Monday, 16 February 2015

உக்ரேனுக்குப் படைக்கலன்கள் வழங்குவதில் அமெரிக்காவும் ஜேர்மனியும் இழுபறி!

இரசியாவிற்கு எதிராகப் போராடும் உக்ரேனிய அரச படைகளுக்கு படைக்கலன்கள் வழ்ங்குவதா என்ற கருத்தை அமெரிக்கா உலக அரங்கில் முன்வைத்த விதத்திற்கும் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமைக்கழகத்தின் அறிக்கையை இப்போது சமர்ப்பிக்காமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கப்படும் விதத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

உக்ரேனுக்குப் படைக்கலன்கள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நேட்டோப்படைத் தளபதி James Stavridis கருத்து வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து இன்னும் ஒரு முன்னாள் இராசதந்திரி ஒருவரும் அதே கருத்தை வெளியிட்டார். இது பின்னர் இக்கருத்தை ஆதரித்து மேற்கு நாட்டு ஊடகங்கள் ஆசிரியத் தலையங்கங்களும் கட்டுரைகளும் வெளிவிட்டன. பின்னர் இது அமெரிக்கப் பாரளமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது. அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜேன் கெரி உக்ரேன் சென்றார். ஆனால் இக்கருத்துக்கு எதிராக ஜேர்மனி கருத்து வெளிவிட்டது. பிரான்ஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா படைகலன்களை வழங்கினால் போர் தீவிரமடையும் எனக் கருதி ஜேர்மனியும் பிரான்ஸும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் புதிய அரசுக்கு ஓர் கால இடைவெளி வழங்கப்பட வேண்டும் என நோர்வேயில் எரிக் சொல்ஹேய்ம் ஒரு கட்டுரை மூலம் கருத்து வெளிவிட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி அரசுத் துறைச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிற்றேஜ் அதே கருத்தை இன்னும் ஒரு கட்டுரையில் வெளிவிட்டார். தொடர்ந்து ஒரு சட்டத்துறைப் பேராசிரியர் கோத்தபாயவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கை அமெரிக்காவில் தொடுக்கலாம் என்றார். பின்னர் பல பத்திரிகைகளில் இதற்கு ஆதரவு தெரிவித்து கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. அமெரிக்க அரசுத் துறைச்செயலர் நிஷா பிஸ்வால் இலங்கை சென்றார். இங்கு ஜேர்மனி இல்லை. ஆனால் தமிழின விரோதப் போக்குக் கொண்ட இந்தியா இருக்கின்றது. அது வழமைபோல இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலிபோல் கருத்து வெளிவிடுகின்றது.. உலக அரசியலில் எப்படிக் கருத்து உருவாக்கங்கள் செய்யப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. சீனா, இரசியா போன்ற நாடுகள் பன்னாட்டு அரங்கில் தமது செயற்பாடுகளைப் பற்றி உலக மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் அமெரிக்கா உலக அரங்கில் தனது நவடிக்கைக்கள் பற்றி உலக மக்கள் என்ன கருத்து கொள்ள வேண்டும் என்பதைத் தனது வலுமிக்க ஊடகங்கள் மூலமும் தனக்குத் தாளம் போடும் எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் மூலமும் நிச்சயித்துக் கொள்கின்றது.

உக்ரேன் விவகாரத்தில் தலையிட்டு ஒரு சமாதானப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்தமை மூலம் ஜேர்மனி உலக அரங்கில் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. ஒரு வல்லரசாகும் நோக்கத்தையும் அது கொண்டுள்ளது எனபதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஈரானுடன் P5+1 என்னும் நாடுகளின் குழுவில் ஐந்து வல்லரசுகளுடன் ஜேர்மனியும் இருக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுடன் கடுமையாக நடந்து கொண்ட ஜேர்மனி உக்ரேன் விவகாரத்தில் இரசியாவுடன் மிதமாக நடந்து கொள்கின்றது. ஜேர்மனிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இருக்கும் பொருளாதார்ப் பிரச்சனையில் இரு போர்களால் பேரழிவைக்கணட ஐரோப்பாவிற்கு மீண்டும் ஒரு போர் வேண்டவே வேண்டாம் என ஜேர்மனி நினைக்கின்றது

. இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முதல் அமெரிக்காவில் இருந்து மஹிந்த ராஜபக்சேவிற்கு தேர்தல் ஒழுங்காக நடாத்தப் பட வேண்டும் என்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படுகின்றது, ஜேர்மனி, பிரன்ஸ், உக்ரேன், இரசியா ஆகியவை பெலரஸ் தலைநகரில் கூடிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முதல்நாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடையாவிட்டால் இரசியா அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என மிரட்டினார்.

உக்ரேனில் முதலில் இரசியாவிற்கு சார்பாக இருந்த ஆட்சியாளரான விக்டர் யனுக்கோவிச்சுக்கு எதிரான கிளர்ச்சியை தூண்டுவதில் ஜேர்மனி முன்னின்று செயற்பட்டது. உக்ரேனை முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணணக்க ஒத்துக் கொண்ட யனுக்கோவிச் பின்னர் இரசியாவின் பக்கம் சார்ந்து இரசியாவின் யூரோஏசியன் கூட்டமைப்பில் இணைய முயற்ச்சித்தார். உக்ரேனில் பெருந்தொகைப் பணம் செலவிட்டு பாராளமன்ற உறுப்பினர்கள் கட்சிமாற்றம் செய்யப் பட்டு இரசிய சார்பு விக்டர் யனுக்கோவிச் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். ஆம் அதுவும் இலங்கை போல் தான். தற்போது உக்ரேனின் தலைநகர் கீவ்வின் நகர பிதாவாக இருக்கும் விட்டாலி கிளிஸ்க்கோ ஜேர்மனியின் ஆளும் கட்சியினரிடம் பயிற்ச்சி பெற்றவர். இவர்தான் யனுக்கோவிச்சிற்கு எதிரான கிளர்ச்சியில் முன்னின்று உழைத்தவர். இவரை மங்கள சமரவீரவிற்கு  ஒப்பிடலாம். இப்போது நீங்கள் உக்ரேனின் சந்திரிக்கா யார் என்று கேட்கலாம். இருக்கவே இருக்கின்றார் Yulia Tymoshenko என்பவர். இவர் உக்ரேனின் முன்னாள் தலைமை அமைச்சர் விக்டர் யனுக்கோவிச்சால் சிறையில் அடைக்கபப்ட்டவர். அவருடன் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.

உக்ரேனை இரசியாவின் யூரேசியன் கூட்டமைப்பில் இணைப்பதா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதா என்ற போட்டியில் அதனை எரிய வைத்தார்கள். இப்போது எரிகின்ற நெருப்பில் எப்படி எண்ணெய் ஊற்றுவது என்ற விவாதம் நடந்தது.  உக்ரேனிய அரச படைகளுக்கு படைக்கலன்கள் வழங்குவதா இல்லையா என்ற விவாதமும் எப்படிப்பட்ட படைக்கலன்கள் வழங்குவது என்ற விவாதமும் மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடந்து கொண்டிருக்கின்றன . இன்னொரு முனையில் ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல் சரிவராது என்று தெரிந்தும் தீவிர சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களுடன் மோசமான பொருளாதார நெருக்கடியில் உக்ரேன் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

2015-ம் ஆண்டு பெப்ரவரி 6-ம் திகதி வெள்ளிக்கிழமை ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல்லும் பிரெஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஹொலண்டேயும் இரசியாவின் கிரெம்ளின்ற்குத் திடீரெனச் சென்று இரசிய அதிப்ர விளடிமீர் புட்டீனுடன் பேச்சு வார்த்தை நடாத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதற்கு முதல்நாள் வியாழக்கிழமை இருவரும் உக்ரேன் தலைநகர் கீவ் சென்று உக்ரேனிய அதிபர் பெட்றோ பொறஷெங்கோவையும் சந்தித்து உரையாடினர். இதே வேளை உக்ரேனிய வெளிநாட்டமைச்சர் அர்ஸெனி யட்சென்யுக்குடன் அமெரிக்காவின் வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுத் துறைச்செயலர் ஜோன் கெரி பேச்சு வார்த்தை நடாத்தினார். பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய அதிபர்களைச் சந்திக்க முன்னர் புட்டீன் தனது நாட்டின் பாதுகாப்புச் சபையைக் கூட்டிப் பேச்சு வார்த்தை நடாத்தினார்.  இரசிய மொழி படித்த ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல்லும் பனிப்போர்க் காலத்தில் கிழக்கு ஜேர்மனியில் உளவாளியகப் பணிபுரிந்ததால் ஜேர்மனிய மொழியில் பரீச்சய முடைய புட்டீனும் சிறந்த முறையில் பேச்சு வார்த்தை நடாத்தக் கூடியதாக இருந்தது.


உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் சொல்லும் செயலும் முரண்பட்டதாக இருப்பதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் வாழும் இரசியர்கள் செய்யும் கிளர்ச்சிக்கு தான் எந்த உதவியும் செய்ய வில்லை என்கின்றது இரசியா. ஆனால் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் பயிற்ச்சிகள் போன்றவற்றை இரசியா வழங்குவதற்கான செய்மதிப் படங்களின் ஆதாரமும் நேரில் கண்ட சாட்சியங்களும் தம்மிடம் இருப்பதாக மேற்கு நாடுகள் சொல்கின்றன. உலகிலேயே மிகவிரைவில் விமான எதிர்ப்பு  ஏவுகணைகளைப் பெற்ற கிளர்ச்சிக்காரர்களாக உக்ரேன் கிளர்ச்சிக்காரர்கள்  இருக்கின்றார்கள். அத்துடன் அவர்களிடம் பெருமளவு கனரகப் படை ஊர்திகளும் இருக்கின்றன. இரசியாவின் ரி-80, ரி-72 தாங்கிகளும் பல்குழல் ஏவுகணைச் செலுத்திகளும், கவச வண்டிகளும் இருப்பதாக மேற்கத்தைய இராசதந்திரிகள் சொல்கின்றார்கள். இரசியப்படையினரும் பயிற்ச்சியாளர்களுமாக  ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உக்ரேன் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து போர் புரிவதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இரசியா இதை வன்மையாக மறுக்கின்றது . 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெலரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையின் போது உக்ரேன் அதிபர் பொரோஷெங்கோ உக்ரேனில் கொல்லப்பட்ட இரசியப்படையினரின் அடையாளப் பட்டிகள் தம்மிடம் இருப்பதைப் புட்டீனிற்குத் தெரிவித்தார். அத்துடன் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிப் பகிரங்கப்படுத்தி அவர்கள் கொல்லப்பட்டதை இரசியா மறைத்து வைத்திருப்பதை தன்னால் பகிரங்கப்படுத்த முடியும் என்றார். இதன் மூலம் அவர்களின் குடும்பத்தினரை புட்டீனுக்கு எதிராகத் திருப்ப முடியும் எனவும் புட்டீனை பொரோஷேங்கோ மிரட்டினார்.

உக்ரேனிய அதிபர் பொரோஷெங்கோ இரசியா மீது போர்ப்பிரகடனம் செய்ய வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒத்துக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இரசியா மீறினால் இரசியாமீது போர்ப்பிரகடனம் செய்வதாகச் சொன்ன பொரோஷெங்கோ உடன்பாடு மீறி மீண்டும் போர் தீவிரமடைந்த நிலையிலும் பிரகடனத்தைச் செய்யவில்லைரசியா அதற்குக் கூறப்படும் காரணங்கள்:
முதலாவது போர்ப்பிரகடனம் செய்யப்பட்டால் இரசியா உக்ரேன் மீது முழுமையான வலுவுடன் தாக்கல் செய்ய முடியும்.
இரண்டாவது போர்ப் பிரகடனம் செய்த நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் தயங்குவார்கள்.
மூன்றாவது ஜோர்ஜியாவுடனான இரசியாவின் போர் ஐந்து நாட்களில் முடிக்கப்பட்டு அதன் பெரிய பிரதேசத்தை இரசியா தன்னுடன் இணைத்தது போல் உக்ரேனின் கிழக்குப் பகுதியை தன்னுடன் இணைக்கலாம் என்ற அச்சம் உக்ரேனுக்கு உண்டு. மேற்கு  நாடுகள் ஜோர்ஜியாவிற்கு உதவி செய்யாமல் விட்டது போல் உக்ரேனையும் கைவிடலாம் என்ற அச்சமும் உண்டு.
நான்காவது இரசியாவின் இறுதி நோக்கம் உக்ரேனைத் தன் வசம் ஆக்க வேண்டும் அல்லது ஓர் அழிக்கப்பட்ட பொருளாதாரம் முற்றாகச் சிதைக்கப்பட்ட உக்ரேனை மேற்கு நாடுகளுக்கு விட்டு வைக்க வேண்டும்.

இதே வேளை அமெரிக்கா இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் ஒரு மோதலை உருவாக்கி அதன் மூலம் இரசியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இரசியாவை உடைக்க முனைகின்றது என இரசியப் பாதுகாப்புச் சபையின் தலைவர் நிக்கோலய் பட்றுஷெவ் (Nikolai Patrushev) கருத்து வெளியிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு பெப்ரவரி முதல் வாரத்தில் ஜேர்மனியில் நடந்த மியூனிச் பதுகாப்பு மாநாட்டில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரொ ஆற்றிய உரையிலும் மேற்கு நாடுகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். அவரது கருத்துக்கள் நகைப்புக்கிடமானவை என மேற்கத்தைய இராசதந்திரிகள் கருதினார்கள். அவர் உரையாற்றும் போது பலர் சிரிக்கவும் செய்தார்கள்.

இரசியாவை உலகெங்கும் உள்ள வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவுகளைச் செய்யும் SWIFT என்னும் முறைமையில் இருந்து வெளியேற்றும் முன்மொழிவை அமெரிக்கா முன்வைத்தது. ஈரானும் இப்படி வெளியேற்றப்பட்டது. அது ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் SWIFT என்னும் முறைமையில் இருந்து இரசியாவை வெளியேற்றினால் அது வாஷிங்டனில் உள்ள இரசியத் தூதுவரை திரும்பப்பெறுவதுடன் மொஸ்கோவில் இருக்கும் அமெரிக்கத் தூதுவரையும் வெளியேற்றி அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் யாவும் துண்டிக்கப்படும் என எச்சரித்தது. இரு அணு வல்லரசுகள் தொடர்பின்றி இருப்பது உலக அமைத்திக்கு பெரும் ஆபத்தாக அமையும்.

உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராகப் போராடும் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உக்ரேனியப் படையினர் தள்ளாடுகின்றனர். அவர்களுக்கு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலுத்து வருகின்றது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையிலும் மூதவையிலும் இக்கருத்து குடியரசுக் கட்சியினரிடையேயும் மக்களாட்சிக் கட்சியினரிடையேயும் வலுத்து வருகின்றது. புதிதாகப் பதவி ஏற்கவிருக்கும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஸ்டன் கார்ட்டரும் உக்ரேனிற்கு படைக்கலன்களை வழங்க வேண்டும் எனக் கருதுகின்றார். ஏற்கனவே அமெரிக்கா உக்ரேனிற்கு பாதுகாப்புப் உபகரணங்களை வழங்குகின்றது. உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை வழங்குவது தொடர்பாக தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா படைக்கலன்களை வழங்கினால் நடக்கும் மோதலில் அமெரிக்காவும் ஒரு பங்காளியாகக் கருதப்படும் என இரசியா எச்சரிக்கின்றது. அத்துடன் அமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை வழங்கினால் இரசியா ஈரானுக்கு சவுதி அரேபியாவைத் தாக்கக் கூடிய படைக்கலன்களை வழங்கி உலகில் எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யும் என இரசியா அமெரிக்காவை மிரட்டியும் உள்ளது. உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்குவதன் மூலம் இரசியா தனது உக்ரேனுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிக பொருட் செலவை செய்ய வேண்டிய்வரும் இதனால் இரசியப் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்யலாம் என அமெரிக்காவில் கருதப்படுகின்றது. அத்துடன் இரசியாவிற்கு ஆளணி இழப்புக்களையும் அதிகம் ஏற்படுத்தி விளடிமீர் புட்டீனிற்கு எதிராக இரசிய மக்களைத் திருப்பலாம் எனவும் நம்ப்பப்படுகின்றது. அமெரிகாவின் மூதவையின் வெளியுறவுத் துறைக்கான குழுவின் முக்கிய உறுப்பினரான எலியட் ஏஞ்சேல் உக்ரேனுக்குப் படைகலன்கள் வழங்காவிடில் அமெரிக்காவின் நம்பகத் தன்மை உலக அரங்கில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றார்.  1994-ம் ஆண்டு உக்ரேன் உலகிலேயே இரண்டாவது பெரிய அணுக்குண்டுகளைக் கொண்ட நாடாக இருந்தது. அது தனது அணுக்குண்டுகளைக் கைவிடுவதற்குப் பதிலாக, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், பிரித்தானிய, சீனா ஆகிய நாடுகள் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கின. பியூடபெஸ்ற் குறிப்பாணை எனப்படும் இந்த உடன்பாட்டை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்குவதை நியாயப்படுத்தலாம். அமெரிக்கா உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்கினா போலாந்து, இங்கிலாந்து, கனடா ஆகியவற்றுடன் போல்ரிக் நாடுகளும் உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்க முன்வரலாம்.

ஆளில்லாக் கண்காணிப்புப் போர் விமானங்கள், ஏவுகணைகளை இனம் காணக்கூடிய ரடார்கள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை முதல் கட்டமாக வழங்கப்படலாம். ஏற்கனவே நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுக்கு போர்ப்பயிற்ச்சி அளித்து வருகின்றனர்.

இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கினால் அது உக்ரேனில் நடக்கும் உள்நாட்டுப் போரை மிகவும் தீவிரமாக்கும் என ஜேர்மனி அஞ்சுகின்றது. இதனால் ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்க்கல் பிரெஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஹொலண்டேயையும் துணைக்கு அழைத்துக் கொண்டு பெலரஸ் தலை நகர் மின்ஸ்க்கிற்கு 2015-02-11 புதன் கிழமை மீண்டும் சென்று இரசிய அதிபர் புட்டீனுடனும் உக்ரேனிய அதிபர் பெட்றே பொரோஷெங்கோவுடனும் பேச்சு வார்த்தை நடாத்தினார்.  இதற்கு முதல்நாள் செவ்வாய்க் கிழமை புட்டீனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பராக் ஒபாமா இப்பேச்சுவார்த்தையில் சுமூகமான இணக்கப்பாடு ஏற்படாவிட்டால் தனது நாடு உக்ரேனுக்குப் படைக்கலனகளை வழங்குவது பற்றிப் பரிசீலிக்கும் எனத் தெரிவித்தார்.  புதன்கிழமை தொடங்கிய பேச்சு வார்த்தை இரவுவரை நிண்டது. பின்னர் மறுநாள் காலை மீண்டும் கூடிப் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர்.
அந்த உடன்பாட்டின்படி பெப்ரவரி 15-ம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து உக்ரேனில் நடக்கும் போர் நிறுத்தப்படும். படையினருக் அவர்களது கனரகப் படைக்கலன்களும் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பின் நோக்கி நகர்த்தப்பட வேண்டும் போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுவர். டொனெட்ஸ்க், Donetsk லுஹான்ஸ்க் Luhansk ஆகிய பிரந்தியங்களில் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தல் நடத்த வேண்டும்
உக்ரேனின் அரசமைப்புத் திருத்தப்பட்டு பிராந்தியங்களுக்கு காவல் துறை உட்பட அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். உக்ரேனின் இரசியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இரசிய மொழிக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். போர் நடந்த பகுதிகளில் வங்கிகள் திறக்கப்பட்டு ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவுகள் செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு நிறுவனம் உக்ரேனின் போர் நிறுத்த உடன்படிக்கையை நிறவேற்றுவதை மேற்பார்வை செய்யும்.  சனி இரவு போர் நிறுத்தம் செய்வதாக வியாழக்கிழமை முடிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை உக்ரேனில் கடும் தாக்குதலை இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் மேற் கொண்டனர். உக்ரேன் அதிபர் பெட்றோ போர்ஷெங்கோ போர் நிறுத்த உடன்பாடு கடும் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பேச்சு வார்த்தையின் முடிவில் ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மேர்க்கெல் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது என்றார். பிரெஞ்சு அதிபர் கொலண்டே உடன்பாடு எல்லைக் கட்டுப்பாடு, நிர்வாகப் பரவலாக்கல், உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவு போன்ற பல பிரச்சனைக்கு உரிய பலவற்றை உள்ளடக்கியுள்ளது ஆனால் பிரச்சனையைத் தீர்க்க இன்னும் பல செய்யப்பட வேண்டி இருக்கின்றது என்றார்.

இரசியாவிற்கும் புட்டீனுக்கும் இப்போது இருக்கும் பொருளாதாரப்  பிரச்சனையில் தன்னுடன் இணைத்த கிறிமியாவைக் கட்டி ஆள்வதே பெரும் பிரச்சனையாக இருக்கின்றது இப்படி இருக்கையில் மேலும் புதிய பிராந்தியங்களைத் தன்னுடன் இணைத்து அவற்றையும் கட்டி அழ இரசியா விரும்பவில்லை. இரசியாவில் புட்டீனின் ஆட்சியை தற்போதைக்கு அசைக்க முடியாது. அதனால் உக்ரேன் விவகாரம் இன்னும் சில காலம் இழுபடுவதை புட்டீன் விரும்புகின்றார். உக்ரேனின் மேலும் பல பிராந்தியங்களை அவர் ஆறுதலாக இரசியாவுடன் இணைப்பதை அவர் விரும்புகின்றார். உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் இரசிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கிறிமியாவைத் தக்க வைப்பதும் உக்ரேனை பொருளாதார ரீதியில் வளரவிடாமல் செய்வதும் தான புட்டீனின் தந்திரோபாய நோக்கங்களாகும்.

உக்ரேனின் தேசியவாதிகளும் வலதுசாரிகளும் இரசியாவிற்கு உக்ரேனின் இறையாணமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என அதிருப்தி அடைந்துள்ளனர்.
உக்ரேனிய அதிபர் பொரோஷெங்கோவைத் திருப்திப்படுத்த பன்னாட்டு நாணய நிதியம் உக்ரேனுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் பதினேழரை பில்லியன் கடன் வழங்கவுள்ளது.

 இரண்டாம் முறையாக நடக்கும் இப்பேச்சு வார்த்தை சரிவராவிட்டால்  இரசியாவின் நில அபகரிப்பைத் தடுக்க ஜேர்மனியே உக்ரேனுக்குப் படைக்கலன்களை வழங்க முன்வரலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...