Friday, 6 February 2015

நகைச்சுவைக் கதை: பூனூல் போட்ட பூதம்

சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தமிழ் இளைஞன் ஒரு நாள் பாலைவனத்தில் பாதையைத் தொலைத்து விட்டு நீண்ட தூரம் நடந்து களைப்பும் தாகமும் அடைந்தான் அவன் தனக்குத் தெரிந்த காயத்திரி மந்திரம், லிங்காஷ்டகம், விநாயகர் அஷ்டகம், கந்தசஷ்டிக் கவசம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே நடந்தான். கடைசியில் களைத்துப் போய் சகல சக்தியையும் இழந்து ஓர் இடத்தில் சுடு மணலில் பதை பதைத்து உட்கார்ந்தான். அவன் கையில் சுடு மணலுக்குள் ஏதோ ஒன்று தட்டுப் படுவதைப் போல் உணர்ந்தான். மணலைக் கிளறிப் பார்த்தபோது ஒரு புட்டி இருப்பதை கண்டான். அதற்குள் குடிக்க ஏதாவது இருக்கலாம் என்று அவசரமாக அப்புட்டியைத் திறந்தான் என்ன ஆச்சரியம் அதனுள் இருந்து ஒரு பூதம் வெளிவந்தது.

புட்டிக்குள் இருந்து வெளிவந்த பூதம் நன்றி மனிடா மிக்க நன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் புட்டிக்குள் அடைப்பட்டுக் கிடந்த என்னை மீட்டெடுத்தாய். உனக்கு வேண்டிய மூன்று வரங்களைக் கேள் என்றது. அவ்விளைஞன் எனது தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடு என்றான். உடனே அவனுக்கு குடிக்க தண்ணீரைப் பூதம் கொடுத்தது.

அடுத்துப் பூதம் உனது இரண்டாவது வேண்டுதல் என்ன என்றது. அதற்கு இளைஞன் எனக்கு இந்த இடத்தில் ஒரு பாலைவனச் சோலை மாளிகை ஒன்றுடன் வேண்டும் என்றது. உடனே அங்கு ஒரு பாலைவனச் சோலையும் மாளிகையும் தோன்றியது.

இப்போது பூதம் உனது மூன்றாவது வேண்டுதல் என்ன சொல் மானிட நண்பனே என்றது. அப்போதுதான் அந்த இளைஞனுக்கு தனது வறுமையான குடும்பம் நினைவுக்கு வந்தது. தனது குடும்பத்தை நல்லாக்க வேண்டும் என்று நினைத்த இளைஞன் திடீரென தன் குடும்பம் மட்டுமா வாழச் சிரமப் படுகிறது, முழுத் தமிழினமுமே வாழச் சிரமப்படுகிறதல்லவா என்று எண்ணினான். பூதத்தைப் பார்த்து உலகெங்கும் தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்றது.  உடனே பூதம் கோரமாக ஆத்திரத்துடன் சிரித்தது. உடனே இளைஞன் கையில் இருந்த தண்ணீர் மறைந்தது. இளைஞன் ஆச்சரியப்பட்டு நிற்க பாலைவனச்சோலையும் மாளிகையும் மறைந்தது. பூதம் அவனை எட்டி உதைத்து விட்டுச் சென்றது. அதன் திறந்த முதுகைப் பார்க்கும் போது பூதத்தின் தோளில் பூனூல் தொங்குவதை அவதானித்தான்.

இந்தக் கதையின் நீதி: பூதம் துக்ளக் சோவைப் போலவோ, இந்து ராமைப் போலவோ அல்லது சுப்பிரமணி சுவாமியைப் போலவோ இருக்கலாம்.

Thursday, 5 February 2015

IT Expert கணவனுடன் மனைவி படும் பாடு




வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.

மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.

மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?
கணவன்: Access not allowed.

மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?
கணவன்: Bad command or file name

மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....
கணவன்: erroneous syntext

மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.
கணவன்: access denied

மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?
கணவன்: wrong password

மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்
கணவன்: data mismatch

மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது
கணவன்: by default

மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்
கணவன்: virus detedted

மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?
கணவன்: too many parameters

மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி
கணவன்: press contl, alt & del

மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.
கணவன்: illegal operation, system shuts down

மனைவி: நான் தொலஞ்சு போறன்.
கணவன்: reboot

மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்
கணவன்: change user

Monday, 2 February 2015

ஒபாமாவின் இந்தியப் பயணமும் இரு முக்கோணக்காதல்களும்

தற்போது உலக நாடுகளுக்கிடையிலான உறவுகள் பல முக்கோணங்களைக் கொண்டதாக இருக்கின்றது. பல முக்கோணங்களில் முக்கிய புள்ளியாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கின்றது. இரசியா, சினா, அமெரிக்க உளவுகள் ஒரு முக்கிய முக்கோணமாக இருந்தது போய் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா இடையிலான முக்கோண உறவு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த முக்கோணத்தை ஒட்டி அமெரிக்க, சீன, பாக்கிஸ்த்தானிய உறவு இன்னொரு முக்கோணமாக அமைகின்றது. ஜப்பானியட் தலைமை அமைச்சர் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் இணைந்து சீனாவிற்கு ஆப்பு வைக்கும் ஒரு முக்கோண் உறவை வளர்க்க விரும்புகின்றார். எல்லா முக்கோணங்களிலும் ஒன்றை ஒன்று நம்பாமைதான் பொதுவானதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சினே அபே, சீன அதிபர் ஜீ சின்பிங் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியா சென்றார். மற்ற இருவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் ஒபாமாவின் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒபாமாவும் பங்கேற்றது மிக முக்கியமானது என உலகெங்கும் உள்ள ஊடகங்கள் தெரிவித்தன.  ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாட்டுகளிடையான உறவில் ஒரு திருப்பு முனை என்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கவர்ச்சிகரமான இந்தியா சிவப்பு நாடா கழற்றுகின்றது
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை,மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொருளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு  உலகிலேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும்.  இந்தியாவின் இந்த அம்சங்கள் பல நாடுகளை இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து இந்தியாவுடனான வர்த்தகங்களை விருத்தி செய்ய விரும்புகின்றன. போதாக் குறைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளம் உண்டு என்று வரவேற்புப்பா பாடிவருகின்றார்.

அமெரிக்க இந்திய முறுகல் ஒரு தொடர்கதை.
ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் ஐக்கிய இராச்சியத்துடன் போராடித் தமது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாடுகள். இப்படிப்பட்ட ஒற்றுமையுடன் உருவான இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு சீரான உறவு இருததில்லை. பாக்கிஸ்த்தானை இரசியா அல்லது இரண்டும் இணைந்து ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. இதனால் 1954-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானிற்கு பெரும் படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா உதவியாக வழங்கியது. இவை கஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராகப் அப் படைக்கலன்கள் பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்துடன் வழங்குவதாக அமெரிக்கா சொன்னது. ஆனால் அதை அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. இது இந்திய அமெரிக்க உறவில் முறுகலை உருவாக்கியது. பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது அணிகளில் இந்தியாவை இணைக்க பெரு முயற்ச்சி எடுத்தன. ஆனால் நேரு இந்தோனேசியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை 1961-இல் உருவாகினார். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவை வளர்த்தமை அமெரிக்க இந்திய உறவைப் பாதித்தது. அமெரிக்க இந்திய உறவு சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் உடனபடிக்கையை ரிச்சட் நிக்சன் அதிபராக இருந்த போது மோசமடைந்தது. இத உடன்படிக்கைக்குப் பதிலடியாக இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து கொண்டன. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உறவு மிக மோசமான நிலையை அடைந்தது பங்களாதேசப் போரின் போதே. அப்போது இந்தியா பங்களாதேசத்தைப் பிரிப்பதைத் தடுக்க சீனப் படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தும் படி சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. அப்போது அமைதியான எழுச்சியை தனது கொள்கையாகக் கொண்ட சீனா இந்திரா காந்தியின் உறுதிப்பாட்டை உணர்ந்து கொண்டு அமெரிகாவின் வேண்டுதலை நிராகரித்து விட்டது. பின்னர் அமெரிக்க இந்திய உறவு மன்மோஹன் சிங் - சோனியா காந்தியின் ஆட்சியில் சீரமைக்கப்பட்டது.


இந்திய சீன உறவும் பஞ்சாகிப் போன பஞ்சசீலக் கொள்கையும்

இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவினது பொருளாதாரக் கொள்கையில் இந்திய முதலாளிகளை மேற்கு நாட்டு முதலாளிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு முன்னணி அம்சமாகும். இதை மனதில் கொண்ட நேரு அமெரிக்காவிற்கு 1949-இல் மேற் கொண்ட பயணம் இருதரப்பினருக்கும் திருப்திகரமாக இருக்கவில்லை. சீனப் பொதுவுடமைப் புரட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற அமெரிக்காவின் வேண்டு கோளை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. செஞ்சீனாவை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. செஞ்சீனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்பதையும் நேரு வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேரு நினவுப் பேருரையில் எஸ் மேனன் அவர்கள் நேரு சீனாவை உலக ஒழுங்கில் இணைப்பதன் மூலம் அதனிடம் இருந்து பொறுப்பான நடத்தையைப் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம் என நேரு கருதியிருந்தார் என்றார். நேருவின் சீனா தொடர்பான கொள்கை இந்தியாவிலும் உலக அரங்கிலும் கண்டனங்களுக்கு உள்ளானது. இருந்து நேரு சீனாவுடனும் பர்மாவுடனும் பஞ்ச சீலக் கொள்கை அடிப்படையில் உறவை வளர்க்க விரும்பினார். 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஞ்ச சீலக் கொள்கை:
1. ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மற்ற நாடுகள் மதித்தல்.
2. ஒரு நாட்டை மற்ற நாடுகள் ஆக்கிரமிக்காதிருத்தல்
3. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றைய நாடுகள் தலையிடாதிருத்தல்.
4. சமத்துவமும் இருதரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய ஒத்துழைப்பும்.
5. அமைதியாக ஒத்திருத்தல்.
ஆனால் 1962ம் ஆண்டு சீனா இந்தியா மீது படையெடுத்தது.


புதிய இந்திய அமெரிக்க உறவு – காசேதான் கடவுளடா!
2016-  ம் ஆண்டு உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா அமையும் எனப் பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் நூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தை ஐநூறு பில்லியன் டொலர்களாக உயர்த்த மோடியும் ஒபாமாவும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஒபாமா இந்தியாவிற்கு நான்கு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உறுதியளித்தார்.   ஒபாமாவைப் பொறுத்தவரை உலகிலேயே மூன்றாவது பெரிய அளவில் சூழல்  அசுத்தம்  செய்யும் இந்தியாவை சூழல் பாதுகாப்பு தொடர்பாக உடன்பட வைத்தமை பெரு வெற்றியாகும். இந்தியாவிற்கு அதிக படைக்கலன் விற்கும் நாடாக இருந்த இரசியாவை இரண்டாம் இடத்திற்கு அமெரிக்கா தள்ளி விட்டது. தற்போது அமெரிக்கா இந்தியாவிற்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கு  படைக்கலன்களை ஏற்றுமதி செய்கின்றது. இப்போது இரு நாடுகளும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பத்து ஆண்டுகள் நீடித்துள்ளன. 2006-ம் ஆண்டு இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இந்தியத் தலைமை அமைச்சர் சிங்குடன் இணைந்து இரு நாடுகளும் கேந்திரோபாய பங்காண்மையை வளர்ப்பதாகக் கூட்டறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமெரிக்கப் பாரளமன்றத்தின் மக்களவையில் இந்தியாவுடன் அணுவலு ஒத்துழைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க இந்திய அணுவலு ஒத்துழைப்பில் அமெரிக்கா இந்தியாவிற்கும் வழங்கும் யூரேனியத்தை இந்தியா அணுக்குண்டு உற்பத்திக்குப் பாவிக்காமல் இருக்க அமெரிக்கா இந்தியாவில் அதன் பாவனையை கண்காணிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. இது இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு என இந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பி இது இந்தியப் பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்தின. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்க இந்திய அணுவலு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை மன்மோகன் சிங் இந்தியப் பாராளமன்றத்தில் வாசித்த போது இடதுசாரிக் கட்சிகள் தேன்நிலவு முடிந்து விட்டது இப்போது திருமண அறிவிப்பா எனக் கேள்வி எழுப்பின. போபால் நச்சு வாயுக் கசிவு போல் மீண்டும் நடக்காமல் இருக்க உத்தரவாதம் இந்தியாவின் பலதரப்பினரிடமிருந்தும் எழுந்தது. இதற்கு மாற்றீடாக பராக் ஒபாமாவும் மோடியும் 122மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒரு காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்க ஒத்துக் கொண்டனர். அத்துடன் யூரேனியத்தை கண்காணிக்கும் விவகாரத்திலும் அமெரிக்கா விட்டுக் கொடுத்தது.

