Tuesday, 31 July 2018

உலகப்பொருளாதாரமும் சீனாவிற்கு எதிரான வர்த்தகப்போரும்


அமெரிக்கா சீனாவிற்கு எதிராகத் தொடுத்துள்ள வர்த்தகப் போரால் பாதிக்கப் பட்ட அமெரிக்க விவசாயிகளுக்கு அமெரிக்க அரசு 12 பில்லியன் டொலர்களை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளது. அடிச்ச கைப்புள்ளைக்கே இந்தளவு காயம் என்றால் அடிவாங்கியவனின் கதி? 2017-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சீனா செய்த ஏற்றுமதி 506 பில்லியன் டொலர்கள் பெறுமதியாதகாவும் அமெரிக்காவிலிருந்து செய்த இறக்குமதி 130பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகவும் இருந்தது. சீனாவுடனான இந்த பெரும் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதைச் சீர் செய்ய கடந்த காலங்களில் அமெரிக்கா எடுத்த முயற்ச்சிகள் சரிவராத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரித்தார். இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருகளுக்கு வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆரம்பித்தது. தனது பொருட்களுக்கு அமெரிக்கர்கள் அதிக விலை கொடுப்பதைத் தவிர்க்க சீனா தனது நாணய்த்தின் பெறுமதியைக் குறைத்தது. அதற்குப் போட்டியாக அமெரிக்காவும் தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தால் அது நாணயப் போராக உருவெடுக்கும். இப்படியிருக்கையில் அமெரிக்க நடுவண் வங்கியான பெடரல் ரிசேர்வ் அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரித்தது அமெரிக்க அதிபரை ஆத்திரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வட்டி விழுக்காடு அதிகர்க்கும் போது அமெரிக்க நாணயமான டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இதனால் உலகெங்கும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்த விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். இது சீனாவிற்கு வாய்ப்பாக அமையும். இதனால் அமெரிக்க மரபை மீறி அமெரிக்க நடுவண் வங்கியின் ஆளுநரைத் தாக்கி டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

நாணயப் போர் என்றால் என்ன?
ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணயப் போர் உருவாகிறது.

பிரச்சனையின் வரலாறு
2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதாரப் பின்னடைவும் நிதி நெருக்கடியும் அதைத் தொடர்ந்து 2011இல் உருவான ஐரோப்பிய கடன் நெருக்கடியும் இரு தப்பான சொத்து வகைகளால் உருவானவையாகும் வங்கிகளுக்கு இடையிலான குறுங்கால கடன்கள் உலக நிதி முறைமையின் இரத்தோட்டமாகும். வங்கிகளின் ஈட்டுக்கடன்களை நிதி ஆவணங்களாக நிதிச் சந்தையில் பல வங்கிகள் வாங்கியமை உலக நிதி நெருக்கடியின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. பெரும்பாலான ஈட்டுக்கடன்கள் மீளளிக்க முடியாதவையாக இருந்தபடியால் அந்த ஆவணங்கள் பெறுமதியற்றவையாகும். இது வங்கிகளின் அறவிட முடியாக் கடன்களை அதிகரித்தது. இதனால் வங்கிகளின் நிதிக் கையிருப்பு பாதிக்கப்பட்டு வங்கிகளுக்கு இடையிலான குறுங்காலக் கடன் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதில் பெரும் பகுதி அமெரிக்காவில் நடந்தது. வங்கிகளிடையேயான கடன் நடவடிக்கைக்களை அதிகரிக்க அமெரிக்கத் திறைசேரி பிரச்சனைக்குரிய சொத்து நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தை Troubled Asset Relief Program (TARP),  அறிமுகம் செய்தது. இதனால் தனியார் கடன்களை திறைசேரி தன் தலையில் தாங்கிக் கொண்டது. இதனால் தனியார் துறைக் கடன் நெருக்கடி அரச கடன் நெருக்கடியானது. 2011-ஆண்டு உருவான நிதி நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் 17 நாடுகள் இணைந்திருந்த யூரோ வலய நாடுகளிடையே உருவானது. யூரோவைப் பொது நாணயங்களாகக் கொண்ட இந்த நாடுகளில் பல முக்கியமாக கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி நாடுகள், ஜேர்மனியின் பொருளாதாரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நிதிக்கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகளின் அரசுகளின் வரி வருமானம் குறைந்தன. அரசு அளவிற்கு மிஞ்சிக் கடன் பெறவேண்டிய நிலைமை உருவானது. இந்த அரச கடன் நெருக்கடி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவின. உலக நிதி நெருக்கடி 2011இல் உருவானது. G-20 நாடுகள் பல கூட்டங்களை நடத்தில் உலக நிதி நெருக்கடி மோசமடையாமல் பார்த்துக் கொண்டன. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உலக நெருக்கடியின் பின்னர் உலகில் அதிக வர்த்தகம் செய்யும் நாடாக சீனா உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு பொருளியல் வாங்கும் திறன் சமநிலை (purchasing power parity) அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவாகியது.

ஆரம்பப்புள்ளி பொறாமை
2015-ம் ஆண்டு பல நாடுகள் 2008-ம் ஆண்டு உருவான பொருளாதார நெருக்கடியில் இருந்தும் 2011-ம் ஆண்டு நிதி நெருக்கடியில் இருந்தும் விடுபட்டுவிட்டன. இதனால் G-20 உருவாக்கிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பு பல நாடுகளுக்கு அவசியமற்ற ஒன்றாகி விட்டது. சீனா அமெரிக்காவிலும் பார்க்க பொருளாதாரத்தில் மேம்பட்டுச் செல்வது பல அமெரிக்க அரசியல்வாதிகளையும் பெரும் செல்வந்தர்களையும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக அமெரிக்காவை முதன்மையானது என்ற கொள்கையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் நாடுகளிடையிலேயான ஒத்துழைப்பின் அவசியத்தைப் புறம் தள்ளி விட்டு வர்த்தகப் போரை ஆரம்பித்தார். 2018 ஜூன் மாதம் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு 1.51 பில்லியன் டொலர்களால் அதிகரித்து 3.112 ரில்லியன் டொலர்களானது.

சண்டை என்றால் எல்லோர் சட்டையும் கிழியும்
அரச தூண்டுதல்களால் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரமும் பல உள் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றது. 2017-ம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடு என சீன ஆட்சியாளர்கள் சொன்னாலும் உலக வங்கியின் மதிப்பீட்டின் படி அது 1.1 விழுக்காடு மட்டுமே. டிரம்பின் வர்த்தகப் போர் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். அதைத் தவிர்க்க சீனா தனது பொருளாதாரத்தினுள் 100பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தை உட் செலுத்தவுள்ளது. அது நாணயப் புழக்கத்தை அதிகரித்து நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும். இதை அமெரிக்கா சீனா திட்டமிட்டு தன் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் நாணயப் போர் நடவடிக்கை எனப் பார்க்கின்றது. அமெரிக்காவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாகச் செய்யும் இறக்குமதி மீதான வரி அதிகரிப்பால் இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சி 0.1 விழுக்காடு முதல் 0.2 விழுக்காடு வரையில் குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய நடுவண் வங்கியின் மதிப்பீட்டின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் 2.5விழுக்காடு குறைவும் பிரித்தானியப் பொருளாதாரத்தில் 2 விழுக்காடு குறைவும் ஏற்படும். பெருமளவு பாதிப்பு அமெரிக்காவிற்கே ஏற்படும் என அந்த நடுவண் வங்கி மதிப்பிடுகின்றது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 5விழுக்காட்டால் வீழ்ச்சியடையும்.

அமெரிக்க விட்டதை சீனா பிடிக்கின்றது.
ஆபிரிக்க நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் அமெரிக்காவுடனான ஆபிரிக்க நாடுகளின் வர்த்தகத்திலும் அதிகமானது.  1978-ம் ஆண்டு சீனா ஆபிரிக்க நாடுகளுடன் செய்த வர்த்தகம் 765 மில்லியன் டொலர்களாக இருந்தது. 2017-ம் ஆண்டு அது 170 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தென் ஆபிரிக்காவில் நடந்த பிரேசில், , இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் Rwanda, Angola, Gabon, and São Tomé and Príncipe ஆகிய நாடுகளுக்குச் சென்று அவற்றை சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் இணைய வேண்டுதல் விடுத்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆபிரிக்க நாடுகளை “மலவாசல்” நாடுகள் என அழைத்ததால் அந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான ஆத்திரத்தை சீனா சாதுரியமாகத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

விற்றுப் பிழைக்கின்றதா சீனா?
சீனாவின் காப்புறுதி நிறுவனங்கள் உட்படப் பல முதலீட்டு நிறுவனங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் கட்டங்களை வாங்கி வந்தன. சின அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அவை இப்போது விற்பனை செய்யப்படுகின்றது. 2018இன் இரண்டாம் காலாண்டில் 1.29 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கட்டடங்களை விற்பனை செய்துள்ளன. வாங்கிய கட்டிடங்களின் பெறுமதி 126.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே. ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிகர விற்பனை சீனா தனது வெளிநாட்டு முதலீட்டைக் குறைக்கும் திட்டத்துடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. சீனாவின் இன்னும் ஒரு பிரச்சனை அதன் அதிகரித்துச் செல்லும் உள்நாட்டுக்கடனாகும். சீனாவின் உள்நாட்டுக்கடன் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க ஒன்றரைப் பங்கு அதிகரித்துக் கொண்டு போகின்றது.

மார்க்கோ போலோ போன பாதை
இதுவரை காலமும் சீனா மார்க்கோ போலோ பாதையில் (Marco Polo route) உள்ள நாடுகளில் பல கட்டிடங்களில் முதலீடு செய்து வந்தது. தனது நாட்டில் இருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கண்டகள் வரையான பாதையில் ஆதிக்கம் செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தியமையைச் சுட்டிக் காட்டியது. புவிசார் அரசியல் காரணங்களுக்காக் சீனா பல நாடுகளுக்குக் கடன் கொடுத்து உருவாக்கிய திட்டங்கள் நட்டத்திலேயே செயற்படுவதால் அந்த நாடுகளின் கடன் சுமையை அதிகரித்துள்ளது. மேற்கு நாட்டு ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான பரப்புரைக்கு சீனா இலங்கைக்கு கொடுத்த கடன்களை உதாரணமாகக் காட்டுகின்றன.

சீனாவா கொக்கா?
2007-ம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் 18 விழுக்காடு சீனாவின் பங்களிப்பாகும். 2017-ம் ஆண்டு அது 30 விழுக்காடாக அதிகரித்திருந்தது. 2008-ம் ஆண்டு நடந்த உலகப் பொருளாதாரப் பிரச்சனையின் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சி முன்னணி வளர்முக நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து தான் தூண்டப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அமெரிக்கா தொடுத்துள்ள பொருளாதாரப் போரால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றினால் சீனாவிற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குன்றும். அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவில் இருந்து செய்யும் இறக்குமதி குன்றும். இறுதியில் பாதிப்பு சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நன்கு அறிவர். ஆனால் அமெரிக்காவிற்கு ஏற்படும் இழப்பிலும் பார்க்க சீனாவிற்கு ஏற்படவிருக்கும் இழப்பு பெரிதாக இருக்கும் என்றபடியால் சீனா அடிபணிந்தே ஆக வேண்டும் என அவர் நம்புகின்றார். அவர் நினைப்பது நடக்குமா?

Tuesday, 24 July 2018

நேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்சனை


நேட்டோ அமெரிக்காவிற்கு நியாயமற்ற ஒரு நிதிச் சுமை என்றும் நேட்டோ காலாவதியான ஓர் அமைப்பு என்றும் அடிக்கடி முழங்கிக் கொண்டிருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மேற்கு ஐரோப்பாவிற்கு பொதுவுடமைவாதம் பரவுவதை தடுக்க வேண்டிய அவசியம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க ஐக்கிய அமெரிக்காவிற்கே இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தையாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளைக் கட்டியெழுப்பும் பணியில் வர்த்தக அடிப்படையில் இலாபமீட்டுவதற்கு சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைவாதம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949 ஏப்ரல் மாதம் 4-ம் திகதி உருவாக்கப்பட்டது.

நேட்டோவின் தாரக மந்திரம்
வின்ஸன் சேர்ச்சிலின் படைத்துறைச் தலைமை உதவியாளராக இருந்து பின்னர் நேட்டோ ஆரம்பித்த போது அதன் முதலாவது செயலாளர் நாயகமாகப் பதவி ஏற்றவருமான ஹாஸ்டிங் இஸ்மே ஐரோப்பாவிற்குள் ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டு வாருங்கள், இரசியாவை அகற்றுங்கள், ஜேர்மனியை அடக்குங்கள் எனச் சொல்லியது நீண்டகாலமாக பிரித்தானியாவின் தாரக மந்திரமாக இருக்கின்றது. பல மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டு செயற்பட்டன. அதனால் நேட்டோவில் அமெரிக்க முக்கியமான நாடாக இருந்து வருகின்றது. ஐரோப்பாவில் அதிக அளவு மக்கள் தொகையும் மிகப்பாரிய நிலப்பரப்பும் பெரும் கனிம வள இருப்பும் கொண்ட நாடு இரசியா. அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பொதுவுடமைவாதம் ஆங்கிலக் கால்வாய்வரை இரசியாவால் பரப்பப்படலாம் என்ற அச்சம்தான் 1952இல் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கியது.

தொடரும் இரசிய அச்சம்
தற்போது நேட்டோவில் உள்ள நாடுகள் இரசியாவையிட்டு வேறு வேறான அச்சம் கொண்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இரசியகளால் தமது நாட்டுக்குள் வர முடியாது இரசிய விரிவாக்கத்தை அதன் எல்லை நாடுகளிலேயே வைத்து அடக்கிவிடலாம் எனப் பிரித்தானியர்கள் நம்புகின்றனர். எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளை இரசியாவால் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும் என அந்த நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர். அவர்களில் பலர் சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் இரசியாவின் காலனித்துவ நாடுகளாக இருந்து பட்டது போதும் எனக் கருதுகின்றனர்.

வளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.

சேர்த்த சொத்தைப் பாதுகாக்க வேண்டிய அமெரிக்கா
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

பங்காளிகளின் பங்களிப்பு
நேட்டோவின் பாதுகாப்பின் 90 விழுக்காட்டை அமெரிக்காவில் செலவில் நடக்கின்றது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பில் கருத்துப் பிழையானது, அமெரிக்காவின் பங்களிப்பு 22 விழுக்காடு மட்டுமே என நேட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர். நேட்டோ நாடுகள் பாதுகாப்பிற்கான தமது செலவை மொத்தத் தேசிய உற்பத்தியின் 4 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டன என்றார் டிரம்ப். கனடியத் தலைமை அமைச்சரும் ஜேர்மனியின் அதிபரும் அப்படி எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றனர். டிரம்ப் இப்படிக் குழப்பிக் கொண்டிருக்க அமெரிக்கா தொடர்ந்தும் நேட்டோவின் முங்கிய பங்காளராகச் செயற்படும் என மற்ற நாடுகளை நம்பவைக்கும் முயற்ச்சியில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

ஜேர்மனி
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியில் 32,000 அமெரிக்கப்படையினர் நிலை கொண்டுள்ளனர். ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு என அவர்கள் அங்கு இருக்கின்றனர். நேட்டோவின் உச்சி மாநாடு பிரஸ்ல்ஸில் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அந்நிய நாட்டுப் படைகள் இருப்பது தொடர்பான கருத்துக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் 42 விழுக்காட்டினர் அந்நிய நாட்டுப்படைகள் ஜேர்மனியில் இருக்கக் கூடாது எனவும் 37 விழுக்காட்டினர் இருக்கலாம் எனவும் 21 விழுக்காட்டினர் தெரியாது எனவும் கண்டறியப்பட்டது. ஜேர்மனியின் பாதுகாப்புச் செலவு டிரம்ப் சொல்வது போல் மொத்தத் தேசிய உற்பத்தியின் 2விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதை 72விழுக்காடு ஜேர்மன் மக்கள் எதிர்த்துள்ளனர்.

துருக்கியும் நேட்டோவும்
 ஆரம்ப காலம் தொட்டே நேட்டோவின் உருப்பு நாடாக இருக்கும் துருக்கி அண்மைக்காலங்களாக இரசியாவுடன் அதிக நட்பு பாராட்டி வருகின்றது. துருக்கிய அதிபர் ரிசெப் எர்டோகன் தனது அதிகாரங்களை அதிகரிப்பது நேட்டோவின் மக்களாட்சி நியமங்களுக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எர்டோகனின் அரசியல் எதிரிகள் அமெரிக்காவில் இருந்து செயற்படுவதை அவர் கடுமையாக எதிர்ப்பதுடன் அவர்களை நாடுகடத்த வேண்டும் என விரும்புகின்றார். அமெரிக்கா தனது தாட் எனப்படும் ஏவுகணை முறைமையை துருக்கிக்கு விற்பனை செய்யத் தயங்குகின்றது. இதனால் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை துருக்கி வாங்க முடிவு செய்தது. இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நேட்டோவின் மற்ற நாடுகளின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளின் உணரிகளுடன் இணைக்கக் கூடாது என அமெரிக்கா உட்படப் பல நேட்டோ நாடுகள் ஆட்சேபிக்கின்றன. எல்லாவற்றிலும் மேலாக துருக்கியின் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையும் விருப்பத்திற்கு பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வலிமை மிக்கதும் அதிக தன்னிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்டதுமான துருக்கி என்னும் இஸ்லாமிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஜேர்மனி இரகசியமாக கடுமையாக எதிர்க்கின்றது. அந்த விரக்தியை துருக்கி நேட்டோவிற்கு பிரச்சனை கொடுக்கக் கூடிய நடவடிக்கையால் வெளிப்படுத்துகின்றது.

எண்மியப் பாதுகாப்பு
எண்மியப் பாதுக்காப்கூட்டறிக்கையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 26 தடவைகள் இணையவெளி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. எண்மியப் பாதுகாப்பிற்கு (digital security) என இரண்டு பிரிவுகள் கூட்டறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தன. இணையவெளிச் செயற்பாட்டகம் ஒன்று பெல்ஜியத்தில் கூட்டுப்படைக் கட்டளையகம் (Joint Force Command)  என்னும் பெயரில் உருவாக்கப்படும். இச்செயற்பாட்டகத்தின் தலைமை நிலையம் அமெரிக்க வெர்ஜீனியா மாநிலத்தில் நோஃபோர்க்கில் அமைக்கப்படும். நேட்டோவின் எல்லா உறுப்பு நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு முறைமை ஒன்றிணைக்கப்படும். இதை எல்லா நாடுகளும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.  உக்ரேன் நாட்டின் இணையவெளிப்பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. உக்ரேனில் வரவிருக்கும் பொதுத் தேர்தலிலும் இணையவெளியூடான வெளியார் தலையீட்டைத் தடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஆளணிச் சம்பளச் செலவும் உபகரணச் செலவும்
பிரித்தானியாவினதும் அமெரிக்காவினதும் பாதுகாப்புச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அதன் படையினருக்கான சம்பளமாக இருக்கின்றது. அமெரிக்கப்படையினரின் சம்பளம் 2001-ம் ஆண்டில் இருந்து 2017வரை எண்பத்தி ஐந்து விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செலவு என்பது மட்டும் பாதுகாப்பை உறுதி செய்யாது. போர் என்று வரும்போது நேட்டோ நாடுகள் ஒவ்வொன்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கு எத்தனை படையினரை களத்தில் இறக்கும், அவர்கள் எந்த அளவு அர்ப்பணிப்புடன் போர் புரிவார்கள், எந்த வகையான படைக்கலன்களை களத்தில் ஒவ்வொரு நாடும் பாவிக்கும் எந்த அளவு திறனுடன் படையினரும் படைக்கலன்களும் செய்ற்படுத்தப்படும் என்பதே முக்கியமானதாகும். அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு மற்ற நேட்டோ நாடுகளைப் பாதுக்காக்க மட்டும் செய்யப்படுவதல்ல. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட உலகெங்கும் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்களையும் படையினரையும் பராமரிக்க செய்யப்படும் செலவை மற்ற நேட்டோ நாடுகளின் செலவுடன் ஒப்பிட முடியாது.  இரசியா தனது பாதுகாப்புச் செலவில் ஐம்பது முதல் அறுபது விழுக்காட்டை படைக்கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு செலவு செய்கின்றது. இந்த விழுக்காடு பிரித்தானியாவில் 21 ஆகவும் ஜேர்மனியில் 14 ஆகவும் கனடாவில் 17 ஆகவும் பெல்ஜியத்தில் ஐந்து ஆகவும் இருக்கின்றது.

மறக்க முடியாத இரு உலகப் போர்கள்
பல பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் நேட்டோ இல்லாமல் பல சிறிய ஐரோப்பிய நாடுகளால் தாக்குப் பிடிக்க முடியாது. அமெரிக்கா நேட்டோவில் இருந்து விலகிச் சென்றால் மேற்கு ஐரோப்பியப் பாதுகாப்பை ஜேர்மனி உறுதி செய்ய வேண்டி நிலை ஏற்படும். ஜேர்மனி படைத்துறையில் வலிமையடைய நிர்ப்பந்திக்கப்படும். வலிமை மிக்க ஜேர்மனியால் இரண்டு உலகப் போர்கள் உருவானதை மற்ற ஐரோப்பிய நாடுகள் மறக்கவில்லை.

Monday, 16 July 2018

அமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன் தீவிரமடைகின்றது?


சோவியத் ஒன்றியம் சீனாவின் மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் உச்சமடைந்த நிலையில் 1972இல் அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் சீனாவிற்கு செய்த பயணம் உலகப் படைத்துறைச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1979இல் சீனா தனது பொருளாதாரக் கொள்கையை அரச முதலாளித்துவத்திற்கு மாற்றியது உலகப் பொருளாதாரச் சமநிலையில் பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தது. சீனா உலகின் தொழிச்சாலையானது. தற்போது உலகின் இரண்டாவது பொருளாதாரமாகக் கருதப்படும் சீனா இனி உலகின் முதலாவது பொருளாதாரமாக மாறி இணையில்லாப் படைத்துறை வலிமை மிக்க நாடாக 2030இல் உருவெடுக்கலாம். இவை யாவற்றையும் சீனா நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டே மாற்றி வருகின்றது.


அடக்க முடியாத சீனா!
பொருளாதார அடிப்படையில் சீனா ஒரு வெற்றீகரமான நாடாக உருவெடுத்துக் கொண்டிருப்பது பல வகையில் மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. 1. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்த சீனா தனது படைத்துறையிலும் தன்னிகரில்லாத நிலையை அடையலாம். 2. உயர் தொழில் நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சலாம். 3. உலக ஆதிக்கத்தை அமெரிக்காவிடமிருந்து பறிக்கலாம். 4. சீனா ஒரு கூரிய வல்லரசாக (Sharp Power) உருவெடுக்கலாம் 5. சினா தனது ஆட்சி முறைமை உலகெங்கும் பரப்பலாம். 2018இன் ஆரம்பத்தில் சீனாவின் Tsinghua University இல் நடந்த கலந்துரையாடலில் ஒரு சீன நிபுணர் சீனா அடக்க முடியாத நாடாகிவிட்டது என்றார். சீனா அமெரிக்காவால் அடக்க முடியாத ஒரு நாடாக மாறிவரும் நிலையில்தான் அதன் மீது பொருளாதாரப் போர் தொடுக்கப்பட்டது.

மக்களாட்சிக்கு மாற மறுக்கும் சீனா
முதலாளித்துவமும் மக்களாட்சியும் தனித்து இயங்க முடியாதவை. மக்களாட்சி இன்றி முதலாளித்துவத்தால் நின்று பிடிக்க முடியாது என்பது மேற்கு நாடுகளின் அரசறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையிலே மேற்கு நாடுகளின் அரச கொள்கை வகுப்பாளர்களும் செயற்படுகின்றார்கள். பொதுடமையில் இருந்து அரச முதலாளித்துவத்திற்கு மாறிய சீனாவின் அரசியல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு ஆட்சி முறைமை மாற்றப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என எதிர்பார்த்திருந்த மேற்குலக
நாடுகளுக்கு 2017இல் அங்கு செய்யப்பட்ட அரசியல் சீரமைப்பு சீனாவை ஒரு தனியொருவராட்சி நாடாக மாற்றியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சீனாவில் மேற்குலகப் பாணியிலான மக்களாட்சி வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என மேற்கு நாடுகள் எண்ணத் தொடங்கி விட்ட நிலையில் வர்த்தகப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவை அடக்க முடியாவிலில் எப்போதும் அடக்க முடியாது என்ற சூழலில் சீனாமீது வர்த்தகப் போர் தொடுக்கப்பட்டது.

1. பொருளாதார அபிவிருத்தியில் இருந்து படைத்துறை அபிவிருத்தி
2018 மார்ச் மாதம் நடந்த சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் தற்பாதுகாப்பு நிலையில் இருக்கும் சீனப் படைத்துறை எந்த நாட்டுடனும் போர் செய்து வெல்ல கூடிய உலகத்தரப் படைத்துறையாக மாற்றப்படும் என்றார். அங்கு உரையாற்றிய சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்கியாங் சீனப் படைத்துறை எல்லா வகையிலும் மேம்படுத்தப்படும் என்றார். அமெரிக்காவைப் போல் பெருமளவு படைத்துறைச் செலவுகளைச் செய்யாமலேயே சீனாவால் உலகின் முதன்மையான படைத்துறையைக் கட்டி எழுப்ப முடியும் எனவும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் படைத்துறை வளர்ச்சியை தடுக்க அதன் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என அதன் எதிரிகள் நம்புவது இயல்பானதே.

2. உயர் தொழில் நுட்பத்தில் சீனா மேற்கு நாடுகளை மிஞ்சலாம்.
எண்பதுகளில் சீனாவின் ஏற்றுமதிகளை மேற்கு நாடுகள் தமது நாடுகளுக்கு அனுமதித்த போது சீனா தொழில்நுட்பத்தில் பின் தங்கியே இருந்தது. மேற்கு நாடுகள் தாம் உயர் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி சீன உற்பத்தித் துறைக்குத் தேவையான உபகரணங்களையும் தொழில்நுட்ப அறிவையும் தாம் விற்பனை செய்து இலகு வழியில் பெரும் இலாபம் ஈட்டலாம் என நம்பின. அப்படியே பல பத்தாண்டுகள் கழிந்தன. ஆனால் இப்போது சீனா உயர்தொழில்நுட்பத்திலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அது மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களை உலக நியமங்களுக்கு மாறாக பயன்படுத்த தயங்குவதில்லை. உதாரணத்திற்கு ஆளில்லாவிமான உற்பத்தியில் சீனா அமெரிக்காவை மிஞ்சக் கூடிய நிலையை அடைகின்றது. இப்படிப்பட்ட வளச்சிகளால் தொழிற்துறையில் மட்டுமல்ல படைத்துறை உற்பத்தியிலும் சீனா முதலிடத்தை அடையலாம். அதனால் உலகெங்கும் உயர்தொழில்நுட்பங்களையும்
உற்பத்தி உபரகணங்களையும் மட்டுமல்ல படைக்கலன்களையும் ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக சீனா உருவெடுக்கலாம்.

3. உலக ஆதிக்கத்தை அமெரிக்காவிடமிருந்து சீனா பறிக்கலாம்.
சீனா துயிலெழுந்தால் அது உலகை ஆச்சரியப்பட வைக்கும் என்றார் பிரெஞ்சு வீரர் நெப்போலியன் பொனபார்ட். அது இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தை விரும்பி ஏற்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவிடம் திரண்டிருந்த சொத்தை அதாவது உலகச் செல்வத்தின் மூன்றில் இருபங்கு செல்வத்தை அது பாதுகாக்கவும் பெருக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தால் அது உலககெங்கும் தனது ஆதிக்கத்தை விரிவாக்கியது. சீனாவும் தனது செல்வ நிலைக்கு ஏற்ப தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியே ஆகவேண்டும். சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போனால் அது உலக ஆதிக்கத்தை அமெரிக்காவிடம் இருந்து பறிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

4. கூரிய வல்லரசாக (Sharp Powers) சீனா
படை நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் தவிர்த்து ஏனைய வழிகளால் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளை மென்வல்லரசு (soft power) என்பர். படை வலிமை மூலம் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் நாட்டை வன்வல்லரசு (Hard Power என்பர். சீன ஆட்சி முறைமை அதிகாரமிக்க தனியொருவரின் ஆட்சியால் நாட்டுக்கும் மக்களுக்கும் மக்களாட்சியிலும் பார்க்க அதிக நன்மை கொடுக்கும் என்பதை அண்மைக்காலமாகப் பறை சாற்றி வருகின்றது. அதே வேளை இரசியாவில் விளடிமீர் புட்டீனும் தனது அதிகாரமிக்க தலைமையால் இரசியா உலக அரங்கில் மீண்டும் ஒரு பெரு வல்லரசாக உருவெடுப்பதாக வெற்றீகரமாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தனது தான் தோன்றித் தனமான நடவடிக்கைகளால் அமெரிக்காவை தான் உலக அரங்கில் முதன்மைப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். இவையாவும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை உள்நாட்டில் மறுத்து தமது நிலையைப் பெரிது படுத்தி அதன் மூலம் மற்ற நாடுகளில் தமது நாட்டில் உள்ளது போன்ற ஆட்சி முறைமை ஊக்குவிக்கும் நாடுகளை கூரிய வல்லரசுகள் (Sharp Powers) என அழைக்கப்படுகின்றன. மென் வல்லரசுகள் தமது ஊடகங்களை மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் முகமாக பயன்படுத்தும். அவற்றில் சொல்லப்படுபவை முழுமையான பொய்களாக இருப்பதில்லை. ஆனால் பயங்கரமான திசை திருப்பல்களும் திரிபுகளும் அவற்றின் ஊடகங்களில் இருக்கும். கூரிய வல்லரசுகள் பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்புரை செய்து அவைதான் உண்மை என எல்லோரையும் நம்பவைக்கும். சீனா, இரசியா, ஈரான் ஆகிய நாடுகளின் ஊடகங்களின் வளர்ச்சியையிட்டு மேற்கு நாடுகள் அதிக கரிசனையடைந்துள்ளன. இதுவரை காலமும் தாம் தகவற்துறையில் செலுத்தி வந்த ஆதிக்கம் ஆட்டம் காண்பதையிட்டு அவை கவலையடைந்துள்ளன. இவற்றிற்கு காரணம் சீனாவினதும் இரசியாவினதும் ஈரானினதும் பொருளாதார வளர்ச்சி என்பதை அவை உணர்ந்து அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க நடவடிக்கைக்கள் எடுக்கத் தொடங்கி விட்டன.

5. சீனா ஆட்சி முறைமை
சீனாவில் நடந்த பொதுவுடமைக் கட்சியினரின் கூட்டு ஆட்சி முறைமை ஊழலைப் பெருகச் செய்ததால் தோல்வியடைந்த நிலையில் அங்கு தனியொருவரின் ஆட்சி 2017இன் பிற்பகுதியில் நடந்த சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. அரச அதிபராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும், படைத்துறைத் தளபதியாகவும் ஜி ஜின்பிங் முடி சூட்டப்பட்டார். அதிபர் பதவியை ஒருவர் இரு தடவை மட்டுமே வகிக்கலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஜி ஜின்பிங் ஆயுள் முழுவது அதிபராக இருக்க வழி வகுக்கப்பட்டது. இந்த மாற்றம் அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்திருந்த அரசியல் சீர்திருத்தம் பின்னோக்கி நகர்ததாக அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களை நம்ப வைக்கிறது. ஆனால் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் நிலைமையை உணர்ந்து தமது நாட்டிற்கு சிறப்பான நன்மை தரக்கூடிய ஆட்சி முறைமையை மாற்றியுள்ளனர். 1976இல் மாவோ சே துங்கின் இறப்பிற்குப் பின்னர் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் தகுதி அடிப்படையில் தமது தலைமையைத் தெரிவு செய்கின்றனர்.

சீனாவின் ஆட்சி முறைமையும் மக்களின் உரிமை நிலைமையும் கருத்துச் சுதந்திரமும் அமெரிக்காவின் வர்த்தகப் போரால் ஏற்படப் போகும் பாதிப்புக்களை பல ஆண்டுகளுக்கு சீனாவால் சகித்துக் கொள்ளும் தன்மையை சீனாவிற்கு கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் நிலை அப்படியல்ல. 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் எல்லா உறுப்பினர்களுக்கும் மூதவையின் 34 உறுப்பினர்களுக்கும் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவுகள் வர்த்தகப் போரையே இல்லாமற் செய்யலாம். அல்லது 2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் வர்த்தகப் போரை இல்லாமற் செய்யலாம். அதற்குள் வர்த்தகப் போரைத் தீவிரமடையச் செய்ய வேண்டும் என்பதில் டொனால்ட் டிரம்ப் அதிக அக்கறை காட்டுகின்றார்.

சீரிய பாதையில் செல்ல யாருமிலர்
சீனா தனது பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க அமெரிக்கா தனது பாதையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நேரிய பாதையில் செல்லும் சீனா அதிக தூரத்தைக் கடக்கலாம். சீரிய பாதையில் செல்ல யாரும் இலர்.

