Monday, 16 July 2012

தளரும் சீனப் பொருளாதாரம்

மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளினதும் பொருளாதாரங்கள் சரிவடைந்தபோது இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதாரங்களின் வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தை தூக்கிவிடும் என்று 2009-2010 இல் நம்பப்பட்டது.

2008-ம் ஆண்டிலிருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தபோது இந்தியாவும் சீனாவும் ஏறக்குறைய 10% பொருளாதார வளர்ச்சியை எட்டின. 2012இன் முதலாம் காலாண்டில் 8.1% ஆகக் குறைவடைந்த சீனப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 7.6% ஆகக் குறைவடைந்தமை உலகெங்கும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. 2011இன் கடைசிக் காலாண்டில் இது 8.9%ஆக இருந்தமையும் கவனிக்கத் தக்கது. 2012இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1990இன் பின் ஏற்பட்ட மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். 1989இல் தினமன் சதுக்கப் படுகொலைக்குப் பின்னர் பல மேற்கு நாடுகள் சீனாவைப் புறக்கணித்ததால் 1990 சீனப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. சீனா தனது வட்டி வீதத்தை ஜூனில் குறைந்தது. பின்னர் அடுத்த வட்டி வீதக் குறைப்பை ஜூலையில் செய்தமை பல பொருளியல் வல்லுனர்களை திடுக்கிட வைத்தது. வட்டிவீதக் குறைப்பு சீன மக்களை அதிக கடன் பெறச் செய்தாலும் வர்த்தகத் துறையினர் கடன் பெறுவது அதிகரிக்கவில்லை இது சீனப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி வீதக் குறைவைச் சந்திக்கலாம் என அஞ்சவைத்துள்ளது. ஜுன் மாதம் சீனாவின் பணவீக்கம் 2.2% மட்டுமே. இது சீனப் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் அளவிற்கு அதிகமாகக் குறைந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் இது சீன அரசு மேலும் வட்டி வீதத்தைக் குறைக்கத் தேவையான இடைவெளியை வழங்கியது. சீனாவின் பொருளாதாரத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் இன்னொரு புள்ளிவிபரம் அதன் மின்சாரப்பாவனை.

 சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியமைக்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்க நாடுகளிலும் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளால் சீனாவின் ஏற்றுமதி குறைந்தமை. மற்றது அதிகரித்து வரும் வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கைகள். சொத்துக்களின் பெறுமதி குறையும் போது வங்கிகள் கடன் வழங்குவது குறையும். அது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும்.

கடன் பட்டுக் கலங்கும் சீன உள்ளூராட்சிச் சபைகள்
2009இல் ஏற்பட்ட உலகப் பொருளாதரப் பின்னடைவைத் தொடர்ந்து தனது பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட சீனா 586 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான நாணயப் புழக்கத்தை தனது நாட்டில் சீனா தனது உள்ளூராட்சிச் சபைகளுக்குகடன் வழங்குவது போன்ற பல நடவடிக்கைகளால் அதிகரித்தது. அப்போது கடன் பெற்றவர்கள் ஏற்றுமதிக் குறைவால் பாதிக்கப்பட்டதுடன் கடன் சுமையாலும் தவிக்கின்றனர். வீடுகளின் விலையைக் குறைக்க பல உள்ளூராட்சிச் சபைகள் காணிகளை குறைந்த விலைகளுக்கு மக்களுக்கு விற்றன. இதனால் அவற்றின் சொத்துக்களின் பெறுமதி குறைந்தும் கடன் பளு அதிகரித்தும் உள்ளன.

தப்பி ஓடும் சீனப் பணக்காரர்கள்
சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தபோது உருவான பெரும் செல்வந்தர்கள் சீனாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் குடியேறுகின்றனர். இதனால் சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை குறைந்து கொண்டு செல்கின்றது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சீனர்களின் தொகையும் அரபு வசந்தத்தின் பின்னர் குறைந்து வருகின்றது. கடந்த 12 ஆண்டுகளில் 19,000 சீனர்கள் சட்ட விரோதமாக உழைத்த பணத்துடன் வெளிநாடுகளிற்கு தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளனர்.

எரிபொருள் விலைகள்
அண்மைக் காலங்களாக அதிகரித்து வந்த எரிபொருள் விலை அதிகரிப்பு சீனப் பொருளாதாரத்தையும் பாதித்தது. தனது பொருளாதாரத்தைத் தூண்டிவிட சினா தனது உள்ளூர் எரிபொருள் விலையை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து குறைத்து வருகிறது. உள் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள்களுக்கான பாவனை குறைந்தமையால் சீனா தனது பொருளாதாரத்தைத் தூண்டிவிட இந்த எரி பொருள் விலைக் குறைப்பைச் செய்கிறது. சீனாவின் எரிபொருள் பாவனைக் குறைப்பு உலகப் பொருளாதரத்தை இருவகையில் பாதிக்கிறது. ஒன்று உலக எரிபொருள் விலை மேலும் குறையும். மற்றது. சீனாவின் பொருதார வளர்ச்சிக் குறைவு உலகப் பொருளாதாரச் சரிவை மேலும் மோசமாக்கலாம்.

இறுக்கமான கட்டுப்பாடுகள் துல்லியமான திட்டமிடல் போன்றவை சீனப் பொருளாதரம் அண்மைக் காலங்களாக ஈட்டிய பெரு வளர்ச்சியின் முக்கிய காரணிகள். சீன தற்போது எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறைவுப் பிரச்சனையில் இருந்து மீள அவை இரண்டும் கைகொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம என்றாலும் சீனாவின் பிரச்சனைகள் அதன் பிரதம மந்திரி சொல்லியது போல் இன்னும் சில ஆண்டுகள் தொடரும்.

பாதுகாப்புச் செலவீனம்
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரித்து வந்தது. வெளிநாட்டுப் பாதுகாப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சீனா அண்மைக் காலங்களாக உள்நாட்டுப் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பொருளாதரப் பிரச்சனையால் சமூகப் பிரச்சனை உருவாகி அது பெரும் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிலும் செலவீனத்தைக் கூட்டியது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல்கள்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...