Tuesday, 15 March 2016

சிரியாவில் இருந்து வெளியேறும் இரசியப் படைகள்

சிரியாவில் இருக்கும் பிரதான இரசியப்படையினரை அங்கிருந்து வெளியேறும்படி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உத்தரவுட்டுள்ளார்.  2011-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் 2015 செப்டம்பர் மாத இறுதியில் இரசியப் படையினர் சிரியாவில் போய் இறங்கியதால் நிலைமை தலைகீழாக மாறியது. சிரியாவில் ஐ எஸ் அமைப்பின் இஸ்லாமியத் தீவிரவாதத்தை அழிக்க எனச் சென்ற இரசியப் போர் விமானங்கள் அமெரிக்க ஆதரவுப் படைக்குழுக்கள் மீதே அதிக தாக்குதகளைச் செய்தனர் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப் பட்டது. இரசியா துரிதமாக செய்த படை நகர்வுகளும் படையினருக்குச் செய்த ஆதரவு வழங்குதல்களும் பல படைத்துறை நிபுணர்களை வியப்படைய வைத்தன. 

படைத்தளங்கள் தொடரும்
பனிப்போர்க் காலத்தில் இருந்தே சோவியத் ஒன்றியத்துடன் சிரியா சிறந்த உறவைப் பேணி வந்தது. இரசியாவிற்கு வெளியே இருக்கும் அதன் ஒரே ஒரு கடற்படைத் தளம் சிரியாவிலேயே இருக்கின்றது. 2015-ம் ஆண்டு இரசியா சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான லதக்கியாவில் ஒரு விமானப் படைத் தளத்தையும் நிறுவியது. இந்த விமானப் படைத் தளம் மூடப்படமாட்டாது எனவும் தெரிய வந்துள்ளது. இரசியப் படையினரின் ஒரு பகுதி மட்டும் வெளியேறுவதால் எந்த நேரமும் இரசியப் படைகள் திரும்பி வர வாய்ப்புண்டு. படை வெளியேற்றத்திற்கான கால அட்டவணை ஏதும் வெளிவிடப்படவில்லை. இரசியாவின் பல்வேறுதரப்பட்ட 70 போர் விமானங்களும் நான்காயிரம் படையினரும் நிலை கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக் குழுவான Harakat Nour al-Din al-Zenki இரசியப் படையினரின் வெளியேற்றம் தொடர்பாக தனது ஐயத்தை வெளிவிட்டுள்ளது. ஐ எஸ் போராளிகள் தொடர்ந்தும் வலுவான நிலையில் இருப்பதால் இரசியப் படையினர் சிரியா சென்றதன் முதன்மை நோக்கம் ஐ எஸ்ஸை ஒழிப்பதல்ல எனச் சொல்லலாம். சிரியாவில் ஒத்துக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இரசியப் படையினர் பலதடவை மீறினார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

சிரியாவை விட்டுக் கொடுக்கச் செய்யவா?
இரசிய அதிபர் புட்டீன் படை விலக்கல் தொடர்பான தனது முடிவை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திடம் தெரிவித்தார். அதற்கு அசாத்தின் பதில் எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இரசியப் படைகளின் பங்களிப்பிற்கு அசாத் நன்றி தெரிவித்தார் என்பது மட்டுமே வெளிவந்துள்ளது. இரசியப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பு ஜெனிவாவில் சிரியா தொடர்பான பேச்சு வார்த்தையின் மீள் ஆரம்பமாகும் நாளில்  வெளிவந்தது. இவ்   வெளியேற்றம் சிரியப் படைகள் தம்மால் நிலமையைக் கட்டுப்படுத்தக் கூடிய நம்பிக்கையை பெற்று விட்ட நிலையில் நடக்கவில்லை. மாறாக ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் சிரிய அரசதரப்பினரை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன் ஈடுபடுத்தச் செய்யும் நோக்கத்துடன் இரசியப் படையினரின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரியானதாக இருந்தால் புட்டீனின் படை விலக்கல் முடிவு ஒரு அரசுறவியல் திறன்மிகு நகர்வு (diplomatic master stroke) என்றுதான் சொல்ல வேண்டும்.

சிரியாவால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?
சிரியப் படையினர் பல கிளர்ச்சிக் குழுக்களுக்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஈரானியப் படைத்துறை நிபுணர்களும் ஹிஸ்புல்லாப் போராளிகளுமே உதவி செய்து கொண்டிருக்கின்றனர். சிரியப் படையினர் பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே இரசியா தனது விமானப் படையை அங்கு அனுப்பியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தமும் முறிவடைந்தால் போர் மூர்க்கத்தனமாக மீண்டும் நடக்கும் போது சிரியப் படைகள் பின்னடைவைச் சந்தித்தால் மீண்டும் இரசிய விமானப் படைகள் சிரியா சென்று தாக்குதல் நடத்தக் கூடிய வகையிலேயே இரசியா ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

புட்டீனின் எண்ணம் நிறைவேறியதா?
புட்டீன் சிரியாவிற்கு இரசியப் படையினரை அனுப்பியதன் முதல் நோக்கம் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதே.  இரசிய விமானப் படையினதும் ஈரானியப் படை நிபுணர்களினதும் ஹிஸ்புல்லாப் போராளிகளினதும் ஆதரவுடன் சிரியப் படைகள் 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றினர். உயரமான நிலப்பரப்புகளைச் சிரியப் படைகள் கைப்பற்றியதால் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கார்கள் தாழ் நிலத்தில் இருந்து தாக்குதல் நடாத்தி அவற்றைக் கைப்பற்றுவது சிரமம். இரசியாவின் ஆதரவுடன் லதக்கியா, அலெப்பே ஆகிய மாகாணங்களில் சில பிரதேசங்கள் அரச படையினரால் கைப்பற்றப்பட்டன. தலைநகர் டமஸ்கஸைச் சூழ உள்ள பிரதேசங்களில் இருந்த பல ஐ எஸ் போராளிகளின் நிலைகள் அழிக்கப்பட்டன. இரசியா அறிவித்த இலக்கு ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதே. இரசியப் படையினர் அப்பாவிகள் வாழும் பகுதிகளில் குண்டுகள் வீசினர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப் பட்டன. சிரியாவில் போரைத் தீவிரமாக்கி அங்கிருந்து அதிக அளவு மக்களை மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்க்கு தஞ்சக் கோரிக்கைக்கு அனுப்புவது புட்டீனின் கபட நோக்கம் என்றும் கருதப்பட்டது.

விமானத்தை இழந்த இரசியா
ஒரு நாட்டில் விமானத் தாக்குதல்கள் செய்யப்படும் போது ஒலியிலும் வேகமாகச் செல்லக் கூடிய விமானங்கள் எல்லைகளைத் தாண்டி அயல்நாட்டு வான் பிரதேசத்துக்குள் செல்வது நடக்கக் கூடிய ஒன்றே. ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போர் புரியும் போது ஈரான் வான்பரப்புக்குள் அவ்வப் போது அமெரிக்க விமானங்கள் செல்வதற்கான   அனுமதியை ஈரானிடமிருந்து இரகசியமாக அமெரிக்கா பெற்றிருந்தது. சிரியாவில் படை நடவடிக்கையில் ஈடுபட்ட இரசிய விமானங்கள் இஸ்ரேல் வான்பரப்பினுள்ளும் துருக்கி வான் பரப்பினுள்ளும் பறந்தன. இஸ்ரேலியப்  படையினர் இரசிய விமானத்துடன் தொடர்புகொண்டு எல்லை தாண்டியதை அறிவிக்க இரசிய விமானம் விலகிச் செல்லும். இது ஓர் எழுதாத உடன்பாடாகியது. ஆனால் துருக்கி இரசிய விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியது.

பொருளாதாரப் பிரச்சனை காரணமா?
இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனை அதன் படைகள் வெளிநாடு ஒன்றில் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இல்ல்லை. சிரியாவிற்குப் பெருமவவு இரசியப் படையினரை அனுப்பி அங்கு எல்லாக் கிளர்ச்சிக்காரர்களையும் அழித்து அசாத்தின் ஆட்சியை  நாடு முழுக்க நிறும் நிலையில் இரசியா இல்லை என்பதை சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

புட்டீனுக்கு இரண்டு வெற்றிகள்
சிரியாவிற்குப் படை அனுப்பியதன் மூலம் இரசியா இன்னும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் இருக்கின்றது என்ற செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. சிரியாவில் வேதியியல்(இரசாயன) படைக்கலன்கள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும்; உடனே அமெரிக்கா படை நடவடிக்கைகளில் இறங்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்திருந்தார். அப்படி ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளாமல் புட்டீன் தடுத்து விட்டார். இதுவரை காலமும் சிரியாவில் ஒரு கடற்படை வசதியகத்தை மட்டும் வைத்திருந்த இரசியா தற்போது ஒரு விமானப் படைத் தளத்தையும் அங்கு அமைத்துள்ளது.அத்துடன் இரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை முறைமையான எஸ்-400 சிரியாவில் தொடர்ந்தும் இருக்கும்.

Monday, 14 March 2016

சீன விரிவாக்கத்தை அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையம் தடுக்குமா?

ஒரு புறம் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வடகொரியாவிற்கு எதிராகக் கடும் பொருளாதாரத் தடை கொண்டு வரும் தீரமானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற மறுபுறம் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஜோன் சீ ஸ்ரென்னிஸ், இரு நாசகாரிக் கப்பல்கள், இரு ஏவுகணை தாங்கிக் கப்பல்கள் ஆகியவை உட்பட ஒரு கட்டளைக் கப்பலையும் தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இவை ஏற்கனவே தென் சீனக் கடலில் உள்ள அண்டீரம் பே, மொபைல் பே ஆகிய ஏவுகணை தாங்கிக் கப்பல்களுடனும், சுங் ஹுன், ஸ்ரொக்டேல் ஆகிய நாசகாரிக் கப்பல்களுடனும், ஏழாவது கடற்படைப்பிரிவின் மிதக்கும் தலைமையகக் கப்பலுடனும் இணைந்து கொண்டன. இதே வேளை அமெரிக்காவின் படையின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிசன் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறை உப குழுவின் முன்னர் பேசும் போது கிழக்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்க முனைகின்றது என்றார்.

கியூப ஏவுகணை நெருக்கடி போல் ஒரு நெருக்கடி
தென் சீனக் கடலில் நடக்கும் நகர்வுகளைப் பார்க்கும் போது 1962-ம் ஆண்டு இரசியாவும் அமெரிக்காவும் கியூபா ஏவுகணைகள் நெருக்கடியின் போது ஒரு அணுப்படைக்கலப் போரின் விளிம்புவரை சென்றது போல அமெரிக்காவும் சீனாவும் ஒரு போர் மூளும் ஆபத்தை உருவாக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் போல் இருக்கின்றது. சோவியத் ஒன்றியம் விட்ட தவறைத் தான் விடக்கூடாது என்பதில் சீனா இதுவரை கவனமாக இருந்தது. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் எந்த ஒரு போரும் தொடுக்காத நாடாக கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருக்கின்றது. இதனால் சீனா தனது பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றியது. ஆனால் எந்த வித களமுனை அனுபவமும் இல்லாத படையினரைக் கொண்ட ஒரு வல்லரசாக இருக்கின்றது.

21-ம் நூற்றாண்டு ஆசியாவினுடையது.
ஆசியாவில் உள்ள பல நாடுகள் 21-ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதார உற்பத்திக்குப் பெரும் பங்கு ஆற்றப் போகின்றன. அமெரிக்காவிற்கு 21-ம் நூற்றாண்டில்  ஆசியா ஒரு பொருளாதார வாய்ப்பு மிகுந்ததும்  அதே வேளை படைத்துறைச் சவால் மிக்க ஒரு பிராந்தியமாகவும் இருக்கப் போகின்றது.  இதற்கு முக்கிய காரணம் சீனாவின் வளர்ச்சியில் ஐக்கிய அமெரிக்கா தனது வர்த்தக மேம்பாட்டையும் பிராந்திய ஆதிக்கச் சவால்களையும் படைத்துறை அச்சுறுத்தல்களையும் காண்கின்றது. சீனாவுடனான வர்த்தகப் பங்காண்மையை அமெரிக்கா எப்போதும் விரும்புகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் படைவலுப் பெருக்கமும் ஆசியப்பிராந்தியத்தில் அமெரிக்காவை ஓரம் கட்டிவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.  2000-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வரைந்த இணை நோக்கு-2020 என்னும் திட்டத்தில் சீனாவின் எழுச்சியும் அதன் மூலம் உருவாகவிருக்கும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் விபரிக்கப் பட்டிருந்தது. முக்கியமாக அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைத் தக்க வைக்க அமெரிக்கப் படையினரின் முழுக்கவனமும் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவை நோக்கி நகர்த்தப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2008-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசியாவின் முக்கியத்துவத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அவரது  முதலாம பதவிக்காலத்தில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஹிலரி அதிகப் பயணங்களை ஆசிய நாடுகளுக்கே மேற்கொண்டிருந்தார்.  ஆசியான் நாடுகளும் அமெரிக்காவும் 2016 பெப்ரவரி மாதம் கலிபோர்ணியோவில் ஒழுங்கு செய்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அமெரிக்காவின் மகுடம்
2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 21-ம் நூற்றாண்டிற்கான ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தை அறிவித்த போது அது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மகுடமாகத் திகழ்கின்ற போது எனக் கருதப்பட்டது. பின்னர் ஒஸ்ரேலியப் பாராளமன்றத்தில் உரையாற்றும் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசியச் சுழற்ச்சி மையத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் ஒரு வல்லரசாகத் தொடர்ந்து இருக்கும் எனச் சூழுரைத்தும் இருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஒஸ்ரேலியாவில் தளம் அமைத்தன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரை வலுவுடன் நிலை கொள்ளச் செய்வது தனது உச்சத் தெரிவு எனவும் அமெரிக்கா கருத்து வெளிவிட்டது.

உலகெங்கும் அமெரிக்கப் படையினர்

உலகெங்கும் 150 நாடுகளில் ஐக்கிய அமெரிக்கப் படையினர் 150,0000 பேர் தளங்கள் அமைத்துத் தங்கியுள்ளனர். ஜப்பானில் 52,000படையினரும், தென் கொரியாவில் 25,000படையினரும் உட்பட கிழக்கு ஆசியாவில் 78,000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.  இத்துடன் அமெரிக்கா வியட்னாமுடனும் பிலிப்பைன்ஸுடனும் தனது படைத்துறை ஒத்துழைப்பை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. உலகிலேயே அமெரிக்காவை அதிக அளவு நம்பும் மக்களாக தென் கொரியர்களும், பிலிப்பைன்ஸியரும் வியட்னாமியரும் இருக்கின்றார்கள்

படைவலுவை அதிகரிக்கும் ஒஸ்ரேலியா
சீனாவுடன் தன் வர்த்தகத்தில் பெரும்பகுதியைச் செய்யும் ஒஸ்ரேலீயா சீனா விரிவாக்கம் தனக்கு அச்சுறுத்தல் எனக் கருதி  தனது படைவலுவை அதிகரிக்கவிருக்கின்றது. 2016 பெப்ரவரி மாத இறுதியில் ஒஸ்ரேலிய அரசு தயாரித்த பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் தனது பாதுகாப்புச் செலவை அடுத்த பத்து ஆண்டுகளில் 42பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஒஸ்ரேலியப் பாதுகப்புச் செலவு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் இரண்டு விழுக்காடாக அதிகர்ப்பதாகவும் அவ்வறிக்கை ட்தெரிவிக்கின்றது. புதிய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கவசவாகனங்கள் போன்றவற்றையும் ஒஸ்ரேலியா வாங்கவிருக்கின்றது. சீன விரிவாக்க அச்சுறுத்தல் ஒரு படைக்கலப் போட்டியை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது. அதில் இலாபமடையப் போகின்றவர்கள் அமெரிக்காவின் படைக்கல விற்பனையாளர்களே.

சீனாவின் அயலுறவுகள்
வட கொரியா, இரசியா, மொங்கோலிய, கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, நேப்பாளம், பூட்டான். மியன்மார், லாவோஸ், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் சீனா எல்லைகளைக் கொண்டுள்ளது. சீனாவுடன் இந்தியா நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனையைக் கொண்டுள்ளது.  இதனால் 1962-ம் ஆண்டு இரு நாடுகளும் போர் புரிந்து கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று துண்டுகளாக 4057கிலோ மீட்டர் நீளமான எல்லை உண்டு. முதலாவது துண்டு இந்தியாவின் ஜம்மு கஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டி உள்ளது. இரண்டாவட்து துண்டு சீக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ளது. மூன்றாவது துண்டு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி உள்ளது. சீனாவிற்கும் ஜப்பானிற்கும் நேரடி எல்லைகள் இல்லாத போதும் சீனாவும் ஜப்பானும் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகளின் உடைமை தொடர்பாக கடுமையான முரண்பாடுகின்றன. இதனால் ஜப்பான் அமெரிக்காவுடனான தனது படைத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

சீனாவும் இரசியாவும்
போல்ரிக் கடலின் கிழக்குக் கரை ஓரத்தில் ஒரு சிறிய ஐரோப்பிய நாடாக இருந்த இரசியா 1581-ம் ஆண்டில் இருந்து கிழக்கு நோக்கிய தவது விரிவாக்கத்தை ஆரம்பித்தது. சைபிரியாவைக் கைப்பற்றிய இரசியா 1894-ம் ஆண்டும் 1895- ஆண்டும் நடந்த சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான போரைப் பயன்படுத்தி மத்திய ஆசியாவைத் தனதாக்கிக் கொண்டது. பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த அபின் போரின் போது இரசியா சீனாவுடன் செய்த ஐகன் உடன்படிக்கியின் படி ஸ்ரனொவோய் மலைகளுக்கும் அமூர் நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை சீனா இரசியாவிற்கு விட்டுக் கொடுக்க்க வேண்டியதாயிற்கு. தற்போது இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 4,380 கிலோ மீட்டர் நீள எல்லை உண்டு. மத்திய ஆசியாவில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஆதிக்கப் போட்டியுண்டு. சீனாவின் தரைவழிப்பட்டுப் பாதைக்கு மத்திய ஆசியா முக்கியமானதாகும். சீனாவின் எல்லைப் புறம் வரை இரசியா தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு காத்திரமான படைத்துறைக் கூட்டணியை சீனாவாலும் இரசியாவாலும் இதுவரை உருவாக்க முடியவில்லை.

