Wednesday, 10 October 2012

நகைச்சுவைக் கதை: அவள் விகடனால் நரகத்திற்குப் போன கணவன்

இடம்: யமலோகம்
பூலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் மீது சித்திரபுத்தினார் தனது குற்றப்பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்தார். அதன்படி தீர்ப்பை யமன் வழங்கிக் கொண்டிருந்தார். பயந்தபடி நின்று கொண்டிருந்த ஒருவர் மீதான குற்றப் பத்திரிகையை சித்திர புத்திரனார் வாசிக்கத் தொடங்கினார். பிரபு இருதய நோயாளியான இவனது மனைவி யாருடனோ கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள் என்பதை அறிந்த இவன் அதைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காக இருபத்து ஐந்தாம் மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வழமைக்கு முன்னதாக வேலையில் இருந்து வந்தான்.

வந்தவன் வீடு முழுக்கத் தேடு தேடு என்று தேடினான். ஒருவரும் அகப்படவில்லை. தனது மனைவி மூச்சு வாங்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்து எப்படியும் கள்ளக் காதலன் இங்கு ஒளிந்து இருப்பது நிச்சயம் என்று எண்ணிக் கொண்டு பலகணியில்(balcony) போய்ப்பார்த்தான். அங்கு ஒருவன் பலகணி நுனியில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தொங்கிக் கொண்டிருந்தவனைத் தாக்கத் தொடங்கினான். கள்ளக் காதலன் கைப்பிடியை விடுகிறான் இல்லை. ஒரு சம்மட்டியை எடுத்துக் கொண்டுவந்து அதனால் அவன் கையில் அடித்தான். கைப்பிடி நழுவி கள்ளக் காதலன் என இவன் சந்தேகித்தவன் கீழே ஒரு குப்பை மேட்டில் விழுந்தான். அவன் இறக்கவில்லை என்பதால் ஆத்திரத்துடன் மிக மிக சிரமப்பட்டு  வீட்டுக்குள் இருந்த குளின்சாதனப் பெட்டியைத் தள்ளிக் கொண்டு வந்து கள்ளக் காதலன் என இவன் சந்தேகித்தவன்மீது விழுத்தினான். அது விழுந்து அவனை நசுக்கிக் கொன்றது. பாரம் மிக்க பெரிய குளிர் சாதனப் பெட்டியைத் தள்ளிக் கொண்டுவந்ததால் இருதய நோயாளியான இவன் உடனே மாரடைப்பு வந்து இறந்து விட்டான்.

பொறுமையாகக் குற்றப் பத்திரிகையை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த யமன் தனது மனைவி சுவாஹா தனக்கு துரோகம் செய்து வாயு பகவானுடன் ஓடியதை கருத்தில் கொண்டு அவனை சுவர்க்கத்திற்கு அனுப்பும் படி கட்டளையிட்டான்.

இப்போது சித்திரபுத்திரனார் அடுத்த குற்றப்பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். பிரபு இவனது மனைவி அவள் விகடனில் வரும் முப்பது வகை ரெசிப்பிகளை ஒரு நாளைக்கு இரண்டுவீதம் சமைத்து இவனுக்குக் உண்ணக் கொடுத்து வந்ததால் உடல் எடை கூடி 26வது மாடியின் பலகணியில் நின்று தினமும் உடற்பயிற்ச்சி செய்து வந்தான். இன்று அப்படி உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்தவன் 25வது மாடியில் உள்ள பலகணியில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். அப்போது 25வது மாடியின் பலகணிக்குரியவன் வந்து இவனது கையில் தாக்கினான். பின்னர் ஒரு சம்மட்டியை எடுத்து வந்து இவன் கையைப் பலமாகத் தாக்க கைப்பிடி நழுவி ஒரு குப்பை மேட்டில் விழுந்தான். இவனைத்தாக்கிய 25வது மாடி வாசி இவன் மேல் ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டியை இவன் மேல் தள்ளி விழுத்தினான். அதனால் நசுங்கி இறந்தான். அவனை நரகத்திற்கு அனுப்பும்படி யமன் பணித்தார்.

பின்னர் சித்திர புத்திரனார் மூன்றாவது ஆசாமி மேல் குற்றப்பத்திரிகை வாசிக்கத் தொடங்கினார். பிரபு இவன் பெயர் கத்தியானந்தா சுவாமி. கத்தியால் தனது பக்தர்களின் கைகளில் கீறி அருள் பாலிப்பவன். இன்று இவன் 25வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஒரு குளிர்சாதனப் பெட்டியில் ஒளித்திருந்ததால் கொல்லப்பட்டான்.  இதைக் கேட்ட யமன் நரகத்தை நோக்கி ஓடினார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...