Monday, 7 February 2022

வேகமாக வளரும் இரசிய-சீன நட்பு

  


மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர். ஜோர்ஜியா, சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளிற்கு தயக்கம் இன்றி படையினரை அனுப்பினவர் புட்டீன். சீனா மற்ற நாடுகளிற்கு தனது படையினரை அனுப்ப தயக்கம் காட்டுகின்றது. அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை. 

வித்தியாசமான இரசிய சீன உறவு 

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற ஒரு கேந்திரோபாயப் பங்காண்மை அல்ல. அந்த உறவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற உயர் நிலை பொருளாதாரக் கூட்டமைப்பும் அல்ல. சீனாவினதும் இரசியாவினதும் ஆட்சி முறைமைகள் வேறுபட்டனவாக இருப்பதால் அந்த உறவு ஒரு கொள்கைக் கூட்டணியும் அல்ல. அதே வேளை அது தேவைக்கு ஏற்ப ஒன்று கூடி பின்னர் கால் வாரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியும் அல்ல. அது அமெரிக்க உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ளவும் இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்ச்சி. இரசியாவும் சீனாவும் 4200கிமீ நீளமான தரை எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு 2006-ம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. சீனா தனது கொல்லைப் புறத்தில் மக்களாட்சியில் வளர்ச்சியடைந்த தைவான் இருப்பதையும் இரசியா தனது எல்லையில் வளருகின்ற மக்களாட்சி கொண்ட உக்ரேன் இருப்பதையும் விரும்பவில்லை. உலகில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைக் கைப்பற்றக் கூடிய வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் கைப்பற்றும் எண்ணம் எந்த நாட்டுக்கும் இல்லை.

எரிபொருள் வர்த்தகம்.

சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பைக் குறைத்து இரசியாவில் இருந்து பெறும் இயற்கை வாயு மூலம் தனது எரிபொருள் தேவையை சமாளிக்க சீனா முயல்கின்றது. சைபீரியா வலு (Power of Siberia) என்னும் எரிவாயுக் குழாய்த்திட்டம் மூலம் இரசியா சீனாவிற்கு சைபீரியாவில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கவிருக்கின்றது. புட்டீனின் சீனப் பயணத்தின் போது இரசியாவின் Rosneft நிறுவனமும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனமும் சீனாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு மில்லிய தொன் எண்ணெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. எரிவாயு விநியோகத்தையும் தற்போது உள்ள ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லிய கன மீற்றர் அளவில் இருந்து 48பில்லியன் கமீ ஆக உயர்த்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. சீனாவின் பொருளாதாரம் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க ஆறு மடங்கு பெரியது. ஆனாலும் உலக அரங்கில் புட்டீனும் ஜின்பிங்கும் ஒருவருக்கு ஒருவர் இணையானவர்களாக செயற்படுகின்றார்கள்.  

இரசிய சீன கூட்டுப் போர்ப்பயிற்ச்சி

Vostok 2018என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியை இரசியாவும் சீனாவும் செய்யதனVostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய் மிகப்பெரிய படைபயிற்ச்சி இதுவாக அமைந்தது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபட்டன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி நடந்தது. Tsentr-2019 (Center-2019) என்னும் பெயரில் 2019 செப்டம்பர் 16-21 வரை இரசியாவும் சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான், கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்ஹ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளும் இணைந்து படைப்பயிற்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தன.

பொருளாதார ஒத்துழைப்பு

2001-ம் ஆண்டில் $10.7பில்லியனாக இருந்த இரசிய-சீன வர்த்தகம் 2021இல் 14 மடங்காக அதிகரித்து $140பில்லியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 35% அதிகரித்தது. இரசியா தனது ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க முயல்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரசியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நடுவண் ஆசிய நாடுகளூடாகவும் நடக்கின்றது. புட்டீனின் பயணத்தில் இரசியாவின் தலைமையிலான யூரோ ஆசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt and Road Initiative) ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

நாட்டுறவிலும் உயர்ந்த நட்பு

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவிலும் பார்க்க ஜின்பிங்கிற்கும் புட்டீனிற்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்கின்றது. இருவரும் தத்தம் நாடுகளைத் தாமே உயிருள்ளவரை ஆளவேண்டும் என விரும்புகின்றார்கள். இருவரும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் மனித உரிமை என்னும் பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றன என இருவரும் கருதுகின்றனர். நேட்டோ விரிவாக்கத்தை இரசியா எதிர்ப்பதை ஜீ ஜின்பிங் ஆதரிக்கின்றார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றார் புட்டீன்.

சீனாவிற்கு சாதகமான உறவா?

இரசிய சீன உறவு சீனாவிற்கு இரசியாவிலும் பார்க்க அதிக நன்மையளிப்பதாக இருக்கின்றது என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவரின் கவனம் முழுமையாக சீனாவின் பக்கம் போகாமல் உக்ரேன் பக்கமும் போகச் செய்வதாக புட்டீன் உக்ரேனுக்கு எதிராகச் செய்யும் படை நகர்வுகள் அமைந்துள்ளன. பராக் ஒபாமா ஆசிய சுழற்ச்சி மையம் என்ற முன்னெடுப்பைச் செய்ய முயன்றபோது இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்ததால் அவர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா பன்னாட்டுக் கடல் பிராந்தியம் எனக் கருதும் தென் சீனக் கடலில் சீனா இரு செயற்கைத் தீவுகளை அமைத்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு எதிராகச் செய்ய முயலும் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்கு சீனாவில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரு படி உறவை உயர்த்தும் கூட்டறிக்கை

2021 ஜனவரியில் சீனாவின் ஊடகத்தில் இரசிய அதிபர் புட்டீன் எழுதிய Russia and China: A future-oriented strategic partnership என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இரசிய சீன உறவின் மேம்பட்ட நிலைக்கு சான்றாகி நிற்கின்றது. 2022 பெப்ரவரி 4-ம் திகதி இரு நாட்டுத் தலைவர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐயாயிரத்தி முன்னூறுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்த நீண்ட அறிக்கையில்:

1. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது உள்ள ஒன்றிற்கொன்று நன்மையளிக்கும் சிறந்த உறவை தொடர்ந்தும் பேணுவதும் மேம்படுத்துவதும்;

2. இரசியாவின் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt & Road Initiative) இணைந்து செயற்படுவது.

3. ஆர்க்டிக் வலயத்தில் இணைந்து செயற்படுவது.

4. இரு நாடுகளும் உலக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவாலையிட்டு கரிசனை கொண்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இன்னொரு நாட்டின் பாதுகாப்பை பலியிடக் கூடாது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

5. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இரு நாடுகளும்

அறம்சார் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் விதிகளுக்கமைந்த உலக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.

6. நேட்டோ விரிவாக்கத்தை இரு நாடுகளும் எதிர்க்கின்றன. (உக்ரேன் என்ற வார்த்தையே அந்த கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.)

7. இரசியா-சீனா-இந்தியா என்றவடிவத்தில் ஒத்துழைப்பை விரும்புகின்றோம்.

8. கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒத்துழைக்க விரும்புகின்றோம்.

இரசியாவும் சீனாவும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது அவற்றின் பொது எதிரிகளுக்கு பெரும் சவாலாகும். பல நட்புக்களின் வலிமையை பொது எதிரியே முடிவு செய்கின்றான். அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குளிகால ஒலிம்பிக்-2022இல் நடுங்குகின்றது.

இரசிய சீனக் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.bilaterals.org/?joint-statement-of-the-people-s

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...