஓடுவோரும் தருணம் பார்த்துக் காத்திருப்போரும்

சிரிய அதிபர் அல் அசாத்தின் அணியில் இருந்து தப்பி ஓடுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் தப்பி ஓடாமல் உள்ளேயே உளவாளிகளாகவும் sleeper cells தருணம் பார்த்துக் காத்திருக்கும் படையினராகவும் இருக்கின்றனர். இது  அசாத்தின் படைகளுக்கு பெரும் சவாலாக அமையலாம். லிபியத் தலைநகர் திரிப்போலி விரைவாக வீழ்ச்சியடைந்தமைக்கு sleeper cells பெரும் பங்காற்றின.

எண்ணப்படும் அசாத்தின் நாட்கள்
ஐக்கிய அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் சிலர் சிரியாவில் தமது நாடு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தால் அவர்கள் போரைத் தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வர். அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனும் துருக்கிக்கு ஒரு திடீர்ப்பயணத்தை மேற் கொண்டார். பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சு உடனடியாக சிரியாவில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஒரு நிகராளிப் போரை(Proxy war) தனது ஆதரவு நாடுகள் மூலம் செய்து அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றலாம். அல்லது தேர்தலின் பின்னர் ஒரு நேரடித் தலையீட்டை மேற் கொள்ளலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...