சீன விரிவாக்கம்
சீன பொருளாதார அபிவிருத்தி என்பதும் சீனாவின் விரிவாக்கம் என்பதும் கைக்கோர்த்துக் கொண்டு செல்ல வேண்டியன, செல்லக் கூடியன. சீனா தனது விரிவாக்கத்தை முன்னெடுக்க ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கியை ஆரம்பித்தது. இதில் அமெரிக்காவின் மரபு நண்பர்களான பிரித்தானியா போன்ற நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்தன. இந்த வங்கியின் உருவாக்கத்தை தடுக்க அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது. உலகிலேயே உள்ளகக் கட்டுமான மன்னர்களாக சீனர்கள் இருக்கின்றார்கள். குறைந்த செலவில் பெருந்தெருக்கள், தொடருந்துப் பாதைகள், அதிவிரைவு தொடருந்து வண்டிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் சீனர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே தன் நாட்டின் உள்ளகக் கட்டுமானத்தை அபிவிருத்தி செய்யத் தேடிச் சென்ற இடம் சீனா. ஆசிய நாடுகள் பலவற்றில் உள்கட்டுமானத்தின் தேவை அதிகமாக இருக்கின்றது. இதில் சீனாவை அமெரிக்காவால் வெல்ல முடியாது. அமெரிக்கா அதிக அக்கறை காட்டாத பிரதேசமாக மத்திய ஆசியா இருக்கின்றது. அங்கு சீனாவிற்கு சவால் விட இரசியா இருக்கின்றது.

ஆதிக்கம்-ஆசியச்சுழற்ச்சி-TPP
அமெரிக்காவின் உலக ஆதிக்ககத்தின் ஒரு பகுதிதான் ஆசியச் சுழற்ச்சி மையம். ஆசியச்  சுழற்ச்சி மையத்தின் பொருளாதாரக் கரம்தான் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans Pacific Partnership - TPP) . உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization - WTO) சீனாவும் இந்தியாவும் பிரேசிலும் இணைந்த பின்னர் அதில் அமெரிக்க ஆதிக்கம் சுருங்கத் தொடங்கியது. அமெரிக்கா விரும்பிய படி உலக வர்த்தக உடன்படிக்கைகள் செய்ய முடியாமல் போனதால் அமெரிக்கா பிராந்திய ரீதியில் பொருளாதார  அமைப்புக்களை அமைத்து தனக்கு ஏற்றமாதிரி வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய எடுத்த முயற்ச்சிகளின் வெற்றியே பசுபிக் தாண்டிய பங்காண்மை, சேவைகளில் வர்த்தக உடன்படிக்கை (Trade in Services Agreement -TiSA) போன்ற ஒப்பந்தங்கள். இந்த இரண்டு உடன்படிக்கைகளின் மூலமும் அமெரிக்கா உலக மொத்தத் தேசிய உற்பத்தியில் 52 விழுக்காடு உற்பத்தி செய்யும் நாடுகளின் சந்தைகளை தனதாக்கிக் கொண்டது. ஆசிய நாடுகளில் சீனாவை ஓரம் கட்டி தனது  வர்த்தகத்தைப்  பெருக்கும் நோக்குடனே பசுபிக் தாண்டிய பங்காண்மை உடன்படிக்கை ஒஸ்ரேலியா, புருணே, தருசலம், கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது அரச நிலை பற்றிய அறிக்கையில் அதிபர் பராக் ஒபாமா பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றிக் குறிப்பிடும் போது ஆசியாவில் விதிகளை சீனா எழுதுவதில்லை, நாம் எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

சீனாவை அடக்குவதா வீழ்த்துவதா
மேற்கு நாடுகளுக்கு சவலாக இருந்த சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது அல்லது வீழ்த்தப் பட்டது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த நாடுகளுடனும் அதன் ஆதிக்க வலயத்தில் இருந்த நாடுகளுடனும் மேற்கு நாடுகள் தமது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டன. ஆனால் சீனாவை மேற்கு நாடுகளால் விழுத்தவும் முடியாது என்பதையும்  விழுத்தவும் கூடாது என்பதையும் மேற்கு நாடுகள் நன்கறியும். சீனா வீழ்ச்சியடைந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீனா பொருளாதார ரீதியாக வலுவிழந்தும் படைத் துறை ரீதியாக மேலும் வலுப்பெறாமல் செய்வதே ஆசியச் சுழற்ச்சி மையத்தின் நோக்கமாகும்.  நோக்கமாகும்.

Monday, 7 March 2016

அமெரிக்காவின் B-21 போர் விமானமும் வான்படைப் போட்டியும்


ஐக்கிய அமெரிக்காவின் விமானாப் படையின் தொலை தூரத் தாக்குதல் விமானமான B-21இன் ஓவியம் முதல் முதலாக புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் 2016-02-26-ம் திகதி நடந்த Air Force Association Air Warfare Symposiumஇல் வெளியிடப் பட்டுள்ளது. B-21 போர் விமானம் அமெரிக்காவில் இருந்து கொண்டே உலகின் எந்தப் பாகத்திலும் தாக்குதல் செய்யக் கூடியது. இந்தவிமானத்தை Long Range Strike Bomber என வகைப் படுத்தப்பட்டுள்ளது. .ஐந்தாம் தலைமுறை விமானங்கள் சிறந்த ரடார்தவிர்ப்பு தொழில்நுட்பத்தையும் உன்னத கணனித் தொடர்பாடல்களையும் இயக்கத்தையும் துல்லியமாகக் குண்டுகளை வீசும் திறனும் கொண்டவை. B-2 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமே B-21. B-2இலும் பார்க்க B-1 அதிக உயரத்தில் பறக்கக்கூடியது. B-21 எதிரி தன்னை இனங்காணுவதை முற்றாகத் தடுக்கக் கூடியது.

பரம இரகசியத் திட்டம்
B-21 விமான உற்பத்தி 2015-ம் ஆண்டு Northrop Grumman நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் வலுவை உலகமயப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஐம்பது ஆண்டுக்கான கேந்திரோபாய முதலீடாகவும் B-21 நீள் தூரத் தாக்குதல் குண்டுவீச்சு விமானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர்.  B-21இன் பின்புறம் W வடிவத்திலும் இறக்கைகள் 33 பாகைகள் சரிவானதாகவும் இருக்கும். Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மை, , சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை  உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. Lockheed Martin  132000 தொழிலாளர்களுடன் ஆண்டு தோறும் $35.7 billion விற்பனையும் $2.9 billion இலாபமும் கொண்ட முதற்தர படைக்கல உற்பத்தி நிறுவனமாகும். இரண்டாம் இடத்தில் Boeing நிறுவனமும், மூன்றாம் இடத்தில் Northrop Grumann நிறுவனமும் இருக்கின்றன

உற்பத்தியில் போட்டியோ போட்டி
B-21 உற்பத்தியில் Boeing, Lockheed Martin Corp ஆகிய நிறுவனங்களும் அக்கறை காட்டின. உற்பத்தி Northrop Grumman நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்ட பின்னர் Boeing, Lockheed Martin Corp ஆகிய நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்து வழக்குத் தொடர்ந்ததால் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. அமெரிக்காவில் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் தனியார் துறையிடம் ஒப்படைக்கும் போது பல பிரச்சனைகள் எழுப்பப்பட்டு கட்சி அரசியல் போட்டிகளும் எழுவதுண்டு. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறைச் சேவைக் குழுவின் தலைவர் ஜோன்  மக்கெயின் cost-plus contract அடிப்படையில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு தனது எதிர்ப்பைக் காட்டப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

வான் படைக்கு வேறு கடற்படைக்கு வேறு

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அமெரிக்கக் கடற்படையாலும் விமானப் படையாலும் பொதுவாகப் பாவிக்கக் கூடிய விமானங்களை உருவாக்கும் திட்டம் F-35 போர் விமானங்கள் பல பின்னடைவுகளையும் செலவு அதிகரிப்பையும் எதிர் கொண்டது.  சுதந்திர பாதுகாப்பு விஞ்னானச் சபை இது தொடர்ப்பாக ஆய்வு செய்து இருதுறையினரினதும் தேவைகளும் சேவை முன்னுரிமைகளும் வித்தியாசமாக இருப்பதால் தனித்தனியாக உற்பத்தி செய்வது செலவுச் சேமிப்பைச் செய்யும் எனத் தெரிவித்தது.ஆனால் பொது வான  engine பொதுவான avionics architecture, பொதுவானா படைக்கலன்கள் weapons பொதுவான உற்பத்தித் தொடர் ஆகியவை இருப்பதை அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது. தற்போது விமானப் படையினருக்கு என்றும் கடற்படையினருக்கு என்றும் தனித்தனியாக விமானங்களை அமெரிக்கா உற்பத்தி செய்கின்றது. அத்துடன் பசுபிக் பெருங்கடலில் செய்ற்படக் கூடிய வகையிலும் விமானங்கள் வடிவமைக்கப் படுகின்றன. இது சீனாவால் அங்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கக் கூடிய வகையில் இருக்கும்.
80 பில்லியன் டொலர் திட்டம் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் வான் படையில் முக்கிய பங்கு வகித்த B-52 போர் விமானங்களுக்கு இனி "ஓய்வு" கொடுக்கப்படும். B-21இன் பொறியியல் மற்றும் அபிவிருத்தி செலவு 21.4மில்லியன் டொலர்களாகும். ஒரு B-21 விமானத்தின் உற்பத்திச் செலவு 550மில்லியன் டொலர்களாகும். 100 விமானங்கள் உற்பத்தி செய்யப் படலாம். மொத்தத் திட்டச் செலவு 80பில்லிய்யன் டொலர்களாகும்.

Air Force Global Strike Command (AFGSC)
ஐக்கிய அமெரிக்காவின் Air Force Global Strike Command (AFGSC) என்னும் உலகெங்கும் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை நெறிப்படுத்தும் கட்டளைப்ப் பணியகமாகும். உலகெங்கும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு தாக்குதல் செய்யக் கூடிய ஒரு விமானம் தேவையை B-21 தொலைதூரத் தாக்குதல் விமானம் நிறைவு செய்கின்றது. தேவை ஏற்படும்போது அணுக்குண்டுகளையும் B-21 தாங்கிச் செல்லும். ஒருவிமானத்தில் செய்மதி வழிகாட்டலில் இயங்கக் கூடிய 80 joint direct attack munition என்னும் ஏவுகணைகளை பொருத்த முடியும். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் செலவு மிக்கவை. இரசியாவின் SU-35 போர் விமானங்களுக்குப் போதிய சவாலை அமெரிக்காவின் F-35 விமானங்களால் விட முடியாது. SU-35  வான் சண்டையில் ஈடுபடுவதற்கு உருவாக்கப் பட்டவை. F-35 குண்டு வீச்சுக்கும் வான் பாதுகாப்பிற்கும் என உருவாக்கப் பட்டவை. வானத்தில் விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் செய்வதை நாய்ச் சண்டை என அழைப்பர். புதிய வரிசை SU-35 போர் விமானங்கள்ள் 2015-ம் ஆண்டு பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப் பட்ட போதும் எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சனைகளால் அவை 2018-ம் ஆண்டே பாவனைக்கு வரும். இரசியாவின் முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாக PAK FA இந்தியாவுடன் இணைந்து உருவாக்கப்படவிருக்கின்றது. இந்த உற்பத்தியும் இயந்திரச் செயற்பாடு, ஸ்ரெல்த் தொழில்நுட்பம் போன்றவற்றில் பல பிரச்சனனகளை எதிர் கொள்கின்றது. இந்திய விமானப் படையில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த PAK FA இல் 144 விமானங்கள் 2022-ம் ஆண்டு இணைக்கப்படலாம். 2018-ம் ஆண்டு சீனா தனது J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது. அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான லொக்ஹீட் மார்டினின் கணனித் தொகுதிகளில் இருந்து பல தொழில்நுட்பத் தகவல்கள் திருடப்பட்டன. இதற்கும் சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமான உற்பத்திக்கும் தொடர்புகள் உண்டா எனற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றன.

பார படைக்கலன் தாங்கும் இரகசிய விமானம் - Heavy-payload Stealth aircraft
B-21 ஒரு Heavy-payload Stealth aircraft ஆகும். இது பாரமான குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. நாற்பதினாயிரம் இறாத்தல்களுக்கு அதிகமான எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் எதிரியின் கதுவிகளால்(ரடார்களால்) இனம் காணப்பட முடியாதவை. Northrop Grumman நிறுவனத்தின் புதிதாகக் கண்டுபிடித்துள்ள Stealth பூச்சை மனிதப் பொறிகள் மூலம் B-21இற்குப் பூசப்படும். இந்தப் பூச்சு   alternate high-frequency material (AHFM) என அழைக்கப் படுகின்றது.

B-21 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும்
ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும். B-21  ஆளில்லாமலும் விமானியுடனும் பறக்கக் கூடியவையாக அமையலாம். இரசியாவின் T-50, அமெரிக்காவின் F-22, சீனாவின்  J-20 ஆகியவை உலகின் முன்னணி ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களாகும்.

The cargo-bomber airplane concept
2016-02-புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் நடந்த Air Force Association Air Warfare Symposiumஇல் இன்னும் ஒரு விமானம் பற்றிய ஓவியமும் வெள்விடப்பட்டது. The cargo-bomber airplane concept எனப்படும் இத்திட்டத்தில் பாரிய சரக்கு விமானத்தையும் குண்டு வீச்சு விமானத்தையும் இணைக்கும் எண்ணம் முன் வைக்கப் பட்டுள்ளது. அப்படி உருவாக்கும் விமானத்தில் பெருமளவு குண்டுகளைத் தாங்கிச் சென்று எதிரி இலக்குகளில் வீச முடியும். இந்த விமானம் பற்றிய மேலதிகத் தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

Monday, 22 February 2016

திருச்சபைகளும் இரண்டாம் பனிப்போரும்



1979-ம் ஆண்டு சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. அங்கு சோவியத் ஒன்றியப் படையினருக்கு எதிராகப் போராட ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகியவை இணைந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தனர். சோவியத்தின் படைத்துறைச் செலவு ஒரு புறம் அதிகரிக்க வைக்கப்பட்டது. மறுபுறம் அதன் எரிபொருள் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா எரிபொருள் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரித்தது. புதிதாக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்திச் செலவிலும் குறைந்த விலை உலகச் சந்தையில் எரிபொருள் விற்கப்படும் போது அந்தப் புதிய உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா அப்போது தெரிவித்தது. ஆனால் ஆப்கானிஸ்த்தான் போரும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் சோவியத் ஒன்றியத்தை 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைய வைத்தது.

அப்பன் காட்டிய வழி
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊடகம் ஒன்றில் வெளி-ஆசிரியத் தலையங்கம் எழுதிய றோனால்ட் றீகனின் மகன் மைக்கேல் றீகன் தனது தந்தை எப்படி சவுதி அரேபியாவை உலகச் சந்தையில் எரிபொருளைக் கொட்டிக் குவிக்கும் படி சொன்னார் என்பதை அம்பலப் படுத்தினார். இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் வருமானத்தைச் சிதைத்து அதன் நாணயமான ரூபிளை வீழ்ச்சியடையச் செய்வதுமாகும். மைக்கேல் றீகன் தனது கட்டுரையில் அப்போது சோவியத் ஒன்றியத்திடம் இருந்த உலகில் விற்கக் கூடிய ஒரே பொருள் எரிபொருள் மட்டுமே எனத் தெரிவித்ததுடன் பராக் ஒபாமா தனது தந்தையின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் மைக்கேல் அந்த ஆலோசனையைச் சொல்ல முன்னரே ஒபாமா அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்.

செயல் மீளியக்கம் - Action Replay
தற்போது1980களில் நடந்தவையின் செயல் மீளியக்கம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் விலை கண்டபடி வீழ்ச்சியடைகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியப் படைகள் இரகசியமாக நிலைகொண்டிருக்கின்றன. அது இரசியாவிற்கு ஒரு செலவு. அது போதாது என்று சிரியாவில் இரசியப் படை நிபுணர்களும் சிறுபடைப்பிரிவும் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் 20,000போர்த்தாங்கிகள், 2,450 போர் விமானங்கள், 460 உழங்கு வானூர்திகள், சகிதம் சவுதி அரேபியா தலைமையில் துருக்கி உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 350,000 படையினர் சிரியா மீது படையெடுக்கத் தயாராகி உள்ளனர். சிரியாவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டுமாயின் இரசியா தனது பல படைப் பிரிவுகளை சிரியாவிற்கு அனுப்ப வேண்டியிருக்கும். இரசியா கடல்வழியாக சிரியாவிற்குப் படையினரை அனுப்புவதற்கு தனது வோல்கா நதியில் ஆரம்பித்து கருங் கடலூடாகவும் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள துருக்கி நீரிணையூடாகவும் ஏகன் கடலூடாகவும் சென்று மத்தியதரைக் கடலை அடையவேண்டும். துருக்கியால் இரசியாவை இலகுவாக துருக்கி நீரிணையில் வைத்து இரசியக் கடற்போக்கு வரத்தைத் தடுக்க இயலும். இரண்டாம் உலகப் போரின் போதும் துருக்கி அப்படிச் செய்தது.

இரசியாவின் மேற்கு கறுக்கின்றது
அமெரிக்கப் பாரளமன்றத்திற்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடிய வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜூன் 16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில் சேர்த்துக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.

இரண்டாம் பனிப்போர்
2016 பெப்ரவரி 12-ம் திகதி ஆரம்பமான மூன்று நாள் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இரசியத் தலைமை அமைச்சர் டிமிட்ரி மெட்வெடேவ் தற்போது இரசியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை புதிய பனிப்போர் என விபரிக்கலாம் என்றார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைவலுவை அதிகரிப்பதன் மூலம் ஐரோப்பாவின் உறுதிப்பாட்டை அமெரிக்கா குலைக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் நேட்டோப் படையினரும் செய்யும் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதி  ஜெனரல் பிலிப் பிரீட்லவ் அப்படி ஒரு பனிப்போர் இல்லை என்றார். ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி இரசியப் படைகள் சட்டபூர்வமான அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

கருங்கடலில் நெருங்கும் எதிரிகள்
கிறிமியாவை 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடன் இணைத்த இரசியா மிகவும் துரிதமாக அங்கு தனது போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் குவித்தது. அத்துடன் கருங்கடலில் தனது கடற்படை வலுவையும் பெருக்கியது. எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகளின் வான்பரப்பை நேட்டோப் படைகள் 24 மணித்தியாலமும் கண்காணிப்பது போல் கருங்கடலையும் கண்காணிக்கும் திட்டத்தை நேட்டோப் படையினர் செயற்படுத்தலாம். இதுவரை கருங்கடலை ஒட்டி துருக்கியில் ஒரு நேட்டோ கடற்படைத் தளம் அமைப்பதை அனுமதிக்காத துருக்கி இனி ஒரு கடற்படைத்தளம் அமைக்க ஒத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நேட்டோவின் பிரச்சனை
விளடிமீர் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பையிட்டு கவலையடைந்தன. உக்ரேனில் இரசியா செய்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் பல ஐரோப்பிய நாடுகள் அச்சமடையவும் தொடங்கின. போதாக் குறைக்கு இரசிய அரசுறவியலாளர்கள் அடிக்கடி அணுப் படைக்கலப் போர் என்றும் மிரட்டிக் கொண்டுருக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் அணுப்படைகலன்கள் பழமையானவை. அதன் செயற்திறன்களையிட்டு ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கரிசனை கொண்டுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பவில் உள்ள அணுப் படைக்கலன்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் டொலர்களை செலவழிக்க எண்ணியுள்ளது.

இரு திருச்சபைகளின் தலைகளின் சந்திப்பு
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13-ம் திகதி சனிக்கிழமை கியூபாத் தலைநகர் ஹவானாவில் இரசிய மரபுவழித் திருச்சபையின் உயர் போதகர் பட்ரியாக் கிரில்லும் கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களும் சந்தித்து உரையாடியதுடன் இருவரும் இணைந்து ஒரு பிரகடனத்திலும் கைச்சாத்திட்டனர். இருவரினதும் சந்திப்பில் ஐரோப்பிய ஒருமைப்பாட்டுக்கும் கிருத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவர்கள் கைச்சாத்திட்ட பிரகடனத்தில் நாம் உடன்பிறப்புக்கள் பகைவர்கள் அல்லர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புட்டீனின் உதவியாளராகக் கடவுள்
ஐ எஸ் அமைப்பின் வளர்ச்சி வெற்றியில் முடிந்தால் வட ஆபிரிக்கா, மேற்காசியா, மத்திய ஆசியா ஆகிய பெரு நிலப்பரப்பு இஸ்லாமிய அரசாக உருவெடுக்கும். இதில் அணுப்படைக்கலனகளைக் கொண்ட பாக்கிஸ்த்தானும் அடக்கம். அதனால் ஒரு பெரு வல்லரசாக உருவெடுக்கலாம். இதையிட்டி திருச்சபைகள் கரிசனை கொண்டுள்ளன போல் தெரிகின்றது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கிறிஸ்த்தவம் இணைத்து வைத்திருக்கின்றது என்பது உண்மையாகும். அதுதான் நேட்டோக் கூட்டமைப்பு. கடந்த இருபது ஆண்டுகளாக இரசியா தம்முடன் இணையும் என எதிர்பார்த்திருந்த இந்தக் கூட்டமைப்பு உக்ரேன் விவகாரத்துடன் அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. இப்போது வேறு விதமாக அணுகப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை, எரிபொருள் விலை திட்டமிட்டு விழச்செய்தமை, இரசியாவை சிரியாவில் ஒரு போரில் மாட்ட வைத்தமை ஆகியன புட்டீனின் செல்வாக்கை அடுத்த சில ஆண்டுகளில் தவிடு பொடியாக்கும் நோக்கதிலேயே செய்யப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தை ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்க வைக்காமல் 11 ஆண்டுகளில் சிதைத்தது போல புட்டீனின் பிடியில் இருந்து இரசியாவை மீட்டெடுக்கும் போது ஏற்படும் அதிகார இடைவெளியால் இரசியாவில் பெரும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க இரசிய மரபுவழித் திருச்சபையின் தலையீடு அவசியம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவில் மரபுவழித் திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஈரானிற்கு எதிரான் பொருளாதாரத் தடை கொண்டுவந்த போது அதை ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்யாமல் இருக்க இரசியத் திருச்சபை உதவியாக இருந்தது. இரசியாவில் திருச்சபைக்கும் புட்டீனிற்கும் இடையில் நல்லுறவு இருந்தாலும் திருச்சபையை புட்டீன் தனக்கு அடங்கி நடக்கும் ஒன்றாகவே வைத்திருக்கின்றார். ஒரு அமெரிக்க ஊடகம் இஸ்லாமிய நாடுகளில் கடவுளே அரசர்; சீனாவிலும் ஜப்பானிலும் அரசரே கடவுள்; இரசியாவில் கடவுள் புட்டீனின் உதவியாளர் என நகைச்சுவையாக புட்டீனிற்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை விபரித்தது. புட்டீனுடன் திருச்சபை ஒத்துழைத்தாலும் அவர் தம்மீது காட்டும் மேலாண்மையை திருச்சபை விரும்பும் எனச் சொல்ல முடியாது.

உலகத்தை ஒரே ஒழுங்கில் கொண்டு வருதல் என்னும் போர்வையில் அமெரிக்க ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் உலகத்தைக் கொண்டு வர திருச்சபைகளின் கியூபச் சந்திப்பு வழிவகுக்குமா?

Friday, 19 February 2016

பகடைக் காய்களாக இருக்கும் குர்திஷ் மக்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்




சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் போரில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக காத்திரமான தாக்குதல் செய்யக் கூடியவர்களாகவும் கணிசமான வெற்றியை ஈட்டியவர்களாகவும் குர்திஷ் போராளி அமைபினரே இருக்கின்றனர். ஐ எஸ் அமைப்பினர் இரண்டு வகைகளில் குர்திஷ் போராளிகளுக்கு அஞ்சுகின்றனர். ஒன்று அவர்கள் தீரமிக்க போராளிகள். மற்றது அவர்களின் பெண் போராளிகள் ஆண்களிலும் பார்க்க வீரமாகப் போராடுகின்றார்கள். ஒரு பெண்ணால் கொல்லப்படும் புனிதப் போராளி நரகத்திற்குப் போவன் என ஐ எஸ் அமைப்பினர் உறுதியாக நம்புகின்றார்கள்.

நிலம் பிடிக்கும் குர்துகள்
இரசியப் படைகளின் உதவியுடன் அலெப்பே பிராந்தியத்தில் சிரியப் படைகள் பெரும் தக்குதல்கள் செய்யும் போது குர்திஷ் போராளிகள் தமக்கென சில நிலப்பரப்புக்களைக் கைப்பற்றினர். இரசியப் படைகளினதும் சிரியப் படைகளினதும் நோக்கம் துருக்கிய எல்லையில் இருந்து அமெரிக்க சார்பு போராளிக் குழுக்களைத் துண்டிப்பதாகும். இதனால் அவர்களுக்குத் துருக்கியில் இருந்தும் துருக்கியூடாகவும் கிடைக்கும் விநியோகங்களைத் தடுக்க முடியும். இரசியப் படைகள் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக எந்தத் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மற்றக் கிளர்ச்சிக்காரரிகளிடமிருந்து நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதை இரசியா விரும்புகின்றது அல்லது ஆட்சேபனை இன்றி இருக்கின்றது எனச் சொல்லலாம். 

ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழ்கின்றார்கள். அவர்கள்து போராட்டம் பல இனக்கொலைகளுக்கு மத்தியில் ஒரு நூற்றாண்டாகத் தொடர்கின்றது. சிரியாவில் அவர்களுக்கு என்று குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. சிரியாவில் அவர்கள் வாழும் பிரதேசத்தில் 2.5பில்லியன் பீப்பாய் எரிபொருள் உண்டு ஆனால் அதனால் கிடைக்கும் வருமானத்தில் எதுவும் அவர்களுக்குப் பயன் தருவதில்லை. துருக்கியில் இரண்டு கோடி குர்திஷ் மக்கள் வாழ்கின்றனர். முதலில் அவர்கள் தனிநாடு கோரியும் பின்னர் சுயாட்சி வேண்டியும் போராட்டம் செய்கின்றனர்.

குர்திஷ் மக்களைப் பாதுகாப்பதாக இரசியா உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சிரிய எல்லையைத் தாண்டிச் சென்று துருக்கி தாக்குதல்கள் நடத்தினால் இரசியாவுடன் ஒரு பெரும் போரைத் துருக்கி எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சிரியாவில் உள்ள குர்திஷ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அப்படி ஒரு உத்தரவாதம் குர்திஷ் மக்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறு. ஆனால் குர்திஷ் மக்களை மோசமான எதிரிகளாகப் பார்க்கும் சிரிய ஆட்சியாளர்களுக்கும் அலவைற் இனக்குழுமத்தினருக்கும் தற்போது இரசியா மிக நெருங்க்கிய நட்பைப் பேணுகின்றது. எதிரியின் நண்பனின் உத்தரவாதத்தை எந்த அளவிற்கு நம்பலாம்? இரசியாவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களிலும் பார்க்க அரபு மொழி பேசும் அலவைற் இனத்தினர் அதைக கேந்திரோபாய முக்கியத்துவ பெற்றவர்கள். 

குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவையான போதெல்லாம் குர்திஸ் மக்களின் போராட்டத்திற்கு உதவுபோல் பாசாங்கு காட்டிக் கொண்டு அவர்களைத் தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வைப்பதும் பின்னர் அவர்களைக் கைவிடுவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. குர்திஸ் மக்களும் தமிழர்களைப் போலவே சரித்திரத்தில் இருந்து கற்றுக் கொள்வதில்லை.

ஓர் இனத்திற்கு அந்நியர்கள் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொடுத்து வலுமிக்க அல்லது எண்ணிக்கை அடிப்படையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட எதிரிக்கு எதிராகப் போராட வைப்பது ஆபத்து மிக்கது. அது இனக்கொலையிலேயே போய் முடியும்.

1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது.

1967-ம் ஆண்டு ஈராக்கில் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தகத்தை விரிவாக்க முயன்ற போது அவருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியது. அப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஈரானுடாக இது நடந்தது. 1972-ம் ஆண்டு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட ரிச்சட் நிக்சனும் ஹென்றி கிஸ்ஸிங்கரும் குர்திஷ் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வோம் என்ற உறுதி மொழியையும் வழங்கினர். ஈரானில் மதவாதப் புரட்சி ஏற்பட்டு ஈரானின் அமெரிக்காவின் ஒரு மோசமான எதிரியாக மாறிய பின்னர் ஈரானால் ஈராக்கிற்கு ஆபத்து என்ற எண்ணம் ஈராக்கில் திட்டமிட்டு விதைக்கபட்டது. இதனால் ஈராக் ஐக்கிய அமெரிக்காவுடன் உறவை வளர்த்துக் கொண்டது. ஈரான் ஈராக் போர் மூண்டது. 1975-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குர்திஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட போது அமெரிக்கா தமக்கு உதவும் என குர்திஷ் மக்கள் நம்பி ஏமாந்தனர். ஈராக்கிய குர்திஷ் மக்களின் தலைவர் Mullah Mustapha Brazani  ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோள் அவரது செவியில் ஏறவில்லை.

1991-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குவைத்தை ஆக்கிரமித்த போது சிஐஏ சவுதி அரேபியாவில் இருந்து செய்யப் பட்ட ஒரு வானொலி மூலம் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. அவர்களுக்கு எதிராக சதாம் தாக்குதல் செய்த போது அவர்களுக்கு என ஒரு பாதுகாப்பு வலயம் உருவாக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. பின்னர் அப்பாதுகாப்பு வலயத்தில் வைத்தே அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

2003-ம் ஆண்டு அமெரிக்கா சதாம் ஹுசேய்ன் பேரழிவு விளைவிக்கும் படைக்கலனகளை வைத்திருக்கின்றார் என்ற போர்வையில் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த போதும் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ குர்திஷ் மக்களையும் சதாமிற்கு எதிராகப் போர் செய்ய வேண்டியது. மீண்டும் குர்திஷ் மக்கள் அமெரிக்காவுடன் இணைந்து போராடினார்கள். மீண்டும் பெரிய அளவில் இனக்கொலைக்கு உள்ளானார்கள். 2008-ம் ஆண்டு துருக்கியப் படைகள் ஈராக்கின் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களை வேட்டையாடிய போது குர்திஷ் போராளிகள் தொடர்பாகவும் அவர்களது நிலைகள் தொடர்பாகவும் தேவையான தகவல்களை சிஐஏ துருக்கிக்கு வழங்கியது. .

குர்திஷ் அமைப்புக்கள்
1. பிகேகே (PKK) - இது துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளி அமைப்பு. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் கொள்கையைக் தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுக்கு எதிராக கரந்தடிப் போரைச் செய்து கொண்டிருக்கின்றது.
2. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் எல்லாக் குர்திஷ் போராளி அமைப்புகளில்லும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவின் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது.
3.பெஷ்மேர்கா - இது 1920களில் இருந்து ஈராக்கில் உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ் மக்களின் அமைப்பாகும். 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த போது அவற்றுடன் பெஷ்மேர்கா இணைந்து போராடியது. தற்போது இது ஈராக்கில் பெரு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து ஒரு நிழல் அரசை நடாத்தி வருகின்றது.

மீண்டும் குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியப் பத்திரிகையான தி இண்டிப்பெண்டென்றில் ஒவ்வொரு பிராந்திய அரசுகளும் குர்திஷ் மக்களுக்குத் துரோகமிழைத்தன என்னும் தலைப்பில் ரொபேர்ட் பிஸ்க் எழுதிய கட்டுரையின் முதல் வரி "குர்திஷ் மக்கள் துரோகம் இழைக்கப்படுவதற்குப் பிறந்தவர்கள்" என அமைந்தது.

Syrian Kurdish Democratic Union Party (PYD)இன் படைப்பிரிவான YPG அலேப்பே நகரில் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுகின்றார்கள் என்பதால் துருக்கி 2016-ம் பெப்ரவரி 16-ம் திகதி அவர்களின் நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. மறுதினம் துருக்கியில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன அது குர்திஷ் "பயங்கரவாதிகளின்" செயல் என்றார் துருக்கியத் தலைமை அமைச்சர். ஈழ மக்களின் போராட்டத்தைப் பற்றி அறிந்தவர்கள் குண்டு வெடிப்பை யார் செய்திருப்பார்கள் என்பதை இலகுவாக ஊகித்து அறிந்து கொள்வார்கள். ஓர் இனம் இன்னொரு நாட்டினுள் தனக்கு என ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கும் போது இன்னும் ஒரு நாடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றது என்பதற்கான விடையையும் ஈழப் போராட்டத்தையும் அமைதிப் படையின் செயற்பாட்டையும் அறிந்தவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள்.

துருக்கியின் Indecent proposals)
சிரியக் குர்திஷ் போராளிகளுடன் சமாதானமாகப் போக துருக்கி இரண்டு அசிங்கமான முன்மொழிவுகளைச்  (Indecent proposals) செய்துள்ளது: 1 குர்திஷ் போராளிகள் சிரிய அதிபர் அல் அசாத்தைப் பதவியில் இருந்து விரட்ட போர் செய்ய வேண்டும். 2 தங்களுக்கு சுயாட்சி கோருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.  தற்போது குர்திஷ் மக்கள் சிரியாவில் கொபானி, ஜஜீரா ஆகிய நகரங்களில் நிழல் அரசுகளை நடத்தி வருகின்றார்கள். இரண்டையும் இணைக்கும் பிரதேசம் ஐ எஸ் போராளிகளிடமுள்ளது. அதைக் கைப்பற்றுவதே அவர்களின் தற்போதைய முக்கிய நோக்கமாகு. ஆனால் இந்தப் பிரதேசம் துருக்கியுடன் எல்லையைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பொறுப்பாகும்
தற்போது உள்ள சூழ்நிலையில் துருக்கிக்கும் குர்திஷ் மக்களுக்கும் இடையில் ஒரு சமரசத்தைச் செய்து வைக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும். அமெரிக்காவுடன் குர்திஷ் மக்கள் இணைந்து போராடுவத்தால் அது அமெரிக்காவின் பொறுப்பாகும். ஆனால் அமெரிக்கா யாரையும் நண்பனாகக் கருதுவதில்லை 1970இல் அமெரிக்கா ஈராக்கில் குர்திஷ் மக்களின் கால்களை வாரியபோது அதன் நியாயத் தன்மையைப் பற்றி கேள்வி கேட்ட போது ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன பதில்: இரகசிய நிலக்கீழ் படை நடவடிக்கை வேறு மதப்பரப்பு (missionary) நடவடிக்கைகள் வேறு என்றார். தற்போது இரசியா குர்திஷ் போராளிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கா அவ்வப் போது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.  இறுதியில் அவர்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்.

Monday, 15 February 2016

சன்னதம் கொள்ளும் வட கொரியாவும் சங்கடப்படும் சீனாவும்

2016ஆங்கிலப் புத்தாண்டு சீனாவிற்கு மோசமாக ஆரம்பித்தது. வீழ்ச்சியடையும் பங்கு விலைகள், வேகம் இழக்கும் பொருளாதாரம், விழும் நாணயப் பெறுமதி, என்பன ஒரு புறம் சீனாவை ஆட்டிப் படைக்க மறு புறம் சீனா தனது என அடம் பிடிக்கும் தென் சீனக் கடற் பிரதேசத்தில் ஐக்கிய அமெரிக்கா மூன்றாவது  முறை "அத்துமீறியது".  போதாக் குறைக்கு தாய்வானில் சீனவிற்கு எதிரான கொள்கை கொண்டோர் ஆட்சியைக் கைப்பற்றினர்.  அவை போகட்டும் சீனாவின் தேசியப் புத்தாண்டான குரங்கு ஆண்டுப் பிறப்பாவது ஒழுங்காக நடக்குமா என சீனா எதிர்பார்த்துக் கொண்டு சீனா வாண வேடிக்கை செய்து கொண்டிருக்கையில் சீனாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் பாரிய வாணம் ஒன்றை வட கொரியா வெடிக்க வைத்தது. வட கொரியா வெடிக்க வைத்தது நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் சென்றதுடன் ஒரு செய்மதியையும் மிதக்க விட்டுள்ளது.  இந்த ஏவுகணைகளின் மூலம் வட கொரியாவால் முழு ஐரோப்பியக் கண்டம், கனடா, ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பகுதி, ஒஸ்ரேலியா, வட ஆபிரிக்கா ஆகிய பிரதேசங்களில் அணுக்குண்டுகளை வீச முடியும்.

வாடும் கொரியாவை வாழவைக்க ஏவுகணை!
வட கொரியா பரிசோதித்த ஏவுகணை 440 இறாத்தல் எடையுள்ளது. அது 2012-ம் ஆண்டு பரிசோதித்த ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு பாரமானது. இந்த ஏவுகணைப் பரிசோதனை பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங்கின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2016 மே மாதம் மக்கள் கட்சியின் மாநாட்டில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகின்றது. அத்திட்டம் அணுக்குண்டு பரிசோதனைகளுடன் கூடிய பொருளாதார முன்னேற்றம் ஆகும். கிம் உல் ஜொங்கின் பேரனது ஆட்சிக்காலத்தில் இருந்த செழிப்பை நாட்டில் மீண்டும் கொண்டுவரும் திட்டம் அப்பொருளாதாரத் திட்டமாகும்.  வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு உள்நாட்டில் இருக்கும்  பேராதரவைத் தகர்க்கக் கூடிய வகையில் வெளிநாட்டு அழுத்தங்கள் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு வெளி அழுத்தத்தை சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும்.  வட கொரியா இன்னும் ஒரு அணுக்குண்டுப் பரிசோதனையைச் செய்யவிருக்கின்றது என தென் கொரிய உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அப்படி ஒரு பரிசோதனை 2016 மே மாதத்திற்கு முன்னர் நடக்கலாம் என்கின்றது.  வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பான் வட கொரியாவிற்குப் பணம் அனுப்புவதை கட்டுப்படுத்தியது. தென் கொரியா வட கொரியாவில் நிறுவிய கைத்தொழிற் பேட்டையை மூடியது. தென் கொரியா வடகொரியாவுடன் இணைந்து நடத்திய கைத்தொழிற்பேட்டையில் உள்ள 120இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 54,000இற்கும் மேற்பட்ட வட கொரியர்கள் பணிபுரிந்தார்கள். 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கைத்தொழிற்பேட்டையில் தென் கொரியா 840மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் வட கொரியா 110மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றது. இக் கைத்தொழிற்பேட்டை மூடப்பட்டதுடன் தென் கொரியாவில் இருந்து செய்து வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

குருவிற்கு அடங்கா மாணவன்
சீனா வட கொரியாவின் புரவலர் (patron) நாடு  என்னும் அளவிற்கு அதற்குப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. வட கொரியா அணுக்குண்டுப் பரிசோதனை செய்வதை நிறுத்தும் படி சீனா விடுக்கும் வேண்டு கோள்களிற்கு வட கொரியா செவிமடுப்பதில்லை. வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் முன்னணி அரசுறவியலாளரான வு டவே(Wu Dawei) வடகொரியத் தலைநகர் பியோங்யாங் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். வட கொரியா 2016-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஹைட்ரஜின் அணுக்குண்டு ஒன்றை வட கொரியா வெடித்துப் பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி சீனத் தலைநகர் பீஜீங் சென்று வட கொரியாவிற்கு எதிராக சீனா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்தே சீன அரசுறவியலாளர் வு டவே(Wu Dawei) பியோங்யாங் சென்றார் ஆனால் அங்கு அவரது வேண்டுகோள் எவற்றிற்கும் வட கொரிய அதிபர் கிம் உல் ஜொங் இணங்கவில்லை. அவரை வட கொரியா வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதாக அமெரிக்க முன்னணி நாளிதளான நியூயோர்க் ரைம்ஸ் எள்ளி நகையாடியது.  கிம் உல் ஜொங் பதவிக்கு வந்ததில் இருந்து சீன வட கொரிய உறவு மோசமடைந்து வருகின்றது. கிம் உல் ஜொங் ஆட்சிய்க்கு வந்ததில் இருந்து இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசவில்லை. கிம் உல் ஜொங் ஆட்சியை இரும்புப் பிடியாகப் பிடித்துள்ளார். அவரை ஆட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள் காணாமற் போய்விருவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. அப்படி அண்மையில் காணாமற் போனவர் படைத்தளபதி ரி யிங் ஜொல். அவர் கொல்லப்பட்டதாக்வும் செய்திகள் வெளிவந்தன.

காத்திருந்த அமெரிக்கக் கொக்கு

சிறு அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய தொலைதூரம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா உருவாக்குவது ஐக்கிய அமெரிக்காவை இரண்டு வகையில் கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஒன்று வட கொரியாவால் ஐக்கிய அமெரிக்காமீது அணுக்குண்டுத் தாக்குதல் செய்யக் கூடிய நிலை உருவாகும். இரண்டாவது இத் தொழில் நுட்பத்தை வட கொரியா ஈரானுக்கு வழங்கினால் அது இஸ்ரேலின் இருப்பிற்குப் பேராபத்தாகும். இதைத் தவிர்க்க அமெரிக்கா தனது காய்களை நகர்த்த வேண்டும். அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defence ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன.  இவற்றை தென் கொரியாவில் நிறுவ ஐக்கிய  அமெரிக்கா நீண்ட காலமாக விரும்பி இருந்தது. அதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தது. தாட் ஏவுகணைகள் தென் கொரியாவில் நிறுவினால் அது தனது ஏவுகணைகளைவலுவிழக்கச் செய்து தனக்கு சாதகமான படைத்துறைச் சமநிலையை உருவாக்கும் என்றது சீனா. சீனாபெருமளவு வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதால் சீனாவை அதிருப்திப் படுத்த தென் கொரியாவும் விரும்பவில்லை. ஆனால் 2016-ம் ஆண்டு வட கொரியா செய்த அணுக்குண்டுப் பரிசோதனையின் பின்னர்   தென் கொரியா அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தனது நாட்டில் நிறுவுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.

என்ன இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை?

ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இது முழுக்க முழுக்க ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும்.  . அமெரிக்காவின் புதிய தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது.  அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும்.  அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.

பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம்

வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பானும் தென்  கொரியாவும் அமெரிக்கப் பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூட்டின. அதில் வட கொரியாவிற்கு எதிரான ஒரு கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது.  சீனப் படைத்துறையினர் வட கொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பாதுகாப்பு அரணாக வட கொரியா உள்ளதாகக் கருதுகின்றனர். தென் கொரியா போல் அதுவும் ஒரு அமெரிக்க சார்பு நாடாக மாறுவதையோ அல்லது இரு கொரியாக்களும் இணைந்து முழுக் கொரியாவும் அமெரிக்க சார்பாக மாற்வதோ சீனாவிற்கு ஆபத்தாகும். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை தற்போதைய ஆட்சியாளர்ளிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்து அங்கு அமெரிக்கா சார்பு நிலை தோன்றுவதற்கு வழி வகுக்கும் என சீனா  கருதுகின்றது. இதனால் கடந்த காலங்களில் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் கடுமையை சீனா தடுத்து வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவிருக்கும் வட கொரியாவிற்கு எதிரான தீர்மானத்தில் சீனா என்ன நிலைப்பாட்டை எடுக்க விருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும். வட கொரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டுவரக் கூடிய தீர்மானத்திற்கு ஆதரவா அல்லது தென் கொரியாவில் அமெரிக்கா புதுத் தர ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுவச் செய்வதா என்ற இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற சங்கடமான நிலைக்கு சீனாவை அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கின்றது.

Monday, 8 February 2016

அசைக்க முடியாத புட்டீனும் ஆட்டம் காணாத இரசியாவும்

ஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக 2016-ம் ஆண்டு ஒதுக்கிய 760மில்லியன் டொலர்கள் 2017-ம் ஆண்டு 3.4பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப் படவுள்ளது. இதே வேளை அட்லாண்டிக் மாகடலில் இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகள் பனிப்போர்க் காலத்தில் இருந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என நேட்டோவின் கடற்படைத் தளபதி Vice Admiral Clive Johnstone தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றின் படைவலு அதிகரிப்பிற்கு ஏற்ப மற்றது தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான செலவை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தி இருப்பது புட்டீனின் இரசியாவை இட்டு அமெரிக்கப்பாதுகாப்புத் துறை அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் கட்டுகின்றது.

உடையும் என்பார் உடையாது

ஐக்கிய அமெரிக்கா இரசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியத்தை உடையச் செய்தது போல் இரசிய கூட்டகத்தை(Russian Federation) சிதைக்க முயற்ச்சி செய்கின்றது என இரசிய வெளியுறவுத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரசியாவைத் தமதாக்கி இரசியவின் வளங்களைத் தமதாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா முயல்கின்றது எனவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இரசியாவை சிதைக்க அமெரிக்கா முயற்ச்சி செய்யத் தேவையில்லை. விளடிமீர் புட்டீன் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.

புட்டீனின் இரசியாவில் சவால்கள்

புட்டீன் தலைமையில் உலக அரங்கில் மீள எழுச்சியுற முயலும் இரசியாவிற்கு உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போதிய படைகள், படைத்துறைத் தொழில் நுட்பம், மக்கள் ஆதரவு போன்றவை இருக்கின்றது. இரசியாவின் மீள் எழுச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது அதன் பொருளாதாரமாகும். இரசியப் பொருளாதாரம் பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ளது. இரசியாவின் 2015-ம் ஆண்டிற்கான பாதீடு மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வகுக்கப் பட்டது. ஆனால் 2015இல் அது ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கும் கீழாகக் குறைந்தது. 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு த்திட்டம் மசகு எண்ணெயின் விலை உலகச் சந்தையில் 50 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரையப் பட்டது. ஆனால் எரிபொருள் விலை முப்பது டொலர்களாகக் குறைந்துள்ளது. உலக வங்கி 2016இல் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 37 டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் விலை இருபது டொலர்களிலும் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். கடந்த 18 மாதங்களில் 70 விழுக்காடு வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான பாதீட்டை மீள் பரிசீலனை செய்யப்படலாம் என இரசியத் தலைமை அமைச்சர் Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.

பட்டினியால் வாடாத இரசியார்கள்
2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 4 விழுக்காட்டால் சுருங்கியது. பணவீக்கம் 13 விழுக்காடாக இருந்தது. இரசிய நாணயமான ரூபிளின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக அரைப்பங்கு வீழ்ச்சியடைந்தது. இரசியர்களின் சராசரி வருமானம் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் உணவு விலைகள் 14 வீழுக்காடு அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் மக்களின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக 2015-ம் ஆண்டு உயர்ந்துள்ளது. Sergey Shelin என்னும் சுதந்திர பொருளாதார ஆய்வு நிறுவனம் இரசிய மக்கள் பட்டினியால் வாடவில்லை ஆனால் சாப்பாட்டிற்கு சிரமப் படுவோர் தொகை அதிகரித்துள்ளது, மக்கள் தரம் குறைந்த உணவை உண்கின்றார்கள் என்கின்றது. 2015-ம் ஆண்டு மகிழுந்துகளின் விற்பனை 35விழுக்காட்டால் குறைந்துள்ளது. இந்த நிலைமைகளால் இரசியாவின் அமைச்சர்கள் அதிக கலவரமடைந்துள்ளனர். 20018-ம் ஆண்டுவரை இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடரும் என இரசியத் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட சமகால அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

களம் பல கண்ட இரசியா
1998-ம் ஆண்டு இரசியா பெரும் கடன் நெருக்கடியைச் சந்தித்து தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2008-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியின் போதும் இரசியா நிதிநெருக்கடியைச் சந்தித்தது.  2012-ம் ஆண்டில் இருந்தே இரசியப் பொருளாதாரம் பிழையான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிட்டது. இரசிய அரபு சார்பு ஊடகங்கள் இரசியாவில் பிரச்சனை உண்டு ஆனால் நாம் கலவரமடையவில்லை எனப்பரப்புரை செய்கின்றன. இரசிய அரசு சார்பு ஊடகங்கள் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எரிப்பொருள் வீழ்ச்சி மட்டும் காரணம் பொருளாதாரத் தடைகள் அல்ல எனவும் பரப்புரை செய்கின்றன.

ஒரு மூலம் போதாது
எரிபொருள் விலை வீழ்ச்சி மட்டுமல்ல உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல இரசியாவின் பொருளாதாரத்திற்கு எனச் சில அடிப்படை வலுமின்மைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இரசியாவைத் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் விளடிமீர் புட்டீன் இரசியப் பொருளாதாரம் எரிபொருள் ஏற்றுமதில் பெரிதும் தங்கி இருக்கும் நிலையை மாற்ற ஏதும் செய்யவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


படைக்கு முந்து
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் ஆதரவுத்தளமான படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய தர வர்க்கத்தினரிடமிருந்து அதிக வரி அறவிடப்படுவதான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகின்றது. இரசியப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய விளடிமீர் புட்டீன் இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒன்று இரசியாவின் அரச உடமை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தல். விளடிமீர் புட்டீன் பதவிக்கு வரமுன்னர் இரசிய அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவ மயப் படுத்துவதை விரும்பாத புட்டீன் இதை நிறுத்தி இருந்தார். இப்போது அவரே அந்தச் செய்கையைத் தொடங்கப் போகின்றார். இரண்டாவதாக வெளிநாட்டு மூலதனங்களை இரசியாவிற்கு அழைத்துள்ளார். பொருளாதாரத் தடை உள்ள நிலையில் சீனாவால் மட்டுமே இதில் ஈடுபடமுடியும். சீனா தவிச்ச முயல் அடிப்பதில் முன்னிற்கு நிற்கும் ஒரு நாடு. புட்டீனின் நண்பர்களான இரசியப் பெருமுதலாளிகள் தமது வெளிநாட்டு முதலீடுகளை இரசியாவிற்கு கொண்டு வரலாம். அவர்களைத் திருப்திப் படுத்தக் கூடிய மலிவான விலைகளின் புட்டீன் அரச நிறுவனங்களை விற்க வேண்டியிருக்கும். புட்டீனின் தனியார் மயப் படுத்தலில் எரிபொருள் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. தற்போது எரிபொருள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

உலக அரங்கில் தனிமைப் படுத்த முடியாத இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வி இரசியா உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியாத ஒரு வல்லரசு என்பதை எடுத்துக் காட்டியது. ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்கெல் 2016 பெப்ரவரி 2-ம் திகதி புட்டீனுடன் உக்ரேன் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அசைக்க முடியாத புட்டீனின் செல்வாக்கு
இரசியா பல பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் மக்கள் மத்தியில் அதிபர் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு உறுதியாகவே இருக்கின்றது. புட்டீனுக்கு 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் புட்டீனால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் திரட்டப்பட்டவை அவற்றி நம்ப முடியாது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புட்டீன் கொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்ற ஒருவர். அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அண்மைக்காலங்களில் இரசியாவில் பார ஊர்திகள் ஓட்டுபவர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார். எரிபொருள் விலை 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்த போது இரசியாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதியையும் வீழ்ச்சியடைய விட்டு ரூபிளைப் பொறுத்தவரை எரி பொருள் விலை 27 விழுக்காடு மட்டுமே வீச்சியடையச் செய்தார். இரசியாவால் தனது பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது என்பதைச் சரித்திரத்தில் பலதடவைகள் அது நிரூபித்துள்ளது. இரசியா ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற பலரின் எதிர்பார்ப்புக்களை பிழையாக்கும் வல்லமை இரசியர்களிடம் இருக்கின்றது.
.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...