
பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் இடையில் ஒரு முறை யார் சிறந்த மென்பொருள் உருவாக்குபவர் என்று கடும் போட்டி நடந்தது . நடுவராகச் செயற்பட்ட சிவபெருமான் இருவருக்கும் மூன்று மணித்தியாலங்கள் கொடுத்து அதற்குள் சிறந்த மென் பொருளை உருவாக்கும்படி கட்டளையிட்டார்.
பிரம்மாவும் திருமாலும் தங்கள் மடிக் கணனிகளுடன் உட்கார்ந்து மென்பொருள்களை எழுதத்தொடங்கினர். பிரம்மாவின் நாவில் இருந்து கலைமகள் சிறந்த ஆலோசனைகளையும் செயலிகளையும்(applications) வழங்கிக்கொண்டுஇருந்ததால் அவர் வெற்றி பெறுவார் என்றும் பலரும் எதிர் பார்த்தனர். திருமகள் திருமாலுக்கு பின்புல ஆதரவுகளுடன்கூடிய சிறந்த வன்பொருள்களை வழங்கினார்(Harware with backup storage). அதனால் அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சிலர் எதிர்வு கூறினர்.
ஊர்வசி தலைமையில் ஒரு தேவலோக நடன மங்கையர் குழுக்கள் தங்கள் கைகளில் பந்து போல் கட்டிய பூக்களை வைத்துக் கொண்டு திருமாலுக்கு ஆதரவாக நடனமாடினர்.
மேனகை தலைமையில் ஒரு நடன மங்கையர் குழுக்கள் தங்கள் கைகளில் பந்து போல் கட்டிய பூக்களை வைத்துக் கொண்டு பிரம்மாவுக்கு ஆதரவாக நடனமாடினர்.
பார்வதி வீட்டில் இருந்தபடியே நேரடி ஒளிபரப்பைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்.
திருமாலும் பிரம்மாவும் தங்கள் முழுத் திறமையையும் காட்டி எழுதிக் கொண்டே இருந்தனர். யமனின் கணக்காளார் சித்திரபுத்திரன் நேரத்தை கணித்துக் கொண்டு இருந்தார். சகல தெய்வங்களும் தேவர்களும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.நேரம் சரி என்று சித்திர புத்திரனார் சிவபெருமானுக்கு சைகை கொடுக்கும் போது நாரதர் இந்திரனுக்கு தனது சைகையைக் கொடுத்தார். பாரிய மின்னல் வந்து மின்சாரத்தை துண்டித்து விட்டது.
சற்று நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது. நேரம் முடிவடைந்துவிட்டதால் இருவரது கணனிகளையும் சிவபெருமான் பெற்றுக் கொண்டார். சிவபெருமான் பிரம்மனின் கணனியை முதலில் பார்த்தார். பாவம் பிரம்மா அவரது கணனியில் அவர் எழுதிய மென்பொருள் யாவும் மின்சாரக் கோளாறால அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது சிவபெருமான் திருமாலின் கணனியைப் பார்த்தார் அதில் அவர் எழுதிய மென்பொருள் பத்திரமாக இருந்தது. எல்லோரும் ஆச்சரியத்துடன் திருமாலைப்பார்த்தனர். திருமால் புன்முறுவலுடன் எனது தொழில் காப்பது(Save) என்றார். I saved everything then and there என்றார் பெருமையுடன்.
இதனால் சகலரும் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில் உங்கள் வேலைகளை அடிக்கடி பாதுகாத்துக்(Save) கொள்ளுங்கள்.
1 comment:
இதை நான் இப்படி பார்க்கிறேன்.
பிரம்மா- பிரபாகரன்
திருமால்- ராஜபட்சே
திருமகள்- அன்டோனியா மெய்னோ, இந்தியா
ஊர்வசி மற்றும் பலர்- அனைத்துலக வேடிக்கை பார்வையாளர்கள்
மேனகை மற்றும் பலர்- பிரயோசனம் இல்லாத தமிழகத் தமிழர்கள்
சித்திரபுத்திரன், நேரம்- இந்தியா, தேர்தல் நேரம்
சிவன்- இந்தியத் தலைமை
நாரதன் சைகை- இந்திய, ஐநா அதிகாரிகள்
பாரிய மின்னல்- முள்ளிவாய்க்கால்
யாவும் அழிந்தன- உருவாக்கத் தெரிந்தவருக்கு காக்கத் தெரியவில்லை
திருமாலுக்கு தொழில் காப்பது- இல்லை...இல்லை. அழித்துக் காப்பது
யமன்-????????
ரகுநாதன்
krnathan.blogspot.com
Post a Comment