Wednesday, 3 November 2021

சீனா-பாக் உறவிலும் பார்க்க துருக்கி-பாக் உறவு இந்தியாவிற்கு ஆபத்தானது.

  



இந்தியத் திரைப்படங்கள் துருக்கியில் எடுக்கப்படுவதுண்டு. மலிவான வெளிநாட்டு படப்பிடிப்பு செய்வதற்கு உகந்த இடங்கள் பல அங்குள்ளன. இந்திப் படப்பிடிப்பிற்கு துருக்கி சென்ற அமீர் கான் துருக்கிய அதிபரின் மனைவியான முதற் பெண்மணியை சந்தித்தமைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் அரசுறவியல் இழுபறி கஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை இந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் தீவிரமானது. 2020 பெப்ரவரியில் துருக்கிய அதிபர் ரிசெப் எர்துவான் இந்தியா இப்போது படுகொலைகள் பரவலாக நடக்கும் நாடாகிவிட்டது; என்ன படுகொலை; இந்துக்களால் செய்யப்படும் இஸ்லாமியப் படுகொலை என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையில் தொடரும் முறுகல்

2021 செப்டெம்பரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் துருக்கி இந்தியாவின் கஷ்மீரிலும் சீனாவின் உய்குரிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். கடந்த மூன்று ஆண்டுகளாக துருக்கி ஐநா சபையில் கஷ்மீர் பிரச்சனை ஐநா சபையினூடாக தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. இந்தியாவின் நிலைப்பாடு அது உள்நாட்டுப் பிரச்சனை. இந்திய பாக் பிரச்சனை என்பது ஓர் இருதரப்பு பிரச்சனை. அதில் மூன்றாம் நாட்டின் தலையீடு இருக்க கூடாது என்பதாகும். 5 வல்லரசுகள் உட்பட பெரும்பான்மையான நாடுகள் கஷ்மீர் தொடர்பாக தலையிடுவதில்லை. கஷ்மீரின் உரிமைகளை மோடி அரசு பறித்த போது சவுதி கருத்து தெரிவிக்கவில்லை. பாக்கிஸ்த்தான் சவுதியை இந்தியாவிற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் படி வலியுறுத்திக் கேட்டிருந்தது. துருக்கி ஐநாவில் கஷ்மீர் விவகாரங்களை எழுப்பும் போது இந்தியவின் தலைமை அமைச்சர் அல்லது பிரதிநிதி கிரேக்கம் ஆர்மினியா மற்றும் சைப்பிரஸ் அரசுறவியலாளரக்ளைச் ஐநாவில் சந்தித்து உரையாடுவார்கள். 2021-ம் ஆண்டு சைப்பிரசை 1974இல் துருக்கி ஆக்கிரமித்து இரண்டாகப் பிளந்து வைத்திருப்பதையும் அது ஐநா முடிவுகளுக்கு மாறானது எனவும் சுட்டிக் காட்டியது இந்தியா.

துருக்கி – பாக் சிறப்பு உறவு

நாடுகளிடையேயான “சிறப்பு உறவு” பல்வேறு காரணங்களுகாக உருவாக்கப்படுகின்றது. பொதுவான கொள்கைகளும் பொதுவான வெளியுறவும் முதன்மை முக்கிய காரணமாகும். இரண்டு நாடுகளும் படைத்துறையில் இணைந்து ஒன்றை ஒன்று பாதுகாப்பது இரண்டாவது கரணமாகும். பொருளாதார் ஒத்துழைப்பு மூன்றாவது காரணமாகும். துருக்கிக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் வளரும் சிறப்பு உறவு வித்தியாசமானதாகும் நடுவண் ஆசியாவில் உள்ள தேர்க்மெனிஸ்த்தான், அஜர்பைஜான், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் துருக்கிக்கு பாக்கிஸ்த்தான் தேவைப்படுவதுடன் போர் முனை அனுபவமுள்ள பாக்கிஸ்த்தான் படையினரின் உதவி துருக்கிக்கு தேவைப்படுகின்றது. அதற்கு பாக்கிஸ்த்தானின் எதிரியான இந்தியாவிற்கு எதிராக தனது நகர்வுகளைச் செய்து பாக்கிஸ்த்தானுடனான தனது உறவை சிறப்பாக்கிக் கொண்டிருக்கிறது துருக்கி.

உலக அரங்கில் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் துருக்கி

உலக அரங்கில் உறுதிப்பாட்டுடன் இருக்கும் துருக்கி நேட்டோ சகாக்களின் வேண்டுகோளை மீறி எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவேன் என அடம்பிடிக்கின்றது. அதனால் துருக்கிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அஜர்பைஜானுக்கு உதவி செய்து ஆர்மினியாவை தோற்கடித்த துருக்கி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். துருக்கியில் கைது செய்யப்படும் ஐ எஸ் அமைப்பினரை தண்டிக்காமலும் அவர்கள் பற்றிய விபரங்களை தனது நட்பு நாடுகளுக்கு வழங்காமலும் அவர்களை 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களது நாட்டுக்கு அனுப்பி விடுகின்றது என்ற குற்றச் சாட்டும் உண்டு. அல் கெய்தாவின் கிளை அமைப்பாகக் கருதப்படும் ஹயத் தஹீர் அல் ஷாம் என்னும் தீவிரவாத அமைப்புடனும் துருக்கி தொடர்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. சீனா நேரடியாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றது. சீனா இஸ்லாமியத் தீவிரவாதத்தை விரும்புவதில்லை. அது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் பரவலாக முன் வைக்கப்படுவதில்லை. இதனால் சீன-பாக் உறவிலும் பார்க்க துருக்கி-பாக் உறவு இந்தியாவிற்கு அதிக பாதகங்களை விளைவிக்கக்கூடியது

கஷ்மீருக்கு துருக்கியின் கூலிப்படை?

சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து படைக்கலன்களை உற்பத்தி செய்வது போல் பாக்-துருக்கி இணைந்த படைக்கல உற்பத்தி செய்கின்றன. ஆனால் துருக்கி ஐயாயிரம் தீவிரவாதிகளை சிரியாவில் இருந்து திரட்டி கஷ்மீருக்கு அனுப்ப திட்டமிடுவதாக கிரேக்கத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அவற்றின் படி அந்த தீவிரவாதிகளுக்கான ஊதியத்தை துருக்கி வழங்குகின்றதாம். கஷ்மீரில் செயற்படும் தீவிரவாதிகளுக்கு துருக்கி உற்பத்தி செய்யும் ஆளிலிவிமானங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. பாக்கிஸ்த்தானை இப்படிச் செய்து மகிழ்ச்சிப்படுத்தி கிரேக்கத்திற்கு எதிரான துருக்கியின் நகர்வுகளுக்கு பாக்கிஸ்த்தானியப் படைகளை பாவிக்க துருக்கி பெறுகின்றது.

இந்தியாவிற்கு மிகவும் ஆபத்தானது துருக்கி, பாக்கிஸ்த்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைவதுதான்.

Monday, 1 November 2021

இரசிய சீன உறவும் அமெரிக்காவும்

 


பேராசிரியர் அலெக்சாண்டர் லுக்கின் என்பவர் சீனாவில் மதிக்கப்படுகின்ற ஒரு இரசியர். அவர் இரசிய சீனக் கூட்டில் உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். அந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். அவர் இப்போது இரசியா சீன உறவு உயர்ந்த நிலைக்குச் சென்று விட்டது என்றபடியால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இனிக் கீழ் முகமாகவே இருக்கும் என்கின்றார்.

மக்கள் சீனத்தை முதல் அங்கீகரித்த இரசியா

மக்கள் சீனக் குடியரசு 1949 ஒக்டோபர் 1-ம் திகது உருவக்கப்பட்ட மறு நாளே அதை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது. மேற்கு நாடுகள் அதை அங்கீகரிக்க மறுத்திருந்தன. ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு தைவானில் தஞ்சமடைந்த ஷியாங் கே ஷேக்கையே முழு சீனாவினதும் ஆட்சியாளராகவும் அவரது ஆட்சியையே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகவும் மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தன. மாவோ சே துங்கின் ஆதரவு தனக்கு அரசியல் செல்வாக்கை சோவியத் ஒன்றியத்தில் அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் அப்போதைய சோவியத் அதிபர் நிக்கித்தா குருஷேவ் சீனாவிற்கு பல படைத்துறை தொழில்நுட்ப உதவிகளை வழங்கினார். இரசியா வழங்கிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்தே சீனா அணுக்குண்டு உட்பட பல படைக்கலன்களை உருவாக்கியது.

நீண்ட தந்தி

அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் அரசுறவை உருவாக்குவதில் முன்னின்றி உழைத்தவர் ஜோர்ஜ் கென்னன் என்ற அமெரிக்கர். இரசியர்கள் மீது நல்ல மதிப்பை வைந்திருந்த அவரது முயற்ச்சியால் 1933-ம் ஆண்டு மொஸ்க்கோவில் அமெரிக்க தூதுவரகம் திறக்கப்பட்டது. சோவியத பொதுவுடமைவாதிகளின் கொள்கைகளை விரும்பாத ஜோர்ஜ் கென்னன் மொஸ்க்கோவில் இருந்து வாஷிங்டனுக்கு ஒரு 8,000 சொற்கள் கொண்ட ஒரு நீண்ட தந்தியை அனுப்பியிருந்தார். அத் தந்தி அமெரிக்க சோவியத் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் உலகெங்கும் பொதுவுடமைவாத மயமாக்க முயல்கின்றது. அது அடக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா உருவாக்கியது. அது அடக்கும் கொள்கை (Policy of Containment) எனப் பிரபல்யம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இரசியாவுடன் ஒத்துழைப்பதை ஜோர்ஜ் கென்னன் எதிர்த்திருந்தார். ஆனால் 1945இல் ஃபிராங்கிலின் ரூஸ்வெல்ட் இறந்த பின்னர் ஜோர்ஜ் கென்னனின் கொள்கை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் பெற்றது. அதுவே பனிப்போரை ஆரம்பித்து வைத்தது.

வறுமையில் இருந்த சீனா

1953-ம் ஆண்டில் ஜேசெப் ஸ்டாலினின் மறைவின் பின்பு சோவியத் ஒன்றிய ஆட்சியாளர்கள் உலக அரங்கில் ஓர் உடன் வாசம் செய்யும் வகையில் தமது கொள்கைகளை முன்னெடுக்க முயன்றனர். அதை மரபு வழி பொதுவுடமைவாதத்தில் இருந்து விலகிச் செல்லும் திரிபுவாதம் என சீனா ஆட்சியாளர் விபரித்தனர். அதன் பின்னர் சோவியத்திற்கும் சீனாவிற்கும் இடையில் பொதுவுடமைக் கோட்பாட்டு வேறுபாடு உருவாகியது. அப்போது வலிமை மிக்க சோவியத் ஒன்றியத்தால் சீனாவிற்கு ஆபத்து என்ற நிலை உருவான போது மேற்கு நாடுகளும் சீனாவும் ஒத்துழைக்க தொடங்கின. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கு நாடுகள் வசதிகள் செய்து கொடுத்தன. அப்போது சீனாவின் தனி நபர் வருமானம் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தின் 75இல் ஒரு பங்காக இருந்தது. அதனால் வறிய நாடாகிய சீனாவின் பொருளாதார வளர்ச்சி தமக்கு சவலாக அமையாது என்றும் சீனாவின் வளர்ச்சி சோவியத் ஒன்றியத்தை அடக்கும் கொள்கைக்கு உகந்ததாக அமையும் என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதினர்.

உக்ரேன் ஆக்கிரமிப்பு

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தமையும் சிரியாவில் இரசியா தலையிட்டு அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலைக் குழப்பியமையும் அமெரிக்க இரசிய உறவில் பெரும் விரிசனை ஏற்படுத்தின. அதனால் பராக் ஒபாமா தனது ஆசிய சுழற்ச்சி மையம் திட்டத்தில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது. அமெரிக்கா உக்ரேனிலும் சிரியாவிலும் சிக்கியிருக்கையில் சீனா தென் சீனக் கடலில் தனது செயற்கைத் தீவுகளை உருவாக்கியது. இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் செய்யும் நகர்வுகளும் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உறவை நெருக்கப்படுத்தியது எனப்படுகின்றது. 2015 ஜூன் 5-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கையொப்பமிட்டு வெளிவிட்ட அறிக்கை இரசிய சீன உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தது.

நடுவண் ஆசியா (Central Asia)

நடுவண் ஆசியாவில் முக்கிய நாடுகள் கஜகஸ்த்தான்கிர்கிஸ்த்தான்தஜிகிஸ்த்தான்தேர்க்மெனிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகியவையாகும்.  இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் இவை சுதந்திர நாடுகளாகினஇவை அபரிமிதமான இயற்கை வளங்களைக் கொண்டவை.  அதனால் சீனாஇரசியாஐரோப்பிய ஒன்றியம்ஐக்கிய அமெரிக்காஇந்தியா ஆகிய நாடுகள் நடுவண் ஆசிய நாடுகளுடனான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனசீனாவின் தரைவழிப் பட்டுப் பாதைக்கும் பொருளாதாரப் வளையத்திற்கும் இந்த நாடுகள் அவசியமானவையாக உள்ளனமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவின் ஆதிக்கத்திற்குள் மீண்டும் உட்பட்டு இருக்க வேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கொள்கையாகும்.

சீனாவின் தரைவழிப்பட்டுப்பாதையும் இரசியாவும்

நடுவண் ஆசிய நாடுகளை இரசியா ஐரோப்பிய ஆசிய பொருளாதார ஒன்றியம் (Euro Asian Economic Union) என்ற பொருளாதாரக் கூட்டமைப்பின் கொண்டு வர முயல்கின்றது. சீனா நடுவண் ஆசிய நாடுகளை தனது பொருளாதார விரிவாக்கத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பின் (Belt and Road Initiative) மூலம் சுரண்ட முயல்கின்றது. இங்கிருந்துதான் இரசிய சீன முரண்பாடு தோன்ற வாய்ப்புண்டு. மெல்ல மெல்ல மென்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா. அதே உபாயத்தை இந்திய எல்லையிலும் நடுவண் ஆசியாவிலும் நிறைவேற்ற முயற்ச்சிக்கின்றது. தஜிகிஸ்த்தானில் பெரும்பான்மையாக வாழும் தஜிக் மக்கள் ஈரானுடன் கலாச்சாரத் தொடர்புள்ளவர்கள். தஜிக்கிஸ்த்தான் உய்குர் மக்களை அடக்க சீனாவிற்கு உதவுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா தனது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (Belt and Road Initiative) திட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தை இணையவெளியூடாக நடத்திய போது அதில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் கலந்து கொள்ளவில்லை. இரசியா சார்பில் ஒரு அதிகாரி மட்டும் கலந்து கொண்டார். நடுவண் ஆசிய நாடுகளில் வேற்று நாட்டுப் படைகள் இருப்பதை இரசியா விரும்புவதில்லை. ஆனால் தஜிக்கிஸ்த்தானில் சீனப் படைகள் நிலை கொண்டுள்ளன. பல நடுவண் ஆசிய நாடுகளுக்கு சீன படைக்கலன்களை விற்பனை செய்வதுடன் பயிற்ச்சியும் வழங்குவது இரசியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இரசியா தலைமியிலான ஒருமித்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Organisation) என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இரசியா, கஜகஸ்த்தான், ஆர்மினியா, கிரிகிஸ்த்தான், பெலரஸ், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகள் உள்ளன. அதில் ஒரு நாடான தஜிகிஸ்த்தானில் சீனப்படைகள் நிலை கொள்வதை இரசியா வெறுக்கின்றது. சீனா ஆண்டு தோறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் 30,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி அவர்களுக்கு கொன்ஃபியூசியஸ் தத்துவங்களை போதிக்கின்றது. இது அந்த நாடுகளை ஒரு நீண்டகால அடிப்படையில் சீனமயமாக்கும் முயற்ச்சியாக பார்க்கலாம்.

குறுங்கால அடிப்படையில் சீன இரசிய உறவு உறுதியானது.

சீனாவும் இரசியாவும் இணைந்து ஜப்பானைச் சூழவுள்ள கடற்பகுதியில் 2021 ஒக்டோபர் நடுப்பகுதியில் பத்து கடற்படைக் கலன்களுடன் செய்த போர்ப்பயிற்ச்சியும் அதற்கு சீனா அனுப்பிய தன் முன்னணி நாசகாரிக் கப்பல்களும் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் தற்போது உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இரசிய சீன உறவு உறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் இரசியாவை சீனாவிற்கு நெருக்கமாக்கின்றது என்பதை உணர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை நிபுணர்கள் இரசியாவுடனான முறுகலை உறைநிலையில் வைத்து விட்டு சீனாமீது அதிகம் கவனம் செலுத்தலாம் எனக்கருதுகின்றனர். இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரே நேரத்தில் போர் தொடுத்தால் அமெரிக்கா நிச்சயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். குவாட்டை ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு என காட்டாமல் இருப்பதற்கு அமெரிக்கா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. ஆனால் தேவை ஏற்படின் குவாட் உறுப்பு நாடுகளான ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா, அமெரிக்கா இணைந்து சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை செய்யும்.



ஆர்க்டிக் பிராந்தியம்

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் தோன்றக் கூடிய இன்னொரு பிராந்தியம் ஆர்க்டிக் வளையம் ஆகும். இரசியா அதை தனது பிராந்தியம் என நினைக்கின்றது. ஆர்க்டிக் வளைய பிராந்தியத்தில் உரிமையுள்ள நாடுகளில் சீனா இல்லை. ஆனால் அங்கு சீனா அதிக அக்கறை காட்டுகின்றது. பனிப்பாறைகளை உடைத்துக் கொண்டு செல்லக் கூடிய அணுவலுவில் இயங்கும் முப்பதினாயிரம் எடை கொண்ட ஒரு கப்பலை சீனா உருவாக்குவது இரசியாவை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். அந்தக் கப்பல் ஒரு போர்க்கப்பலா அல்லது வர்த்தக கப்பலா என்பதைக் கூட சீனா இரகசியமாக வைத்திருக்கின்றது.

சீனாவின் நீண்ட கால கொள்கை உலக ஒழுங்கை தனக்கு ஏற்ப மாற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும். அது இரசியாவிற்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இரசியாவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட காலம் பேண முடியாது. தன்னையும் உள்ளடக்கிய ஒரு பல்துருவ ஆதிக்கத்தை இரசியா உருவாக்கும் முயற்ச்சியில் வெற்றி பெறும் வரை இரசிய சீன உறவு உறுதியாக இருக்கும்.  

Sunday, 31 October 2021

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தால் கலங்கிப் போயுள்ளேன்!

  


Tamil Advocacy Group ஒழுங்கு செய்த முதலாவது கலந்துரையாடலில் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்ன ஒரு வாக்கியம்: ஈழத்தமிழர் தொடர்பாக India ஒரு role play பண்ணும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தனது role ஐ play பண்ணும்

இரண்டாம் கலந்துரையாடலில் சொன்ன இரு வாக்கியங்கள்:

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் இந்தியாவை Involve பண்ண வைக்க வேண்டும்.

இந்தியாவை மீறி வேறு யாரும் தமிழர்கள் பிரச்சனையைக் கையாள முடியாது

இந்த 3 வாசகங்களைக் கேட்டதில் இருந்து நான் கலங்கிப் போயிருக்கின்றேன்.

நேரு கொத்தலாவலை ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சௌமியமூர்த்தி தொண்டமான் – ஜீஜீ பொன்னம்பலத்தை ஒன்றுபடமல் பிளவு படுத்தியதில் India’s role எமக்குத் தெரியும்.

