Monday, 23 February 2015

சீனாவை ஜப்பான் அடக்குமா?

ஜப்பான் தனது அமைதிவாதக் (pacifism) கொள்கையைக் கைவிட்டு ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறுவதற்காக தனது அரசமைப்பு யாப்பைத் திருத்துமா என்ற கேள்வி ஐ. எஸ் எனப்படும் இசுலாமிய அரசு அமைப்பினர் இரு ஜப்பானியர்களைக் கொலை புரிந்த பின்னர் மீளத் தலையெடுத்துள்ளது.  2015-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12-ம் திகதி ஜப்பானியப் பாராளமன்றத்தில் ஓர் உணர்ச்சி பூர்வமான உரையை ஆற்றிய ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே ஜப்பானிய மக்களே நம்பிக்கை கொள்ளுங்கள் எனச் சொன்னதுடன் எமது அரசியலமைப்பு யாப்பைத் திருத்துவதற்கான விவாதத்தை ஆழமாகச் செய்ய வேண்டிய நேரம் இதுவல்லவா என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தப் பாராளமன்றம் எதிர்காலத்தைக் கருத்திக் கொண்டு மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அபே பாராளமன்றத்தில் எடுத்துரைத்தார்.

வெறுவாய மெல்பவனுக்கு ஐ, எஸ் அமைப்புக் கொடுத்த அவல்

ஈராக்கில் இசுலாமியத் தீவிரவாதிகள் இரு ஜப்பானியர்களைக் கொன்றதுடன் ஜப்பானை ஒரு போர் செய்யக் கூடிய நாடாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.  சீனப் பாதுகப்புத் துறை நிபுணர் ஷி யொங்மிங் பணயக் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை வைத்து தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே  தனது போர் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றப் பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.  வலதுசாரி அரசியல்வாதியான ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே பதவிக்கு வந்த நாளில் இருந்தே ஜப்பானை ஒரு போர்புரியக் கூடிய நாடாக மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஜப்பானிய அரசமைப்பு யாப்பின் ஒன்பதாவது பிரிவை மாற்ற வேண்டும் எனக் கடும் பரப்புரை செய்து வருகின்றார். இந்தத் திருத்தத்தைச் செய்வதற்கு ஜப்பானியப் பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றின் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்பதுடன் ஜப்பானிய மக்களிடையேயான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சாதாரண பெரும்பான்மையுடனான ஆதரவையும் பெற வேண்டும். உலக அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஜப்பான தனது நட்பு நாடுகளின் இணைந்து போர் புரியக் கூடிய வகையில் அதன் அரசமைப்பு மாற்றப் பட வேண்டும் என ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயும் அவரது ஆதரவாளர்களும் பெரும்பரப்புரை செய்து வருகின்றனர். அதாவது ஜப்பானும் அமெரிக்கப்படைகளுடன் இணைந்து போர் புரிய வேண்டும் என்பது அபேயின் கொள்கையாகும். ஜப்பான் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளல் அவசியம் என அபே கருதுகின்றார். அபே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்தே ஜப்பானிய அரசமைப்பு யாப்பைத் திருத்த வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

அமெரிக்காக்காரன் அல்வா கொடுத்தால்!!!!!
உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ஜபானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.

வேண்டாம் இந்த சீனப் பூச்சாண்டி

சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சிய பழைய சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும்.  ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3  ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.

ஜப்பான் வாங்கிக் குவிக்கவிருக்கும் படைக்கலன்கள்
...2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4.98 ரில்லியன் யென்கள் (41பில்லியன் டொலர்கள்) பெறுமதியான படைக்கலன்களை வாங்குவதாக முடிவு செய்துள்ளது. அதில் முப்பது AAV-7 Amphibious vehicle என்னும் நிலத்திலும் நீரிலும் பயணிக்கக் கூடிய ஊர்திகள், இருபது P-1 கண்காணிப்புக் கடற்கலன்க்கள், ஆறு F-35Aபோர் விமானங்கள், ஐந்து Bell Boing V-22 போர் விமானங்கள், மூன்று Global Hawks ஆளில்லாப் போர் விமானங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் முறைமை போன்றவையும் உள்ளடக்கபட்டிருக்கின்றன.

சீனாவுக்கு ஆப்பு வைக்கும் ஜப்பான் - அமெரிக்கக் கூட்டு
ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து SM-3-Block-IIA   என்னும் எறியங்களைக் (porjectiles) கொண்ட ஒரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன.  21 அங்குல பரிமாணமுள்ள இந்த எறியங்கள் மற்ற எறியங்களுடன் ஒப்பிடுகையில் பெரியவையும் வேகமாகப் பாயக் கூடியவையுமாகும். அத்துடன் தாழவரும் ஏவுகணைகளையும் அழிக்கக் கூடியவை. ஜப்பான் ஏற்கனவே நான்கு உளவுச் செய்மதிகளை விண்வெளியில் விட்டுள்ளது. இனி அமெரிக்காவுடன் இணைந்து  மேம்படுத்தப்பட்ட GPS எனச் சுருக்கமாக அழைக்கபப்டும் Global Positioning System உருவாக்கவிருக்கின்றது. இதன் மூலம் வானிலும் கடலிலும் நிலத்திலும் நடப்பவற்றைத் தடயமறிய முடியும். மேலும் இரு தகவற்பரிமாற்றச் செய்மதிகளையும் ஜப்பான் விண்வெளியில் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது.

சீனாவின் பலவீனப் புள்ளியை மையப்படுத்தும் ஜப்பான்

  சீனா என்னதான் தனது படைவலுவைப் பெரிதாக்கினாலும் அதன் படைகளுக்கு போர் முனை அனுபவம் என்பது கிடையாது எனச் சொல்லலாம். இதுவே சீனாவின் பலவீனமாகும். நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும், சிரியாவிலும் தமது நேரடிப் போன் முனை அனுபவங்களைப் பெற்றுள்ளன. ஜப்பான் மற்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்புப் போர் புரியலாம் என தனது அரசியலமைப்பு யாப்பை மாற்றி உலகின் பல பாகங்களுக்கும் தனது படையினரை அனுப்பி நேரடிப் போர் முனை அனுபவங்களைப் பெற்றால் ஜப்பானியப் படையினரை எதிர் கொள்வது சீனாவிற்கு முடியாத காரியம் ஆகிவிடும். பன்னாட்டு அரங்கில் செய்யும் இந்த போர் முனைச் செயற்பாட்டை சமாதானத்திற்கான பங்களிப்பின் முனைப்பு (proactive contribution to peace) என்னும் பெயரிட்டுக் காட்ட ஜப்பான் விரும்புகிறது. ஜப்பானை வெறுப்பவர்கள் சீனர்கள் மட்டுமல்ல. கொரியர்களும் ஜப்பானை அதிகம் வெறுக்கின்ற்னர். ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சீனர்களைப் போலவே கொரியர்களும் மறக்கவில்லை. வட கொரியா தனது அழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை வளர்த்து வருகின்றது. தென் கொரியா பொருளாதார ரீதியில் மட்டுமல்ல படைத்துறை ரீதியிலும் ஜப்பானுக்குச் சவாலாக அமையக் கூடிய ஒரு நாடு.


ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு
இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தாமும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை.

அமெரிக்காவின் பங்காளியா பணியாளியா

அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் படைவலுவில் 60 விழுக்காடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ளவிருக்கின்றது. அத்துடன் ஆசிய பசுபிக் நாடுகளை இணைத்து அமெரிக்கா அமைக்கும் பொருளாதாரக் கூட்டமைப்பில் ஜப்பானும் இணையவிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ஜப்பானும் தனது படைவலுவைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் பங்காளியாக ஜப்பான் செயற்படமுடியும் அல்லாவிடில் அமெரிக்காவின் பணியாளி நிலைதான் ஜப்பானுக்கு ஏற்படும்.  அத்துடன் தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஜப்பானின் படை வலுவும் இருக்க வேண்டும். தொடர்ந்தும் அமெரிக்காவில் அது தங்கியிருக்க முடியாது.

Saturday, 21 February 2015

உலகப் பெரும் செல்வந்தர் விளடிமீர் புட்டீன் சொத்துச் சேர்ந்த இரகசியம்

உலகின் முன்னணிச் செல்வந்தர்களுக்குள் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒருவர் எனப் பலர் கருதி இருந்தனர். அவர் முன்னணிச் செல்வந்தர் அல்லர். அவர் முதல்தரச் செல்வந்தர் என அவரது முன்னாள் நெருங்கிய நண்பர் Bill Browder அம்பலப்படுத்தியுள்ளார்.

Forbeசஞ்சிகையின் கணிப்பின் படி உலகின் முன்னணி செல்வந்தர்களின் பட்டியல்:

1. Bill Gates

Net Worth: $76 Billions

Source of wealth: Microsoft

2. Carlos Slim Helu & family
Net Worth: $72 Billions
Source of wealth: telecom

3. Amancio Ortega
Net Worth: $64 Billions
Source of wealth: retail

4. Warren Buffett
Net Worth: $58.2 Billions
Source of wealth: Berkshire Hathaway

5. Larry Ellison
Net Worth: $48 Billions
Source of wealth: Oracle

6. Charles Koch
Net Worth: $40 Billions
Source of wealth: diversified

6. David Koch
Net Worth: $40 Billions
Source of wealth: diversified

8. Sheldon Adelson
Net Worth: $38 Billions
Source of wealth: casinos

9. Christy Walton & family
Net Worth: $36.7 Billions
Source of wealth: Wal-Mart

10. Jim Walton
Net Worth: $34.7 Billions
Source of wealth: Wal-Mart
இதே வேளை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சொத்து 70பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் புட்டீனின் உண்மையான சொத்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அவரது முன்னள் நண்பரும் இரசியாவில் தனது Hermitage Capital Management என்னும் நிறுவனத்தின் மூலம் பெரும் முதலீடுகளைச் செய்தவருமான பில் பௌடர் Bill Browder அம்பலப் படுத்தியுள்ளார். உலகின் முதல் தரச் செல்வந்தராகக் கருதப்படும் மைக்குறோசொஃப்ர்ரின் அதிபர் பில் கேட்ஸிலும் பார்க்க புட்டீன் இரு மடங்கு செல்வந்தராகும். இரசிய ஊகம் ஒன்று புட்டீன் திருடிய சொத்து 257 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் செய்தி வெளியிட்டுள்ளது.  பில் பௌடர் RED NOTICE என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதில் அவர் இரசிய அதிகார மையங்களைப் பற்றியும் அவற்றின் ஊழல்களையும் அமபலப்படுத்தியுள்ளார். இரசியாவில் மற்றவர்களைக் கைது செய்யக் கூடியவரே அதிகார முள்ளவர். பில் பவுடரின் சட்டவாளரான Sergei Magnitsky இரசியாவில் கொல்லப்பட்டதையும் பவுடர் அம்பலப்படுத்தியுள்ளார். இரசியாவின் பல ஊழல்களை Sergei Magnitsky அம்பலப் படுத்தினார்.


2007-ம் ஆண்டு பிரித்தானிய கார்டியன் பத்திரிகை புட்டீன் கடல் கடந்த வெளிப்படைத் தன்மையற்ற நிதியங்களின் வலையமைப்பின்  (non-transparent network of offshore trusts) மூலம் பெரும் சொத்தை வைத்திருக்கின்றார் எனச் செய்தி வெளியிட்டது. இவை பல எரிபொருள் நிறுவனங்களில் பங்குடமைகளைக் கொண்டுள்ளன.  கருங்கடலை ஒட்டிய கடற்கரையில் புட்டீனிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒரு மாளிகை உண்டு. ஸ்பெயினில் Costa del Sol என்னும் இடத்திலும் புட்டீனிற்கு ஒரு மாளிகை இருப்பதாக இலண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை அம்பலப்படுத்தியது. மொத்தமாக புட்டீனிடம் 20 மாளிகைகள், 43 விமானங்கள், 15 உழங்கு வானூர்திகள், பெருமளவு உல்லாசப் படகுகள் இருக்கின்றன என்றும் செய்திகள் கூறுகின்றன.

பில் பௌடர் இரசியாவில் ஊழல் செய்த ஒரு பணமுதலையை புட்டீன் கைது செய்தார். அதைத் தொடர்ந்து ஊழல் மூலம் பெரும் பணம் சேர்த்த பல செல்வந்தர்கள் புட்டீனிடம் சென்று தங்களையும் கைது செய்ய வேண்டாம் என வேண்டினர். அவர்கள் ஊழலால் திரட்டியதில் 50 விழுக்காடு பெற்றுக் கொண்டு அவர்களை புட்டீன் கைது செய்யாமல் விட்டு விட்டார். இதுதான் புட்டீன் பெரும் சொத்துச் சேர்த்ததின் இரகசியம் என்கின்றார் பில் பௌடர்.

Karen Dawisha என்பவர் எழுதிய Putin's Kleptocracy: Who Owns Russia? என்ற புத்தகத்தில் புட்டீனின் சொத்துச் சேர்ப்பு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே சோவியத் பொதுவுடமைக் கட்சி பெரும் தொகைப்பணத்தை வெளிநாடுகளிலும் இரசியாவிலும் இரகசியமாக வைப்பிட்டு வைத்தது என்கின்றார் Karen Dawisha. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா தனி நாடாக இயங்கத் தொடங்கிய பின்னர் சென்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. நகர பிதாவின் துணைவராக புட்டீன் இருந்தார். உணவுத் தட்டுபாட்டை நீக்க புட்டீன் வெளிநாடுகளுக்கு சென்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தில் இருந்து மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்து பதிலாக உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த உணவுப் பொருட்களும் வந்து சேரவில்லை. அந்த ஊழலில் நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொண்டார் எனப்படுகின்றது. அப்போது சென்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரக் காவற்துறை அதிகாரி புட்டீனைக் கைது செய்ய இருந்தார். ஆனால் புட்டீன் தப்பிவிட்டார்.

இரசியாவில் கடந்த 14 ஆண்டுகளாக விளடிமீர் புட்டீன் பதவில் இருக்கின்றார்.  கடைசியாக இரசிய அதிபர் தேர்தல் 2012-ம் ஆண்டு நடந்தது அதனால் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும். 1999இல் இருந்து 2000ம் ஆண்டு வரையும் பின்னர் 2008இல் இருந்து 2012 வரையிலும் இரசியாவின் தலைமை அமைச்சராகவும் புட்டீன் இருந்தார்.

2016-ம் ஆண்டின் முன்னர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அவரைப்பற்றி இன்னும் பல இரகசியங்கள் வெளிவரும்,

Monday, 16 February 2015

உக்ரேனுக்குப் படைக்கலன்கள் வழங்குவதில் அமெரிக்காவும் ஜேர்மனியும் இழுபறி!

இரசியாவிற்கு எதிராகப் போராடும் உக்ரேனிய அரச படைகளுக்கு படைக்கலன்கள் வழ்ங்குவதா என்ற கருத்தை அமெரிக்கா உலக அரங்கில் முன்வைத்த விதத்திற்கும் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமைக்கழகத்தின் அறிக்கையை இப்போது சமர்ப்பிக்காமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கப்படும் விதத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

உக்ரேனுக்குப் படைக்கலன்கள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நேட்டோப்படைத் தளபதி James Stavridis கருத்து வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து இன்னும் ஒரு முன்னாள் இராசதந்திரி ஒருவரும் அதே கருத்தை வெளியிட்டார். இது பின்னர் இக்கருத்தை ஆதரித்து மேற்கு நாட்டு ஊடகங்கள் ஆசிரியத் தலையங்கங்களும் கட்டுரைகளும் வெளிவிட்டன. பின்னர் இது அமெரிக்கப் பாரளமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது. அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜேன் கெரி உக்ரேன் சென்றார். ஆனால் இக்கருத்துக்கு எதிராக ஜேர்மனி கருத்து வெளிவிட்டது. பிரான்ஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா படைகலன்களை வழங்கினால் போர் தீவிரமடையும் எனக் கருதி ஜேர்மனியும் பிரான்ஸும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் புதிய அரசுக்கு ஓர் கால இடைவெளி வழங்கப்பட வேண்டும் என நோர்வேயில் எரிக் சொல்ஹேய்ம் ஒரு கட்டுரை மூலம் கருத்து வெளிவிட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி அரசுத் துறைச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிற்றேஜ் அதே கருத்தை இன்னும் ஒரு கட்டுரையில் வெளிவிட்டார். தொடர்ந்து ஒரு சட்டத்துறைப் பேராசிரியர் கோத்தபாயவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கை அமெரிக்காவில் தொடுக்கலாம் என்றார். பின்னர் பல பத்திரிகைகளில் இதற்கு ஆதரவு தெரிவித்து கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. அமெரிக்க அரசுத் துறைச்செயலர் நிஷா பிஸ்வால் இலங்கை சென்றார். இங்கு ஜேர்மனி இல்லை. ஆனால் தமிழின விரோதப் போக்குக் கொண்ட இந்தியா இருக்கின்றது. அது வழமைபோல இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலிபோல் கருத்து வெளிவிடுகின்றது.. உலக அரசியலில் எப்படிக் கருத்து உருவாக்கங்கள் செய்யப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. சீனா, இரசியா போன்ற நாடுகள் பன்னாட்டு அரங்கில் தமது செயற்பாடுகளைப் பற்றி உலக மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் அமெரிக்கா உலக அரங்கில் தனது நவடிக்கைக்கள் பற்றி உலக மக்கள் என்ன கருத்து கொள்ள வேண்டும் என்பதைத் தனது வலுமிக்க ஊடகங்கள் மூலமும் தனக்குத் தாளம் போடும் எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் மூலமும் நிச்சயித்துக் கொள்கின்றது.

உக்ரேன் விவகாரத்தில் தலையிட்டு ஒரு சமாதானப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்தமை மூலம் ஜேர்மனி உலக அரங்கில் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. ஒரு வல்லரசாகும் நோக்கத்தையும் அது கொண்டுள்ளது எனபதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஈரானுடன் P5+1 என்னும் நாடுகளின் குழுவில் ஐந்து வல்லரசுகளுடன் ஜேர்மனியும் இருக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுடன் கடுமையாக நடந்து கொண்ட ஜேர்மனி உக்ரேன் விவகாரத்தில் இரசியாவுடன் மிதமாக நடந்து கொள்கின்றது. ஜேர்மனிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இருக்கும் பொருளாதார்ப் பிரச்சனையில் இரு போர்களால் பேரழிவைக்கணட ஐரோப்பாவிற்கு மீண்டும் ஒரு போர் வேண்டவே வேண்டாம் என ஜேர்மனி நினைக்கின்றது

. இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முதல் அமெரிக்காவில் இருந்து மஹிந்த ராஜபக்சேவிற்கு தேர்தல் ஒழுங்காக நடாத்தப் பட வேண்டும் என்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படுகின்றது, ஜேர்மனி, பிரன்ஸ், உக்ரேன், இரசியா ஆகியவை பெலரஸ் தலைநகரில் கூடிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முதல்நாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடையாவிட்டால் இரசியா அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என மிரட்டினார்.

உக்ரேனில் முதலில் இரசியாவிற்கு சார்பாக இருந்த ஆட்சியாளரான விக்டர் யனுக்கோவிச்சுக்கு எதிரான கிளர்ச்சியை தூண்டுவதில் ஜேர்மனி முன்னின்று செயற்பட்டது. உக்ரேனை முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணணக்க ஒத்துக் கொண்ட யனுக்கோவிச் பின்னர் இரசியாவின் பக்கம் சார்ந்து இரசியாவின் யூரோஏசியன் கூட்டமைப்பில் இணைய முயற்ச்சித்தார். உக்ரேனில் பெருந்தொகைப் பணம் செலவிட்டு பாராளமன்ற உறுப்பினர்கள் கட்சிமாற்றம் செய்யப் பட்டு இரசிய சார்பு விக்டர் யனுக்கோவிச் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். ஆம் அதுவும் இலங்கை போல் தான். தற்போது உக்ரேனின் தலைநகர் கீவ்வின் நகர பிதாவாக இருக்கும் விட்டாலி கிளிஸ்க்கோ ஜேர்மனியின் ஆளும் கட்சியினரிடம் பயிற்ச்சி பெற்றவர். இவர்தான் யனுக்கோவிச்சிற்கு எதிரான கிளர்ச்சியில் முன்னின்று உழைத்தவர். இவரை மங்கள சமரவீரவிற்கு  ஒப்பிடலாம். இப்போது நீங்கள் உக்ரேனின் சந்திரிக்கா யார் என்று கேட்கலாம். இருக்கவே இருக்கின்றார் Yulia Tymoshenko என்பவர். இவர் உக்ரேனின் முன்னாள் தலைமை அமைச்சர் விக்டர் யனுக்கோவிச்சால் சிறையில் அடைக்கபப்ட்டவர். அவருடன் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.

உக்ரேனை இரசியாவின் யூரேசியன் கூட்டமைப்பில் இணைப்பதா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதா என்ற போட்டியில் அதனை எரிய வைத்தார்கள். இப்போது எரிகின்ற நெருப்பில் எப்படி எண்ணெய் ஊற்றுவது என்ற விவாதம் நடந்தது.  உக்ரேனிய அரச படைகளுக்கு படைக்கலன்கள் வழங்குவதா இல்லையா என்ற விவாதமும் எப்படிப்பட்ட படைக்கலன்கள் வழங்குவது என்ற விவாதமும் மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடந்து கொண்டிருக்கின்றன . இன்னொரு முனையில் ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல் சரிவராது என்று தெரிந்தும் தீவிர சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களுடன் மோசமான பொருளாதார நெருக்கடியில் உக்ரேன் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

2015-ம் ஆண்டு பெப்ரவரி 6-ம் திகதி வெள்ளிக்கிழமை ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல்லும் பிரெஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஹொலண்டேயும் இரசியாவின் கிரெம்ளின்ற்குத் திடீரெனச் சென்று இரசிய அதிப்ர விளடிமீர் புட்டீனுடன் பேச்சு வார்த்தை நடாத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதற்கு முதல்நாள் வியாழக்கிழமை இருவரும் உக்ரேன் தலைநகர் கீவ் சென்று உக்ரேனிய அதிபர் பெட்றோ பொறஷெங்கோவையும் சந்தித்து உரையாடினர். இதே வேளை உக்ரேனிய வெளிநாட்டமைச்சர் அர்ஸெனி யட்சென்யுக்குடன் அமெரிக்காவின் வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுத் துறைச்செயலர் ஜோன் கெரி பேச்சு வார்த்தை நடாத்தினார். பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய அதிபர்களைச் சந்திக்க முன்னர் புட்டீன் தனது நாட்டின் பாதுகாப்புச் சபையைக் கூட்டிப் பேச்சு வார்த்தை நடாத்தினார்.  இரசிய மொழி படித்த ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல்லும் பனிப்போர்க் காலத்தில் கிழக்கு ஜேர்மனியில் உளவாளியகப் பணிபுரிந்ததால் ஜேர்மனிய மொழியில் பரீச்சய முடைய புட்டீனும் சிறந்த முறையில் பேச்சு வார்த்தை நடாத்தக் கூடியதாக இருந்தது.


உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் சொல்லும் செயலும் முரண்பட்டதாக இருப்பதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் வாழும் இரசியர்கள் செய்யும் கிளர்ச்சிக்கு தான் எந்த உதவியும் செய்ய வில்லை என்கின்றது இரசியா. ஆனால் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் பயிற்ச்சிகள் போன்றவற்றை இரசியா வழங்குவதற்கான செய்மதிப் படங்களின் ஆதாரமும் நேரில் கண்ட சாட்சியங்களும் தம்மிடம் இருப்பதாக மேற்கு நாடுகள் சொல்கின்றன. உலகிலேயே மிகவிரைவில் விமான எதிர்ப்பு  ஏவுகணைகளைப் பெற்ற கிளர்ச்சிக்காரர்களாக உக்ரேன் கிளர்ச்சிக்காரர்கள்  இருக்கின்றார்கள். அத்துடன் அவர்களிடம் பெருமளவு கனரகப் படை ஊர்திகளும் இருக்கின்றன. இரசியாவின் ரி-80, ரி-72 தாங்கிகளும் பல்குழல் ஏவுகணைச் செலுத்திகளும், கவச வண்டிகளும் இருப்பதாக மேற்கத்தைய இராசதந்திரிகள் சொல்கின்றார்கள். இரசியப்படையினரும் பயிற்ச்சியாளர்களுமாக  ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உக்ரேன் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து போர் புரிவதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இரசியா இதை வன்மையாக மறுக்கின்றது . 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெலரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையின் போது உக்ரேன் அதிபர் பொரோஷெங்கோ உக்ரேனில் கொல்லப்பட்ட இரசியப்படையினரின் அடையாளப் பட்டிகள் தம்மிடம் இருப்பதைப் புட்டீனிற்குத் தெரிவித்தார். அத்துடன் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிப் பகிரங்கப்படுத்தி அவர்கள் கொல்லப்பட்டதை இரசியா மறைத்து வைத்திருப்பதை தன்னால் பகிரங்கப்படுத்த முடியும் என்றார். இதன் மூலம் அவர்களின் குடும்பத்தினரை புட்டீனுக்கு எதிராகத் திருப்ப முடியும் எனவும் புட்டீனை பொரோஷேங்கோ மிரட்டினார்.

உக்ரேனிய அதிபர் பொரோஷெங்கோ இரசியா மீது போர்ப்பிரகடனம் செய்ய வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒத்துக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இரசியா மீறினால் இரசியாமீது போர்ப்பிரகடனம் செய்வதாகச் சொன்ன பொரோஷெங்கோ உடன்பாடு மீறி மீண்டும் போர் தீவிரமடைந்த நிலையிலும் பிரகடனத்தைச் செய்யவில்லைரசியா அதற்குக் கூறப்படும் காரணங்கள்:
முதலாவது போர்ப்பிரகடனம் செய்யப்பட்டால் இரசியா உக்ரேன் மீது முழுமையான வலுவுடன் தாக்கல் செய்ய முடியும்.
இரண்டாவது போர்ப் பிரகடனம் செய்த நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் தயங்குவார்கள்.
மூன்றாவது ஜோர்ஜியாவுடனான இரசியாவின் போர் ஐந்து நாட்களில் முடிக்கப்பட்டு அதன் பெரிய பிரதேசத்தை இரசியா தன்னுடன் இணைத்தது போல் உக்ரேனின் கிழக்குப் பகுதியை தன்னுடன் இணைக்கலாம் என்ற அச்சம் உக்ரேனுக்கு உண்டு. மேற்கு  நாடுகள் ஜோர்ஜியாவிற்கு உதவி செய்யாமல் விட்டது போல் உக்ரேனையும் கைவிடலாம் என்ற அச்சமும் உண்டு.
நான்காவது இரசியாவின் இறுதி நோக்கம் உக்ரேனைத் தன் வசம் ஆக்க வேண்டும் அல்லது ஓர் அழிக்கப்பட்ட பொருளாதாரம் முற்றாகச் சிதைக்கப்பட்ட உக்ரேனை மேற்கு நாடுகளுக்கு விட்டு வைக்க வேண்டும்.

இதே வேளை அமெரிக்கா இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் ஒரு மோதலை உருவாக்கி அதன் மூலம் இரசியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இரசியாவை உடைக்க முனைகின்றது என இரசியப் பாதுகாப்புச் சபையின் தலைவர் நிக்கோலய் பட்றுஷெவ் (Nikolai Patrushev) கருத்து வெளியிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு பெப்ரவரி முதல் வாரத்தில் ஜேர்மனியில் நடந்த மியூனிச் பதுகாப்பு மாநாட்டில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரொ ஆற்றிய உரையிலும் மேற்கு நாடுகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். அவரது கருத்துக்கள் நகைப்புக்கிடமானவை என மேற்கத்தைய இராசதந்திரிகள் கருதினார்கள். அவர் உரையாற்றும் போது பலர் சிரிக்கவும் செய்தார்கள்.

இரசியாவை உலகெங்கும் உள்ள வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவுகளைச் செய்யும் SWIFT என்னும் முறைமையில் இருந்து வெளியேற்றும் முன்மொழிவை அமெரிக்கா முன்வைத்தது. ஈரானும் இப்படி வெளியேற்றப்பட்டது. அது ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் SWIFT என்னும் முறைமையில் இருந்து இரசியாவை வெளியேற்றினால் அது வாஷிங்டனில் உள்ள இரசியத் தூதுவரை திரும்பப்பெறுவதுடன் மொஸ்கோவில் இருக்கும் அமெரிக்கத் தூதுவரையும் வெளியேற்றி அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் யாவும் துண்டிக்கப்படும் என எச்சரித்தது. இரு அணு வல்லரசுகள் தொடர்பின்றி இருப்பது உலக அமைத்திக்கு பெரும் ஆபத்தாக அமையும்.

உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராகப் போராடும் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உக்ரேனியப் படையினர் தள்ளாடுகின்றனர். அவர்களுக்கு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலுத்து வருகின்றது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையிலும் மூதவையிலும் இக்கருத்து குடியரசுக் கட்சியினரிடையேயும் மக்களாட்சிக் கட்சியினரிடையேயும் வலுத்து வருகின்றது. புதிதாகப் பதவி ஏற்கவிருக்கும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஸ்டன் கார்ட்டரும் உக்ரேனிற்கு படைக்கலன்களை வழங்க வேண்டும் எனக் கருதுகின்றார். ஏற்கனவே அமெரிக்கா உக்ரேனிற்கு பாதுகாப்புப் உபகரணங்களை வழங்குகின்றது. உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை வழங்குவது தொடர்பாக தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா படைக்கலன்களை வழங்கினால் நடக்கும் மோதலில் அமெரிக்காவும் ஒரு பங்காளியாகக் கருதப்படும் என இரசியா எச்சரிக்கின்றது. அத்துடன் அமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை வழங்கினால் இரசியா ஈரானுக்கு சவுதி அரேபியாவைத் தாக்கக் கூடிய படைக்கலன்களை வழங்கி உலகில் எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யும் என இரசியா அமெரிக்காவை மிரட்டியும் உள்ளது. உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்குவதன் மூலம் இரசியா தனது உக்ரேனுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிக பொருட் செலவை செய்ய வேண்டிய்வரும் இதனால் இரசியப் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்யலாம் என அமெரிக்காவில் கருதப்படுகின்றது. அத்துடன் இரசியாவிற்கு ஆளணி இழப்புக்களையும் அதிகம் ஏற்படுத்தி விளடிமீர் புட்டீனிற்கு எதிராக இரசிய மக்களைத் திருப்பலாம் எனவும் நம்ப்பப்படுகின்றது. அமெரிகாவின் மூதவையின் வெளியுறவுத் துறைக்கான குழுவின் முக்கிய உறுப்பினரான எலியட் ஏஞ்சேல் உக்ரேனுக்குப் படைகலன்கள் வழங்காவிடில் அமெரிக்காவின் நம்பகத் தன்மை உலக அரங்கில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றார்.  1994-ம் ஆண்டு உக்ரேன் உலகிலேயே இரண்டாவது பெரிய அணுக்குண்டுகளைக் கொண்ட நாடாக இருந்தது. அது தனது அணுக்குண்டுகளைக் கைவிடுவதற்குப் பதிலாக, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், பிரித்தானிய, சீனா ஆகிய நாடுகள் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கின. பியூடபெஸ்ற் குறிப்பாணை எனப்படும் இந்த உடன்பாட்டை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்குவதை நியாயப்படுத்தலாம். அமெரிக்கா உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்கினா போலாந்து, இங்கிலாந்து, கனடா ஆகியவற்றுடன் போல்ரிக் நாடுகளும் உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்க முன்வரலாம்.

ஆளில்லாக் கண்காணிப்புப் போர் விமானங்கள், ஏவுகணைகளை இனம் காணக்கூடிய ரடார்கள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை முதல் கட்டமாக வழங்கப்படலாம். ஏற்கனவே நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுக்கு போர்ப்பயிற்ச்சி அளித்து வருகின்றனர்.

இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கினால் அது உக்ரேனில் நடக்கும் உள்நாட்டுப் போரை மிகவும் தீவிரமாக்கும் என ஜேர்மனி அஞ்சுகின்றது. இதனால் ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல் பிரெஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஹொலண்டேயையும் துணைக்கு அழைத்துக் கொண்டு பெலரஸ் தலை நகர் மின்ஸ்க்கிற்கு 2015-02-11 புதன் கிழமை மீண்டும் சென்று இரசிய அதிபர் புட்டீனுடனும் உக்ரேனிய அதிபர் பெட்றே பொரோஷெங்கோவுடனும் பேச்சு வார்த்தை நடாத்தினார்.  இதற்கு முதல்நாள் செவ்வாய்க் கிழமை புட்டீனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பராக் ஒபாமா இப்பேச்சுவார்த்தையில் சுமூகமான இணக்கப்பாடு ஏற்படாவிட்டால் தனது நாடு உக்ரேனுக்குப் படைக்கலனகளை வழங்குவது பற்றிப் பரிசீலிக்கும் எனத் தெரிவித்தார்.  புதன்கிழமை தொடங்கிய பேச்சு வார்த்தை இரவுவரை நிண்டது. பின்னர் மறுநாள் காலை மீண்டும் கூடிப் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர்.
அந்த உடன்பாட்டின்படி பெப்ரவரி 15-ம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து உக்ரேனில் நடக்கும் போர் நிறுத்தப்படும். படையினருக் அவர்களது கனரகப் படைக்கலன்களும் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பின் நோக்கி நகர்த்தப்பட வேண்டும் போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுவர். டொனெட்ஸ்க், Donetsk லுஹான்ஸ்க் Luhansk ஆகிய பிரந்தியங்களில் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தல் நடத்த வேண்டும்
உக்ரேனின் அரசமைப்புத் திருத்தப்பட்டு பிராந்தியங்களுக்கு காவல் துறை உட்பட அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். உக்ரேனின் இரசியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இரசிய மொழிக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். போர் நடந்த பகுதிகளில் வங்கிகள் திறக்கப்பட்டு ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவுகள் செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு நிறுவனம் உக்ரேனின் போர் நிறுத்த உடன்படிக்கையை நிறவேற்றுவதை மேற்பார்வை செய்யும்.  சனி இரவு போர் நிறுத்தம் செய்வதாக வியாழக்கிழமை முடிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை உக்ரேனில் கடும் தாக்குதலை இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் மேற் கொண்டனர். உக்ரேன் அதிபர் பெட்றோ போர்ஷெங்கோ போர் நிறுத்த உடன்பாடு கடும் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பேச்சு வார்த்தையின் முடிவில் ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மேர்க்கெல் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது என்றார். பிரெஞ்சு அதிபர் கொலண்டே உடன்பாடு எல்லைக் கட்டுப்பாடு, நிர்வாகப் பரவலாக்கல், உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவு போன்ற பல பிரச்சனைக்கு உரிய பலவற்றை உள்ளடக்கியுள்ளது ஆனால் பிரச்சனையைத் தீர்க்க இன்னும் பல செய்யப்பட வேண்டி இருக்கின்றது என்றார்.

இரசியாவிற்கும் புட்டீனுக்கும் இப்போது இருக்கும் பொருளாதாரப்  பிரச்சனையில் தன்னுடன் இணைத்த கிறிமியாவைக் கட்டி ஆள்வதே பெரும் பிரச்சனையாக இருக்கின்றது இப்படி இருக்கையில் மேலும் புதிய பிராந்தியங்களைத் தன்னுடன் இணைத்து அவற்றையும் கட்டி அழ இரசியா விரும்பவில்லை. இரசியாவில் புட்டீனின் ஆட்சியை தற்போதைக்கு அசைக்க முடியாது. அதனால் உக்ரேன் விவகாரம் இன்னும் சில காலம் இழுபடுவதை புட்டீன் விரும்புகின்றார். உக்ரேனின் மேலும் பல பிராந்தியங்களை அவர் ஆறுதலாக இரசியாவுடன் இணைப்பதை அவர் விரும்புகின்றார். உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் இரசிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கிறிமியாவைத் தக்க வைப்பதும் உக்ரேனை பொருளாதார ரீதியில் வளரவிடாமல் செய்வதும் தான புட்டீனின் தந்திரோபாய நோக்கங்களாகும்.

உக்ரேனின் தேசியவாதிகளும் வலதுசாரிகளும் இரசியாவிற்கு உக்ரேனின் இறையாணமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என அதிருப்தி அடைந்துள்ளனர்.
உக்ரேனிய அதிபர் பொரோஷெங்கோவைத் திருப்திப்படுத்த பன்னாட்டு நாணய நிதியம் உக்ரேனுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் பதினேழரை பில்லியன் கடன் வழங்கவுள்ளது.

 இரண்டாம் முறையாக நடக்கும் இப்பேச்சு வார்த்தை சரிவராவிட்டால்  இரசியாவின் நில அபகரிப்பைத் தடுக்க ஜேர்மனியே உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்க முன்வரலாம்.

Sunday, 15 February 2015

துடுப்பாட்டப் பகிடிகள் - Cricket Jokes



நடுத்தர வயது நண்பர்கள் ஒன்றாக துடுப்பட்டம் (கிரிக்கெட்) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனுக்கு கிரிக்கெட் பைத்தியம். அவன் ஆட்டத்தின் மத்தியில் தனது தொப்பியைக் கழற்றி கண்ணை மூடிக் கொண்டு தெருவோரம் சென்ற அமரர் ஊர்திக்கு(Funeral Car) அமைதியாக அஞ்சலி செலுத்தினான். அவனை ஆச்சரியத்துடன் பார்ந்த அவனது நண்பர்கள் மச்சி நல்ல பண்படா இது என்றனர். அதற்கு அவன் என்ன இருந்தாலும் 12 ஆண்டுகள் நாங்கள் திருமணமாகி ஒன்றாக நேற்றுவரை இருந்தோம்ல என்றான்.

கிரிக்கெட் ரசித்த அமெரிக்கர்
சென்னையில் நடந்த கிரிக்கெட் ஆட்டம் ஒன்றை இரசிக்க அமெரிக்கத் துணைத் தூதுவரகத்தைத் சேர்ந்த ஒரு அதிகாரியை அழைத்தனர். அவருக்கு முன் பின் கிரிக்கெட் பற்றித் தெரியாது. அவரும் மிக விரும்பிப் போய் இருந்தார் பார்த்து ரசிப்பதற்கு. ஆட்டம் தொடங்கியது ஆறு பந்துகள் வீசப்பட்டன. நடுவர் அன்று வழமையிலும் பார்க்க சற்று உரத்து "OVER" என்று கத்தினார். அமெரிக்கர் நல்ல விளையாட்டுத்தான் ஆனால் இவ்வளவு விரைவாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.


மழை வருவிக்க செய்ய வேண்டியது
ஒரு ஆபிரிக்க நாட்டில் மழையின்றி பெரும் வரட்சி ஏற்பட்டது. உள்ளூரில் உள்ள சாமியார்களை வைத்து மழையை வரவழைக்க எல்லம் செய்து பார்த்தார்கள் சரிவரவில்லை. பலர் கூடி யோசித்துவிட்டு இங்கிலந்தில் மழைவரவழைக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உள்ளூர் சாமியார்களை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு சென்று திரும்பி வந்து தங்கள் மன்னரிடம் மழை வரவழைக்க இங்கிலாந்தில் செய்வதை விபரித்தனர்:
ஒரு பசும்புல் உள்ள பெரிய மைதானத்தின் நடுவில் இடைவெளிவிட்டு ஆறு தடிகளை ஒரு புறம் மூன்று மறுபுறம் மூன்றாக நட்டு வைப்பார்கள். அந்தக் தடிகளுக்கு இடையில் இருவர் கையில் கட்டைகளுடன் நிற்பார்கள். அவர்களைச் சூழ 13 பேர் நிற்பார்கள். ஒருவர் ஒரு சிவந்த உருண்டையான பொருளை வீசுவார் அதை மூன்று கட்டைகளுக்கு முன் நிற்பவர் தன் கையில் இருக்கும் கட்டையால் அடிப்பார். வெளியில் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். உடனே மழை பெய்யும். நாமும் அப்படியே செய்வோம். (இலண்டனில் மழை எதிர்பாராமல் வந்து துடுப்பாட்ட விளையாட்டைக் குழப்புவதால் மனம் நொந்தவர் எழுதிய கதை இது)


செயலாளரின் படுக்கையில் ஆடிய கிரிக்கெட்.
அவர் ஒரு நிறுவனத்தின் அதிகாரி. அவருக்கு ஒரு அழகிய
பெண் செயலாளர் (secretary) சற்றுக் கொடூரமான மனைவி. அன்று அவரது பெண் செயலாளருக்கு அன்று பிறந்த நாள். அவர் ஒரு ஐ-பாட்-2 ஐ தனது பெண் செயலாளருக்கு பரிசாக வழங்கினார். பெண் செயலாளர் மனம் மகிழ்ந்து அவரைத் தனது வீட்டிற்கு இரவு விருந்திற்கு வரும்படி அழைத்தார். அவரும் சென்று நல்ல உணவருந்திப் பின்னர் படுக்கை அறையிலும் உல்லாசமாக இருந்தார். முடிவில்தான் நேரம் நல்லாகச் சென்று விட்டது என்பதை உணர்ந்தார். உடனே பெண் செயலாளர் ஐயோ உங்க மனைவி உங்களை இன்றைக்கு நன்றாக வறுத்தெடுத்து வாட்டி வாதைக்கப் போகிறாள் என்றாள். அவர் சற்று யோசித்துவிட்டு பெண் செயலாளரின் லிப்ஸ்டிக்கை எடுத்து தனது காற்சட்டையின் தொடையடியில் மூன்றுதடவை தடவினார். பின்னர் வெளியே வந்து தனது காலணியிலும் காற்சட்டைக் காலடியிலும் சேற்றை அள்ளிப் பூசினார். புல்லைப் பிடுங்கி தனது உடுப்புக்களில் ஆங்காங்கு தேய்த்தார். பின்னர் வீடு சென்றார். அவரது மனைவி வீட்டில் கதவைத் திறந்ததும். சாரி டியர்! எனது பெண் செயலாளரின் பிறந்த நால் இன்று அவள் வீடு சென்று அவளுடன ஜாலியாக இருந்து விட்டு வருகிறேன் என்றார். அவரை ஏற இறங்கப் பார்த்த மனைவி. மவனே, போர் கிரிக்கெட் ஆடிவிட்டு எனக்கே பொய் சொல்கிறாயா என்று அவரை ஒரு வாங்கு வாங்கிவிட்டு விட்டு விட்டிட்டார்.


Q:) How does a cricketer describe a nude woman?
A:) No cover, no extra cover, two silly points, two fine legs and a gully.

Who is a fielder?
One who miss catches and catches misses.
What is the difference between a fielder and a condom? The fielder drops a catch and the condom catches a drop.

APPEAL- A 250 decibel scream made to overcome the obvious congen-
ital deafness so common in the umpiring profession
 

Thursday, 12 February 2015

கல்லூரி நகைச்சுவைகள்

தேர்வில் நன்கு சித்தியடைந்த ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னரும் ஒரு சிறந்த ஆசிரியர் இருப்பார்.
தேர்வில் நன்கு தோல்வியடைந்த ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னரும் ஒரு அழகிய ஆசிரியை இருப்பாள்.

மாணவன் வடிவேலு
வடிவேலு தேர்வு மண்டபத்துள் நுழைந்ததும் என்ன சொல்லுவார்?
ஸ்ஸ்ஸ்......பாபாபா.......இப்பவே கண்ணைக் கட்டுதே....

வினாத்தாளைப் பார்த்ததும் என்ன சொல்லுவார்?
என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணுறியா....

தேர்வு முடிவைப் பார்த்ததும் என்ன சொல்வார்?
மாப்பு.......வைச்சிண்டான்யா ஆப்பு....

அரியேர்ஸில் மீண்டும் பெயில் ஆனால் என்ன சொல்லுவார்?
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....... வேணாம்... வலிக்குது......... அழுதுடுவன்...

பிட் அடிக்கும் போது பிடிபட்டால் என்ன சொல்லுவார்?
ஒரு மனிசன் எதையாவது பண்ணி முன்னுக்கு வருவம் என்று பார்த்தால் கண்ட இடமெல்லாம் கண்ணி வைக்கிறாங்களே.....

தேர்விற்க்கு விண்ணப்பிக்கும் போது என்ன சொல்லுவார்?
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

பக்கத்தில் இருக்கும் மாணவன் வடிவேலுவைப் பார்த்துக் காப்பி அடித்தால் என்ன சொல்லுவார்?
இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது....

Question:What is the full form of maths.
Anwser:
Mentaly
Affected
Teachers
Harrasing
Students

புவியீர்ப்பு விசையை முதலில் கண்டுபிடித்த யாழ்ப்பாண மாணவன்
ஒரு நாள் அச்சுவேலியில் ஒரு மாணவன் தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள பனந்தோப்பில் மல்லாக்கப் படுத்திருந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பனம் பழம் மரத்தில் இருந்து விழத் தொடங்கியது. உடனே அவன் யோசித்து புவியின் ஈர்ப்பு விசையால்தான் பனம் பழம் கீழே விழுகிறது என்று கண்டு பிடித்து விட்டான். அந்த உற்சாகத்தில் அவன் திடீரென எழும்ப பனம்பழம் அவன் தலையில் விழுந்து அவனுக்கு சித்தப் பிரமை பிடித்து விட்டது. அதனால் அவனது கண்டு பிடிப்பு வெளியில் வரவில்லை. அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்த அவரது உறவினர்கள் பனம்பழத்தில் காகம் இருந்ததால் அது அவரது தலையில் விழுந்தது என்று அறிந்து "காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல்" என்ற  உவமையை உருவாக்கினர். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விட்டார்.

மகாத்மா காந்தியும் மொக்கை காந்தியும்
கேள்வி: மகாத்மா காந்தி இந்திய மக்களுக்காக என்ன நன்மை செய்தார்?
மொக்கை காந்தியின் பதில்: ஆகஸ்ட் 15-ம் திகதியை விடுமுறை நாளாக்கினார்.

தந்தை மகற்காற்றும் உதவி
கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஜோர்ஜ் புஸ் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்:
Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply can`t think of anything I need. $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on
தந்தை புஷ்சின் பதில்:

Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Dad

A young man studying in a college abroad sent this SMS to his father: Dear dad, no mon, no fun, your son. The father replied: Dear son, too bad, so sad, your dad.


எரிப் பொருள் பிரச்சனைக்கு மஹிந்தவின் மகனின் தீர்வு
இலங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் எரிபொருள் இறக்குமதியால் நாட்டுக்குப் பல கோடி அன்னியச் செலவாணி வீணாகிறது அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று ஆராயப் பட்டது. அதற்கு மஹிந்தவின் மகன் ரோகித ராஜபக்ச ஈரானில் இருந்து 5 கப்பல் மண் இறக்குமதி செய்து அதை அம்பாந்தோட்டையில் கொட்டிப் பரவி விட்டு பின்னர் நாங்கள் பெற்றோல் கிணறு தோண்டி பெற்றோல் பெறலாம் என்றான்.

மொக்கை காந்தி
Why Sperrm Donation Is More Expensive Than Blood Donation? என்ற கேள்விக்கு மொக்கை காந்தியின் பதில்: Because Hand-Made Things Are Always Costly.

Wednesday, 11 February 2015

நகைச்சுவை: மனைவியும் சோதிடர் போலே


 உங்கள் மகள் உதட்டுச் சாயம்(lipstick) பூசிக்கொண்டு வெளியே சென்றால் அவள் வளர்ந்து விட்டாள் என்று அர்த்தம். உங்கள் மகன் வெளியே சென்றுவிட்டு வரும்போது உதட்டுச் சாயம் ஆங்காங்கே படிந்தபடி வந்தால் அவன் வளர்ந்து விட்டான் என்று அர்த்தம்.

மனைவி சோதிடர் போலே
நடக்கப் போவதை
எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பாள்
ஆனால் எதுவும் நடக்காது

மனைவி சட்டவாளர்கள் போலே
எந்த நேரமும் எதிர் வாதம் செய்வதால்

மனைவி கால நிலை போலே
மாற்ற முடியாது

மனைவி விளம்பரம் போலே
சொலவதற்கும்  உண்மைக்கும்
நிறைய வித்தியாசம்

Success Is Relative.
The more The Success,
The more The Relatives.


நீ சிரித்தால்
உலகமே உன்னுடன்
இணைந்து சிரிக்கும்
நீ குறட்டை விட்டால்
நீ தனியத் தூங்க வேண்டி வரும்

Getting Caught Is The Mother Of Invention.
And the son of intervention.

What's common between the sun & women's underwear?
a) Both are hot
b) Both look better while going down
c) Both disappear by night.


முகவேடு(Facebook)
வீடிருக்கும் சாப்பாடிருக்காது
கணக்குண்டு பணமிருக்காது
சுவருண்டு முட்டிக்க முடியாது

Statusஉண்டு செல்வாக்கிருக்காது
காதலியுண்டு கட்டிக்க முடியாது  

7 சைட் அடித்தல்கள் = 1 புன்னகை
7 புன்னகைகள் = 1 சந்திப்பு
7 சந்திப்புக்கள் = 1 முத்தம்
7 முத்தங்கள் = 1 திருமண வேண்டுதல்
7 திருமண வேண்டுதல்கள் =  1 திருமணம்
1 திருமணம் = 77777 பிரச்சனிகள்.

சவுதி அரேபியாவில் ஒரு சவுதி அரேபியனும் ஒரு இந்தியனும் ஒரு இலங்கையனும் ஒரு பாக்கிஸ்த்தானியனும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களை ஒரு நிரூபர் மறித்து "மன்னிக்கவும், உணவுத் தட்டுப்பாடு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன" என்று கேட்டார்.
முதலில் மூவரும் திரு திரு என விழித்தனர்.
தட்டுப்பாடு என்றால் என்ன என்றான் சவுதி அரேபியன்.
சாப்பாடு என்றால் என்ன என்றான் இந்தியன்
கருத்துத் தெரிவிப்பது என்றால் என்ன என்றான் இலங்கையன்
மன்னிக்கவும் என்றால் என்ன என்றான் பாக்கிஸ்த்தானி. 

Monday, 9 February 2015

ஐரோப்பிய ஒன்றியத்தைக் கலங்கடிக்கும் கிரேக்கம்

ஐரோப்பாவின் ஒரு புறம் லித்துவேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதை கொண்டாடிக் கொண்டிருக்கையில் மறுபுறம் கிரேக்க மக்கள் அவ்விரு கூட்டமைப்புக்களினதும் சிக்கன நடவடிக்கை நிபந்தனைக்கு எதிராக வாக்களித்தனர். நான்கு ஆண்டுகள் அரச சிக்கன நடவடிக்கைகளால் சலிப்படைந்த கிரேக்க மக்கள் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான தீவிர இடதுசாரிக் கட்சியான சிரிஸாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். பாராளமனத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறை என்றபடியால் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியான சுதந்திர கிரேக்கக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சிரிஸா ஆட்சியைக் அமைத்துக் கொண்டது. இது ஐரோப்பாவில்  பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியண்ணன் ஜேர்மனியுடன் கடன் பிரச்சனையில் மோதிக் கொன்டிருக்கும் கிரேக்கத்தின் தலமை அமைச்சர் பதவியை ஏற்றவுடன் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் முதல் செய்த வேலை இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியர்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியமையே. அத்துடன் அவர் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தமை ஐரோப்பாவின் பல நாடுகளின் பாதுகாப்புத் துறையினரை அதிர வைத்துள்ளது. கிரேக்கத்தில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான சிரிஸா கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப சிக்கன நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகியதுடன் அக் கட்சிகளும் புதிய உத்வேகம் பெற்றுள்ளன.

நாணயமில்லா நாணயக் கூட்டமைப்பு
கடந்த எட்டு ஆண்டுகளாக கிரேக்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் மூன்று பொருளாதார வீழ்ச்சிகளை அது சந்தித்துள்ளதுடன் அதன் கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 175 விழுக்காடு அதிகரித்துள்ளது. கிரேக்கத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது.  ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும் யூரோ வலய வட்டி வீதமும் யூரோ நாணயத்தைத் தமது நாணயமாகக் கொண்டகிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்து வரவில்லை. இவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு அங்கு நிறுவனங்கள் மூடப்பட்டு வங்கிகள் வங்குரோத்து நிலையடைந்து, அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.  இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம்.

 ஜேர்மனிக்குப் பிடிக்காதது கிரேக்கத்திற்குப் பிடித்தது.
அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் கிரேக்கத்தின் கடனை இல்லாமல் செய்து, அரச செலவீனங்களை அதிகரித்து கீன்சியக் கொள்கையின் படி பொருளாதாரம் வளர உந்து வலு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். 2014ம் ஆண்டு 25 விழுக்காடு பொருளாதார விழ்ச்சியைக் கண்ட கிரேக்கம் 25 விழுக்காடு வேலையற்றவர்களையும் கொண்டுள்ளது. இதற்கு பொருளாதார நிபுணர் கீன்ஸின் கொள்கைப்படி அரச செலவை அதிகரித்து உந்து வலு கொடுக்க வேண்டும் என்பதில் அலெக்ஸிஸ் ஸிப்ராள் நம்பிக்கை கொண்டுள்ளார் ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாம் நினைத்தபடி அரச செலவீனங்களை அதிகரிக்க முடியாது. அதற்கு உரிய கடனை அவர் எங்கிருந்து பெறுவார் என்பது பெரிய ஒரு கேள்வியாகும். ஜேர்மனியப் பொருளாதர நிபுணர்களுக்கு கீன்சியப் பொருளாதாரக் கொள்கை பிடிக்காத ஒன்றாகும்.

ஆட்சிக்கு ஓடிவந்தவரை நாடி நிற்கும் தொல்லைகள்
கிரேக்க அரசு 2015 மார்ச் மாதம் 4.3 பில்லியன் யூரோ பெறுமதியான கடனை மீளளிக்க வேண்டிய  நிலையில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிதாகப் பதவி ஏற்ற அரசுக்குப் பல தெரிவுகள் இருக்கவில்லை. சிக்கன நடவடிக்கைகளை இல்லாமல் செய்வதாயின் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்தும் வெளியேற வேண்டும் அல்லது அதற்குக் கடன் வழங்கிய பன்னாட்டு நாணய நிதியம், ஐரோப்பிய மைய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் கிரேக்க அரசுக்கு வழங்கிய கடனை முழுமையாக அல்லது ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்யச் சம்மதிக்க வைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகுவதாயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் விலக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒரு நாடு விலகுவதானால் அது முதலில்  விலகுவதற்கான நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  ஆனால், ஏற்கனவே பெருமளவு கடன் கொடுத்தோம், அதன் வட்டியைக் குறைத்தோம், கடன் மீளளிப்பிற்கான கால எல்லையை நீடித்தோம், கிரேக்க அரசுடன் ஒத்துழைப்பதாக வாக்குறுதியளித்தோம் ஆனால் நாம் விதித்த நிபந்தனைகளுக்கு அமைய கிரேக்க அரசு நடக்கவில்லை என ஜேர்மனியில் இருந்து ஆத்திரக் குரல்கள் அலெக்ஸிஸ் ஸிப்ராஸின் சிரிஸாக் கட்சி வெற்றி பெற்றவுடன் எழுந்தன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளுக்கு ஏற்ப அயலாந்தும் போர்த்துக்கலும் தமது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக சீரமைத்துள்ளன. சைப்பிரஸ் தேசமும் இவ்வாறே தேறிக் கொண்டிக்கின்றது. 

வலுமிக்க ஐரோப்பிய ஒன்றியம்
 சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட 28 நாடுகள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இவையாவற்றையும் ஒன்றிணைத்தால் மொத்த தேசிய உற்பத்தி ரீதியில் ஐரோப்பிய ஒன்றியம் உலக பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கிறது. பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்த 28 நாடுகளும் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து ஒரு மத்திய அரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க தயக்கம் காட்டுகின்றன. பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என்று யூரோ என்ற தனி நாணயம் உருவாக்கப்பட்டபோது 17 நாடுகள் மட்டுமே அதில் இணைந்து கொண்டன. தற்போது 18 நாடுகள் யூரோ வலயத்தில் இருக்கின்றன.  எல்லா நாடுகளும் இணையாதது ஐக்கிய ஐரோப்பிய அரசு உருவாக்கத்திற்கு ஒரு பின்னடைவே. அடுத்த பெரும் பின்னடைவு ஒரு நாணயத்தை ஏற்றுக் கொண்ட 18 நாடுகளும் ஒரு நாட்டுப் பொருளாதரத்துக்குரிய கட்டுப் பாடுகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்காமல் தமது தேர்தல் அரசியலுக்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தன. சில நாடுகள் மக்களுக்கு பெரும் பணச் செலவில் அதிக சமூக நன்மைகளைச் செய்தும் சிலநாடுகள் தமது அரச செலவீனங்களை குறைத்தும் செயற்பட்டன. ஆனால் நாணய ஒன்றியமானது ஒரு சிறந்த பொருளாதாரக் கட்டுப்பாடுன் இருக்க வேண்டும். பொருளியலாளர்கள் கூறுகிறார்கள்: Currency union should go hand in hand with fiscal policy union. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் நாடுகளின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாடுகளின் பணவீக்கம், பாதீட்டுக் குறைபாடு போன்றவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். 1981-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த கிரேக்கம் 2001-ம் ஆண்டு யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது தொடர்பாகப் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. கிரேக்கம் தனது கடனை மீளளிப்புச் செய்ய முடியாமல் போனால் ஜேர்மனிக்கு 56.5 பில்லியன் யூரோ இழப்பீடு ஏற்படும். அதே போல பிரான்ஸிற்கு 42.4 பில்லியன் யூரோக்கள் இத்தாலிக்கு 37.3 பில்லியன் யூரோக்கள், ஸ்பெயினிற்கு 24.8 பில்லியன் யூரோக்கள், நெதர்லாந்திற்கு 11.9 பில்லியன் யூரோக்கள், பெல்ஜியத்திற்கு 7.2 பில்லியன் யூரோக்கள், ஒஸ்ரியாவிற்கு 5.8 பில்லியன் யூரோக்கள், போர்த்துகல்லிற்கு 1.1 பில்லியன் யூரோக்கள், அயர்லாந்திற்கு 300மில்லியன் யூரோக்கள் இழப்பீடு ஏற்படும். கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உற்பத்தியும் அதன் வரியற்ற சந்தை வாய்ப்பும் குறையும். இதனால் ஒன்றியத்தின் நிதிச் சந்தையில் பெரும் களேபரம் ஏற்பட வாய்ப்புண்டு.  2012ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடயே ஏற்பட்ட பொருளாதார மற்றும் கடன் நெருக்கடிகளைத் தொடர்ந்து உறுப்பு நாடு ஒன்றில் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளைச் சமாளிக்கும் அனுபவத்தையும் திறனையும் பெற்ற ஒன்றியம் European Stability Mechanism என்னும்  பொறி முறையையும் உருவாக்கி அதற்கு உரிய நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. கிரேக்கம் விலகினாலும் அல்லது தொடர்ந்து உறுப்பினராக இருந்து கொண்டு மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கினாலும் அதைச் சமாளிக்கக் கூடிய நிலையில் ஒன்றியம் இருக்கின்றது.

டொமினோ வீழ்ச்சி அல்ல சங்கிலி வலு

2012ம் ஆண்டு கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக அதைத் தொடர்ந்து பல நாடுகள் விலக ஒரு டொமினோ விழ்ச்சி ஒன்றியத்தில் உருவாகி ஐரோப்பிய ஒன்றியமே கலைந்து போகும் என்ற அச்ச நிஅலை இருந்தது. ஆனால் இப்போது ஒரு சங்கிலியின் வலுவிழந்த பகுதி கழற்றுப் பட வலுவுள்ள பகுதிகள் இணைந்து சங்கிலி வலுப்பெறுவது போல வலுவிழந்த நாடுகளின் விலகல் ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவுடையதாக்கும் என்ற நிலை வந்துவிட்டது.  கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் 440பில்லியன் யூரோக்களுடன் ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதியகம் என்ற ஒரு நிதியத்தை ஆரம்பித்தது. இந்தத் தொகை போதாமற் போக அது ஒரு ரில்லியன் யூரோக்களாக அதிகரிக்கப் பட்டது. 2011-ம் ஆண்டு யூரோ நாணய வலய நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கூடி கிரேக்கத்தை அதன் அரச செலவுகளைக் குறைக்க நிபந்தனை விதித்து அதனைக் கடன் நெருக்கடியில் இருந்து மீட்க நிதி உதவி செய்தன. கிரேக்கத்தின் அரச கடனில் 50%ஐ கடன் கொடுத்தோர் "வெட்டி எறிவதாகவும்" உடன்பாடு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் கிரேக்க நாடு தனது கடன்களை வெட்டி எறியும்படி அடம்பிடிக்கின்றது. புதிதாக ஆட்சிக்கு வந்த அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தான் அரசின் சிக்கன நடவடிக்கைகளை இடை நிறுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளான 1. நாட்டின் குறைந்த அளவு ஊதியத்தை அதிகரித்தல், 2. பதவி நிக்கம் செய்யப்பட்ட அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் அமர்த்தல் 3. ஓய்வூதியங்களை அதிகரித்தல் ஆகியவற்றை நிறைவேற்றப்போவதாகச் சூழுரைத்துள்ளார். தனக்கு ஒரு இடைநிரப்புக் கடன் (bridging loan) மட்டுமே தேவைப்படுவதாக அறிவித்தும் உள்ளார்.


எடு அல்லது விடு (take it or leave it) என்பதல்ல இராசதந்திரம்
நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் எடு அல்லது விடு என்ற நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. இருதரப்பினரும் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் பேச்சு வார்த்தையை முடிப்பதுதான் தற்போது பொதுவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிரேக்கம் விலகினால் அது  மோசமான பொருளாதார நடவடிக்கையைச் சந்திக்க வேண்டி இருக்கும். புதிதாக அது உருவாக்கும் நாணயத்திற்கு உலக நிதிச் சந்தை என்ன பெறுமதியைக் கொடுக்கும் என்பது எதிர்வு கூற முடியாதது. கடன் பளு மிக்க ஒரு நாட்டின் நாணயம் நிச்சயம் ஒரு தாழ்வான நிலையைத்தான் பெறும். இதனால் விலைவாசி அதிகரிப்புப் பெருமளவில் ஏற்படும். அதே வேளை கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனைத் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்படும். கடன் பட்ட கிரேக்கமும் அதற்குக் கொடுத்தவர்களும் இழப்பீடுகளைச் சந்திப்பர்.

நிலையை மாற்றிய கிரேக்கத்தின் புதிய ஆட்சியாளர்கள்
கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் ஆரம்பத்தில் ஒரு இரசிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். இரசியாவும் புதிய ஆட்சியாளர்களுக்கு தான் கடன் தருவதாக நட்புக்கரமும் நீட்டியது. ஆனால் இரசியாவிடம் தான் கடன் பெறுவது தனது திட்டத்தில் இல்லை என பரிஸ், இலண்டன், பரிஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்ட கிரேக்க நிதி அமைச்சர் சொல்லி விட்டார். கிரேக்க வாக்காளர்களின் தீர்ப்பை தாம் கருத்தில் கொள்ள வேண்டும் என மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியும் விட்டனர். கிரேக்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப் படவேண்டும் என அமெரிக்கா கருதுவது போல் தெரிகின்றது. கிரேக்கம் இரசியாவிடமிருந்தோ சீனாவிடமிருந்தோ கடன் பெறுவதை ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பாவோ விரும்பவில்லை. இதனால் சிக்கன நடவடிக்கையை வெறுக்கும் கிரேக்கத்திற்கும் அதற்குக் கடன் கொடுட்துக் கலங்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிக்கு இடையிலான பிரச்சனை தீர்க்கப்பட வாய்ப்புண்டு.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...