துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.
ஒரு இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்து மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினது உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. துருக்கி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தனது உறவை சமநிலையில் வைத்திருக்கப் பெரும் பாடு படுகின்றது. ஈரானியர்கள் விசா நடைமுறையின்றிப் பயணிக்கக் கூடிய ஒரே ஒரு நாடு துருக்கியாகும். இதைப் பயன்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் பிரதான தளமாக துருக்கியைப் பயன்படுத்துகிறது. சிஐஏயின் உளவாளி ஒருவர் துருக்கியின் இஸ்த்தான்புல் விமான நிலையத்தில் எட்டு ஈரானியப் போலிக் கடவுட்சீட்டுகளுடன் பிடிபட்டதன் பின்னர் அமெரிக்கா துருக்கியை ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைத் தளமாகப் பயன்படுத்துவது அம்பலமாகியது. இது அமெரிக்க துருக்கி உறவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிராக நேட்டோ கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா துருக்கியை ஏமாற்றி விட்டது.
துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பல முனைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றி அங்கு சுனி முசுலிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என துருக்கி விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா அசாத்தின் ஆட்சிக்கு மாற்றீடாக வரும் சுனி முசுலிம்களின் ஆட்சி ஒரு மதவாத ஆட்சியாக அமையும் என்றும் மற்ற இனக்குழுமங்களான அலவைற், குர்திஷ் ஆகிய இனங்களுக்கும் கிரிஸ்த்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் என்றும் அமெரிக்கா அஞ்சுகின்றது. துருக்கி சிரியக் கிளர்ச்சி இயங்கங்களில் தீவிர மதவாதப் போக்குடைய அல் நஸ்ராவிற்கு உதவி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை.
சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களிற்கு துருக்கி உதவி செய்வதால் சிரியப் படைகள் தம்மிடமுள்ள வலுமிக்க இரசிய ஏவுகணைகளால் துருக்கி மீது தாக்குதல் நடாத்தலாம் என்ற அச்சம் துருக்கிய மக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டுகின்றது. இதைத் தவிர்க்க துருக்கி சீனாவிடமிருந்து அதன் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நான்கு பில்லிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முற்பட்டது. இது அமெரிக்க படைக்கல விற்பனையாளர்களை ஆத்திரப்படுத்தியது. துருக்கிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வழங்க அமெரிக்காவின் ரத்தியோன் (Raytheon) லொக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆகிய நிறுவனங்களும் பிரேஞ்சு இத்தாலிய கூட்டு நிறுவனமான யூரோசமும் (Eurosam), இரசியாவின் ரொசோபொரொன் ஆகிய நிறுவனங்கள் சீனாவின் Precision Machinery Export-Import Corporation நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தோற்றுவிட்டன. சீனாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மலிவாக இருக்கின்றது என்கின்றது துருக்கி. அமெரிக்கப் பாராளமன்றம் துருக்கிக்கு அமெரிக்கா வழங்கும் நிது உதவியை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே மற்ற நேட்டோ நாடுகள் பாவிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் துருக்கி சீனாவிடம் இருந்து வாங்க முயலும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் இணைக்கக் கூடாது என நேட்டோ நாடுகள் சொல்கின்றன. அப்படி இணைக்கும் போது சீனா நேட்டோ நாடுகளின் படைத்துறை இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடி விடும் என அவை அச்சம் வெளியிட்டுள்ளன. நேட்டோவின் பொதுச் செயலர் நேட்டோவின் உறுப்பு நாடுகள் பாவிக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படக் கூடியவையாக இருத்தல் அவசியம் எனச் சொல்லியுள்ளார்.
சீனாவில் வாழும் துருக்கிய வம்சாவழியினரும் சீனர்களும் மோதல்
2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக் கூடாது, மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.
தீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும் சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.
சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.
2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான காரணங்கள்:
1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது. 2. உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது. 3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது ம். 4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள். இவற்றுடன் இன்னும் ஒரு உலக அரசியல்-வர்த்தகக் காரணமும் உண்டு.
சீனாவில் துருக்கியரக்ளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக துருக்கியில் பரப்புரை செய்யப்பட்டு துருக்கி சீனாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இது சீனாவில் நடக்கும் சீனர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையிலான மோதல் வெளியில் இருந்து தூண்டப்படுகின்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்புரிமை கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றது. இதானால் துருக்கி பிரேசில், இரசியா, சீனா, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான பிரிக்ஸில் இணைவது பற்றி ஆலோசித்து வருகின்றது. அத்துடன துருக்கி சீனா, இரசியா, கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெஸ்கித்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாகவும் ஆலோசிக்கின்றது.
ஏற்கனவே மெக்சிக்கோ, இந்தோனேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் துருக்கியும் இணைந்து மின்ற்(MINT) என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. சீனா ஈரானையும் துருக்கியையும் தன்னுடன் இணைத்து ஒரு மத்திய தரைக்கடல் சுழற்ச்சி மையத்தை உருவாக்க முயல்கின்றது.
இப்படிப்பட்ட உலக அரசியல், பொருளாதார, படைத்துறைக் காரணிகள் அண்மைக்காலங்களாக துருக்கி அரசுக்கு எதிராக ஒரு மக்கள் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு துருக்கிய ஆட்சியாளர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. சீனாவுடன் துருக்கியின் உறவும் வர்த்தகமும் வளர துருக்கியில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் வளரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment