Monday 16 August 2010

பத்மநாதனிடம் மேலும் சில கேள்விகள்



விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர்
கே பத்மநாதனின் தொடரும் பேட்டி தொடர்பான தொடரும் சந்தேகங்கள்
.
இதற்கு முந்திய சந்தேகங்களைக் காண இங்கு சொடுக்கவும்: பகுதி-1, பகுதி-2

  • பத்மநாதன்: நான் இயக்கத்திலிருந்து விலகி தாய்லாந்தில் எனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தேன். எனக்கு மீண்டும் இயக்கத்தில்(விடுதலைப் புலிகள்) இணையும் எண்ணம் இருக்கவில்லை. இருப்பினும் தலைவர் பிரபாகரன் கேட்டுக்கொண்டால் நான் மீண்டும் இயக்கத்தில் சேருவேன் என எனது மனைவி எண்ணினார்
சந்தேகம்: உங்கள் மனைவிக்கு ஏன் அப்படி ஒரு எண்ணம்? இந்த ஆள் உழைப்புப் பிழைப்பின்றி இருக்கிறார். மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தால் தொடர்ந்து உழைக்கலாம் என்பதற்காக அப்படி எண்ணினாரா?

  • பத்மநாதன்: நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் என்ன நடக்கின்றது என்பதை செய்திகள் ஊடாக அறிந்து வந்தேன். நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் எல்.ரி.ரி.ஈ சிறப்பாக செயற்படவில்லை என்பதை செய்திகளினூடாக அறிந்துக்கொண்டதால் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் கவலைக் கொண்டு இருந்தேன்.
சந்தேகம்: நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தீர்கள் ஆனால் இயக்கமே அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்தாதால்தான் அழிந்ததா? அல்லது அழிக்கும் நோக்கத்துடந்தான் சேர்ந்தீர்களா?

  • பத்மநாதன்: நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். நான் 2002 டிசெம்பரிலிருந்து எல்.ரி.ரி.ஈ க்கு வெளியே இருந்தேன் என்பது தெளிவானது. ஆனால் அதற்கு முன்னரே 2002 இல் பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் வந்தவுடனேயே எல்.ரி.ரி.ஈ யின் கப்பல் தொகுதியை கையாளும் பணி என்னிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பொறுப்பு சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.......2007 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் ஒரு கப்பலால் கூட கிழக்குக் கரைக்கு எதையும் கொண்டுவர முடியவில்லை என எனக்கு கூறப்பட்டது. ஒரு ஒரு பனடோல் கூட வரவில்லை என சூசை என்னிடம் கூறினார்.
சந்தேகம்: நீங்கள் மறுத்தாலும் நீங்கள் யாருக்கோ விடுதலைப் புலிகளின் கப்பல்களைப்பற்றியோ அல்லது அவற்றின் நடமாட்டம் பற்றியோ தகவல் வழங்கியதால் இது சாத்தியமானதா என்ற சந்தேகம் தீரவில்லை.

உங்கள் பேட்டியின் இரண்டாம் பகுதி காஸ்ரோவையும் நெடியவனையும் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. முதல் பகுதியில் தமிழ்ச்செல்வனிற்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துக்கள் உலகெங்கும் வாழ் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளில் காஸ்ரோவும் நெடியவனும்தான் முக்கியமானவர்கள் என்று கருதப்படுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிராக உங்கள் பேட்டியின் பெரும் பகுதி அமைந்திருக்கிறது?

