Tuesday 8 March 2022

உக்ரேனில் இஸ்ரேலின் அமைதி முயற்ச்சி

  


யூதர்கள் வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததில் இருந்துத இருந்து பின்னர் சனிக்கிழமை சூரியன் மறையும் வரை கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது அவரகளின் மத மரபு. அதில் முக்கியமாக இயந்திரங்கள் மூலமான பயணம் மேற்கொள்ளக் கூடாது. மரபு ஒழுக்கத்தை வலியுறுத்தும் கட்சியின் தலைவரும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சருமான நஃப்த்தாலி பென்னட் 2022 மார்ச் ஐந்தாம் திகதி சனிக்கிழமை மரபையும் மீறி விமானம் ஏறி இரசியத்தலைநகருக்கு பயணம் செய்து அதிபர் விளாடிமீர் புட்டீனுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். 1976-ம் ஆண்டு இப்படி மரபு மீறி ஒரு வெள்ளிக்கிழமை இரவு சில அமைச்சர்கள் செயற்பட்டதால் இஸ்ரேலில் ஆட்சி கவிழ்ந்தது. விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னரே உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இஸ்ரேல் இரு தரப்புக்குமிடையே பேச்சு வார்த்தை நடக்க உதவி செய்ய வேண்டும் என பகிரங்கமான வேண்டு கோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இருமுனைப் பிரச்சனை

இஸ்ரேல் முதலில் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பியதை கண்டிக்காமல் வருத்தம் தெரிவித்திருந்தது. பின்னர் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பைக் கண்டித்திருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தது. இஸ்ரேல் நூறு தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களையும் உக்ரேனுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் படைக்கலன்களை அனுப்பும்படி உக்ரேன் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேனில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்ற இஸ்ரேலியர்களின் விருப்பம் ஒரு புறம் புட்டீனைச் சினத்திற்கு உள்ளாக்க கூடாது என்பது மறுபுறமாக இஸ்ரேல் செயற்படுகின்றது. ஈரானைக் கையாள்வதற்கு இஸ்ரேலுக்கு இரசிய உறவு தேவைப்படுகின்றது. ஈரானும் இரசியாவும் தம் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றுபடும் போது இஸ்ரேலிய நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இஸ்ரேல் கவனமாக இருக்கின்றது. ஈரானுக்கு இரசியா எஸ்-400 போன்ற வான் பாதுகாப்பு முறைமைகளை வழங்கினால் அது இஸ்ரேலுக்கு பாதகமாகும்.

குருவி தலையில் பனங்காய்

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நஃப்த்தாலி பென்னட் கிரெம்ளினின் புட்டீனுடன் மூன்று மணித்தியாலங்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஜெர்மனி சென்று அதிபர் Olaf Scholzஉடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். கடந்த சில வாரங்களாக நஃப்த்தாலி பென்னட் பிரெஞ்சு அதிபர் மக்ரோன், உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கிச்(இவர் ஒரு யூதர்), அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 2022 மார்ச் 2-ம் திகதி புதன் கிழமை இரசிய அதிபருடன் தொலைபேசியல் செய்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே இஸ்ரேல் தலைமை அமைச்சர் இரசியா சென்றார். அமெரிக்காவின் விருப்பத்தின் பேரில் இஸ்ரேல் செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இரசியாவில் உள்ள மரபுவழி கிருத்தவர்கள் ஜெருசேலம், பெத்தேலேகம் ஆகியவற்றை இஸ்ரேல் தன் முழுமையான ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புவர்கள். புட்டீனும் அதை ஆதரிக்கின்றார். அதனால் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல்-இரசிய உறவு சீராக இருக்கின்றது. 2022-03-05 திகதி பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மறுநாள் தன அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி தனது முயற்ச்சி வெற்றி தருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதைச் சுட்டிக்காட்டி உக்ரேனில் நிலைமை மோசமாக இருக்கின்றது நாளடைவில் அது மேலும் மோசமாகலாம் என்பதால் சிறு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டியது எமது அறம்சார் கடமை என்றார். இரசியா மீது இஸ்ரேலுக்கென ஒரு அரசுறவியல் நெம்புகோல் இல்லாத போது இஸ்ரேலின் முயற்ச்சி புட்டீனின் மனதை மாற்றுவது கடினம். 

சிரியாவில் ஒத்துழைப்பு

வளைகுடா நாடுகளில் இருந்து சிரியாவூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கினால் ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம் என்ற முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்ட போது இரசியாவின் வேண்டுதலின் பேரில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத அதை எதிர்த்தார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற அரபு வசந்தம் என்னும் பெயரில் அமெரிக்கா சதி செய்தது. அவருக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க 2015இல் சிரியாவிற்கு புட்டீன் தன் படையை அனுப்பினார். அப்போது இரசிய போர்விமானங்கள் அவ்வப்போது எல்லை தாண்டிச் சென்று அயல் நாட்டு வான் பரப்புக்களிற்குள் செல்வதுண்டு. அப்படிச் சென்ற ஒரு இரசியப் போர் விமானத்தை துருக்கு சுட்டு வீழ்த்தியது. இஸ்ரேல் இரசியப் போர்விமானங்கள் தன் நாட்டுக்குள் அறிவித்து விட்டு பறப்பதை அனுமதித்திருந்தது. அதற்குப் பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரான் சிரியாவில் வைத்து வழங்கும் படைக்கலன்களை லெபனானுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம அவற்றை இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதை இரசியா தடுக்கவில்லை. இஸ்ரேலின் முன்னாள் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ விளடிமீர் புட்டீனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

இஸ்ரேல் தலைமை அமைச்சரின் இரசியப் பயண நோக்கங்கள்:

1. உக்ரேனில் உள்ள யூதர்களின் பாதுகாப்பு: 44 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உக்ரேனில் 0.2% விழுக்காடு யூதர்கள் மட்டும் வாழ்கின்றார்கள். இஸ்ரேல் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது. தற்போது உக்ரேனிய அதிபராக இருப்பவரும் ஒரு யூதர்.  தலைமை அமைச்சராகவும் இருந்தார்.

2. ஈரான் பேச்சு வார்த்தை: அமெரிக்காவும் ஈரானும் நடத்திக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையை இரசியா குழப்பலாம என இஸ்ரேல் கருதுகின்றது. அமெரிக்க ஈரானிய பேச்சு வார்த்தை முடிவிற்கு வரும் நிலையில் உள்ள வேளையில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் இரசியா சுதந்திரமாம ஈரானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

3. இஸ்ரேலியர்களின் மீள் வருகை: உலகெங்கும் வாழும் யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்து குடியேறி பலஸ்த்தீனியர்களிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துள்ள நிலங்களில் குடியேறி அங்கு யூதர்களின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் திட்டம். உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேல் சென்றுள்ளனர்.

உக்ரேனியப் போர் என்பது வெறும் நேட்டோ விரிவாக்கம் சம்பத்தப்பட்டது மட்டுமல்ல, இரசியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது உலகின் எதிர்காலத்தை முடிவு செய்யும் போர் ஆக உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போராகவும் இருக்கின்றது. பல நாட்டு தலைவர்கள் அப்போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்ச்சியில் ஈடு பட வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...