Sunday 22 May 2011

ஆதிக்க நாடுகளின் போட்டியில் பன்னாட்டு நாணய நிதியம். ஆட்டம் காணும் பான் கீ முனின் இரண்டாம் ஆட்டம்.


ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி ஆகிய முன்றும் உலக அரங்கில் முக்கியத்துவம் நிறைந்த மூன்று அமைப்புக்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் உயர் பதவி அதன் நிர்வாக இயக்குனர் பதவியாகும். அப்பதவியில் இருந்த பிரெஞ்சு நாட்டவரான ஸ்ரௌவுஸ் கான் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியிருப்பதால் தனது பதவியை இழந்துள்ளார். அந்தப் பதவிக்கு யாரைத் தெரிவு செவது என்பது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் உலகின் பலமிக்க நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

பன்னாட்டு நாணய நிதியமும் அதன் நாணயமற்ற தேர்தல் முறையும்.
அமெரிக்கத் தலைநக வாஷிங்டனில் தனது தலைமைச் செயலகத்தைக் கொண்ட பன்னாட்டு நாணய நிதியம் அரசுகளிடையிலான நாணய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒர் அமைப்பு. முக்கியமாக நாணய மாற்று விகிதங்களையும் வெளிநாட்டுச் செலவாணி போன்றவற்றை மேற்பார்வை செய்வது இந்த நிதியத்தின் வேலை. நாடுகளிடை தாராள மயமாக்கப் பட்ட பொருளாதாரக் கொள்கை மூலம் பொருளாதார அபிவிருத்தி செய்வது தனது நோக்கம் எகிறது பன்னாட்டு நாணய நிதியம். இது எடுக்கும் தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு முறை விசித்திரமானது. நாடுகளுக்குள் "ஜனநாயகம்" வேண்டும் என்று போதிப்பவர்கள் பன்னாட்டு அரங்கில் அந்த ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விட்டோ போல பன்னாட்டு நாணய நிதியத்திலும் உண்டு ஆனால் இது சற்று வித்தியாசமானது. பன்னாட்டு நாணய நிதியத்தில் முக்கிய தீர்மானங்கள் மீதான வாக்குரிமை ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு என்று இல்லை. ஒவ்வொரு நட்டுக்கும் நியமிக்கப் பட்ட வாக்குப் பங்கு (கோட்டா) முறைமை உண்டு. இதன் படி அமெரிக்கா அதிக வாக்குரிமையைக் கொண்டுள்ளது. அதன் பங்கு 17.09 விழுக்காடு. ஜப்பானுக்கு 6.12 விழுக்காடு என்று உள்ளது. முக்கிய தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் 85% வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும். இதனால் 17.09% வாக்குரிமையைக் கொண்ட அமெரிக்காவால் எந்தத் தீர்மானத்தையும் நிறுத்த முடியும்.

நாமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்னும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அநேகமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்களாக இதுவரை இருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த வாக்குரிமை 32.07%. இதனால் தமது நாடுகளைச் சேர்ந்த ஒருவரே நிர்வாக இயக்குனராக வேண்டும் என்கிறது ஒன்றியம். மீண்டும் ஒரு பிரெஞ்சு நாட்டவரை அப்பதவியில் அமர்த்த ஜெர்மனி விரும்புகிறது. ( நாணய நிதியத்தில் வேலை செய்யும் பெண்கள் பயப்படத் தேவையில்லை) தற்போது பிரெஞ்சு நிதியமைச்சரான கிரிஸ்டீன் லடார்டேயை ஜேர்மன் பரிந்துரை செய்கிறது. பிரித்தனியாவின் தனது முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுனை அமர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இடது சாரிகள் விரும்புகின்றனர். ஆனால் அவரது சொந்த நாட்டில் இருக்கும் பழமைவாதக் கட்சி அரசு அவரை ஆதரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத் தலைவர் ஜோஸே மான்வல் பரசோ பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமைப் பொறுப்பு ஐரோப்பியரிடமே இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார். ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பியர் ஒருவரே தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும் என்று திடமாக நிற்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைக்கால நிதி நெருக்கடிகளைச் சமாளித்த அனுபவம் தமது வல்லுனர்களுக்கு உண்டு என்கின்றனர் அவர்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் அனுபவமும் திறமையும் மிக்கவராக இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர்.

வளர்முக நாட்டவரைச் சீனா விரும்புகிறதாம்
உலகப் பொருளாதாரத்தில் பலமிக்க நாடாக வளர்ந்துள்ள சீனா ஒரு வளர்முக நாட்டைச் சேர்ந்தவரே பன்னாட்டு நாணய நிதியத்தின் இயக்குனராக வரவேண்டும் என்று வெளியில் சொல்கிறது. சீனா பன்னாட்டு நாணய நிதியத்தைப் பொறுத்தவரை மூன்றாவது பெரிய நாடு. பிரேசிலும், இந்தியாவும் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்பது போல் வளர்முக நாட்டவரே வரவேண்டும் என்கின்றன. இந்தியாவின் வாக்குரிமை - 2.44%. சீனா அதன் மத்திய வங்கி ஆளுனர் ஜூ மின் அவர்களைப் போட்டியில் நிறுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தியாவில் மொன்ரேக் சிங் அலுவாலியா சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது போல் தான் போட்டியிடப்போவதில்லை என்கிறார். இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் பணிபுரிந்துள்ளார். இந்தியத் திட்ட ஆணையக்த்தில் பிரதித் தலைவராக இருக்கிறார்.

ஒரு தமிழரும் களத்தில்
சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் நாணயச் சபையின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஒரு திறமை மிக்கவாரகக் கருதப்படுகிறார். பிரேசில் பன்னாட்டு நாணய நிதியத்தின் இயக்குனர் நியமனம் ஒருவரது கடவுச் சீட்டை வைத்துத் தீர்மானிக்காமல் அவரது தகமையை வைத்தே தீர்மானிக்கப் படவேண்டும் என்கிறது.

அமெரிக்காவின் பங்கு போடல் முயற்ச்சி
பன்னாட்டு அரங்கில் ஒரு பிரச்சனை வரும் போது அமெரிக்கா தனது காய்களை தந்திரமாக நகர்த்தும். தனக்கு ஏற்ற விதத்தில் பங்கு போட்டுக் கொள்ளும். தற்போது தனக்கு இருக்கும் பொருளாதர நெருக்கடிக்கு ஏற்ற வகையில் உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பை தனக்கு சாதகமாக மாற்ற தனது ஆள் பன்னாட்டு நாணய நிதியத்தில் இருப்பதை அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது. அமெரிக்கா அதற்காக முன்வைக்குக் தீர்வு(ஆப்பு) நாணய நிதியம் எனக்கு உலக வங்கி சீனாவிற்கு, சீனா ஆசிய நாட்டவர்தான் அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக வரவேண்டும் என்று அடம் பிடிக்கக்கூடாது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்குப் பிடித்த ஒருவரை அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக அமர்த்தலாம். சீனா இந்த "டீல்" எனக்குப் பிடிச்சிருக்கிறது என்று சொன்னால். இதனால் பாதிக்கப் படப் போவது பாவம் பான் கீ மூன் தான். போன வாரம் வரை தானே தான் மீண்டும் ஐநாவின் பொதுச் செயலர் என்று நம்பி இருந்தவருக்கு இந்தவாரம் வேறுவிதமாக அமைந்து விட்டது. பான் கீ மூனின் பதவிக்காலம் 2011 டிசம்பருடன் முடிகிறது. மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களில் ஒருவர் அடுத்த பொதுச் செயலராக வரவேண்டும் என்று விரும்புகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...