Tuesday, 11 November 2014

ஐ.எஸ்ஸிற்கு எதிரான போரின் துருப்புச் சீட்டு துருக்கியின் கையில்

அண்மைக்காலங்களாக இரசியாவிற்கு இணையாக அல்லது ஒரு படி மேலாக மேற்கு நாட்டு ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. மேற்குலகப் பத்தி எழுத்தாளர்கள் துருக்கி நேட்டோக் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் துருக்கி குர்திஷ் மக்களைக் கைவிட்டு ஐ. எஸ் தீவிரவாதிகளுடன் இரகசியமாகக் கை கோர்ப்பது வெட்கக் கேடான செயல் என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.

துருக்கி எப்போதும் மூன்றின் நடுவில். 
துருக்கி ஐரோப்பா,ஆசியா ஆகிய நாடுகளுக்கு நடுவில் இருக்கின்றது. அங்கு ஒரு மக்களாட்சி நிலவினாலும் அது மக்களாட்சி, படைத்துறை, இசுலாமியவாதம் ஆகிய மூன்றின் நடுவில் இருக்கின்றது. துருக்கியில் நிலப்பரப்பில் 97 விழுக்காடு ஆசியாக் கண்டத்தில் இருக்கின்றது. ஓர் இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்துள்ளது. நேட்டோவினது ஓர் உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு இருந்து வருகின்றது. ஐரோப்பா, அரபு நாடுகள், ஈரான் ஆகிய மூன்றின் மத்தியில் துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை தடுமாறுகின்றது. துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையான உறுப்புரிமை பெறவிரும்புகிறது ஆனால் அது இழுத்தடிக்கப்படுவதால் இரசியாவின் யூரோ ஏசியன் கூட்டமைப்பில் அல்லது பிரேசில், இரசியா, இந்தியா, சீனா ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைவது குறித்து கருத்தில் கொள்கின்றது. இங்கும் ஐரோப்பிய ஒன்றியமா யூரோ ஏசியனா பிரிக்ஸா என்பது துருக்கியின் தடுமாற்றம்.

 துருக்கிய ஆட்சியாளர்கள் இசுலாமியவாதிகளே!
துருக்கியில் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி அடிப்படையில் ஒரு மதவாதக் கட்சியாகும். நாளடைவில் பொருளாதார அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு தன்னை ஒரு மேற்குலகு சார்பானதாகவும் அமெரிக்காவிற்கு நட்பானதாகவும் காட்டிக் கொண்டது. தாராண்மைவாத சந்தைப் பொருளாதாரக் கொள்கையை தனது கொள்கையாகவும் காட்டிக் கொண்டது. ஆனால் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் ஆட்சியில் துருக்கி தேவையான போதெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகளுடன் இரகசியமாக இணைந்து செயற்பட்டது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவும் துருக்கியும்
அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு 1950-ம் ஆண்டு ஆரம்பமான கொரியப் போரில் மலர்ந்தது. இந்த உறவில் முதல் விரிசல் துருக்கி 1973-ம் ஆண்டு சைப்பிரசை ஆக்கிரமித்த போது உருவானது. இதனை அடுத்து துருக்கி மீது அமெரிக்கா படைக்கல விற்பனைத் தடை விதித்தது. 2003-ம் ஆண்டு சதாம் ஹுசேயினிற்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் படை எடுத்த போது இரண்டாவது விரிசல் உருவாகியது. துருக்கியின் கேந்திர நிலை ஈராக் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவிற்கு மிகவும் தேவைப்பட்டது. துருக்கியை தளமாக வைத்து ஈராக் மீது தாக்குதல் நடாத்த அமெரிக்கா விரும்பியது ஆனால் துருக்கியப் பாராளமன்றம் அதை நிராகரித்து விட்டது. தற்போது ஐ. எஸ் போராளிகளுக்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் தாக்குதல் நடாத்த துருக்கியைத் தளமாகப் பாவிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் துருக்கிய விமானத் தளங்களில் அமெரிக்காவின் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் மட்டும் பாவிக்க துருக்கி அனுமதி வழங்கியுள்ளது. எகிப்த்தில் முஹமட் மேர்சியின் ஆட்சி தொடர்வதை துருக்கி விரும்பியது. அதை சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்ததுடன் படைத்துறையினரின் ஆட்சி மீண்டும் அமைய சவுதி அரேபியாவும் வேறு அரபு நாடுகளும் விரும்பின. அமெரிக்கா எகிப்திய விவகாரத்தில் விலகி இருப்பது போலக் காட்டிக் கொண்டது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. துருக்கி திரைமறைவில் ஈரானின் எரி பொருள் விற்பனைக்கு உதவி செய்கின்றது. 2012 மார்ச் மாதத்தில் இருந்து 2013 ஜூலை மாதம் வரை 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தங்கம் துருக்கியில் இருந்து ஈரானுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இவை ஈரானிடமிருந்து துருக்கி பெற்ற எரிவாயுவிற்கான விலையாகும். இதில் சம்பந்தப் பட்ட துருக்கிய அரச வங்கியை அமெரிக்கா தண்டிக்கவில்லை! அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் செய்த ஆக்கிரமிப்பை துருக்கிய மக்கள் பரவலாக எதிர்க்கின்றார்கள். சிரிய அதிபர் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கி உறுதியாக இருக்கின்றது. அமெரிக்கா அதுவே தனது நீண்டகாலத் திட்டம் என்கின்றது. அதை துருக்கி ஏற்க மறுக்கின்றது.

நேட்டோவும் துருக்கியும்
சோவியத் விரிவாக்கத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பில் 1952-ம் ஆண்டு துருக்கி இணைந்து கொண்டது.  ஆனால் தற்போது நேட்டோவின் முக்கிய பணிகளில் ஒன்றாக இசுலாமியத் தீவிரவாத ஒழிப்பு உருவெடுத்து விட்டது. லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்த்தது போல சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை நேட்டோ கவிழ்க்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு நேட்டோப் படைகள் படைக்கலங்கள் வழங்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் இரண்டையும் நேட்டோ செய்யவில்லை. வேல்ஸில் நடந்த நேட்டோக் கூட்டமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐ. எஸ் தீவிரவாதிகளின் பணம் கடத்தல், இரகசிய எரிபொருள் விற்பனை போன்றவற்றைத் தடுக்குமாறு துருக்கியை வேண்டியிருந்தார். துருக்கி தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையை சீனாவிடம் வாங்க முடிவு செய்தமை பல நேட்டோ நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

ஐ.எஸ் இற்கு எதிரன தாக்குதலும் துருக்கியும்
துருக்கி ஈராக்குடனும் சிரியாவுடனும் 780 மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் ஒரு உறுதியான அரசியல் சூழ்நிலை உருவாக துருக்கியின் உதவி தனக்கு அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது. துருக்கியின் அடானா மாகாணத்தில் உள்ள இன்செர்ளிக் விமானப் படைத்தளத்தில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடாத்துவது மிகவும் இலகுவானதாகும். ஆனால் துருக்கி  இதை அனுமதிக்கவில்லை. இந்த அனுமதியைப் பெறுவதற்கு அமெரிக்காவின் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் ஜோன் அலன் துருக்கிகுப் பயணத்தையும் மேற் கொண்டிருந்தார். அமெரிக்கப் படைத்துறையின் உச்சத் தளபதி மார்டின் டிம்செ துருக்கி உட்பட இருபது நாடுகளின் படைத்துறைத் தளபதிகளின் கூட்டம் ஒன்றை 2014-10-13-ம் திகதி வாஷிங்டனின் கூட்டியிருந்தார். துருக்கியப் படைத்தளபதி இதில் பங்கேற்கவில்லை. ஐ. எஸ் அமைப்பிற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும்படி அமெரிக்கா துருக்கிய அதிபரை வலியுறுத்தியது ஆனால் துருக்கியின் அதிபர் ஐ. எஸ் அமைப்பிற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறியதுடன் நிறுத்திக் கொண்டார். சிரியாவில் செயற்படும் குர்திஷ் மக்களின் மக்களாட்சி ஒன்றிய கட்சியினருக்கு அமெரிக்கப் படையினர் விமானத்தில் இருந்து படைக்கலன்களைப் போட்டது துருக்கிக்குப் பிடிக்கவில்லை. குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சி என்பது  துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சியின் சிரியக் கிளை என்பதால் துருக்கி இதை விரும்பவில்லை. குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சி அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட "பயங்கரவாத" அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் துருக்கி செய்த பேருதவி ஈராக்கில் இருக்கும் குர்திஷ் அமைப்பான பெஸ்மேராப் போராளிகளை சிரியப் பிரதேசமான கொபானிக்கு துருக்கியூடாகச் சென்று அங்குள்ள குர்திஷ் அப்பாவிகளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலையில் இருந்து பாதுகாக்க அனுமதித்தமையாகும். துருக்கியில் செயற்படும் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பும் துருக்கியை குர்திஷ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது. ஐ. எஸ் போராளிகள் வெற்றி பெற்றால் அது துருக்கிக்கும் ஆபத்தாக முடியும். அந்த ஆபத்து குர்திஸ் போராளிகளால் ஏற்படும் ஆபத்தைவிட மோசமானதாக இருக்கும்.

துருக்கியும் டென்மார்க்கும்
டென்மார்க்கைச் சேர்ந்த பசில் ஹசான் என்னும் ஐ.எஸ்சின் "புனிதப் போராளி" லார்ஸ் ஹெடெகார்ட் என்னும் இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக எழுதும் ஒரு ஆய்வாளரைக் கொலை செய்ய முயன்றார். இவர் துருக்கியில் பிடிபட்டிருந்த வேளை அவரை நாடுகடத்தும் படி டென்மார்க் அரசு துருக்கிய அரசைக் கோரியிருந்தது. பசில் ஹசானை நாடு கடத்தாமல் துருக்கி விடுவித்தது. ஐ. எஸ் அமைப்பினர் ஈராக்கில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது துருக்கிய இராசதந்திரிகள் 39 பேரைப் பணயக் கைதிகளாக பிடித்திருந்தனர். இவர்களை விடுவிக்க துருக்கி பசில் ஹசானை விடுவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடான டென்மார்க் துருக்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் செயற்படப்போவதாகச் சூளுரைத்துள்ளது. புதிதாக சேரும் ஒரு நாட்டின் விண்ணப்பத்தை ஒரு நாடு நிராகரித்தாலே விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான கிரேக்கமும் சைப்பிரசும் துருக்கியுடன் நல்ல உறவு நிலையில் இல்லை.  ஏற்கனவே துருக்கி ஐரோப்பிய ஒன்றியம் தன்னை முழுமையான உறுப்பினராக இணைப்பதில் இரட்டை நாக்குடன் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

குர்திஷ் போராளிகளா ஐ.எஸ் போராளிகளா?
சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படைகளாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சுகின்றது.

துருக்கியின் கையில் துருப்புச் சீட்டு

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மாதக் கணக்காகச் செய்து வரும் விமானத் தாக்குதல்கள் அவர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் ஆரம்பத்திலேயே ஒருதரைவழிப் படை நகர்வு செய்யாமல்ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க முடியாது என எச்சரித்திருந்தனர். ஐ. எஸ் போராளிகளுக்கு எதிரான தக்குதல் தொடர்த் தொடர மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளை இனம் காணுவதும் இலகுவாகிக் கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு அங்குள்ள இசுலாமியர்களில் தீவிரவாதப் போக்குள்ளவர்கள் ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இது வட அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் சுத்தப்படுத்த உதவுகின்றது. ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிரான போர் விரைவில் முடியுமா அல்லது இழுபடுமா என்பது துருக்கியின் கையில்தான் இருக்கின்றது.

Monday, 3 November 2014

மும்பாயில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்.

2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான(லோக் சபா) தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின்(பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:- 1. காங்கிரசுக் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும், 2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில்  பா.ஜ.கவிற்கு 43 உறுப்பினர் மட்டுமே இருப்பது, 3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை.

பா.ஜ.கவினர் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி தடையின்றிச் செய்வதாயின் அது பல சட்ட மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவினர் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியும் அத்துடன் மாநிலங்களவையில்  பெரும்பான்மை வலுவைப் பெறமுடியும். 2014-ம் ஆண்டு இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் 11 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

மோடிக்குத் தேவையான மஹராஸ்ட்ரா

நரேந்திர மோடியின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் வாக்குறுதியளித்த பொருளாதாரச் சீர்திருத்தங்களையும்ம் முன்னெடுத்துச் செல்ல இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பாயைக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலத்தை அவர் எப்படியும் கைப்பற்ற வேண்டும். அதற்கான  திடசங்கற்பத்துடன் மோடி செயற்பட்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றினார். நரேந்திர மோடி இந்தச் சட்ட சபைத் தேர்தலிற்குச் செய்த பரப்புரை போல் இதற்கு முன்னர் எந்த ஒரு இந்தியத் தலைமை அமைச்சரும் செய்ததில்லை. இந்த முக்கியத்துவம் மிக்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியமை மோடிக்கும் அவரது தளபதியான அமித் ஷாவிற்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும். இருவரும் தமது "கட்சி அரசியல் முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மையை" மீண்டும் நிரூபித்துள்ளனர். பல வேறுபட்ட தரப்பினரைக் கொண்ட பா.ஜ.கவில் இவர்களது பிடி மேலும் இறுகியுள்ளது. அதே நாளில் நடந்த ஹரியானா மாநில சட்ட மன்றத்திற்கான தேர்தலில்  பா.ஜ.கவினர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

சிவசேனாவுடன் கூடாத கூட்டணி
மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.கவினர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மொத்த 48 தொகுதிகளில் பா.ஜ.க 23 இலும் சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரசுக் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதே கூட்டணி சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்தன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் "மண்ணின் மைந்தர்களுக்கே" என்ற கொள்கையுடையது சிவசேனா அமைப்பு. மும்பாயில் வேலை தேடியும் வர்த்தகம் செய்யவும் வேறு மாநிலத்தவர்கள் வருவதை எதிர்த்து சிவசேனா அமைப்பு 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புகழ் பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியின் படையினர் என்பதே சிவசேனை என்பதன் பொருளாகும். மராத்தியர்களைத் தவிர மற்றவர்கள் மும்பாயில் இருந்து விரட்டப்பட வேண்டும் என சிவ சேனாவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால் மும்பாயில் கலவரங்களும் வெடிப்பதுண்டு. சிவ சேனா மராத்தியப் பிரதேச வாதத்தையும் இந்துத் தேசிய வாதத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டுள்ளது எனச் சொல்லலாம். இந்துத் தேசியவாதக் கொள்கை சிவசேனாவையும் ப.ஜ.கட்சியினரையும் நெருங்கிச் செயற்பட வைத்தது. ஆனால் 2014 ஒக்டோபர் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமையினால் தனித் தனியே போட்டியிட்டன. இதே போல் காங்கிரசுக் கட்சிக்கும் அதில் இருந்து இத்தாலிப் பெண் காங்கிரசுக் கட்சிக்குத் தலைமை தாங்குவதை ஏற்காத சரத் பவார் பிரிந்து சென்ற உருவாக்கிய தேசியவாதக் காங்கிரசுக் கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு காண முடியாமல் தனித்துப் போட்டியிட்டன. இதனால் 288 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான  நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடந்தது. பா.ஜ. கட்சி சிவசேனைக்கு 130 தொகுதிகள் வரை கொடுக்க உடன்பட்டிருந்தது. சிவசேனா அதிலும் மிக அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் தேர்தல் முடிவு பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்தது. பா.ஜ.க 122 தொகுதிகளிலும் சிவசேனா 63 தொகுதிகளிலும் காங்கிரசுக் கட்சி 41 தொகுதிளிலும் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றிராத நிலையில் சிவசேனா ஒரு பேரம் பேசக் கூடிய வலுவைப் பெற்றுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்க தான் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கப் போவதாக அவர் அறிவித்தார். இது சிவ சேனாவை வலுவிழக்கச் செய்ய அவர் எடுத்த நடவடிக்கையாகும். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இப்போது ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மதவாதமும் இனவாதமும்

பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இந்து மத மேலாண்மையை ஏற்றுக் கொண்டாலும் சிவசேனாவின் மராத்தியப் பிராந்தியவாதத்தை பா.ஜ.க விரும்பவில்லை பா.ஜ.கவின் இந்திப் பேரினவாதத்தை சிவசேனா விரும்புவதில்லை. இரு தரப்பினரும் மற்ற மதங்களையிட்டு அதிலும் முக்கியமாக இசுலாமிய மதத்தையிட்டு ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்கள். பாபர் மசூதி இடிப்பில் ஒரே கொள்கையுடையவர்கள். பால் தக்கரேயால் 1966-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவசேனை அவரது மறைவின் பின்னர் அவரது மகனுக்கும்(உதவ் தக்கரே) அவரது தம்பியின் மகனுக்கும் (ராஜ் தக்கரே) இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டாகப் பிளவு பட்டது. ராஜ் தக்கரே மஹராஸ்ட்ர புனரமைப்புச் சேனையை 2006-ம் ஆண்டு ஆரம்பித்தார். ராஜ் தக்ரே சிவசேனாவிற்குள் இருந்து அந்தக் கட்சியை தனதாக்கிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு கட்சிக்குல் செல்வவக்கு இருந்தது. இருந்தும் சகோதரப் போரைத் தவிர்க்க அவர் தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்தப் பிளவால் சிவசேனா வலுவிழந்து விட்டது என இந்தியத் தலைமை அமைச்சர் மோடியும் அவரது தளபதி அமித் ஷாவும் உணர்ந்து கொண்டு செயற்படுவதாக சிவசேனாத் தலைவர் உதவ் தக்கரே கருதுகின்றார். 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய மைய அரசில் சிவசேனா கேட்ட அமைச்சுப் பதவிகளை வழங்காமை இரு கட்சிகளிற்கும் இடையிலான மோதலை உருவாக்கியிருந்தது

விரோதத்தை பெரிதாக்கும் விதர்ப்ப தேசம்
மஹாராஸ்ட்ராவின் ஒரு பகுதியாக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேச மக்களில் பலர் தாம் மஹராஸ்ட்ராவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சிவசேனா ஒன்று பட்ட மஹராஸ்ட்ரா என்பதில் உறுதியாக இருக்கின்றது. சிவசேனாவின் பிராந்தியவாதத்தை வலுவிழக்கச் செய்ய பேரினவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி விதர்ப்ப தேசப் பிரிவினையை ஆதரிக்கின்றது. இது இரு கட்சிகளிடையே பேதத்தை 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீவிரமடையச் செய்தது. 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர் பா.ஜ.க விதர்ப்ப தேசப் பிரிவினைக்கான தனது ஆதரவைத் தீவிரப்படுத்தியது.

குஜராத்திடம் மண்டியிட்ட மராத்த்தி
தேர்தலின் போது எதிரும் புதிருமாக நின்று போட்டியிட்ட பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பித்தவுடன் குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி என சிவ சேனாவின் எதிரிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். 1960-ம் ஆண்டு மஹாராஸ்ட்ராவில் இருந்து குஜராத்தைப் பிரித்து தனி மாநிலமாக்கப்பட்டது. மும்பாயில் பல குஜராத்தியர்கள் பலர் உயர் பதவிகளிலும் வர்த்தகத்திலும் இருக்கின்றார்கள். இதை சிவசேனா விரும்பவில்லை. மோடியும் ஒரு குஜராத்தியர் என்பதால் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் விரோதம் மேலும் மோசமடைந்துள்ளது. ஒன்றுபட்டுப் போட்டியிட்ட பாராளமன்றத் தேர்தலின் போதே தேர்தலிற்கு முதல் நாள் சிவசேனாவின் பத்திரிகைஓன்றில் குஜராத்தியர்கள் மும்பாயை ஆக்கிரமித்துக் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்களாக மும்பாயின் வாழ்வதாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது.

சொத்துக்கொரு மும்பாய்.
காங்கிரசுக் கட்சியினர், சிவசேனாக் கட்சியினர் தேசியவாதக் கட்சியினர் ஆகியோர் அதிக அளவு சொத்துக்களை மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் வைத்துள்ளனர். இதுவரை நடந்த காங்கிரசுக் கட்சியின் ஆட்சி மோசமான ஊழல்கள் நிறைந்த ஒரு ஆட்சியாகவே இருந்தது. இந்திய வரலாற்றில் மஹ்ராஸ்ட்ரா மாநிலத்தில் முதன் முறையாக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ஒரு ஊழலற்ற ஆட்சியை நிறுவ மோடி முயல்கின்றார்.

விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனர் மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சர்
இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்யும் பிரதேசமமக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது இந்திய மைய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பணி புரிகின்றார். இது போதாது என்று மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத்தின் முதலமைச்சராக விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனரான தேவேந்திர பட்னவீஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிவசேனையைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். இவரால் ஓர் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. ஆட்சியில் இணையாவிடினும் முதலமைச்சர் பதவி ஏற்பின் தாம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.கவிடம் சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிந்திச் சென்ற பதவியேற்பு வைபவம்
2014-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ம் திகதி அதாவது நேற்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேவேந்திரப் பட்னவீஸ் மிகவும் ஆடம்பரமாக மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தாமும் பங்கேற்கப் போவதாக சிவசேனா அறிவித்தது. இது ஒரு உடன்படு நிலையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி ஏற்ற பின்னரே சிவசேனாவின் தலைவர் உதவ் தக்கரே நிகழ்விற்குச் சென்றார். புதிய முதல்வருக்கு சிவசேனாவின் பத்திரிகை ஆலோசனையும் வழங்கியுள்ளது. பஜகாவின் முதல்வரும் மஹாராஸ்ட்ரா மக்களும் மருமகளும் மாமியும் போன்றவர்கள். திருமணத்தில் அன்று அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் பின்பு மருமகள் தவறு செய்தால் மாமியார் மருமகளின் காதைப் பிடித்து முறுக்குவார் என்கின்றது சிவசேனனவின் ஊடகம். சிவசேனா மஹாராஸ்ட்ராவைப் பொறுத்தவரை ஒரு சண்டியர் கும்பல் எனச் சொல்லலாம். மும்பை நகரின் பெருந்தெருக்களில் வாகனங்களுக்கு Toll charge என்னும் பாதைவரி அறவிடும் முறை அறிமுகப்படுத்திய போது சிவசேனாவினர் ஆத்திரமடைந்து அந்த வரி அறவிடும் நிலலயங்களைப் பிடுங்கி எறிந்தனர். சிவசேனாவை ஆட்சியில் இணைக்காமல் வெளியில் எதிர்க் கட்சியாக விடுவது ஆபத்து என்பதை பாரதிய ஜனதாக் கட்சியினர் நன்கு அறிவர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்தும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஒரு தேசியக் கட்சி என்றும் சிவசேனா ஒரு பிராந்தியக் கட்சி என்றும் தமது நிகழ்ச்சி நிரலுக்கு சிவசேனா உடன்பட்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் சிவசேனா மஹராஸ்ட்ரா நம்ம ஏரியா இதனுள் எம்முடன் மோதவேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இது இந்தியாவின் பேரினவாதிகளுக்கும் பிராந்தியவாதிகளுக்கும் இடையில் உள்ள முறுகல் நிலையாகும். இதே மாதிரியான முறுகல் நிலை தமிழ்நாட்டிலும் உண்டு. மஹாராஸ்ட்ரா அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கொடுத்தால் சிவசேனா உடன்பட்டு வரும் எனத் தெரியவருகின்றது. பிரதி முதலவர், உள்துறை, வலுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை  ஆகிய அமைச்சுப் பதவிகளை சிவசேனா தமது கட்சியினருக்குத் தரும்படி கேட்கின்றது..

மாநிலங்களைப் பிடிக்க நீண்ட தூரம்
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் பல மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. காங்கிரசு ஆட்சியில் பெரும் தொல்லையாக இருந்த உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது தலைகீழாக மாறிவிட்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அடையும் வீழ்ச்சி மோடியில் ஆட்சிக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் கீழ் தற்போது மஹாராஸ்ட்ரா, ஹரியானா, குஜராத், ராஜஸ்த்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கோவா என்னும் ஒன்றியப் பிரதேசமும் இருக்கின்றன. இவற்றின் பொருளாதார உற்பத்தி இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 37 விழுக்காடாகும். இதை வைத்துக் கொண்டும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒத்துழைக்கக் கூடிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடனும் நரேந்திர மோடியால் தனது பொருளாதாரத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க முடியும்.

Sunday, 2 November 2014

அமெரிக்காவின் அளவுசார் தளர்ச்சியும்(Quantitative Easing) பொருளாதார வளர்ச்சியும்

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தில் அளவுசார் தளர்ச்சியைச் செய்து வந்த ஐக்கிய அமெரிக்கா 29-10-2014இல் இருந்து அதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி(Federal Reserve) எண்ணூறு பில்லியன் டொலர்களுக்குக் குறைவான ஆவணங்களை (Bonds)மட்டும் வைத்திருந்தது. 2008இல் இருந்து அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) செய்யவதற்காக தொடர்ந்து ஆவணங்களை வாங்கிக் குவித்ததால் அமெரிக்க மைய வங்கியிடம் இப்போது நான்கரை ரில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்கா தனது பொருளாதாரத்தை தூண்டி வளரச்செய்ய எடுத்த இந்த முயற்ச்சியான அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.

அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியவுடன் உலகின் முன்ன்ணி நாணயங்களான யூரோ, பவுண்ஸ், யென் ஆகியவற்றிற்கு எதிராக டொலர் பெறுமதி ஏற்றம் அடைந்தது. 600 பில்லியன் டொலர்களுக்கு ஆவணங்கள் வாங்கப்பட்டால் அது நீண்டகாலக் கடன்களுக்கான வட்டிவிழுக்காட்டை 0.15 முதல் 0.25 வரை குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மையவங்கியானது தனது வட்டி விழுக்காட்டை (federal funds rate) 0.75 முதல் ஒரு விழுக்காடுவரை குறைப்பதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு நாணய நிதியம்(IMF) செய்த மதிப்பீடு இப்படிக் கூறுகின்றது: 

“In the US, the cumulative effects of bond purchase programs are estimated to be between 90 and 200 basis points
(0.9 and 2 percentage points) . . . In the UK, cumulative effects range from 45 basis points to 160 basis points.”

என்ன இந்த அளவுசார் தளர்ச்சி?
நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்ட நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாட்டில் வட்டி விழுக்காடு குறைக்கப் பட வேண்டும். வட்டி விழுக்காட்டைக் குறைக்க மைய வங்கி குறுங்காலக் கடன் பத்திரங்களை(ஆவணங்கள்) வர்த்தக வங்கிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) என அழைப்பர். இதைத் தொடர்ந்து செய்ய பொருளாதாரம் வளர்ச்சியடையலாம். இப்படி நாட்டின் வட்டி விழுக்காடு குறைந்து சென்று பூச்சியத்தை அண்மித்தும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாவிடில் மைய வங்கி நீண்டகாலக் கடன் பத்திரங்களை வர்த்தக வங்கிகளிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை அளவுசார் தளர்ச்சி என்பர். இதனால் நீண்டகால வட்டி விழுக்காடு வீழ்ச்சியடையும்.

அளவுசார் தளர்ச்சி எப்படி வேலை செய்கின்றது?விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) நாட்டில் பணத்தின் விலையை (அதாவது வட்டி விழுக்காட்டைக்) குறைக்கும். அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மைய வங்கி நாட்டில் ஆவணங்களை(அரசக் கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கும்போது ஆவணங்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் உறுதிறன் (வருமான விழுக்காடு yield) குறையும். இதனால் முதலீட்டாளர்கள் 9முக்கியமாக வர்த்தக வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள்) இந்த ஆவணங்களை வாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள். மைய வங்கியிடம் ஆவணங்களை விற்றுப் பெற்ற பணத்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலக் கடனாக உற்பத்தி நிறுவனங்கள், கட்டிடம் கட்டும் நிறுவனங்கள், பொதுமக்கள் இப்படிப் பலதரப்பினருக்கு கொடுக்க முடியும். மைய வங்கிக்கு ஆவணங்களை விற்ற தனியார் நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தை பொருளாதாரத்தில் முதலீடு செய்வர். இதனால் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி வேலை வாய்ப்பு என்பன அதிகரிக்கும். இது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனால் அவர்கள் செலவு செய்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் மேலும் அதிகரிக்கும்.


அமெரிக்கா என்ன செய்தது?
2008-ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி (Federal Reserve) ஈட்டுக்கடன் ஆவணங்களை வாங்கத் தொடங்கியது. இதனால் அதனது ஆவண இருப்பு800 பில்லியன் டொலர்களில் இருந்து  1.75 ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தொடர்ந்து செய்த ஆவணக் கொள்வனவால் 2010 ஜூனில் ஆவணக் கையிருப்பு 2.1 ரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற படியால் ஆவணக் கொள்வனவு நிறுத்தப்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை என உணர்ந்ததால் பின்னர் மாதம் தோறும் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இரண்டாம் சுற்று ஆவணக் கொள்வனவு 2010 நவம்பரில் செய்யப்பட்டது. இதில் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திறைசேரிக் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதிலும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாததால் 2012 செப்டம்பரில் மூன்றாம் கட்ட அளவுசார் தளர்ச்சி செய்யப்பட்டது. இதில் மாதம் தோறும் 40 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களை அமெரிக்க மைய வங்கி வாங்க முடிவு செய்தது.

 அமெரிக்க மைய வங்கியின் அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்காவில் 2008 அளவுசார் தளர்ச்சியை ஆரம்பித்து வைத்த அமெரிக்க மைய வங்கியில் முன்னாள் பென் பேர்னார்க் "Quantitative Easing works in practice but does not work in theory" என்றார் நகைச்சுவையாக.

அமெரிக்காவில் செய்யப்பட்ட அளவுசார் தளர்ச்சிக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துக்கள்:


1. அளவுசார் தளர்ச்சி 2008இல் உருவான பொருளாதாரச் சரிவு (recession) பொருளாதாரம் மந்த (depression)நிலையை அடைவதைத் தடுத்தது.
2. அளவுசார் தளர்ச்சி நாட்டில் விலைவாசி அளவிற்கு அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுத்தது.
3. அளவுசார் தளர்ச்சி விலைவாசியை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
4. அளவுசார் தளர்ச்சி  நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரித்தது.
5. அளவுசார் தளர்ச்சி மிகைப்பணவீக்கத்தைக்(hyper inflation) கொண்டு வரும் என்ற கூற்றுப் பொய்யாக்கப்பட்டுள்ளது.
6. அளவுசார் தளர்ச்சி அமெரிக்க டொலரின் பெறுமதியை உயர்த்தியது.

அமெரிக்க மைய வங்கி எப்போது ஆவணங்களை விற்கும்?

அமெரிக்க மையவங்கி வாங்கிக் குவித்துள்ள ஆவணங்களை விற்க வேண்டும். அதன் கால அவகாசம் வரும்போது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும். இதைச் செய்யும் போது நாட்டில் மீண்டும் வட்டி விழுக்காடு அதிகரிக்கும். அமெரிக்கா 2015-ம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குப் பின்னர்தான் ஆவணங்களை விற்பது பற்றி யோசிக்கும்.

ஜப்பானில் தொடரும் அளவுசார் தளர்ச்சி
அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்த மறுநாள் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சியைச் செய்யப் போவதாக அறிவித்தது. இதுவரை மாதம் தோறும் அறுபது முதல் எழுபது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கி வந்த ஜப்பானின் மைய வங்கி இனி மாதம் ஒன்றிற்கு எண்பது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜப்பானில் பணவிக்கம் இரண்டு விழுக்காடாக  இப்போதைக்கு அதிகரிக்கப் போவதில்லை என உணரப்பட்டதாலேயே இந்த அளவுசார் தளர்ச்சி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இது ஜப்பானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம். பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சி செய்யப் போவதாக அறிவித்ததால் அமெரிக்காவில் பங்கு விலைகள் உயர்ந்தன.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அளவுசார் தளர்ச்சி பொருளாதாரம் சரிவு நிலையிலும், பணவிக்க்கம் வலுவிழந்த நிலையிலும் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்யும் என அமெரிக்க மைய வங்கி நிரூபித்து விட்டது என இப்போது நம்பலாம். 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி 3.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்திருந்த 3 விழுக்காட்டிலும் அதிகமானதாகும்.  அளவுசார் தளர்ச்சியின் செயற்படு திறனை சரியாக அறிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.

பிரித்தானியாவின் கசப்பான அனுபவம்
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானிய மைய வங்கி அளவுசார் தளர்ச்சியை மேற் கொண்டது. 375 பில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆவணங்களை அது வாங்கியது. இதனால் ஆவணங்களின் உறுதிறன் குறைந்தது. இது பல ஓய்வூதிய நிதியங்களைப் பாதித்தது. இந்த ஓய்வூதி நிறுவனங்களின் பற்றாக் குறை 312பில்லியன்களை எட்டியது.


செல்வந்தர்களுக்கு மட்டும் இலாபம்
ஆவணங்களை மைய வங்கி வாங்கும் போது அதன் விலை அதிகரிப்பால் செல்வந்தர்கள் இலாபம் அடைவார்கள். வட்டி விழுக்காடு குறைவதால் சிறு சேமிப்புக்களைச் செய்துள்ள வறியவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

Monday, 27 October 2014

சீனாவின் பளபளக்காத பட்டுப் பாதை

சீனாவின் கப்பல் போக்குவரத்து மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதில் உலகிலேயே சிறந்த கப்பல் கட்டுமானிகளாக சீனர்கள் இருந்தனர். 11-ம் நூற்றாண்டிலேயே சீனாவிடம் 52,000 கடற்படையினர் இருந்தனர். இவர்களின் முக்கிய பணி சீனாவின் கடல் வர்த்தகத்தைப் பாதுகாப்பதே. சீனாவின் கடல் வாணிபப் பாதை பட்டுப் பாதை எனப்படும். சீனா முக்கியமாக பட்டை ஏற்றுமதி செய்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்று சீனா கணனிகளை ஏற்றுமதி செய்தாலும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்தாலும் அவை போகும் பாதை பட்டுப்பாதை எனப்படுகின்றது. இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனக் கடற் பட்டுப்பாதை  4,000 மைல்கள் (6,437 கிலோ மீட்டர்கள்) நீளமானதாக இருந்தது. இந்தப் பட்டுப்பாதை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான வர்த்தகப்பாதையக  மட்டுமல்ல ஒரு கலாச்சாரப் பரிவர்த்தனைப் பாதையாகவும் இருந்தது.

கடல் மாறும் தடங்கள்
சீனாவின் பட்டுப்பாதை இந்திய உப கண்டம், பாரசிகம்(ஈரான்) அரபு நாடுகள் ஆகியவற்றை இணைத்தது. ரோமாபுரியுடனும் வர்த்தகத்தை உருவாக்கியது. சீனாவின் பட்டு, தேயிலை, மட்பாண்ட்கள்  போன்றவை உலகெங்கும் விரும்பப்பட்டன. பின்னர் சீனக் கண்டு பிடிப்புக்களான காகிதம், அச்சுப்பொறி, வெடிமருந்து, திசையறிகருவி ஆகியவையும் உலகெங்கும் விரும்பப்பட்டன. டொமினோ போன்ற பல மேசை விளையாட்டுக்கள் கூட சீனவில் உருவாக்கப்பட்டவையே. 1500 ஆண்டில் உலக மொத்த உற்பத்தியின் 35 விழுக்காடு சீனாவினுடையது. அப்போது ஐரோப்பாவின் உற்பத்தி 17 விழுக்காடு மட்டுமே. ஆசிய நாடுகளின் உற்பத்தி உலக உற்பத்தியில் 77விழுக்காடு. இந்த நிலை மீண்டும் உருவாகும் நிலை இப்போது உருவாகியுள்ளது. அட்லாந்டிக் பெருங்கடலை ஒட்டி இருந்த அதிகாரப் போட்டி இப்போது பசுபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் மக்கள் தொகை 742.5மில்லியன்கள். ஆசியாவின் மக்கள் தொகை 4,427 மில்லியன்கள்.

மாற்றுக்கு மாற்று
தனது எரிபொருள் கொள்வனவு மாலாக்கா நிரிணையில் தடுக்கப்பட்டால் பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் இருந்து ஒரு தரைவழிப்பாதையையும், அதுவும் தடைபட்டால் பாங்களாதேசத்தின் சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து ஒரு தரைவழிப்பாதையையும் அதுவும் தடைபட்டால் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து ஒரு தரவழிப்பாதையையும் இவை எல்லாம் தடைபட்டால் மத்திய ஆசியாவினூடான ஒரு விநியோகப்பாதையையும் அமைத்துள்ளது சீனா. தனது மூலப் பொருள்களுக்கே இத்தனை மாற்றுப் பாதைகளை உருவாக்கிய சீனா தனது ஏற்றுமதிகளுக்கு மாற்றுப் பாதைகளைத் தேடுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. திட்டமிடலில் சிறந்த சீனர்கள் மாற்றுவழிகளைத் தேடுவதிலும் முனைப்புக் காட்டுவது இயல்பே.

பட்டுப்பாதையல்ல முள்ளுப்பாதை
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. சீன ஏற்றுமதியில்  பெரும்பகுதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின்றது. சீனாவிற்கும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்துச் செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் நாளொன்றிற்கு ஒரு பில்லியன் யூரோ நாணயம் பெறுமதியானதாகும். சீனப் பொருட்கள் கடற்பாதையூடாக ஐரோப்பாவிற்குச் செல்வதாயின் மலாக்கா நிரிணையைக் கடந்து இந்து மாகடல் கடந்து சென்று ஏடன் வளைகுடாவுடாகச் சென்று சூயஸ் கால்வாயையும் கடந்து சென்று கிப்ரல்டர் நீரிணையில் (Strait of Gibraltar) புகுந்து இரு வல்லரசுகளான பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஊடாகப் பயணித்து ஐரோப்பாவை அடைய வேண்டும். இதற்கு சிங்கப்பூர், கொழும்பு, கெய்ரோ, லிஸ்பன்(போர்த்துகல்) ஆகிய துறைமுகங்கள் முக்கியமானவையாகும். சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கும் இந்தப் பாதையை புதிய பட்டுப்பாதை என அழைக்கிறார்கள். ஆனால் சீனாவின் பட்டுப்பாதை பட்டுப் போன்ற பாதை அல்ல. உலகின் மிக மோசமான திருகுப் புள்ளிகளைக் (choke points)  கொண்ட பாதையாகும். பல கப்பல் போக்குவரத்து அட்டவணைப் பிரச்ச்னைகள் கொண்ட பாதை மட்டுமல்ல பல படைத்துறைச் சவால்களையும் எதிர் நோக்க வேண்டும். இந்தக் கடற்பாதைக்கு மாற்றீடாக ஒரு தரைவழிப்பாதையை ஐரோப்பாவிற்கு உருவாக்க வேண்டும் என்பதே சீனாவின் அடுத்த திட்டமாகும்.

மாற்றுப்பட்டு - சீனாவின் மேற்கே போகும் ரயில்
சீனா ஐரோப்பாவிற்கான கடல் வழிப்பாதைக்கு மாற்றீடாக ஒரு தரை வழிப்பாதையூடாக ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி இறக்குமதியைச் செய்கின்றது. இந்தத் தொடரூந்துப் பாதை சீனாவிலிருந்து கஜகஸ்த்தான், இரசியா, பெலரஸ், போலாந்து ஆகியவற்றினூகாகச் செல்கின்றது.  இந்தத் தொடரூந்துப் பாதை கணனித் துறை நிறுவனங்களான ஹெச்.பி, ஜேர்மனிய வாகன உற்பத்தித் துறை நிறுவனமான பி.எம்.டபிளியூ, மெர்ஸெடிஸ் பென்ஸ் போன்றவை விரும்பிப் பாவிக்கின்றன. ஹெச்.பி தான் சீனாவில் உற்பத்தி செய்யும் கணனிதத் துறைப் பொருள்களை ஐரோப்பாவிற்கு அனுப்புவதற்கு இந்த தொடரூந்துப் பாதையைப் பயன்படுத்துகின்றன. கடல் வழியாக அனுப்பதிலும் பார்க்க தொடரூந்து வழி அனுப்புவது செலவு மிகுந்தது என்றாலும் துரிதமாகவும் தடைகளின்றியும் அனுப்பக் கூடியதாக இருக்கின்றது.  ஹெச்.பி நிறுவனத்தின் தகவல்களின்படி சீனாவில் இருந்து ஜேர்மனிக்கு 22 நாட்களில் பொருட்களை எடுத்துச் செல்லலாம். இது கடல் வழிப்பாதைக்கு எடுக்கும் காலத்திலும் அரைவாசியாகும். ஆனால் கடல் வழிப்பாதையிலும் பாக்க தொடரூந்து வழிப்பாதை இருபது முதல் இருபத்தைந்து விழுக்காடு செலவு அதிகமானதாகும். 2011-ம் ஆண்டில் இருந்து தரைவழி வாணிபப் போக்குவரத்துச் செலவு குறைந்து கொண்டு வருகின்றது என்பதும் மத்திய ஆசிய நாடுகளிடையான வர்த்தகம் 2009-ம் ஆண்டில் இருந்து 29 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது இங்கு கருத்தில் கொள்ளத் தக்கவையாகும்.


இரசியா போடும் சிவப்பு ரூட்டு
11,000 கிலோ மீட்டர் நீளமான இப்பாதையின் பெரும்பகுதி இரசியாவினூடாகச் செல்வதால் சீனாவின் வர்த்தகத்திற்கு இரசியாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இந்தத் தொடரூந்துப் பாதை இரசிய மற்றும் ஜேர்மனிய தொடரூந்து நிறுவனங்களின் கூட்டு உருவாக்கமாகும். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட உலகிலேயே பெரிய நாடாகிய இரசியா ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தரைவழித் தொடர்பை கட்டுப்படுத்த விரும்புகின்றது. இந்த தொடரூந்துப் பாதையைப் பரவுபடுத்துவதும் தனது கனவுத் திட்டமான யூரோ ஏசியன் பொருளாதாரக்  கூட்டமைப்பை மேம்படுத்துவதும் இரசியாவின் கனவாகும். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மேற்குப் புறம் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக் ரீதியில் அபகரித்துக் கொள்ள கிழக்கு புறமாக  உள்ள மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை சீனா வேகமாக வளர்த்துக் கொள்ள இரசியா நடுவில் தடுமாறுகின்றது. கஜக்ஸ்த்தானில் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டையும், உஸ்பெக்கிஸ்த்தானில் 15 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டையும் செய்துள்ளது. மத்திய கிழக்காசியாவில் உள்ள கனிம வளங்களை யார் சுரண்டுவது என்பதிலும் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போட்டி உண்டு. மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை எப்பொழுதும் தொடங்குலாம் என்பதை சீனா நன்கு அறியும்.

சீனாவிடும் பட்டு நூல்
மத்திய ஆசியாவில் இரசியாவுடனான முறுகலைத் தவிர்கவும் தனது ஐரோப்பாவுடனான வர்த்தகம் தடையின்றி நடக்கவும் இரசியாவைத் தவிர்த்து ஒரு புதுப் பட்டுப்பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. சீனாவின் புதுப் பட்டுப்பாதை வெறும் போக்கு வரத்துக்கு மட்டுமல்ல பட்டுப்பாதையை ஒட்டிய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன் சீனக் குடியேற்றங்களையும் இலக்காகக் கொண்டது. புதிய பட்டுப் பாதை மத்திய சீனாவில் ஆரம்பித்து சீனாவின் லன்ஞ்சௌ, உரும்கி, கோர்கஸ் ஆகிய மாகாணங்களூடாக கஜகஸ்த்தான், ஊடாக மத்திய ஆசியா சென்று ஈரானிற்கும் செல்லும். அங்கிருந்து ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. இன்னும் ஒரு பக்கம் வடதிசை போய் ஐரோப்பாவை அடையும். பல்கேரியா, ருமேனியா, செக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிற்கும் செல்லும். இந்தப் புதுப் பட்டுப்பாதை திட்டத்தில் ஜேர்மனியை இணைக்க சீனா பெரிதும் விரும்புகின்றது.

இரசியாவின் மாற்றுத் திட்டங்கள்
இரசியாமீது எரிபொருள் கொள்வனவிற்குத் தங்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேன் விவகாரத்தின் பின்னர் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கி விட்டன. இதனால் சீனாவிற்கு குழாய்கள் மூலம் எரிவாயுவை விநியோக்கிக்க இரசியா விரும்புகின்றது. சீனாவுடன் இணைந்து இந்த நீண்ட குழாய் பாதையை உருவாக்கினால் அது இந்தியா பாக்கிஸ்த்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகளுக்கும் எரிவாயு விநியோக்கிப்பதற்கு வசதியாக அமையும். ஆனால் இந்தக் குழாய் வழியும் தொடரூந்து வழியும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என இரசியா கருதுகின்றது. இரசியாவின் இன்னும் ஒரு கனவு ஜேர்மனியையும் சீனாவையும் இணைத்து ஒரு ஆசிய ஐரோப்பிய வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்துவது. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதும் பன்னாட்டு இராசதந்திரத்தில் ஒன்றுதான். ஜப்பானும் அமெரிக்காவும் இந்தியாவும் ஆசியாவில் சீனாவிற்கு எதிராகக் கை கோர்த்தால் சீனாவிற்கு இரசியாவுடன் இணைவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை.

அமெரிக்க ஆமை புகுந்தது
சீனாவின் புதிய பட்டுப்பாதை ஆப்கானிஸ்த்தானூடாகச் செல்வதை அமெரிக்கா விரும்புகின்றது. அத்துடன் ஆப்கானிஸ்த்தானின் கனிம வளங்களை சீனா மூலம் தான் சுரண்டுவதற்கு அமெரிக்க முன்னுரிமை கொடுக்கின்றது. ஏற்கனவே சீனா பல கனிம வள அகழ்வு வேலைகள் ஆப்கானிஸ்த்தானில் செய்ய அமெரிக்கா அனுமதித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சீனாவால் அமெரிக்காவிலும் பார்க்க குறைந்த செலவில் அகழ்வு செய்ய முடியும். இரண்டாவது அமெரிக்க நிறுவனங்கள் அகழ்வு செய்வது பெரும் பாதுகாப்புப் பிரச்ச்னையை உருவாக்கும். சீனாவின் புதிய பட்டுப்பாதையை ஆப்கானிஸ்த்தானூடாக இழுத்து ஆப்கானிஸ்த்தானை சீனாவின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா முயல்கின்றது. இதற்கு தூண்டுகோலாக இதே வாய்ப்பை இந்தியாவிற்கும் அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளது. சீனாவையும் ஜேர்மனியையும் தன்னுடன் இணைந்து ஒரு வர்த்தகக் கூட்டமைப்பை ஏற்படுத்த இரசியா எடுத்த முயற்ச்சி அமெரிக்காவை கலக்கமடைய வைத்தது. இத்திட்டம் தொடர்ப்பக இரசியாவிலும் சீனாவிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஜேர்மனியும் கவனத்தில் எடுத்தது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா உக்ரேன் பிரச்சனைக்கு தூபமிட்டது எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. ஆசியாவிலும் ஐரோப்பவிலும் அமெரிக்காவைப் ஓரம் கட்டும் வேலையை இரசியாவும் சீனாவும் இணைந்து செய்யலாம் என்பது அமெரிக்காவின் கருத்து. இதில் ஐரோப்ப ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இணைந்தால் அமெரிக்காவிற்கு நிச்சயம் பெரும் பின்னடைவு ஏற்படும். உக்ரேன் பிரச்சனையுடன் உருவாகிய இரண்டாம் பனிப்போர் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ளசில நாடுகளை ஒன்று படுத்தியதுடன் சில நாடுகளை வேறுபடவும் வைத்தது. சில நாடுகள் இரசியாவுடன் ஒரு முறுகல் நிலை உருவாகுவதை விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் இத்தாலியும் ஹங்கேரியும் இரசியாவுடன் உடன்பட்டுச் செல்வதை விரும்புகின்றன. பிரித்தானியா சுவீடன், போலாந்து, ருமேனியா மற்றும் போல்ரிக் நாடுகள் இரசியாவிற்கு எதிராக நிற்கின்றன. ஜேர்மனி கழுவும் மீன்களில் நழுவும் மீனாக நிற்கின்றது. ஏற்கனவே அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வை உக்ரேனும் ஈராக்கும் தடுத்து விட்டன. அமெரிக்கா ஆசிய பசுபிக் நாடுகளுடன் செய்ய முனையும் பசுபிக் தாண்டிய வர்த்தக் உடன்படிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்ய முனையும் அட்லாண்டிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கையும் இழுபடும் நிலையில் அமெரிக்கா ஜேர்மன் சீனாவுடனும் இரசியாவுடனும் இணைவது நிச்சயம் அமெரிக்கவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும்.

ஊர் ஒன்றுபட்டால்
இந்தியாவின் புதிய ஆட்சியாளர்களும் சீனாவின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள்.  இந்திய சீன வர்த்தக உறவு இரு நாடுகளையும் பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. சீனாவின் புதிய பட்டுப்பாதையில் இணைவது பற்றி இந்தியாவுக் பரிசீலித்து வருகின்றது. இந்தியாவைத் தொடர்ந்து தூர கிழக்கு நாடுகளும் இதில் இணைய முனையலாம். இப்படி ஆளுக்கு ஆள் ஊரில் ஒன்றுபட்டால் கூத்தாடி அமெரிக்கா என்ன செய்யும்?

நாடுகளிடையான பாதகளை மட்டும் இணைத்தால் போதாது நாடுகளும் முரண்பாடுகளைக் கடந்து இணைய வேண்டும்.


Sunday, 19 October 2014

மாறுபட்ட நிலைகளில் வேறுபட்ட தடங்களில் தடுமாறும் உலகப் பொருளாதாரம்

IMF எனப்படும்பன்னாட்டு நாணய நிதியம்2014-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி 3.7விழுக்காடாக இருக்கும் என ஏப்ரல் மாதம் எதிர்வு கூறியிருந்தது. இப்போது அதை 3.3 ஆகக் குறைத்துவிட்டது. தற்போது உலகின் பல நாடுகளில் போதுமான அளவு விலைவாசி அதிகரிப்பு இல்லை என்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது. அத்துடன் உலக நாணயமாகக் கருதப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டே போவதும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது.

இரு முனை ஏமாற்றங்கள்
2008-ம் ஆண்டும் 2009-ம் ஆண்டும் மேற்குலகப் பொருளாதாரங்கள் வீழ்ச்சியைச் சந்தித்த போது   அந்த நாடுகள் தம்மை    தமது தேக்க நிலையில் இருந்து சீனாவும் இந்தியாவும் மீட்கும் என நம்பின. அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் தமது பொருளாதாரங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லலாம் என அவை எதிர்பார்த்திருந்தன. ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சிகளின் வேகம் குறையத் தொடங்கின. உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி குன்றும் என்ற அச்சம் பொருளாதார நிபுணர்களைப் பீடிக்க முன்னர் நிதிச் சந்தையைப் பிடித்துவிடும். பத்தாண்டு ஆவணங்களின் yield எனப்படும் ஊறுதிறன் அதாவது இலகுவாகச் சொன்னால் இலாப விழுக்காடு 2.2 ஆகவும் முப்பது ஆண்டு ஆவணங்களின் ஊறுதிறன் (இலாப விழுக்காடு) மூன்றிலும் குறைந்துள்ளது. ஆசியாவின் இரு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானின் நிலைமை மோசமாக உள்ளது.தென் கொரியா தனது பொருளாதார வளர்ச்சியை இரண்டாகக் குறைத்துள்ளது.

இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு வளர்ச்சி போதாது
உலகச் சந்தையில் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருட்களின் விலை வீழ்ச்சி இந்தியாவிற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எரிபொருள் விலை ஒரு அமெரிக்க டொலர் குறைந்தால் அது இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் வெளிநாட்டுச் செலவாணியை மீதமாக்கும். இந்த ஆண்டு எரிபொருள் விலை 25 டொலர்களுக்கு மேல் குறைந்துள்ளது. இதனால் இந்திய அரசு எரிபொருளுக்கு செலவு செய்யும் உதவிநிதியையும்(மானியம்) குறைக்கலாம். இது இந்திய அரசின் பாதிட்டுக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும். இந்த வாய்ப்பான நிலைமை இந்தியப் பொருளாதாரத்தை வளரச் செய்து அது உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படச் செய்ய இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும். ஆனாலும் இந்தியாவிற்குத் தேவையான (ஆகக் குறைந்த) ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது. இந்திய மைய வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் 2014இல் இந்தியா 5 விழுக்காடு வளர்ச்சியையும் 2015இல் 6 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டும் என்கின்றார்.

சீனாவின் இருமுனைச் செயற்பாடு
பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது அரசு தனது செலவீனங்களை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்ய வேண்டும் என்பது கீன்சியப் பொருளியல் நிபுணர்களின் கருத்து. மாறாக நிதியியல் பொருளாதார நிபுணர்கள் அதாவது Monetarists அரச நிதிக் கொள்கைதான் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து வலுவாக அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். கீன்சியர்கள் வேலைவாய்ப்பு நிலையை உருவாக்க பொருளாதாரத்தை முகாமை செய்ய வேண்டும் எனக் கருதுகின்றனர். நிதியியலாளர்கள் நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு நிலை அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். 2008-09 ஆண்டுகளின் பொருளாதாரப் பின்னடைவின் பின்னர் மேற்கு நாடுகள் தமது பொருளாதாரங்களை நிதியியலாளர்களின் தத்துவங்களுக்கு ஏற்ப முகாமை செய்கின்றன. தமது நாடுகளில் பணப்புழக்கங்களை அதிகரிக்கச் செய்தனர். இதை அளவுசார் தளர்ச்சி அதாவது quantitative easing என்கின்றனர். சீனா பணப்புழக்கத்தை அதிகரித்ததுடன் அரச செலவீனங்களையும் அதிகரித்துக் கொண்டது. நாட்டின் உள்ளகக் கட்டுமானங்களில் அரச முதலீடுகளை பெருமளவில் அதிகரித்தது. சீன அரசின் இந்த இருமுனைச் செயற்பாடுகளை உலகப் பொருளாதார நிபுணர்கள் மிகவும் துணிச்சல் மிக்க நடவடிக்கை எனக் கருதினர். சீனா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரச் சீர்திருத்தம் என்று தொடங்கியதில் இருந்து சீனா தனது பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தும் பணப்புழக்கத்தை அதிகரித்தும் அரச செலவீனங்களை அதிகரித்தும் வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது.  இந்த வளர்ச்சிக்கு சீனாவின் வட்டி விழுக்காடு பணவீக்கத்திலும் குறைவான நிலையில் இருக்கும்படியாக கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பேணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் இலகு கடன் பெற வாய்ப்பாக இருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளாக சீனா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை மிகவும் அதிகமாக வளரவைத்தது. இதற்கு சீன நாணயத்தின் பெறுமதி குறைந்த நிலையில் பேணப்பட்டது. மாறாக மேற்கு நாகள் பலவற்றில் நாணயங்களின் பெறுமதி உயர் நிலையில் பேணப்பட்டு வளர்முக நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் அந்த நாடுகளின் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டது.

அளவுசார் தளர்ச்சி (quantitative easing - QE) பற்றிய விவாதம்
ஊடகங்களைப் பொறுத்தவரை அளவுசார் தளர்ச்சி மைய வங்கிகள் தமது இருப்புநிலைக் குறிப்புகளின் (ஐந்தொகை) அளவை அதிகரித்து நாட்டில் கடன் வழங்குதலை அதிகரிப்பதாகும். இதற்காக மையவங்கி புதிதாக நாணயங்களை உருவாக்கி அதாவது காசு அச்சிட்டு மற்ற வங்கிகளிடமிருந்து சொத்துக்களை வாங்கும். அந்தச் சொத்து விற்பனையால் தமக்குக் கிடைக்கும் நிதியை வங்கிகள் கடனளிக்கும். கடன் நாட்டில் அதிகரிப்பதால் நாட்டில் வட்டி விழுக்காடு குறையும். மக்கள் அதிகம் செலவளிப்பார்கள். இதனால் அவர்களது கொள்வனவு அதிகரிக்கும். அதிகரித்த கொள்வனவால் நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதிகம் பேர் வேலை செய்வதால் நாட்டின் கொள்வனவு மேலும் அதிகரிக்கும். இதனால் மேலும் கொள்வனவு அதிகரிக்கும். இந்தச் சுழற்ச்சி தொடரும். மைய வங்கி நேரடியாக வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை (கூட்டாண்மைக் கடன் ஆவணங்கள் – அதாவது corporate bonds வாங்குவது கடன் தளர்ச்சி எனப்படும். 2008-09 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அமெரிக்கவின் அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்யப்பட்டன. அமெரிக்காவின் மைய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பு (ஐந்தொகை) ஒரு டிரில்லியன் டொலர்களில் இருந்து நான்கரை டிரில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மைய வங்கி 2009-ம் ஆண்டு அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்தபடியால் மோசமான ஒரு பொருளாதார மந்தம் தவிர்க்கப்பட்டது எனப்படுகின்றது. அதேவேளை அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. அமெரிக்காவைப் போல ஜப்பானும் தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொன்டுவர அளவுசார் தளர்ச்சியைப் பெருமளவில் மேற் கொண்டது. ஆனால் ஜப்பானில் அளவுசார் தளர்ச்சி பெரிய அளவில் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது. யூரோ வலய நாடுகள் விலைவாசி அதிகரிப்பின்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இரண்டு காலாண்டுகளாக பொருளாதாரச் சுருக்கத்தைக் கண்டுள்ளது. பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சியின்றித் தவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கித் தலைவர் மரியோ திராகி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள யூரோ வலய நாடுகளில் உள்ள தனியார் பெரு வர்த்தக நிறுவனங்களின் கடன் பத்திரங்களைக் கொள்வனவு செய்து யூரோ வலய நாடுகளிடை ஓர் அளவுசார் தளர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத் தூண்டலை ஏற்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியரான மரியோ திராகியின் திட்டத்திற்கு ஜேர்மனியைன் மைய வங்கி ஆளுநர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால் மரியோ திராகி எந்த அளவு நிதியை அளவுசார் தளர்ச்சி மூலமோ அல்லது கடன் தளர்ச்சி மூலமோ பொருளாதாரத்தினுள் செலுத்தப் போகின்றார் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. யூரோ நாணய்த்தின் பெறுமதியை விழச்செய்வது பிரான்ஸினதும் இத்தாலியினதும் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க மைய வங்கிக்கு நிதிக் கொள்கையில் இருக்கும் சுதந்திரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கிக்கு இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தது ஒரு ரில்லியன் யூரோக்களையாவது தனது பொருளாதாரத்தினுள் செலுத்த வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வரைபடத்தின் மூலம் இங்கிலாந்தின் மைய வங்கி தனது சொத்துக் களின் பெறுமதியை அதிகரித்து அளவுசார் தளர்ச்சியை அதிகரித்தால்  பொருளாதார வளர்ச்சியடையும் தொடர்ந்து வரும் பணவிக்கம் சொத்துக்களின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்யும் பொருளாதார வளர்ச்சியையும் விழச் செய்யும் நாட்டில் பணப்புழக்கம் மட்டும் நிலையாக இருக்குன் எனக் காட்டியுள்ளது.

வளைய முடியாத யூரோவலயம்
அமெரிக்கப் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை எட்டாததும் ஜப்பான் இப்போதும் மோசமான நிலையில் இருப்பதாலும் அளவுசார் தளர்ச்சி எந்த அளவு வேலை செய்யும் என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்தமையைத் தொடர்ந்து அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அமெரிக்கா சவுதி அரேபியாவையும் மிஞ்சி உலகிலேயே அதிக அளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாறிவிட்டது. 27 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகள் ஒன்று கூடி யூரோ என்னும் நாணயத்தை தமது பொது நாணயமாக்கின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தி அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளின் உற்பத்தியிலும் அதிகமாகும்.  யூரோ அமெரிக்க டொலருக்கு எதிராக பெரு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் யூரோ வலய நாடுகளில் அளவுசார் தளர்ச்சி வயிற்றோட்டத்தில் தவிக்கும் யூரோவிற்கு பேதி மருந்து கொடுத்த கதையாகிவிடும். வேறு வேறு பொருளாதாரச் சூழ் நிலைகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில்  பொதுவானவையாக இருப்பவை விலைவாசி அதிகரிப்பின்மையும் பொருளாதார மந்தமுமாகும். பிரான்ஸில் ஐம்பது பில்லிய செலவீனக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஆனால் அந்த அளவு வெட்டு பெரும் பொருளாதாரத் தேய்வில் முடியும் என பிரெஞ்சு அரசு அஞ்சுகின்றது.

பிரித்தானியாவும் அயர்லாந்தும்
பிரித்தானியாவில் ஒரு நகைச்சுவை பிரபலம். ஆங்கிலேயனுக்கு தலை முடி உதிர்ந்தால் அவன் முடியை வளர வைக்க நிறையச் செலவு செய்வானாம். ஐரிஸ்காரனுக்கு முடி உதிர்ந்தால் தனது சீப்பை விற்றுவிடுவானாம். 2008-09 நிகழந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அயர்லாந்து அரசும் மக்களும் சிக்கன நடவடிக்கை மூலம் தமது பொருளாதாரத்தைத் தக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவில் மக்கள் தொடர்ந்து செலவு செய்து அதன் மூலம் நாட்டில் பொருளாதாரத்தை வளர வைத்தனர்.  இரட்டைப் வீழ்ச்சி பொருளாதாரத் தேக்கத்தின் (double dip recession) பின்னர் பிரித்தானியப் பொருளாதாரம் சற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால் பிரித்தானியாவின் பொருளாதார  வளர்ச்சி ஒரு சமநிலைப்படுத்தப்படாத வளர்ச்சியாக இருக்கின்றது. அங்கு உற்பத்தித் துறை (manufacturing) வளர்ச்சியடையாமல் தேய்வடைந்துள்ளது. பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி கட்டிடத் துறையிலும் மக்களின் கொள்வனவிலும் பெரிதும் தங்கியுள்ளது. இதே வேளை சீனா தனது மக்களின் கொள்வனவை உயர வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. சீனா தனது பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது.

எரிபொருள் விலைவீழ்ச்சியால் பாதிப்படையும் நாடாக இரசியா இருக்கின்றது. இரசிய அரசின் வருமானத்தில் பெரும் பகுதி எரிபொருள் ஏற்றுமதியில் தங்கி இருக்கின்றது இரசியாவின் 2014-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 117 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் 2015-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 100 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தீட்டப்பட்டன

ஏமாற்றும் அமெரிக்கா
இந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் பற்றி மற்ற நாடுகள் வளர்ச்சியடையலாம் என எதிர்பார்த்திருந்த வேளையில் அமெரிக்காவின் சில்லறை விற்பனை (2014) செப்டம்பர் மாதம் 0.1விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.

ஜேர்மன் மைய வங்கியின் கையில் நிறைய இருக்கின்றது
அமெரிக்கப் பொருளாதரம் வளர்ச்சியடைந்தாலும் யூரோ வலய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய ஓன்றியப் பொருளாதாரம் வளராமல்       உலகப் பொருளாதாரம் தேறாது. யூரோ வலய நாடுகளை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு வேண்டிய பணப்புழக்க அதிகரிப்பைச் செய்ய ஜேர்மனியின் மைய வங்கி தடையாக இருக்கின்றது. எரிபொருள் விலை வீழ்ச்சி எரிபொருள் பாவனை நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தாலும் எரிபொருள் ஏற்றுமதி நாடுகளுக்கு பாதகமான நிலையை உருவாக்கும். அதிலும் குறிப்பாக உலகின் முன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரசியா தனது வருமானத்திற்கு எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியுள்ளது. உலக நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மட்டுமே  உலகத்தை தொடரும் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்க முடியும்.

Saturday, 18 October 2014

இந்தியாவின் வழிகாட்டல் ஏவுகணைகள் (Cruise Missiles)

இந்தியா அச்சமில்லை என்று பொருள்படும் நிர்பய் என்னும் வழிகாட்டல் (Cruise Missiles) ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி வெற்றீகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது. எதிரியின் கதுவிகளுக்கு அதாவது ரடார்களுக்குப் புலப்படாமல் மிகவும் தாழ்வான உயரத்தில் பறக்க்கக் கூடிய நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் கிலோ எடையுடையவை. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவல்லவை. இந்தியாவின் முப்படைகளும் இவற்றைப் பாவிக்கப் போகின்றன.

2013-ம் ஆண்டு  இந்த ஏவுகணையைப் பரீட்சித்தது தோல்வியில் முடிவடைந்தது. இப்போது நிர்பய் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டதால் இந்தியாவும் வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாறிவிட்டது. மற்ற நாடுகளிலும் பார்க்க இந்தியா மிகவும் சிக்கனமாக வழிகாட்டல் ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு நிர்பய் உருவாக்கப் பட்டுள்ளது.

ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டருக்குச் சற்று அதிகமான குறுக்களவும் கொண்ட நிர்பய் ஏவுகணைகள் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர்கள் தொலைவிற்குப் பாயக் கூடியவை. இவை ஒலியிலும் வேகம் குறைவாகவே பயணிக்கும். இவற்றில் இறக்கைகளும் வாற்புறம் செதில்களும் இருக்கும். நிர்பய் ஏவுகணைகள் சூட்டிகை  ஏவுகணைகள் எனப்படுகின்றது அதாவது smart ஏவுகணைகள். இவை Fire and forget என்னும் முறைமைப் படி செயற்படக்கூடியன. அதாவது இதை ஏவிவிட்டால் தானாகவே இலக்கை நோக்கிப் பயணிப்பதுடன் தேவை ஏற்படும் போது இலைக்கை நோக்கி திசையை நிலைமைக்கு ஏற்ப மாற்றுக் கொண்டு பறக்கும். ஒரு விமானத்தைப் போல் இலக்கைச் சுற்றிப் பறந்து சரியான இடத்தைத் தெரிவு செய்து அதில் விழுந்து வெடிக்கும். அத்துடன் எல்லாவிதக் கால நிலைகளிலும் செயற்படக்கூடியவை.

நிர்பய் ஏவுகணைகள் அமெரிக்காவின் Tomahawk  ஏவுகணைகளுக்கும் பாக்கிஸ்த்தானின் பாபர் ஏவுகணைகளுக்கும் இந்தியாவின் பதிலடியாகும்.

Monday, 13 October 2014

செல்வி ஜெயலலிதா வெளியில் வருவதற்குச் செய்ய வேன்டியவை என்ன?

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் பதவில் இருக்கும் போது நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியும் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவராக செல்வி ஜெயலலிதா இருக்கிறார். அவர் இதில் இருந்து வெளியில் வர முடியுமா என்ற கேள்விக்கு விடை தேடும் போது  சாதியவாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்ய முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் சாதியவாதம் அப்படிப்பின்னிப் பிணைந்துள்ளது. மூதறிஞர் என திராவிட முன்னேற்றக் கழகத்தினரே போற்றிய ராஜகோபாலாச்சாரியாருக்குப் பின்னர் பார்ப்பனர்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்ல பார்ப்பனர்களால் அரசியலுக்குக் கொன்டுவரப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. துக்ளக் பத்திரிகையில் செல்வி ஜெயலலைதாவை ஓர் அரசியல் தொடர்கட்டுரை எழுதவைத்து அவரது அரசியல் நுழைவை ஆரம்பித்து வைத்தவர் சோ ராமசாமியாகும். முதலில் இந்திரா காங்கிரசிலும் பின்னர் எம் ஜீ இராமச்சந்திரனின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்து கொனடவர் செல்வி ஜெயலலிதா.

தோழியர் பிரிய வேண்டும்
அவர் தற்போது மாட்டியுள்ள சிக்கல்களில் இருந்து வெளியில் வருவதற்கு செய்ய வேன்டியவற்றில் முதலாவது சசிகலா குடும்பத்தினருடன் தனது தொடர்பைப் துண்டித்தல். செல்வி ஜெயலலிதாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் உள்ள உறவிற்குத் தடையாக இருப்பவர்கள் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே. இவர்களை பார்ப்பனர்கள் மன்னார்குடி மாஃபியா என அழைப்பர்.

பழி எங்கோ பவம் எங்கோ
சசிகலா குடும்பத்தினர் உடனான தொடர்புகளைத் துண்டிப்பது செல்வி ஜெயலலிதாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைக்கான தடையை தவிர்ப்பதுடன் செல்வி ஜெயலலிதாமீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை சசிகலா குடும்பத்தினர் தலைகள் மீது சுமத்தவும் வழி வகுக்கும். 1991ம் ஆண்டில் இருந்து 96ம் ஆண்டு வரை போயஸ் தோட்டத்தில் பணிபுரிந்த ஒருவரின் சாட்சியே செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான வலுவான சாட்சியாக அமைந்தது. இவரிடம் சசிகலா அடிக்கடி பல ரூபா நோட்டுக்களைக் கொண்டு போய் பல்வேறு வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் படி கொடுப்பாராம். சரியான அரசியல் சூழ்நிலையில் இந்தச் சாட்சியை சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகத் திருப்ப முடியும். 

அக்ரஹாரத்தில் மீண்டும் கள்ளப் பூனை
இரண்டாவதாக செல்வி ஜெயல்லைதா செய்ய வேண்டியது பார்ப்பனர்களுடன் தனது உறவை புதுப்பித்துக் கொள்ள வேன்டும். அதற்கு செல்வி ஜெயலலிதா காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். செல்வி ஜெயலலிதாவிற்கு பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது அவர் ஜெயேந்திரரை ஒரு தீபாவளி தினத்தன்று கைது செய்து சிறையிலடைத்தமையே. செல்வி ஜெயலலிதாவிற்கு எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வழங்கிய செவ்வியில் சுப்பிரமணியன் சுவாமி செல்வி ஜெயலலிதா ஜெயேந்திரருக்குச் செய்த பாவமே அவரைத் தண்டித்தது எனக் கூறியதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கிற்கு வழக்கு
சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். செல்வி ஜெயலலிதாவிற்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராற்றுக்கு பழிவாங்க செல்வி ஜெயலலிதா இக் கொலையைச் செய்தவர் சங்கராச்சாரி ஜெயேந்திரர் என்று அவரைக் கைது செய்தார் எனக் கருதப்படுகின்றது. செல்வி ஜெயலலிதாவின் மீது விஸ்வ ஹிந்து பரிஸத், சிவசேனா போன்ற பல இந்து அமைப்புக்கல் ஆத்திரம் அடைந்தி

 ஆட்சி மாறினால் சாட்சி மாறும்
ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கின்போது ஆட்சிகள் மாறும் போது சாட்சிகளும் மாறிக் கொண்டனர். முன்பு கூறிய சாட்சிகள் தவறானவை எனக் கூறி மீள் சாட்சியங்கள் வழங்கினர். இப்படித்தான் ஜெயேந்திரர் தனக்கு எதிரான சங்கர் மடம் கொலை வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார். சங்கர் மடத்தில் கொலை செய்யப்பட்டவரின் மகனே தனது சாட்சியை மாற்றிக் கொண்டனர். இன்றும் சோ ராமசாமி ஜெயலலிதாவின் மேல் மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் என்பது செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும்

அடங்கு மச்சி
மூன்றாவதாக ஜெயலலிதா செய்ய வேண்டியது பாரதிய ஜனதாக் கட்சிக்கு அடங்கிப் போவது. 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் செல்வி ஜெயலலிவின் அண்ணா திமுகாவுடன் ஒரு கூட்டணி அமைக்க பாரதிய ஜனதாக் கட்சி பெரிதும் விரும்பியிருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு நரேந்திர மோடி பயணம் செய்த போது அவரைச் சந்திக்கவே ஜெயலலிதா மறுத்து விட்டார். அவரது சோதிடர்கள் அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராகுவார் எனச் சொல்லியதை நம்பி செல்வி ஜெயலலிதா அதிக தன்னம்பிக்கையுடன் நடந்து கொண்டார். இந்த தலைமை அமைச்சர் கனவைப் புறந்தள்ளிவிட்டு அவர் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட வேண்டும். மாநிலங்களவையில் அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தலாம.


மீண்டும் காலை வாரவும்
நான்காவதாக செல்வி ஜெயலலிதா செய்ய வேண்டியது தமிழ்த் தேசியவாதத்தின் விரோதியாக மாற வேண்டும். அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டும். இது சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களைத் திருப்திப்படுத்தும்.

இந்த நான்கையும் செய்தால் செல்வி ஜெயலலிதா தனது தற்போதைய சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...