மரம் பழுக்க வௌவாலாக வந்த பிரித்தானியா.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய நிலகரி-உருக்கு சமூகம் 195-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, லக்சம்பேர்க், ஆகிய ஆறு நாடுகளும் இணைந்து பரிஸ் உடன்படிக்கை மூலம் இந்த சமூகத்தை உருவாக்கின. இதை உருவாக்கும் போது இதில் இணைந்து கொள்ளும் படி பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அது நிராகரித்தது. பிரித்தானியாவும் இணைவதை பிரான்ஸ் பெரிதும் விரும்பியது. ஒன்றுபட்ட, போரில்லாத, வர்த்தகத் தடையற்ற, பொதுசந்தையுடைய ஐரோப்பாவை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சமூகம் உருவாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து 1957-ம் ஆண்டு ரோம் உடன்படிக்கை மூலம் ஐரோப்பியப் பொருளாதார சமூகம் உருவாக்கப் பட்டது. இந்த நாடுகள் இதன் மூலம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்தன. இரண்டாம் உலக் போரின் பின்னர் பொருளாதார அடிப்படையில் ஐரோப்பாவின் நோயாளி என விபரிக்கப் பட்ட பிரித்தானியாவும் ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியைக் கண்டு அதில் இணைய விரும்பியது. 1961-ம் ஆண்டு பிரித்தானியா செய்த விண்ணபத்தை பிரான்ஸ் நிராகரித்தது. மீண்டும் ஒரு விண்ணப்பம் செய்யப் பட்டது அதுவும் பிரான்ஸால் நிராகரிக்கப் பட்டது. ஆனால் பிரான்ஸின் எதிர்ப்பால் அது கைகூடவில்லை. பின்னர் 1973-ம் ஆண்டு பிரித்தானியாவும் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்து கொண்டது. அப்போதில் இருந்தே பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கு பிரித்தானியாவின் சில பகுதியினரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் 1975-ம் ஆண்டு தலமை அமைச்சராக இருந்த ஹரோல்ட் வில்சன் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தி அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு 67விழுக்காடிற்கும் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்றார். அப்போது பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதற்கான ஆதரவை வழங்கின.
அற்ற குளத்தில் அறிநீர்ப் பறவையாக பிரித்தானியா?
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருந்ததால் அதன் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டது. 2008-ம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்தானியா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க முதலில் தப்பிக் கொண்டது. பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாலும் அவை அதிலிருந்து விடுபடும் நாள் அண்மையில் இல்லை என்பதாலும் அதிலிருந்து வெளியேறவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களின் ஆதிக்கம் பிரித்தானியாவின் கொன்சர்வேர்டிவ் எனப்படும் பழமைவாதக் கட்சியினரிடையே அதிகரித்தது. 2010-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி பழமைவாதக் கட்சியினரின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் பழமைவாதக் கட்சியினரிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்ற கருத்து மேலும் வலுப்பெற்றது. இதனால் 2010-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் பொதுத் தேர்தலின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருப்பதா இல்லையா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற உறுதி மொழியை வழங்கினார்.
தீவு மனப்பாங்கும் ஏகாதிபத்திய மீத்தங்கலும் (hangover)
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிரித்தானிய ஊடகங்களும் நகைச்சுவைக் கலைஞர்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளை மோசமாகத் தாக்குவதில் பின்னிற்பதில்லை. இதில் பெரும் தாக்குதலுக்கு உள்ளாபவை ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தான். ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவை ஆக்கிரமிக்க வந்த பெரும் கடற்படையை முறியத்தமை, நெப்போலியனைத் தோற்கடித்தமை, இரு பெரும் உலகப் போரில் ஜேர்மனியைத் தோற்கடித்தமை எல்லாம் பிரித்தானியர்களை தாம் மற்ற ஐரோப்பியர்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் என எண்ண வைக்கின்றது. பனிப்போரில் அமெரிக்காவுடன் இணைந்து சோவியத் ஒன்றியத்தை தோற்கடித்தமையும் பிரித்தானியர்களின் திமிரைக் கூட்டுகின்றது. உலகக் கடலலைகளை ஆண்ட பிரித்தானியா என்ற நினைப்பும் இன்னும் பிரித்தானியரை விட்டு அகலவில்லை. 2014-ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவைப் பற்றி எழுதிய சாம் வில்சன் என்ற ஆய்வாளர் Perhaps it is Britain's island mentality, combined with that imperial hangover, that is at play - Britain is used to giving orders, not taking them. எனக் குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடையோர் ஐரோப்பிய ஒன்றியம் சட்டங்களை இயற்றி எம்மீது திணிக்கக் கூடாது என்றும் எமது நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றங்கள் மாற்றியமைக்கக் கூடாது என்றும் திமிருடன் கூறுவதற்கான காரணம் இதுவாக இருக்கலாம்.
உள்கட்சி மோதல்களும் கட்சிகளிடை மோதல்களும்
ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான விவாதம் பிரித்தானியக் கட்சிகளிடையே மட்டுமல்ல கட்சிகளுக்குள்ளும் பெரும் விவாதப் பொருளாக ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகின்றது. பழமைவாதக் கட்சியின் தீவிர வலது சாரிகளும் தொழிற்கட்சியின் தீவிர இடதுசாரிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்பவில்லை. தேசிய அரசுகள் என்பது முதலாளித்துவச் சிந்தனை மட்டுமே உண்மையான சமூகவுடமைவாதி (சோசலிசவாதி) தேசிய அரசுகளைப்பற்றிக் கவலைப்படமாட்டான். அவன் உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்ப்பான். பெருமுதலாளிகளுக்குத்தான் தமது சுரண்டல்களிற்கான பிரதான தளமாக ஒரு தேசிய அரசு அதிகம் தேவைப்படும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகின்றது. சமூகவுடமைவாதிகள் தங்களுக்குள் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொளவில்லை. ஆனால் இரண்டாம் போருக்குப் பின்னரான பிரித்தானியாவில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையில் உள்ள மோதலிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையற்றவர்களுக்கும் (Eurosceptic) ஆதரவானவர்களுக்கும் (Europhile) இடையில் உள்ள மோதல்களே பிரித்தானிய அரசியலில் பெரிதாக அடிபட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள இடதுசாரிகள் பிரித்தானிய இடதுசாரிகளுடன் இணைய விரும்பினர்.
பிரித்தானியாவின் முட்டாள்த்தனமான முடிவும் கீழ்த்தரமான அரசியலும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா இல்லையா என்பதைப் பற்றிய கருத்துக் கணிப்பை பற்றிக் கருத்து வெளியிட்ட ஐரிஸ் ரைம்ஸ் என்னும் ஊடகம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு தலைமை அமைச்சர் எடுத்த முட்டாள்த்தனமான முடிவு எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என பழமைவாதக் கட்சியினர் கருதினால் அதை கட்சிக்குள் கூடி ஒரு முடிவை முதலில் எடுக்க வேண்டும். வெளியேறவேண்டும் என்ற கொள்கையுடையவர்களின் வாயை அடைக்க தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் கருத்துக் கணிப்பு என்ற படைக்கலனைக் கையில் எடுத்தார். இருக்க வேண்டும் என்ற கருத்துக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என அவர் நம்பினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஏற்படவிருக்கும் பொருளாதார விளைவுகளை பெரும் பொருளாதார நிபுணர்களாலேயே தீர்மானிக்க முடியாமல் இருக்கையில் சாதாரண வாக்காளர்களால் எப்படி முடிவு செய்ய முடியும்? பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றால் பழமைவாதக் கட்சியில் பெரும் பிளவு ஏற்படும். ஏற்கனவே கருத்துக் கணிப்பால் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் பதவி விலகி பாராளமன்றம் கலைக்கப்பட்டு ஒரு திடீர் பொதுத் தேர்தல் நடக்கலாம். பிளவு பட்ட பழமைவாதக் கட்சிக்கு எதிராக தொழிற்கட்சி வெற்றி பெறலாம் என கணக்குப் போட்ட தொழிற்கட்சியின் தலைவர் பிரித்தானியா ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு காத்திரமான பரப்புரை செய்வதைத் தவிர்த்துக் கொண்டார்.அடுத்த தலமை அமைச்சர் கனவுடன் இருக்கும் முன்னாள் நகரபிதா பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியா விலவேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாக தீவிரப் பரப்புரை செய்யத் தொடங்கினார். பழமைவாதக் கட்சியினரான டேவிட் கமரூனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் இடையிலான பதவி போட்டி ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான காத்திரமான விவாதத்தை மக்கள் முன் வைக்காமல் உண்மைக்கு மாறான வியாக்கியானங்களை மக்கள் முன் வைக்கத் தொடங்கினர். விலகவேண்டும் என்ற பிரிவினர் பிரித்தானிய மக்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு குடிவரவுப் பிரச்சனையை கையில் எடுத்ததால் கருத்துக் கணிப்பு திசை திருப்பப்பட்டு குடிவரவை விரும்புகிறாயா இல்லையா என்பதற்கு மக்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு நிலைமை உருவாகிவிட்டது. மறுபுறம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவானவர்கள் விலகினால் பொருளாதாரம் சரிந்து விடும் எனச் சொல்லி பொருளாதாரச் சரிவா இல்லையா என்பதற்கான கருத்துக் கணிப்பு போல் திருப்பிவிட்டார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைந்தவுடன் 77மில்லியன் துருக்கிய இஸ்லாமியர்கள் பிரித்தானியாவிற்கு வந்துவிடுவார்கள் என்ற பரப்புரையும் முன்வைக்கப் பட்டது.
நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
பன்னாட்டு நாணய நிதியம் சொல்கின்றது பிரித்தானியா வெளியேறினால் அதன் பொருளாதாரம் பாதிக்கப் படும் என்று. பிரித்தானிய நடுவண் வங்கியும் அதையே சொல்கின்றது. பிரித்தானிய உளவுத் துறையின் முன்னாள் அதிபர் சொல்கின்றார் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று. பிரித்தானியாவின் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பெரிதும் பாதிக்கும். அது உலகப் பொருளாதார மீட்சிக்கான முயற்ச்சியைப் பாதிக்கும். அது பிரித்தானியாவின் பொருளாதாரதையும் பாதிக்கும். இந்த மறுதாக்கம் அளவிடப்பட முடியாத ஒன்றாகும். பிரித்தானிய வெளியேற்றத்தால் உருவாகவிருக்கும் உறுதியற்ற நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எதிர்வு கூறமுடியாததாக இருக்கும். Nigel Farrage என்னும் பிரித்தானிய சுதந்திரவாதி பிரித்தானியா வெளியேறிய பின்னர் என்ன செய்வது என்று தனக்குத் தெரியாது என்றார்.
பிழையான சூழல் பிழையான நேரம்
சிரியாவில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் புகலிடத்தஞ்சம் கோருவோர் பெருமளவில் ஐரோப்பாவை நோக்கி நகர்வது ஒறுபுறம், தீவிரவாதத் தாக்குதல்கள் ஐரோப்பாவில் நடப்பது மறுபுறம், இரசியாவின் அச்சுறுத்தல் இன்னொரு புறம் எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பொருளாதாரப் பிரச்சனையும் அதனால் பெரிதாகப் பாதிக்கப் பட்ட ஐரோப்பிய நாடுகள் இன்னொரு புறமாக இருக்கும் சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துக் கணிப்புச் செய்வது மிக முட்டாள்தனமான ஒன்றாகும்.
அந்நியர்களின் ஊடகங்கள்
பல பிரித்தானிய ஊடகங்கள் விலக வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கின்றன. பைனான்சியல் ரைம்ஸ், எக்கொனமிஸ்ற் ஆகிய ஊடகங்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றன. பிபிசி மறைமுகமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஸ்கை நியூஸ் விலக வேண்டும் என்ற கருத்துக்கும் மறைமுக ஆதரவு வழங்குகின்றன. 1975-ம் ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பின் போது எல்லா ஊடகங்களும் ஒருமனதாக நின்றன. அப்போது பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளர்களாக பிரித்தானியர்களே இருந்தனர். இப்போது நிலைமை அப்படி இல்லை.
பிரித்தானியா தன் மென்வல்லரசு நிலையை இழக்கும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து போன்ற பிரதேசங்கள் பிரித்தானியாவில் இருந்து விலகும் வாய்ப்பு உண்டு. பிரிய பிரித்தானியா சிறிய இங்கிலாந்து ஆகும். தற்போது வல்லரசாக இருக்கும் பிரித்தானிய உலகின் முன்னணி மென்வல்லரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிரித்தானியாவிற்கு உலக அரங்கில் உறுதுணையாக 27 நாடுகள் இருப்பதால் பிரித்தானிய உலக அரங்கில் அரசுறவியல் பேச்சு வார்த்தை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இது உலகை முதற்தர மெல் வல்லரசாக்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் இந்தப் பாணியைக் கையாண்டது. கியூபாவில் அமெரிக்கா இந்த உபாயத்தைக் கையாண்டு வெற்றி கண்டு கொண்டிருக்கின்றது.
வர்த்தக உடன்படிக்கைகளும் நிதிப் பங்களிப்பும்.