ஐயா பத்மநாதன் அவர்களே உங்களுக்கு மகாபாரதக் கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாரதப் போரின் பதினெட்டாம் நாளன்று துரியோதனன் நீருக்கடியில் மறைந்திருந்து சிரஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருந்தான். அவனை தனது சண்டைக்கான சவால்களால் உசுப்பேத்தி வீமன் வெளியே வரச் செய்தான். வெளியே வந்த துரியோதனனிடம் தருமன் நீ எங்களுடன் சமாதானமாகப் போ. உன்னை எங்கள் அரசனாக ஏற்றுக் கொண்டு உனக்குக் கீழிருந்து நாம் ஐவரும் உனது குற்றேவல் செய்வோம் என்று அழைக்கிறான். தனது நண்பன் தம்பிமார் உடபடச் சகலரும் போரில் இறந்தபின் எனக்கு பதவி வேண்டாம். நானும் சாகவே விரும்புகிறேன் வாருங்கள் சண்டைக்கு என்று கூறி துரியோதனன் பாண்டவர்களுடன் மோதினான். போர் விதிகளின் படி அடிக்கக்கூடாத இடத்தில்(ஆணுடம்பில்) அடித்து போர்குற்றம் புரிந்து வீமன் துரியோதனனைக் கொன்றான். ஐயா பத்மநாதன் அவர்களே நீங்களும் துரியோதனன் நிலையில்தான் இருந்தீர்கள். நீங்கள் இப்போது எதிரிகளுடன் இருக்கிறீர்கள். என்ன சாதிக்க்ப் போகிறீர்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் ஒரு புறம் இப்படிப் பேட்டி கொடுத்து கோத்தபாய ராஜப்க்சவைக் கண்ணியவான் என்று சித்தரித்துக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று உங்கள் சொகுசு வாழ்க்கையை இலங்கை அரசு பறித்து இப்போது உங்களை கிளிநொச்சியில் குடியேற்றி விட்டதாகவும் அங்கு உங்களின் கீழ் செயற்பட இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் பத்தாயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை அரசு கொல்லவும் முடியாமல் வெளியில் விடவும் முடியாமல் தவிக்கிறது. அவர்களை பத்மநாதன் கீழ் திரட்டி அவர்களை இலத்திரன் காப்பு (Electronic tag ) செய்து ஒரு சிறு பிரதேசத்தின் கீழ் முடக்கி வைத்திருக்க முயல்கிறது. பதமநாதன் ஐயா அவர்களே அதற்காக இலங்கை அரசு உங்களைப் பாவிக்கிறதா?
சந்தேகங்கள் இன்னும் வரும்...

3 comments:

Yoga said...

2002 முதல் 2008 வரை எப்படிக் கவிழ்க்கலாம் என்று ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்தாரோ?இல்லாவிடில் எவருமே சுலபமாக மறைந்திருக்கவும்,அவ்வாறு மறைந்திருப்போரை சுலபமாக கண்டுபிடிக்கவும் கூடிய ஒரு நாட்டில் மறைந்திருப்பார்களா?கைது செய்து விட்டார்கள்,கடத்திச் சென்று விட்டார்கள் என்று கதை விட புலம் பெயர் தமிழரையும் சாட்சிகளாக்கிய "ராஜதந்திரம்"யாருக்கு வரும்?இப்படி ஒரு "கிளைமாக்ஸ்"காட்சியமைக்கும் கைங்கரியம் உலகின் எந்த மொழிப் படத்தில் பார்க்க முடியும்?பத்மா பின்னிட்டே,பத்மா பின்னிட்டே!!!!!!!!

Anonymous said...

வேல் தர்மா,யோகா எனது சந்தேகம் என்னவென்றால் பிரபாகரனால் மீண்டும் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டவரை குற்றம் சொல்வது மூலம் பிரபா குற்றவாளி என்கிறீர்களா?அல்லது இறுதி நேரத்தில் நடேசனும்,புலித்தேவனும் எதிராக இயங்கினார்கள் என்கிறீர்களா?விளக்கமாக சொன்னால்தானே உங்கள் முகமூடி கிழியும்.

Anonymous said...

பத்மநாதன் சர்வதேசத் தொடர்புக்களுக்கு பொறுப்பானவர்களாக நியமிக்கப் பட்டபோது அவர் துரோகியாக இருக்கவில்லை அல்லது அவர் அப்போதே துரோகியாக இனங்காணப்படவில்லை. அவர் கொழும்பில் இருந்து வெளிவிடும் கருத்துக்கள் அவரை துரோகியா என்னும் சந்தேகத்தை தருகிறது. எவன் சொல்வான் கோத்தபாய ராஜப்க்சவை கண்ணியவான் என்று.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...