உலகில் அதிக அளவு இணையவெளிப்போர் செய்யும் நாடுகள் ஈரானும் இஸ்ரேலும் இருக்கின்றன. 2012-ம் ஆண்டு ஈரானிய யூரேனியம் பதப்படுத்தும் ஆலைகளின் கணினித் தொகுதியில் இஸ்ரேலும் அமெரிகாவும் இணைந்து STUXNET என்னும் கணினி நச்சுக்கிருமி மூலம் நடத்திய இணையவெளித் தாக்குதலின் பின்னர் ஈரானும் தனது இணையவெளிப்படையை மேம்படுத்திக் கொண்டது. 2020-ம் ஆண்டு அமெரிக்க நாடளமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் படி 2012-ம் ஆண்டின் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக இணையவெளித் தாக்குதல்கள் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் இணையவெளிபோர் STUXNET தாக்குதலின் பின்னர் மோசமடைந்தது. STUXNET தாக்குதலின் பின்னர் உருவான இணையவெளித் தாக்குதல் போட்டியை சோவியத் ஒன்றியம் ஸ்புட்நிக் செய்மதி அனுப்பிய பின்னர் தோன்றிய விண்வெளிப் போட்டிக்கு ஒப்பிடுவர்.
ஈரானின் அடியும் இஸ்ரேலின் பதிலடியும்
2020 ஏப்ரல் மாதம் 23-ம் திகதி இஸ்ரேலின் நீர் வழங்கல் துறையினரின் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் நிற்பாட்ட முடியாமல் வேலை செய்து கொண்டிருந்தது. இன்னொரு இயந்திரத்தை வேறு யாரோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதை இஸ்ரேலிய தொழில்நுட்பவியலாளர்களால் இயக்க முடியவில்லை, அவர்களுடைய தரவுப் பரிமாற்றத்தில் திட்டமிடாத மாற்றங்கள் இணையவெளியூடாக ஊடுருவிச் செய்யப்படிருந்தன. இப்படி இஸ்ரேலின் பல நீர் வழங்கல் நிலையங்களில் நடந்தன. இஸ்ரேலியர்கள் அவசரமாக தங்கள் நீர் வழங்கல் முறைமைகளின் கடவுட்சொற்களை மாற்றினர். அந்த ஊடுருவல் ஈரானில் இருந்து மேற்கொள்ளப்பட்டதை அறிந்த இஸ்ரேலின் பதிலடியும் காத்திரமானதாகவே இருந்தது. அத் தாக்குதல் இஸ்ரேலியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நீரில் குளோரினின் அளவை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இஸ்ரேல் நீர் வழங்கலில் தாக்குதல் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அபாஸ்ஸில் உள்ள ஷகிட் ரெஜீ முனையம் (Shahid Rajaee terminal) இணையவெளித்தாக்குதலுக்கு உள்ளானது. இது ஹோமஸ் நீரிணையில் உள்ளது. ஈரானிய வர்த்தகத்தில் 60% இத் துறைமுகத்தினூடாக நடக்கின்றது. இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் உரிமை கோரவில்லை. ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரி இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு தனித்துவமான முறையில் பதிலடி கொடுக்கும் என்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் ஈரானியத்துறைமுகம் மீதான் தாக்குதல் இஸ்ரேலில் இருந்து செய்யப்பட்டது போலுள்ளது என்றனர். வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையும் அதை உறுதிப்படுத்தியது. இணையவெளிப் பாதுகாப்பிலும் தாக்குதலிலும் இஸ்ரேல் உலக வல்லரசு எனக் கருதப்படுகின்றது. அதன் மீது தாக்குதல் செய்வது ஈரானிய நிபுணர்களின் திறமையைப் பறைசாற்றியது. 2020 மே மாதம் இஸ்ரேலின் பல முக்கிய இணையத் தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு மிரட்டல் செய்திகள் பதிவேற்றப்பட்டிருந்தன.
ஈரான் - சவுதி இணையவெளிப் போர்
2020 செப்டம்பரில் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்களில் உள்ள கணினித் தொகுதிகள் மீது இணையவெளித் தாக்குதல் செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. சவுதி அரேபியாவும் ஈரானும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றுடன் ஒன்று போர் செய்யாமல் பல்வேறுவழிகளில் தாக்குதல்கள் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கிடைத்த அற்புதமான வழி இணையவெளிப் போர். ஈரான் தனது இணையவெளிப் போர்முறைமைகளைத் தானே உருவாக்க சவுதி அந்த முறைமைகளை இஸ்ரேல், அமெரிகா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடமிருந்து வாங்குகின்றது. தன்மீது பலவழிகளில் இணையவெளித் தாக்குதல்கள் நடப்பதால் ஈரான் தனக்கே என வெளியுலக தொடர்பில்லாத ஒரு இணையவெளியை இரசியாவின் உதவியுடன் உருவாக்கியது. ஈரானும் சவுதியும் தத்தமது மதநெறியைப் பரவுவதற்கு இன்னொரு வகையான இணைவெளித்தாக்குதல் முறைமையான நயத்திருட்டு அல்லது சமூகத்தாக்குதலைப் (Social Engineering) பாவிக்கின்றன.
