படைத்தளங்கள் தொடரும்
பனிப்போர்க் காலத்தில் இருந்தே சோவியத் ஒன்றியத்துடன் சிரியா சிறந்த உறவைப் பேணி வந்தது. இரசியாவிற்கு வெளியே இருக்கும் அதன் ஒரே ஒரு கடற்படைத் தளம் சிரியாவிலேயே இருக்கின்றது. 2015-ம் ஆண்டு இரசியா சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான லதக்கியாவில் ஒரு விமானப் படைத் தளத்தையும் நிறுவியது. இந்த விமானப் படைத் தளம் மூடப்படமாட்டாது எனவும் தெரிய வந்துள்ளது. இரசியப் படையினரின் ஒரு பகுதி மட்டும் வெளியேறுவதால் எந்த நேரமும் இரசியப் படைகள் திரும்பி வர வாய்ப்புண்டு. படை வெளியேற்றத்திற்கான கால அட்டவணை ஏதும் வெளிவிடப்படவில்லை. இரசியாவின் பல்வேறுதரப்பட்ட 70 போர் விமானங்களும் நான்காயிரம் படையினரும் நிலை கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக் குழுவான Harakat Nour al-Din al-Zenki இரசியப் படையினரின் வெளியேற்றம் தொடர்பாக தனது ஐயத்தை வெளிவிட்டுள்ளது. ஐ எஸ் போராளிகள் தொடர்ந்தும் வலுவான நிலையில் இருப்பதால் இரசியப் படையினர் சிரியா சென்றதன் முதன்மை நோக்கம் ஐ எஸ்ஸை ஒழிப்பதல்ல எனச் சொல்லலாம். சிரியாவில் ஒத்துக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இரசியப் படையினர் பலதடவை மீறினார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
சிரியாவை விட்டுக் கொடுக்கச் செய்யவா?
இரசிய அதிபர் புட்டீன் படை விலக்கல் தொடர்பான தனது முடிவை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திடம் தெரிவித்தார். அதற்கு அசாத்தின் பதில் எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இரசியப் படைகளின் பங்களிப்பிற்கு அசாத் நன்றி தெரிவித்தார் என்பது மட்டுமே வெளிவந்துள்ளது. இரசியப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பு ஜெனிவாவில் சிரியா தொடர்பான பேச்சு வார்த்தையின் மீள் ஆரம்பமாகும் நாளில் வெளிவந்தது. இவ் வெளியேற்றம் சிரியப் படைகள் தம்மால் நிலமையைக் கட்டுப்படுத்தக் கூடிய நம்பிக்கையை பெற்று விட்ட நிலையில் நடக்கவில்லை. மாறாக ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் சிரிய அரசதரப்பினரை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன் ஈடுபடுத்தச் செய்யும் நோக்கத்துடன் இரசியப் படையினரின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரியானதாக இருந்தால் புட்டீனின் படை விலக்கல் முடிவு ஒரு அரசுறவியல் திறன்மிகு நகர்வு (diplomatic master stroke) என்றுதான் சொல்ல வேண்டும்.
சிரியாவால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?
சிரியப் படையினர் பல கிளர்ச்சிக் குழுக்களுக்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஈரானியப் படைத்துறை நிபுணர்களும் ஹிஸ்புல்லாப் போராளிகளுமே உதவி செய்து கொண்டிருக்கின்றனர். சிரியப் படையினர் பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே இரசியா தனது விமானப் படையை அங்கு அனுப்பியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தமும் முறிவடைந்தால் போர் மூர்க்கத்தனமாக மீண்டும் நடக்கும் போது சிரியப் படைகள் பின்னடைவைச் சந்தித்தால் மீண்டும் இரசிய விமானப் படைகள் சிரியா சென்று தாக்குதல் நடத்தக் கூடிய வகையிலேயே இரசியா ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
புட்டீனின் எண்ணம் நிறைவேறியதா?
புட்டீன் சிரியாவிற்கு இரசியப் படையினரை அனுப்பியதன் முதல் நோக்கம் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதே. இரசிய விமானப் படையினதும் ஈரானியப் படை நிபுணர்களினதும் ஹிஸ்புல்லாப் போராளிகளினதும் ஆதரவுடன் சிரியப் படைகள் 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றினர். உயரமான நிலப்பரப்புகளைச் சிரியப் படைகள் கைப்பற்றியதால் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கார்கள் தாழ் நிலத்தில் இருந்து தாக்குதல் நடாத்தி அவற்றைக் கைப்பற்றுவது சிரமம். இரசியாவின் ஆதரவுடன் லதக்கியா, அலெப்பே ஆகிய மாகாணங்களில் சில பிரதேசங்கள் அரச படையினரால் கைப்பற்றப்பட்டன. தலைநகர் டமஸ்கஸைச் சூழ உள்ள பிரதேசங்களில் இருந்த பல ஐ எஸ் போராளிகளின் நிலைகள் அழிக்கப்பட்டன. இரசியா அறிவித்த இலக்கு ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதே. இரசியப் படையினர் அப்பாவிகள் வாழும் பகுதிகளில் குண்டுகள் வீசினர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப் பட்டன. சிரியாவில் போரைத் தீவிரமாக்கி அங்கிருந்து அதிக அளவு மக்களை மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்க்கு தஞ்சக் கோரிக்கைக்கு அனுப்புவது புட்டீனின் கபட நோக்கம் என்றும் கருதப்பட்டது.
விமானத்தை இழந்த இரசியா
ஒரு நாட்டில் விமானத் தாக்குதல்கள் செய்யப்படும் போது ஒலியிலும் வேகமாகச் செல்லக் கூடிய விமானங்கள் எல்லைகளைத் தாண்டி அயல்நாட்டு வான் பிரதேசத்துக்குள் செல்வது நடக்கக் கூடிய ஒன்றே. ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போர் புரியும் போது ஈரான் வான்பரப்புக்குள் அவ்வப் போது அமெரிக்க விமானங்கள் செல்வதற்கான அனுமதியை ஈரானிடமிருந்து இரகசியமாக அமெரிக்கா பெற்றிருந்தது. சிரியாவில் படை நடவடிக்கையில் ஈடுபட்ட இரசிய விமானங்கள் இஸ்ரேல் வான்பரப்பினுள்ளும் துருக்கி வான் பரப்பினுள்ளும் பறந்தன. இஸ்ரேலியப் படையினர் இரசிய விமானத்துடன் தொடர்புகொண்டு எல்லை தாண்டியதை அறிவிக்க இரசிய விமானம் விலகிச் செல்லும். இது ஓர் எழுதாத உடன்பாடாகியது. ஆனால் துருக்கி இரசிய விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியது.
பொருளாதாரப் பிரச்சனை காரணமா?
இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனை அதன் படைகள் வெளிநாடு ஒன்றில் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இல்ல்லை. சிரியாவிற்குப் பெருமவவு இரசியப் படையினரை அனுப்பி அங்கு எல்லாக் கிளர்ச்சிக்காரர்களையும் அழித்து அசாத்தின் ஆட்சியை நாடு முழுக்க நிறும் நிலையில் இரசியா இல்லை என்பதை சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
புட்டீனுக்கு இரண்டு வெற்றிகள்
சிரியாவிற்குப் படை அனுப்பியதன் மூலம் இரசியா இன்னும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் இருக்கின்றது என்ற செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. சிரியாவில் வேதியியல்(இரசாயன) படைக்கலன்கள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும்; உடனே அமெரிக்கா படை நடவடிக்கைகளில் இறங்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்திருந்தார். அப்படி ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளாமல் புட்டீன் தடுத்து விட்டார். இதுவரை காலமும் சிரியாவில் ஒரு கடற்படை வசதியகத்தை மட்டும் வைத்திருந்த இரசியா தற்போது ஒரு விமானப் படைத் தளத்தையும் அங்கு அமைத்துள்ளது.அத்துடன் இரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை முறைமையான எஸ்-400 சிரியாவில் தொடர்ந்தும் இருக்கும்.
No comments:
Post a Comment