Monday, 17 September 2018

மீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி


2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் தோன்றுகின்றது. உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்தியதரைக்கடல் வரலாற்றி ரீதியாக பேரரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் ஒட்டி இருக்கின்ற மத்தியதரைக் கடல் புரதான காலத்தில் இருந்தே முக்கியத்துவம் வாய்ந்த கடலாக மத்தியதரைக் கடல் இருந்து வருகின்றது. இது மேற்குப் புறத்தில் ஜிப்ரோல்டர் நீரிணை மூலம் அட்லாண்டிக் மாக்கலுடன் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் இருபுறமும் பெருந்தொகையான நதிகள் வந்து அதில் கலக்கின்றன. அவற்றுள் உலகின் பெரிய பத்து நதிகளாகிய Rhone, Po, Drin-Bojana, Nile, Neretva, Ebro, Tiber, Adige, Seyhan, and Ceyhan ஆகியவையும் அடக்கம். தொன்று தொட்டே உலகின் பெரிய அரசுகளிற்கு இடையிலான கலாச்சாரப் பரிவர்த்தனைகளும் பண்டமாற்ற்றுக்களூ மத்திய தரைக்கடலூடாக நடை பெற்றது.

பழம்பெருமை வாய்ந்த மத்தியதரைக்கடல்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த தத்துவ ஞானி பிரெட்றிச் ஹெஜல் பூமிப்பந்தின் மூக்காற்பங்கிற்கு மத்திய தரைக்கடல் ஒன்றுபடுத்தும் மூலம் என்றார். புராதான கிரேக்கர்களும் ரோமர்களும் இந்தியாவுடனும் சீனாவுடனும் மத்திய தரைக்கடலினூடாகவே வர்த்தகம் செய்தனர். கிறிஸ்த்துவிற்கு முன்னர் 16-ம் நூற்றாண்டில் இருந்து பல நூற்றாண்டுகளாக இருந்த எகிதியப் பேரரசு மத்திய தரைக்கடலை ஒட்டியே இருந்தது. கிறிஸ்த்துவிற்கு 1792 ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோனியர்கள் மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்தினர். தற்போதைய ஈராக், சிரியா போன்றவற்றை உள்ளடக்கிய மெசப்பட்டோமியா அவர்களது பிரதேசமாக இருந்தது. மத்திய தரைக்கடல் அவர்களது வெளியுலகத் தொடர்பில் பெரும் பங்கு வகித்தது. இது போலவே கிறிஸ்த்துவிற்கு 800 ஆண்டுகளிற்கு முன்னர் கிரேக்கப் பேரரசு, கிறிஸ்த்துவிற்கு 27 ஆண்டுகளிற்கு முன்னர் ரோமப் பேரரசு ஆகியவை மத்தியதரைக்கடலை ஒட்டியே இருந்தன.உலக வரலாற்றில் நீண்டகாலமாக இருந்த துருக்கியரின் உதுமானியப் பேரரசிற்கும் மத்திய தரைக்கடலே முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருந்தது. பிரித்தானியப் பேரரசும் மத்திய தரைக்கடலில் அதிக அக்கறை காட்டியது. பிரித்தானிய குடியேற்ற ஆட்சி பல நாடுகளில் முடிந்த பின்னரும் பிரித்தானியா மத்தியதரைக்கடலில் ஜிப்ரோல்டா, சைப்பிரஸ் ஆகியவற்றில் தனது படைகளை வைத்திருக்கின்றது. மேலும் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தால் ஓமான், கட்டார், பாஹ்ரேன் ஆகிய நாடுகளில் பிரித்தானியப் படைகள் நிலைகொண்டுள்ளன.  

தற்போதைய அரசுகள்
மத்திய தரைக்கடலை ஒட்டி இப்போது 21 நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ், மொனொக்கோ, இத்தாலி, மால்டா, சுலோவேனிய, குரோசிய, பொஸ்னியா, ஹெர்ஜிக்கோவீனா. மொண்டினீக்ரொ, அல்பேனியா, கிரேக்கம் ஆகிய ஐரோப்பிய நாடுகளும் துருக்கி, சைப்பிரஸ், சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய ஆசிய நாடுகளும் எகிப்து. லிபியா, துனீசியா அல்ஜீரியா, மொரொக்கே ஆகிய ஆபிரிக்க நாடுகளும் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ளன.