ஐரோப்பிய ஒன்றியம் பல நாடுகளுடன் செய்த வர்த்தக உடன்படிக்கைகள் பிரித்தானியாவிற்கு நன்மையளிக்கின்றது. பிரித்தானிய ஒன்றியத்தில் இருந்து விலகும் போது புதிய உடன்படிக்கைகளைச் செய்ய வேண்டியிருக்கும். பிரித்தானியாவிற்கு வெளியில் இருக்கும் நோர்வேயை வெளியேற்றவாதிகள் (பிரித்தானியா விலக வேண்டும் என்ற கொள்கையுடையோர்) உதாரணம் காட்டுகின்றார்கள். ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து பொது வர்தகப் பிரான்டிய அமைப்பில் இருக்கும் நோர்வேயும் ஒன்றியத்தின் பாதீட்டிற்கு தனது பெரும் நிதிப் பங்களிப்பைச் செய்கின்றது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதி தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுச் சந்தைக் கட்டமைப்பில் பிரித்தானியா ஈட்டும் இலாபத்தின் ஒரு பகுதியே பங்களிப்பாக வழங்கப்படுகின்றது. ஒன்றியத்தில் இருப்பதால் பிரித்தானியாவிற்கு கிடைக்கும் வருமானம் கணக்கிடுவதற்கு மிகவும் சிரமமானது. அது போலவே விலகினால் வரும் பொருளாதார இழப்புக்களும் கணக்கிட மிக மிகச் சிரமமானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் சீனாவினது பொருளாதாரத்திலும் பார்க்கப் பெரியதாகும். 53கோடி மக்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 7.3 விழுக்காடாகும் ஆனால் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி உலக உற்பத்தியின் 24 விழுக்காடாகும்.
தேசியவாதிகளைத் தூண்டிய வெளியேற்றவாதிகள்
பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவானவர்கள் உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர் 2010-ம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகள் எங்கும் தேசியவாதிகளும் நாஜிகளும் அதிகரித்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்ட வெளியேற்றவாதிகள் குடிவரவுப் பிரச்சனையை தமது கையில் எடுத்தனர். அது பிரித்தானியத் தேசியவாதிகளையும் புதிய நாஜிகளையும் ஊக்கப்படுத்தியது. விளைவு இருக்கவேண்டும் தரப்பில் உள்ள ஒரு பெண் பாராளமன்ற உறுப்பினரான ஜோ கொக்ஸ் கொல்லப்பட்டார். குடிவரவாளர்களால் ஐக்கிய அமெரிக்கா கனடா ஆகிய நாடுகள் தம் பொருளாதாரத்தை மேம்படுத்தின. ஒஸ்ரேலியா தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்குப் புகலிடத் தஞ்சம் கோரிச் செல்பவர்களுக்கு உடனேயே வேலை செய்யும் அனுமதி வழங்கப்படுகின்றது. இதனால் அவர்கள் அமெரிக்க சமூகத்துடன் இணைந்து விடுகின்றார்கள். அது அவர்களை தேசப்பற்றாளர்களாக மாற்றுகின்றது. அவர்களுக்கான சமூகநலக் கொடுப்பனவுகளும் செய்யத் தேவையில்லாமல் போகின்றது. ஆனால் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் பல ஆண்டுகள் எடுக்கின்றன. இதனால் அவர்களுக்கு சமூகநலக் கொடுப்பனவுகள் செய்ய வேண்டி இருக்கின்றது. போதிய பணம் கையில் இல்லாததால் அவர்கள் ஏமாற்று வேலைகள், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைச் செய்யத் தூண்டப்படுகின்றார்கள். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பலர் பிரித்தானியாவில் வந்து குடியேற்கின்றார்கள் என்ற விவாதம் வெளியேற்றவாதிகளால் முன்வைக்கப் படுகின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்புடன் செயற்பட்ட நாடு பிரித்தானியாவாகும். இரசியாவை மனதில் வைத்து பிரித்தானியா அப்படிச் செயற்பட்டது. ஆனால் அதன் விளைவுகளைச் சுமக்க அது தயாராக இல்லையா?
