Monday, 21 July 2014

விழுந்தது விமானம்! விழுத்தியது யார்? வழிமாறிப் போனது ஏன்?

அண்மைக் காலங்களாக உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எடுப்பதற்கு பல ஆண்டுகளாக பல முயற்ச்சிகள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளன. ஆனால் தொடங்கி ஓராண்டு கூடப் பூர்த்தி செய்யாத உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தன? Malaysia Airlines Flight 17 விமானம் விழுந்த இடத்திற்கு பன்னாட்டு விசாரணைக் குழுவினர் செல்லவிடாமல் இரசிய சார்பினராகக் கருதப்படும் உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்கள் தடுத்தது ஏன்?

Malaysia Airlines Flight 17 மலேசிய நேரப்படி 2014 ஜூலை 17-ம் திகதி மாலை 6-15 மணிக்கு நெதர்லாந்தின் அம்ஸ்ரடம் விமான நிலையத்தில் இருந்து 283 பயணிகளுடனும் 15 பணியாளர்களுடனும் புறப்படுகின்றது.  நான்கு மணித்தியாலங்கள் கழித்து அந்த விமானம் உக்ரேனின் இரசியாவிற்கு அண்மித்த எல்லையில் பறந்து கொண்டிருக்கும் போது உக்ரேனிய விமானக் கட்டுப்பாட்டகம் Malaysia Airlines Flight 17உடனான தொடர்புகளை இழக்கின்றது. இத் தொடர்புத் துண்டிப்பு மலேசிய விமானச் சேவைக்கு அறிவிக்கப் படுகின்றது. இரவு 11-40இற்கு Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக  இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் இருந்து  செயற்படும் Interfax செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகின்றது

Malaysia Airlines Flight 17விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது தொடர்பான சர்ச்சை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட மறுநாளே ஆரம்பித்து விட்டது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியத்தில் இரசியர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை Self-defence forces of the Donetsk People’s Republic என அழைப்பார்கள். இவர்களுக்கு இரசிய அரசின் ஆதரவு உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியதுடன் இணைந்து செயற்படாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என உக்ரேனை இரசியா நிர்பந்தித்து வருகின்றது. இதனால் உக்ரேனில் வாழும் இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். ஏற்கனவே உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. Malaysia Airlines Flight 17விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியம் உக்ரேன் அரசுக்கு  எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே உக்ரேனிய அரச படையினரின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி உள்ளனர். உக்ரேனிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய அரச படைகள் எந்த ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வீசியதில்லை.

உக்ரேன் உள்நாட்டுப் போர் பற்றி மேலும் ஆறிய கீழே சொடுக்கவும்:
1- உக்ரேன் தேர்தல்
2. உக்ரேன் அதிபர்

விமானம் சுட்டுவீழ்த்தப் பட்ட இடத்திற்கு முதலில் எவரையும் அனுமதிக்காத இரசியக் கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து இறந்த உடல்கலையும் பல தடயங்களையும் அப்புறப்படுத்தினர். விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கையளிப்பதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. அது இரசியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் பரவிய பின்னர் அது விசாரிக்க வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டது. விமானம் சுட்டு வீழ்த்தியது தொடர்பான ஒரு விசாரணைக்காக உக்ரேனிய அரச படையினருக்கும் Self-defence forces of the Donetsk People’s Republic படைய்னருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, ஆனால் அது நடைபெறவில்லை. பன்னாட்டு விசாரணைக் குழு ஒன்றிற்கு உக்ரேனில் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் இருக்கும் பிரதேசத்தில் விமானம் விழுந்த இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
British Airways உக்ரேன் ஊடாகப் பறப்பதைத் தவிர்த்து வருகின்றது.

மலேசியன் விமானங்கள் உக்ரேனூடாகப் பறப்பதை ஏன் தவிர்க்கவில்லை?

வழிதவறிப் போனது ஏன்?
Malaysia Airlines Flight 17 விமானம் உக்ரேனின் தென் பகுதியூடாகப் பறப்பதாக இருந்தது. ஆனால் அது ஏன் வழிமாறி உக்ரேனின் வட கிழக்குப் பகுதிக்கு மேலால் பறந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. சில வல்லரசு நாடுகள் பயணிகள் விமானங்களில் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி அந்த விமானங்களை வழிதவறிச் செல்வது போல் பிரச்சனைக்கு உரிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கு மேலாகப் பறக்கச் செய்வார்கள். Malaysia Airlines Flight 17 விமானத்திற்கும் இப்படி நடந்ததா? ஆனால் ஐரோப்பிய விமான ஓட்டிகளின் ஒன்றியத்தின் (European Cockpit Association) தலைவர் தான் இதே காலப்பகுதிகளில் உக்ரேனூடாகப் பறக்கும் போது மோசமான கால நிலை காரணமாக தானும் KLM விமானங்களை வழமையான பாதையில் இருந்து வடக்குப் பக்கமாக விலகிப் பறந்ததுண்டு என்கின்றார்.

காட்டிக் கொடுக்கும் சமூக வலைத்தளப் பதிவு
Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் பின்னர் இரசியாவின் ஆதரவுடன் செயற்படும் உக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்காரர்களின் தலைவர்களில் ஒருவர் தாம் உக்ரேனிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகப் ஒரு பதிவு இட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவை அழித்து விட்டார்.

காட்டிக் கொடுக்கும் படங்கள்
மலேசிய விமானத்தைச் சுட்டதாகக் கருதப்படும் Buk SA-11 launcher என்னும் நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவுகணைகளை ஏவும் வண்டிகள் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் பகுதியின் நின்ற படங்களும் பின்னர் அவை இரசியாவிற்கு மாற்றப்பட்டு நிற்கும் படங்களும் வெளிவந்துள்ளன.

உக்ரேனிய அரசின் ஒலிப்பதிவு
உக்ரேனிய அரசுக்கு எதிராகச் செயற்படும் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் உரையாடல்களை தாம் இடைமறித்து ஒட்டுக் கேட்ட போது அவர்கள் ஒரு பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரையாடியதாக உக்ரேனிய அரசு சொல்கின்றது. உக்ரேனிய அரசு வெளிவிட்ட உரையாடல் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கின்றது:
"We have just shot down a plane. It's 100 percent a passenger aircraft It's totally f****d. The pieces are falling right into yards. There are no weapons on the site. Absolutely nothing. Civilian items, medicinal stuff, towels, toilet paper."

செய்மதிப்படங்கள்
ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்மதிப் படங்களில் விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து தரையில் இருந்து விண்ணை நோக்கி ஏவுகணைகள் புகை கக்கிக் கொண்டு பாய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரிக்கப் போனவர்கள் அமெரிக்கக் கைப்பொம்மைகளாம்.
உக்ரேனில் மலேசிய விமானம் விழுந்த பகுதிக்கு விசாரிக்கச் சென்ற  Organization for Security and Cooperation in Europe (OSCE) அமைப்பினர் அமெர்க்காவின் கைப்பொம்மைகள் என்கின்றனர் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள்.

இரசியாவிற்குப் பின்னடைவு
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டமை உக்ரேனை தன்வசமாக்கும் இரசியாவின் முயற்ச்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்கின்றன மேற்கு நாட்டு ஊடகங்கள். 1983-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தென் கொரியாவின் பயணிகள் விமானத்தைச் சுட்டு விழுத்திய பின்னர் சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வீழ்ச்சியடைந்தது. அது போல இப்போது இரசியாவிற்கும் நடக்கும் என்கின்றன சில ஊடகங்கள். தென் கொரிய Korean Airlines Boeing 747  விமானத்தைச் சட்டு விழ்த்தியதை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மிருகத்தனமான செயல் எனக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தால் கண்டித்தார். "It was an act of barbarism, born of a society which wantonly disregards individual rights and value of human life and seeks constantly to expand and dominate other nations." என்பது அவர் பாவித்த வார்த்தை. அப்போது சோவியத் ஒன்றியம் தாம் அனுப்பிய சமிக்ஞைகளை தென் கொரிய விமானம் புறக்கணித்ததாகச் சொன்னது. பின்னர் அது பொய் என நிரூபணமானது.

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை. 
ஏற்கனவே கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் இரசியாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதராத் தடையை விதித்திருந்தன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டததைத் தொடர்ந்து மேலும் பொருளாதாரத் த்டைகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இனிவரும் பொருளாதாரத் தடை ஆசியான் நாடுகளையும் இணைத்துக் கொண்டு செய்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு.  தற்போது உலகிற்குத் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதாரத் தடைகள் உகந்தவை அல்ல.

Friday, 11 July 2014

பிரெஞ்சு அமெரிக்கப் பிணக்கும் டொலருக்கு வைக்கப்படும் ஆப்பும்

அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த சூடான், கியூபா, ஈரான் ஆகிய நாடுகளுடன் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக பிரெஞ்சு வங்கியான BNP Paribas மீது அமெரிக்க நிதித்துறை அதிகார சபை வழக்குத் தொடர்ந்தது. இக்குற்றச் சாட்டை BNP Paribas ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு ஒன்பது பில்லியன் (90 கோடி) அமெரிக்க டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டது.

இது பிரன்ஸிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகலை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இரசியக் கடற்படைக்கு நான்கு உழங்கு வானூர்தி தாங்கிக் கப்பலைகளை நிர்மாணிக்க பிரான்ஸ் ஒத்துக் கொண்டிருந்தது. இவை நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடியன. இவற்றில் உழங்கு வானூர்திகள் இறங்கவும் இவற்றில் இருந்து பறத்து செல்லவும் முடியும். துருப்புக் காவியாகவும் மிதக்கும் மருத்துவ மனையாகவும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்த முடியும். இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து இந்த உழங்கு வானூர்தி தாங்கி ஈரூடகக் கப்பல்களை இரசியாவிற்கு வழங்குவதை ஒத்தி வைக்குமாறு அமெரிக்கா பிரான்ஸிடம் வலியுறுத்தியது. ஆனால் இது 2011-ம் ஆண்டு ஒத்துக் கொண்ட ஒப்பத்தம் என்றபடியால் பிரான்ஸ் அதற்கு மறுத்துவிட்டது. இந்தக் கப்பல் விற்பனை மூலம் மேற்கு நாட்டுத் தொழில்நுட்பத்தை இரசியா பெற்றுக் கொள்ளும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கப்பல் நிர்மாணத்திற்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைதான் அமெரிக்கா பிரெஞ்சு வங்கி மீது விதித்த அபராதம் என்கின்றன இரசிய ஊடகங்கள்.  2014 ஜூன் 30-ம் திகதி நானூறு இரசியக் கடற்படையினர் பிரான்ஸ் சென்று இக்கப்பல்களை இயக்குவதற்கான பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.

2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் திகதி பிரெஞ்சு நி்தியமைச்சர் மைக்கேல் சப்பின் உலக வர்த்தகங்களுக்கான கொடுப்பனவு நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை விடுத்து அது பல நாட்டு நாணயங்களை உள்ளடக்கியாதாக இருக்க வேண்டும் என்று ஒரு குண்டைப் போட்டார். மேலும் அவர் இந்த உலகக் கொடுப்பனவு நாணயமாக வளரும் நாடுகளின் நாணயங்களும் உள்ளடக்கப் படவேண்டும் எனவும் தெரிவித்தார். சீன நாணயத்தை மனதில் கொண்டே பிரெஞ்சு நிதியமைச்சர் இப்படித் தெரிவித்தார். ஏற்கனவே பல நாடுகள் டொலர் உலக நாணயமாக இருப்பதை விரும்பவில்லை.  தற்போது உலக நாடுகளின் பெரும்பான்மையான மைய வங்கிகள் தமது நாணயக் காப்பிருப்பை (currency reserve) அமெரிக்க டொலரிலேயே வைத்திருக்கின்றன. இரசியா, சீனா ஆகிய நாடுகள்  டொலர் உலக நாணயமாக இருப்பதற்கு எதிராகப் பலதடவை கருத்துத் தெரிவித்துள்ளன. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தை வைத்துள்ளது. 2008-ம் ஆண்டின் பின்னர் 17 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயமான யூரோ பல நெருக்கடிகளைச் சந்தித்தது. இப்போது அது தனது பிரச்சனைகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரம் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரமாகும்.. இந்த நாடுகள் பொருளாதாரம் மேம்பட்டால் அமெரிக்காவின் உலகப் பொருளாதார ஆதிக்கத்திற்கு அது  சவாலாக அமையலாம்.

உலக நாணயமாகப் பலநாடுகளின் நாணயங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற பிரெஞ்சு நி்தியமைச்சர் மைக்கேல் சப்பின் முன் மொழிவிற்கு பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பேராதரவி தெரிவித்துள்ளன.

தற்போது உலக நாணயமாக இருக்கும் அமெரிக்க டொலரை அதன் நிலையில் இருந்து அகற்றினால் டொலர் தனது பெறுமதியைப் பெருமளவு இழக்க வேண்டிவரும். அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் உடனடியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  அமெரிக்காவில் பெரும் பணவிக்க்கம், வட்டி வீத அதிகரிப்பு போன்றவை ஏற்படலாம்.

ஜேர்மன் அதிபர் அஞ்செலா மாக்கெல்லை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்ததால் ஜேர்மானியர்கள் ஆத்திரப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸுடன் நெருக்கமாக இணைந்து செயற்படும் ஜேர்மனியும் டொலருக்கு எதிரான நடவடிக்கையில் இணையலாம். யூரோ நாணயத்தை உலக நாணயமாக மாற்ற வேண்டும் என்பது ஜேர்மனியின் நீண்டகாலத் திட்டமாகும்.

Wednesday, 9 July 2014

இரசியாவைப் புட்டீன் எங்கு கொண்டு செல்கின்றார்?

இரசிய மக்களிடையே உள்ள பல தேசியவாதிகள் இரசியா மீண்டும் உலக அரங்கில் முன்னணி வகிக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். இவர்களில் பலர் தமது விருப்பத்தை அதிபர் விளடிமீர் புட்டீன் நிறைவேற்றுவார் என நினைக்கிறார்கள். இவர்களில் பலர் உலக அரங்கில் அமெரிக்கா செலுத்தும் ஆதிக்கத்தை வெறுக்கிறார்கள். 73 விழுக்காடு இரசியர்கள் இரசியா உலக அரங்கில் போதிய அளவு மதிக்கப்படுவதில்லை என நினைக்கின்றார்கள். 72 விழுக்காடு மக்கள் விளடிமீர் புட்டீனில் மரியாதை வைத்துள்ளார்கள். இரசியாவில் நடக்கும் ஊழல் நிறைந்த ஆட்சியையும் ஒரு சில பணமுதலைகளின் ஆதிக்கத்தையும் பலர் நன்கு அறிவர்.

ஏற்கனவே சிரியாவிலும் உக்ரேனிலும் தனது கைவரிசையைக் காட்டிய இரசியா இப்போது ஈராக்கிலும் தனது வலுவை நிரூபிக்க முயல்கின்றது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து செயற்படும் சியா முசுலிம்களின் அரசு ஆட்டக் கண்டு கொண்டிருக்கையில் ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌரி அல் மலிக்கி ஐக்கிய அமெரிக்காவிடம் கேட்ட உதவி கிடைக்காமையினால் இரசியாவின் பக்கம் திரும்பினார். தீவிரவாதக் குழுக்களை அடக்க விமானத் தாக்குதல் பெரிதும் பயன்படும். இதற்காக அல் மலிக்கி கேட்ட விமானங்களை உடன் வழங்க இரசிய அதிபர் புட்டீ ஒத்துக் கொண்டார்.

ஈராக்கியத் தலைமை அமைச்சர் அல் மலிக்கி கேட்ட உதவிகளை எப்படி நிறைவேற்றுவது என்று வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் பராக் ஒபாமா ஆலோசித்துக் கொண்டிருக்கையில் இரசியாவின் ஐந்து எஸ்யூ-25 போர் விமானங்கள் விமானிகளுடன் ஈராக் போய்ச் சேர்ந்து விட்டது. இரசியா உடனடியாக  இரசியா எம்.ஐ-28, எம்.ஐ-35, உழங்கு வானூர்திகளையும் ஈராக்கிற்கு அனுப்பவிருக்கிறது. இரசிய விமானிகள் எஸ்யூ-25  விமானங்களை ஓட்ட மாட்டார்கள் என்று இரசியா தெரிவித்தமை நம்பக்கூடியதாக இல்லை. இரசியாவின்  எஸ்யூ-25 போர் விமானங்களை ஓட்டக் கூடிய விமானிகள் எவரும் ஈராக்கில் இல்லை. இப்படிப்பட்ட போர் விமானங்களை ஈராக்கிய விமானப் படையினர் 2003-ம் ஆண்டின் பின்னர் பாவித்தது இல்லை. சதாம் ஹுசேயின் விமானப்படையினர் பாத் கட்சியினர் என்பதால் அவர்கள் இப்போது ஈராக்கிய விமானப் படையில் இல்ல்லை. பலர் எதிரணியில் சுனி இசுலாமியப் போராளிகளான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் அவர்கள் இணைந்து இருக்கின்றார்கள். புதிதாக  எஸ்யூ போர் விமானங்களை ஓட்டுவதற்கு பயிற்ச்சியளிக்க பல மாதங்கள் எடுக்கும். இதனால் இரசிய விமானிகளே ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் மீதும் அவர்களினது நிலைகள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும். ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆளில்லாப் போர் விமானங்கள் பறந்து உளவுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் இரசியப் போர் விமானங்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்க் வேண்டும். உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து இரசியாவுடனான எல்லாவகையான படைத்துறைத் தொடர்புகளையும் அமெரிக்கா துண்டித்து விட்டது. அமெரிக்கப் படைத்துறையின் நிபுணர்கள் முன்னூறு பேர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

