Saturday 14 August 2010

பரிதாபகரமான நிலையில் இந்தியா




பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை!

ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே!

இப்படியெல்லாம் சுதந்திர இந்தியாவில் நடக்கும் என்று சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் சகலரையும் இணைத்துக் கொண்டார்கள். சுதந்திரமும் பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்று நடப்பதென்ன.
பனி கொட்டும் குளிர் பிரதேசங்களில் குடிசைகளில் மக்கள் வாழுகிறார்கள். சிறார்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளார்கள். அங்காடித் தெருவில் உள்ள புடவைக் கடைகளில் வேலை செய்யும் பெண்களை அண்ணாச்சிகள் (ஆண் +ஆட்சி) அறைகிறார்கள். கட்டி வைக்கிறார்கள். இப்படிப் பலவற்றை எழுதிக் கொண்டே போகலாம். வளர்ச்சியடைந்த சமுதாயங்களில் இப்படியெல்லாம் நடக்கிறதா? நகை போடாமல்தன்னும் ஒரு பெண் பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியாமா? மொத்த ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள வறியோர் தொகயிலும் பார்க்க அதிக வறியோர் இந்தியாவில் உள்ளனர். சீனாவின் சிறந்த முதல் 50 செல்வந்தர்களினது மொத்தச் சொத்திலும் பார்க்க இந்தியாவின் முதல் 50 செல்வந்தர்களின் சொத்துக்கள் பல மடங்கானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு மோசமாக மக்களிடையே பகிரப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

சமூக நிலை இப்படி மோசமாக இருக்க இந்தியாவின் பாதுகாப்பு நிலை எப்படி இருக்கிறது. இந்தியா படை பலத்தில் உலகின் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் கிழக்குக் கரை
இந்தியாவின் கிழக்கில் மியன்மார்(பர்மா) சீனாவின் பிடிக்குள் சிக்குண்டிருக்கிறது. அங்குள்ள இந்தியர்களின் தொகை குறைந்து வருகிறது. இந்தியாவின் செல்வாக்கு அங்கு குறைந்து வர சீனாவின் செல்வாக்கு அங்கு அதிகரித்து வருகிறது. இந்து மாக்கடலில் தனது கால்பதிக்க மியன்மாரை பயன்படுத்துகிறது.

இந்தியாவிற்குத் தெற்குத் திசை வாஸ்த்து சரியில்லை
இந்தியாவின் தென் திசையில் இலங்கை இந்தியாவின் கண்களுக்குள் விரல் விட்டு ஆட்டுகிறது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவதை தடுக்க இந்தியாவால் எதையும் செய்ய முடியவில்லை. இது பற்றி எல்லையைக் கடந்து செல்லும் மீனவர்கள் கொல்லப்படுவதை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணா நியாயப் படுத்துவது போல் பேசினார். எல்லையை கடக்கும் மக்கள் கைது செய்யப்படுவது தான் பொதுவாக இரு நாடுகளுக்கிடையில் நடப்பது வழ்க்கம். இதை கிருஷ்ணாவும் அறிவார். ஆனால் இந்திய மீனவர்கள் இலங்கையால் கொல்லப் படுவதை எதிர்த்து ஒரு விரலைத் தன்னும் தன்னால் அசைக்க முடியாத கையாலாகாத நிலையில் இந்தியா உள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அம்பாந்தோட்டையில் ஒரு பாரிய துறை முகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் சீனாவிற்கு இப்படி ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தால்தான் இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஒழிக்க முடியும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதினார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறட்டும் என்ற இந்திய வெளியுறவுக் கொள்கை. அம்பாந்தோட்டையுடன் சீனா நிற்கவில்லை. முல்லைத் தீவு, காங்கேசன் துறை என்று இந்தியாவிற்கு மிக அண்மையாக வருகிறது சீனா. வர்த்தக அல்லது மீன் பிடி நோக்கத்துடன் கால் பதிக்கும் சீனர்கள் தருணம் வரும்போது இவை படைத்துறை நோக்கங்களுக்கானவையாக மாற்றியமைப்பர். இலங்கையில் உள்ள சீனர்கள் செம்படையினரும் தண்டிக்கப் பட்ட கைதிகளுமே. இப்போது உள்ள இலங்கை அரசு பன்னாட்டு அரங்கில் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். இன்று (15-08-2010) இந்தியா சுதந்திர தினம் கொண்டாட இலங்கை அம்பாந்தோட்டைத் துறை முகத்துக்குள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்தியாவிற்கு தண்ணி காட்டப்படுகிறது.

மேற்கு வாசலில் மட்டும் என்ன வாழுதாம்

இந்தியாவின் மேற்குத் திசையில் பாக்கிஸ்த்தான் இந்தியாவின் நிரந்தரமான மோசமான எதிரி. பாக்கிஸ்த்தான் பல உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் இந்திய எதிர்ப்பு என்ற வகையில் அது ஒன்றுபட்டு நிற்கிறது. ஒரு அணு ஆயுத நாடு பக்கிஸ்த்தான். அமெரிக்காவுடனும் சீனாவுடனும் நல்ல நட்புறவைப் பேணும் நாடு பாக்கிஸ்த்தான்.

வடக்குத் தடக்குது
வடக்கில் தீபெத்தில் இந்தியாவைத் தாக்கக் கூடிய ஏவு கணைகளை சீனா நிறுத்தி வைத்திருக்கிறது. நேப்பாளத்தில் சீன சார்பு மாவோயிஸ்டுக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேப்பாளிய மன்னாராட்சியின் வீழ்ச்சியுடன் அங்கு இந்தியச் செல்வாக்கும் வீழ்ச்சியடைந்து விட்டது. நேப்பாளத்திற்கு அண்மையில் இந்தியப் பிரதமர் ஒரு சிறப்புத் தூதுவரை அனுப்பினார். அவரை நேப்பாளிய பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார். இந்தியச் சிறப்புத் தூதுவர் அங்கு வருவது தனக்குத் தெரியாது என நேப்பாளிய வெளிநாட்டமைச்சர் கூறினார். அது மட்டுமா இப்படி அரசுக்களிடையான் மரபுகளை மீறி நடக்கக்கூடாது என்றும் நேப்பாளிய வெளிநாட்டமைச்சர் கூறி விட்டார். நேப்பாளத்தில் இந்திய நிலை அவ்வளவு கவலைக்கிடமானது.

இந்தியாவிற்குள் சீனப் படை
இந்தியாவில் பெருகிவரும் மாவேயிஸ்ட்டுக்களான நக்சலைட்டுக்கள் இந்தியாவிற்குள் ஒரு சீனப்படையாக செயற்படும் ஆபத்து உண்டு. இந்தியாவின் 40%மான பிரதேசத்தில் 22 மாநிலங்களின் 220 மாவட்டங்களில் நக்சலைட்டுக்களால் ஆபத்து உண்டு. இவையாவும் சீனாவிற்கு அண்மையான கிழக்குக் கரையோரங்களில்தான் அமைந்திருக்கின்றன. 1967-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிரமத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது பூதாகரமாக வளர்ந்துள்ளது.

பங்களாதேஸ்
பங்களாதேசையும் சீனா தனது பிடிக்குள் கொண்டு வருகிறது. பங்களா தேசப் போரின் போது இந்தியாவின் சென்னைப் பட்டாளம் முதலில் கைப்பற்றிய துறை முகமான சிட்டகொங் இப்போது சீனாவசம். அந்நியச் செலவாணியைப் பொறுத்தவரை உலக்த்தில் முதலாமிடத்தில் இருக்கும் சீனாவுடன் 159-ம் இடத்தில் இருக்கும் இந்தியாவால் போட்டி போட்டுக் கொண்டு அயல் நாடுகளுக்கு நிதி உதவி செய்து தனது நட்பாக்கிக் கொள்ள முடியாது.


மொத்தத்தில் உள்ளுக்கும் சரி வெளியிலும் சரி இந்தியாவின் நிலை பரிதாபகரமானது.

4 comments:

Anonymous said...

இந்தியா நல்ல இருக்கட்டும் என்று நினைக்கிறீர்களா, நாசமாக போகட்டும் என்று நினைக்கிறீர்களா?

Anonymous said...

இந்தியா நல்ல இருக்கட்டும் என்று நினைக்கிறீர்களா, நாசமாக போகட்டும் என்று நினைக்கிறீர்களா?

இளங்கோ said...

இன்னும் எத்தனை நாளைக்கு இந்தியாவை திட்டிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்?

Anonymous said...

நீயும் பேசாமல் காசை வாங்கி கொண்டு யோசிக்காமல் ஓட்டு போடுவ, இப்படி உண்மைய எடுத்து சொன்னாலும் உங்களுக்கு புடிக்காது. உங்களுக்கு சுய புத்தி தான் இல்ல சொல் புத்தி யாவது இருக்கட்டும். கொஞ்சம் யோசி மேல சொன்னது உண்மைன்னு புரியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...