Sunday, 14 March 2021

மத்திய கிழக்கில் புதிய படைத்துறைக் கூட்டமைப்பு உருவாகுமா?

 


2021 மார்ச் 7-ம் திகதி அமெரிக்காவின் கேந்திரோபாய குண்டு வீச்சு விமானங்களான பி-52 இரண்டு இஸ்ரேல், சவுதி அரேபியா, காட்டார் ஆகிய நாடுகளின் போர்விமானங்கள் புடைசூழ மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பில் பறந்தன. அமெரிக்காவில் இருந்து கிளம்பிப் பறந்த இரு B-52 Stratofortress விமான்ங்களுடன் இடையில் வைத்து மற்ற விமானங்கள் இணைந்து கொண்டன. இந்த ஆண்டில் மத்திய கிழக்கில் இப்படியான நான்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களை தடுக்கவும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பங்காளி நாடுகளிற்கும் நட்பு நாடுகளிற்கும் அவற்றின் பாதுகாப்பை இட்ட கரிசனையைக் கருத்தில் கொண்டும் இந்த விமானப் பறப்புக்கள் மேற்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கை

அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கையில் 1. உலக எரிபொருள் விநியோகம், 2. இஸ்ரேலின் பாதுகாப்பு, 3. இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றிற்கான முக்கியத்துவம் இப்போது குறைந்து விட்டது. இஸ்ரேல் படைத்துறையிலும் உளவுத்துறையிலும் முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அயல் நாடுகள் தனித்தோ அல்லது பல ஒன்றிணைந்தோ அதன் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈரான் இஸ்ரேல் கரிசனை கொள்ளும் அளவிற்கு தனது படைகல உற்பத்தியை பெருக்குகின்றது. ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியிலும் யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் பலரை அமெரிக்கா அழித்த நிலையிலும் பல அரபு நாட்டு செல்வந்தர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்குவதைக் நிறுத்திய நிலையிலும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம் தீவிரமடைய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் எரிபொருள் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருப்பதால் அது தனது தேவையின் 40%ஐ உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 42% மற்ற அமெரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. தனது தேவையில் 12%ஐ மட்டுமே வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா பெறுகின்றது. அதனால் அமெரிக்காவில் தமது பாதுகாப்புக்கு தங்கியிருந்த வளைகுடா நாடுகள் தமது பாதுகாப்பில் மாற்றம தேவை என்பதை உணர்ந்துள்ளன.

பொருளாதாரம் வளராத போதும் தளராத ஈரான்

மேற்கு நாடுகளின் கடுமையான பொருளாதார தடைகளை ஈரான் சமாளித்துக் கொண்டிருக்கின்றது. உலகில் மிக வலிமை மிக்க இரு உளவுத்துறைகளால் ஈரானில் ஓர் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை. பராக் ஒபாமாவில் ஆட்சிக் காலத்தில் ஈரானில் மிதவாதிகளின் கைகளுக்கு ஆட்சியை மாற்றும் முயற்ச்சியும் தோல்வியடைந்தது. 2019இல் 7.6% பொருளாதார வீழ்ச்சியைக் கண்ட ஈரானியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் கொவிட்-19 தொற்று நோய்க்கு நடுவில் தன் பொருளாதார வீழ்ச்சியை 6% ஆகக் குறைத்தது. 2021இல் ஈரானியப் பொருளாதாரம் 3%இலும் அதிக வளர்ச்சியடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஈரானியர்களின் தனி நபர் வருமானம் 12,912 டொலர் இது இந்தியாவின் 6,920 டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்ததாகும். இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானின் புளோட்டோனியம் உற்பத்தி தொடர்பாக முறைசாரா பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது. அரபு நாடுகளையும் இஸ்ரேலையும் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான முதன்மைக் காரணம் ஈரான் ஆகும். ஈரானுடைய படைத்துறை வளர்ச்சி இவர்களை கரிசனை கொள்ள வைத்தது. பல பன்னாட்டு ஊடகங்களில் “எப்படி ஈரான் இஸ்ரேலையும் அரபு நாடுகளையும் ஒன்றுபட வைத்தது?” என்பது போன்ற தலைப்பில் பல கட்டுரைகள் 2020-ம் ஆண்டு வெளிவந்தது.

துருக்கியின் பிராந்திய ஆதிக்கம்

துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கையில் கடந்து மூன்று ஆண்டுகளாக பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்காசியா, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா ஆகிய பிராந்தியங்களில் துருக்கி தனது ஆதிக்கத்தை வளர்க்க முயல்கின்றது. சிரியா, லிபியா, போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போரிலும் அஜர்பைஜான் ஆமீனியா ஆகிய நாடுகளுக்கிடையிலான போரிலும் துருக்கி காத்திரமான பங்குகளை வகுத்தது. அரபுக்கள், ஈரானிய, துருக்கியர் ஆகிய மூன்று பெரும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இனங்களிடையேயான போட்டி நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

சவுதி எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல்

யேமனில் இருந்து செயற்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி போராளி அமைப்பினர் 2021 மார்ச் மாதம் 8-ம் திகதி சவுதி அரேபிய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் கொண்டு நடத்திய தாக்குதலை இட்டு சவுதி மட்டுமல்ல அமெரிக்காவும் கரிசனை கொண்டுள்ளது. சவுதிக்கு அமெரிக்க வழங்கும் வான் பாதுகாப்புகளையும் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்த மாதிரியான தாக்குதல்கள் 2015-ம் ஆண்டு ஏழு தடவையும், 2016இல் பத்து தடவையும் 2017இல் ஒன்பது தடவையும் 2018இல் முப்பதிற்கு மேற்பட்ட தடவையும், 2019இல் பதினெட்டு தடவையும் 2020இல் வழிகாட்டல் ஏவுகணைகள் உட்பட பல தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட ஆளில்லா விமானங்களையும் கொண்டு ஹுதி அமைப்பினர் சவுதி மீது தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா யேமனில் செய்யும் பல குண்டுத்தாக்குதலால் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் கூட கண்டித்திருந்தன.

இஸ்ரேலிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய வர்த்தகக் கப்பல் மீது 2021 பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் தாக்குதல் நடாத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஐநா சபையில் ஈரானிய தூதுவர் அதைக் கடுமையாக மறுத்திருந்தார். ஈரானின் ஆதரவுடம் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரியப் போரின் போது நேரடிப் போர்ப்பயிற்ச்சியையும் புதிய படைக்கலன்களை இயக்கும் திறனையும் பெற்றுள்ளது. ஹிஸ்புல்லாவை அடக்க இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.

படைத்துறைக் கூட்டமைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் படைத்துறைக் கூட்டமைப்புக்கள் அவ்வப்போது உருவாகுவதுண்டு. 1955இல் துருக்கி, ஈரான், ஈராக், பாக்கிஸ்த்தான், ஐக்கிய இரச்சியம் ஆகிய நாடுகளை அமெரிக்கா ஒன்றிணைத்து ஈராக்கின் பாக்தாத் நகரில் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை கைச்சாத்திட வைத்தது. இதன் மூலம் மத்திய உடன்படிக்கை நாடுகள் என்ற படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் மத்திய கிழக்கு விரிவாக்கத்தை தடுப்பதே. ஈரானிலும் ஈராக்கிலும் நடந்த ஆட்சி மாற்றங்களால் இந்த அமைப்பு 1979இல் கலைக்கப்பட்டது. எகிப்திய முன்னாள் அதிபர் கமால் நாசரும் சிரிய முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அசாத்தும் ஓர் அரபு நாட்டு பாதுகப்பு கூட்டமைப்பு உருவாக்க எடுத்த கடும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. இப்போது இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் ஆகிய நாடுகளிடையேயான படைத்துறை மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு அணமைக்காலங்களாக அதிகரித்து வருகின்றன. இவற்றினிடையேயான ஒத்துழைப்பு ஈரான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தலை சமாளிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டவை. சவுதி, அமீரகம், பஹ்ரேன் ஆகிய நாடுகளின் மன்னர்கள் தமக்கு எதிராக தமது படையின் சதி செய்யாமல் இருப்பதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் ஒத்துழைப்பை நாடுகின்றன. இஸ்ரேலுடன் வர்த்தகம், படைத்துறை, உளவு போன்றவற்றில் மற்ற மூன்று நாடுகளும் ஒத்துழைப்பது 2020-ம் ஆண்டில் பெருமளவு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் மீது தங்கியிருப்பதை குறைக்க நான்கு நாடுகளும் விரும்புகின்றன. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் இஸ்ரேலிடமிருந்து அந்த தொழில்நுட்பத்தை வாங்க விரும்புகின்றன. இஸ்ரேலின் IRON DOME, DAVID’S SLING and ARROW ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளிலும் அந்த மூன்று நாடுகள் அக்கறை காட்டுகின்றன. முன்பு மத்திய கிழக்கு உறவுகளிலும் போர்களிலும் தலைமை வழங்கிய எகிப்து இப்போது முன்னணியில் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது நடக்கும் லிபியா உள்நாட்டு போரில் எகிப்த்து பங்கு வகிக்கின்றது என்பது செய்தியில் அடிபடுகின்றது.

படைத்துறை ஒத்துழைப்பும் கூட்டமைப்பும் வெளியார் தலையீடின்றி தமது நிலையை உணர்ந்து நல்ல நோக்கதுடன் முன்னெடுக்கப்படும் போது மட்டுமே வெற்றியளிக்கும் என்பதற்கு 1955இல் பக்தாத்தில் உருவாக்கப் பட்ட படைத்துறைக் கட்டமைப்பை போலவே பயனின்றிப் போகும். அரபு ஆட்சியாளரக்ளும் இஸ்ரேலியர்களும் மட்டுமே ஒத்துழைக்கின்றனர். அரபு மக்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் ஈரானை வெறுப்பார்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...