உக்ரேன்
போரில் ஒரு நாளைக்கு எழு மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழிக்கும் இரசியாவிற்கு
எதிராக சிறிய நாடாகிய சிங்கப்பூர் கூட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரசிய அரசுக்கு
நன்மையளிக்கக் கூடியவகையில் சிங்கப்பூரில் இனி எந்த நிறுவனமும் நிதி திரட்ட முடியாது.
சில இரசிய வங்கிகளுக்கு எதிராக சிங்கப்பூர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா,
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட்ட பல மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென்
கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளும் இரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ஐரோப்பிய
ஒன்றியத்துடனும், கனடாவுடனும் பெரும்பாலும் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற நாடாகிய சுவிஸ்றலாந்தும்
இணைந்து உக்ரேனின் கிழக்குப் பகுதி மாகாணங்களான Dontsk, Luthansk ஆகியவற்றை தனிநாடுகளாக
அங்கீகரிக்கும் முன்மொழிவை ஆதரித்த 351 இரசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக
பயணத்தடை விதித்துள்ளது.
ஒன்று திரண்ட புட்டீனின் எதிரிகள்
இரசியப்படைகளை
உக்ரேனுக்கு அனுப்பியமைக்காகவும் உக்ரேனின் Dontsk, Luthansk மாகாணங்களை தனிநாடுகளாக
அங்கீகரித்தமைக்காகவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம்
அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ்றலாந்து, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் முடக்கியுள்ளன.
அது போலவே இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரது சொத்துக்களும்
முடக்கப்பட்டுள்ளன. இரசியப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக சொத்து
முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. புட்டீனுக்கு நெருக்கமான பல இரசியச்
செல்வந்தர்களுக்கு எதிராகவும் சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரசிய ஊடகத்துறையை சேர்ந்த சிலருக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை
விதித்துள்ளது.
இரசிய நடுவண் வங்கியையும் விட்டு வைக்கவில்லை
இரசியாவின்
நடுவண் வங்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான்
ஆகிய நாடுகள் பல தடைகளை விதித்துள்ளன. பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு
இடையிலான கொடுப்பனவிற்கான தொடர்பாடல்களைச் செய்யும் SWIFT அமைப்பில் இருந்து பல இரசிய
வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இரசிய அரசின் வெளிநாட்டு வருவாயைக் கையாளும் நிதி நிறுவனமான
VEB.RFஇற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சுவிஸ், ஜப்பான்
ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இரசிய விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா
ஆகியவற்றின் வான் பரப்பில் பறப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.
நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies)
இரசிய
வங்கிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இரசியா நுண்மியநாணயங்களை
பாவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போது Coinbase என்னும் நுண்மியநாணயங்களைக் கையாளும் நிறுவனமும் இரசியாவிற்கு எதிராக செயற்படுகின்றது. அதில் உள்ள இரசியர்களுக்கு
சொந்தமான 25,000இற்கு மேற்பட்ட கணக்குகளை அது தடை செய்துள்ளது. நுண்மியநாணயங்களைக்
கையாளும் வேறு சில நிறுவனங்கள் இரசியர்களுக்கு எதிராக தடை விதிக்க மறுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் தனது தடைப்பட்டியலில் நுண்மியநாணயங்களையும் இணைத்துள்ளது.
புட்டீனின் பொருளாதாரக் காப்பரண்
1991இல்
இரசியா பட்ட கடனை அடைக்க முடியாத default நிலைய அடைந்திருந்தது. அதன் பின்னர் இரசியப்
பொருளாதாரத்தை புட்டீன் சிறப்பாகக் கட்டி எழுப்பியமையால் புட்டீன் இரசியர்கள் மத்தியில்
செல்வாக்கு மிக்க தலைவராக இன்றும் இருக்கின்றார். ஆனாலும் 2022 பெப்ரவரியில் உக்ரேன்
மீதான இரசியப் படையெடுப்பிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முன்னரே இரசியப்
பொருளாதாரம் பல வலுவின்மைப் புள்ளிகளைக் கொண்டிருந்தது. 1. எரிபொருள் ஏற்றுமதியில்
அதிக தங்கியிருப்பு. 2. வேலை செய்யக்கூடிய இளையோர் தொகை வீழ்ச்சியடைவது. 3. உட்-கட்டுமானக்
குறைபாடு. 4. அயல் நாடுகளைத் தவிர வேறு நாடுகளுடன் வர்த்தக் உடன்படிக்கை இல்லாமை.
5. ஊழல். உக்ரேன் ஆக்கிரமிப்பிற்கு பின்னரான பிரச்சனைகளை இரசியா எப்படி சமாளிக்கப்
போகின்றது?
இரசியப் பொருளாதாரத்தின் வலிமை
1. பெருமளவு
எரிபொருள் இருப்பு: உலகிலேயே அதிக அளவு எரிவாயு இருப்பாக 1,668ரில்லியன் கன அடி
இரசியாவில் உள்ளது. சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிக அளவு எண்ணெய்
உற்பத்தி செய்யும் நாடாகிய இரசியா நாளொன்றிற்கு 9.7மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி
செய்கின்றது.
2. எண்மியப்
படுத்தப்படுத்தலில் மேம்பட்ட நிலை: இரசியா தகவல் தொழில்நுட்பத்திலும் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அது
தன் பொருளாதார முகாமையில் எண்மியத் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதனால்
அது உலக வர்த்தகத்தில் Faustian Bargain செய்யக்கூடிய நிலையில் உள்ளது.
3. அதிக
தானிய உற்பத்தி: இரசியா ஆண்டுக்கு 116 மில்லியன் மெட்ரிக் தொன் தானியத்தை உற்பத்தி
செய்கின்றது. இது உலக மொத்த உற்பத்தியில் 11% ஆகும்;
4. குறைந்த
வெளிநாட்டுக் கடன்: இரசியாவின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி 2021 செப்டம்பர்
நிலவரப்படி $1.62 ரில்லியன். அதன் வெளிநாட்டுக் கடன் $1.18 ரில்லியன். அமெரிக்கவின்
கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 130%, ஆனால் இரசியாவின் கடன் 20%. 2014-ம் ஆண்டு
இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுக்
கடனை $200 பில்லியனால் குறைத்தது.
5. வெளிநாட்டுச்
செலவாணிக் கையிருப்பு: 2022 ஜனவரியில் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு
$640 பில்லியன்கள். உலகின் நான்காவடு பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கொண்ட
நாடு இரசியா.
6. படைக்கல
ஏற்றுமதி: அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும்
நாடு இரசியா. அதன் மூலம் இரசியா ஆண்டுக்கு $14பில்லியன் சம்பாதிக்கின்றது.
இரசியர்கள் வெளியேற்றம்
2022
இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து இருபத்தையாயிரத்திற்கு
மேற்பட்ட இரசியர்கள் ஜோர்ஜியா மூலமாக பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஜோர்ஜியா அறிவித்துள்ளது.
அதே போல் நாள் தோறும் ஆறாயிரத்திற்கு அதிகமான இரசியரக்ளும் உக்ரேனியர்களும் தமது நாட்டினூடாக
வெளிநாடுகளுக்கு செல்வதாக ஆர்மினியா தெரிவித்துள்ளது. இரசியாவில் இருந்து பின்லாந்துக்குச்
செல்பவர்களின் தொகையும் 44,000ஆக உள்ளது. ஏற்கனவே இரசியாவில் இருந்து ஆண்டு தோறும்
நான்கு மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயந்து சென்று கொண்டிருந்தனர். அவரகளில்
பெரும்பான்மையானவர்கள் படித்த இளையவர்கள். இரசியாவில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர்
தொகை குறைவாகவும் உள்ளதால் படித்த இளையோர் வெளியேறுவது இரசியாவின் உற்பத்தியைப் பாதிக்கும்.
போரை இரசியாவால் நடத்த முடியும்
இரசியாவின்
நடுவண் வங்கிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடை அதன் $640பில்லியன் டொலர்
வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை பாதித்துள்ளது. $640பில்லியனில் $127 பில்லியனை
இரசியா தங்கமாகவும், $70பில்லியனை சீன நாணயமான ரென்மின்பியிலும் உள்ளன. இது போன்று
வேறுபல நாடுகளின் இரகசியமாக வைத்திருக்கும் தொகைகளும் சேர்ந்து மொத்தம் $300பில்லியன்
இரசியா பாவிக்க கூடிய நிலையில் உள்ளது. உக்ரேன் போருக்கு ஆண்டுக்கு மூன்று பில்லியன்
செலவாகலாம். ஆகையால் இரசியாவால் உக்ரேன் போரை தொடர்ந்து நடத்த முடியும்.
பன்னாட்டு நிறுவனங்கள்
Apple,
Spotify, Oracle, H&M, Netflix, Honda, Google, Dell, Boeing, Nike, Ford,
BMW, Walt Disney, Mc Donald, Coca Cola போன்ற நிறுவனங்கள் இரசியாவில் இருந்து வெளியேறிமை அந்த நிறுவனங்களுக்குத்தான்
இழப்பீட்டைக் கொடுக்கும். அதில் பணிபுரிந்த இரசியர்கள் வேலை வாய்ப்பை இழக்கலாம். ஆனால்
இந்த நிறுவனங்களின் உருவாக்கிய வெற்றிடத்தை காலப் போக்கில் இரசிய நிறுவனங்கள் நிரப்பி
இலாபம் ஈட்டலாம்.
பெரும் பொருளாதார பின்னடைவு நிச்சயம்
கடன்படு திறனைத் தரப்படுத்தும் நிறுவனமான Fitch இரசியா தனது கடனைக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இரசியாவின் சொத்தை அதற்கு கடன் கொடுத்தோரே முடக்கி வைத்துவிட்டு கடன் கேட்டால் இரசியா கடன் கொடுக்க மறுக்கும். இரசியாவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 19%. அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 134%. உக்ரேன் போராலும் பொருளாதாரத் தடையாலும் இரசியாவின் மொத்த தேசிய உற்பத்தி 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை 35%ஆல் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 2022இல் மொ.தே.உ 5% சுருங்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. 2022இல் இரசியாவின் ஏற்றுமதி 13%ஆல் குறையும் எனவும் உள்நாட்டு கொளவனவு 10% வீழ்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023-ம் ஆண்டு இரசியப் பொருளாதார வளர்ச்சி சுழியமாக இருக்கும் அதைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஒரு விழுக்காடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரசிய
மக்கள் தொகை வீழ்ச்சியடைவதால் பொருளாதாரப் பின்னடைவு பெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுதாது.
இரசியா தனது சமூக நலக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் மக்களை சமாளிக்க முடியும். அதற்கு
தேவையான வருமானத்தை இரசியா எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும். ஈரானிடமிருந்து
பொருளாதார தடைகளையும் தாண்டி சீனாவும் இந்தியாவும் எரிபொருள் வாங்குவது போல் இரசியாவிடமிருந்தும்
அவை எரிபொருள் வாங்கும். மலிந்த விலையில் கொடுக்க வேண்டிவரும். அஜர்பையானைத் தவிர்ந்த
ஏனை மத்திய ஆசிய நாடுகளும் மொங்கோலியாவும் இரசியாவில் இருந்து எர்பொருள் மட்டுமல்ல
மற்ற பொருட்களையும இறக்குமதி செய்யும். இந்த நாடுகள் இரசியா மற்ற நாடுகளுக்கு விற்பனை
செய்யும் கறுப்புச் சந்தையாக மாறலாம். பொருளாதாரத்
தடையால் மக்கள் விரக்தியுற்று அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என மேற்கு நாடுகள்
நினைப்பது நடக்காது.
No comments:
Post a Comment