சவுதியின் இணையவெளி உளவு
அல் ஜசீராவின் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இதனால் கட்டார் நாட்டுக்கு எதிராக பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். அல் ஜசீராவின் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கண்காணிக்கவும் அவர்களின் தகவல்களைத் திரட்டவும் இஸ்ரேலின் உளவுநிரல்களைப்(Spywares) பாவிக்கின்றது. சவுதி ஆட்சியாளர்கள் தம்மீது அதிருப்தி கொண்டு செயற்படும் தம் நாட்டு மக்களைக் கண்காணிக்கவும் உளவுநிரல்களைப் பெரிதும் பயன்படுத்துகின்றன. சவுதி அரேபியா தனது இணையவெளி போர் முறமையையும் உளவு வலிமையையும் அதிகரிக்க அமெரிகாவின் கலிபோர்ணியா மாநிலத்தில் உள்ள உயர் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற சிலிக்கன் வலி (Silicon Valley) பிராந்தியத்தில் புதிதாக ஆரம்பிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்கின்றது. சவுதி அரேபியா இஸ்ரேலிடமிருது வாங்கிய Pegusus Spyware உலகிலேயே கைப்பேசிகளை ஒற்றுக் கேட்டல், கைப்பேசிய்களூடாகப் பரிமாறப்படும் குறுந்தகவல்களையும் மின்னஞ்சல்களையும் படங்களையும் களவாடல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த உளவுநிரலாகும்.
தனியார்துறையிலும் இணையவெளி ஊடுருவல் அதிகம்
Ponemon Institute, ஐபிஎம் ஆகிய இரு நிறுவனங்களும் செய்த ஆய்வின் படை 2020-ம் ஆண்டு மத்திய கிழக்கில் உள்ள நிறுவனம் ஒன்று சராசரியாக 6.53மில்லியன் டொலர்கள் இழப்பீட்டை தகவல் திருட்டு மூலம் இழக்கின்றன. இது உலக சராசரியான 3.86மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும். மத்திய கிழக்கு நாடுகளின் இணையவெளித் தாக்குதல் 2020-ம் ஆண்டு 250 விழுக்காடு அதிகரித்திருந்தன என்றார் ஐக்கிய அமீரகத்தின் இணையவெளிப் பாதுகாப்புத் துறை அதிகாரி.
ஐக்கிய அமீரகத்தின் வழி தனி வழி
ஈரான் உள்நாட்டில் இணையவெளிப் போர் முறமையை உருவாக்குகின்றது. சவுதி அரேபியா அதைக் காசு கொடுத்து வாங்குகின்றது. ஐக்கிய அமீரகம் அமெரிகாவின் இணையவெளிப் போர் முறைமை நிபுணர்களை அவர்களுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியத்திலும் பார்க்க மிக அதிகமாகக் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. அத்துடன் அது இஸ்ரேலிடமிருந்தும் பல தொழில்நுட்பங்களை வாங்குகின்றது. அதன் மூலம் இணையவெளித் தாக்குதல், பாதுகாப்பு, உளவாடல் போன்றவற்றில் அமெரிக்காவிற்கு இணையாகும் வகையின் தன் வலிமையைக் கட்டி எழுப்புகின்றது. அமெரிக்கா மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் பார்க்க ஐக்கிய அமீரகத்தை அதிகம் நம்புகின்றது. அதனால் அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அமீரகத்திற்கு செல்வதை அது தடை செய்யவில்லை. 2020 ஓகஸ்ட் மாதம் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகம் அரசுறவுகளை ஏற்படுத்திய பின்னர் அமீரகத்தின் மீதான இணையவெளித்தாகுதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. அமீரகத்தின் இணையவெளிச் செயற்பாடுகள் DarkMatter என்ற நிறுவனத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அமீரகத்தின் இணையவெளி வலிமை பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக அமீரகம் சொன்னாலும் DarkMatter நிறுவனத்தின் ஊழியர்கள் கசியவிட்ட தகவல்களின் படி DarkMatter பல தாக்குதல் நடவடிக்கைகளையும் உளவு நடவடிக்கைகளையும் செய்வதாக அறியப்படுகின்றது.
முன்பு சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது புதிய படைக்கலன்களை மத்திய கிழக்கு நாடுகளிடையே நடக்கும் போர்க்களங்களில் பரீட்சித்துப் பார்த்தது போல தற்போது மத்திய கிழக்கு நாடுகளிடையே நடக்கும் முறுகல்களைப் பாவித்து அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, இரசியா பிரித்தானியா ஆகிய நாடுகள் தம் இணையப் போர் முறைமையை பரீட்சித்துப் பார்க்கின.
No comments:
Post a Comment