Monday, 8 March 2021

அமெரிக்காவின் புதிய லேசர் படைக்கலன்கள்


தற்போதுள்ள லேசர் படைக்கலன்களிலும் பார்க்க ஒரு மில்லியன் மடங்கு வலிமையுள்ள லேசர் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.

லேசர் என்பது என்ன?

லேசர் என்பது செறிவாக்கப்பட்ட ஒளிக்கதிர்கள். Light Amplification by Stimulated Emission of Radiation என்பதை அதன் முதலெழுத்துக்களைக் கொண்டு ஆக்கப்பட்ட சொல் LASER ஆகும். அவ்வகையில் லேசர் என்பது ஒளியை மிகையாக்கி தூண்டப்பட்ட கதிர்வீச்சு செய்யும் கருவியாகும். லேசர் ஓரியல்பான, ஒற்றை நிறமுடைய, திசைப்படுத்தப்பட்ட, மிகச்செறிவான ஒளிக்கதிராகு, பொதுவாக ஒளியில் ஏழு நிறங்கள் கலந்துள்ளன. ஆனால் லேசரில் ஒரு நிறம் மட்டுமே இருக்கும். எரியும் தீயில் அல்லது ஒளிரும் மின் குமிழில் இருந்து பல திசைகளிலும் ஒளி வீசப்படும். ஆனால் லேசர் கருவியில் இருந்து வரும் ஒளி ஒரு திசையில் மட்டும் செல்லும். மற்ற ஒளி மூலங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் பல் வேறுபட்ட அலைநீளங்களைக் (Wavelengths) கொண்டிருக்கும். ஆனால் லேசரில் இருந்து வரும் ஒளி ஒரே அலைநீளத்தைக் கொண்டது. மருத்துவம் உட்படப் பல பயந்தரு துறைகளின் லேசர் கதிர்கள் பாவிக்கப்படுகின்றன.


பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.



விமானம் தாங்கி கப்பல்களை எதிர்க்க ஹைப்பர் சோனிக்

அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள  hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது.  ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கிய பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் ஏவுக் ஆயிரம் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் பெறுமதியான ஏவுகணையை வீச வேண்டியுள்ளது.

விமானங்களில் லேசர் படைக்கலன்கள்

விமானங்களில் பொருத்தக் கூடிய அளவிற்கு சிறிய லேசர் கதிர் பிறப்பாக்கிகளை அமெரிக்கா பல வழிகளில் முயற்ச்சி செய்வதாக 2015-ம் ஆண்டளவில் செய்திகள் வெளிவந்திருந்தன. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் இருந்து அமெரிக்க போர் விமாங்களைப் பாதுகாக்க அவை அவசியமாகும். அமெரிக்கா இரகசியமாக உருவாக்கி வைத்திருக்கும் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளும் நுண்ணலைப் பிறப்பாக்கிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும் எனவும் கருதப்படுகின்றது. 2021 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவின் விமானப் படையினர் விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளை பொருத்திப் பரிசோதித்தன. The Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அவை அழைக்கப்படுகின்றன.


ஆளில்லா விமானங்க்ளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா போர் விமானங்களை வலிமை மிக்க ஒரு படை நிலைமீது அல்லது விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது தாக்குதல் செய்யும் பாது அவற்றின் மீதுள்ள விமான எதிர்ப்பு படைக்கலன்களால் எல்லாவற்றையும் அழிக்க முடியாத நிலை ஏற்படும். அதில் ஒரு சில ஆளில்லா விமானம் தன் இலக்கை தாக்கும். இத்தகையக குளவித் தாக்குதல் முறைமையை எதிர் கொள்ள லேசர் கதிர்களும் நுண்ணலை கதிர்களும் பாவிக்கப்படுகின்றன. தற்போது ஆளில்லா விமானங்களை இரு நூறு டொலர் செலவு செய்து உருவாக்க முடியும். ஒரு தீவிரவாத அமைப்பால் பல நூறு ஆளில்லா விமானங்களை தாக்குதலுக்கு அனுப்பும் போது அவை ஒவ்வொன்றையும் ஒரு இலட்சம் பெறுமதியான ஏவுகணைகளால் தாக்கி அழிப்பது செலவு மிக்கதாகும். அவற்றை லேசர் கதிர்களால் அழிப்பது செலவு குறைந்ததாகும்.

உத்திசார் லேசர் படைக்கலன்கள் (Tactical Laser Weapons)

பொதுவாக லேசர் கதிர்களும் நுண்ணலைக் கதிர்களும் எதிரி இலக்குகளை கருக்கி சாம்பலாக்கும் அல்லது ஆவியாக்கும். ஆனால் அமெரிக்கா உருவாக்கியுள்ள Tactical Ultrashort Pulsed Laser (UPSL) எதிரியின் ஏவுகணைகள் உட்பட பல படைக்கலன்கள் மீது வீசப்படும் போது அவற்றின் மின்காந்த மற்றும் மின்னணு போன்றவற்றால் செயற்படும் கருவிகளை செயற்படாமல் செய்துவிடும்.

அமெரிக்கா மட்டுமல்ல சீனாவும் இரசியாவும் லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சில வகைப்படைக்கலன்களை உருவாக்கியும் விட்டன.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...