வெளியேற்றப்பட்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்
அமெரிக்க இந்திய உறவில் ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக பாக்கிஸ்த்தான் இருக்கின்றது என்றால் குறுங்காலப் பிரச்சனையாக உக்ரேன் விவகாரமும் அமெரிக்காவில் பணியாற்றிய தேவ்யானி விவகாரமும் அமைந்தன. உக்ரேன் விவகாரத்தில் இந்தியா எந்த ஒரு மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. அமெரிக்க அரசனை நம்பி இரசியப் புருசனை அவசரப்பட்டு இந்தியா கைவிடத் தயாரில்லையா என்ற கேள்வி இன்னும் உயிருடன் இருக்கின்றது.  இது இந்திய, இரசிய, அமெரிக்க முக்கோணத்தின் கோணல் நிலை. ஆனால் தேவ்யானி விவகாரத்தை கையாண்டு அமெரிக்காவின் அதிருப்தியைச் சம்பாதித்த இந்திய வெள்யுறவுத் துறைச் செயலர் ஒபாமாவின் இந்தியப் பயணம் முடிந்த கையோடு பதவியில் இருந்து விரட்டப்பட்டார். அவரது இடத்திற்கு நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தையும் ஒபமாவின் இந்தியப் பயணத்தையும் ஒழுங்கு செய்தவரும் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவராக இருந்தவருமான எஸ் ஜெய்சங்கர் வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கோணத்தின் மற்ற முனை சும்மா இருக்கவில்லை. புதிய வெளியுறவுத் துறைச் செயலரை அழத்து முதலில் சந்திப்பு நடாத்திய நாடு சீனாவாகும். இச் சந்திப்பைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சுஸ்மா சுவராஜ் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்காவும் சீனாவும் வைக்கும் உறவு
ஒபாமா புதி டில்லியில் இருக்கும் போது பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி ரஹீல் ஷரிஃப் சீனாவிற்குப் பயணம் செய்தார். இந்திய அமெரிக்க உறவிற்குப் போட்டியாக சீன பாக்கிஸ்த்தானிய உறவு வளருமா என்பதும் ஒரு நியாயமான கேள்வியே! இந்தியாவின் பொருளாதாரம் 1.25பில்லியன் டொலர் பெறுமதியானது. பாக்கிஸ்த்தானின் பொருளாதாரம் 190மில்லியன் டொலர்கள் மட்டுமே. பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் இந்தியா ஆட்சியாளர்களிலும் மோசமானவர்கள்.  இந்தியாவிலும் மிக மோசமான ஊழல் பாக்கிஸ்த்தானில் தலைவிரித்தாடுகின்றது. இரு நாடுகளிடமும் அணுக் குண்டுகள் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு எத வகையிலும் இந்தியாவிற்கு கிட்டவும் பாக்கிஸ்த்தானால் நிற்க முடியாது.  ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவுடன் பல வகையிலும் கடந்த பல ஆண்டுகளாக இரகசியமாகவும் பகிரங்கமாகவும் ஒத்துழைத்த பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்கா செய்ய முடியாத அணுவலு உற்பத்தி உடன்பட்டை அமெரிக்கா இந்தியாவுடன் செய்வது பாக்கிஸ்த்தானியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவை ஆப்கானிஸ்த்தானுக்குள் அமெரிக்கா இழுப்பதைப் பாக்கிஸ்த்தான் விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இரண்டு தடவைகள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டமை பாக்கிஸ்த்தானில் பல தரப்பினரையும் எரிச்சல் பட வைத்துள்ளது. இதற்கு முன்னர் டுவைற் ஐஸ்ன்ஹோவர், லிண்டன் ஜோன்சன், ரிச்சர்ட் நிக்சன் பில் கிளின்டன் ஜோர்ஜ் டப்ளியூ புஷ் ஆகிய அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற்கொண்டார்கள். பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கும் போது எந்த ஓர் அமெரிக்க அதிபரும் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் செய்யவில்லை. சர்வாதிகார இராணுவ அதிகாரிகள் பாக்கிஸ்த்தானை ஆட்சி செய்யும் போது மட்டும் அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற்கொண்டனர். பாக்கிஸ்த்தானில் மக்களாட்சியில் அக்கறை கொள்வதிலும் பார்க்க பாக்கிஸ்த்தானை பொதுவுடமைவாதத்தின் விரிவாக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதில் அமெரிக்கா அதிக அக்கறை காட்டியது. பனிப்போர் முடிந்த பின்னர் ஆப்கானிஸ்த்தானில் உருவான இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்பட்டது. இந்தியாவுடன் சீனா தனது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகின்றது. அது சீனாவிற்கு அவசியமான ஒன்றும் கூட. அதே வேளை பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் தமக்கிடையிலான வர்த்தகத்தைப் பெருக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.

ஆறுதல் அடைந்த சீனா
2015ம் ஆண்டின் சீனாவிற்கான முதல் அடியாக இலங்கையில் சீனாவிற்கு உகந்த ஆட்சியாளர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். இரண்டாவது அடியாக இந்திய அமெரிக்க உறவு பராக் ஒபாமாவின் பயணத்தால் விழுமா என்ற எதிர்பார்ப்பு சீனாவில் இருந்தது. அமெரிக்காவிற்கும் இடையில் படைத்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டாலும் காத்திரமான படைத்துறைக் கூட்டமைப்பு உருவாகியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் சீனா ஆறுதல் அடைந்ததாக சீன ஊடகங்களில் வெளிவந்த கருத்துரைகள் தெரிவிக்கின்றன.

Saturday, 31 January 2015

வேட்டியை மடிச்சுக் கட்டும் இரசியா

உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடையால் பொருளாதாரப் பிரச்சனைய இரசியா எதிர் கொள்கின்றது ஆனாலும் இரசியா அடங்கியதாகத் தெரியவில்லை. உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தைத் தன்னுடன் இணைக்க இரசியா பெரும் முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை இரசியாவிற்கு எதிரான இரண்டாம் பொருளாதாரப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். இரசியாவிற்கு எதிரான முதலாம் பொருளாதாரப் போர் சோவியட் ஒன்றியத்தை வீழ்த்தியது. இரண்டாம் பொருளாதாரப் போர் இரசிய அதிபரி விளடீமீர் புட்டீனின் கொட்டம் அடக்க நடக்கின்றது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் திகதி இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி பெரு விழ்ச்சியை அடைய இரசியா தனது வட்டி விழுக்காட்டை 10.5இல் இருந்து 17 ஆக உயர்த்தியது. இது பற்றி மேற்கத்தைய ஊடகங்கள் வெற்றிக்களிப்புடன் எழுதித் தள்ளின. ஆனால் ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்திற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது. இரசிய மக்கள்  உள் நாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் 2015 ஜவனரி மாத இறுதியில் இரசியா தனது வட்டி விழுக்காட்டை 17இல் இருந்து 15 ஆகக் குறைத்தது. இது இரசிய வங்கிகளிற்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

2015 ஜனவரி இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்புக்களின் படி இரசிய மக்களில் 55 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாகக் கருதுகின்றனர். இது புட்டீன் இப்போதும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு இந்த மாதிரியான கருத்துக் கணிப்புச் செய்த போது 66 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாக நம்பினர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் இரசியாவில் பணவிக்கம் பத்துக்கும் மேல் இருப்பதை இரசிய மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். இரசிய அன்னை மீது அந்நியர்கள் நடத்தும் தாக்குதலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

இரசிய அதிபர் புட்டீனின் தற்போதைய நிலை மூலையில் முடக்கப்பட்ட புலியின் நிலையாகும். ஒன்றில் அவர் அடங்கிப் போகவேண்டும் அல்லது தனது இறுதிப் பாய்ச்சலை மேற்கொண்டு தப்பி ஓட வேண்டும் அல்லது பிடிபடவேண்டும். பொருளாதாரத் தடையாலும் எரிபொருள் விலை வீழ்ச்சியாலும் முடக்கப்பட்ட புட்டீன் அடங்கிப்போவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தமை புட்டீனின் செல்வாக்கை இரசியாவில் பெருமளவில் உயர்த்தியுள்ளது. உக்ரேனில் அவர் மேற்குலக நாடுகளுக்குப் பாடம் படிப்பிப்பதாக இரசிய மக்கள் கருதுகின்றனர். அதற்கு ஏற்ப இரசிய ஊடகங்களும் மேற்குலகுக நாடுகளுக்கு எதிராகவும் புட்டீனுக்கு ஆதரவாகவும் பெரும் பரப்புரை செய்கின்றன. இதனால் பொருளாதாரப் பிரச்சனையால் மக்கள் தன்னை வெறுக்க மாட்டார்கள் எனப் புட்டீன் நம்புகின்றார். இது இன்னும் எத்தனை நாட்கள் போகிறது பார்ப்போம் என மேற்குலக நாடுகள் காத்திருக்கின்றன. ஆனால் புட்டீன் தனது பரப்புரைகள் மூலம் உக்ரேனிய மக்களை தற்போது உள்ள மேற்குலகு சார்பான நாடுகளுக்கு எதிராகத் திருப்ப முயல்கின்றார்.


அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளின் எல்லைகளை நோக்கி தனது போர் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் குடிசார் விமானப் போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல்களை இரசியா ஏற்படுத்துகின்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் திகதி இரசியாவின் நான்கு இயந்தரங்கள் கொண்ட Tu-95 Bear H bombers என்னும் இரு போர் விமானங்கள் பிரித்தானிய வான் எல்லைக்கு 25 மைல்கள் வெளியில் பறப்புக்களில் ஈடுபட்டிருந்தன.  அவற்றை பிரித்தானிய Eurofighter Typhoon போர் விமானங்கள் கண்காணித்து அவற்றின் அலைவரிசையைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டன. இருதரப்பினருக்கும் இடையிலான விண் கிளித்தட்டு விளையயட்டு 12 மணித்தியாலங்கள் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இலண்டனுக்கான இரசியத் தூதுவரை பிரித்தானிய வெளியுறவுத் துறை அழைத்து விளக்கம் கேட்டது. அதற்குப் பதிலளித்த இரசியத் தூதுவர் தமது Tu-95 Bear H bombers செய்த பறப்புக்கள் ஒரு வழமையான ரோந்துப் பறப்புக்கள் என்றும் அவை எந்த விதத்திலும் அச்சுறுத்தல்களாக அமையாது என்றும் கூறினார்.
உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோக் கூட்டமைப்பு இரசியாவிற்கு எதிராக தமது வலுவை அதிகரித்தன. இரசியாவின் அடுத்த படையெடுப்பு நடக்கலாம் என்னும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நேட்டோ தனது படைகளை அதிகரித்தது. இரசியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒரு துரித பதிலடிப் படைக்குழுவையும் நேட்டோக் கூட்டமைப்பு அமைத்தது.

நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்துள்ளார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ்.
இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்துள்ளது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்துள்ளது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார்.
இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும்.
ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார்.
கிரேக்க நாட்டில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தீவிர இடது சாரிகளுக்கு இரசியா நட்புக்கரம் நீட்டியுள்ளது ஐரோப்பியப் பாதுகாப்புத்துறை நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே வேளை கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிச் திஸ்பிராஸ் இரசியாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர இருக்கும் புதிய பொருளாதாரத் தடைகளுக்குத் தன் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் விமசரகர்கள் உக்ரேனின் தற்போதைய நிலை இரண்டாம் உலகப் போரின் முன்னர் போலாந்து இருந்த நிலை போன்றது என்கின்றனர்.

Tuesday, 27 January 2015

சீனாவின் அமைதியான எழுச்சியும் அமெரிக்காவை நாடும் அமைதி இழந்த அயல் நாடுகளும்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணம் சீனாவை உலுப்பியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை, துரித வளர்ச்சியடையும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது ( சில கணிபீடுகளின் படி முதலாவது) பெரிய பொருளாதாரம், உறுதியான அரசு, உலகிலேயா அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு, உலகிலேயே அதிக எண்ணிக்கையான படையினர், நீண்ட வரலாறு, உயர்ந்த கலாச்சாரம் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்ட சீனா உலக அமைதிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் என்ன பங்களிப்பைச் செய்கின்றது? சீனாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

அயலவர்களை அமெரிக்காவை நோக்கி நகர்த்தும் சீனா
சீனா உலகப் பெரு வல்லரசாக உருவெடுத்து மற்ற வல்லரசு நாடுகளை ஓரம் கட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்று சோவியத் ஒன்றியம் மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு படைக்கல உற்பத்தியைச் செய்து வீழ்ச்சியடைந்ததை சீனா நன்கு அறியும். இன்று மேற்கு நாடுகளுடன் மோதி விளடிமீர் புட்டீனின் இரசியா பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சீனா நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இரசியாவைப் போல் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக் கொண்டு செல்ல சீனா விரும்பவில்லை. இதனால் சீனா தனது வளர்ச்சியை அமைதியான எழுச்சி எனப்பெயரிட்டுள்ளது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியும் படைவலுப் பெருக்கலும் அதன் அயல் நாடுகளைக் கலவரமடைய வைத்தன. சீனா தனது கடல் எல்லைகளையும் தரை எல்லைகளையும் மற்ற நாடுகள் ஏற்காத வகையில் விரிவு படுத்த முயல்வது இந்த அச்சத்தை மேலும் மோசமாக்கியது. இவை தமது துணைக்கு ஐக்கிய அமெரிக்காவை நாடின. இதன் விளைவாக தென் கொரியா ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு சவால் விடுக்கக் கூடிய அளவில் அமெரிக்கப் படைத்தளங்கள் உருவாகின. கியூபாவில் இரசியா விட்ட வெற்றிடத்தை சீனா நிரப்ப எந்த முயற்ச்சியும் மேற் கொள்ளவில்லை எனச் சொல்லலாம். அமெரிக்காவின் அயல் நாடுகளுடன் அமெரிக்காவுடன் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் சீனா நடு நிலையே வகுத்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டிற்கு சீனா பெரும் உதவிகள் எதையும் செய்யாதது ஈரானை சீனாவின் மீது அதிருப்தி கொள்ள வைத்தது.

இரு அம்ச வெளியுறவும் மூன்று திட்ட வர்த்தகமும்
சீனா தனது வெளிநாட்டுக் கொள்கையில் இரு முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கின்றது. முதலாவது உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தாது இருத்தல் இரண்டாவது அமெரிக்காவுடனான உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்தல். அத்துடன் மூன்று கேந்திரோபாயங்களையும் சீனா வெளிப்படையாகச் சொல்லியுள்ளது. 1 மத்திய ஆசியாவுடனான புதிய பட்டுப்பாதை 2. தென்கிழக்காசியாவூடாகச் செல்லும் கடல்வழிப்பட்டுப்பாதை. 3. இந்தியா, மியன்மார், பங்களாதேசம் ஆகியவற்றினூடான வர்த்தகப்பாதை. இவை சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட கேந்திரோபாயமாகும். இவற்றிற்கு ஒரு ஆதாரமாக மியன்மாரின் சிட்வே, பங்களாதேசத்தின் சிட்டகொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களைக் கொண்ட முத்து மாலைத் திட்டமாகும். நீண்ட கால அடிப்படையில் இவை இந்தியாவைக் கட்டுப்படுத்தும் சீனக் கடற்படைத் துறை முகங்களாக மாற்றப்படும் அபாயம் உண்டு.

அமெரிக்காவும் சீனாவும்
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்கு சவால் விடுவதோ அல்லது தான் உலகின் முதல்தர ஆதிக்க நாடாக இருப்பதோ சீனாவின் கொள்கை அல்ல என சீனத் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்  ஏற்றுமதி செய்யாமல் சீனாவின் பொருளாதாரம் தாக்குப் பிடிக்காது. சீனாவின் கடன் அமெரிக்க அரசிற்கு மிகவும் அவசியம். ஆனால் 1989-ம் ஆண்டில் இருந்தே சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று ஐயத்துடனேயே அணுகிவருகின்றன. இந்த ஐய நிலை இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.  அமெரிக்காவினதும் சீனாவினதும் நலன்கள் பல ஒன்றுபட்டனவாயும், பல ஒன்றிற்கு ஒன்று தேவையானவையாகவும் இருக்கும் வேளையில் பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாயும் இருக்கின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியம். ஆனால் சீனா அமெரிக்காவில் இருந்து தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. சீனா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான இரகசியங்களை சீனா இணைய வெளியூடாகத் திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது, பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இரு நாடுகளும் தமது பெரிய படை நடவடிக்கைகள் தொடர்பாக மற்ற நாட்டுக்கு அறிவிப்பதாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒத்துக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து கடற்பரப்பில் எதிர்பாராத மோதல்களைத் தவிர்பதற்கான ஒரு ஒழுக்கக் கோவை ஒன்றையும் இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.

உலக வங்கியை மீறிய சீன வங்கிகள்
சீன அரச வங்கிகள் உலக வங்கியிலும் பார்க்க அதிக அளவு கடன்களை அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு வழங்குகின்றன. சீனா இந்த நிலையை 2010-ம் ஆண்டிலேயே அடைந்து விட்டது. 2009-10 ஆண்டுக் காலப் பகுதியில் சீன அரச வங்கிகள் அபிவிருந்தியடையும் நாட்டு அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் 110 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியிருந்தன. அதே காலப்பகுதியில் உலக வங்கி நூறு பில்லியன் டொலர்களை மட்டுமே கடனாக வழங்கியிருந்தது. 2014-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியால் நிதி நெருக்கடியைச் சந்தித்த இரசியாவிற்கும் வெனிசுவேலாவிற்கும் கடன் வழங்கி அவை பன்னாட்டு நாணய நிதியத்தில் நிபந்தனைகளுடன் கூடிய கடன்களை வாங்குவதில் இருந்து பாதுகாத்தது.

சீனாவின் புதிய குடியேற்ற (நவ காலனித்துவ) நாடுகள்?
1990களில் இருந்து ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளில் உள்ள மூல வளங்கள் சீனாவின் அபிவிருத்திக்கு அவசியம் தேவைப் பட்டபோது சீனா பல ஆபிரிக்க நாடுகளுடன் தனது பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொண்டது. 2012-ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளின் புதிய குடியேற்ற மேலாளராக சீனா உருவெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டது. இது சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதை அவர்கள் வன்மையாக மறுத்ததுடன் ஆபிரிக்க நாடுகளின் எண்ணெய் வளம், கனிம வளம், மற்றும் விவசாய உற்பத்திகளுக்கு சீனா சிறந்த சந்தையாக விளங்குகின்றது என்றனர். மேலும் அவர்கள் சீனர்களும் ஆபிரிக்கர்களும் ஒருவரை ஒருவர் சம நிலை நண்பர்களாக இருப்பதுடன் என்றும் சிறந்த பங்காளர்களாகவும், அன்பான சகோதரர்களாகவும் இப்போம் என்றனர். சீனா ஆபிரிக்காவில் (2012வரை) நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளையும், முப்பதிற்கு மேற்பட்ட மருத்துவ மனைகளையும் முப்பதிற்கு மேற்பட்ட மலேரியாத் தடுப்பு நிலையங்களையும், இருபதிற்கு மேற்பட்ட விவசாய தொழில்நுட்ப வழிகாட்டல் நிலையங்களையும் உருவாக்கியுள்ளதுடன் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முன்னுரிமைக் கடனையும் வழங்கியுள்ளது எனப் பட்டியலிட்டனர் சீனப் பொதுவுடமைவாதிகள். இவற்றுடன் நிற்கவில்லை சீனா நாற்பதினாயிரம் ஆபிரிக்கர்களுக்குப் பயிற்ச்சி வழங்கியதுடன் இருபதினாயிரம் ஆபிரிக்கர்களுக்கு புலமைப் பரிசில்களையும் வழங்கியுள்ளது. ஆனால் ஆபிரிக்க நாடுகளில் முதலிட்ட சீனா அங்கு வேலை செய்ய தனது நாட்டில் இருந்து தொழிலாளர்களை அனுப்பியது பல ஆபிரிக்கர்களைச் சிந்திக்க வைத்தது. சில ஆபிரிக்கநாடுகளின் தலைவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து சீனா பல ஆபிரிக்க நாடுகளைத் தனது காலனித்துவ நாடுகளாக்கிக் கொண்டு வருகின்றது என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தனர். சீனா மேற்கத்திய நாடுகளைப்போல் எந்த ஒரு நாட்டையும் தனது காலனித்துவ நாடாக மாற்றாது எனச் சீனத் தலைவர்கள் மறுத்தனர்.

அயோக்கிய ஆட்சியாளர்களும் சீனாவும்

சீனா பல நாடுகளுக்கு வழங்கும் நிபந்தனையற்ற கடன்கள் ஊழல் மற்றும் மக்கள் மீது அட்டூழியம் செய்யும் அயோக்கிய ஆட்சியாளர்களைப் பதவியில் வைத்திருக்க உதவி செய்கின்றன. அந்த அயோக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்யும் நடவடிக்கைகளை மேற்கத்தைய நாடுகள் இலகுவாக மேற்கொள்ள கூடியதாக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணமும் அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாஷிங்டனில் ஐம்பது ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களை அழைத்து ஒரு மாநாடு நடத்தியமையும் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிகாவில் சீனா ஆதிக்கத்தை தணிக்கவும் ஆபிரிக்க நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கவும் எடுத்த நடவடிக்கைகளே. உலகின் வேகமாக வளரும் முதற் பத்து நாடுகளில் ஆறு ஆபிரிகாவில் உள்ளன. இதனால் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிக்காவில் அதிக அக்கறை காட்டுவது தவிர்க்க முடியாதது. ஒபாமா ஆபிரிக்க நாடுகளுடன் மாநாடு நடாத்தும் போது அங்கு அழைக்கப்பட்ட கினியா, கம்பியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
சீனா தனது வெளியுறவுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
சீனா சொல்வது போல் மற்ற நாடுகளுடன் பங்காண்மையை வளர்க்க வேண்டுமாயின் அந்த நாடுகளில் நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும். அல்லது  அங்கு படைத்துறைப் புரட்சி, அரசுக்கு எதிரான கிளர்ச்சி, அல்லது பெரும் பணம் செலவழித்துப் பல அரசியல்வாதிகளைக் கட்சி மாறச் செய்தல் போன்றவற்றால் அங்கு சீனாவிற்கு சார்பற்றவர்களை மேற்கு நாடுகளால் ஆட்சி மாற்றம் செய்ய முடியும். இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்களால் சீனா பெரும் முதலீடுகளால் உருவாக்கும் தனக்குச் சார்பான ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து இலகுவாகத் தூக்கி எறிவதைத் தடுக்க தனது வெளியுறவுக் கொள்கையில் பெரு மாற்றங்கள் செய்ய வேண்டும்.

