Thursday, 19 July 2012

கருணாநிதியின் டெசோ குரங்கா பிள்ளையாரா?

1970களின் முற்பகுதியில் ஈழப்போராட்டத்தின் முன்னோடிகள் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து தாம் தொடங்கவிருக்கும் படைக்கலங்கள் ஏந்திய போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டனர். தன்னை ஒரு தமிழ்ச்சிங்கம் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று விரும்பும் கருணாநிதி அந்த இளைஞர்களின் கோரிக்கையைக் கேட்டு கலங்கிப் போனார். உரையாடலின் போது நாவன்மை மிக்க அவரது குரல் தழு தழுக்கத் தொடங்கிவிட்டதாம். அந்த இளைஞர்கள் வெறும் கையோடுதான் திரும்பினர். பின்னர் 1980களின் முற்பகுதியில் இலங்கையில் அமெரிக்கா தனது ஆதிக்கக் கால்களை ஊன்றவிருப்பதைத் தடுக்க தமிழ் ஈழப் போராளிகளைப் பயன்படுத்த புதுடில்லி திட்டமிட்டபோது புதுடில்லியின் வேண்டுதலின் பேரிலேயே கருணாநிதி ஈழப் போராளிகளுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினார். புதுடில்லி கருணாநிதி எம்ஜி ராமச்சந்திரன் ஆகியோரிடையான போட்டியை ஈழப் போராளிக் குழுக்களிடையான முறுகலை வளர்க்க நன்கு பாவித்துக் கொண்டது.

டெசோவின் ஆரம்பம்
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவு அமைப்பு 1985இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. டெசோவைப் புகழ்ந்து பேசும் திரவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி டெசோ செய்த இரண்டு சாதனைகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று அண்டன் பாலசிங்கமும் செல்வநாயகம் சந்திரகாசனும் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டமையை தடுத்து நிறுத்தியமை. மற்றது 1985-இல் அன்றைய ஆந்திர முதல்வர் என் டி ராமாராவ், வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி, இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸாம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி, க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, என்டிஆர், வாஜ்பாஸ் ஆகிய பிரபலமானவர்களையும் முன்னணி அமைப்புக்களையும் கொண்ட ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தமை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் மத்திய அரசிற்குப் பயந்து டெசோ அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டது. 2012 ஏப்ரல் 25-ம் திகதி கருணாநிதி டெசோ அமைப்பின் மாநாடு விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ம் திகதி நடக்கும் என்று அறிவித்தார்.  பின்னர் டெசோ மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 12-ம் திகதி நடக்கும் என்று அறிவித்தார்.

கருணாநிதிமீது கடும் கண்டனக் கணைகள்
டெசோ மாநாடு கூட்டுவதற்கான அறிவிப்பு விட முன்னர் கருணாநிதி தான் இறப்பதற்கு முன்னர் ஈழம் அமைவதை விரும்புகிறேன் என்றும் தனது நிறைவேறாத கனவு ஈழம்தான் என்றும் கூறியிருந்தார். டெசோ மாநாட்டில் இலங்கையில் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை நடத்த இந்திய அரசு முயற்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இலங்கையில் இறுதிப் போரின் போது மக்கள் ஆயிரக்கணக்கில் தினசரி கொல்லப்பட்ட போது மானாட மயிலாட நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி இப்போது ஏன் மாநாடு நடாத்தத் துடிக்கிறார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் பெருகி வரும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவைச் சிதைக்க கருணாநிதியும் இந்திய மத்திய அரசும் இணைந்து சதி செய்கின்றன என்றும் கூறப்பட்டது. அது மட்டுமல்ல டெசோ மாநாட்டை ஜெயலலிதா மூலம் மத்திய அரசு குழப்பி ஜெயலலிதாவிற்கு தமிழின உணர்வாளர்களிடை வெறுப்பை வளர்க்கச் சதி செய்யப்படுகிறது எனவும் கூறப்பட்டது. ஈழப்பிரச்சனையை அடிப்படையாக வைத்து காங்கிரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய தமிழருவி மணியன் "ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒரு போதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுகவின் துரோகத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஈழத்தமிழர்கள் குறித்து பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் நன்மையாகும்" என்றார்.


