சென்ற நூற்றாண்டின் இறுதிவரை சீனா தனது படை வலிமையை இரகசியமாகவே வைத்திருந்தது. அமெரிக்காவும் இரசியாவும் தங்கள் படைவலிமையை பகிரங்கப்படுத்தி “எங்கிட்டே மோதாதே” என்ற செய்தியை ஒன்றிற்கு ஒன்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சீனா தனது படைவலிமையை இரகசியமாக வைத்திருந்து “என் வலிமை உனக்குத் தெரியாது, எங்கிட்டே வச்சுக்காதே” என்ற அமைதியான செய்தியை வெளிவிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் சீனா தனது “பொதுவுடமை” ஆட்சி எனப்படும் ஆளுமையில் தன்னாட்டு இளையோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது வலிமையை பகிரங்கப்படுத்த தொடங்கியது. சீனாவின் பாரிய நீர்மூழ்கிகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பரிசோதனைகள், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானங்கள் இரகசியமாக மேற்கொள்ள முடியாதவை ஆகும்.
வளர்முக நாடாக இருக்க சீனா விரும்புகின்றது
தொழில்நுட்பம் வர்த்தகம். உள் நாட்டுப் போக்குவரத்து, நகர கட்டுமானம் போன்றவற்றில் பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க சீனா முன்னேறியிருந்தாலும் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகவே முன்னிலைப்படுத்துகின்றது. உலக வங்கியினதும் ஐக்கிய நாடுகளினதும் கட்டளைவிதிகளின் படி சீனா ஒரு வளர்முக நாடாக கருதப்படுகின்றது. சீன அரசும் தன்னை ஒரு வளர்முக நாடாக கருதப்படுவதையும் அடையாளப்படுத்தப்படுவதையும் விரும்புகின்றது. ஆனால் எது வளர்முக நாடு எது வளர்ச்சி அடைந்த நாடு என பகுத்து அறிவதில் ஒரு ஒருமித்த உடன்பாடு இல்லை. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடா என முடிவு செய்வதில் அதன் பொருளாதார உற்பத்தி, தனிநபர் வருமானம், குடிமக்கள் சராசரி வாழும் காலம், கல்வி நிலைமை போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.
உலக வங்கியின் நிலை
உலக வங்கி வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற பாகுபாட்டைப் பயன்படுத்தாமல் 1. உயர் வருமானம். 2. உயர்-நடுத்தர வருமானம். 3. குறை-நடுத்தர வருமானம். 4. குறைந்த வருமானம் என நாடுகளைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது ஜீஎஸ்பி வரிச் சலுகை வழங்குவதில் இதையே பாவிக்கின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை அதன் மக்கள் தொகையால் பிரிக்க வருவதை தனிநபர் வருமானமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உலக வங்கி நாடுகளைத் தரம் பிரிக்கின்றது. அந்த வகையில் சீனாவின் தனிநபர் வருமானம் $10,410 ஆகும். அதனால் சீனா உயர்-நடுத்தர வருமான நாடாக உலக வங்கியால் பார்க்கப்படுகின்றது.
ஐநாவின் மனித மேம்பாட்டு சுட்டி (Human Development Index – HDI)
மனித மேம்பாட்டுச் சுட்டி மக்களின் வருமானம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, பாதுகாப்பு, சூழல் மாசு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. ஐநாவின் கணிப்பின்படி இச்சுட்டிப்பட்டியலில் நோர்வே உச்சத்தில் இருக்கின்றது அமெரிக்கா 17-ம் இடத்தில் இருக்க இலங்கை-72. சீனா-85, இந்தியா-131, பங்களாதேசம்-133, பாக்கிஸ்த்தான்-154 ஆகிய நிலைகளில் இருக்கின்றன.
சமமற்ற வருமானப் பங்கீடு
சீனாவின் பல்வேறு பிரதேசங்களைப் பார்க்கும் போது அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு மோசமாக இருக்கின்றது. சீனாவின் கரையோரமாக அமைந்த கிழக்குப் பிராந்தியம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் உள்ளகப் பிரதேசங்கள் வளர்ச்சி குன்றுதலாக இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தொகையில் 80விழுக்காட்டினர் நகரப்புறங்களில் வாழுகின்றனர். ஆனால் சீனாவி அது 60% மட்டுமே. சீனா தொழில்துறையில் பெரு வளர்ச்சி கண்டாலும் அதன் உற்பத்தித் துறையில் பெரும்பகு கீழ்-முனை உற்பத்தியாக (low-end manufacturing) இருக்கின்றது.
உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)
உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் பல வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவை ஒரு வளர்முக நாடாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்புரிமை உள்ள நாடுகளை அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகள் என வகைப்படுத்தவில்லை. உறுப்பு நாடுகள் தாமே தமது நிலையை முடிவு செய்து கொள்ளலாம். அதனால் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு நாடு தன்னை வளர்முக நாடாகப் பிரகடனப் படுத்தியமையை மற்ற நாடுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். உலக வர்த்தக் நிறுவனத்தின் விதிகளைப் பின்பற்றுவதில் வளர்முக நாடுகளுக்கு இருக்கும் சலுகைகளை பாவிப்பதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்தியது. 2019 ஜூலையின் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் சீனாவின் வளர்முக நாடு நிலையை இல்லாமற் செய்யும்படி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சீனா தனது நிலையை மாற்ற மறுத்தது. 2020இல் அமெரிக்கா உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற குரலும் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அமெரிக்கா டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சீனாமீது தொடுத்த வர்த்தகப் போர் தனது வர்த்தக விதிமுறைகளுக்கு மாறானது என உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்தது,
2021 செப்டம்பரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியக்கதிரிலிருந்து மின் பிறப்பாக்கும் தகடுகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் முடிவிற்கு எதிராக சீனா கொடுத்த ஆட்சேபனை தொடர்பாக உலக வர்த்தக நிறுவனம் தனது முடிவை வெளியிட்டது. அது சீனாவின் ஆட்சேபனையை நிராகரித்தது.
சீனாவிற்கு எதிரான உ.வ.நி இன் முடிவு
2021 ஒக்டோபர் 20 முதல் 22-ம் திகதி வரை நடந்த உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டத்தில் சீனாவின் கைத்தொழில் கொள்கை சமமான போட்டியை பாதிக்கின்றது என அமெரிக்கா தெரிவித்தது. மற்ற மேற்கு நாடுகள் சீனா தனது சந்தையை மேலும் தாராளமயப்படுதல் செய்ய வேண்டும் என்றன. இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தில் சமநிலை இல்லை என்றது. சமமான போட்டியை உருவாக்குதல், தாராளமான சந்தையை(திறந்த சந்தை) ஏற்படுத்தல், உற்பத்தித் துறைக்கு தேவையற்ற அரச உதவிகளைத் தடுத்தல் போன்றவை உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும். ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தில் உரையாற்றிய சீனப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உ.வ.நி இன் முடிவை கடுமையாக ஆட்சேபித்த சீனா தன்னை தவறாக கையாள்வதாக தெரிவித்தது.
பொய்யர் கூட்டம்
அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பன்னாட்டரங்கில் எந்த அளவு பொய்களை சொல்லும் என்பதை ஒவ்வொரு ஈழக் குடிமகனும் நன்கறிவான். சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை மிகைப்படுத்தி பொய் சொல்கின்றது. சினா பொதுவுடமை ஆட்சி என்னும் பெயரில் நடத்தும் அரச முதலாளித்துவ ஆட்சி சிறப்பாக நடக்கின்றது என்பதைக் காட்ட சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை உயர்த்திக் காட்டுகின்றது. அதேவேளைகளில் மற்றநாடுகளின் உழைப்பை சுரண்டுவதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment