ஜப்பான் தனது அமைதிவாதக் (pacifism) கொள்கையைக் கைவிட்டு ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறுவதற்காக தனது அரசமைப்பு யாப்பைத் திருத்துமா என்ற கேள்வி ஐ. எஸ் எனப்படும் இசுலாமிய அரசு அமைப்பினர் இரு ஜப்பானியர்களைக் கொலை புரிந்த பின்னர் மீளத் தலையெடுத்துள்ளது. 2015-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12-ம் திகதி ஜப்பானியப் பாராளமன்றத்தில் ஓர் உணர்ச்சி பூர்வமான உரையை ஆற்றிய ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே ஜப்பானிய மக்களே நம்பிக்கை கொள்ளுங்கள் எனச் சொன்னதுடன் எமது அரசியலமைப்பு யாப்பைத் திருத்துவதற்கான விவாதத்தை ஆழமாகச் செய்ய வேண்டிய நேரம் இதுவல்லவா என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தப் பாராளமன்றம் எதிர்காலத்தைக் கருத்திக் கொண்டு மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அபே பாராளமன்றத்தில் எடுத்துரைத்தார்.
வெறுவாய மெல்பவனுக்கு ஐ, எஸ் அமைப்புக் கொடுத்த அவல்
ஈராக்கில் இசுலாமியத் தீவிரவாதிகள் இரு ஜப்பானியர்களைக் கொன்றதுடன் ஜப்பானை ஒரு போர் செய்யக் கூடிய நாடாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. சீனப் பாதுகப்புத் துறை நிபுணர் ஷி யொங்மிங் பணயக் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை வைத்து தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே தனது போர் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றப் பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். வலதுசாரி அரசியல்வாதியான ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே பதவிக்கு வந்த நாளில் இருந்தே ஜப்பானை ஒரு போர்புரியக் கூடிய நாடாக மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஜப்பானிய அரசமைப்பு யாப்பின் ஒன்பதாவது பிரிவை மாற்ற வேண்டும் எனக் கடும் பரப்புரை செய்து வருகின்றார். இந்தத் திருத்தத்தைச் செய்வதற்கு ஜப்பானியப் பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றின் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்பதுடன் ஜப்பானிய மக்களிடையேயான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சாதாரண பெரும்பான்மையுடனான ஆதரவையும் பெற வேண்டும். உலக அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஜப்பான தனது நட்பு நாடுகளின் இணைந்து போர் புரியக் கூடிய வகையில் அதன் அரசமைப்பு மாற்றப் பட வேண்டும் என ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயும் அவரது ஆதரவாளர்களும் பெரும்பரப்புரை செய்து வருகின்றனர். அதாவது ஜப்பானும் அமெரிக்கப்படைகளுடன் இணைந்து போர் புரிய வேண்டும் என்பது அபேயின் கொள்கையாகும். ஜப்பான் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளல் அவசியம் என அபே கருதுகின்றார். அபே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்தே ஜப்பானிய அரசமைப்பு யாப்பைத் திருத்த வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
அமெரிக்காக்காரன் அல்வா கொடுத்தால்!!!!!
உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ஜபானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார். அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.
வேண்டாம் இந்த சீனப் பூச்சாண்டி
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சிய பழைய சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும். ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.
ஜப்பான் வாங்கிக் குவிக்கவிருக்கும் படைக்கலன்கள்
...2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4.98 ரில்லியன் யென்கள் (41பில்லியன் டொலர்கள்) பெறுமதியான படைக்கலன்களை வாங்குவதாக முடிவு செய்துள்ளது. அதில் முப்பது AAV-7 Amphibious vehicle என்னும் நிலத்திலும் நீரிலும் பயணிக்கக் கூடிய ஊர்திகள், இருபது P-1 கண்காணிப்புக் கடற்கலன்க்கள், ஆறு F-35Aபோர் விமானங்கள், ஐந்து Bell Boing V-22 போர் விமானங்கள், மூன்று Global Hawks ஆளில்லாப் போர் விமானங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் முறைமை போன்றவையும் உள்ளடக்கபட்டிருக்கின்றன.
