Tuesday, 24 July 2018

நேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்சனை


நேட்டோ அமெரிக்காவிற்கு நியாயமற்ற ஒரு நிதிச் சுமை என்றும் நேட்டோ காலாவதியான ஓர் அமைப்பு என்றும் அடிக்கடி முழங்கிக் கொண்டிருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மேற்கு ஐரோப்பாவிற்கு பொதுவுடமைவாதம் பரவுவதை தடுக்க வேண்டிய அவசியம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க ஐக்கிய அமெரிக்காவிற்கே இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தையாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளைக் கட்டியெழுப்பும் பணியில் வர்த்தக அடிப்படையில் இலாபமீட்டுவதற்கு சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைவாதம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949 ஏப்ரல் மாதம் 4-ம் திகதி உருவாக்கப்பட்டது.

நேட்டோவின் தாரக மந்திரம்
வின்ஸன் சேர்ச்சிலின் படைத்துறைச் தலைமை உதவியாளராக இருந்து பின்னர் நேட்டோ ஆரம்பித்த போது அதன் முதலாவது செயலாளர் நாயகமாகப் பதவி ஏற்றவருமான ஹாஸ்டிங் இஸ்மே ஐரோப்பாவிற்குள் ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டு வாருங்கள், இரசியாவை அகற்றுங்கள், ஜேர்மனியை அடக்குங்கள் எனச் சொல்லியது நீண்டகாலமாக பிரித்தானியாவின் தாரக மந்திரமாக இருக்கின்றது. பல மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டு செயற்பட்டன. அதனால் நேட்டோவில் அமெரிக்க முக்கியமான நாடாக இருந்து வருகின்றது. ஐரோப்பாவில் அதிக அளவு மக்கள் தொகையும் மிகப்பாரிய நிலப்பரப்பும் பெரும் கனிம வள இருப்பும் கொண்ட நாடு இரசியா. அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பொதுவுடமைவாதம் ஆங்கிலக் கால்வாய்வரை இரசியாவால் பரப்பப்படலாம் என்ற அச்சம்தான் 1952இல் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கியது.

தொடரும் இரசிய அச்சம்
தற்போது நேட்டோவில் உள்ள நாடுகள் இரசியாவையிட்டு வேறு வேறான அச்சம் கொண்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இரசியகளால் தமது நாட்டுக்குள் வர முடியாது இரசிய விரிவாக்கத்தை அதன் எல்லை நாடுகளிலேயே வைத்து அடக்கிவிடலாம் எனப் பிரித்தானியர்கள் நம்புகின்றனர். எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளை இரசியாவால் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும் என அந்த நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர். அவர்களில் பலர் சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் இரசியாவின் காலனித்துவ நாடுகளாக இருந்து பட்டது போதும் எனக் கருதுகின்றனர்.

வளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.

சேர்த்த சொத்தைப் பாதுகாக்க வேண்டிய அமெரிக்கா
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

பங்காளிகளின் பங்களிப்பு
நேட்டோவின் பாதுகாப்பின் 90 விழுக்காட்டை அமெரிக்காவில் செலவில் நடக்கின்றது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பில் கருத்துப் பிழையானது, அமெரிக்காவின் பங்களிப்பு 22 விழுக்காடு மட்டுமே என நேட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர். நேட்டோ நாடுகள் பாதுகாப்பிற்கான தமது செலவை மொத்தத் தேசிய உற்பத்தியின் 4 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டன என்றார் டிரம்ப். கனடியத் தலைமை அமைச்சரும் ஜேர்மனியின் அதிபரும் அப்படி எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றனர். டிரம்ப் இப்படிக் குழப்பிக் கொண்டிருக்க அமெரிக்கா தொடர்ந்தும் நேட்டோவின் முங்கிய பங்காளராகச் செயற்படும் என மற்ற நாடுகளை நம்பவைக்கும் முயற்ச்சியில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

ஜேர்மனி
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியில் 32,000 அமெரிக்கப்படையினர் நிலை கொண்டுள்ளனர். ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு என அவர்கள் அங்கு இருக்கின்றனர். நேட்டோவின் உச்சி மாநாடு பிரஸ்ல்ஸில் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அந்நிய நாட்டுப் படைகள் இருப்பது தொடர்பான கருத்துக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் 42 விழுக்காட்டினர் அந்நிய நாட்டுப்படைகள் ஜேர்மனியில் இருக்கக் கூடாது எனவும் 37 விழுக்காட்டினர் இருக்கலாம் எனவும் 21 விழுக்காட்டினர் தெரியாது எனவும் கண்டறியப்பட்டது. ஜேர்மனியின் பாதுகாப்புச் செலவு டிரம்ப் சொல்வது போல் மொத்தத் தேசிய உற்பத்தியின் 2விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதை 72விழுக்காடு ஜேர்மன் மக்கள் எதிர்த்துள்ளனர்.