2011-இல் நடந்த சட்ட சபைத் தேர்தல்
ஈழத் தமிழர்களின் விரோதியான கன்னடத்து பார்பனப் பெண்ணான ஜெயலலிதா முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலையை நன்கு புரிந்து கொண்டும் தமிழ்நாட்டில் பெரும் கட்சிகளிடை ஈழ ஆதரவு இடைவெளியை நன்கு புரிந்து கொண்டும் ஈழத் தமிழர்கள் தொடர்பான தனது கொள்கையை  மாற்றிக் கொண்டார். அதனால் 2011இல் நடந்த சட்ட சபைத் தேர்தலில் பெரு வெற்றியும் ஈட்டினார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் மாட்டிய மகள் கனிமொழி பதவிப் போட்டியில் மோதிக் கொள்ளும் மகன்கள் அழகிரியும் ஸ்டாலினும் காங்கிரசுடனான உறவில் விரிசல், திமுகாவைப் பிடிக்காத அடுத்த பிரதமர் ராகுல் காந்தி இப்படி பல பிரச்சனைகளால் தனது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கலங்கி நிற்கும் கருணாநிதிக்கு ஓர் ஊன்று கோல் அவசியம் தேவைப்படுகிறது. இந்த ஊன்று கோல்தான் ஈழ ஆதரவு நாடகமா? இந்தியாவில் கட்சிகளிடையிலான கூட்டணி தர்மத்தை நிர்ணயிப்பது கட்சிகளின் கொள்கைகள் அல்ல. கட்சித்தலைவர்களின் ஊழல்கள் தொடர்பாக உளவுத் துறையினரிடம் இருக்கும் கோப்புக்களே கூட்டணி தர்மத்தை நிர்ணயிக்கின்றன.

சிவ் சங்கர் மேனனும் சுற்றறிக்கையும்
ஜுன் 29-ம் திகதி கொழும்பு சென்ற  சிவ் சங்கர் மேனனிடம் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாடுபற்றி எடுத்துக் கூறப்பட்டது. கொழுபின் கைக்கூலிகள் போல் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அது மட்டுமன்றி இம்முறை விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் அறிக்கையில் தமிழருக்கு என தனிநாட்டை (தமிழீழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வாக்கு வேட்டைக்காக இலங்கைத் தமிழர்கள் தொடர்ப்பாக எந்தவித விட்டுக் கொடுப்பும் செய்யப் போவதில்லை என்னும் நிலைப்பட்டில் சோனியா காந்தி மிகவும் உறுதியாக உள்ளார் என்பதை இவை எடுத்துக் காட்டுகிறது. சோனியாவின் காங்கிரசும் திமுகாவும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தோல்வியைச் சந்தித்தாலும் வெற்றி பெறும் ஜெயலலிதாவின் கட்சிக்கு அல்லது அதன் உறுப்பினர்களுக்கு சில பதவிகளைக் காட்டி காங்கிரசின் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

வில்லன் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்

2009மே மாத நடுப்பகுதியில் இந்தியப் பாராளமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரமும் இலங்கை இறுதிப் போரும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இலங்கையில் நடந்த போரின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகளும் இலட்சக் கணக்கான பொது மக்களும் ஒரு சிறுபகுதிக்குள் முடக்கப்பட்டு நாற்புறமும் சிங்களப்படைகளும் சூழ்ந்துள்ள நிலையில் இலங்கை அரச படைகளால் கனரக படைக்கலன்கள் பாவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு புறம் இருக்கும் சிங்களப் படையினர் ஏவும் கனரகப் படைக்கலன்கள் மற்றப்புறம் இருக்கும் சிங்களப்படையினர் மீது விழும். இக்கட்டதில் சிங்களப்படையினருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த இந்தியப் படை வல்லுனரும் புதுடில்லியில் இருக்கும் சதிகாரர்களும் கோபாலபுரத்தினரும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டினர். அதன்படி கருணாநிதி போர் நிறுத்தம் வேண்டி ஒரு உண்ணாவிரதம் இருப்பது என்றும் அப்போது இலங்கை அரசு தாம் இனி கனரக படைக்கலன்கள் பாவிப்பதில்லை என அறிவித்தனர். அதை கருணாநிதியின் ஊடகங்கள் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக திரித்துப் பிரச்சாரம் செய்தன. தேர்தல் மேடைகள் யாவிலும் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தி விட்டார் என்று முழங்கப்பட்டது. ஆனாலும் இலங்கை விமானப் படைகள் தொடர்ந்து குண்டுகள் வீசிக் கொண்டிருந்தன. அதுபற்றி கருணாநிதியிடம் கேட்டபோது மழை விட்டு விட்டது தூவானம் விடவில்லை என்றார். இந்த உண்ணாவிரத நாடகமும் வாய்ச்சவாடலும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் கருணாநிதியின் மீது மாற்ற முடியாத வெறுப்பை உருவாக்கி விட்டன,

கருணாநிதியின் ஆடித் தள்ளுபடி - சிதம்பர இரகசியம்

கருணாநிதி டெசோ மாநாடு நடத்துவதாக அறிவித்ததமையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவரை சிஐடி காலானி வீட்டில் சந்தித்தார். பின்னர் கருணாநிதி டெசோ மாநாடு தனி ஈழத்திற்கானது அல்ல அது தமிழர்களின் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்தே என்றார். சிதம்பரம் சோனியாவின் மிரட்டலைக் கருணாநிதியிட்டம் தெரிவித்தபடியால் கருணாநிதி டெசோ மாநாட்டில் இருந்து தனி ஈழ ஆதரவை தள்ளுபடி செய்துவிட்டார் என செய்திகள் வந்தன. ஆனால் கருணாநிதி தன்னுடன் சிதம்பரம் ஈழம் பற்றிப் பேசவில்லை என்றார். அப்பட்டமான பொய்களை வாய் கூசாமல் பேசுபவர்தான் கருணாநிதி என ஏற்கனவே வை கோபாலசாமி கூறியிருந்தார். ஈழம் இல்லாத டெசோ மாநாடு திருமணம் நடக்கும் ஆனால் முதலிரவு கிடையவே கிடையாது என்பது போன்றது.

மிண்டும் வாய்ச் சவாடல்
கருணாநிதி இப்போது கூறுவது "இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்குப் பின், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்திட, அறவழியில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான், சென்னையில் நடத்தப்போகும் மாநாட்டின் திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.தனித் தமிழ் ஈழம் வேண்டும்; அதுவும் இன்றைக்கே வேண்டும். அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இவர் இப்படிச் சொன்னதால் தான், இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு இவர் தான் காரணம் என்பர். முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்து சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், பார்த்தீர்களா, தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பர்.தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டு விட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம். இதிலே ஒன்றும் குழப்பம் இல்லை".

70,000 - பொய்யன் பிரணாப் முஹர்ஜீ
இலங்கையில் இறுதிப் போரின் போது போர் முனையில் அகப்பட்டிருப்பவர்கள் எழுபதினாயிரம் மட்டுமே எனப் பொய் சொன்னவனும் இலங்கையில் போரை நிறுத்த முடியாது என்று சொன்னவனும் ஆகிய பிரணாப் முஹர்ஜீயை இந்தியக் குடியரசுத் தேர்தலில் ஆதரிக்கும் கருணாநிதி செம்மொழி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது போல் டெசோ மாநாட்டையும் ஆரம்பித்து வைக்கச் செய்ய முடியுமா?

தமிழர்களுக்குத் தேவை டெசோ அல்ல

தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒன்று கூடி இந்திய மைய அரசில் காத்திரமான பங்காளிகளாக மாறி குடும்ப நலன்கள் பதவி மோகங்களைத் துறந்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சையும் வெளியுறவுத் துறை அமைச்சையும் கைப்பற்றி இலங்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். அல்லது ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒன்று கூடி காங்கிரசுக் கட்சியினதும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மாற்ற வேண்டும். வெறும் கூக்குரல்கள், கூட்டங்கள், மாநாடுகள், கொட்டும் மழையில் கைகோர்த்து நிற்றல், ஏன் தீக்குளித்தல் கூட ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க உதவாது. இந்திய அரசின் கொள்கைகளை மாற்றாமல் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க முடியாது. அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த முடியாது. அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்திட முடியாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...