Monday, 9 July 2018

டிரம்ப் புட்டீன் சந்திப்புப் பற்றிய சிந்தனைகள்


இரசியா உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததில் இருந்து மோசமடைந்திருக்கும் அமெரிக்க இரசிய உறவை டொனால்ட் டிரம்ப்பால் சீராக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இரசியாவுடன் சிறந்த உறவு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த டொனால்ட் டிரம்ப் அவரது வெற்றிக்கு இரசியா உதவியது என்ற குற்றச்சாட்டு வலிமையாக எழுந்ததால் இரசியாவுடனான ஒரு பேச்சு வார்த்தையின் போது விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியாத நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டார். ஜூலை 16-ம் திகதி டொனால்ட் டிரம்பும் விளடிமீர் புட்டீனும் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உதவியாளர்களின்றி நேரடிப் பேச்சு வார்த்தை
இதற்கு முன்பு பன்னாட்டு மாநாடுகள் நடக்குமிடங்களில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் முதற்தடவையாக அதிகார பூர்வமாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். இச் சந்திப்பு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னுடன் செய்த சந்திப்பை ஒத்ததாக இருக்கின்றது. முதலில் இரு தலைவர்களும் அதிகாரிகளின் உதவியின்றி மொழிபெயர்ப்பாளர்களை மட்டும் உடன் வைத்துக் கொண்டு உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு உரையாடல் நடை பெறும். டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக முன்னர் இரசிய விலைமாதர்களுடன் வைத்திருந்த உறவுகள் தொடர்பான படங்களையும் தகவல்களையும் வைத்து புட்டீன் இரகசியமாக டிரம்பை மிரட்டி தனது தேவைகளுக்குப் பணிய வைக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். இருவரும் இரகசியமாக வெள்ளைத்தேசியவாதத்தை முன்னெடுப்பவர்கள் என்பது மட்டுமல்ல தாராண்மைவாதத்தையும் கடுமையாக எதிர்ப்பவர்கள். டிரம்ப் தனது இரசிய விசுவாசத்தை G-7 நாடுகளின் மாநாட்டில் உரையாற்றும் போது அந்த அமைப்பில் இரசியாவை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பின்லாந்துமயமாதலை அமெரிக்காவும் செய்யுமா?
இரசியா மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த போது இரசியப் பேரரசின் ஓர் உறுப்பு நாடாக பின்லாந்து இருந்தது. பொதுவுடமைப் புரட்சியின் பின்னர் தேசங்களின் தன்னாட்சி அதிகாரங்களுக்கு மதிப்புக் கொடுத்த லெனின் பின்லாந்தைத் தனிநாடாக அனுமதித்தார். அன்றிலிருந்து பின்லாந்து இரசியாவிற்கு அச்சப்படும் ஒரு நாடாகவும் அதனுடன் உறவைப் பேணி அதன் நலன்களுக்கு எதிராகச் செயற்படாத நாடாகவும் இருந்து வருகின்றது. அரசுறவியலில் தான் அச்சப்படும் எதிரி நாட்டுக்கு இசைவாக ஒரு நாடு நடப்பதை பின்லாந்துமயமாதல் (Finlandization) என அழைப்பர். பின்லாந்தில் இரசிய அதிபரைச் சந்திக்கும் டிரம்பும் அமெரிக்காவை பின்லாந்துமயமாக்குவார் என டிரம்புக்கு எதிராக எழுதும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர். 2016-ம் ஆண்டு டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போதே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த முயற்சித்திருந்தார். இருவர்களும் சந்திக்கும் போது உக்ரேன் விவகாரத்தால் அமெரிக்கா இரசியா மீது விதித்த பொருளாதாரத் தடை முக்கிய இடம்பெறும். இரசியா தான் இப்போது படைத்துறை அடிப்படையில் மிகவும் வலிமையடைந்துள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியிட்டு வருகின்றது
இரசியா சென்ற அமெரிக்க ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள்
அமெரிக்கப் பாராளமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 2018 ஜூலை 3-ம் திகதி இரசியப் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர். இச்சந்திப்பு வழமையில் இருந்து சற்று மாறு பட்ட ஒன்று என்பது மட்டுமல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஜூலை 16-ம் திகதி செய்யவிருக்கும் சந்திப்பிற்கு முன்னோடியாகவும் அமைந்திருந்தது. எதிர்பார்த்திராத இணக்கமான சூழ்நிலை அங்கு நிலவியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூதவை உறுப்பினர் அமெரிக்காவும் இரசியாவும் போட்டியாளர்கள் மட்டுமே எதிராளிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லாவோவிடம் தெரிவித்தார். அதேவேளை சில இரசியப் பாராளமன்ற உறுப்பினர்கள் டொனால்ட் டிர்ம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்த இரசியவுடனான உறவைச் சீராக்கல் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஏமாற்றத்தைத் தெரிவித்தனர். இரசியா 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டமை தொடர்பாக அமெரிக்காவில் நடக்கும் விசாரணைகளும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்காமல் இருப்பதில் இரு நாட்டுப் பாராளமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தினர். அமெரிக்கத் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் அமெரிக்காவிற்கான அப்போதைய இரசியத் தூதுவர் சேர்கி கிலியாக் தற்போது இரசியப் பாராளமன்றத்தின் மூதவை உறுப்பினராக இருக்கின்றார் இரசியா வந்துள்ள பாராளமற உறுப்பின்ரகளில் பலரை எனக்கு நேரடியாகத் தெரியும் என்றார் அவர். அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் தமக்கு விளடிமீர் புட்டீனைச் சந்திக்க வாய்யளிக்காமல் விட்டதையிட்டு சற்று அதிருப்தியடைந்தனர். மக்களாட்சிக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடு பற்றி குடியரசுர்க் கட்சியினரிலும் பார்க்க அதிக அளவு ஆத்திரமடைந்துள்ளனர். அதே வேளை 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியினர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் குடியரசுக் கட்சியினர் மட்டும் சீராக்கும் இரசியாவுடனான உறவு எந்த அளவு நின்று பிடிக்கும் என்பது கேள்விக் குறியே.
புதிய தொடர்பாடல் வழி
அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களின் இரசியப் பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவில் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜோன் போல்டன் இரசியா சென்று டிரம்ப்-புட்டீன் சந்திப்புப் பற்றிக் கலந்துரையாடியிருந்தார். சீனாவும் வட கொரியாவும் அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைகளுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையை ஓரம் கட்டிவிட்டு நேரடியாக வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஜோன் போல்டன் பகிரங்கமாகவும் டிரம்பின் மருமகன் ஜெரார்ட் குஷ்னர் இரகசியமாகவும் பெரும் பங்கு வகித்தனர்.

சிரியாவில் இரசியர்களைப் போட்டுத் தள்ளிய அமெரிக்கா
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் அமெரிக்கப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள Deir Ezzor பிரதேசத்தில் சிரிய அரச படையினரும் இரசியத் தனியார் படையினரும் ஒரு கூட்டுத் தாக்குதலை முன்னறிவித்தல் ஏதுமின்றி மேற்கொண்டனர். அமெரிக்க வான்படையினர் செய்த பதலடித் தாக்குதலால் முன்னூறுக்கும் மேற்பட்ட இரசியத் தனியார் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதை இரசியா பகிரங்கப்படுத்தவில்லை. 1950-ம் ஆண்டு நடந்த கொரியப் போரின் பின்னர் அதிக அளவிலான இரசியர்களை அமெரிக்கப்படை அங்கு கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர்
அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பிரச்சனைக்குரிய ஒன்றாக ஈரானும் இருக்கின்றது. இரு நாடுகளும் ஈரான் அணுக்குண்டு உருவாக்குவதை விரும்பவில்லை. ஆனால் ஈரானுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக இரத்துச் செய்ததை இரசியா எதிர்க்கின்றது. ஈரானுக்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா செய்ய வேண்டும் என சவுதி அரேபியாவும் இரகசியமாகத் தூண்டுகின்றன.
மத்திய அமெரிக்கா
சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்கவைப்பதில் விளடிமீர் புட்டீன் காட்டிய அக்கறையை வெனிசுவேலாவில் நிக்கொலஸ் மதுராவின் ஆட்சியைத் தக்கவைப்பதில் காட்டவில்லை. ஆனால் சிரியாவில் செய்தது போல் வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகக்ளுக்கு குந்தகம் விளைவிப்பதில் புட்டீன் அக்கறை காட்டுகின்றார். அதனால் சிரியாவிற்கு அனுப்பியது போல் வெனிசுவேலாவிற்கு இரசியப் படைகளை அனுப்பவில்லை. அனுப்பப்போவதுமில்லை. ஆனால் கடந்த ஓராண்டாக டொனால்ட் டிரம்ப் தன் உயர் அதிகாரிகளுடனும் பல உலகத் தலைவர்களுடனும் வெனிசுவேலாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது பற்றி உரையாடிவருகின்றார் மத்திய அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டிரம்ப்-புட்டீன் சந்திப்பில் வெனிசுவேலா முக்கிய இடம்பெறும்.
கரிசனை கொள்ளும் ஐரோப்பா
இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து இரசியாவை எதிர்த்து வந்த ஐரோப்பிய நாடுகள் தங்களை அமெரிக்காவை முதன்மைப் படுத்தும் கொள்கை கொண்ட டிரம்ப் விற்றுவிடுவாரோ எனக் கரிசனையடைந்துள்ளன. குறிப்பாக உக்ரேனை டிரம்ப் கால்வாருவாரா என்ற கரிசனை அதிகமாக உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீளவும் இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கொளையுடையவர் புட்டீன். பத்து ஆண்டுகளுக்குமேல் ஆட்சியில் இருக்கும் முன்னாள் இரசிய உளவுத் துறை உயர் அதிகாரியான புட்டீன் ஏமாற்றிவிடுவாரா என்ற கரிசனையும் பலரிடம் உள்ளது. 2018இல் புட்டீன் தேர்தலில் வெற்றி பெற்ற போது அவருக்கு வாழ்த்துச் செய்தை அனுப்ப வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை டிரம்ப்பிற்கு அறிவுரை சொல்லியிருந்தது. அதைப் புறக்கணித்து தனது வாழ்த்தைத் தெரிவித்தவர் டிரம்ப் என்பதையும் ஐரோப்பியர் அறிவர். ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்பாத டிரம்ப் அதற்கு எதிராகவும் தனது வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளார்.
நேட்டோ
டிரம்ப் நேட்டோ என்பது காலவதியான் ஒன்று என்ற கொள்கையுடையவர். டிரம்ப் புட்டீனைச் சந்திப்பதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக அதாவது ஜூலை 11-ம் திகதியும் 12-ம் திகதியும் நேட்டோவின் உச்சி மாநாட்டில் புட்டீனைத் திருப்திப்படுத்தும் வகையில் டிரம்ப் செயற்படலாம் எனவும் மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே நோர்வே, ஜேர்மனி, கனடா, பெல்ஜியம் ஆகியவை உட்படப் பல நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அவற்றின் பாதுகாப்புச் செலவை உயர்த்தும்படி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்வுக்கான குழு 2016 நடந்த அமெரிக்கத் தேர்தலில் இரசியா தலையிட்டது என்பதை 2018 ஜூலை முதல் வாரத்தில் உறுதி செய்துள்ளது. அதனால புட்டீனால் தேர்தலில் வெற்றி பெறவைக்கப்பட்டவர் என்ற குற்றத்தைச் சுமந்து நிற்கும் டிரம்பால் புட்டீனுக்காக எந்த விட்டுக் கொடுப்பையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக புட்டீன் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடு தொடர்பான விசாரணையை நிறுத்தும் கோரிக்கையை இரகசியமாக முன்வைக்கலாம். அது ஆளும் குடியரசுக் கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தலாம். உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி என்ற நிலையை உருவாக்காமல் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நல்லபடியாக நிறைவேறாது.

Friday, 6 July 2018

திறக்காத சீனக் கதவுகள் உடைக்கப்படுமா?

சீனாவிற்கு என்று ஒரு மிக நீண்ட வரலாறும் கலாச்சாரமும் இருக்கின்ற போதிலும் அதன் தற்போதைய ஆட்சி முறைமையும் பொருளாதாரக் கட்டமைப்பும் மிகவும் புதியதும் வளர்ச்சியடையாத ஒன்றுமாகும் என மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்ற போதிலும் அது தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியைப் பேணி வருகின்றது. எந்த ஒரு முதலாளித்துவ நாடும் அப்படி ஒரு சாதனையை செய்ததில்லை. 1978-ம் ஆண்டு சீனா செய்த பொருளாதாரச் சீர்திருத்தம் எண்பது கோடி மக்களின் வறுமையை நீக்கியது எனச் சொல்வதா அல்லது மேற்கு நாடுகளில் நிலவிய தாராண்மைவாதத்தை சீனா பயன்படுத்தி தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியது எனச் சொல்வதா?

மேற்கு நாடுகளில் பணவீக்கம் பெரும் பிரச்சனையாக இருந்த போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலிவான பொருட்கள் பணவீக்கத்தைத் தணிக்க உதவின. சீனாவின் பொருளாதாரம் வளர்ந்தால் சீனா தமது நாடுகளில் இருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளும் அதனால் தமது நாடுகளின் பொருளாதாரம் நன்மையடையும் என மேற்குலகில் உள்ள தாராண்மைவாத ஆட்சியாளர்கள் நம்பினர். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக சீனா மேற்கு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதி அது அந்த நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியிலும் பார்க்கக் குறைவாகவே உள்ளது. இந்த நிலை தொடர முடியாது சீனா தனது நாட்டுக்கான ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது தனது பொருளாதாரத்தைத் மற்ற நாடுகளுக்கு திறந்துவிடக்கூடிய வகையில் பொருளாதாரச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் உலக அரங்கில் வலிமையடையும் வேளையில் மேற்கு நாடுகள் பலவற்றில் தாராண்மைவாதிகள் தேர்தலில் தோல்வியடைந்து தேசியவாதிகள் ஆட்சிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அதன் ஏற்றுமதி 18 விழுக்காடாக இருக்கின்றது. 2017-ம் ஆண்டு சீனா அமெரிக்காவிற்குச் செய்த ஏற்றுமதி 506பில்லியன் டொலர்கள் பெறுமதியானது. ஆனால் சீனா அமெரிக்காவில் இருந்து செய்த இறக்குமதியின் பெறுமதி 130பில்லியன் டொலர்கள் மட்டுமே. இதுதான் அமெரிக்கத் தேசியவாதிகளை ஆத்திரப்படுத்துகின்றது. இதனால்தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் அதிகரித்து வர்த்தகப் போர் தொடுத்துள்ளார். பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை அதிகரிக்கின்றது. ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது அதிக ஏற்றுமதி செய்யும் சீனாவே என டொனால்ட் டிரம்ப் நம்புகின்றார். அது மட்டுமல்ல மேற்குலகத் தேசியவாதிகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதன் படைத்துறைவளர்ச்சிக்கே வித்திடுகின்றது. எமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அப்பணத்தில் படைக்கலன்களை உருவாக்கி எமது நாடுகளுக்கே அச்சுறுத்தல் கொடுக்கும் நாடாக சீனா உருவாகின்றது என மேற்குலகத் தேசியவாதிகள் ஆத்திரப்படுகின்றார்கள். சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை விரும்பவில்லை. உள்நாட்டு மக்களின் கொள்வனவை அதிகரிக்கவே அது விரும்புகின்றது. அதற்கு உள்நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் சீனா எந்த ஒரு உற்பத்தியையும் ஏற்றுமதி செய்ய முடியாதவாறு சீனப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.
சீனா தனது ஏற்றுமதியால் கிடக்கும் பணத்தைக் கொண்டு மேற்குலக வர்த்தக நிறுவனங்களை வாங்கி அவற்றின் தொழில்நுட்பத்தை தனதாக்கிக் கொள்கின்றது என்பதையிட்டும் மேற்குலகத் தேசியவாதிகள் கரிசனை கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல சீனா இணையவெளியூடாக தமது தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவும் அமெரிக்கா சீனாமீது இறக்குமதிக்கான வரி அதிகரிப்பால் செய்யப்படும் வர்த்தகப் போரின் ஒரு காரணியாகும்.

தமதமாகும் திருத்தம்
சீனா தனது பொருளாதாரத்தைச் சீர்திருத்தம் செய்வேன் என்றும் தனது நாட்டுப் பொருளாதாரம் திறந்து விடப்படும் என்றும் கடத்த பல பத்தாண்டுகளாக அடிக்கடி சொல்லி வந்தாலும் அது நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. சீனாவின் பொருளாதாரம் சீர்திருத்தம் செய்யப் படும்போது அத்துடன் இணைந்த அரசியற் சீர்திருத்தமும் செய்யப்படவேண்டும் என்பதே சீனப் பொதுவுட்மைக் கட்சிக்காரர்களின் அச்சமாகும். அரசியற் சீர்திருத்தம் பலகட்சி முறைமையைக் கொண்டுவரும் அது பொதுவுடமைக் கட்சியின் ஆதிக்கத்தைப் பாதிக்கும். திறந்த பொருளாதாரம் நாட்டில் ஆட்சியின் பிடியைத் தளர்த்துவதுடன் சீனாவில் மேற்குகலக ஊடக ஆதிக்கத்திற்கும் வகுக்கும். அதனால் சீனப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கைகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் சீர்திருத்தங்களைக் கொண்டு வராமல் தனது பிடியை கட்சியும் ஆட்சியிலும் இறுக்கினார்.

சீனாவில் உள்நாட்டுக் கிளர்ச்சி
சீனா தனது பொருளாதாரக் கதவுகளைத் திறக்காவிடில் அதை வெளியில் இருந்து உடைக்கும் முயற்ச்சி அதற்கு எதிரான வர்த்தகப் போராகும். அதை உள்ளிருந்து உடைப்பது என்பது சிரமமான ஒன்றாகும். சீன அரசு தனது குடிமக்கள் மீதான தனது கண்காணிப்பை நவீன கருவிகளைக் கொண்டு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் முன்னாள் படைவீரர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்துள்ளனர். சீனாவின் முன்னாள் படைவீரர் ஒருவர் தனக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மனுவைக் கொடுக்கச் சென்றிருந்த வேளையில் அவர் காவற்துறையினரால் தாக்கப்பட்டார். இதை ஆட்சேபித்து பல்லாயிரக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ஆட்சேபணை தெரிவுக்கும் கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதிக வயதான மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் ஓய்வூதியக் கொடுப்பனவு ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவில் 57மில்லியன் முன்னாள் படைத்துறையினர் இருக்கின்றனர். இவர்களின் அடியை ஒட்டி மற்ற முன்னாள் அரச ஊழியர்களும் போராட்டம் செய்யலாம். அது ஒரு போராட்டக் கலாச்சாரத்தை சீனாவில் வளரச் செய்ய வாய்ப்புண்டு. அதற்கு எதிராக சீன அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் அது அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக உருவெடுக்கலாம். இது சீனாவின் கதவுகளை உள்ளிருந்து உடைக்கும் நிலைமையை ஏற்படுத்தும். அதற்கு மேற்கு நாடுகள் தூபமிடலாம். ஆனால் அதை எல்லாம் அடக்கும் அனுபவம் சீனாவிற்கு உண்டு.

