Thursday 3 March 2011

கடாபியின் 1,000மும் ராஜபக்சவின் 40,000மும்


பெப்ரவரி 15-ம் திகதியில் இருந்து லிபியாவின் அரசிற்கு எதிராக அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். லிபியாவில் இப்போது இருக்கும் அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்டதல்ல, ஊழல் நிறந்தது, குடும்ப ஆதிக்கம் கொண்டது, லிபியாவில் ஒர் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. அவர்களுக்கு எதிராக லிபிய அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறையின் விளைவாக 1,000 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம என்று ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புத் தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கலாம்.

லிபியாவில் அரச வன்முறை அதிகரித்துவிட்டது என்று பெப்ரவரி 26-ம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-1970இன் படி லிபியாவிற்கு ஆயுத விற்பனை செய்யக் கூடாது என்று உறுப்பு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது; உறுப்பு நாடுகளில் உள்ள சகல லிபிய சொத்துக்களும் முடக்கப்படவேண்டும் என்று பணிக்கப்பட்டது. லிபியத் தலைவர் மும்மர் கடாபியும் அவரது அரசைச் சேர்ந்த வேறு 16 பேருக்கு உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தடுக்கும் படி உறுப்பு நாடுகள் பணிக்கப்பட்டன. மேலும் ஐநா பாதுகாப்புச் சபை லிபியா மீது விசாரணை நடாத்தும் படி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றைக் கேட்டுக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஐநாவில் வேண்டுகோளின்படி இன்று பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றின் பிரதம வழக்குத் தொடுநர் லுயிஸ் மொரெனொ ஓகம்போ (Luis Moreno Ocampo) லிபியத் தலைவர் மும்மர் கடாபிமீது மானிடத்திற்கு எதிரான குற்றங்கள்(crimes against humanity) இழைத்தமைக்கான விசாரணையை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார். ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டமை பாரிய குற்றம். அதை விசாரித்து அதைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். விரைவில் லிபியத் தலைவரைக் கைது செய்வதற்கான ஆணையை பன்னாட்டு நீதி மன்றம் பிறப்பிக்கலாம்.

ஆனால்:
  • லிபியாவில் மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்படவில்லை.
  • லிபியாவில் மக்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கான விநியோகம் தடைசெய்யப்படவில்லை.
  • லிபியாவில் கலவரம் செய்தவர்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
  • லிபியாவில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்படவில்லை.
  • லிபியாவில் கலவரம் செய்யாமல் வீடுகளில் இருந்தவர்கள் எவராவது தாக்கப்படவில்லை, காயப்படவில்லை, கொல்லப் படவில்லை.
  • லிபியாவில் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றை அறிவித்து விட்டு அதற்குள் மக்களை வரச் சொல்லி அங்கு கடல் தரை ஆகாய மார்க்கமாக அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு குழந்தை தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு கற்பிணிப் பெண்தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு தள்ளாத வயோதிபர் தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு மதத் தலமாவது அழிக்கப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு நாளில் மட்டும் 25,000பேர் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் இறுதிப் போரில் 40,000பேர் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் உயிரோடு மக்கள் புதைக்கப்படவில்லை.
  • லிபியாவில் சரணடையுங்கள் உங்களை பன்னாட்டு நியமங்களுக்கு அமைய போர்க்கைதிகள் போல் நடாத்துகிறோம் என்ற உறுதி மொழியை ஐநா மூலமாக வழங்கிவிட்டுப் பின்னர் சரணடைய வந்தவர்களைக் கொல்லவில்லை.
இவையாவும் இலங்கையில் நடந்ததாகப் பலதரப்பினரும் கூறுகிறார்கள். இலங்கையில் உக்கிரமாகப் போர் நடக்கும் போது நாளாந்தம் 5,000பேர் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஐநா இது தொடர்பான கலந்துரையாடல்களை பகிரங்கமாக நடாத்தாமல் நிலத்துக்குக் கீழ் உள்ள அறையில் மிக இரகசியமாக நடாத்தியது. இலங்கையில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்று கேட்டபோது நாம் பிணங்களை எண்ணுவதில்லை எனப் பதிலளிக்கப்பட்டது.

லிபியாவிற்கு எதிரான நடவடிக்கை இன்னும் விரைவாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆனால் மேற்குலக நாடுகள் தங்கள் குடிமக்களை லிபியாவில் இருந்து வெளியேற்றும் வரை காத்திருந்தனர். இருந்தும் 11 நாட்களில் லிபியாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஐநா இறங்கிவிட்டது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் 22 மாதங்களாகியும் ஐநா இன்றும் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கிறது. இதற்குக் காரணம் ஐநா அதிபர் பான் கீ மூனின் பிரத ஆலோசகர் ஒரு இந்தியரான விஜய் நம்பியார் என்பதலா? அல்லது ஐநா அதிபர் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி என்ற இந்தியர் என்பதலா? ஐநா பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக ஏதாவது தீர்மானம் கொண்டுவந்தால் இந்தியாவின் வேண்டுதலில் இரசியா அதை இரத்து(வீட்டோ) செய்யும் அதற்குப் போட்டியாக சீனா இரத்து செய்யும் என்றே இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் கொண்டுவர முடியவில்லை என ஒர் ஐரோப்பிய நாட்டின் ஐநா பிரதிநிதி கூறினார்.

பன்னாட்டு நீதி மன்றம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கையும் கையொப்பம் இடவில்ல; இந்தியாவும் கையொப்பம் இடவில்லை; லிபியாவும் கையொப்பம் இடவில்லை. லிபியாவில் நடந்தவற்றை விசாரிக்க ஐநா பன்னாட்டு நீதி மன்றத்தைக் கேட்டுக் கொண்டது. இலங்கைக் கொலைகளை விசாரிக்கக் கூடாதா?

ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கையை கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா பாராட்டும் தீர்மானமாக மாற்றியதை எந்த ஒரு தமிழனும் மன்னிக்கமாட்டான். தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது இதையும் கருத்தில் கொள்வார்களா?

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோர் தொடர்ச்சியாக வேண்டுதல் விடுத்தனர். ஐநா செய்ததெல்லாம் ஒரு அதிகாரம் எதுவுமற்ற ஆலோசனைக் குழுவை அமைத்தது மட்டும்தான். அதன் விசாரணை தொடர்பாக பான் கீ மூன் முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

உலகத் தமிழர்கள் எல்லாரும் ஒன்றுபட்டு நீதி கேட்டுக் கிளர்ந்து எழுவார்களா?

7 comments:

மன்மதகுஞ்சு said...

தமிழர்களுக்கு உதவி செய்தால் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுவிடுவார்கள் என்பதற்காகவே....

ராஜ நடராஜன் said...

எனது பதிவை சார்ந்த கருத்துக்கு நன்றி.
உருத்திரகுமார் குழுவின் செயல்பாடுகளை இன்னும் விரிவாக்கலாம் அல்லது அதற்குள்ளும் உள்வேலைகள் நிகழ்கிறதா என்ற குழப்பங்கள் காரணமாக இது குறித்தான செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.

சக்தி கல்வி மையம் said...

ஓ.. இன்டர்நேஷனல் அரசியல்.

Anonymous said...

லிபியாவிற்கு பக்கத்தில் ஒரு மானம் கெட்ட நாடு இருக்கவில்லை!!!!!!!!!!

YOGA.S.Fr said...

இலங்கையில் எண்ணெய் வளம் இல்லை!கடல் பரப்பில் இருப்பதாக இரு வல்லரசுகளுக்கும்,வல்லரசுக் "கனவில்" மிதக்கும் இன்னுமொரு நாட்டுக்கும் அதையும் தாரை வார்த்து விட்டார்கள்!என்றைக்கு மூழ்குமோ என்ற அச்சத்தில் "பெரியவர்கள்" யாரும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை!பதவியொன்றே குறியாயிருக்கும் "அத்தனை" தலைகளும் ஈழத் தமிழர் விடயத்தில் கழுவிய மீனில் நழுவிய மீனாகவே இருந்தனர்!பான் கி மூன் விதி விலக்கா என்ன?????????

Anonymous said...

லிபியப் படையினர் இறந்த பெண் போராளிகளின் உடல் மீது புணர்ச்சி நடாத்தவில்லை.

விண்ணும் மண்ணும் said...

லிபியாவிற்கு பக்கத்தில் ஒரு மானம் கெட்ட நாடு இருக்கவில்லை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...