Monday, 29 March 2021

அமெரிக்க சீனப் பனிப்போர் ஆரம்பிக்கவில்லை

  


முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்புக்  கேந்திரோபாயத்தில் அமெரிக்கா கட்டியெழுப்பிய அமெரிக்காவை சுற்றிய உலக ஒழுங்கை சீனா இல்லாமற் செய்து தனக்கு சாதகமான ஓர் உலக ஒழுங்கை கட்டி எழுப்ப முயல்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. டிரம்ப்பின் பதவிக்காலத்தில் மோசமடைந்திருந்த அமெரிக்க சீன உறவு ஜோ பைடன் பதவிக்கு வந்த பின்னர் சிறிது தணிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிகாவின் வட துருவ மாநிலமான அலாஸ்க்காவில் 2021 மார்ச் மாதம் 19-ம் 20-ம் திகதிகளில் நடந்த அமெரிக்க சீனப் பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் விதிக்கப்பட்ட மேலதிக வரிகளை இல்லாமற் செய்யத் தவறிய இரு தரப்பினரும் பகிரங்கமாக ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக்கொண்டனர். அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் மேலதிக வரி நீக்கம் தொடர்பான உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவெ உள்ளன.

சீன அமெரிக்க உறவு சோவியத் அமெரிக்க உறவு போலல்ல.

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் நடந்த வர்த்தகம் சீன அமெரிக்க வர்த்தகம் போல் பாரிய அளவிலானது அல்ல. சீனாவால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சோவியத் ஒன்றியத்தால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல் போல் மோசமானதுமல்ல. சோவியத் ஒன்றியம் உலகெங்கும் பரப்ப முயன்ற பொதுவுடமை ஆட்சி முறைமை அமெரிக்கர்களின் வாழ்வையே தலைகீழாக மாற்றிவிடும் என அமெரிக்கர்கள் 1950இல் இருந்து கரிசனை கொள்ளத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போர் முடிந்த போது 1. உலக தங்க இருப்பின் மூன்றில் இரண்டு பங்கை அமெரிக்கா வைத்திருந்தது. 2. உலக மூலதனத்தின் முக்காற் பங்கு அமெரிக்காவினுடையது. 3. உலக மொத்த தேசிய உற்பத்தியின் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவினது. 4. உலக தொழிற்துறை உற்பத்தியில் அரைப்பங்கு அமெரிக்காவினுடையது. அந்த நிலையை தொடர்ந்து பேண அமெரிக்காவிற்கு உலக ஆதிக்கப் தேவைப்பட்டது. அமெரிக்காவும் சோவியத்தும் தம் பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றில் ஒன்று பெரிதும் தங்கியிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசியா துருக்கி நீரிணையையும் ஈரானையும் கைப்பற்றும் திட்டத்தை வைத்திருந்தது. அப்போது சோவியத் பரப்ப முயன்ற பொதுவுடமைத் தத்துவத்திற்கு உலகெங்கும் கணிசமான வரவேற்ப்பும் இருந்தது. பிரித்தானிய மக்கள் தமக்கு போரை வென்று கொடுத்த வில்ஸ்டன் சேச்சிலை தேர்தலில் தோற்கடித்து சமுகவுடமைக் கட்சியான தொழிற்கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். 1949இல் சீனாவில் பொதுவுடமை ஆட்சி ஏற்பட்டது. உலகெங்கும் பல நாடுகளை பொதுவுடமைவாதிகள் புரட்சி மூலம் கைப்பற்ற முயன்றனர். சோவியத் ஆதரவுடன் நடக்கும் புரட்சிகளைத் தடுக்கவே பனிப்போர் தீவிரமானது. சீனா தனது பொதுவுடமைவாதத்தை மற்ற நாடுகளுக்கு பரப்ப இப்போது முயல்வதில்லை. ஆனால் சீனாவின் வெற்றிக்குக் காரணம் அதன் ஆட்சிமுறைமைதான் என்பதை உலக அரங்கில் பறைசாற்றுகின்றது. அப்படிப் பறைசாற்றுவதன் நோக்கம் தனது ஆட்சிமுறைமையை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதற்கல்ல. மாறாக சீனர்கள் தமது ஆட்சி முறைமை பற்றி பெருமையும் மகிழ்ச்சியுமடைய வேண்டும் என்பதற்காகவே. ஹொங் கொங் மக்களுக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட மக்களாட்சி உரிமையை சீனா படிப்படியா இல்லாமல் செய்வதும் ஹொங் கொங்கின் ஆட்சி முறைமைமீது பிரதான சீன நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு விருப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே. British Exceptionalism, American Exceptionalism போன்றவை பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் தம்மை மற்ற உலக மக்களிலும் பார்க்க மேம்பட்டவரக்ள் என சிந்திக்கும் கொள்கையாகும். அதே போல் சீனர்களுக்கும் Chinese Exceptionalism என்ற சிந்தனை வரவேண்டும் என சீன ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள்.

ஒன்றின் மீது ஒன்று தங்கியுள்ளன

அமெரிக்காவினதும் சீனாவினதும் பொருளாதாரங்கள் ஒன்றில் ஒன்று பெரிதும் தங்கியுள்ளன. சீனா அமெரிக்காவிற்கு 435பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கின்றது. அமெரிக்கா சீனாவிற்கு 125பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கின்றது. அமெரிக்காவின் திறைசேரியின் முறிகளை அதிகம் வாங்கி வைத்துள்ள நாடு சீனாவாகும். 2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

போர் இன்றி சீனாவால் தொடர முடியுமா?

அமெரிக்காவை சீனா அடக்குவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு போர் நடக்க வேண்டும். அமைதியான எழுச்சி என்னும் பெயரில் தனது பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய சீனாவின் படையினர் எந்த ஒரு காத்திரமான போர் முனை அனுபவங்களும் இல்லாதவர்களாக இருக்கின்றார். சீனக் கடற்படையில் அட்மிரல் பட்டம் பெறத் தகுதியான போர் அனுபவம் யாருக்கும் இல்லை என்கின்றனர் மேற்கு நாட்டு படைத்துறை நிபுணர்கள். கிரேக்க சரித்திரவியல் வல்லுனரான துசிடைட்டின் கருத்துப் படை புதிதாக ஒரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் வல்லரசுடன் போர் புரிந்தே ஆக வேண்டும். இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் இடையில் நடந்த போர், இரண்டு உலகப் போர்கள் போன்றவை புது வல்லரசுகள் உருவாக முயன்ற போது உருவானவையே. ஆனால் அமெரிக்காவும் இரசியாவும் நேரடிப் போர் செய்யவில்லை. இரண்டும் ஒன்றிற்கு ஒன்று தம் வலிமையைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தன. அதே போல் சீனாவும் தன் வலிமையைக் காட்டி அமெரிக்காவை தனது பிராதியத்தில் இருந்து விலகச் செய்வது கடினமான ஒன்றாகும்.

சீனக் கனவு

2021 ஜூலையில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவடைகின்ற போதும் 2049இல் சீன பொதுவுடமைப் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவடையும் போதும் சீனா எட்ட முடிவு செய்து வைத்திருந்த இலக்குகள் சீனக் கனவு எனப்படும். இந்தக் கனவுத் திட்டத்தில் சீனா மற்ற நாடுகளுடன் இசைவிணக்கமான உறவையே விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. சீன விரிவாக்கம் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் 2030-ம் ஆண்டின் பின்னர் சீன மக்கள் தொகைக் கட்டமைப்பில் வயோதிபர்கள் அதிகமாகவும் இளையோர் குறைவாகவும் இருக்கும் நிலை உருவாகும். அதனால் ஏற்படப்போகும் பொருளாதாரப் பின்னடைவை சமாளிக்க உலகெங்கும் சீனா முதலீடு செய்கின்றது. தனது வெளிநாட்டு முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாயை வைத்து தனது மக்களை பராமரிக்க சீனா விரும்புகின்றது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீனா ஒரு பெரிய போரில் ஈடுபட்டால் அதன் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படையும். 2018-ம் ஆண்டு சீன மக்கள் தொகை 1.39பில்லியன்கள் எனவும் 2019இல் அது 1.4பில்லியன்களாக உயர்ந்ததாகவும் சீன அரசு அறிவித்திருந்தது. வழமையாக ஒவ்வொரு மார்ச் மாதமும் முந்தைய ஆண்டின் மக்கள் தொகையை அறிவிக்கும் சீனா 2021மார்ச்சில் இறுதிவரை தனது மக்கள் தொகைக் கணக்கை வெளிவிடவில்லை. மக்கள் தொகை சீன அரசு விரும்பியது போல் இல்லை என்பதால் வெளிவிடப்படவில்லை என ஐயம் தெரிவிக்கப்படுகின்றது. தனது பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்தி அறிக்கை விடுவது போல் சீனா தனது மக்கள் தொகையையும் மிகைப்படுத்திச் சொல்வதாக குற்றம் சாட்டப்படுகின்றது. தமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதையிட்டு பல சீனர்கள் பெருமையடைகின்றார்கள் என்பதை சீன அரசு நன்கு அறியும். சிலர் சீனாவின் மொத்த மக்கள் தொகை 1.26முதல் 1.28பில்லியனாக இருக்கலாம் என மேற்கு நாடு மக்கள் தொகை கண்ப்பீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் அமெரிக்க ஊடகம் China this century is on track to experience history’s most dramatic demographic collapse in the absence of war or disease எனத் தெரிவித்துள்ளது.  

அமெரிக்கா வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதா?

அமெரிக்காவின் பொருளாதாரம் முன்பு வளர்ந்தது போல் இனி வளர முடியாது என சீனா நம்புகின்றது. உலகெங்கும் படைத்தளங்களை வைத்து பராமரிக்க முடியாமல் பிரித்தானியா பின் வாங்கியதைப் போல அமெரிக்காவும் பின்வாங்கும். அப்போது ஏற்படும் இடைவெளியை தான் போர் இன்றி நிரப்பிக் கொள்ளலாம் என சீனா நம்புகின்றது. அதற்காக புதிய பட்டுப்பாதை, கடல் வழிப்பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை, பொருளாதாரப்பாதை என பல திட்டங்களை சீனா முன்னெடுக்கின்றது. ஆனால் அமெரிக்கா தான் விழ மாட்டேன் எனவும் சீனாவை மேலும் எழ அனுமதிக்க மாட்டேன் எனவும் நம்புகின்றது. அமெரிகாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அமெரிக்காவிற்கு சாதகமான தொழில்நுட்ப இடைவெளியை மேலும் அதிகரிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இன்னும் எண்பது ஆண்டுகளில் அமெரிக்காவின் மக்கள் தொகை சீனாவிலும் பார்க்க அதிமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா மக்கள் தொகையை குடிவரவு மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். சீன மக்களோ ஆட்சியாளர்களோ குடிவரவை விரும்புவதாக தெரியவில்லை.

பனிப்போரல்ல

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடயிலான போர் சீனா தைவானைக் கைப்பற்ற முயலும் போது நடக்கலாம். சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சி செய்யும் போது அதை தடுக்க அமெரிக்கா வகுக்கும் வியூகத்தை பார்த்து சீனா தயக்கம் காட்டினால் அது அமெரிக்க சீன பனிபோரின் ஆரம்பம் என்று சொல்லலாம். அல்லது சீனாவின் வலிமைப் பெருக்கத்திற்கு இனி தன்னால் ஈடு கொடுக்க முடியாது என அமெரிக்கா சீனாவைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் இருந்து விலகிச் சென்றால் போரோ பனிபோரே ஆரம்பமாக மாட்டாது. சீனா இந்த இரண்டாவது முறையை நோக்கியே தனது நகர்களைச் செய்ய விரும்பும். அமெரிக்க சீன போர் அல்லது பனிப்போர் தைவானை தன்னுடன் இணைக்க முயலும் போது ஆரம்பமாகும். தைவானியர்கள் வேண்டாம் ஐயா எமத் நாட்டை சுற்றி இரு வல்லரசுகளின் முறுகல் நாம் பேசாமல் சீனாவின் ஒரு மாகாணமாக இருந்து விட்டுப் போகின்றோம் எனவும் முடிவு செய்யலாம். அதற்கு சீனாவின் பொருளாதாரம் தைவானியர்கள் விரும்பும் அளவிற்கு செழுமையானதாக இருக்க வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...