சீனாவுக்கு ஆப்பு வைக்கும் ஜப்பான் - அமெரிக்கக் கூட்டு
ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து SM-3-Block-IIA என்னும் எறியங்களைக் (porjectiles) கொண்ட ஒரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன. 21 அங்குல பரிமாணமுள்ள இந்த எறியங்கள் மற்ற எறியங்களுடன் ஒப்பிடுகையில் பெரியவையும் வேகமாகப் பாயக் கூடியவையுமாகும். அத்துடன் தாழவரும் ஏவுகணைகளையும் அழிக்கக் கூடியவை. ஜப்பான் ஏற்கனவே நான்கு உளவுச் செய்மதிகளை விண்வெளியில் விட்டுள்ளது. இனி அமெரிக்காவுடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட GPS எனச் சுருக்கமாக அழைக்கபப்டும் Global Positioning System உருவாக்கவிருக்கின்றது. இதன் மூலம் வானிலும் கடலிலும் நிலத்திலும் நடப்பவற்றைத் தடயமறிய முடியும். மேலும் இரு தகவற்பரிமாற்றச் செய்மதிகளையும் ஜப்பான் விண்வெளியில் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது.
சீனாவின் பலவீனப் புள்ளியை மையப்படுத்தும் ஜப்பான்
சீனா என்னதான் தனது படைவலுவைப் பெரிதாக்கினாலும் அதன் படைகளுக்கு போர் முனை அனுபவம் என்பது கிடையாது எனச் சொல்லலாம். இதுவே சீனாவின் பலவீனமாகும். நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும், சிரியாவிலும் தமது நேரடிப் போன் முனை அனுபவங்களைப் பெற்றுள்ளன. ஜப்பான் மற்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்புப் போர் புரியலாம் என தனது அரசியலமைப்பு யாப்பை மாற்றி உலகின் பல பாகங்களுக்கும் தனது படையினரை அனுப்பி நேரடிப் போர் முனை அனுபவங்களைப் பெற்றால் ஜப்பானியப் படையினரை எதிர் கொள்வது சீனாவிற்கு முடியாத காரியம் ஆகிவிடும். பன்னாட்டு அரங்கில் செய்யும் இந்த போர் முனைச் செயற்பாட்டை சமாதானத்திற்கான பங்களிப்பின் முனைப்பு (proactive contribution to peace) என்னும் பெயரிட்டுக் காட்ட ஜப்பான் விரும்புகிறது. ஜப்பானை வெறுப்பவர்கள் சீனர்கள் மட்டுமல்ல. கொரியர்களும் ஜப்பானை அதிகம் வெறுக்கின்ற்னர். ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சீனர்களைப் போலவே கொரியர்களும் மறக்கவில்லை. வட கொரியா தனது அழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை வளர்த்து வருகின்றது. தென் கொரியா பொருளாதார ரீதியில் மட்டுமல்ல படைத்துறை ரீதியிலும் ஜப்பானுக்குச் சவாலாக அமையக் கூடிய ஒரு நாடு.
ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு
இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தாமும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை.
அமெரிக்காவின் பங்காளியா பணியாளியா
அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் படைவலுவில் 60 விழுக்காடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ளவிருக்கின்றது. அத்துடன் ஆசிய பசுபிக் நாடுகளை இணைத்து அமெரிக்கா அமைக்கும் பொருளாதாரக் கூட்டமைப்பில் ஜப்பானும் இணையவிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ஜப்பானும் தனது படைவலுவைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் பங்காளியாக ஜப்பான் செயற்படமுடியும் அல்லாவிடில் அமெரிக்காவின் பணியாளி நிலைதான் ஜப்பானுக்கு ஏற்படும். அத்துடன் தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஜப்பானின் படை வலுவும் இருக்க வேண்டும். தொடர்ந்தும் அமெரிக்காவில் அது தங்கியிருக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment