Sunday 16 September 2012

நபிகளுக்கு எதிரான படம்: சதிக் கோட்பாடுகள்!!!

பிட்டுப் படம் எடுத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவர் நபிகள் நாயகத்திற்கு எதிராக ஒரு படத்தை இயக்கினார். முசுலிம்களின் களங்கமின்மை என்னும் பெயரிடப்பட்ட படம் ஒரு கலைத்துவப் படைப்பல்ல. அது ஒரு திரையரங்கில் ஒருதடவை மட்டும் காண்பிக்கப்பட்டது. அது நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அதன் முன்னோட்டம் யூரியுப்பில் இருந்து திடீரென உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதை பார்த்ததான் இசுலாமிய மதத்தின் மேல் இருக்கும் மதிப்பு யாருக்கும் குறையாது. எந்த ஒரு கருத்தும் அதில் ஆதார பூர்வமாக இல்லை. அது இசுலாமியர்களிற்கு ஆத்திர மூட்ட வேண்டும் என்று திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது, இசுலாமை மதிக்கும் எவருக்கும் ஆத்திரமூட்டக்கூடியவகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்தவர்களில் சிலருக்கு தாம் என்ன படத்தில் நடிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் சகல பாத்திரங்களும் அமெரிக்க ஆங்கிலம் பேசுகின்றன.

கடவுள் இழிவு படுத்தப் பட முடியாதவர்
மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய இப்படத்தில் வரும் காட்சிகளைப் பற்றி எழுத விரும்பாததால் அதைப்பற்றிய விவாதத்தை விட்டு விடுவது நல்லது.  அதைப்பற்றி எழுதுவது படத்தைப் பார்க்க மற்றவர்களைத் தூண்டுவதாக முடியலாம். இப்பதிவின் தலைப்பு நபிகளை இழிவு படுத்தும் திரைப்படம் என்று முதலில் எழுதப்பட்டது. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருந்தால் கடவுளோ அவரது தூதுவரோ இழிவுபடுத்தப் பட முடியாதவராகத்தான் இருப்பார்கள். கலைஞர் கருணாநிதி பஸ்மாசூரனின் கதையை அடிப்படையாக வைத்து சிவபெருமானும் திருமாலும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக எழுதினார். அதனால் கருணாநிதியின் புகழ் வளர்ந்தது. சிவபெருமானுக்கோ திருமாலுக்கோ எதுவும் நடக்கவில்லை. எங்கும் கலவரம் நடக்க வில்லை. ஆனால் இப்படத்தின் பின்னணிபற்றி அறிய வேண்டியது அவசியம்.

செப்டம்பர் - 11
உலகில் முப்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் திடீரென்று கலவரம் வெடித்துள்ளது. ஒரு படத்தினால். அதுவும் திரையிடப்படாத படத்திற்கு. ஒரு ஊடகர் இது பற்றித் தெரிவிக்கையில் How can a movie made by soft porn industry so perfectly capture the irony of the world in flames? நியாயமான கேள்விதான்.  எகிப்தில் பதினோராம் திகதி செவ்வாய்க் கிழமை முதலில் ஆர்ப்பாட்டம் வெடித்தது. இந்தப் பதினோராம் திகதி எப்படி அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு இணைந்தது? தற்போதைய உலக அரசியல் சூழ் நிலைக்கு இதற்கும் என்ன சம்பந்தம்?  அல் கெய்தா பின் லாடன் கொலைக்கு இன்னும் பழி தீர்க்கவில்லை.  இந்தக் கலவரங்கள் அல் கெய்தாவால் ஆரம்பிக்கப்படதா?