மாறிவிட்டது ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப் பட்ட போது அங்கு ஜேர்மனியின் ஆதிக்கம் நிலவும் என்ற கருத்து பிரித்தானியாவில் இருந்தது. ஜேர்மனியிலும் பிரித்தானியாவிற்கு எதிரான நிலைப்பாடு இருந்தது. 1992 செப்டம்பர் 16-ம் திகதி புதன்கிழமை பிரித்தானியாவின் கறுப்புப் புதன்கிழமையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சதியால் பிரித்தானிய நாணயம் பெரும் பெறுமதித் தேய்விற்கு உள்ளானது பிரித்தானிய நடுவண் வங்கி 3.4பில்லியன் பவுண்கள் இழப்பீட்டைச் சந்தித்தது. ஆனால் இப்போது ஜேர்மனிக்கு இது போன்ற சதி வேலைகள் ஐரோப்பிய ஒற்றுமைக்கு உதவாது என்ற உண்மை புலப்பட்டுவிட்டது. பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து விலகக் கூடாது என்ற கருத்து ஐரோப்பிய நாடுகளில் மேலோங்கி இருக்கின்றது. சதாம் ஹுசேயினிற்கு எதிரான போரின் போது பிரித்தானியா மீது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் புட்டீன் தலைமியிலான இரசிய மீள் எழுச்சி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுவடையச் செய்து விட்டது. புட்டீனிற்கு எதிரான பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாடு மேற்கு ஐரோப்பியர்களை பிரித்தானியாமிது விருப்பமடையச் செய்துவிட்டது. ஜப்பானில் இருந்து அமெரிக்காவரை உள்ள பிரித்தானியாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை விரும்புகின்றனர்.
இறைமை பிரச்சனை
ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அரசாக உருவெடுக்க வேண்டும் என்ற கருத்து முன்பு இருந்தது ஆனால் அது இப்போது மறைந்து அதிகரித்த அரசியல் ஒன்றியமாக மாறவேண்டும் என்ற கருத்துத்தான் உள்ளது. பிரித்தானியா ஒரு இறைமை உள்ள நாடு என்றபடியால்தான் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. இறைமையில்லாத நாடுகள் இணைக்கப்பட மாட்டாது. பிரித்தானியா தனது இறைமையை மற்ற நாடுகளின் இறைமையுடன் இணைது மற்றய நாடுகளின் இறைமையையும் பாதிக்கக் கூடிய வகையில் செயற்படுவது இறைமை இழப்பல்ல இணைப்பு மட்டுமே. ஐரோப்பாவிற்கு என ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கையும் பொதுவான படையும் பாதுகாப்புக் கொள்கையும் இருக்க வேண்டும் என்ற கருத்து பிரித்தானியாவின் கடுமையான எதிர்ப்பால் கைவிடப்பட்டது. பிரித்தானிய நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்துச் செய்தமை பிரித்தானிய நீதித் துறையையும் சட்டத் துறையையும் சேர்ந்த சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. பெரும்பாலான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் அதிக மனிதாபிமான அடிப்படியில் அமைந்திருந்தன. பிரித்தானிய நித்துறையில் முதலாளித்துவச் சிந்தனையின் தாக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியுமா?
முன்னாள் அசிங்கங்களின் எச்சங்கள்
பிரித்தானியாவில் ஏகாதித்தியவாதிகள் இருந்தனர் என்பதையோ நிறவெறியர்கள் இருந்தார்கள் என்பதையோ இனவாதிகள் இருந்தார்கள் என்பதையோ பிரித்தனியாவில் பேரினவாதிகள் இருந்தார்கள் என்பதையோ மறுக்க முடியாது. இவர்களின் எச்சங்கள் அல்லது தொடர்ச்சிகள் பிரித்தானிய சுதந்திரவாதிகள் என்னும் பெயரில் இப்போது ஐரோப்பிய விரோதக் கொள்கையை முன்வைக்கின்றார்கள் உலகின் மிகப்பெரியாநாடும் உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடும் உலகின் முன்னணிப் படைவலுவைக் கொண்ட நாடுமான இரசியாவின் அச்சுறுத்தலை ஓர் ஒன்றுபட்ட மேற்கு ஐரோப்பாவால் தான் சமாளிக்க முடியும்.
சிறுபான்மை இனங்கள்
இரண்டாம உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்த யூதர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டது. இடி அமீனின் ஆட்சியில் ஆபிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்த ஆசியர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டது. பிரித்தானியாவில் உள்ள முன்னணி மருத்துவர்கள் ஈரானிலும் ஈராக்கிலும் இருந்து வந்து குடியேறியவர்கள். தமிழர்கள் போல் பிரித்தானியாவில் வாழும் சிறுபான்மை இனங்களின் நலன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதுகாக்கப் படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவது பிரித்தானிய இனவாதிகளுக்கு வெற்றியும் ஊக்கமும் கொடுக்கும். இன்றைய ஐரோப்பிய எதிர்ப்பு நாளை வெளிநாட்டவர்களுக்கு எதிரான எதிர்ப்பாக மாறும். ஆசியர்களும் யூதர்களும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment