1949-ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் ஆண்டு உச்சி மாநாடு 2019 டிசம்பர்
03-ம் 4-ம் திகதிகளில் இலண்டனில் நடைபெற்றது. எழுபதாவது ஆண்டை
நிறைவு செய்யும் நேட்டோவின் 29 உறுப்பு நாடுகளின் மாநாடு பல சிக்கல்களுக்கு நடுவே நடை
பெற்றது. சிக்கல்களின் நாயகர்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துருக்கி அதிபர் ரிசெப் எர்துவான், பிரெஞ்சு
அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இருக்கின்றனர்.
நேட்டோவைச் சூழவுள்ள பிரச்சனைகள்
1. சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயற்படும் குர்திஷ் போராளி அமைப்பை நேட்டோவின்
உறுப்பு நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பு எனச் சொல்லி அதன் மீது தாக்குதல் செய்கின்றது.
2. நேட்டோ பகையாளியாகக் கருதும் இரசியாவிடமிருந்து எச்-400 ஏவுகணை எதிர்ப்பு
முறைமை உட்படப் பல படைக்கலன்களை துருக்கி வாங்குகின்றது.
3. 2018 ஒக்டோபரில் நேட்டோ அமைப்பைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா தனது படையினரை
சிரியாவில் இருந்து விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தது.
4. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது பாதுகாப்பிற்கு தமது மொத்தத் தேசிய உற்பத்தியின்
இரண்டு விழுக்காட்டை ஒதுக்காவிடில் அமெரிக்கா நேட்டோ கூட்டமைப்பில் இருந்து விலகும்
என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி மிரட்டுகின்றார். நேட்டோ அமெரிக்காவிற்கு
நியாயமற்ற ஒரு நிதிச் சுமை என்றும் நேட்டோ காலாவதியான ஓர் அமைப்பு என்பது அவரது
கருத்து.
5. போலந்தையும் போல்ரிக் நாடுகளையும் பாதுகாப்பதற்காக நேட்டோ உருவாக்கிய
திட்டத்தை நிறைவேற்ற விடாமல் துருக்கி தடை போட்டுள்ளது. சிரியாவில் செயற்படும் குர்திஷ்
அமைப்புக்களை பயங்கரவாத அமைப்பாக நேட்டோ நாடுகள் பிரகடனப் படுத்தினால் மட்டுமே துருக்கி
அத்திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கும் என்கின்றது துருக்கி.
6. அமெரிக்காவின் சிறந்த
தலைமைத்துவம் இல்லாமையினால் நேட்டோ கூட்டமைப்பு மூளை இறந்த நிலையில் இருக்கின்றது என பிரெஞ்சு அதிபர்
இம்மானுவேல் மக்ரோன் கருத்துத் தெரிவித்துள்ளார். துருக்கி சிரியாவில் செய்யும் படை
நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படாதவையாக இருக்கின்றன என்றும் மக்ரோன் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் தனது வாக்காளர்களை இலக்கு வைத்து எடுக்கும் நடவடிக்கைகளை தன்னால் மாற்ற
முடியாமல் இருக்கின்றது என்றும் பிரெஞ்சு அதிபர் தன் கரிசனையை வெளியிட்டார்.
7. நேட்டோ அதிக கவனம் செலுத்தும் நாடான உக்ரேனின் அதிபர் தான் உலக அரங்கில்
யாரையும் நம்ப மாட்டேன் எனச் சொல்லியுள்ளார்.
தன்னை மாற்றாமலிருக்கும் நேட்டோ
படைத்துறை
நிபுணர்கள் நேட்டோ சூழல் மாற்றங்களை உள்வாங்க வேண்டும் என்கின்றனர். நேட்டோ ஆரம்பித்த
1949இல் இருந்த நிலைமையிலும் பார்க்க 2019இல் நிலைமை வேறுபட்டனவாக உள்ளது. அப்போது
இரசிய விரிவாக்கத்தையிட்டு நேட்டோ கரிசனை கொண்டிருந்தது. இப்போது சீன எழுச்சி பற்றி
கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்றத்து ஏற்ப நேட்டோ தன்னை மாற்றுவது மிகவும்
மந்த கதியில் உள்ளது என்பது படைத்துறை நிபுணர்களின் குற்றச்சாட்டாகும்.
வளர்ந்த நேட்டோ
பதினாங்கு நாடுகள் ஆரம்பித்த நேட்டோவில் தற்போதுஅல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பேர்க், மொன்ரிநிகிரோ, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலொவேக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், துருக்கி, ஐக்கிய இராச்சியம் ஐக்கிய
அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இரசியா தனது கவச நாடுகளாகக் கருதும் எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகள்
நேட்டோவில் இணைக்கப்பட்டமை இரசியாவைக் கடுமையாக ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. ஜோர்ஜியாவும்
உக்ரேனும் நேட்டோவில் இணைய முற்பட்டபோது இரசியா அந்த நாடுகளுக்கு எதிராகப் படை
நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் நேட்டோ 29 நாடுகளின்
ஒரு
பில்லியன் மக்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய ஒற்றுமைக் கவசம் என்றார். மேலும்
அவர் நேட்டோவின் 29 உறுப்பு நாடுகளும் 2016-ம் ஆண்டு தமது பாதுகப்புச் செலவை130பில்லியன்
டொலர்களால் அதிகரித்தன. 2024இல் அந்த அதிகரிப்பு 400பில்லியன் டொலர்களாக உயரும்
என்றார் ஜோன்சன்.
மாநாட்டின் முடிவில் வெளியிட்ட கூட்டறிக்கையில்:
1. பாதுகாப்பாக இருப்பதற்காக எதிர்காலத்தை ஒற்றுமையாகப் பார்க்க வேண்டும்.
2. பாதுகாப்புச் செலவுக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 2%ஐயாவது ஒதுக்க வேண்டும்.
3. இரசியாவின்
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் யூரோ-அத்லாந்திக் நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக
அமைகின்றன.
4 நேட்டோ
எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது
5. எமது
அயலவர்களுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஒத்துழைப்போம்
6. எமது
தொழில்நுட்ப மேம்பாட்டு நிலையைப் பாதுகாப்போம்.
7. நேட்டோவின்
கலந்துரையாடும் தன்மையை பேணி வளர்ப்போம்.
சீனா நோக்கி திரும்பும் கவனம்
உலகப்
பெருவல்லரசாக உருவாகிக்கொண்டிருக்கும் சீனா படைத்துறைத் தொழில்நுட்பத்தில் அதிக அளவு
முதலீடு செய்வது மேற்கு நாடுகளின் படைத்துறைத் தொழில்நுட்பத்தை அது விஞ்சும் என்ற அச்சத்தை
உருவாக்கியுள்ளது. அதையிட்டு நேட்டோ நாடுகள் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தின. நேட்டோ உச்சி
மாநாட்டில் சீனாவுடன் ஒரு
படைவலிமை அதிகரிப்புக் குறைப்பு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக
நேட்டோ உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சீனாவிடமிருக்கும் ஒலியிலும்
பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகள் தற்போது மேற்கு ஐரோப்பா
மற்றும் வட அமெரிக்க நாடுகள் வரை பாய்ந்து அழிக்க வல்லன என்பதையிட்டு நேட்டோ
நாடுகள் கரிசனை கொண்டுள்ளன. சீனாவிடமிருந்து 5G தொழில்நுட்பத்தை
வாங்குவது தொடர்பாக உறுப்பு நாடுகளிடையே இருக்கும் முரண்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இரசியாவை மறப்பதற்கில்லை
ஏற்கனவே நேட்டோ முப்பது
தரைப்படையணிகளையும், முப்பது வான்
படையணிகளையும் முப்பது கடற்படைக் கப்பல்களையும் இரசியாவிடமிருந்து வரும்
அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக நிறுத்தும் திட்டத்தை நிறைவேற்றிக்
கொண்டிருக்கின்றது. போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் பாதுகாப்புத் தொடர்பான திட்டத்தை தடை
செய்யும் நிலைப்பாட்டில் இருந்து மாநாட்டின் போது துருக்கி விலகிக் கொண்டது.
அத்திட்டம் மீள் வரைபு செய்யப்படும் என்றும் உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
வாய்கள் ஓய்வதில்லை
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் முதலாம் நாள் அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரெஞ்சு
அதிபர் மக்ரோனும் துருக்கி தொடர்பாகவும் இஸ்லாமிய
அமைப்பு தொடர்பாகவும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது முரண்பட்டுக் கொண்டனர். ஏற்கனவே
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக வரிகள் தொடர்பாக முறுகல் நிலை உருவாகி
இருந்தது. நேட்டோவில் ஆரயப்பட்டவைகள், எடுத்த முடிவுகள் போன்றவற்றிலும் பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி
கனடியத் தலைமை அமைச்சர் செய்த கிண்டலும் அதற்குப் பதிலடியாக டிரம்ப் கனடியத்தலைமை
அமைச்சர் ஜஸ்றின் ருடோ இரட்டை முகம் கொண்டவர் எனக் கொடுத்த பதிலடியிலும்தான்
மேற்கு நாட்டு ஊடகங்களின் அதிக கவனம் செலுத்தின. டிரம்ப் நேட்டோ மாநாட்டில் டிரம்ப் கருத்துத் தெரிவிக்கும் போது அவரது
பரிவாரங்களின் தாடைகள் நிலத்தில் அடிபட்டதைக் கவனித்தீர்களா என்றார் கனடிய தலைமை
அமைச்சர் ஜஸ்றின் ருடோ . அந்த அளவிற்கு அவர்களுடன் கலந்து
ஆலோசிக்காமல் அவர் கருத்து வெளிவிடுவார் என்பதையே ஜஸ்றின் ருடோ அப்படிக்
குறிப்பிட்டார். மாநாட்டு முடிவின் போது எல்லா உறுப்பு நாடுகளின் தலைவர்களும்
பங்கு பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொள்வதை டிரம்ப் இரத்துச் செய்தார். மாநாடு
நடக்கும் பிரித்தானியாவில் எட்டு நாட்களில் பாராளமன்றத் தேர்தல்
நடக்கவிருப்பதால் பிரித்தானியா தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கும்
கருத்துக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்துடன் பிரித்தானிய
அரசியல்வாதிகள் இருந்தனர். ஆனால் கடந்த பிரித்தானியப் பயணத்தில் டிரம்ப் விட்ட
பிழையை இந்த முறை விடவில்லை.
பல முரண்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பமான மாநாடு மேலும் முறுகல்களை வளர்க்காமல் விட்டதே பெரிய வெற்றி, துருக்கியின் விட்டுக் கொடுப்பு நேட்டோவிற்கு ஆறுதலாக அமைந்திருந்தது.
2014-ம் ஆண்டில் இருந்து
நேட்டோவின் செயளாளர் நாயகமாக இருக்கும் நோர்வேயின் முன்னாள் தலைமை அமைச்சர் ஜென்ஸ்
ஸ்ரொல்டென்பேர்க் நேட்டோ ஆரம்பித்த காலத்தில் இருந்தே உள்ளக முரண்பாடுகள்
நிலவுகின்றன ஆனால் அதன் நோக்கத்தில் இருந்து தவறியதில்லை என்றார். நேட்டோவின் தள்ளாடல்
அதன் முதுமையின் அடையாளமல்ல களைப்பின் அறிகுறி மட்டுமே.
No comments:
Post a Comment