ஜூன் மாதக் கடைசிவாரம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் தொலைபேசியில் உரையாடினார்கள். அது பெரும்பாலும் உக்ரேனை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஈராக் தொடர்பாக விரிவான உரையாடல் நடக்கவுமில்லை. இதனால் ஈராக் தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் ஒருமித்த கருத்தில் இல்லை. ஈராக்கிற்கு இரசியா தனது போர் விமானங்களையும் விமானிகளையும் அனுப்பியது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ஒருவர் இரசியாவின் நகர்வு கரிசனைக்கு உரியது ஆனால் கலவரமடைய வேண்டிய ஒன்றல்ல என்றார்.  அமெரிக்கா அனுப்பவிருக்கும் F-16 போர் விமானங்களும் அபாச்சே ரக உழங்கு வானூர்திகளும் ஈராக்கிற்குப் போய்ச் சேர இன்னும் சில நாட்கள் எடுக்கலாம்.

ஈராக்கில் பராக் ஒபாமா கவனமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் விளடிமீன் புட்டீன் அதிரடியாகக் களத்தில் இறக்கியமை உலக அரசியலில் ஒரு சிந்தனையைத் தூண்டும் நிகழ்வாக அமைந்தது. ஈராக்கிற்கு விமானங்களை விமானிகளுடன் அனுப்பியமை இரசியாவிற்கு எந்தவிதக் கேந்திரோபாய நன்மைகளையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகிற்கு ஒரு செய்தியை அங்கு சொல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. அதாவது யாராவது உதவி என்று கேட்டால் இரசியா அதைத் துணிந்து செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றது என புட்டீன் உலகிற்கு உணர்த்த வருகின்றார். அவர் இரசியாவை இப்போது இருக்கும் நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாற்ற முயல்கின்றார். 1984-ம் ஆண்டு மிக்கேல் கோர்பச்சேவ் ஆரம்பித்து வைத்த "சீர்திருத்தம்" இரசியாவை திசை மாற்றிவிட்டது.

இரசியாவிற்கு ஒரு புது முகவரி தேவை
உலகை ஆள முயன்ற ஜேர்மனியர்கள் போரில் தோற்ற பின்னர் மற்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து இப்போது உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பது போல் பனிப்போரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏன் இரசியாவால் அப்படி ஒரு நிலையை எடுக்க முடியாது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 1917-ம் ஆண்டு ஜார் மன்னரின் ஆட்சியை ஒழித்து லெனின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்னும் இடைக்கால அரசை உருவாக்க முயன்றார். அவர் மறைவிற்க்குப் பின்னர் 1924-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜோசப் ஸ்டாலின் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை பட்டினி ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திண்டாடினார். விவசாயிகள் மீது கடும் அடக்கு முறையைப் பிரயோகித்தார். பல விவசாயிகளைக் கொன்றார். அவரது ஆட்சியில் சோவியத் மக்கள் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். சோவியத்தின் உளவுத் துறையை உள்நாட்டிலும் வெளிநாடுகாளிலும் விரிவுபடுத்தினார். பொதுவுடமைக் கட்சியில் ஸ்டாலினிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த நிக்கிட்டா குருசேவ் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் பொதுவுடமைக் கட்சி முன்னணி உறுப்பினர்களை தண்ணியில்லாக் காடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பினார். குருசேவ் இரசியாவை தொழில்நுட்பத்தில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். ஸ்டாலினைப் போல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல் குருசேவ் முக்கிய முடிவுகளை பொதுவுடமைக்கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் கலந்துரையாடி எடுத்தார். இருந்தும் கியூபாவில் அணுக்குண்டு தாங்கிய ஏவுகணைகளைக் குவித்தவமையை தானாகவே முடிவு செய்தார். ஆனால் அவர் புத்திசாலித்தனமாக நிலைமையைக் கையாண்டு துருக்கியில் அமெரிக்கா வைத்திருந்த அணுக் குண்டுகளை அகற்றச் செய்து கியூபாவில் இருந்த இரசிய அணுக் குண்டுகளையும் அகற்றினார். தொடர்ந்து வந்த பிரெஸ்னேவ் இரசியாவையும் சோவியத்தையும் உலகில் படைத்துறையில் முதல்தர நாடாக்கினார். படைத்துறைக்கு அரச வருமானத்தில் பெரும்பகுதி செலவு செய்யப்பட்டதால் இரசியா பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. பின்னர் வந்த மிக்கேல் கோர்பச்சேவிற்கு பொருளாதாரப் பிரச்சனை பெரும் பிரச்சனையானது. இரசியப் பொருளாதாரத்தையும் ஆட்சி முறைமையிலும் சீர் திருத்தம் செய்யக் கோர்பச்சேவ் முயன்றார். அது நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்ட கதையானது.  சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் ஒன்றாக இருந்த நாடுகள் 1991-ம் ஆண்டு உடைந்து 15 நாடுகள் ஆகப் பிளவடைந்தன. பின்னர் 1998-ம் ஆண்டு இரசியா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதன்பின்னர் இரசியாவை மேற்கு நாடுகள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என விளடிமீர் புட்டீன் கருதினார். இரசியாவை மீண்டும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த வைப்பது அவரது தலையாய குறிக்கோளானது.
பெரு வல்லரசு நிலையை இழந்த இரசியா
1991-ம் ஆண்டின் பின்னர் இரசியா தனது பெருவல்லரசு என்ற நிலையை இழந்து விட்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  கிறிமியப் பிரச்சனையின் போது இரசியாவை ஒரு பிராந்திய வல்லரசு என்று குறிப்பிட்டார். பெரு வல்லரசு என்பது படைவலு மட்டுமல்ல அதன் நட்பு நாடுகளையும் பொறுத்தது. முன்னாள் இரசியா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பான வார்சோ ஒப்பந்த நாடுகள் தமது ஒப்பந்தத்தை 1991-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டன. பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் வார்சோ ஒப்பந்த நாடுகளும் இரசியாவிற்கு எதிராகத் திரும்பி நேட்டோ ஒப்பந்த நாடுகளுடன் இணைந்ததைத் தொடர்ந்து இரசியா தனது உலகப் பெருவல்லரசு என்ற நிலையை இழந்துவிட்டது. உலக அரங்கில் அதன் ஆதிக்கமும் குறைந்து விட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இரத்து அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்புரிமையும் கைவசமுள்ள அணுக் குண்டுகளும் இன்னும் இரசியாவை ஒரு வல்லரசாக வைத்திருகின்றது.

புட்டீனின் இரசியா
2000-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை இரசியாவின் அதிபராகவும் பின்னர் நான்கு ஆண்டுகள் இரசியாவின் தலைமை அமைச்சராகவும், 2012-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை மீண்டும் இரசியாவின் அதிபராகவும் கடமையாற்றும் முன்னாள் இரசிய உளவுத் துறை அதிபரான விளடிமீர் புட்டீன் இரசியாவை மீண்டும் உலக அரங்கில் முன்னிலைப்படுத்த முயல்கின்றார். இப்போது இரசியா ஒரு சில பண முதலைகளின் கைகளில் இருக்கின்றது. விளடிமீர் புட்டீனும் ஒரு பணமுதலை ஆவார். அவரது மொத்தச் சொத்து மதிப்பு எழுபது பில்லியன் (எழு நூறு கோடி) அமெரிக்க டொலர்களிலும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் எழுபத்தி ஒன்பது பில்லியன் டொலர் சொத்துக் கொண்ட உலகின் முன்னணிச் செல்வந்தரான பில் கேட்சின்  இணையானவர் எனக் கருதப்படுகின்றார். ஆனால் இரசியப் பொருளாதாரம் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றது. இரசியா கிறிமியாவை தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை புட்டீனின் செல்வத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் புட்டீன் இரசியப் பாராளமன்றம் தனக்கு வழங்கிய உக்ரேனில் படையெடுக்கும் அதிகாரத்தைத் திரும்பப் பெறச் செய்தார். ஆனாலும் அவர் உக்ரேனை விட்டு வைப்பதாக இல்லை. இரசியாவில் இருந்து இரகசியமாகப் படையினர் உக்ரேனுக்குள் எல்லை தாண்டிச் செல்வது தொடர்கின்றது.

ஒதுங்க நினைக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் பொருளாதார வலுவும் படைவலுவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நட்புறவும் அதனை இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக வைத்துக் கொண்டிருக்கின்றது. 2008ம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காண அதன் பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேன்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்கா எந்த ஒரு நாட்டுக்கும் படை அனுப்பி போர் செய்வதை இப்போது விரும்பவில்லை. இதை விளடிமீர் புட்டீன் ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றார்.

புட்டீனின் முதல் நகர்வு
ஈரக்கில் அமெரிக்கப் படை எடுப்பு, லிபியாவில் மும்மர் கடாஃபியைப் பதவியில் இருந்து நீக்கியமை ஆகியவற்றை அமெரிக்கா செய்தபோது இரசியா வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையை இரசியா எதிர்க்கவில்லை. உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை புட்டீன் முதல் தடவையாக சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்த போது அரங்கேற்றினார். அமெரிக்காவை சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கை எடுக்காமல் தடுத்தார். இதற்கு அவர் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை வரை தனது கைவரிசையைக் காட்டினார். அதைத் தொடந்து உக்ரேனிலும் தற்போது ஈராக்கிலும் இரசியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துகின்றார்.

Friday, 4 July 2014

ஜூலை ஐந்தின் முத்துக்களே

சிறு கூட்டுக் குருவிக்கும்
சிறகடிக்க ஆசை
ஒரு கூட்டுப் புழுவிற்கும்
சிறை உடைக்க ஆசை
எம் ஈழத் தமிழர்க்கும்
விடுதலை வேட்கை எனத்
திரியாகிக் கரியாகிப் போனீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே 

குண்டு மழையிடை 
கந்தகம் சந்தணமாக 
வெந்தகம் நீறாக 
தாயத்தாகம் தாரகமாக 
தாராள மனத்துடன் - நாம் 
பாராள வேண்டி நின்றீரே 
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே 

பெற்றவரைப் பிரிந்து
உற்றவரை மறந்து
மற்றவர் விடியலுக்காய்
கதிரோடு புதிரானீர்
உம் விதியை உம் கையிலெடுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

நன்னுடல் பொடிப்பட
செம்புலப் புயநீரென
செந்நீர் நிலம்புணர
பொன்னுடல் உருகிட
புகழுடல் பெற்றீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

படர் துயர் துடைக்க
இடர்கள் பல நீக்க
நெல்லியடியில் நேர்த்தியாய்
நேற்று நீர் அடித்தீர்
பெரும்படை தகர்த்தீர்
எதிரியின் நம்பிக்கை பொடியாக்கினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

நாடெங்கும் எதிரிகளஞ்சினர்
பாரெங்கும் பலரும் வியந்தனர்
வலுவிலா இனத்தின் விலாவானீர்
புது நிலை கொடுத்தீர் 
புது வகை வகுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

களமுனைச் சமநிலை சிதறடித்தீர் 
உடலால் ஊடறுத்தீர்
கடலால் வழி தடுத்தீர்
ஈழக்காதலால் இரையானீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

நங்கையர் கொங்கை அரியும்
கொடுங்கையர் சிரம் கொய்ய
தியாகத்தின் உச்சத்தில்
ஒளிரும் தீபமாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

படை நகர்த்தல் பல தடுத்தீர்
படைக்கலன்கள் பறித்தெடுத்தீர்
ஆழ்கடலில் நீள் கலனகள் மூழ்கடித்தீர்
மண் மீட்க மானம் காக்க இரையாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

விடுதலைக்கு எனக் கருவாகி
விடுதலை வேள்வியில் கரியாகி
விடு தமிழர் தலை என வித்தாகிப்
போன கருவேங்கைகளே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

ஆட்காட்டிக் குருவிகள் ஆங்கே
அதிகரித்துப் போனதனால்
சிட்டுக்குருவிகள் இங்கே
சுடலைக் குருவிகளாயின
ஞானியர் பொய்யுடன் என்றதைப்
பொய்யாக்கி உம்முடலை
மெய்யுடலாக்கி
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

இன்னும் பகை ஒளியவில்லை
இன்னும் துயர் தீரவில்லை
மீண்டும் எம் மண் வருவீர்
கதிர் ஒளியோடு ஒன்றாக
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
மீண்டும் தாய் மண் வருவீர் வருவீர்

Sunday, 29 June 2014

அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Close-in Weapon Systems

ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் அமெரிக்காவிற்கு சீனாவிற்கு இடையில் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் படைவலுப் போட்டியின் ஓர் அம்சமாகும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறை முந்தியவையாகும். அமெரிக்காவின் வலிமை மிக்க கடற்படையைச் சமாளிக்க சீனா பலவழிகளின் முயல்கின்றது.

முதலாவதாக சீனா தனது நீர்முழ்கிக் கப்பல்களை அதிநவினப்படுத்தி வருகின்றது. சீனாவின் நீர்முழ்கிக் கப்பல்களின் தரம் வலு ஆகியவை படு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது.

இரண்டாவதாக சீனா அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை முடக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளது. அத்துடன் இணையவெளியில் ஊடுருவி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை அழிக்கும் வலிமையும் சீனாவிடம் உண்டு.

மூன்றாவதாக நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோர்ப்பீடோக் குண்டுகளை சீனா மேம்படுத்தி வருகின்றது.

நான்காவதாக அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றது. இவை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் எனப்படும்

இவற்றில் சீனாவின் நான்காவது ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய ஏவுகணைகள் அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. சீனா தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது.
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதே வேளை அமெரிக்கா 2008-ம் ஆண்டின் பின்னர் தனது பொருளாதாரப் பிரச்சனைகளால் தன் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் தமது படையின் திறனை குறைந்த செலவில் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்

சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய WU-14 ஏவுகணைகள் சீனா தனது கடற்படையை அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி உயர்த்தி விட்டதாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் பாதுகாப்புத் துறைக் குழு அறிவித்தது.

சீனாவின் WU-14  ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems
அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று அழைக்கப்படுகின்றது.  இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப்படுகின்றது.


லேசர் மூலம் அழிக்கும் முறைமை 

உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும்
infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆகியவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும்

அமெரிக்கக் கடற்படையின் மற்ற எல்லாப் பாதுகாப்பு முறைமைகளையும் முறியடித்துக் கொண்டு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க வரும் ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளையும் பறந்து வரும் விமானங்களையும் அமெரிக்கா தற்போது உருவாக்கும் Phalanx பாதுகாப்பு முறைமை தனது லேசர் கதிர்களால் கருக்கி அழிக்கும்.

Sunday, 22 June 2014

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் திருகுபடும் துருக்கி

துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.

ஒரு இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்து மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினது உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. துருக்கி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தனது உறவை சமநிலையில் வைத்திருக்கப் பெரும் பாடு படுகின்றது. ஈரானியர்கள் விசா நடைமுறையின்றிப் பயணிக்கக் கூடிய ஒரே ஒரு நாடு துருக்கியாகும். இதைப் பயன்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் பிரதான தளமாக துருக்கியைப் பயன்படுத்துகிறது. சிஐஏயின் உளவாளி ஒருவர் துருக்கியின் இஸ்த்தான்புல் விமான நிலையத்தில் எட்டு ஈரானியப் போலிக் கடவுட்சீட்டுகளுடன் பிடிபட்டதன் பின்னர் அமெரிக்கா துருக்கியை ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைத் தளமாகப் பயன்படுத்துவது அம்பலமாகியது. இது அமெரிக்க துருக்கி உறவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிராக நேட்டோ கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா துருக்கியை ஏமாற்றி விட்டது.


துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பல முனைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றி அங்கு சுனி முசுலிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என துருக்கி விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா அசாத்தின் ஆட்சிக்கு மாற்றீடாக வரும் சுனி முசுலிம்களின் ஆட்சி ஒரு மதவாத ஆட்சியாக அமையும் என்றும் மற்ற இனக்குழுமங்களான அலவைற், குர்திஷ் ஆகிய இனங்களுக்கும் கிரிஸ்த்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் என்றும் அமெரிக்கா அஞ்சுகின்றது. துருக்கி சிரியக் கிளர்ச்சி இயங்கங்களில் தீவிர மதவாதப் போக்குடைய அல் நஸ்ராவிற்கு உதவி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை.

சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களிற்கு துருக்கி உதவி செய்வதால் சிரியப் படைகள் தம்மிடமுள்ள வலுமிக்க இரசிய ஏவுகணைகளால் துருக்கி மீது தாக்குதல் நடாத்தலாம் என்ற அச்சம் துருக்கிய மக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டுகின்றது. இதைத் தவிர்க்க துருக்கி சீனாவிடமிருந்து அதன் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நான்கு பில்லிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முற்பட்டது. இது அமெரிக்க படைக்கல விற்பனையாளர்களை ஆத்திரப்படுத்தியது. துருக்கிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வழங்க அமெரிக்காவின் ரத்தியோன் (Raytheon) லொக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆகிய நிறுவனங்களும் பிரேஞ்சு இத்தாலிய கூட்டு நிறுவனமான யூரோசமும் (Eurosam), இரசியாவின் ரொசோபொரொன் ஆகிய நிறுவனங்கள் சீனாவின் Precision Machinery Export-Import Corporation நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தோற்றுவிட்டன. சீனாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மலிவாக இருக்கின்றது என்கின்றது துருக்கி. அமெரிக்கப் பாராளமன்றம் துருக்கிக்கு அமெரிக்கா வழங்கும் நிது உதவியை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே மற்ற நேட்டோ நாடுகள் பாவிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் துருக்கி சீனாவிடம் இருந்து வாங்க முயலும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் இணைக்கக் கூடாது என நேட்டோ நாடுகள் சொல்கின்றன. அப்படி இணைக்கும் போது சீனா நேட்டோ நாடுகளின் படைத்துறை இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடி விடும் என அவை அச்சம் வெளியிட்டுள்ளன. நேட்டோவின் பொதுச் செயலர் நேட்டோவின் உறுப்பு நாடுகள் பாவிக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படக் கூடியவையாக இருத்தல் அவசியம் எனச் சொல்லியுள்ளார்.

சீனாவில் வாழும் துருக்கிய வம்சாவழியினரும் சீனர்களும் மோதல்
2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக் கூடாது, மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.

தீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும்  சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட  முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.

சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.

2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான  காரணங்கள்:
1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.  2.  உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.  3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது ம். 4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள். இவற்றுடன் இன்னும் ஒரு உலக அரசியல்-வர்த்தகக் காரணமும் உண்டு.

சீனாவில் துருக்கியரக்ளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக துருக்கியில் பரப்புரை செய்யப்பட்டு துருக்கி சீனாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இது சீனாவில் நடக்கும் சீனர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையிலான மோதல் வெளியில் இருந்து தூண்டப்படுகின்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்புரிமை கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றது. இதானால் துருக்கி பிரேசில், இரசியா, சீனா, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான பிரிக்ஸில் இணைவது பற்றி ஆலோசித்து வருகின்றது. அத்துடன துருக்கி சீனா, இரசியா, கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெஸ்கித்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாகவும் ஆலோசிக்கின்றது.

ஏற்கனவே மெக்சிக்கோ, இந்தோனேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் துருக்கியும் இணைந்து மின்ற்(MINT) என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. சீனா ஈரானையும் துருக்கியையும் தன்னுடன் இணைத்து ஒரு மத்திய தரைக்கடல் சுழற்ச்சி மையத்தை உருவாக்க முயல்கின்றது.
இப்படிப்பட்ட உலக அரசியல், பொருளாதார, படைத்துறைக் காரணிகள் அண்மைக்காலங்களாக துருக்கி அரசுக்கு எதிராக ஒரு மக்கள் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு துருக்கிய ஆட்சியாளர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. சீனாவுடன் துருக்கியின் உறவும் வர்த்தகமும் வளர துருக்கியில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் வளரும்.

டோ(ர்)ப்பீடோ (Torpedo)என்னும் தன்னுந்துக் குண்டுகள்

டோ(ர்)ப்பீடோ என்னும் தன்னுந்துக் குண்டுகள் நீருக்கடியில் எதிரி இலக்குகள் மீது வீசப்படுபவை. இவை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் கடற்படைக்கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு விமானங்களில் இருந்து நீரில் அல்லது நீருக்குள் இருக்கும் இலக்குகள் மீது ஏவப்படும் குண்டுகளாகும். பொதுவாக நீருக்கடியில் 2,500 அடிகள் அதாவது  760 மீற்றர் ஆழத்தில் மணிக்கு நாற்பது முதல் ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் இயங்கக் கூடியவை. இவற்றின் தாக்கு தூரம் ஒரு மைல் முதல் பத்து மைல்கள்வரையானதாகும். டோ(ர்)ப்பீடோ என்னும் பெயர் ஒருவகை மீனினத்தின் பெயரில் இருந்து வந்தது. டோ(ர்)ப்பீடோ என்னும் மீனினங்கள் ஆபிரிக்காவின் மேற்கு மற்றும் வடக்குக் கரையோரக் கடலில் வாழும் ஒருவகை மீனாகும். இவை மின்சாரம் பாய்ச்சக் கூடியவை. டோ(ர்)ப்பீடோவின் எடையை ஒட்டி heavy weight என்றும் light weightஎன்றும் இரு வகைப்படுத்தப்படும்.

பொதுவாக ஏவுகணைகள்  rocket engines அல்லது  jet engines இலில் வேலை செய்ய்யும். ஆனால் நீருக்கடியில் இவை இரண்டும் வேலை செய்யாது. இதனால்  டோ(ர்)ப்பீடோக்கள் வேறு இருவகையான முறையில் இயக்கப்படுகின்றன:

1. Batteries and an electric motor மூலமாக இயங்கச் செய்யப்படும். இவை இலகுவாக இயக்கக் கூடியன.
2.  சிறப்பு வகையான எரிபொருள் மூலம் இயங்கச் செய்யப்படும். கார்களில் இயங்கு இயந்திரங்கள் சூழலில் இருக்கும் காற்றில் இருந்து ஒட்சிசனை எடுத்து எரியச் செய்து இயங்கும் ஆனால் நீருக்கடியில் இது சாத்தியமில்லை. இதனால் சிறப்பு வகை எரிபொருளான OTTO fuel

டோ(ர்)ப்பீடோ என்னும் தன்னுந்துக் குண்டுகளில் வெடிபொருட்கள், வெடிக்கவைக்கும் முறைமைகள், வழிகாட்டி முறைமைகள், உந்துகை முறைமை ஆகியவை உள்ளன. பொதுவாக இவற்றின் வெடிக்க வைக்கும் முறைமை இலக்கில் மோதும் போது செயற்படும். இவற்றின் வழிகாட்டு முறைமை இவை தாக்கும் கப்பலில் அல்லது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரும் ஒலிஅலையை அடிப்படையாக வைத்துச் செயற்படும். அமுக்கிய காற்றில் இருந்து அதாவது Compressed air இன் மூலம் டோ(ர்)ப்பீடோ முதலில் உந்தப் படும் பின்னர் அவை தமது உந்து முறைமையாலும் வழிகாட்டு முறைமையாலும் இலக்கை நோக்கிப் பாயும்.

 டோ(ர்)ப்பீடோவில் பலவகைகள் உண்டு.

Black Shark Torpedo
Black Shark Torpedo அதாவது கரும் சுறா Torpedo 2004-ம் ஆண்டு இத்தாலியில் உருவாக்கப்பட்டவை இவை. 21 அங்குல குறுக்கு விட்டமும்  21 அடி நீளமுமானவை. இவை மணிக்கு ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் ஐம்பது மைல்கள் தூரம் பாயக் கூடியவை. இவை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கப்பல்களையும்  நீர் மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்க வல்லவை. இவை heavyweight வகையைச் சார்ந்தவை.


F21 Heavyweight Torpedo
F21 Heavyweight Torpedo அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவையாகும். இவையும் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து செலுத்தப்பட்டு கப்பல்களையும்  நீர் மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்க வல்லவை. F21 Heavyweight Torpedo பத்து மீற்றரில் இருந்து ஐநூறு மீரற்றர் ஆழத்தில் செயற்படக் கூடியவை. silver oxide-aluminium பட்டரிகள் இவற்றில்  பாவிக்கப்படுகின்றது.  இவை அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்க

Spearfish Heavyweight Torpedo
Spearfish Heavyweight Torpedo பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டவை. இவை ஆழ்கடலில் மட்டுமல்ல கடற்கரை ஓரங்களிலும் தாக்குதல் நடாத்தக் கூடியவை. இவை திரவ எரிபொருளைப்பாவித்து gas turbine engineமூலம் இயக்கப்படும். அத்துடன் முன்னூறு கிலோ எடையுள்ள Aluminised PBX  வெடிபொருளைக் கொண்டிருக்கும். Heavyweight Torpedoவகையான Torpedoகளில் இவை வலுக்கூடியவையாகக் கருதப்படுகின்றது.

Torpedo 62 (Torpedo 2000)
Torpedo 62 ஐ சுவீடன் நாடு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்கின்றது. இவை அணுக்குண்டுகளளயும் தாங்கிச் செல்லக் கூடிய்வை. எந்த வகையான கடற்படைக்கப்பல்களுக்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கும் எதிராக இவற்றால் தாக்குதல் செய்ய முடியும். நீருக்குக்கிழ் 500 மீற்றர் ஆழத்தில் இருந்து இவற்றைச் செலுத்த முடியும். heavy weigh வகையைச் சார்ந்த இவற்றின் எடை 1450கிலோவாகும்.


SeaHake mod 4
ஜேர்மனியத் தயாரிப்பான் SeaHake mod 4 டோ(ர்)ப்பீடோக்களும் heavyweight வகையைச் சார்ந்தவை. நீருக்கடியில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதற்காக fibre optic wire guidance என்னும் வழிகாட்டல் முறைமையை இவை கொண்டிருக்கின்றன. இவை 255 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. மணிக்கு ஐம்பது கடல்மைல் வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றின் பாய்ச்சல் தூரம் 50 கிலோ மீற்றர்களாகும்.

VA-111 Shkval
இரசியத் தயாரிப்பான VA-111 Shkval  டோ(ர்)பீடோக்கள் 21 அங்குல குறுக்கு விட்டமும் 27 அடி நீளமுமானவை. இவற்றின் எடை 2700 கிலோ ஆகும். இது மற்ற நாட்டு டோ(ர்)பீடோக்களின் எடையுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். இவை அணுக்குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இவை தமது வழிகாட்டலுக்கு நான்கு செதில்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். வாயுக் குமிழிகளை வெளியே தள்ளிக் கொண்டு பயணிக்கும் இவற்றின் வேகம் மற்ற நேட்டோ நாடுகளின் டோ(ர்)பீடோக்களின் வேகங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும்.

MU90/Impact என்பதும்A244/S Mod 3 என்பதும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்த் உருவாக்கிய light weight டோ(ர்)பீடோக்கள்ஆகும். அமெரிக்ககவின் light weight டோ(ர்)பீடோக்கள் MK 54 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...