Sunday, 25 January 2015

அமெரிக்காவின் நீர்மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகள்

அமெரிக்கா தனது கடற்படைக்கு SH-2G Super Seasprite என்னும் நீர் மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகளை உற்பத்தி செய்துள்ளது. இவை நீர் மூழ்கிகளை அழிப்பதுடன் கடல் மேற்பரப்பில் உள்ள கலன்களை அழித்தல், கடற் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்தல்,  தொடுவானத்தில்(horizon) இலக்கு வைத்தல், வேவுபார்த்தல், மீட்புப் பணி, தேடிவிடுவித்தல், இரகசிய நடவடிக்கைகள் போன்றவற்றையும் செய்யக் கூடியன.

SH-2G Super Seasprite என்னும் நீர் மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகள் இரு விமானிகளையும் ஒரு உணரி இயக்குனரையும் (sensor operator) கொண்டது. ஒரு விமானியாலும் இதை இயக்க முடியும். இதில் உள்ள ஒன்றிணைக்கப்பட்ட integrated tactical avionics system (ITAS)மிகவும் இசைவிணக்கம் (flexible)உடையதாகும்.
விமானப் பறப்பியக்கம் (avionics) என்பது இலத்திரனியல் மூலம் விமானம், செய்மதி போன்றவற்றை இயக்கும் முறைமையாகும். இதில் தொடர்பாடல், வழிகாட்டல், காட்சி, பல் முறைமை முகாமை போன்ற நூற்றுக் கணக்கான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Avionics are the electronic systems used on aircraft, artificial satellites, and spacecraft. Avionic systems include communications, navigation, the display and management of multiple systems, and the hundreds of systems that are fitted to aircraft to perform individual functions.

SH-2G Super Seaspriteஇல் உள்ள கண்ணாடியிலான cockpit நான்கு நிறங்களில் காட்சிப்படுத்தக் கூடியது. இவற்றில் உள்ளடக்கக் கூடிய படைக்கலன்கள்:
Raytheon AGM-65

1. Raytheon AGM-65 Maverick infrared imaging or TV-guided
2. Penguin infrared imaging.
3. Radar-guided Improved Sea Skua
4. Laser-designated Hellfire missiles.

SH-2G Super Seasprite உலங்கு வானூர்தியில் பொருத்தப்பட்டிருக்கும் LN-66HP multi-mode radar மூலம் கடற்கப்பல்களை வேவுபார்த்தலும் இலக்குப் பார்த்தலும் செய்ய முடியும்.

Monday, 19 January 2015

ஐ. எஸ் – அல் கெய்தா மோதலா ஒற்றுமையா?

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராகக் குண்டு வீசத் தொடங்கியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இரண்டு மடங்கிக்கொண்டுள்ளனர். சிரியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தற்போது ஐ. எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் இதுவரை 800இற்கு மேற்பட்ட குண்டுகளை ஐ எஸ் அமைப்பினர் மீது வீசியுள்ளனர். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடும் அமெரிக்க சார்பு அமைப்புக்கள் ஐ எஸ் அமைப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் 400 படைத்துறை நிபுணர்களை சிரியப் போர் முனைக்கு அனுப்பி 5400 போராளிகளைப் பயிற்றுவிப்பதாக முடிவு செய்துள்ளது.

அல் அவ்லாக்கி - செத்தும் கொடை கொடுக்கின்றார்!
2009-ம் ஆண்டு அமெரிக்க விமானம் ஒன்றின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்த இருந்த ஒரு தாக்குதல் உளவுத் தகவல்கள் பெற்று முறியடிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு  பிரித்தானியப் பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டர். 2013-ம் ஆண்டு அமெரிகாவின் பொஸ்டன் நகரின் நடந்த மரதன் ஓட்டப் போட்டியில் செஸ்னியத் தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் நடாத்தினர். இவற்றுடன் பாரிஸ் கேலிச் சஞ்சிகை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை ஆய்வு செய்த பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு உந்து வலுவாக இருப்பவர் அமெரிக்காவில்  யேமன் நாட்டுப் பெற்றோருக்குப் பிறந்து பொறியியல் படித்து இசுலாமைய மத போதகராக மாறிப் பின்னர் யேமனில் செயற்படும் அல் கெய்தா அமைப்பில் இணைந்த அன்வர் அல் அவ்லாக்கி எனச் சொல்கின்றார்கள். ஆங்கிலத்தில் மிகவும் திறமையாகப் பேசக் கூடிய இவரை அமெரிக்க ஊடகங்கள் வெள்ளி நாக்குடைய அவ்லாக்கி என விபரித்ததுண்டு. 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏயின் ஆளில்லாப் போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு வீச்சால் இவர் கொல்லப்பட்டார். இவர் இறந்த பின்னரும் இவரது போதனைகளின் காணொளிகள் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு பெரும் உந்து வலுவாக அமைந்துள்ளது என்கின்றனர் பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்கள்.

