Wednesday 7 October 2020

ஆர்மேனிய அஜர்பைஜானியப் போர்

  


2020-09-27-ம் திகதி ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் போர் ஆரம்பித்துள்ளது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதற்கான போர் இதுவாகும். இப்போர் இந்த இரு நாடுகளுக்கும் ஆதரவு கொடுக்கும் வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே முறுகலை உருவாக்கும். அதனால் இரு சிறிய நாடுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் என இப்போரை ஒதுக்கிவிட ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். ஆர்மேனியாவில் கிருத்தவர்களும் அஜர்பைஜானில் துருக்கிய மொழி பேரும் இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர் என்பதால் நிலைமை மேலும் சிக்கலாகின்றது.

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியின் வரலாறு

ஆர்மேனியா முன்பு ஈரானின் ஒரு பகுதியாக இருந்தது. ஈரானிடமிருந்து இரசியா அதைக் ச்கைப்பற்றி சோவியத் ஒன்றிய நாடாக்கியது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி மக்களில் பெரும்பான்மையினர் ஆர்மேனியர்கள். இருந்தும் அது அஜர்பைஜானுடன் 1921-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் திகதி இரசியப் பொதுவுடமைக் கட்சி நகர்னோ கரபார்க் மலைப்பகுதி ஆர்மேனியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது. ஆனால் மறுநாள் ஜோசப் ஸ்டாலின் தலையிட்டு அது அஜர்பைஜானுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவை மாற்றினார். அப்பிராந்தியத்தின் 94விழுக்காடு மக்கள் தொகையினர் ஆர்மினியர்களாக இருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரை ஆர்மேனியர்கள் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இரு நாடுகளிடையே மோதலை தேவை ஏற்படும் போது உருவாக்கலாம் என்ற சதித்திட்டம் இருந்ததாக நம்பப்படுகின்றது. பின்பு தொடர்ச்சியான குடியேற்றத்தால் ஆர்மேனியர்களின் தொகை 76விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்து அஜர்பைஜான் தனிநாடாகிய போது நகர்னோ கரபார்க் மலைப்பகுதி அஜர்பைஜானின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதன் படியே ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற நாடுகளும் அஜர்பைஜானை அங்கீகரித்திருந்த படியால் இன்று வரை உலகச் சட்டத்தின் படி அஜர்பைஜானுக்கே அந்தப் பிராந்தியம் சொந்தமானதாகும்.

தனிநாட்டுப் பிரகடனமும் போரும்

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் வாழும் ஆர்மேனியர்கள் தொடர்ச்சியாக அஜர்பைஜான் அரசால் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கப்பட்டும் கலாச்சார அடிப்படையில் அடக்கப்பட்டும் வந்த படியால் அவர்கள் ஆர்மேனியாவுடன் இணைய விரும்பினர். 1988இல் தமது பிரதேசத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்தனர். அஜர்பைஜானியப் படைகள் அங்கு தலையிட்டதைத் தொடர்ந்து ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் போர் மூண்டது. ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் 1988-1992வரை நடந்த போரில் ஆர்மேனியா நகர்னோ கரபார்க் மலைப்பகுதியையும் மேலும் நிலப்பரப்புக்களையும் ஆர்மேனியா கைப்பற்றியது. முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. 1994இல் இருந்து இரசியா தலையிட்டதால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆர்மேனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் நகர்னோ கரபார்க் மலைப்பகுதி தன்னாட்சி உள்ள பிரதேசமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் எரிபொருள் உற்பத்தியால் செல்வம் திரட்டிய அஜர்பைனான் தன் படைவலுவையும் பெருக்கிக் கொண்டது. இப்போது தான் இழந்ததை மீளக் கைப்பற்ற முயல்கின்றது. இரண்டு நாடுகளும் இரசியாவிடமிருந்து படைக்கலன்களைக் கொள்வனவு செய்கின்றன. இரண்டு நாடுகளுடனும் இரசியா பொருளாதாரத் தொடர்புகளை வைத்துள்ளது. ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உண்டு.

அஜர்பைஜானிற்கு துருக்கி ஆதரவு

அஜர்பைஜானிற்கும் துருக்கிக்கும் இடையில் கலாச்சார மற்றும் வரலாற்று அடிப்படையிலான தொடர்புகள் உள்ளன. துருக்கியும் பாக்கிஸ்த்தானும் அஜர்பைஜானிற்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியர்கள் 1500பேரை துருக்கி அஜர்பையானிற்கு கூலிப்படைகளாக அனுப்பியுள்ளது. போரின் போது கொல்லப்பட்ட 50 சிரியர்களின் உடலங்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அஜர்பைஜான் படைகள் ஆளில்லாப் போர் விமானங்களின் உதவியுடன் முன்னேறியுள்ளன. அவற்றை துருக்கி வழங்கியிருக்கலாம். துருக்கிய விமானங்கள் வேவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆர்மேனியாவின் விமான எதிர்ப்பு நிலைகளை தாக்கி அழித்த அஜர்பைஜான் ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது ஆட்டிலறி நிலைகளை அழிக்கத் தொடங்கியுள்ளன. துருக்கிய F-16 போர் விமானம் ஆர்மேனியாவின் SU–25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மேனியா குற்றம் சாட்டுகின்றது.



ஆர்மேனியாவிற்கு இரசியா ஆதரவு வழங்க வேண்டியுள்ளது

இரசியாவின் Collective Security Treaty Organization என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் ஆர்மேனியாவும் உறுப்புரிமையுடையது. 1992 கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் இரசியா, ஆர்மேனியா, கஜகஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அந்த உடன்படிக்கையின் படி ஆர்மேனியா மீது தொடுக்கப்படும் தாக்குதலை மற்ற நாடுகள் தம்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதி ஆர்மீனியாவைப் பாதுகாக்க வேண்டும். ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உள்ளது. உடன்படிக்கையின் படி இரசியா ஆர்மேனியாவிற்கு உதவி செய்யாது போனால் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மற்ற நாடுகள் இரசியாமீது வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும். அது இரசியாவின் பிராந்திய நலன்களைப் பாதிக்கும்.

இருதலைக் கொள்ளி எறும்பாக ஈரான்

ஈரானுடன் 27மைல் நீள எல்லையைக் கொண்ட ஒரே கிருத்தவ நாடு ஆர்மேனியா. ஈரானின் ஒரு பகுதியாக இருந்த ஆர்மேனியாவின் கிருத்த மக்கள் பலர் இப்போதும் ஈரானில் வசிக்கின்றனர். பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட அஜர்பைஜானியர்களும் ஈரானில் வசிக்கின்றனர். இஸ்ரேலிடம் அதிக படைக்கலன்களை வாங்கிக் குவிக்கும் அஜர்பைஜானுடன் ஈரான் தொடர்பு வைப்பது ஈரான் உலகில் உருவாக்க முயலும் தனது விம்பத்திற்கு ஆபத்து. அஜர்பைஜான் இஸ்ரேலிடம் வாங்கிய ஆளில்லா விமானங்கள் ஈரனுக்கு அடிக்கடி அத்து மீறிப்பறக்கின்றன.  அஜர்பைஜானைப் பாவித்து இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரானை வேவு பார்ப்பதாக ஈரான் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. ஈரானியப் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் ஆர்மேனிய அஜர்பைஜானியப் போரில் ஈரான் பெரிதாக ஈடுபடாது. அஜர்பைஜானூடாக ஈரான் தனது சபாஹர் துறைமுகத்தில் இருந்து இரசியாவிற்கு ஒரு தொடரூந்து பாதையையும் அமைக்க முயல்கின்றது. இது போன்ற காரணங்களால் ஈரான் யாருக்கு ஆதரவளிப்பது எனத் தடுமாறுகின்றது. 

விலகி இருந்து இரசிக்கும் அமெரிக்கா

ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் நடக்கும் போரானது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் நிகராளிப் போர்(Proxy war) என அமெரிக்கா கருதுகின்றது. சிரியப் போரின் இறுதிக் கட்டத்தில் இரசியாவும் துருக்கியும் ஒன்றாக நின்று சிலகாலம் ஒத்துழைத்தது. அமெரிக்காவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் சிரியாவிலும் லிபியாலும் இரண்டு நாடுகளும் முரண்படத் தொடங்கின பிரான்சில் ஆர்மேனியர்கள் வாழ்கின்றனர். பிரான்ஸ் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றது. பிரான்சும் துருக்கியும் நேட்டோ உறுப்பு நாடுகள் என்பதால் நேட்டோ கூட்டமைப்பு விலகி நிற்கின்றது. அமெரிக்கா தனது நலன்கள் அங்கு பாதிப்படையவில்லை என்பதால் இந்தப் போரில் அக்கறை காட்டவில்லை. இதனால் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்த யாரும் இல்லை எனற நிலை உருவாகியுள்ளது.  

தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor)

இது பன்னிரண்டுக்கு மேற்பட்ட எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து மத்திய ஆசியாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கஸ்பியன் கடலூடாகவும் துருக்கியூடாகவும் கருங்கடலூடாகவும் எரிபொருள் வழங்கும் திட்டத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் இத்திட்டத்திற்கு தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அஜர்பைஜான், தேர்க்மேனிஸ்த்தான், கஜகஸ்த்தான், ஈராக் உட்படப் பல நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதன் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் தமது எரிபொருள் தேவைக்கு தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் பெரும்பகுதி எரிபொருள் அஜர்பைஜானுக்கு சொந்தமான கஸ்பியன் கடற்படுக்கையில் இருந்து பெறப்படுகின்றது. இத்திட்டத்தை ஆர்மேனியா அஜர்பைஜான் போர் மூலம் குழப்புவது இரசியாவிற்கு நன்மையளிக்கக் கூடியது. இரசியாவின் நேர்ட்ஸ்றீம் குழாய்க்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து பிரச்சனை கொடுப்பதற்கு இரசியா பழிவாங்குகின்றது எனச் சொல்லலாம். அஜர்பைஜான் நாள் ஒன்றிற்கு ஏழு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யையும் 780மில்லியன் கனவடி எரிவாயுவையும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அஜர்பைஜானில் இருந்து செல்லும் குழாய்கள் ஆர்மேனியாவிற்கு அண்மையில் உள்ள பிரதேசங்களூடாகச் செல்கின்றன.


ஐக்கிய நாடுகள் சபை ஆர்மேனியப்படைகள் நகர்னோ கரபார்க் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. துருக்கி தலையிட்டு போர் நிலைமையை அஜர்பைஜானுக்கு சாதகமாக மாற்றியதால் இரசியா ஆர்மேனியாவிற்கு ஆதரவாக செயற்பட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. அல்லது இரசியாவின் மற்ற நட்பு நாடுகள் இரசியாமீது ஐயம் கொள்ள முனையலாம். பொருளாதார அடைப்படையிலும் படைத்துறை அடிப்படையிலும் துருக்கி அகலக் கால் வைப்பதை இரசியா விரும்பலாம். இரசியா ஆர்மேனிய நிலங்களை தான் பாதுகாத்துக் கொண்டு பிரச்சனைக்குரிய நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் ஆர்மேனியா தனது முழு வலுவையும் பாவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அது போரைத் தீவிரப்படுத்தும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...