சீனா மாற்றி யோசிக்குமா?
சீனா தனது வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மேற்கு நாடுகளில் தங்கி இருக்காமல் அதன் அயல்நாடான இந்தியாவுடன் தனது வர்த்தகத்தை வளர்க்கலாம். 2017-ம் ஆண்டு இந்தியாவையும் பாக்கிஸ்த்தானையும் சீனாவும் இரசியாவும் உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைத்துக் கொள்ள சீனா சம்மதித்தது. 1956-ம் ஆண்டு கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை உருவாக்குவதில் இருந்து மற்ற நாடுகளுடன் இணைந்து செயற்பட்ட இந்திய இப்போது அந்த அமைப்பில் இருந்து மெதுவாக நழுவிக் கொண்டு மேற்கு நாடுகளுடன் கூட்டுச் சேருகின்றது. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுற்கு வந்த பின்னர் அந்த அமைப்பு தேவையற்ற ஒன்றாகிவிட்டது என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். சீனப் பொருளாதாரமும் படைத்துறையும் துரிதமாக வளர்வதால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்க அது மேற்கு நாடுகளுன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை உருவானது. இந்தியாவின் பழப் பெரும் அரசுறவியல் ஞானியான சாணக்கியரின் போதனை “உன் அயலவன் உனக்கு இயற்கையாகவே எதிரியாக இருப்பான். அதனால் அவனுக்கு எதிரியாக உள்ள அவனது அயலவனுடன் நீ நட்பை வளர்த்துக்கொள்” என்பதாகும். பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வியாபித்து இருப்பதல் அது சீனாவின் ஓர் அயல் நாடுபோல் இருக்கின்றது. இதனால் இந்தியா
அமெரிக்கா, ஜப்பானுடன், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளின் நட்பாக இருக்க வேண்டிய நிலை உருவானது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா இந்தியாவுடன் அதிக அளவு தொழில்நுட்ப ஒத்துழைப்பைச் செய்கின்றது. அதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் இந்தியா LEMOA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் The Logistics Exchange Memorandum of Agreement ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அதன் படி இந்தியாவின் படை நிலைகளை அமெரிக்கா தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் படைத்துறை நிலையை அமெரிக்காவிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. 2007-ம் ஆண்டு ஜப்பானியத் தலைமை அமைச்சரின் முயற்ச்சியால் நான்முனைப் பாதுகாப்பு உரையாடல் என்னும் அதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் இந்தியா LEMOA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் The Logistics Exchange Memorandum of Agreement ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அதன் படி இந்தியாவின் படை நிலைகளை அமெரிக்கா தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் படைத்துறை நிலையை அமெரிக்காவிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. 2007-ம் ஆண்டு ஜப்பானியத் தலைமை அமைச்சரின் முயற்ச்சியால் அலுவல் முறைசாரா அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் செயற்பாடுகளில் ஒன்றாக மலபார் போர்ப்பயிற்ச்சி செய்யப்படுகின்றது. இப்போர்ப்பயிற்ச்சி வரலாறு காணாத பெரிய போர்ப்பயிற்ச்சியாகக் கருதப்படுகின்றது.

இந்தியாவை இழுக்க முயன்ற சீனா
இந்திய சீன உறவில் எல்லைப் பிரச்சனை பல ஆண்டுகளாக தீர்க்க முடியாததாக இருக்கின்றது. இப்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை எனப்படும் One Belt One Road Initiative மேலும் ஒரு பிரச்சனையை இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பிரச்சனையை உருவாக்கியுள்ளது. அதன் ஒரு அம்சமான சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான பொருளாதாரப் பாதை பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் ஊடாகச் செல்கின்றது. முழுக் கஷ்மீரும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் இந்தியா அதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமது பட்டுப்பாதையில் சீனா இணைய வேண்டும் என வேண்டுதலும் விடுத்திருந்தார். சீனாவின் புதிய பட்டுப்பாதையைக் பகிரங்கமாக எதிர்க்கும் இந்தியா அந்த வேண்டு கோளைப் பற்றி ஏதும் சொல்லவைல்லை.

அமெரிக்காவைச் சீண்ட சீனா தயங்குவதில்லை
ஜிபுக்தியிலும் பசுபிக் கடற்பிராந்தியத்திலும் அமெரிக்கப் போர் விமானிகளின் பார்வைக்கு குந்தக்கம் ஏற்படும் வகையில் சீனா அவர்களை நோக்கி லேசர் கதிர்களைப் பாய்ச்சுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இது ஒரு போர் என்று வரும் போது வலிமை மிக்க
அமெரிக்க வான்படையை எப்படிக் கையாள்வது என்பதை சீனா பரீட்சித்துப் பார்கின்றது போல் இருக்கின்றது. சீனாவின் இந்தப் படைத்துறை ரீதியான தன்னம்பிக்கையை உடைக்க மேற்கு நாடுகள் பொருளாதார அடிப்படையில் சீனாவைச் சிதைக்கச் சதி செய்யலாம்.

Monday, 25 June 2018

தாராண்மைவாதத்தை பிரபல்யவாதிகள் தோற்கடிப்பார்களா?

தனி மனிதருடைய சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் தாராண்மைவாதத்தின் நோக்கங்களாகும். மனிதன் இயற்கையாகவே சுதந்திரமானவனும் தற்சார்புடையவனும் என்ற அடிப்படையிலேயே தாராண்மைவாதம் உருவாக்கப்பட்டது. அரசு தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில் அரசிடம் இருந்தே தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது தாராண்மைவாதிகளின் எண்ணம். பிழையான ஆட்சியாளர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகள் தனிமனித சுதந்திரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. உலகின் மக்களாட்சியற்ற பல நாடுகளின் வாழும் மக்கள் தாராணமைவாதம் வேண்டி நிற்கையில் தாராண்மைவாதத்திற்கு மக்களாட்சி நிலவும் நாடுகளிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சில தாராண்மைவாதிகள் கருதுகின்றனர்.

போருக்கும் பின் அமைதி
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவைப் போல் மீண்டும் ஓர் அழிவு வரக் கூடாது என்பதில் தாராண்மைவாதிகள் அதிக கவனம் செலுத்தினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரிய நாடுகளிடையே போர் நடக்காமல் இருப்பதை தாராண்மைவாதிகள் உறுதி செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ச்சியாக ஏற்படுத்துவதில் தாராண்மைவாத ஆட்சியாளர்கள் சில வெற்றிகளையும் கண்டனர். உலக நாடுகள் எல்லாம் தாராண்மைவாதிகளால் ஆளப்பட வேண்டும் என்பதில் தாராண்மைவாதிகள் அதிக அக்கறை காட்டினர். அதற்காக பல தீய வழிகளில் ஆட்சி மாற்றங்களையும் செய்தனர். மனித உரிமை என்ற கூச்சல் அவர்களது ஆட்சிகளை மாற்றும் நடவடிக்கைகளுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

முதலாளித்துவத்தின் ஒரு முகமூடிதான் தாராண்மைவாதம்
முதலாளித்துவம் என்பது சொத்துக்கள் தனிப்பட்டவர்களுக்கு உரியது அரசுக்கு உரியதல்ல என்பதை முக்கியமாக அம்சமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவம் பொருளாதாரத்தில் தனிநபர் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்றது. முதலாளிகளுக்கு இடையில் சந்தை அடிப்படையிலான போட்டி சரியான முறையில் நடப்பதை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி என்பது முதலாளித்துவவாதிகளின் கொள்கையாகும். சந்தையின் செயற்பாடுகளில் அரசு தலையிடுவதை முதலாளித்துவவாதிகள் எதிர்க்கின்றார்கள். முதலாளித்துவத்தின் இன்னொரு முகமூடிதான் தாராண்மைவாதம் எனவும் கருதப்படுகின்றது.

நேட்டோவும் தாராண்மைவாதமும்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேற்கு நாடுகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் உலகில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் தாராண்மைவாத ஒழுங்கு இப்போது பெரும் சவாலை அந்த நாடுகளில் இருந்தே எதிர் கொள்கின்றது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாராண்மைவாதம் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு என்பது அமெரிக்கா தலைமையிலான தாராண்மைவாத ஒழுங்கை உலகெங்கும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது.  தாராண்மைவாதத்தை எதிர்க்கும் டொனால்ட் டிரம்பினுடைய இலக்குகளில் ஒன்று நேட்டோவைக் கலைப்பதுதான்.