மாற்றப்பட்ட தாக்குதல் வடிவம்
பிரான்ஸில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்த தாக்குதல் அவர்கள் தமது தாக்குதல்களுக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்துள்ளனர் என நம்பப்படுகின்றது. தற்கொடைத் தாக்குதல் நேரக் குண்டுகள் போன்றவை மூலம் தாக்குதல் ஆகியவை மட்டுமே இதுவரை நடந்த பல தாக்குதல்களின் வடிவங்களாக இருந்தது. துப்பாக்கி ஏந்தி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள நகரங்களில் பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்துவதும் அவர்களைப் பணயக் கைதிகளாக்கிக் கொண்டு தப்பிச் செல்வதும் ஒரு புதிய தீவிரவாதத் தாக்குதல் முறைமையாகக் கருதப்படுகின்றது.  அண்மையில் தலிபானும் குண்டுத்தாக்குதல்களில் இருந்து விலகி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்துவதை அதிகரித்துள்ளது. Urban warfare எனப்படும் நகர்சார் போர்முறை உத்திகளை கையாண்டு தீவிரவாதிகள் தமது எதிரிகள் மீது தாக்குதல் நடாத்துவது முதன் முறையாக இந்தியாவின் மும்பாய் நகரில் 2008-ம் ஆண்டு நடாத்தப் பட்டது. பாக்கிஸ்த்தானில் இருந்து படகின் மூலம் பயணித்து மும்பாய் நகருக்குள் புகுந்த லக்சர் இ தொய்பா அமைப்பினர் நான்கு நாட்கள் துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்  தாக்குதல் நடாத்தி 164 பேரைக் கொன்றனர். இத்தாக்குதலின் வெற்றியை உணர்ந்த அல் கெய்தா அமைப்பினர் அத்தாக்குதல் பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொண்டனர். அதே பாணியிலான தாக்குதல்கள் பலவற்றை அல் கெய்தா பல ஐரோப்பிய நகரங்களில் மேற்கொள்ள முயற்ச்சித்தது. அவை உளவுத் தகவல்களால் முறியடிக்கப்பட்டன. பின்னர் அல் கெய்தாவின் இணை அமைப்பான அல் ஷபாப் 2014-ம் ஆண்டு நைரோபி நகரில் உள்ள வெஸ்ற்கேற் கடைத் தொகுதியில் அதே பாணியான தாக்குதலை சோமாலியாவில் இருந்து சென்று நடாத்தினர். பாரிஸில் தாக்குதல் நடாத்த முன்னர் ஒஸ்ரேலியாவிலும் கனடாவிலும் தனி ஓநாய்த் தாக்குதல் எனப்படும் தனி நபர் செய்யும் தாக்குதல்களைத் தீவிரவாதிகள் மேற்கொண்டிருந்தனர். பிரித்தானிய உளவுத் துறையான எம் ஐ 5 பாரிஸ் பாணித் தாக்குதல் பிரித்தானியாவில் நடக்கலாம் என எச்சரித்துள்ளது. சிரியாவில் செயற்படும் அல் கெய்தா இணை அமைப்புக்கள் பிரித்தானியாவில் தாக்குதல் நடாத்தலாம் என எம் ஐ 5 கருதுகின்றது.

தீவிரவாதிகளுக்கு தூண்டில் போடும் சதி
இசுலாமிய மதத்தை இழிவு படுத்தும் வகையில் மேற்கு நாடுகளின் ஊடகங்களில் ஏதாவது பிரசுரமானால் அதற்கு எதிராக கடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தும் "ஷார்லி எப்டோ" சஞ்சிகையில் ஒரு கருத்துப் படம் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ஊடகப் பணிமனைக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை. அதுவும் போதாது என்று அடுத்த பிரசுரத்தில் மீண்டும் அட்டைப்படமாக இசுலாமியர்களின் கடவுளின் உருவம் பிரசுரிக்கப்பட்டது. அதை வாங்குவதற்கு அதிகாலையில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருந்தனர். இப்படிப் பட்ட செய்கைகள் மூலம் தமது நாடுகளில் உள்ள தீவிரவாதப் போக்குடைய இசுலாமியர்களை இனம் காண்பதற்கு இப்படிச் செய்யப்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட முடியும். இசுலாமியத் தீவிரவாதிகளை இலகுவாகக் கண்டு பிடிக்க இதுவும் ஒரு வழியா?

ஐ. எஸ் அல் கெய்தா முறுகலும் மோதலும்
உலகெங்கும் இசுலாமிய அரசுகள் உருவாக்கப்பட வேண்டும், உலகெங்கும் ஷரியா சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்பது அல் கெய்தா அமைப்பினதும் ஐ. எஸ் அமைப்பினதும் பொதுவான கொள்கையாகும். ஐ.எஸ் அமைப்பு  ஈராக்கியரான அபூபக்கர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். அபூபக்கர் அல் பக்தாடி தான் முஹம்மது நபியின் வழித் தோன்றன் என்கின்றார்அவரது ஐ எஸ் அமைப்பு முதலில் Islamic State of Iraq and Syria  என்னும் பெயருடன் 2006-ம் ஆண்டு அல் கெய்தாவின் தலைவர் அபு  அயூப் அல் மஸ்ரிலால் உருவாக்கப்பட்டது. ஐ எஸ் ஐ எஸ் பின்னர் தன் பெயரை Islamic State எனச் சுருக்கிக் கொண்டது.  இந்த அமைப்பை  Islamic State of Iraq and the Levant என்றும் அழைப்பர். மற்ற இசுலாமியப் போராளி அமைப்புக்கள் சிரியாவில் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனக்கு என ஒரு நாட்டை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது.   ஐ.எஸ்.ஐ.எஸ் அல் கெய்தாவின் ஒரு இணை இயக்கமாக இருந்தது. ஈராக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பு தனது நடவடிக்கையை சிரியாவிற்கும் விரிவு படுத்தியதை அல் கெய்தா விரும்பவில்லை. சிரியாவில் அல் கெய் தாவின் கிளை அமைப்பான அல் நஸ்ரா செயற்பட்டுக் கொண்டிருந்தது. அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பிற்கும் அல் நஸ்ரா அமைப்பிற்கும் சிரியாவில் மோதல் உருவானது. பின்னர் ஐ.எஸ் சிரியாவில் செய்த சகோதரக் கொலைகளால் அல் கெய்தா அதிருப்தி அடைந்தது. ஐ. எஸ் (அப்போது அதன் பெயர் ஐ. எஸ். ஐ. எஸ்)  அமைப்பைக் கலைக்கும் படி 2013-ம் ஆண்டின் இறுதியில் அல் கெய்தா உத்தரவிட்டது. அதற்கு ஐ. எஸ் தலைவர் மறுக்கவே தனக்கும் ஐ.எஸ் இற்கும் தொடர்பு இப்போது இல்லை என 2014-ம் ஆண்டு ஜனவரியில் அல் கெய்தா அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும்  இடையில் நிதி திரட்டல், ஆட் சேர்ப்பு, உலகப் புகழ் ஆகியவற்றிற்குப் போட்டி உருவானது. ஐ எஸ் அமைப்பு அய்மன் அல் ஜவஹிரி தலைமையில் இயங்கும் அல் கெய்தா அமைப்பு பின்லாடனின் பாதையில் இருந்து விலகி விட்டது எனக் குற்றம் சாட்டுகின்றது. இரண்டு அமைப்புக்களும் முகாமை ரீதியிலும் வேறுபடுகின்றன. அல் கெய்தா அமைப்பு ஒரு தலைமைக்குக் கீழ் இருந்து செயற்படும் அமைப்பு. ஐ எஸ் அமைப்பு ஒரு குழுவின் கீழ் செயற்படுகின்றது. அல் கெய்தா தனது ஆட்சேர்ப்பில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றது. சிறந்த விசுவாசிகளாகக் கருதப்படுபவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஐ. எஸ் அமைப்பு கண்டபடி ஆட்களை தனது ஆளணிக்குச் சேர்கின்றது. அல் கெய்தா 9/11 போன்ற பேரழிவு விளைவிக்கும் தாக்குதல்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஐ எஸ் அமைப்பு கொடூரமாக ஆட்களைக் கொலை செய்யும் காணொளிகள் மூலம் தனது பரப்புரைகளைச் செய்கின்றது. ஐ. எஸ் அமைப்பின் ஈராக்கில் உள்ள கிரிஸ்த்துவர்களையும் யதீஷியர்களையும் முற்றாக ஒழிக்கும் செயற்பாட்டை அல் கெய்தா விரும்பவில்லை.

 தலை இருக்க ஆடும் வால்கள்
ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்காவின் சிஐஏ செய்த ஆளில்லா விமானத் தாக்குதலால் அல் கெய்தா வலுவிழக்க அதன் கிளை அமைப்புக்கள் வலுவடைந்தன. பின் லாடனின் மறைவின் பின்னர் எகிப்த்திய அரசு சினாய் பாலைவனத்திலும், எகிப்தும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து லிபியாவிலும் அல் கெய்தா அமைப்பினர் மீது  தாக்குதல் நடாத்தின.  யேமனில் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபு வளைகுடாவிற்கான அல் கெய்தா தனது நடவடிக்கைகளை ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளுக்கு விரிவு படுத்தியுள்ளது. அல் கெய்தாவின் இன்னும் ஒரு கிளை அமைப்பான அல் ஷபாப் சோமாலியா, உகாண்டா, கென்யா ஆகிய நாடுகளில் தன் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது. அல் கெய்தாவின் துணை அமைப்பான பொக்கோ ஹரம் நைஜீரியா, கமரூன், நிகர் ஆகிய நாடுகளில் தனது தாக்குதல்களைச் செய்து கொண்டிருக்கின்றது. மற்ற அமைப்புக்கள் உலகெங்கும் இருந்து தமக்கு ஆட்சேர்ப்புச் செய்து தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தை விரிவு படுத்திக் கொண்டிருக்க அல் கெய்தா தனது போராளிகளை வேறு வேறு நாடுகளில் தாக்குதல் செய்யப் பண்ணுகின்றது. அல் கெய்தா தனது போர் முறைமைகளை மரபு வழிப்போர் போல மாற்றி வருகின்றது. அல் கெய்தா கரந்தடிப் போரை மட்டும் பின்பற்றிவருகின்றது. அல் கெய்தாவைப் போல் எந்த ஒரு தாக்குதல்களையும் அமெரிக்காவிற்கு எதிராக ஐ. எஸ் அமைப்பால் செய்ய முடியவில்லை. அல் கெய்தா தனது நிதியை நன் கொடை மூலம் பெற்றுக் கொள்கின்றது. ஐ. எஸ் அமைப்பு தனது நிதியை நன் கொடைகளில் இருந்து மட்டுமல்ல பல வித சட்ட விரோத நடவடிக்கைகளில் இருந்தும் திரட்டுகின்றது. உலகெங்கும் நடக்கும் புனிதப் போர்களிற்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இரு அமைப்புக்களும்முரண்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக அல் கெய்தாவிலும் பார்க்க ஐ. எஸ் அமைப்பிற்கு இசுலாமிய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.

ஐ. எஸ் அமைப்பு அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தாவை தன்னுடன் இணைக்கும் முயற்ச்சியில் நீண்ட நாட்களாக ஈடுபட்டிருந்தது.

மீள வரும் அல் கெய்தா
பரிஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகைப் பணிமனையில்  நடந்த தாக்குதல் அல் கெய்தா மீளவும் வீறு கொண்டு எழுகின்றது என்பதைக் காட்டுகின்றது. சஞ்சிகைப் பணிமனையில் நடந்த தாக்குதலை அல் கெய்தாவும் யூத உணவு விற்பனை நிலையத்தில் நடந்த தாக்குதலை ஐ. எஸ் அமைப்பும் செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இரண்டு அமைப்புக்களும் இணைந்து இத்தாக்குதல்களைச் செய்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. பெல்ஜியத்தில் செய்த அதிரடிக் கைதுகளும் பரிஸ்த்தாக்குதல்களைத் தொடர்ந்து திரட்டப்பட்ட உளவுத் தகவல்களும் இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களிடை நடந்த தொடர்பாடல்களும் அல் கெய்தாவிற்கும் ஐ. எஸ் அமைப்பிற்கும் இடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் மீள உருவாகிவிட்டது எனச் சுட்டிக் காட்டுகின்றன. சிரியாவில் தீவிரவாதக் குழுக்களிடை நடக்கும் செயற்பாடுகளும் இரு அமைப்புக்களிடை ஒற்றுமை உருவாகிவிட்டது எனக் காட்டுகின்றது. அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தாக் குழுவைச் சேர்ந்த முன்னணிப் போராளிகள் அல் கெய்தாத் தலைமை அமைப்பிற்கும் ஐ. எஸ் அமைப்பிற்கும் இடையில் ஒற்றுமை ஏற்படுத்த முயற்ச்சி சிரியாவில் வெற்றியளித்துள்ளது. அத்துடன் இன்னும் ஓர் அல் கெய்தாக் கிளை அமைப்பான கொரோசோன் அமைப்பும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த தீவிர முயற்ச்சி எடுத்தது. கொரசோன் அமைப்பின் முன்னணிப் போராளிகளுக்கும் அரபுக் குடாவிற்கான அல் கெய்தாவின் தலைவர் நசார் அல் வஹய்ஷிக்கும் ( Nasser al-Wuhayshi) இடையில் நல்ல ஒற்றுமையும் புரிந்துணர்வும் உண்டு. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்பினருக்கும் இடையிலான கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. லெபனானிற்கும் சிரியாவிற்கும் இடையில் உள்ள குவாலமௌன் (Qualamoun) மலைப்பிராந்தியத்தில் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களான அல் நஸ்ரா, கொரோசன் போன்றவையும் ஐ. எஸ் அமைப்பும் இணைந்து செயற்படத் தொடங்கி விட்டன. இருந்தும் ஐ. எஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட அல் கெய்தா அமைப்பு தனது செயற்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டி இருந்தது. இந்த தீவிரமாக்கும் முயற்ச்சியில் அல் நஸ்ராவின் மிதவாதத் தலைவர்கள் பலர் அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

பாரிஸில் ஷார்லி இப்தோ சஞ்சிகைப் பணிமனைமீது தாக்குதல் நடாத்திய சகோதரர்களின் மனைவி மார்களிற்கிடையில் நடந்த 500 தொலைபேசி உரையாடல் பதிவுகளை உளவுத் துறையினர் பரிசீலனை செய்த போது அவர்கள் தமது கணவன்மார்களின் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய கதைகள் எதுவும் இருந்ததில்லை.

அல் கெய்தாவும் ஐ. எஸ் அமைப்பும் ஒன்றுபட்டு விட்டதை வேறு சிலர் ஏற்க மறுக்கின்றனர். ஐ. எஸ் அமைப்பின் இசுலாமிய அரசை அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தாவின் அறிஞர்கள் ஏற்க மறுத்திருந்தனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ. எஸ்ஸின் பத்திரிகையான தபீக்கில் அல் கெய்தா அமைப்பைத் தாக்கி இரு கட்டுரைகள் வெளிவந்தன.

இரு அமைப்புக்களும் சுனி முஸ்லிம் அமைப்புக்களே என்பதையும் இங்கு அழுத்திக் கூற வேண்டும்.

அல் கெய்தாவிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் உள்ள போட்டி நிலை அவர்களுக்கிடையில் மோதலைத் தீவிரப்படுத்துமா அல்லது இரண்டு அமைப்புக்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற் கொள்ளுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...