அமெரிக்க இசுலாமிய உறவு
அரபு வசந்தத்தின் பின்னர் சில இசுலாமியர்களுக்கு குறிப்பாக லிபியாவில் வாழும் இசுலாமியர்களுக்கு அமெரிக்காமேல் சற்று விருப்பம் ஏற்பட்டது உண்மை. இந்த விருப்பம் பலருக்கு உகந்ததல்ல. ஆபிரிக்காவில் கால் பதித்துக் கொண்டிருக்கும் சீனாவிற்கு உகந்ததல்ல. தனது ஆதரவு மும்மர் கடாஃபியை இழந்த இரசியாவிற்கு உகந்ததல்ல. பல பில்லியன்கள் பெறுமதியான படைக்கல விறபனையை இரசியா இழந்துள்ளது. லிபியாவில் பென்காசி என்னும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரில் இரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இரசியாவின் பல படைத்துறை இரகசியங்கள் பென்காசியில் இருக்கும் படைக்கலன்களில் இருக்கின்றன. லிபியத் தேசிய சபைத் தலைவர் தனது நாட்டில் அமெரிக்கத் தூதுவரகம் தாக்கப்பட்டது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது என்றார்.

ஏமாற்றம் அடைந்த இஸ்ரேல்
இஸ்ரேலிற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கும் நல்ல உறவு இல்லை. ஈரான் அணுக்குண்டு தயாரிப்பு விவகாரத்தில் பராக் ஒபாமாவின் அணுகு முறை இஸ்ரேலை பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்னும் ஐம்பது நாட்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஒபாமாவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் வகையில் களங்கமற்ற முசுலிம்கள் படம் முலமாக பிரச்சனை கிளப்பப்பட்டதா?

 பிட்டுப்பட இயக்குனர்
இந்தப்படத்தை Sam Bacile என்னும் இஸ்ரேலிய யூதர் யூரியூப்பில் ஜூன் மாதம் பதிவேற்றியதாக சொல்லப்பட்டது. பின்னர் இந்த Sam Bacile என்பவர் உண்மையில் Nakoula Basseley Nakoula என்னும் பெயர் கொண்ட எகிப்திய கொப்ரிக் கிருத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இதை இயக்கியவர் பிட்டுப்பட(நீலப்பட) இயக்குனரான 65வயதுடைய அலன் ரொபேர்ட் எனச் சொல்லப்படுகிறது. Nakoula Basseley Nakoulaஐ அமெரிக்க அரசு கைது செய்து விசாரித்து வருகிறது. Nakoula Basseley Nakoula ஏற்கனவே பலரது வங்கி அட்டைகளையும் அடையாளப் பத்திரங்களையும் தன்வசம் வைத்திருந்தமைக்காகத் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. Joseph Nassralla Abdelmasih என்பவர்க்குச் சொந்தமான பொது அமைப்பு ஒன்று இப்படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்டதாக லொஸ் எஞ்சலிஸ் ரைம்ஸ் தெரிவிக்கிறது. அந்த அமைப்பின் பெயர் Media for Christ.  ஆனால் Media for Christ என்னும் பெயரில் பல அமைப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Nakoula Basseley Nakoula with actress Anna Gurji

எகிப்து-அமெரிக்க உறவு
எகிப்தில் உள்ள கிருத்தவர்கள் தங்களுக்கு என்று உருவாக்கிய அமைப்பு Coptic Orthodox Church of Alexandria என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் எகிப்தில் உருவான ஆட்சி மாற்றம் எகிப்திய கிருத்தவர்களுக்கு உகந்ததல்ல. புதிய எகிப்திய அரசுக்கும் அமெரிக்காவிற்கும் நல்ல உறவு இல்லை. எகிப்தியப் படைத்துறை அமெரிக்கா சார்பானதாகக் கருதப்படுகிறது.  Coptic Orthodox Church of Alexandria ஐச் சேர்ந்த ஒருவரான Nakoula Basseley Nakoula முகம்மது நபிகளுக்கு எதிரான படத்தை உருவாக்கி அதை யூரியூப்பில் தன்னை Sam Bacile என்னும் இஸ்ரேலிய யூதர் என்று பொய் அடையாளம் ஏன் கொடுத்தார்?  முதல் கலவரம் எப்படி எகிப்த்தில் ஆரம்பித்தது?

மதமும் அரசியலும்
மதமும் அரசியலும் இணைந்தால் நாட்டுக்கு ஆகாது. பன்னாட்டு அரசியலும் மதமும் இணைவது உலகத்திற்கு ஆகாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...