துருக்கியும் நேட்டோவும்
 ஆரம்ப காலம் தொட்டே நேட்டோவின் உருப்பு நாடாக இருக்கும் துருக்கி அண்மைக்காலங்களாக இரசியாவுடன் அதிக நட்பு பாராட்டி வருகின்றது. துருக்கிய அதிபர் ரிசெப் எர்டோகன் தனது அதிகாரங்களை அதிகரிப்பது நேட்டோவின் மக்களாட்சி நியமங்களுக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எர்டோகனின் அரசியல் எதிரிகள் அமெரிக்காவில் இருந்து செயற்படுவதை அவர் கடுமையாக எதிர்ப்பதுடன் அவர்களை நாடுகடத்த வேண்டும் என விரும்புகின்றார். அமெரிக்கா தனது தாட் எனப்படும் ஏவுகணை முறைமையை துருக்கிக்கு விற்பனை செய்யத் தயங்குகின்றது. இதனால் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை துருக்கி வாங்க முடிவு செய்தது. இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நேட்டோவின் மற்ற நாடுகளின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளின் உணரிகளுடன் இணைக்கக் கூடாது என அமெரிக்கா உட்படப் பல நேட்டோ நாடுகள் ஆட்சேபிக்கின்றன. எல்லாவற்றிலும் மேலாக துருக்கியின் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையும் விருப்பத்திற்கு பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வலிமை மிக்கதும் அதிக தன்னிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்டதுமான துருக்கி என்னும் இஸ்லாமிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஜேர்மனி இரகசியமாக கடுமையாக எதிர்க்கின்றது. அந்த விரக்தியை துருக்கி நேட்டோவிற்கு பிரச்சனை கொடுக்கக் கூடிய நடவடிக்கையால் வெளிப்படுத்துகின்றது.

எண்மியப் பாதுகாப்பு
எண்மியப் பாதுக்காப்கூட்டறிக்கையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 26 தடவைகள் இணையவெளி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. எண்மியப் பாதுகாப்பிற்கு (digital security) என இரண்டு பிரிவுகள் கூட்டறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தன. இணையவெளிச் செயற்பாட்டகம் ஒன்று பெல்ஜியத்தில் கூட்டுப்படைக் கட்டளையகம் (Joint Force Command)  என்னும் பெயரில் உருவாக்கப்படும். இச்செயற்பாட்டகத்தின் தலைமை நிலையம் அமெரிக்க வெர்ஜீனியா மாநிலத்தில் நோஃபோர்க்கில் அமைக்கப்படும். நேட்டோவின் எல்லா உறுப்பு நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு முறைமை ஒன்றிணைக்கப்படும். இதை எல்லா நாடுகளும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.  உக்ரேன் நாட்டின் இணையவெளிப்பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. உக்ரேனில் வரவிருக்கும் பொதுத் தேர்தலிலும் இணையவெளியூடான வெளியார் தலையீட்டைத் தடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஆளணிச் சம்பளச் செலவும் உபகரணச் செலவும்
பிரித்தானியாவினதும் அமெரிக்காவினதும் பாதுகாப்புச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அதன் படையினருக்கான சம்பளமாக இருக்கின்றது. அமெரிக்கப்படையினரின் சம்பளம் 2001-ம் ஆண்டில் இருந்து 2017வரை எண்பத்தி ஐந்து விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செலவு என்பது மட்டும் பாதுகாப்பை உறுதி செய்யாது. போர் என்று வரும்போது நேட்டோ நாடுகள் ஒவ்வொன்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கு எத்தனை படையினரை களத்தில் இறக்கும், அவர்கள் எந்த அளவு அர்ப்பணிப்புடன் போர் புரிவார்கள், எந்த வகையான படைக்கலன்களை களத்தில் ஒவ்வொரு நாடும் பாவிக்கும் எந்த அளவு திறனுடன் படையினரும் படைக்கலன்களும் செய்ற்படுத்தப்படும் என்பதே முக்கியமானதாகும். அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு மற்ற நேட்டோ நாடுகளைப் பாதுக்காக்க மட்டும் செய்யப்படுவதல்ல. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட உலகெங்கும் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்களையும் படையினரையும் பராமரிக்க செய்யப்படும் செலவை மற்ற நேட்டோ நாடுகளின் செலவுடன் ஒப்பிட முடியாது.  இரசியா தனது பாதுகாப்புச் செலவில் ஐம்பது முதல் அறுபது விழுக்காட்டை படைக்கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு செலவு செய்கின்றது. இந்த விழுக்காடு பிரித்தானியாவில் 21 ஆகவும் ஜேர்மனியில் 14 ஆகவும் கனடாவில் 17 ஆகவும் பெல்ஜியத்தில் ஐந்து ஆகவும் இருக்கின்றது.

மறக்க முடியாத இரு உலகப் போர்கள்
பல பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் நேட்டோ இல்லாமல் பல சிறிய ஐரோப்பிய நாடுகளால் தாக்குப் பிடிக்க முடியாது. அமெரிக்கா நேட்டோவில் இருந்து விலகிச் சென்றால் மேற்கு ஐரோப்பியப் பாதுகாப்பை ஜேர்மனி உறுதி செய்ய வேண்டி நிலை ஏற்படும். ஜேர்மனி படைத்துறையில் வலிமையடைய நிர்ப்பந்திக்கப்படும். வலிமை மிக்க ஜேர்மனியால் இரண்டு உலகப் போர்கள் உருவானதை மற்ற ஐரோப்பிய நாடுகள் மறக்கவில்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...