தமிழ் மீனவர்களுக்கு பல வசதிகள் உள்ள கச்சதீவு தாரைவார்ப்பில் India’s role எமக்குத் தெரியும்.

1980களில் வேண்டுமென்றே பல போராளி அமைப்புகளை உருவாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகளுக்கும் – ரெலோவிற்கும் இடையில் நடந்த மோதலில் India’s role எமக்குத் தெரியும்.

யாழ் மருத்துவமனைப் படுகொலை உட்பட்ட பல கொலைகளில் India’s role எமக்குத் தெரியும்.

படைக்கலன்களைக் கொடுங்கள் உங்களுக்கு நாம் பாதுகாப்பு என்ற தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் நடந்த இனக்கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2007-09 வரை நடந்த இனக்கொலைப் போரில் எத்தனை ஆயிரம் இந்தியப்படையினர் ரோல் பிளே பண்ணினார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.

அப்போரின் போது இந்தியக் கடற்படையினர் எமது கடற்பரப்பை சுற்றி நின்று பிளே பண்ணிய role எமக்குத் தெரியும்.

ரணில் தலைமை அமைச்சராகவும் சந்திரிக்கா அதிபராகவும் இருந்த வேளையில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வழங்க சிங்களம் முன்வந்த போது அதைக் குழப்ப ரணில் ஆட்சியைக் கலைத்து ஜேவிபியையும் இணைத்து மஹிந்தவை தலைமை அமைச்சர் ஆக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் அழிப்பில் India’s role எமக்குத் தெரியும்.

மூன்று இலட்சம் அப்பாவிகள் கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2009 போரின் பின்னர் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தின் வாசகங்களை மாற்றி இலங்கையை பாராட்டும் தீர்மானமாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக வரும் தீர்மானங்களில் India’s role எமக்குத் தெரியும்.

India’s role என்று எங்களுக்கு ரீல் விடுகின்றார்கள்.

சுரேஸ் பிரேமசத்திரன் இந்தியா role play பண்ணும், பண்ண வைக்க வேண்டும் என்கின்றார்.

இந்தியா இனியும் role play பண்ணி இன்னும் எத்தனை இலட்சம் தமிழர்களை இந்தியா பலியெடுக்கப் போகின்றதோ என்பதை எண்ணி நான் கலங்கிப் போயுள்ளேன்.

பிரம ஹத்தி பிடித்த இந்தியாவை role play வைக்க வேண்டும் என்பவர்களுக்கு சித்தப் பிரமை என்பது மட்டும் உண்மை.

இந்தியா role play பண்ணுவதென்றால் இன்னும் ஓர் அமைதிப்படை என்னும் பெயரில் கொலைவெறி நாய்களின் படையா? இன்னும் ஒரு மண்டையன் குழுவா? 

ஐயோ தமிழினம் தாங்காதய்யா!

Thursday, 28 October 2021

சீன DF-41 மலை! இந்திய அக்னி-5 மடு!

 


சீனாவின் எப்பாகத்தையும் அணுக்குண்டுகளால் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணைகளை 2021 ஒக்டோபர் 27-ம் திகதி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ஒடிசாவி மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து வீசிப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்தியா தெரிவிக்கின்றது. அக்னி-5 ஆல் 1.1தொன் எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிச் செல்ல வல்லது. ஆனாலும் இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது. அக்னி-5 இந்தியாவிற்குத்தான் "அதிநவீனமனது" . சீனாவிற்கல்ல. அது சீனாவிற்கு அதிரடியாக அமையப்போவதுமில்லை. அணுக்குண்டுகளால் போர் செய்யும் போது நீயும் தொலைந்தாய், நானும் தொலைந்தாய் என்ற நிலைதான். அதில் யார் அதிக அணுக்குண்டுகளை அதிக வேகத்தில் வீசுவார்கள் என்பதுதான் முக்கியம். 

கண்டம் விட்டு கண்டம் பாயுமா? (ICBM?)

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை (Inter-continental Ballistic Missiles) என வகைப்படுத்தப்பட்டுள்ள அக்னி-5 ஏவுகணை சீனாவிற்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றது, சீனாவை கலங்க வைத்துள்ளது, சீனாவை கரிசனை கொள்ள வைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை குறைந்தது 5500கிலோ மீட்டர் வரை பாயவேண்டும். ஆனால் அக்னி-5 5000கிலோ மீட்டர் தான் பாயக்கூடியது எனவும் கருதப்படுகின்றது. இந்து இதிகாசங்களில் அக்னி படைக்கலன் தேவர்களில் ஒருவரான அக்னிபகவானிற்கு உரியது. மகாபாரதப் போரின் 12-ம் நாள் போரில் அர்ச்சுனன் மன்னன் பகதத்தனை அக்னி அம்பு எய்து கொன்றான் எனக் கூறப்படுகின்றது.

அக்னி-5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையா?

அக்னி-5 தனது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகத்தில் பாயும் எனச் சொல்லப்படுகின்றது. அக்னி-5 ஏவுகணை 17.5மீட்டர் உயரமும் 2மீட்டர் விட்டம் கொண்ட குறுக்கு வட்டமும் கொண்டது. ஏவப்படும் போது அதன் எடை 49,000 முதல் 55,000கிலோ கிராம் வரை இருக்கும். இதை பார ஊர்திகளில் எடுத்துச் சென்று தெருக்களில் இருந்து ஏவலாம். நிலையான ஒரு ஏவுதளம் தேவையில்லாத ஏவுகணை என்பதால் அதை இலக்கு வைத்து எதிர்கள் தாக்குவது கடினமாகும். அக்னி-5 ஏவுகணைகளை இந்தியா 2013-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் 2016-ம் ஆண்டிலும் பரிசோதித்தித்து பின்னர் 2018இல் இரண்டு தடவை பரிசோதித்தது. அக்னி-5இல் கணினி, வழிகாட்டல் முறைமை ஆகியவையும் உள்ளன. இந்தியாவின் முதலாவது அக்னி-1 ஏவுகணை 700கிமீ பாயக்கூடியது. அக்னி-2 2000கிமீ, அக்னி-3 ஏவுகணையும் அக்னி-4 2500முதல் 3000கிமீ வரை பாயக்கூடியவை. அக்னி-5இன் உண்மையான பாய்ச்சல் தூரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது. அது உண்மையில் 8000கிமீ பாயக்கூடியது எனவும் சொல்லப்படுகின்றது. அதை அறிந்தால் ஐரோப்பிய நாடுகள் குழப்பமடையலாம் என்பதால் குறைத்துச் சொல்லப்படுகின்றது என்கின்றார்கள். அக்னி-5 ஏவுகணையை  எதிரிகளின் அலைவரிசைகளில் மூலம் குழப்ப முடியாது எனவும் சொல்லப்படுகின்றது. 

பல இலக்குகளைத்தாகும் அக்னி-6 MIRTV

Multiple Independently Targetable Re-entry Vehicle (MITRV) என்பது பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளை தாமாகவே அழிக்கக் கூடியவை. இந்தியா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அக்னி-6 ஏவுகணையில் பத்து அணுக்குண்டுகளை தாங்கிச் சென்று பத்து இலக்குகளைத் தாக்கும் வல்லமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் National Interest ஊடகம் இந்தியா இதை உருவாக்கும் வல்லமையைப் பெறும் என்று 2018இல் எதிர்வு கூறி இருந்தது. அக்னி-5 மூன்று மட்டங்களைக் கொண்டது அக்னி-6இல் நான்கு மட்டங்கள் இருக்கும்.

ஹைப்பர்சோனி பிரம்மோஸ்-2

இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கும் பிரம்மோஸ்-2 ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஏழு மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளாகும். ஆனால் அவற்றின் பாய்ச்சல் தூரம் 1000கிமீ மட்டுமே. தரையில் இருந்து 14கிமீ செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து பின்னர் இலக்கை நோக்கி ஏறக்குறைய 90பாகை செங்குத்தாக விழும் (Deep-Dive) பிரம்மோஸ்-2 ஏவுகணை உலகில் உள்ள வழிகாட்டல் ஏவுகணைகளில் (Cruise Missiles) வேகம் கூடியது எனக்கருதப்படுகின்றது. மலைகளிற்குள்ளும் பாறைகளுக்கு உள்ளும் உள்ள இலக்குகளை பிரம்மோஸ்-2 நிர்மூலம் செய்யக் கூடியது. செங்குத்தாக விழக்கூடிய வகையில் அவற்றை உருவாக்கியது ஒரு சிறந்த உபாயமாக கருதப்படுகின்றது. அதனால் பிரம்மோஸ்-2 ஒரு செலவு குறைந்த ஏவுகணையாகும். இரசியாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய SU-31-MKI என்னும் பற்பணி-வானாதிக்க போர்விமானத்தில் பிரம்மோஸின் இன்னொரு வகை எவுகணைகள் பொருத்தக் கூடியதாக இருப்பது இந்தியாவிற்கு மேலதிக வலுவைக் கொடுக்கின்றது. ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை தாங்கிய SU-31-MKI விமானங்கள் 122ஐக் கொண்ட 222 Sqadron என்னும் பெயர் கொண்ட விமானப்படையணி சீனாவைத் தாக்குவதற்கென தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

சீனாவின் கிழக்குக் காற்று என்னும் பொருளுடைய DongFeng ஏவுகணைகள் நான்கு தலைமுறையாக உருவாக்கப்படுகின்றது அதன் நான்காம் தலைமுறை DongFeng-41 (DF-41) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாய்ச்சல் தூரத்தில் இது உலகின் இரண்டாவது வலிமை மிக்க ஏவுகணையாகும்.  அதன் பாய்ச்சல் தூரம் 12,000கிமீ முதல் 15,000கிமீ அக்னி-5இன் பாச்சல் துரத்திலும் இரண்டு மடங்கிலும் அதிகமானது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையான DF-41 இன் வேகம் ஒலியிலும் பார்க்க 25மடங்கு ஆகும். இது ஆறு முதல் பத்து வரையிலான அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளைத் தாக்க வல்லது. இதன் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கக் கூடிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை.  அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஒரு விண்வெளிப்படையை (Space Force) அமைத்தால் மட்டுமே சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் Centre for Strategy and Technologyயின் இயக்குனர் ராஜ்ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் இந்தியாவைக் காப்பாற்றுவாரா?

சீனா 2021 ஓகஸ்ட் மாதம் பரிசோதித்த உலகைச் சுற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் அமெரிக்கா என்னும் அம்மியே ஆடிப்போயுள்ள போது இந்தியக் கடுதாசி?

Monday, 25 October 2021

ஏவூர்திகளில்(Rockets) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இணைக்கும் சீனா

  


சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படி எதிர்கொள்வது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் சீனா இன்னும் ஒரு படி மேல் போய் உலகத்தை பகுதியாகச் சுற்றிவந்து இலக்குகளைத் தாக்கும் ஹப்பர்சோனிக் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுர்தியை (Rocket) பரிசோதித்துள்ளது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. சீனா 2021 ஜூலை மாதம் செய்த பரிசோதனையை ஒக்டோபர் மதம்தான் பிரித்தானிய நாளிதளான Financial Times பகிரங்கப்படுத்தியது. அமெரிக்க இணையவெளி ஊடகம் ஒன்று சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படித் தவிர்ப்பது எனத் தெரியாமல் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இருப்பதாக பெண்டகனைச் சேர்ந்த Robert Wood என்பவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. அதேவேளை ஒக்டோபர் 21-ம் திகதி அமெரிக்காவின் கடற்படையும் தரைப்படையும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதித்ததாக அமெரிக்கப்பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்தது.  

Mach பெறுமானம்

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை ஹைப்பர்சோனிக் என அழைப்பர், பறக்கும் விமானம், பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது. சீனாவின் செய்கை படைக்கலப் போட்டியை உருவாக்கும் என சில அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட வேறு சில அதை மறுத்துள்ளன.


Fractional Orbital Bombardment System என்பது என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஊக்கி ஏவூர்தி (Booster Rocket), நழுவு வண்டி (Glide Vehicle) என இருபகுதிகளைக் கொண்டது. குண்டைக் கொண்ட Glide Vehicleஐத்தாங்கியபடி Booster Rocket நிலத்தில் இருந்து கிளம்பி மேல் நோக்கிய பாதையில் 62மைல்களுக்கு மேல் பயணித்து விண்வெளிவரை சென்று குண்டைக் கொண்ட Glide Vehicleஐ மேலும் மேல் நோக்கு உந்தித் தள்ளிவிடும் மிக உயரச் சென்ற Glide Vehicle புவியீர்ப்பினாலும் தன் உந்துவலுவாலும் கீழே விழும்போது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குக்கு மேற்பட்ட வேகத்தில் தரையில் தனது இலக்கை நோக்கி பாயும். குண்டு இல்லாமலே ஒரு நழுவு வண்டி (Glide Vehicle) பூமியில் மோதுகையில் அதன் மிதமிஞ்சிய வேகத்தால் பாரிய சேதம் ஏற்ப்படும். அதில் குண்டுகள் அல்லது அணுக்குண்டு இணைக்கப்பட்டால்…..? இப்போது ஏவூர்தி மேல் நோக்கியப் பயணித்து பூமியை பகுதியாகச் சுற்றிவரும் போது மிகத் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கலாம்.  பூமியை சுற்றி ஏவூர்திகள் (Rockets) ஒரு வட்டப்பாதையில் அல்லது நீள்வட்டப்பாதையில் வலம் வரும். பூமியை முழுமையாகச் சுற்றாமல் பூமியின் ஒரு பகுதிக்கு மேலால் மட்டும் ஏவூர்தி சுற்றுவதை பகுதிச் சுற்று (Fractional Orbit) என்பர். இந்தப் பகுதிச் சுற்றை குண்டு வீச்சுக்கு பாவிப்பதை 1960களில் சோவியத் ஒன்றியம் உருவாக்கியது. அதன் மூலம் குண்டுகளை தொலைவில் உள்ள இலக்கின் மீது வீசுவதை பகுதிச் சுழல்தடக் குண்டுவீசல் (Fractional Orbital Bombardment System என அழைப்பர். சீனா அதே போன்ற ஏவூர்தியை ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கச் செய்யும் பரிசோதனையை 2021 ஓகஸ்ட் மாதம் செய்தது. அதில் குண்டுகள் ஏதும் பொருத்தப்படவில்லை. சீனாவின் அடுத்து வரும் பரிசோதனைகள் அதில் குண்டுகளையும் அணுக்குண்டுகளையும் இணைத்துச் செய்யப்படலாம். நீண்ட பயணம் என்பது சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் முக்கிய பகுதியாகும். அப்பெயரையே சீனா தனது புதிய ஏவூர்ந்திக்கு இட்டுள்ளது. சீனா நீண்ட பயணம் (Long March) என்னும் பெயரில் ஒரு ஏவூர்தியை (Rocket) விண்வெளியில் 2021 ஜூலை 27-ம் திகதி ஏவியது. அது ஒலியிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயக்கூடியது. அது பூமியை பகுதியாகச் சுற்றிவந்து தனது இலக்கின் மீது அணுக்குண்டை வீசக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது.

Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள்

ஹைப்பர் சோனிக் வழிகாட்டல் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசனையும் தன்னிடமுள்ள எரிபொருளையும் பாவித்து தனது உந்து வலுவைப் பெற்றுக் கொள்ளும். இவற்றை காற்று சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பார்கள். ஏவூர்திகள் வளிமண்டலத்திற்கும் மேலே செல்வதால் அவை தமக்கு தேவையான ஒட்சிசனை திண்ம வடிவத்தில் காவிக்கொண்டு செல்ல வேண்டும். Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பல நாடுகள் உற்பத்தி செய்ய முயல்கின்றன. அதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன.  அவற்றில் இரசியாவும் சீனாவும் ஒரு படி முன்னேறி அணுக்குண்டுகளை காவிச் செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒதுக்கிய நிதியை அதிகரித்துள்ளது. 2021இல் ஒதுக்கிய நிதி $3.2பில்லியன் 2020இல் $3.8பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு முகவரகம் மேலதிகமாக $247.9மில்லியன் நிதியைக் கோரியுள்ளது.  சீனா உருவாக்கியுள்ள பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment – FBO) முறைமை மூலம் செலுத்தப்படும் ஏவூர்ந்து(Rocket) சீனாவில் இருந்து புறப்பட்டு தென்துருவத்தின் மேலாகப் பாய்ந்து அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் இடைமறிப்பு ஏவுகணைகளைத் தவிர்த்து தனது இலக்கின் மீது குண்டு வீசலாம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை வடதுருவத்தில் உள்ள அலாஸ்கா பனிப்பரப்பில் உள்ளது. சீனா பரிசோதித்த பகுதியான சுழல்தட குண்டுவீச்சு எதிர்பார்த்த இலக்கை துல்லியமாக தாக்காமல் 24மைல் தொலைவில் விழுந்ததாக Financial Times தெரிவித்திருந்தது. அதன் படி அதனால் அசைந்து கொண்டிருக்கும் ஓர் அமெரிக்க விமானம் தாங்கியை துல்லியமாக தாக்க முடியாமல் போகலாம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தமது இலக்கில் இருந்து 520அடிகள் மட்டும் தவறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது


.அமெரிக்காவின் Aegis Combat System

Massachusetts Institute of Technologyஐச் சேர்ந்த அணுப்படைக்கலன்கள் நிபுணரான டேவிட் ரைட் சீனா ஏற்கனவே அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை முறியடிக்கும் திறனைப் பெற்றுள்ளது என்றார். சீனா அமெரிக்காவை மிஞ்சுவது மட்டும் போதாது மிதமிஞ்சிய நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பூமியைச் சுற்றிப் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குகின்றது எனக் கருதப்படுகின்றது. அமெரிக்கா தனது Aegis Combat System என்னும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் முறைமைகளை தனது நாசகாரிக் கப்பல்களில் பொருத்தி உலகக் கடற்பரப்பெங்கும் மிதக்க விட்டுள்ளது. இவற்றையும் மிஞ்சும் வகையில் சீனா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சிதான் அதன் பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment முறைமையாகும்.

அமெரிக்காவின் விண்வெளிப்படை

அமெரிக்கா 2020-ம் ஆண்டு தனக்கு என ஒரு விண்வெளிப்படையை உருவாக்கியது. அதற்கு என பல சிறிய குறைந்த உயரத்தில் செயற்படும் Black Jacket எனப்படும் பல செய்மதிகளை உருவாக்கியது. அவற்றை ஒன்றிணைக்க Pitboss என்னும் மென்பொருளையும் உருவாக்கியுள்ளது. Black Jacket இன் முக்கிய பணி உலகெங்கும் அமெரிக்காவிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளைக் கண்காணிப்பதாகும். அமெரிக்காவின் விண்வெளிப்படைக்கும் சீனாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கும் இடையிலான போட்டிச் செய்திகளை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள்

அமெரிக்காவின் படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை ஊடகங்களிற் சிலவற்றையும் படைத்துறை ஆய்வாளரகள் சிலரையும் தமது கைக்குள் வைத்திருப்பது வெளிப்படையான ஒன்று. அவர்கள் அமெரிக்காவின் எதிரிகளின் படை வலிமையையும் அவர்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தையும் மிகைப்படுத்தி எழுது அமெரிக்காவை பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒருக்கத் தூண்டுவார்கள். அமெரிக்காவின் படைக்கல உற்பத்தியில் பெரும்பகுதி தனியார் துறையினரிடம் உள்ளன. அதேவேளை பாதுகப்புச் செலவு அதிகரித்தால் அமெரிக்கா தம்மீது அதிக வரியை சுமத்தும் என அஞ்சும் செல்வந்தர்கள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்ற செய்தியை விரும்புவதால் அவர்களுக்கு சார்பான ஊடகங்களும் ஆய்வாளர்களும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவூர்தி பரிசோதனையால் ஆபத்து எல்லை என எழுதுகின்றனர்.

பிரித்தானிய நாளிதழான Financial Times வெளியிட்ட செய்தியை மறுத்த சீனா தான் பர்சோதித்தது மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடம் என்கின்றது. சீனாவைச் சுற்றவர அமெரிக்கா பல படைத்தளங்களை வைத்துள்ளது. அவற்றில் இருந்து பல அணுக்குண்டுகளை அமெரிக்காவால் சீனா மீது வீச முடியும். சீனாவில் இருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் குறைந்த தொலைவில் கூட அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ளன. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவிற்கு இன்னும் நெருக்கமாகச் சென்று புலப்படா விமானங்கள் மூலம் அணுக்குண்டுகளை சீனா மீது வீசலாம். இவற்றை மிஞ்சக் கூடிய வகையில் சீனா செயற்படுகின்றது.

Saturday, 23 October 2021

சீனா ஒரு வளர்முக நாடா?

 


சென்ற நூற்றாண்டின் இறுதிவரை சீனா தனது படை வலிமையை இரகசியமாகவே வைத்திருந்தது. அமெரிக்காவும் இரசியாவும் தங்கள் படைவலிமையை பகிரங்கப்படுத்தி “எங்கிட்டே மோதாதே” என்ற செய்தியை ஒன்றிற்கு ஒன்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சீனா தனது படைவலிமையை இரகசியமாக வைத்திருந்து “என் வலிமை உனக்குத் தெரியாது, எங்கிட்டே வச்சுக்காதே” என்ற அமைதியான செய்தியை வெளிவிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் சீனா தனது “பொதுவுடமை” ஆட்சி எனப்படும் ஆளுமையில் தன்னாட்டு இளையோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது வலிமையை பகிரங்கப்படுத்த தொடங்கியது. சீனாவின் பாரிய நீர்மூழ்கிகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பரிசோதனைகள், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானங்கள் இரகசியமாக மேற்கொள்ள முடியாதவை ஆகும்.

வளர்முக நாடாக இருக்க சீனா விரும்புகின்றது

தொழில்நுட்பம் வர்த்தகம். உள் நாட்டுப் போக்குவரத்து, நகர கட்டுமானம் போன்றவற்றில் பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க சீனா முன்னேறியிருந்தாலும் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகவே முன்னிலைப்படுத்துகின்றது. உலக வங்கியினதும் ஐக்கிய நாடுகளினதும் கட்டளைவிதிகளின் படி சீனா ஒரு வளர்முக நாடாக கருதப்படுகின்றது. சீன அரசும் தன்னை ஒரு வளர்முக நாடாக கருதப்படுவதையும் அடையாளப்படுத்தப்படுவதையும் விரும்புகின்றது. ஆனால் எது வளர்முக நாடு எது வளர்ச்சி அடைந்த நாடு என பகுத்து அறிவதில் ஒரு ஒருமித்த உடன்பாடு இல்லை. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடா என முடிவு செய்வதில் அதன் பொருளாதார உற்பத்தி, தனிநபர் வருமானம், குடிமக்கள் சராசரி வாழும் காலம், கல்வி நிலைமை போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.

உலக வங்கியின் நிலை

உலக வங்கி வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற பாகுபாட்டைப் பயன்படுத்தாமல் 1. உயர் வருமானம். 2. உயர்-நடுத்தர வருமானம். 3. குறை-நடுத்தர வருமானம். 4. குறைந்த வருமானம் என நாடுகளைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது ஜீஎஸ்பி வரிச் சலுகை வழங்குவதில் இதையே பாவிக்கின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை அதன் மக்கள் தொகையால் பிரிக்க வருவதை தனிநபர் வருமானமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உலக வங்கி நாடுகளைத் தரம் பிரிக்கின்றது. அந்த வகையில் சீனாவின் தனிநபர் வருமானம் $10,410 ஆகும். அதனால் சீனா உயர்-நடுத்தர வருமான நாடாக உலக வங்கியால் பார்க்கப்படுகின்றது.

ஐநாவின் மனித மேம்பாட்டு சுட்டி (Human Development Index – HDI)



மனித மேம்பாட்டுச் சுட்டி மக்களின் வருமானம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, பாதுகாப்பு, சூழல் மாசு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. ஐநாவின் கணிப்பின்படி இச்சுட்டிப்பட்டியலில் நோர்வே உச்சத்தில் இருக்கின்றது அமெரிக்கா 17-ம் இடத்தில் இருக்க இலங்கை-72. சீனா-85, இந்தியா-131, பங்களாதேசம்-133, பாக்கிஸ்த்தான்-154 ஆகிய நிலைகளில் இருக்கின்றன.

சமமற்ற வருமானப் பங்கீடு

சீனாவின் பல்வேறு பிரதேசங்களைப் பார்க்கும் போது அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு மோசமாக இருக்கின்றது. சீனாவின் கரையோரமாக அமைந்த கிழக்குப் பிராந்தியம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் உள்ளகப் பிரதேசங்கள் வளர்ச்சி குன்றுதலாக இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தொகையில் 80விழுக்காட்டினர் நகரப்புறங்களில் வாழுகின்றனர். ஆனால் சீனாவி அது 60% மட்டுமே. சீனா தொழில்துறையில் பெரு வளர்ச்சி கண்டாலும் அதன் உற்பத்தித் துறையில் பெரும்பகு கீழ்-முனை உற்பத்தியாக (low-end manufacturing) இருக்கின்றது.

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் பல வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவை ஒரு வளர்முக நாடாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்புரிமை உள்ள நாடுகளை அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகள் என வகைப்படுத்தவில்லை. உறுப்பு நாடுகள் தாமே தமது நிலையை முடிவு செய்து கொள்ளலாம். அதனால் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு நாடு தன்னை வளர்முக நாடாகப் பிரகடனப் படுத்தியமையை மற்ற நாடுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். உலக வர்த்தக் நிறுவனத்தின் விதிகளைப் பின்பற்றுவதில் வளர்முக நாடுகளுக்கு இருக்கும் சலுகைகளை பாவிப்பதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்தியது. 2019 ஜூலையின் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் சீனாவின் வளர்முக நாடு நிலையை இல்லாமற் செய்யும்படி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சீனா தனது நிலையை மாற்ற மறுத்தது. 2020இல் அமெரிக்கா உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற குரலும் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அமெரிக்கா டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சீனாமீது தொடுத்த வர்த்தகப் போர் தனது வர்த்தக விதிமுறைகளுக்கு மாறானது என உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்தது,

2021 செப்டம்பரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியக்கதிரிலிருந்து மின் பிறப்பாக்கும் தகடுகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் முடிவிற்கு எதிராக சீனா கொடுத்த ஆட்சேபனை தொடர்பாக உலக வர்த்தக நிறுவனம் தனது முடிவை வெளியிட்டது. அது சீனாவின் ஆட்சேபனையை நிராகரித்தது.

சீனாவிற்கு எதிரான உ.வ.நி இன் முடிவு

2021 ஒக்டோபர் 20 முதல் 22-ம் திகதி வரை நடந்த உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டத்தில் சீனாவின் கைத்தொழில் கொள்கை சமமான போட்டியை பாதிக்கின்றது என அமெரிக்கா தெரிவித்தது. மற்ற மேற்கு நாடுகள் சீனா தனது சந்தையை மேலும் தாராளமயப்படுதல் செய்ய வேண்டும் என்றன. இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தில் சமநிலை இல்லை என்றது. சமமான போட்டியை உருவாக்குதல், தாராளமான சந்தையை(திறந்த சந்தை) ஏற்படுத்தல், உற்பத்தித் துறைக்கு தேவையற்ற அரச உதவிகளைத் தடுத்தல் போன்றவை உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும். ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தில் உரையாற்றிய சீனப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உ.வ.நி இன் முடிவை கடுமையாக ஆட்சேபித்த சீனா தன்னை தவறாக கையாள்வதாக தெரிவித்தது.

பொய்யர் கூட்டம்

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பன்னாட்டரங்கில் எந்த அளவு பொய்களை சொல்லும் என்பதை ஒவ்வொரு ஈழக் குடிமகனும் நன்கறிவான். சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை மிகைப்படுத்தி பொய் சொல்கின்றது. சினா பொதுவுடமை ஆட்சி என்னும் பெயரில் நடத்தும் அரச முதலாளித்துவ ஆட்சி சிறப்பாக நடக்கின்றது என்பதைக் காட்ட சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை உயர்த்திக் காட்டுகின்றது. அதேவேளைகளில் மற்றநாடுகளின் உழைப்பை சுரண்டுவதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

Wednesday, 20 October 2021

சீனா இரகசியமாக நிர்மாணிக்கும் ஆளில்லா போர்க்கப்பல்

 


சீனாவின் வடகிழக்குப்பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உள்ள தலியன் துறைமுகத்தில் பல கடற்படைக்கலன்களை இரகசியாமகா உற்பத்தி செய்கின்றது. சீனா தன்னுடைய  விமானம் தாங்கிக் கப்பலுக்கும் லயோனிங் எனப் பெயரிட்டுள்ளது. தலியன் துறைமுகத்தில் 2017-ம் ஆண்டு ஒரு பெரிய இறங்குதுறையை சீனா கட்டி முடித்தது. அதிலிந்து அங்கு பல நீமூழ்கிகளையும் போர்க்கப்பல்களையும் செய்மதிகள் மூலம் அவதானிக்கப்படுகின்றன. அங்கு இரண்டு ஆளில்லாத தாக்குதல் போர்க்கப்பல்களை சீனா உருவாக்கி பரிசோதிப்பதாக அமெரிக்காவின் US Navy Institute தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் Xiaopingadao துறைமுகதில் பெருமளவு கடற்படைக் கட்டுமானங்கள் செய்யப்படுகின்றன. அங்கு இடம் போதாமையால் தலியன் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. தலியன் நகரம் சிறந்த நிதித்துறை நிலையமாகவும் அதன் கடற்கரை உல்லாசப்பயணிகளை கவர்வதாகவும் உள்ளன. தலியன் கடற்கரையை உல்லாசப் பயணிகள் பாவிப்பதை தடை செய்துவிட்டு அதை கடற்படைக்கலன் கட்டும் நிலையமாக சீனா மாற்றியுள்ளது. 


சீனா தனது 5Gஅலைக்கற்றை தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளையும் முந்திக் கொண்டு உருவாக்கி 6Gதொழில்நுட்ப உருவாக்கத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. ஆளில்லாமல் இயக்கப்படும் மகிழூர்ந்துகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றில் 5G மற்றும் 6G அலைக்கற்றை தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவையும் இணைத்து பாவிக்கும் போது அவற்றின் செயற்பாடுகள் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் பெரும் சவால்களாக அமையும். ஆளில்லா கப்பல்களை Uncrewed Surface Vessels (USV) என அழைப்பர். அவற்றைப் பரீட்சித்து பார்பதற்கு ஒரு பரந்த கடற்பரப்பு தேவை என்பதால் தலியன் துறைமுகம் உருவாக்கப்பட்டது. 

JARI USV

சீனா உருவாக்கும் ஒரு ஆளிலிக் கப்பலுக்கு JARI எனப் பெயரிடப்பட்டுள்ளது. US Navy Institute இன் கருத்துப்படி JARIஇல் அளவிற்கு அதிகமான படைக்கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. JARIஇன் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டே இரண்டாவது ஆளில்லாக் கப்பல் உருவாக்கப்படுகின்றது. JARI USV 15மீட்டர் நீளமும் 20தொன் எடையும் கொண்டது. படைக்கலன்களாக 30மிமி பீராங்கி, லேசர் வழிகாட்டல் ஏவுகணை வீசிகள், நான்கு கலன்கள் கொண்ட மேல் நோக்கிய வீசும் வசதிகள், தரையில் இருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள், நீருக்கடியில் வீசும் Torpedoes ஆகியவை உள்ளன. அந்த வகையில் JARI USV வான் பாதுகாப்பு, போர்க்கப்பல் அழிப்பு, நீமூழ்கி வேட்டை போன்றவற்றை செய்யக் கூடியவை. 

JARI USVயின் வெற்றீகரமான உற்பத்தியைத் தொடர்ந்து சீனா மேலும் ஒரு ஆளிலிக்கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பத அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளன. ஆனால் அதன் சிறப்புத்தன்மை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் பெரிய நாசகாரிக் கப்பல்களை இலக்கு வைத்து அது உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். தென் கொரியாவின் Sejong the Great அமெரிக்காவின் Arleigh Burk ஆகிய நாசகாரிக் கப்பல்கள் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. 

அமெரிக்க தனது Sea Hunter என்னும் ஆளிலிக் கப்பல்களைப் பிரதி பண்ணியே சீனா தனது ஆளிலிக் கப்பல்களை உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. 


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...