Monday, 21 December 2020

சீனாவிற்கு தன்னம்பிக்கை இல்லையா?

 


சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19வது நடுவண் குழு 2020 ஒக்டோபர் 26 – 29 திகதிகளில் கூடி 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைபை உருவாக்கியது. அதன் முழு விபரமும் 2021 மார்ச் மாதத்தில் நடக்கும் தேசிய மக்கள் பேராயம் (National People’s Congress) என்னும் 2980 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள சீன நாடளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும். 1953-ம் ஆண்டில் இருந்து சீனா ஐந்தாண்டு திட்டங்களை வரைந்து அவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனா அடைந்துள்ள தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். சீனா தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கின்றது என அதன் புள்ளி விபரங்கள் சொன்னாலும் அதன் ஆட்சியாளர்களோ பொருளாதார திட்டமிடுபவர்களோ சீனா தொடர் பெருதார வளர்ச்சியடைவது போல் செயற்படுவதில்லை. சீனப் பொருளாதாரத்தையிட்டு அவர்கள் தொடர்ச்சியாக கரிசனை கொண்டவர்களாகவே செயற்படுகின்றனர்.

பெருமையடைந்த சீனர்கள்

சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 1) 2035இல் சீனாவின் சமூகவுடமையை நவீனமயமாக்கல். 2) உயர் கதி உயர் தரப் பொருளாதார வளர்ச்சி, 3) விநியோகப் பக்க சீர்திருத்தம், 4) தொழில்நுட்ப மேம்பாடு, 5) தேச வலிமை, 6) முலதன நகர்வுகளை அனுமதித்தல், 7) உற்பத்தித் துறையை பசுமயாக்குதல்,. சீனா கொவிட்-19 தொற்று நோயைக் கையாண்ட விதத்தையிட்டு சீனாவின் எல்லாத் தரப்பினரும் பெருமையடைந்துள்ளனர். உலகின் முன்னணி நாடுகளில் சீனா மட்டுமே 2020இல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் கிடைத்த நம்பிக்கை சீனாவின் புதிய ஐந்தாண்டு திட்டத்தில் பிரதிபலிக்கின்றது.



நிதிச் சந்தையை திறந்தவிட்ட சீனா

சீனா தனது 15ரில்லியன் டொலர் பெறுமதியான நிதிச் சந்தையில் வெளிநாட்டவர்களும் பங்கு பற்றலாம் என 2020 நவம்பரில் அறிவித்தது. அதனால் சீர அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டவர்களிடம் கடன் வாங்கலாம். அதாவது சீனக் கடன்முறிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய சீன அரசு அனுமதித்துள்ளது. இது சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டம்-2021-25இன் ஓர் அம்சமாகும். அத்திட்டத்தின் படி சீனர்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம். அதாவது இதுவரை ஐ-போன்களை வாங்கி வந்த சீனர்கள் இனி அப்பிள் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கலாம். சீனாவின் பல உள்ளூராட்சி அமைப்புக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் முதலீட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறியப் படுகின்றது. இதனால் சீனா வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சீனாவில் ஏன் முதலீட்டு தட்டுப்பாடு?

சீனப் பொருளாதாரத்தின் வலுவற்ற புள்ளி

பொருளாதாரத்தில் விநியோகப் பக்கம், கேள்விப்பக்கம் என இரு பக்கங்கள் உள்ளன. கேள்விப் பக்கத்தில் பொருளாதாரத்தில் செய்யப்படும் முதலீடு, நாட்டு மக்களின் மொத்தக் கொள்வனவு, நாட்டில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. விநியோகப் பக்கத்தில் நாட்டின் மக்களின் உழைப்பு, நாட்டில் செயற்படும் மூலதனம், தொழில்நுட்பம், அரசின் செயற்பாடுகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனாவின் கேள்விப் பக்கத்திலும் பார்க்க விநியோகப் பக்கம் அதிகமாக உள்ளது. அதனால் சீனப் பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியுள்ளது. தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் சீன மக்களின் கைகளில் அதிக நிதி இருக்க வேண்டும். அதனால் அவர்கள் அதிக கொள்வனவைச் செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் அதன் மொத்த தேசிய உற்பத்தி அதன் மக்களின் கொள்வனவிலேயே பெரிதும் தங்கி இருக்கின்றது. சீன மக்கள் ஏன் இன்னும் பொருளாதாரத்திற்கு தேவையான கொள்வனவைச் செய்யவில்லை?

ஆன்மீக அமைப்பிற்கே அஞ்சுகின்றதா சீனா?

சீனாவின் ஃபலுங் கொங் (Falun Gong) என்ற ஆன்மிக அமைப்பின் வலைத்தளங்களை சீன அரசு தடை செய்தது. அதன் வலைத்தளங்கள் மீது சீன அரசும் பொதுவுடமைக் கட்சியினரும் பல இணையவெளித் தாக்குதல்களை மேற்கொண்டனர். பிரித்தானியாவின் உள்ள வொடாஃபோன் நிறுவனத்தின் கைப்பேசிகளிலும் அவை தடை செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் தியானம் செய்வதை முக்கிய செயற்பாடாக் கொண்ட இந்த அமைப்பை சீனா ஏன் தடை செய்ய வேண்டும் என்பது முதற் கேள்வி. இரண்டாவது கேள்வி சீன அரசு ஹுவாவே நிறுவனம் மூலம் ஹுவாவேயின் கருவிகளைப் பாவிக்கும் வெடாஃபோன் நிறுவனத்தின் கணினிகளை ஊடுருவி ஃபலுங் கொங் நிறுவனத்தின் இணையவெளித் தளத்தை தடை செய்ததா? இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க வொடாஃபோன் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது தொடர்பான உண்மைகள் வெளிவந்தால் வொடாஃபோன் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என அது அஞ்சுகின்றதா என்பதும் ஒரு கேள்வியாக உருவெடுக்கின்றது. தொடர்ச்சியாக பொருளாதார வெற்றியைக் கண்டு வரும் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் ஏன் ஒரு தியான அமைப்பிற்கு அஞ்சுகின்றார்கள்?

ஏன் இந்த இறக்குமதிக் கட்டுப்பாடு?

தொடர்ச்சியாகப் பொருளாதார வெற்றியை அடைந்த நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வரும் பொருட்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளையோ இறக்குமதி வரிகளையோ விதிக்க வேண்டியதில்லை. தமது நாட்டு மக்கள் தரமான பொருட்களை வாங்கி அனுபவிக்கட்டும் என அரசு அனுமதியளிக்கும். ஆனால் சீனா அப்படிச் செய்வதில்லை. பல சந்தர்ப்பங்களில் வேண்டு மென்று சில குற்றச் சாட்டுகளை முன் வைத்து வெளிநாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு பொருட்கள் வருவதை சீனா தடை செய்கின்றது. 2020 டிசம்பர் முதல் வாரத்தில் ஒஸ்ரேலியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதியாகும் ஆட்டு இறைச்சியை சீனா தடை செய்துள்ளது. ஒஸ்ரேலியாவில் இருந்து வரும் ஆட்டு இறைச்சி மூலம் சீனாவில் கோவிட்-19 தொற்று நோய் பரவும் என சீன அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் சீனா ஒஸ்ரேலியாவிற்கு பல மிரட்டல்களையும் விடுத்துள்ளது. சீனாவைப் பகைத்தால் சீனா ஒஸ்ரேலியாவிற்கு மோசமான எதிரியாகும் என சீனா தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு மற்ற நாடுகளுடன் எப்படி பொருளாதார ஒத்துழைப்புக்களை மேற்கொள்வது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தும். மற்ற நாடுகளை மிரட்டுவது ஒரு பொருளாதார வளர்ச்சியடைந்த நாட்டுக்கு உரியதல்ல.

வெளிப்படைத் தன்மைக்கு ஏன் அஞ்ச வேண்டும்?

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீன ஊடகங்கள் எப்போதும் அரசுக்கும் பொதுவுடமைக் கட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கின்றார். சீன ஊடகர்களின் மனதில் ஜீ ஜின்பிங்கின் சிந்தனைகள்தான் படைக்கலன்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கையாக இருக்கின்றது. தொடர் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாட்டு மக்களுக்கு ஊடக சுதந்திரம் சிறந்த தகவல் வழங்கலாம். ஆனால் சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதில்லை. வெளிநாட்டு ஊடகர்கள் மீதும் சீனாவில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சீனா தன் உண்மை முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...