ஒரு துருவத்தை விரும்பாத புட்டீன்
சோவியத் ஒன்றியம் வலுவடைந்திருந்த போது மத்தியதரைக்கடலில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் கடும் போட்டி உருவானது. 1991-ம் ஆண்டு நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஒரு துருவ ஆதிக்கம் உலகில் தலை தூக்கத் தொடங்கியது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒன்றை இரசியாவின் தலைமையில் உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அதன் முதற்படியாக உக்ரேன் நேட்டோவில் இணைவதைத் தடுத்தார். கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தார். அடுத்தபடியாக சிரியாவில் தனக்கு ஆதரவான ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காக அதிபர் பஷார் அல் அசாத்தை அகற்றும் அமெரிக்காவின் திட்டத்தை முறியடித்தார். முழு சிரியாவும் அசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக துருக்கியின் வேண்டுகோளைப் புறம் தள்ளி இத்லிப் மாகாணத்தில் பெரும் விமானத்தாக்குதல்களைச் செய்கின்றார்.

சீனாவும் மத்திய தரைக்கடலில்
சீனாவை உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்பதில் அதன் அதிபர் ஜி ஜின்பிங் அதிக முனைப்புடன் செயற்படுகின்றார். இருவரும் வலிமை மிக்க தலைவர்களாக தத்தம் நாடுகளில் திகழ்கின்றனர். இருவரும் முழுமையான ஒத்துழைப்பிற்கு தயாராக இல்லை. சீனாவை புட்டீன் மிகுந்த ஐயத்துடனே நோக்குகின்றார். மத்திய ஆசியாவை நோக்கிய சீனாவின் விரிவாக்கம் இரசியாவிற்கு ஆபத்தானது என புட்டீன் கருதுகின்றார். இரசியாவும் சீனாவும் வலிமையான நாடுகள். ஆனால் வலிமை மிகுந்த நாடுகள் அல்ல. இரசியாவின் பொருளாதாரமும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அசைக்கப் போதியதாக இல்லை. இரு நாடுகளும் மத்தியதரைக்கடலில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் தற்போது இல்லாவிடிலும் இனி வரும் காலங்களை இரு நாடுகளும் அதற்க்கு நிர்ப்பந்திக்கப்படும். சீனா மத்திய தரைக்கடலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ஜிபுக்தியில் தனது முதலாவது வெளிநாட்டுக்கடற்படைத்தளத்தை உருவாக்கியது.
மத்தியதரைக்கடலூடாக வட ஆபிரிக்க மற்றும் மேற்காசிய நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொண்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாய்த் தேவைக்கு சிரியாவில் தங்கியிருப்பதைத் தவிர்க்கலாம். அந்த எரிவாயுத்திட்டத்தில் சிரியா காத்திரமான பங்கினை வகிக்கும். அதனால்தான் சிரியாவில் மேற்கு ஐரோப்பாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் எண்ணம் நிறைவேறாமல் இருப்பதற்கு இரசியா பெரும் பாடு படுகின்றது.

போட்டி நகர்வுகள்
2018 ஓகஸ்ட் மாதம் இரசியா தனது பெரும் கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு நகர்த்தியது. இதற்கு உடனடியாக அமெரிக்கா எதிர்வினையாற்றியது. அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கும் அத்லாண்டிக் மாக்கடலுக்கும் பொறுப்பான இரண்டாவது கடற்படைப் பிரிவின் தளபதியும் மத்தியதரைக்கடற்பரப்பிற்குப் பொறுப்பான ஆறாவது கடற்படைப் பிரிவின் தளபதியும் அமெரிக்காவின் ஐரோப்பாவிற்கான கட்டளைத் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு இரசியாவின் நகர்வை எப்படி எதிர் கொள்வது  என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டால் அமெரிக்கா முன்பு ஒரு போதும் செய்திராத கடுமையான தாக்குதல் சிரியாவில் செய்யப்படும் என அமெரிக்காவில் இருந்து அறிக்கை வெளியானது. ஆனால் அமெரிக்கா ஏற்கனவே மத்தியதரைக்கடலில் சிரியாமீது தாக்குதல் நடத்த பெரும் படைக்குவிப்பைச் செய்தபடியால் தானும் படைகளை நகர்த்தியதாக இரசியா தெரிவித்தது.

அமெரிக்கா முதன்மையானதுதான்
மத்தியதரைக்கடலாதிக்கப் போட்டி என்று வரும்போது இரசியாவால் அமெரிக்காவின் கடற்படையை அழிக்க முடியாது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக்கப்பல்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் இரசியாவின் ஒரே விமானம் தாங்கிக்கப்பலிலும் பார்க்க உயர்ந்தவை. இரசியாவின் கடற்படைக்கு பெரும் அனுபவமில்லை என்ற கருத்து நிலவிய வேளையில் 2015-ம் ஆண்டு இரசியா கடல்வழியான பெரும் படைநகர்வை சிரியாவிற்கு செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேற்கு ஐரோப்பா தனித்து இரசியாவை எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்கா எரிபொருளில் தன்னிறைவு அடைந்துள்ள வேளையில் அமெரிக்கா முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற டிரம்பின் கொள்கையாலும், ஐரோப்பா தனது பாதுகாப்பை தானே செய்து கொள்ள வேண்டும் என்ற டிரம்பின் நிலைப்பாட்டாலும் இரசியாவை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர் கொள்ள முடியுமா? கடற்படையைப் பொறுத்தவரை நேட்டோவின் மூன்றாவது பெரிய கடற்படையைக் கொண்ட கிரேக்கத்தின் கடற்படை இரசியாவின் கடற்படையிலும் பார்க்க வலிமையானது. அமெரிக்காவினதும் துருக்கியனதும் உதவி இன்றி ஏனைய நேட்டோ நாடுகள் மத்திய தரைக்கடலில் தமது கடற்படைகளைத் திரட்டும் போது அவற்றின் வலிமை இரசியாவின் வலிமையிலும் பார்க்கப் பத்து மடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா மத்தியதரைக்கடலிற்கு தனது கடற்கலன்களை துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள குறுகிய அகலமுள்ள நீரிணையூடாக நகர்த்த வேண்டும். அந்த திருகுப்புள்ளியில் வைத்து கிரேக்கத்தாலும் சைப்பிரஸில் நிலை கொண்டுள்ள பிரித்தானியப் படைகளாலும் இரசியக் கடற்படையின் கப்பல்களை நிலைகுலையச் செய்ய முடியும்.

சிறுதடியைப் பார்த்து மோதலைத் தவிர்க்கும் சண்டியர்கள்
வட கொரியாவிலும் பார்க்க அமெரிக்காவின் படைவலு மிகப் பெரியது. ஆனால் வட கொரியாவின் மீது தாக்குதல் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் தென் கொரியாமீது வட கொரியா கடுமையான தாக்குதலைச் செய்து பெரும் சொத்திழப்பை ஏற்படுத்த முடியும். அதைத் தவிர்ப்பதற்காகவே வட கொரியாவுடன் ஒரு மோதலை அமெரிக்கா தவிர்த்தது. அது போலவே தாய்வானும் சீனாவை இலக்கு வைத்து பல ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதால சீனாவின் கிழக்குக் கரையோராத்தில் உள்ள பல தொழிற்பேட்டைகளை அழிக்க முடியும். ஒரு நாடு தன்னிலும் பார்க்க பல மடங்கு வலிமையுள்ள எதிரிக்கு மூக்குடைக்கக் கூடிய வகையில் தன் வலிமையை வைத்திருந்தால் மோதல் தவிர்ப்பு நிலையைத் தான் அந்த வலிமை மிக்க எதிரி விரும்ப மாட்டான். 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேச விடுதலைப் போரின் போது இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க தனது நேச நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பலை இந்து மாக்கடலை நோக்கி நகர்த்தியபோது இரசிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அதை இடைமறித்தன. பிரித்தானியக் கடற்படை வலிமை மிக்கதாக இருந்தும் ஒரு மோதலைத் தவிர்ப்பதற்காக அது பின்வாங்கியது.

இத்லிப் தீர்மானிக்கும்
வர்த்தக முக்கியத்துவம், வரலாற்ரு முக்கியத்துவம், படைத்துறை முக்கியத்துவம் போன்றவை மிக்க மத்திய தரைகடலில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதைப் பற்றி தீர்மானிப்பது எந்த முக்கியத்துவமும் இல்லாத இத்லிப் என்னும் சிரிய மாகாணமாக இப்போது திகழ்கின்றது. சிரியாவில் தனக்கு என ஒரு பிடி இல்லாத அதாவது அரசுறவியல் நெம்பு கோல் இல்லாத அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள துரும்பு அல்லது துருப்பு வேதியியல் குண்டுத்தாக்குதல். வேதியியல் தாக்குதல் இல்லாமல் இதிலிப்பை சிரியாவாலும் இரசியாவாலும் கைப்பற்ற முடியாது என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து  கொண்டுள்ளது. அதனால் தன் கால் நகர்வுகளுக்கு அது காத்திருக்கின்றது.

மோதல் தவிர்பிற்காக சில விட்டுக்கொடுபுக்களை வலிமை மிக்க நாடுகள் செய்யும் நிலை இருப்பது இரசியாவிற்கு சாதகமான ஒன்றே. மத்தியதரைக்கடலில் இரசியா ஒரு காத்திரமான படையணியை வைத்திருந்தால் அதனுடன் மோதலை தவிர்க்கவே வலிமை மிக்க நாடுகள் கூட விரும்பும். அப்படிப்பட்ட நிலையில் இரசியாவால் மத்திய தரைக்கடலில் தனக்கு உரிய இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட்டால் இரசியாவின் சாதக நிலை இரட்டிப்பாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...