குடிவரவும் தாராண்மைவாதமும்
எழுபது ஆண்டுகளாக மேற்கு நாடுகள் உலகில் கட்டி எழுப்பிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட தாராண்மைவாத ஒழுங்கிற்கு 2016-ம் ஆண்டு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் சவால் விடப்பட்டது. தாராண்மைவாதத்தின் எதிரிகளின் முகாமைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற பிரித்தானியாவில் தராண்மைவாதத்தின் விரோதிகள் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறச் செய்வதற்கான முன்னேற்பாட்டில் வெற்றி கண்டனர். தாராண்மைவாதிகள் குடிவரவிற்கு ஆதரவாகச் செயற்பட்டமையே அவர்களின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. தாராண்மைவாதிகள் மக்களின் சமூகநலன்களில் அக்கறை காட்டுவதால் அவர்களின் தலைமையிலான அரசுகள் அதிக செலவீனங்களைச் செய்ய வேண்டி ஏற்ப்பட்டது. அரச கடன்கள் கட்டுக்கடங்காமல் போயின. மக்கள்மீது வரிச்சுமை அதிகரிக்கப்பட்டன.

பிரபல்யவாதத்தின் எழுச்சி
21-ம் நூற்றாண்டின் உருவான பிரச்சனைகளில் ஆபத்தானது பிரபல்யவாதம். அது சாதாரண மக்களின் கரிசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. பொதுவாக சாதாரண மக்கள் குறுகிய கால நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்வர். மொத்த மனித இனத்தின் நன்மைகளையோ அல்லது மொத்த தேச நலனையோ பற்றி அதிகம் சிந்திக்காமல் தம் தனிப்பட்ட நலன்களில் அவர்கள் அக்கறை செலுத்துவர் என பிரபல்யவாதத்தை எதிர்ப்போர் கருதுகின்றனர். பிரபல்யவாதம் 19-ம் நூற்றாண்டில் இரண்டு தடவைகள் அமெரிக்காவில் எழுச்சியுற்றது. முதலாவது 1855இல் அயர்லாந்தில் இருந்தும் ஜேர்மனியில் இருந்தும் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக உருவானது. இரண்டாவது 1873-ம் ஆண்டு விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கரிசனையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அதற்கென உருவான கட்சி ஐந்து ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. மேற்தட்டு மக்களின் கரிசனையை அடிப்படையாகக் கொண்டதுதான் தாராண்மைவதம் எனப் பிர்பல்யவாதிகள் வாதிடுகின்றனர். பிரபல்யவாதிகள் தம்மை வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் எதிரானவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர்.

ஆட்சியதிகார பிரபலவாதிகள்
உலகெங்கும் ஆட்சியதிகார பிரபலவாதிகள் (authoritarian populists) தேர்தல் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றுவது 2016-ம் ஆண்டின் பின்னர் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதில் இரசிய விளடிமீர் புட்டீனும் துருக்கியின் எர்டோகனும் முக்கியமானவர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தாராண்மைவாதம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பொதுவுடமைவாதத்தை அகற்றின. இப்போது அங்கிருந்து தாராண்மைவாதத்தை பிரபல்யவாதிகளும் வலதுசாரிகளும் அகற்றுகின்றார்கள்.

திசைமாறிய அஞ்செலா மேர்க்கல்
ஜேர்மனித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த அஞ்செலா மேர்க்கல் குடிவரவு தொடர்பான தனது கொள்கையை மாற்றுகின்றார். போலாந்திலும் ஹங்கேரியிலும் தேர்தல் மூலம் தாராண்மைவாதத்தை எதிரிப்பவர்கள் அதிலும் முக்கியமாக குடிவரவு சுதந்திர ஊடகம் ஆகியவற்றிற்கு எதிரானவர்கள் பதவியைக் கைப்பற்றினர். சுவீடனிலும் நெதர்லாந்திலும் தாராண்மைவாதத்திற்கு எதிரான தீவிரவாதங்களைக் கொண்டவர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெறுகின்றனர். தாராண்மைவாதத்திற்கு எதிரானவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் நாடுகளின் வரிசையில் இத்தாலியும் இணைந்து கொண்டது.

 சோவியத்தின் எழுச்சி
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நாற்பத்தைந்து ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் படைக்கலத் தொழில்நுட்ப அடிப்படையிலும் படை வலு அடிப்படையிலும் மேற்கு நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் ஒரு போர் மூண்டால் பேராபத்து விளைவிக்கக் கூடிய நிலையிலும் இருந்த படியால் போர் தவிர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெரும் போர் ஏதும் முளாமல் இருப்பதற்கு தாராண்மைவாதம் முழு உரிமை கொண்டாட முடியாது.

 அமெரிக்க வீழ்ச்சி
இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகச் செல்வத்தில் மூன்றில் இரண்டு பகுதியை தன்னிடம் வைத்திருந்தது. 1960இல் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியில் 40விழுக்காடாகக் குறைந்தது. 1980இல் அது மேலும் குறைந்து 26விழுக்காடானது. தற்போது அது மேலும் குறைந்து 22விழுக்காடாக உள்ளது. அமெரிக்கா பொருளாதார ரீதியில் உலகில் செலுத்திய ஆதிக்கம் வலுவிழக்கும் நிலையில்தான் அமெரிக்கா முதன்மையாக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் மக்களிடையே செல்வாக்குப் பெற்றார். தாராண்மைவாதத்தை ஒழித்துக் கட்டாவிட்டால் அது தனது நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு முயலும் என உணர்ந்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட இரகசியமாகச் செயற்பட்டிருக்கலாம்.
பிரபல்யவாதிகள் மேற்கு நாடுகளில் செல்வாக்கு பெறுவதற்கு முக்கிய காரணம் அந்த நாடுகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களே. பல மேற்கு நாட்டு நகரங்களில் சுதந்திரமாக நடமாட முடியாது என்ற நிலை உருவாகலாம் என்ற அச்சமே குடிவரவிற்கு எதிரான கொள்கையுடையோரைப் பிரபலப்படுத்தியது. பல ஐரோப்பிய நகரங்களில் குடிவரவாளர்களின் எண்ணிக்கை உள்நாட்டு மக்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்தது. இலண்டன் உட்படப் பல முக்கிய நகரங்களில் குடிவரவாளர்கள் நகரபிதாக்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

பிரபல்யவாதிகள் குறை சொல்ல மட்டுமே
பிரபல்யவாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கூச்சலில் சிறந்து விளங்குவது போல் ஆட்சிக்கு வந்தபின்னர் சிறந்த ஆட்சியை வழங்குவதில்லை. அவர்களால் தாராண்மைவாதிகள் ஏற்படுத்திய “ஒழுங்கை” குழப்ப முடியும் ஆனால் அவர்களால் தமது பாணியில் ஓரு ஒழுங்கை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல. தாராண்மைவாதிகள் பல ஆண்டுகள் முயற்ச்சித்து வளர்த்த நாடுகளிடையேயான வர்த்தகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வர்த்தகப் போர் எனப்படும் இறக்குமதித்தீர்வை அதிகரிப்பு இறக்குமதிக் கடுப்பாடு போன்றவற்றால் குழப்ப முடியும். ஆனால் உலக வர்த்தகம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி குன்றலை தடுக்க முடியாது. அமெரிக்காவில் வெற்றி பெற்ற பிரபல்யவாதியால் உறுதியான தலைமையைக் கொடுக்கக் கூடிய நிலை நிலவுகின்றது. ஆனால் டிரம்பால் ஓர் உறுதியான அரச முகாமையை இன்னும் கட்டி எழுப்ப முடியவில்லை. அமெரிக்க அதிபருக்கு இருக்கும் அதிக அதிகாரம் அவரை உறுதியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. பிரித்தானியாவில் வெற்றி பெற்ற பிரபல்யவாதிகளால் ஓர் உறுதியான தலைமைய வழங்க முடியவில்லை. தாராண்மைவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் இருந்து பின்வாங்கினர். ஆளும் கட்சியிலேயே செல்வாக்கில்லாத தெரெசா மே தலைமை அமைச்சராக இருந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கின்றார்.

விதிகளை மீறுவது
உலக வர்த்தக அமைப்பு என்பது விதி அடிப்படியிலான தாராண்மைவாதிகளால் உருவாக்கப்பட்டது. அதன் நடைமுறைகளை மீறியச் செயல்களைப் பிரபல்யவாதிகள் செய்கின்றனர். ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு விரோதமாக டிரம்ப் ஜெருசேலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத்தூதுவரகத்தை அமைத்தார்


அரசுறவியல் மரபுகளை மீறும் பிரபல்யவாதிகள்
பிரபல்யவாதிகள் அவ்வப்போது சொல்லும் கருத்துக்கள் நாகரீக வளர்ச்சியடைந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அவர்கள் குடிவரவாளர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் மனிதாபிமானமற்றவையாகவும் இருக்கின்றன. உலகப் பொருளாதார மேம்பாட்டிற்கோ அல்லது அமைதிக்கோ அவர்களால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்களது வெற்றி தற்காலிகமானதே. தாராண்மைவாதம் தம்மீது வரிச்சுமையை அதிகரிக்கின்றது என்பதால் பெருமுதலாளிகளால் களமிறக்கப்பட்டவர்களே பெரும்பாலான பிரபல்யவாதிகளாக இருக்கின்றனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...